டிசம்பர் 25, 2016

காமத்திபுரா - The Parcel

காமத்திபுரா. The Parcel. Anosh Irani ஆசிரியர். 

இந்த நாவல் பற்றிய எனது பார்வை, வாசிப்பின் பிரதிபலிப்பு இது. 

முதன் முதல் அனோஷ் இரானியின் நாவல், Dahanu Road வாசிக்கும்படி வேலைத்தள நட்புகளால் பரிந்துரைக்கப்பட்டது. அப்போது ஏதோ கவனக்குறைவால் அதை அப்படியே மறந்தாயிற்று. பிறகு கனேடிய தேசியமைய நீரோட்ட வானொலியின் Canada reads நிகழ்ச்சியின் வழி அறிமுகமானது The Parcel என்னும் அவரது நாவல். தான் எழுத்தாளர் ஆகவேண்டுமென்றே கனடா வந்து படித்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அனோஷ். கனடா குறித்தான ஒரு வித்தியாசமான பார்வை கிடைத்தது. கனடாவில் இலக்கியத்துக்குரிய இடத்தை, எந்த நாட்டிலிருந்து வந்தாலும் அந்த எழுத்தாளர்களை தேசிய மைய நீரோட்டத்தில் கொண்டுசென்று சேர்ப்பார்கள். 

தற்காலத்தில் மும்பாய், இந்திய நாட்டின் பம்பாய் நகரத்திலுள்ள காமத்திபுரா கதைக்களம். காமத்திபுரா என்கிற பெயர்ச்சொல் ஒருபோதும் கேட்டதாக நினைவிலில்லை. பதிலாக, 'சிவப்புவிளக்குப் பகுதி' என்கிற பெயரே பயம் என்கிற பட்டியலில் இடம்பிடித்த சில சொற்களில் ஒன்று; அறிவுதெரிந்த நாள் முதல். 

அனோஷ் இரானியை கனேடிய தேசியமைய உடகங்களில் இந்த நாவல் குறித்து பேட்டியோ, செவியோ காணும் நேரங்களில் எல்லாம் 'காமத்திபுரா' என்கிற சொல்லை அவர் உச்சரிக்கும் விதமும், தொனியும் அந்த ஒற்றைவார்த்தைக்குள்  ஒளிந்துகொண்டிருக்கும் ஆன்மாவுடைய தோற்றப்பொலிவின் வடிவம் சொல்லில் தெறிக்கும். சிவப்புவிளக்குப் பகுதி என்கிற வார்த்தைப் பிரயோகத்தை விட காமத்திபுரா என்கிற சொல்லின் தாற்பரியப் பண்பு, connatation அவர் உச்சரிப்பில் வேறு விதமாய் இருப்பதாய் தோன்றியது. அதுவே ஒருவிதத்தில் நாவலை வாசிக்கவும் தூண்டியது.

தொலைக்காட்சியில் பேட்டி கண்ட ஒருவரின் நாவல் பற்றிய குறிப்பீடு, 'It's neither pleasant nor benign.' காமத்திபுரா, காம உற்பத்தி தொழிற்சாலை. காமம் உற்பத்தி செய்யும் பெண்கள், மூன்றாம் பாலினமான ஹிஜ்ராக்கள் (கதையாசிரியர் தமிழில் திருநங்கைகள் என்கிற வார்த்தையை சாடுவதால் அதைத் தவிர்க்கிறேன்) அடிமை வரலாறு, அவர்களுக்குள், அவர்களுக்கென வகுக்கப்பட்ட அறக்கொள்கைகளும் நீதிக்கோட்பாடுகளும், Moral & ethical codes, புறக்கண்களுக்குப் புலப்படாத விலங்குகள் பூட்டப்பட்ட மனிதர்களின் சஞ்சரிப்பு. சமூகம் வகுத்துவைத்த கட்டுப்பாடுகள் நடைமுறைகளால்  ஒதுக்கப்பட்டவர்கள், நோய்கொண்டவர்கள் (HIV தொற்று, காச நோய், Sexually Trasmitted disease), ஒரு இரவில் பத்து ஆண்களை திருப்திப்படுத்தி ஓப்பிய போதையில் வலி மறப்பவர்கள், வயதுக்கும் உடம்புக்கும் முடியாமல் போக பாலியல் தொழிலிலிருந்து தூக்கியெறியப்பட்டு பிச்சையெடுப்பவர்கள், ராசிக்காக மட்டுமே கல்யாணவீடுகளின் நடுக்கூடங்களில் மணப்பெண் முன் நடனமாடச் சேர்த்துக்கொள்ளப்படும் மனிதர்கள் கதை.

