ஆகஸ்ட் 28, 2016

வால்காவிலிருந்து கங்கை வரை - எனது பார்வை.

வால்காவிலிருந்து கங்கை வரை புத்தக விமர்சனம் என்பது என் மானுடவரலாற்று இயங்கியல் அறிவு எல்லைக்கு அப்பாற்பட்டது. இருந்தும் மனிதகுலத்தின் அசைவும் இயக்கமும் வரலாறாகிப்போன படிநிலைகளை, காலமாற்றங்களை, அரசியல் ஆட்சிமுறைகளின் தோற்றுவாய்களின் மேலுள்ள ஈடுபாடு படித்ததை, என் புரிதல்களை பகிரலாம் என எழுதவைக்கிறது.

பல்லின உயிரினங்களில் தன்னை முன்னிலைப்படுத்திய மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியை ஆதிகாலத்திலிருந்தே அருகமர்ந்து பார்த்து, அறிந்து பதிந்துவைத்தவர்கள் யாரும் இல்லை. உயிரினங்களில் ஆதிக்க நிலையில் இருக்கும் மனித இனத்தின் ஆரம்பகால வரலாறு மற்றும் பண்பியல் மாற்றங்கள் என்பன தொல் மானுடவியல் ஆய்வாளர்கள் (Paleoanthropologist) அகழ்பொருள் ஆய்வு, உயிர்த்தொகை மரபுவழிப்பண்பு ஆய்வாளர்கள் (Population Geneticist) களின் ஆய்வுகளின் வழியே தான் நமக்கு அறியக்கிடைக்கிறது. 

அறிவியல் ஆய்வுகளின் வழி Y Chromosomes and Mitochondrial DNA mutations அடியொற்றிப்போனால் தற்கால மனிதர்கள் எல்லாருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் தாம் என்பதையும், இனக்குழுக்களின் மூதாதையர்கள், முன்னோடிகளையும் யாராய் இருக்கக்கூடும் என்பதையும் ஆய்வுகளின் வழி உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதில் யார் முன்னே, பின்னே வந்தார்கள், யாரை யார் எப்பிடி ஆள்கிறார்கள் என்பதில் தான் அரசியல் செய்கிறார்கள் நாகரீகமடைந்ததாகக் கூறும் தற்கால மனிதர்கள்.

மனிதவரலாற்றின் அசைவியக்கம் மனிதவிடுதலை நோக்கிப்பயணிக்கிறது. அந்தப் பயணத்தின் உந்துசக்தி கருத்துமுதல் வாதம், பொருள்முதல்வாதம் என்கிற கோட்பாடுகளின் வழி நிறைய தர்க்கவாதங்கள், விவாதங்கள் என தர்க்கிக்கிறது வால்காவிலிருந்து கங்கைவரை. எதுவாகினும், அகழ்வுகள், ஆய்வுகள் வழி கிடைத்த தரவுகளின் அடிப்படையில் புனைவையும் கலந்து படைக்கப்படட இந்தியதுணைக்கண்டத்தின் மானுடவரலாறு தான் வால்காவிலிருந்து கங்கைவரை.

நூல் பற்றிய அறிமுகம் என்றால் இந்தியா பிரித்தானிய காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுதலை அடையும் காலத்துக்கு முன் 1944 இல் ராகுல சாங்கிருத்தியாயன் என்பவரால் ஹிந்தியில் கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவு. இந்தியத்துணைக்கண்டத்தில் ரஷ்யாவின் ஏதோவொரு பகுதியிலிருந்து நுழைந்த ஆதி மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகள் எப்படி ஒரு தேசம் அமைத்து, கருத்துலகக் கருவூலங்களை கட்டியமைத்து, அரசியல்ஆட்சிமுறைமையை  நிறுவிக்கொண்டார்கள் என்கிற வரலாற்றுப்புனைவு. வால்கா நதிப்பிரவாகத்தோடு ஆரம்பித்த ஆதிமனிதக்கூட்டத்தின் ஒருபகுதியினரின் பயணம் கங்கைக்கரையில் தரித்து தங்கிவிட, அதனைத்தொடர்ந்து கட்டவிழும் பாரதம் என்கிற தேசத்தின் மானுட வரலாறே கதைக்களம். 

அதையே கண. முத்தையையா 1949 இல் தமிழிலில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூல் பலதரப்படட விமர்சனங்கள், எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறது. 2015 ம் ஆண்டுவரை தமிழில் முப்பத்திநான்கு பதிப்புகள் கண்டிருக்கிறது. 

தெற்கு ரஷ்யாவின் காஸ்பியன் மற்றும் கருங்கடல்களுக்கு இடையே  ஒரு பகுதியிலிருந்து தான் இந்தியாவிற்குள் ஆரியரின் வருகை ஆரம்பம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படட வரலாறு. இவ்வாறு வந்தவர்கள் தான் பின்னாளில் ரோம, கிரேக்க, ஜேர்மனிய இனக்குழுக்களின் முன்னோடிகளாகளாகவும்; இன்னொருபகுதியினர் அன்று பெர்சியா என்றழைக்கப்படட இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் பஞ்சாப் பகுதிகளில் குடியேறினார்கள் என்பது மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் எழுதப்படட வரலாற்று தரவுகள் கூறும் உண்மைகள். நதிக்கரைகளில் தோற்றம் கண்டது மனித நாகரிகம் என்பது போல வால்கா நதிக்கரையிலிருந்து ஆரம்பமாகிறது இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர் வரலாறும், நாகரிகமும். 

