ஆகஸ்ட் 16, 2014

கத்தி, புலிப்பார்வை என் இரண்டு சதங்கள்!

காலங்காலமாக எப்படி மனித சமூகத்தை கட்டி அமைப்பது,  என்று ஆராய்ச்சிகள் செய்து அந்த கோட்பாடுகளை apply செய்து, trial and error ஆகத்தான் மனித இனம் ஆளப்படுகிறது. எல்லாமே இன்னமும் அதன் இயங்குவிதிகளில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. Tribal society முதல் Modern WEIRD (Sociology acronym stands for Western, Educated, Industrialized, Rich, Democratic) சமூகம் வரை அததற்கான அரசியலும், அரசியல் சார் கட்டமப்புகளும், தகவமைப்புகளும் எப்படி மைய அரசியலில் கொள்கை ரீதியாக கட்டியமைக்கப்படுகிறது, அமுலாக்கப்படுகிறது என்பது சிம்பிள் லாஜிக். 


குற்றங்களுக்கும் காவல்துறை பணியாளர்களுக்குமான எண்ணிக்கையில் இல்லை குற்றங்களை குறைப்பது என்பது. அது சரியான அரசியல், பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் விளைவது. ஒரு சாதாரண குடிமகனை சட்டம் உன்னை தண்டிக்கும் என்று பயம் காட்ட உருவாக்கப்பட்ட, பயத்தை உண்டுபண்ணும் விம்பமே, authority figure, காவற்துறைக்கான சீருடையும், துப்பாக்கியும். அதுபோல மற்ற மற்ற துறைகளும் அதற்கான authority figure களும். அதுவே, ஒருவன் அல்லது ஒருத்தி உலகமகா திருடனாகவோ, திருடியாகவோ இருக்கும் பட்சத்தில் இந்த 'authority figure' பயங்காட்டல்கள் வேலைக்காகாது. காரணம், அங்கே பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு இருக்கும். அங்கெல்லாம் குற்றம் களையவேண்டிய அதிகாரிகள் சிவில் உடையில் ஊடறுத்தும், தொழில் நுட்பத்தை நாடவேண்டியதுமான நிலை. என்ன ஒரு முரண் நகை. 


இது இரண்டிலும் அடங்காமல் தங்களை ஆளவும், ஆளப்படவும் அனுமதிகொடுத்தவர்கள் தங்கள் நியாயங்களை சம்பந்தப்பட்டவர்கள் கருத்திற்கொள்ள தவறுமிடத்தில் அதை உரியவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டியது தான் ஊடகங்கள், மற்றும் இன்னபிற கலைவடிவங்கள், அதன் பிரதி நிதிகளாக தங்களை வரித்துகொண்டவர்கள் கடமை. கலை வடிவம் என்பது முதலில் வணிகம் சார்ந்தது. பிறகு தான் மிச்சம் எல்லாம். கோடி கோடியாகப் பணம் புழங்குமிடத்தில் அதிகபட்ச மனட்சாட்சியை யாரிடமும் எதிரிபார்க்க முடியுமா தெரியாது. தமிழ் சினிமாவின் கோடிகளில் புரட்டப்படுகிறது ஒரு இனத்தின் வாழ்வும், சாவின் அவலங்களும். 


சர்வதேச அரசியலின் சதி வலைக்குள் சிக்குண்டபடியே இருக்கும் ஈழத்தமிழர்கள் என்கிற இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கும்  சர்வதேச அரசியலுக்கும், சிங்களப் பேரினவாதத்தின் கருவிகளாக செயற்படும் மனிதர்களால்  கலைவடிவங்கள் என்னும் போர்வையில் தற்காலத்தில் ஏனோ பலவிதமான கருத்துருவாக்கங்கள் பண்ணப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் தமிழர்களுக்கு எதிரான, தமிழர்களின் ஆண்டாண்டுகால இனப்படுகொலையை நியாப்படுத்தும் போக்குடையவையாகவே வலிந்து வடிவம்கொடுக்கப்படுகிறதா! இந்து சமுத்திரத்தில் ஊடுருவ நினைக்கும் சர்வதேச அரசியலில் தமிழர்கள் என்கிற இனக்குழுமத்தின் ஒற்றுமையும், போராட்டமும் நசுக்கப்படவேண்டும் என்கிற கொள்கைகளோடு செயற்படுபவர்களுக்காகன ஆதாரசுதி போலவே இருக்கிறது ஈழம் குறித்த சில தமிழக கலைப்படைப்புகள், மற்றும் இந்திய மைய அரசியலின் கொள்கைகளை மையமாகக்கொண்டு இயக்கப்படும் ஈழம் குறித்தான படைப்புகள், படைப்பாளிகள், மற்றும் படைப்பாளிகளின் ஆதரவளர்களின் பேச்சுக்களும் அது குறித்தான அரசியல் நிலைப்பாடுகளும். இதற்கான அண்மைய உதாரணங்கள் மெட்ராஸ் கஃபே, இனம் பொன்ற படங்கள். இந்த இரண்டு படைப்புகளிலும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை, விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கலைவடிவங்களை எதிர்த்தவர்களில் சிலர் இப்போது கத்தி, புலிப்பார்வை என்கிற ஈழ அரசியல் சார்ந்து தமிழர்களின் பக்கமுள்ள நியாயமான கோரிக்கைகளுக்கு பாரதுரமான, பாதகமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய படைப்புகளின் அரசியலை ஆதரிப்பது தான் சாபக்கேடு. 