கதையின் நாயகி மது, ஹிஜ்ரா-மூன்றாம் பாலினம். ஓய்வுபெற்ற ஒரு பாலினச்சேர்க்கை வகையில் பாலியல் தொழில் புரிந்தவர். மது பிறப்பால் ஆணுருக்கொண்டவள். மதுவின் அறிவுக்கெட்டிய பாடசாலை நாட்கள் தொடங்கி தன் உடலில் சிறிது, சிறிதாக நிகழும் பால் நிலை மாற்றங்களுக்கு ஆட்படும் இயற்கைக்குள் சூழ்நிலைக்கைதியாகிறாள். மரபுவழிக் கோட்பாட்டுச் சிந்தனைகளில் சிக்கிக்கிடக்கும் மனோ நிலை கொண்ட தன் பெற்றோர், சமூகம் என இரு தரப்பிடமிருந்தும் தன்னை, தன் ஆன்மாவை வேரோடு பிடுங்கியெடுத்து தன் நிலை மதிக்கப்படும் புது இடத்தில், Hijra Gulli/House புகலிடம் கொள்கிறாள். அந்த புகலிடமும் நிழலுலகம். அந்த நிழலுலகில் தனக்கு மனிதத்திருவுருவ அங்கீகார அடையாளம் கொடுத்த கிழவி ஹிஜ்ரா குருமாய் க்கு மனமுவந்து அடிமையாகவும், இன்னொரு நிழலுலக பாலியல் தொழில் வியாபாரி பத்மா என்பவரிடம் வேறோர் சோலி குறித்தும் சேர்த்துக்கொள்ளப்படுகிறாள் மது. 

மதுவைச் சுற்றியும் மதுவோடு சேர்ந்து வாழும் ஹிஜ்ராக்கள், பெண் பாலியல் தொழிலாளிகளை சுற்றியபடியுமே கதை நகர்கிறது. மதுவின் நிகழ்கால வேலை பத்து முதல் பன்னிரண்டு வயதுள்ள பெண்குழந்தைகளை உளவியல் ரீதியாக பாலியற்தொழிலுக்கு பயிற்றுவிப்பது. அவ்வாறு கொண்டுவரப்படும் சிறுமிகளையே பார்சல் என அழைக்கப்படுகிறார்கள். 

ஒரு மனித உயிரை தன் சுய நலத்துக்காக பயன்படுத்தவேண்டுமானால் முதலில் அதன் ஆன்மாவை உடைக்கவேண்டும். அதையே தான் மதுவும் செய்கிறாள் பார்சல் விடயத்தில். அதன்மீதே மதுவின் உயிர் பிழைத்தலுக்கான மனசாட்சி கட்டியமைக்கப்படுகிறது. மதுவின் தர்க்கம் தான் நன்மை செய்வது என்றாகிறது. பிழைத்திருத்தலின் எல்லைகள் கடந்து மதுவின் ஆன்மாவை உடைத்துப்போடும் நிகழ்வுகள் கதையின் முடிவாகிறது. 