இவ்வாறு வந்தவர்கள் இங்கே ஏற்கனவே இருந்த "தாசர்கள்" என்றழைக்கப்படட திராவிடர்களை (யார் திராவிடர்கள், யார் தமிழர்கள் என்கிற வரலாற்றுக்குள் இப்போது போகவில்லை) எதிர்கொண்டார்கள் என்பதும் ரொமிலா தார்ப்பர் போன்றவர்களால் கூட வரலாறாய்ப் பதியப்பட்டிருக்கிறது. 

ராகுல் சாங்கிருத்தியாயன் இவ்வாறு குடும்பமாய் இருந்து இனக்குழுவாய்/கூட்டுச்சமூகமாய்  (Family to Tribal/Band socity) பரிமாணம் கண்டு ஆட்சி, அரசமைக்கும் முறைகள், கருத்துக்கருவூலங்களின் அடிப்படையிலான அரசியல் நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அவற்றிலுள்ள  குற்றங்குறைகள், மக்கள் தங்களைத்தாங்களே ஆள பொருளியல் வரலாற்று இயங்கியல் தத்துவ பொதுவுடைமை சமுதாயம் உருவாக்குவதலே சிறந்தது என முடித்திருக்கிறார் ராகுல் சாங்கிருத்தியாயன். அதைத் தனது மிகத்திறமையான நடையில் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் கண முத்தையா அவர்கள். 

மனிதவரலாறு என்பது நிகழ்வுகளின் கால அட்டவணைப்படுத்தல் இல்லை என்றாலும் காலம், தேசம் என்கிற தலைப்புகளின் மூலம் உரையாடல் வடிவில் தனித்தனிக்கதைகளாய் அமைந்திருக்கிறது ஒவ்வொருகதைக்குமான பேசுபொருள். 

தேசம்: வால்கா நதிக்கரைப் பிரதேசம் 
ஜாதி:   ஹிந்தோ - ஐரோப்பியர் 
காலம்:  கி.மு. 6000

தேசம்: வால்கா நதிக்கரை மத்திய பாகம் 
ஜாதி:   ஹிந்தோ - ஸ்லாவியர் 
காலம்: கி.மு. 3500

தேசம்: மத்திய ஆசியா (வடக்குறு பூமி)
ஜாதி:   ஹிந்தோ - ஈரானியர் 
காலம்: கி.மு. 3000

தேசம்: வாட்சு நதிக்கரை 
ஜாதி:   ஹிந்தோ ஈரானியர் 
காலம்: கி.மு. 2500 

தேசம்: மேல் சுவாதம் 
ஜாதி:   இந்திய ஆரியர் 
காலம்:  கி.மு. 2000

இடம்:  காந்தாரம் (தட்சசீலம்)
ஜாதி:   இந்திய ஆரியர் 
காலம்:  கி.மு. 1800

தேசம்:  குரு பாஞ்சாலம் 
ஜாதி:    வேதகால ஆரியர் 
காலம்:  கி.மு. 1500 

இதுபோல தலைப்புகளோடும் கால அட்டவணையோடும் அந்தந்த  அத்தியாயத்துக்குரிய கதாபாத்திரத்தின் தன்மைகள், பேசுபொருள், தர்க்கங்கள், வாதங்களோடும் மற்றைய பகுதிகளும் தொடர்கிறது. மொத்தமாய் 20 கதைகள்.

*ஹிந்து, ஈரான், ஐரோப்பாவின் சகல ஜாதிகள் ஒன்றாய் இருந்த காலம்

*இந்தோ ஸ்லாவியர் - இந்திய ஈரான், வெள்ளை ரஸ்யா பிரதேசங்களை சேர்ந்த கலப்பு ஜாதியினர் காலம்.

*ஆரியர் அல்லது ஆரிய காலம் - ஈரான் வெள்ளை ஜாதி இனத்தவர் மற்றும் இந்தியரும் சேர்ந்த காலம்;  தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தகாலம் - தேவாசுரர் யுத்தம், தாமிரம் செப்பு உலோகங்களின் பாவனை.

*ஆரியர் காலக்கதைகள் - ஆரிய சமூகத்தின் வசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாஜர் போன்ற மகரிஷிகள் இயற்றிய ருக் வேதங்கள். ஆரிய புரோகிதர்கள் ஆரிய சேனைத்தலைவர் மற்றும் ஜன சமூகத்தின் உரிமைகள் அழிக்கப்படட காலம்.