புலிப்பர்வை இயக்குனரின் ஒரு காணொளி பார்க்கும்போது மனதில் தோன்றியவை இவை. தமிழ் நாட்டில் இதுவரை அப்பிடி யாரும் உள்ளது உள்ளபடி, இயல்பாய் ஈழம் பற்றி அதன் விடுதலைப் போர் பற்றிப் படம் எடுத்ததுமில்லை. எங்கள் தமிழை தமிழ் நாட்டில் உடைச்சு, உடைச்சுத் தான் அனேகமா எல்லாருமே பேசுவார்கள். அதையே கலைவடிவமாய்ப் பார்க்கும்போது இயல்போடு ஒட்டுவதில்லை. தவிர, எந்த ஒரு வரலாற்றையும், உண்மையையும் பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேற யாரால் கலைவடிவம் கொடுக்கப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மை ஒத்துக்கொள்ளாது. அது இயற்கை. Blood Diamond என்கிற ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப்பட்டது. Sierra Leone என்கிற நாட்டில் இருக்கும் வண்டல் குவியல் வைரங்களை வைத்து பின்னப்பட்ட ஒரு அரசியல் கதை. வண்டல் குவியல் என்றால் வைரங்கள் ஆற்றுப்படுகையின் வண்டல் மண்ணுக்குள் அதிகம் ஆழமில்லாமல் புதைந்திருக்குமாம். அதை 'Panning' என்கிற முறையில் வடித்தட்டுப் போன்ற ஒன்றில் அரித்து எடுப்பது. வைரங்களுக்கான இரண்டு நிறுவனங்களின் சண்டையை ஹோலிவுட் ரசிகனின் ரசனைக்காய்ப் படமாக்கினால் எப்படி பாதிக்கப்பட்டவர்களின் கதை சொல்லப்படும்! அந்தப் படம் பற்றி அந்த நாட்டின் அரசியல் நிலவரங்களை சரியாச் சொல்லாமல், அது பற்றிய குறைந்தபட்ச உண்மைகளையெனும் சொல்லாமல் எடுக்கபட்ட படத்தை சம்பந்தப்பட்ட அந்த நாட்டை சேர்ந்தவர்கள் திட்டியவர்கள் தான் அதிகம். ஏன், Spielberg's movie Amistad ஐ கூட பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் விமர்சிக்கவே செய்தார்கள். அனேகமா அப்பிடித்தான் இதுவும் இருக்கலாம். மற்றப்படி, சினிமாத்தனங்கள் இல்லாமல் இருந்தாலே நல்லது. உங்கள் சினிமாத்தனங்களில், இலாபநோக்கங்களில் போராட்டத்தின் நியாயமும் வலியும் சிதைக்கப்படும், முடமாக்கப்படும். 