மதுவுக்கும் பார்சலுக்குமான உரையாடல், மதுவுக்கும் மற்றவர்களுக்குமான உரையாடல் அந்தந்த சூழலில் பொருந்திப் போகிறது காமத்தின் கசடுகளற்றதாய். சல்மா என்கிற ஒரு பெண் பாலியல் தொழிலாளி பாலியல் தொற்று நோய்களைப் பற்றிய பாதுகாப்பு குறித்து வகுப்பெடுக்கும், பாதுகாப்பு உறை குறித்து பேசும் NGO பெண்மணியிடம், 'இவர்கள் தண்ணீர் குடிப்பதை விட அதிகமாய் நான் விந்து குடித்திருக்கிறேன்' என்பது போலான உரையாடல்கள் பல இடங்களில் நகைச்சுவை உணர்வுடனேயே எழுதப்பட்டிருக்கிறது. இப்படி நிறைய சொல்லலாம். ஆனால், அது கதையை உடைத்துப்போடுவதாய் ஆகும். 

மிகப்பெரும்பாலான எழுத்தாளர்கள் எடுத்தாள சிரமப்படும், தயக்கம் கொள்ளும் ஒரு கருவை தொட்டு அனோஷ் நேர்த்தியாக கதை சொல்லியிருக்கிறார். எந்தவொரு கதையிலும் வாசிப்பவர் தன்னை ஏதோவொரு விதத்தில் பொருத்திப்பார்க்க நேரலாம். இந்தக் கதைக்களத்தில் யார் தங்களை அப்படி பொருத்திப்பார்ப்பார்ப்பார்கள்; பாலியல் தொழிலுக்குள் மனட்சாட்சி இல்லாமல் தூக்கி வீசப்பட்டவர்கள் தவிர. ஆனாலும், ஆசிரியரின் வாதம் இது மதுவுக்கானது மட்டுமல்ல. அன்புக்கான அங்கீகாரம் வேண்டும் எல்லாருக்குமான தேடல் என்பதே. காமத்தை கடந்த காதலை, அன்பை, அவன் மூச்சுக்காற்றின் கதகதப்பை தன் காதலன் கஜாவிடம் தேடுகிறாள். 

கதையும் கதாபாத்திரங்களின் படைப்பின் நேர்த்தியும் கவர்கிறது. மதுவின் கடந்தகாலங்களில் மது சில இடங்களில் நேரங்கெட்ட நேரங்களில் தொலைந்து போகும் தூரத்து சிந்தனைகளால் வாசிப்பின் தொடர்ச்சி துண்டிக்கப்படுவது  குறை. காமத்திபுரா காமத்தொழிற்சாலைக்குப் பின் எந்த அரசியலும் இல்லையா என்ற கேள்விக்கும் கதையில் பதிலில்லை. 

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், ஹிஜ்ராக்கள்-மூன்றாம் பாலினம் (Transgender Sex ), குழந்தை பாலியல் தொழிலாளர்கள், வன்முறைகள், இவர்கள் அனைவருக்குமான சமூக அங்கீகாரம் குறித்த அறக்கொள்கைகள், நீதிக்கோட்பாடுகளை உடைக்கவேண்டியதன் அவசியத்தை, தேவையை உணர்த்துகிறது The Parcel நாவல். 

ஆசை, மோகம், காதல் என்னும் இயற்கை ஏதோவொரு வழியில் தன்னை சீராக்க முடியாமற் போகும் நேரங்களில் சம நிலை குலைந்து தடுமாறுகிறது. அரசியல், சமூக, மத கடவுட்கோட்பாடுகளை தாண்டியும் வரவேண்டிய இயற்கையான மனிதம் ஏனோ அது வகுத்தெடுத்த வாதங்களிலேயே தேங்கித் திணறிக்கொண்டிருக்கிறது. நாணயங்களற்ற கடனட்டை, வங்கி அட்டை வியாபாரப்பரிவர்த்தனைகளில் எந்த குடியானவன் எந்த குதத்தை, எந்த யோனியைப் புணர்ந்தான் என்கிற தகவல்களைப் பெற்றுக்கொள்ளட்டும் அரசு. கூடவே காமத்திபுராக்களில் consent உடன் நடைபெறும் கலவியில் பாலியற்தொழிலாளர்கள் உரிமைகளையும் பாதுகாக்கட்டும். பணப்பெருமுதலைகள், மூட நம்பிக்கைகள், காமவல்லூறுகளிடமிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படட்டும். 

Image Courtesy: Google.