*வேதத்தின் உபபாகமான உபநிஷதங்கள், பிரம்மஞானம் இவைகளின் உற்பத்தி, இரும்பின் உபயோகம் ஆரம்பித்த காலம்,

*வேற்றுமைகள், விரோதங்கள் வளர்ந்து வியாபாரிகள் பிரபலமான நிலையை அடைந்தததும், ஏழைக்கிராமவாசிகள் அடிமைவாழ்வுக்கு ஆட்பட்டிருந்ததை யாரும் கண்டுகொள்ளாதறிருந்தமை.

*பௌத்தமதம் தழைத்தோங்கிய காலம்.

*இஸ்லாமியர் வருகை, அதை எதிர்க்காமல் வாழாதிருந்து மது, மாது, போதைக்கு அடிமைப்படட மன்னர்கள் கதை.

*ஐரோப்பியர்கள் வருகை. என ஒவ்வொரு காலகட்டத்தின் கதை முடிவிலும் Footnote வடிவில் சொல்லப்படுவது வாசிப்பின் சாரத்தை எளிதாக்குகிறது.

வரலாற்று உண்மைகளோடு கற்பனை கலந்து தொல் வரலாற்றுக்காலத்தின் வால்கா நதியில் தொடங்கி கங்கை நதிக்கரை வரை விலங்குகளை போல் மனிதன் சகவிலங்குளை வேட்டையாடி பசித்தீர்த்துத் திரிந்த காலம் முதற்கொண்டு இனக்குழுவாய் தோற்றங்கொண்டு வாழ்வதில் வளர்ச்சி கண்டு, நாடமைத்தல், ஆட்சியமைத்தலில், அரசாள்வதில் முடிகிறது. உணவு,  நிலம், உலோகம், மற்றும் வளங்களுக்குமாய் தங்களுக்குள் போரிட்டு, வலியவன் வெற்றிகண்டு தங்களைத்தாங்களே ஆளும் முறைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். 

அரசு/நாடு உருவாக்கம், அந்த அரசு உருவாக்கத்துக்கும், ஆளவும் அடிமைப்படுத்தவும் மக்களை எப்போதும் மந்தைக்கூட்டமாகவே வைத்துக்கொள்ளத் தேவையான தத்துவக் கொள்கைகள் கண்ணுக்குப்புலப்படாத அகவுலகில் கட்டியமைக்கப்படும் கருத்து பிம்பங்களாய் பிரம்மம் என்கிற பூடகமான, சிக்கலான சூட்சுமப்பொருள் என வேதங்கள், மந்திர வித்தைகள், தந்திரங்கள் என உருவாக்கம் பெற்றன. இந்திரன் போன்ற போர்வெற்றியின் பிம்பங்கள், மற்றும் சுரண்டல் முறை என்பவற்றை இந்தோ ஆரியர்கள் உருவாக்கிக்கொண்டார்கள் என்பதையும் முன்கதையின் பொரும்பாதி சொல்லிமுடிக்கிறது. 

அதன்பிறகு, இந்தியா என்கிற தேசத்தை ஆண்டவர்கள், படையெடுத்தவர்கள், அவர்களை விரட்டியடித்து இந்தியசுதந்திரப் போராட்டத்துக்கான முறைகள் வழிவகைகளை தேடுதல் என்பதாய் முடிகிறது. ஒரு தேசத்தின் விடுதலையே மக்களின் விடுதலை என்பதை கூறி அதுக்கான பாதையில் செல்கிறது முடிவு. 

தத்துவார்த்தமான கேள்வி பதில் வடிவிலான உரையாடல்களும், விளக்கங்களும் ஆசிரியரின் நம்பிக்கையான சமவுடமைச் சமுதாயம் சார்ந்த ஆட்சியமுறையே மக்கள் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்தும், விடுதலைக்கு வழிசமைக்கும் என்பதாய் சொல்லிச்செல்கிறது. ஒவ்வொரு சமூகத்தினதும் நியாங்களை உடன்பாடாகவும் முரண்பாடாகவும் அந்தந்த பெயர்கொண்ட கதாபாத்திரங்களோடு ஆசிரியர் மற்றைய பாத்திரப்படைப்புகளின் வழியே தர்க்கிப்பதாய் உருவாக்கப்பட்டிருக்கிறது உரையாடல்கள்.

கருத்துமுதல்வாத - பொருள்முதல் வாத அடிப்படையிலான வாதப்பிரதிவாதங்கள் வடிவிலே நகர்கிறது கதைகள். வரலாற்று இயங்கியல் குறித்து முறைப்படி படித்த ஆளில்லை நான். ஆகவே, இதை புரியவேண்டுமானால் ஜேர்மனிய தத்துவாசிரியரான ஹேகல் (Hegel) இன் கருத்ததுமுதல் வரலாற்று இயங்கியல் தத்துவம், கார்ல் மாக்ஸ் இன் பொருளியல் வரலாற்று இயங்கியல் தத்துவம் என்பவற்றின் தத்துவார்த்த அடிப்படை அறிதல் தேவையாகிப் போனது எனக்கு.