'இந்தியாவை நேசிக்கிறோம்' என தமிழீழத் தேசியத் தலைவர் முதன்முதல் சொன்னது அமைதிப்படையாக வந்து ஈழத்துக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்ல, பிரபாகரன் தான் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களிடம் பேசியே ஆகவேண்டும் என்று சுதுமலையில் 1987 ஆகஸ்ட் 04 ம் திகதி முதன்முதல் அல்லது ஒரேயொரு தடவை ஈழத்தமிழர்கள் முன் பேசினார் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியிருக்கிறார். அப்போது தான்,  'நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். இனி, சிங்கப் பேரினவாத ராணுவத்திடமிருந்து தமிழர்களின் பாதுகாப்புக்கு இந்தியா தான் பொறுப்பு. 'நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்' என்பதாக பதியப்பட்டிருக்கிறது வரலாற்றில். அதைத்தான், 'We love India speech' என்று இந்தியப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. புலிப்பார்வை படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி  பேசும்போது அதிகம் ஈழவரலாறு தெரிந்தவராக எனக்குப் படவில்லை. You tube காணொளிகளை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வலிந்து தனது படைப்புக்கான reference ஆகக் குறிப்பிடுவது இயக்குனரின் ஈழவரலாறு குறித்த ஆராய்ச்சியின் அளவின் பஞ்சத்தையே சுட்டுகிறது. இந்தியாவை நேசிக்கிறோம் என்கிற பேச்சின் வரலாற்று ஆரம்பத்தை குறிப்பிட்டிருக்கலாம் இயக்குனர். அவருக்கே தெரியவில்லை போல. எந்தப் பிரச்சனையினதும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு தமிழ் சினிமாவில் காசுபார்க்கலாம் என்கிற நிலை தான் அதன்மீதான பரிதாபத்தையும் உண்டுபண்ணுகிறது. பார்க்கலாம் படம் எப்பிடி வருதுன்னு. கண்டிப்பாக நான் படம் பார்க்கப்போவதில்லை. விமர்சனங்கள் வழி மட்டுமே அறிய ஆவல். முயற்சி தமிழர்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் தமிழ் நாட்டில் நல்லவிதமாக கொண்டுசேத்தாலே நல்ல விடயம் தான். ஆனால், அதற்கான எதிர்ப்பும், அரசியல் முண்டுகொடுப்புகளும் படத்தின் மீது சந்தேகத்தை வரவைக்கின்றன. 


எந்தவொரு ஈழத்தமிழனாலும் இந்தியா என்கிற வல்லூறை நேசிக்கமுடியுமா என்பது சந்தேகமே! 

கத்தி படம் பற்றியம் அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா (LYCA) பற்றியும் இதுவரை நிறைய செய்திகளும், அதற்கான தமிழக அரசியல் சார்ந்து சிலரது முண்டுகொடுப்புகளும் இன்னும் தொடர்கிறது. LYCA என்கிற பிரித்தானியாவை மையமாக கொண்டு  இயங்கும்  தொலைதொடர்பு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும், ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சூத்திரதாரிகளுக்குமான தொடர்பும், கத்தி படம் பற்றி தமிழர்கள் பெரும்பாலானவர்களின் மனதில் ஒரு தாளமுடியா கசப்பை உருவாக்கி இருக்கிறது. இதுபோன்ற இலங்கையைச் சேர்ந்த ராஜப்க்ஷேக்களின் கருவிகளாகச் செயற்படுபவர்களின் தமிழ்த் திரைத்துறையில் ஊடுருவும் பொருள்முதலீடானது தமிழர்களுக்கு எதிரான கருத்தை உருவாக்குவதுடன், தமிழர்களின் வரலாற்றை திரிப்பதாகவும் விஷமத்தனத்தோடு அமைக்கப்படுகின்றன என்பதே பிரச்சனையாகிறது. தவிர, தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை கொண்டுவரப்படவேண்டும் என்கிற தீர்மானத்தின் பின்னும் இதுபோல் இலங்கை ஆட்சியாளர்களின் கருவிகளின் வழி அவர்களின் பொருள்முதலிடுகளை தமிழகத்திற்குள்ளேயே  கலை என்கிற வடிவில் கொண்டுவருவதை தமிழக மாணவர்களும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் சில அரசியல் சார்ந்த, சாராத அமைப்புகளும் எதிர்க்கின்றனர். 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆனால், இங்கே கூத்தாடிகள் ஊரை பிளவுபடுத்தி தமிழர்களின் உணர்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள். கத்தி, புலிப்பார்வை இரண்டுக்குமான எதிர்ப்பின் அலைகளில் தமிழக ஈழ ஆதரவாளர்கள் முரண்களோடு பேசுவதும், நடந்துகொள்வதும் தான் கூத்தாடிகள் ஒன்றுபட்டதால் ஊர் பிளந்து கிடக்கும் அவலம் நடக்கிறது என நினைக்கவைக்கிறது. ஈழம் குறித்து கலைப்படைப்பு பண்ணும் இந்திய, தமிழக படைப்பாளிகள் ஒரு விடயத்தை ஏன் புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்! தமிழ்நாட்டில் உண்மையில் ஈழ ஆதரவு, ஈழத்தின் வரலாற்றை சொல்லும் எல்லாளன் போன்ற படங்கள் தணிக்கை துறைகளால் வெளிவராமல் தடுக்கப்படுகிறது. ஆனால் ஈழஆதரவு என்ற போர்வையில் விஷம் கக்கும் படங்கள் உடனடியாக திரைக்கு வருகிறது. உணர்வாளர்களின் எதிர்ப்புக்கு பிறகுதான் கைவிடப்படுகிறது. 