"ஹேகல் படைத்த வரலாற்றுத் தத்துவத்தின் மையக்கருத்தாக விளங்குவது இயங்கியல்......மனித மனம், சமூகம், இயற்கை, என்கிற ரீதியில் சகலவற்றையும் வளர்ச்சிப்படிமுறையில் நகர்த்திச்செல்லும் செயலியக்கத்திற்கு அடிப்படையான விதிகள் உள்ளன. இந்த இயங்குவிதிகள் பற்றிய தத்துவக்கோட்பாடே இயங்கியல் எனப்படும். 


இந்த இயங்கியல் விதிகளில் அடிப்படையானது முரணியமாகும்..... (Contradiction) ஹேகலின் இயங்கியல் மனவுலகத்திற்கே முதன்மை கொடுக்கிறது. அவரது தரிசனத்தில் சகலமும் மனவுலகில் தொடங்குகிறது... பிரபஞ்ச பேரான்மாவாகவும், கடவுளாகவும், மனிதனாகவும் ஒன்றோடொன்று சங்கமிக்கும் முழுமையாகவும், சகலதாகவும், சர்வவியாபம் கொண்டு பிரம்மன் நடத்தும் திருக்கூத்துப்பற்றி உபநிடதம் படித்தவர்களுக்கு ஹேகலின் வரலாற்றுக்கடவுளைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்காது. இந்தப் பிரபஞ்ச பேரான்மாவின் சுயசரிதமாகவே மனிதவரலாற்றை எழுதுகிறார் ஹேகல்." 


- அன்ரன் பாலசிங்கம், விடுதலை கட்டுரை தொகுப்பு. 


நான் உபநிடதம் படித்ததில்லை. அதனால் ஹேகலின் கருத்துமுதல் வரலாற்று இயங்கியல் அடிப்படை பற்றி தேடி தெரிந்துகொண்டேன். ஹேகலின் காலத்துக்கு முற்பட்டது உபநிடதம் இயற்றப்பட்ட காலம் என்பதை மனதிற்கொள்ளவேண்டும்.  மனித வரலாற்று இயக்கம் அரசமைத்தல் என்பதோடு முடிவடைகிறது என்றும்; "வரலாறு என்பது ஆன்மத்தின் விடுதலை நோக்கிய நகர்வு. (History is the movement of sprit towards) ....அரசு என்பது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த ஒரு முழுமை. தனிமனித மனமும் சமூக மனமும் சங்கமமாகும் ஒன்றியம். அரசு என்ற இந்த உன்னதமான முழுமையிலேயே தனிமனிதன் தனது உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். தனி மனிதன் சுயநல அபிலாசைகளைத் துறந்து, பொதுநல நோக்கிற்காக அரசின் கட்டமைப்பிற்கு கட்டுப்படவேண்டும். அரச சட்டங்களுக்கு அடிபணிய வேண்டும். அரசு என்பது ஒரு தேசத்தின் ஆன்மா. அந்த தேசிய ஆன்மாவில், அந்த முழுமையான உண்மையில், தனி மனிதம் நிறைவு காணமுடியும்." - ஹேகல் . 


-அன்ரன் பாலசிங்கம், விடுதலை கட்டுரை தொகுப்பு. 


உபநிஷதம் - பிர்ம ஞானத்தைப் பற்றியும், ஆத்மா - பரமாத்மா முதலியவைகளை பற்றியும் விளக்குவதோடு வேதத்தின் ரகசியத்தையும் தெளிவாக்கும் தத்துவ நூல். - வால்காவிலிருந்து கங்கை வரை. ஹேகலின் மனவுலக கருவூலத்தின் பிரபஞ்ச பேரான்மா பற்றிய கருத்து ஆன்மீகம், இறையியல் கூறுகளின் தன்மையே ஆக்கிரமிப்பதாயும், அரசுருவாக்கம், அன்றைய சர்வாதிகார ஜேர்மனிய அரசை நியாப்படுத்தல் போன்றன அன்றைய இளையவரான கார்ல் மாக்கஸ் ஐ சீற்றம் கொள்ளவைத்தது என்கிறார் அன்டன் பாலசிங்கம்.


இதன் அடிப்படையில் கார்ல் மாக்சின் வரலாற்று இயங்கியல் என்பது பொருளியல் சார்ந்தது, பொருளிய இயங்கியல் - Materialistic Dialectics. "கார்ல் மாக்ஸ் ஒரு பொருளியல்வாதி. பொருளுலகத்தையே மெய்யுலகமாகக் கண்டவர். பொருளுலகத்திற்கே முதன்மை கொடுத்தவர். பொருளுலகத்திலிருந்தே மனவுலகம் தோற்றப்பாடு கொள்கிறது என்கிற கருத்தைக் கொண்டவர். அவரது உலகப்பார்வை ஹேகலின் ஆன்மீக கருத்துலகிற்கு நேர்மாறானது. ..... கார்ல் மாக்ஸைப் பொறுத்தவரை, மனிதனின் பொருளிய வாழ்வே எல்லாவற்றிக்கும் மூலமானது. மனித மனமும், மனித உறவுகளும், மனித வாழ்வும், மனித வரலாறும் - எல்லாமே மனிதனின் பொருளிய வாழ்விலிருந்து பிரவாகமெடுக்கிறது. இந்தப் பொருளிய வாழ்வின் மூல இயக்கமாகவே இயங்கியலை நிறுவுகிறார் மாக்ஸ்." 


"மனிதர்களின் சமுகவாழ்வைப் பொறுத்தவரை, பொருளாதார வாழ்வே முக்கியமானது. பொருளுற்பத்தியே மனிதவாழ்வுக்கு ஆதாரமானது. மனித தேவைகளை நிறைவு செய்வதும் அதுவே. இதனால், சமூகக் கட்டமைப்பில் பொருண்மிய அமைப்பிற்கே பிரதான இடத்தைக் கொடுக்கிறார் கார்ல் மாக்ஸ். பொருண்மிய அமைப்பே பொருளுற்பத்தியின்  மையம். அதுவே சமூகத்தின் திண்ணியமான அடித்தளம்.....பொருளியவாழ்வே மனவுலகத்தையும் நிர்ணயிக்கிறது. பொருளிய புறநிலைகளின் வெளிப்பாடாகவே கருத்துலகமும் தோற்றப்பாடு கொள்கிறது."


-அன்ரன் பாலசிங்கம், விடுதலை கட்டுரை தொகுப்பு. இந்திய உபகாண்டத்தின் ஆரியர் மானுடவியல் மனிதவரலாறு நாடோடியாய் அலைந்து திரிந்து, குழுவாய், சமூகமாய், இனமாய், பண்பாடு, நாகரிகம், கலை, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகள் என்பதாய் வரலாற்று அசைவியக்கம் தர்க்கங்களாய் வால்காவிலிருந்து கங்கை வரையில் விவரிக்கப்படுவதைக் காணலாம்.இந்தோ ஆரியர்களும் கருத்துலக கருவூலங்களை பிரமம் எனச்சொல்லி அரசாளவும், அடிமைப்படுத்தவும், ஆளுபவர்கள் போகவாழ்க்கை வாழவும் செய்தார்கள் என்கிறார் ராகுல் சாங்கிருத்தியாயன். பாரதம் என்கிற தேசம் பிராமணர்களால் பிராமணியம் என்கிற கருத்தியல்வாத தத்துவங்களால் ஆளப்பட்டு சீரழிவதாக நினைத்தாரோ என்னவோ வால்காவிலிருந்து கங்கை வரை பொருண்மியவாதக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாய் சொல்லப்படுகிறது. 

விலங்கின் இறைச்சிக்கும், உலோகத்தாலான ஆயுதங்களும், பொன்பொருள், அடிமைகள், அடிமைப்பெண்கள், சுகபோக வாழ்வு இவற்றுக்கான அடிதடிகள், வேதே உபநிடதங்களின் உருவாக்கம், பிரம்மக்கொள்கையை வளர்த்து கர்மவினைப் பலனென மக்களை அடிமைப்படுத்தல், அரசைப்போற்றி துதிபாடுதல் முதல் நாடகங்கள், காவியங்கள் என இயற்றி வேட்டுவச் சமூகமாய் இருந்து நாகரிகம் அடைந்து அரசுருவாக்கம், State Building, என பாரதம் கொண்டார்கள் இந்தோ ஆரியர்கள்.

"வசிட்டர், விசுவாமித்திரர், பரத்வாஜர் முதலிய மகரிஷிகள் ருக் வேத மந்திரங்களை இயற்றினர். அதே காலத்தில் தான் ஆரிய புரோகிதர்களின் உதவியைக்கொண்டு குருபாஞ்சால ஆரிய சேனைத்தலைவர், ஜனசமூகத்தின் உரிமைகளை பலமாகத் தாக்கி இறுதியாக அழித்து முடித்தார்கள்." 

- வால்காவிலிருந்து கங்கை வரை. 

இதேபோல, பாரதத்தின் அநேக பகுதிகளை ஆண்டவர்கள் என்பதாலேயோ என்னவோ குப்தர்களின் மதவழியிலான சாம்ராஜ்ய ஆட்சி, சாணக்கியரின் அரசியல் தந்திரங்கள் ஆசிரியரின் பார்வையில் நிறையவே சாடப்படுகின்றன. யக்ஞவல்க்கீயன் இன் இந்த பித்தலாட்டமான பிரம்மம் பற்றிய கேள்விகளை நாத்தீகர்கள் எழுப்புவார்களென ஒரு கதையில் பிரபா என்பவள் நம்பியதை போல, சுயநல, சுகபோக மன்னன் ஆட்சி முறை மாறி ஜன சமூக ஆட்சிமுறைமையும் மறுபடி மலரும் என்பதான நம்பிக்கைகள் கதைகளின் முடிவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது.