இந்த உணர்வாளர்களும், தமிழ்தேசியவாதிகளும் இன்று கத்தி, புலிப்பார்வை படவிவகாரங்களில் பிரிந்தே கிடக்கிறார்கள் என்பதும் கண்கூடு. குறிப்பாக நாம் தமிழார் கட்சியின் தாபகர் சீமான் அவர்களின் திரைத்துறையை அதன் பொருளீட்டும் நோக்கங்களை வெளிப்படையாய் பேசவோ, எதிர்க்கவோ செய்யாத போக்குகள் தான் பலரையும் அவர்குறித்தான விமர்சனப் பார்வையில் பேசவைக்கிறது. சீமான் போன்ற ஈழ ஆதரவாளர்களை விமர்சிப்பதற்கான அரசியற் காரணங்களை, ஏதுக்களை அவரே உருவாக்கியும் விட்டிருக்கிறார் இந்த சர்ச்சைகளில். சீமான் எந்த அரசியல் இலக்கை நோக்கி நகர்ந்தாலும் சாண் ஏறி முழம் சறுக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது கத்தி, புலிப்பார்வையை எதிர்க்கும் மாணவர்களுக்கும், நாம் தமிழர்கள் இயக்கம் அல்லது கட்சியின் தொண்டர்களுக்குமான கைகலப்புகள், தாக்குதல்களில் அரசியல், சினிமா, பண, அதிகார பலம் எந்த ஆழம் வரை பாய்ந்திருக்கிறது என்பது யாரும் அறியாதது. 

தமிழினம் மைய அரசியலில் ஆளப்படவும், அடிமைப்படுத்தப்படவும் சினிமா என்கிற ஒரு பாரிய ஊடகமும் அதன் பிம்பங்களும், அதன் கருத்துருவாக்க தந்திரங்களின் வழி தன் பங்கை செய்துகொண்டிருக்கிறது. இதை தமிழகத்தில் எதிர்ப்பதென்றாலும் அதற்கான அரசியற்பலம் அல்லது பாரிய மக்கள் பலம் வேண்டும். ஆனால், இரண்டுக்குமிடையே ஊடகங்களின் செய்தி தயாரிப்புகள், சமூகவலைத்தலங்களில் விவாதங்கள், காணொளிகள், எதிர்வாதங்கள் என்று அவரவர் நியாயங்கள் சொல்லப்படுகிறது. இதில் யாருக்காகப் போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த ஈழத்தமிழர்கள் இலங்கையிலும் சரி, புலத்திலும் சரி மெட்ராஸ் கஃபே, இனம் படங்கள் போன்றே கத்தி, புலிப்பார்வை படங்களையும் குறைந்தபட்சம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டால் அவற்றைப் பார்க்காமல் தவிர்க்கலாம்.  இதில் ஈழத்தமிழர்கள் உணராதது என்று நான் நினைக்கிறது, புலத்தில் தமிழர்கள் தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு பெரிய பொருளாதாரச்சந்தையை உருவாக்கிக்கொடுக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கே புரியவில்லை. அதற்கு ஒரு சின்ன உதாரணம் என்றால் இனம் படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக திருப்பதி பிரதர்ஸ் என்கிற நிறுவனம் வெளியிட்டால் புலத்தில் அஞ்சான் திரைப்படம் வெளியிடப்படமாட்டாது, புறக்கணிக்கப்படும் என்கிற நிலை வந்ததும் அந்த நிறுவன உரிமையாளர் லிங்குசாமி உடனடி, தடாலடியாய் ஒரு அறிக்கையோடு ஒதுங்கிக்கொண்டார். அந்த பொருளாதார பலம் குறித்த சரியான அறிவும், புரிதலும் இருந்தால் தமிழ் சினிமாவின் இதுபோன்ற ஈழத்தமிழர்களுக்கு எதிரான சில்லுண்டித்தனங்கள் பலிக்காது ஈழத்தமிழர்களிடம். அதை ஈழத்தமிழர்கள் உணர மறுக்கிறார்கள். இதை உணர்ந்துகொண்டால் முள்ளிவாய்க்காலில் மாண்டவர்க்கும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காய் உன்மையில் குரல்கொடுப்பவர்களுக்குமான கெளரவம். 


Image Courtesy: Google.