பிராமணர்களின் சனாதனம் - ஸ்திரமானது, மாற்றமற்றது; 
பெளத்தத்தின் அநாத்மம் - உள்ளும் புறமும் அழிவற்ற நித்திய வஸ்து ஏதுமில்லை 

என்கிற கருத்துமுதல் வாத தர்க்கவிசாரணைகள் ஆன்மவிடுதலையை நோக்கி பேசப்படுகிறது. ஆன்மவிடுதலை பற்றி பேசியும், சுயநலம் மட்டுமே பேணிய பிராமண ஆட்சியாளர்கள், வேதவியாக்கியர்கள்  போலவே பெளத்தபிக்குகள் கூட தனிச்சொத்துடைமைவாதிகளாய் ஆனதாக முடிக்கிறார் பெளத்த வரலாற்றை. 

அதேபோல, உண்மையானதும், ஒட்டுமொத்தமானதுமான மானுடவிடுதலைக்கான தத்துவக்கோட்பாடுகள், தர்க்கவிசாரணைகள் இறுதி அத்தியாயங்களில் மிக திண்ணியமாகவும், அடர்த்தியாகவும் சொல்லப்படுவதாய் தோன்றியது. 

அரசமைப்பதும், அந்த அரசுக்கு கட்டுப்பட்டு வாழ்வதும், பிரமம் என்கிற கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் கர்மவினை எனக்  குடிகள் அடிமையாய் நீடிப்பதும்  விடுதலையின் முடிவாகக் கொள்ளமுடியவில்லை. மாறாக மனித விடுதலைக்கான சிந்தனை புறவுலகின் பொருளியல் அசைவியக்கத்தின் வழி கட்டமைக்கப்பட்டு அகவயமான விடுதலையின் சிந்தனைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே வால்காவிலிருந்து கங்கைவரை குறித்த எனது புரிதல்.

ஆரம்பகால வேட்டுவச்சமூகத்தில் பெண் குடும்ப அமைப்பின் தலைவி, வேட்டையாடும், போராடும் பலமிக்கவள். கலவிச்சுதந்திரம், ரத்த உறவுகளுக்கிடையேயான உடலுறவு, incest, அது குறித்த கருத்தாதிக்கம் உருவாகாத காலத்தின் போதும் காதல், காமம் என்கிற போட்டியில் அவளுக்குள் மனிதகுலத்தின் primitive instinct இயல்புகள் தலைதூக்குக்குகிறது. தன்னினம், சந்ததி, குடும்பம் தழைத்தோங்க பெற்றமகளை சூழ்ச்சியால் பலிகொள்வதென்பதும் நிகழ்ந்தேறுகிறது. ஒரு சில அத்தியாயங்களுக்குப் பின்னான கதைகள்  சொல்லும் மானுடவரலாற்றில் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கினாலும் ஆங்காங்கே பெண்களின் ஆளுமையும் கதைகளின் பாத்திரப்படைப்புகள், தர்க்கங்கங்கள், முரண்பாடுகள் வழி வெளிப்படுகிறது.

பிரவாஹன் - லோபா கதையில் பிரமம் பற்றிய கருத்துருவாக்கம் பித்தலாட்டம் என லோபா வாதாடுவதாகட்டும்; அஸ்வகோஷ் - பிரபா கதைகளில் இருவரும் சேர்ந்துவாழ முடியாமல் அஸ்வகோஷ் பெளத்தம் தழுவுவதும், பிரபா (வெவ்வேறு கதை வெவ்வேறு பிரபா) தன்னை அழித்து அஷ்வகோஷை நாடக இலக்கியத்தில் சிறந்தவனாக செய்வதென்பது புரியாமலும், ஏனிப்படி என்பதாயும் தோன்றிற்று வாசிப்பில். பிராமணீய தத்துவங்கள் படி கணவன் இறந்ததும் பெண்ணை தீயிட்டுக் கொழுத்தியதும் வரலாறே என்கிறார் ஆசிரியர். 

கூடவே, சமூக சாதீய, வர்க்கமுறண்பாடுகளில் சிக்கும் ஆண் - பெண் காதல், தியாகம், கரையேறுதலும் சொல்லப்படுகிறது. இனக்குழுக்களுக்கிடையேயான கலப்புகள், அதனால் உண்டாகும் சமூக, அரசியல் அடையாளச்சிக்கல்கள் வெகுவாகப்பேசப்படுகிறது. கலப்பு மணங்கள், சமூகம் ஏற்க மறுக்கும் பிராமணியம், பிராமணியீமல்லாத அடையாளக்குழப்பங்கள், identity crisis (சுபர்ணயெளதேயன்) என்பனவும் காணலாம் கதைகளில். அது என்னவோ இன்றைய நாட்கள் வரை நீடிப்பதாய் தோன்றியது படிக்கும் போது.

இவ்வாறாக தேசம், அரசியல் ஆளும் முறைமைகள், பொருளாதாரமுறைகள், வாழும்முறைகள், பண்பாடு, கலாச்சாரம் கட்டியமைக்கப்பட்ட தேசத்தில் அந்நிய படையெடுப்புகள் நிகழ்கின்றன. மதத்தின் பெயரால் மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் இஸ்லாம், பொருளீட்டு நோக்கில் பிரித்தானிய காலனியாதிக்கம், கூடவே கிறித்துவ மதம் பரப்பல் பாரததேசத்தை ஆக்கிரமிக்கிறது. தேசம் அமைத்தலோடு வலராறு முடியவில்லை. அந்நிய படையெடுப்புகள், முரண்பாடுகள் வரலாற்றின் இன்னோர் கட்டத்துக்கும்  மாற்றத்துக்கும் பாரத மக்கள் சமூகத்தை இட்டுச்செல்கிறது. 

மங்கோலியர்கள் உடன் ஸமனியர்கள்/பெளத்தர்கள் சேர்ந்து இந்துக்களை தங்கள் பக்கம் சேர்த்திருந்தால் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் பாரததேசத்தில் வளர்ந்திருக்க சாத்தியமில்லை என்கிற போது மதங்களும் அதன் ஆளுமைகளும் மக்களை அந்தியப்படையெடுப்புகள் கூட பிரித்தே வைத்திருக்கிறது என்கிற காலந்தோறும் நிகழ்ந்தேறும் வரலாற்று உண்மை புலப்படுகிறது. இஸ்லாம் தர்மசாத்திரங்களின் படி கூட அடிமைத்தனமும் அடிமைகளும் அனுமதிக்கப்பட்டும், ஆளப்பட்டும் இஸ்லாம் ஆட்சி பாரதத்தில் ஒங்க மதமாற்றம் முக்கியம் என இஸ்லாமியர்கள் நினைத்தையையும் அது முடியாமற்போனதும் விளக்கப்படுகிறது. 

எல்லா மதங்களினதும் கருத்துருவாக்கங்கள் போலவே இஸ்லாமின் பெயரால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய  ஆட்சிமுறையும். கலீபா என்கிற மதத்தலைவர் பதவி உருவாக்கம், அதன் பிறகான வரலாறு என்பன வால்காவிலிருந்து கங்கை வரையில் அதிகம் விவரிக்கப்படவில்லை. அது அதிகம் பாரதத்துக்கு தேவையும் இல்லாமல் இருந்திருக்கலாம். இஸ்லாம் என்கிற பெயரால் அடிமைகள் (Mamluks) ராணுவம் கட்டியமைக்கப்பட்டதும், பின்னாளில் அவர்களின் வாரிசு அரசியல் ஆட்சி முறை உருவானதும் இஸ்லாம் பெயரால் உண்டு. 

இஸ்லாம் பற்றி வால்காவிலிருந்து கங்கை வரையில் சொல்லப்பப்படாதது காலத்தின் தேவை கருதி. Quraysh Tribe - Hashemite lineage இல் இருந்து வந்தவர் தான் Prophet Mohamed, முகம்மது நபிகள். அதே Quraysh இனத்தில் இன்னொரு சந்ததி உமாயத், Umayyad என்பவர்கள். Hashemite மற்றும் உமாயத் (Umayaad) சந்ததிக்கும் பொதுவான ஒரு முன்னோடி Adb Manaf என்பவர். இந்த இரு சந்ததிக்குள்ளும் எப்போதுமே கலீபா பதவிக்கான சண்டை தான் இருந்து வந்தது என்பது வரலாறு. Prophet Mohamed காலத்துக்குப் பின்னாளில் அவரது மருமகனார் அலி உமையத் சந்ததியின் உத்மனுக்குப் (மூன்றாவது கலீபா) பிறகு கலீபா ஆகிறார். அவரும் பின்னாளில் அந்தக்கால அரேபியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு Kharijite சந்ததியால் இல்லாதொழிக்கப்படுகிறார். ஆக, இந்த மூன்று சந்ததிக்குமிடையே நிறையப்பகைகள், சண்டையில் ஈற்றில் அலியின் மகன் ஹுசேய்ன் கொல்லப்படுகிறார். அதன்பின் அலியின் (முகம்மது நம்பிகள் மருமகனார்) வழிபற்றி வந்தவர்கள் Shities முஸ்லிம்கள் எனவும் உமாயத் சந்ததி வழிவந்த மெளவியா (Muawiya) வழிவந்தவர்கள் Sunnis எனவும் இந்நாள் வரை நீடிக்கும் முரண்பாடுகள், சண்டைகள். 

இபடியாக அப்பாஸிட் சந்ததி தான் இஸ்லாத்துக்காக அடிமை ராணுவ முறையை உருவாக்கி தேசங்களை ஆண்டு, இஸ்லாத்தையும் பரப்பி வந்தார்கள். அதன்பிறகு ஒட்டமன்கள் ஒட்டமன் சாம்ராஜ்யம் உருவாக்கி இஸ்லாம் பரப்பும் நோக்கம் இன்னும் விரிவடைந்தது. ஒட்டமன் சாம்ராஜ்யத்தில் அருகேயுள்ள கிறித்தவ நகரங்களில் கிறித்துவ பாதிரிமார்களிடம் அங்கே பாப்டிசம் செய்யப்பட்ட சிறுவர்களின் ப்ட்டியலை கட்டாயத்தின் பேரில் வாங்கி அந்தச் சிறுவர்களை அடிமைகளாக்கி ஒட்டமன் சாம்ராஜ்யாத்தில் அதிகாரிகளாகவும், கவர்னர்களாகவும் சுல்தான்களில் கீழே வேலைக்கமர்த்தப்பட்டார்கள். இவர்கள் கூட ஒருவிதமான ஸ்டேட்டஸ்ம் இல்லாதவர்களாகவே உருவாக்கப்பட்டார்கள். வருடா வருடம் இந்த முறையில் சிறுவர்கள் பறிக்கப்பட்டதும், பெற்றோர் இழந்த குழந்தைகள் இழந்தது தான் என்பதும் வரலாறே. 

பின்னாட்களில் ஓட்டமன்  சாம்ராஜ்யத்திலிருந்து அரபிகளுக்கான தனித்தேசம், பாலஸ்தீனம் உருவாக்க அவர்கள், Hashemite lineage இல் வந்தவர்கள் பிரித்தானியாவிடம் உதவி கோரியதும், ஈற்றில் பிரித்தானியா இஸ்ரேல் என்கிற நாட்டை உருவாக்கியதும் இன்னொரு பெரிய வரலாறாரு. 

இது போல மானுட வரலாற்று அரசியல் பேராசைகள், ஆட்சி ஆசைகள், அதன் கோரவிளைவுகள் இன்னும், இன்றும் தொடர்கிறது.  இதில் எங்கே வரும், எப்படி பொருந்தும் மானுட விடுதலைக்கான வரலாற்று சிந்தனைகள், செயற்பாடுகள். தற்காலத்தில் ராகுல் சாங்கிருத்தியாயன் இருந்திருந்திருந்தால் இது குறித்தெல்லாம் என்ன எழுதியிருப்பாரோ! 

மறுபடி, வால்காவிலிருந்து கங்கை வரைக்கு போனால், பாரதத்தில் பிரித்தானிய காலனியாதிக்கம் பற்றியும், வெள்ளையர்களை எதிர்த்து போராடவேண்டிய கட்டாயம், வழிமுறைகள் பற்றியும் மிக அடர்த்தியான வரலாற்றுத் தகவல்களோடு எழுதப்பட்டிருக்கிறது. எகிப்தின் சுயஸ் கால்வாய் இஸ்மாயில் பாஷா என்பவரால் யூதராக இருந்து கிறிஸ்தவராக மதம் மாற்றப்படட, 1875 இல் பிரித்தானிய பிரதமராக இருந்த Benjamin Disraeli யால் பிரித்தானியாவுக்காக வாங்கப்பட்டிருக்கிறது. இதுக்கான காரணம், இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்குமான கப்பற்போக்குவாரத்து பாதையை சுருக்கவும், வசதியாக்கவுமே. 

வால்காவிலிருந்து கங்கைவரை என்கிற வாசிப்பு பற்றிய குறை என்று எனக்கு தோன்றியது ஒரே விதமான உரையாடல்கள் சில சமயங்களில் வாசிப்பில் ஒரு தொய்வை ஏற்படுத்தியது. தவிர, பாரததேசம் என்பதாலோ என்னவோ பிராமணியம் மிகக்கடுமையான சாடலுக்கு உள்ளாவதும், அதை எதிர்க்க சரியான சக்திகள் ஏன் உருவாகவில்லை என்பதுமான கேள்விகள் உள்ளோடியது வாசிப்பில். பிராமணியம் உருவாக்கிய பிரம்மம், கருத்துமுதல்வாதம் தான் இன்றும் பாரதத்தை ஆட்டுவிக்கிறது என்பது நிதர்சன வரலாறு. 

மிருகங்களாய் இருந்து இனக்குழுவாய் உருவான எல்லா மனித இனங்களும் வரலாற்று அசைவியக்கத்தின் வழி இன்னும் விடுதலை அடைந்துவிடவில்லை. மானுட வரலாறும் அதன் அசைவியக்கமும் தொடர்கிறது. விடுதலையும் தூரமாகிக்கொண்டே செல்கிறது. காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம், முதலாளித்துவம், சந்தைப் பொருளாதார ஜனநாயகம் என்கிற வடிவங்களில் இன்னுமின்னும் அடிமைத்தனங்கள் கண்ணுக்குப் புலப்படாத வகையில் தொடர்கின்றன. 

எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. ஆனாலும், மனிதனை மனிதன் மதத்தின் பெயரால், பொருளாசையின் பேரால், மண்ணின் பெயரால் அடிமைப்படுத்தவே செய்கிறான். முதலாளித்துவத்தை எதிர்த்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நினைப்பவர்களிடமும் அதற்கான வழிமுறைகள் இல்லையா அல்லது அவர்கள் வழிமுறைகள் தோற்றுப்போகிறதா என்கிற கேள்வியே மிஞ்சுகிறது. அதற்கான பதிலை தேட சீனா, கியூபா வின் மானுடவரலாறு ஆராயப்படவேண்டுமோ! 


உதவிய புத்தங்கள்: 

விடுதலை, கட்டுரைத் தொகுப்பு, அன்ரன் பாலசிங்கம். 

The Origins of Political Order, Francis Fukuyama.

படம் உபயம்: கூகுள்.