மே 16, 2014

முடிவில்லா முள்ளிவாய்க்கால் மே 18

துல்லியம் காட்டும்
தொலைநோக்கியில்
தெரியாமல் போனவை
முதுகுக்கு பின்நின்ற
துரோகமுகங்கள்.

-ஓவியர் புகழேந்தி.

ஈழத்திலும் புலத்திலும் எங்குமே தமிழர்களின் குரல்வளையும், குரல்களும் நசுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

முள்ளிவாய்க்கால், மெளனமாய் மனதிற்குள் முணுமுணுக்கும் சோகம். இரத்தமும், சதையுமாய் ஈழத்தின் அழியாத போராட்டவரலாற்றுச் சுவடு. இழப்பின் வலியை சொல்லியழக்கூட ஒன்றுகூடமுடியாத மண்ணில் தொடரும் தமிழர்கள் அவலம். சிங்களப் பேரினவாதத்தின் ராட்சசக் கரங்கள் தமிழர்கள் மண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை ஒட்டி ஒன்றுகூடி அழவோ, மெழுகுவர்த்தி ஏற்றவோ தடைபோட்டு கழுத்தை நெரிக்கின்றன. பொது இடங்களில் ஒன்றுகூடத் தடை. யாழ் பல்கலைக்கழகம் மூடிவைப்பு முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தையொட்டி. தமிழர்கள் ஒன்றுகூடமுடியாது. ஆனால், சிங்களச் சிப்பாய்களின் குடும்பங்களுக்கு வடக்குக்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் மண்ணில் மரியாதை. வடக்கில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் விதவை தமிழச்சிகள் கூடி அழ உரிமையில்லை. அடுத்த தமிழ் இளம் தலைமுறைக்கு ’மாறுதலுக்கு தயாராகுங்கள்’ என்று பெளத்தம் தலைமைக் கல்வியாம். இலங்கை அரசின் தமிழின அழிப்பை போர்வெற்றி என்று தமிழ்ச்சிறார்கள் சிங்கள ராணுவ அதிகாரிகளை கெளரவிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

முள்ளிவாய்க்கால் ஒரு அவலம். தமிழர்களின் ஒற்றுமை குறித்த அக்கப்போர் இன்னோர் அவலம். என்றைக்கு புலிகளின் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கு இல்லாமற் போயிற்றோ, அன்றுமுதல் தமிழர்கள் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை முறையாய் வெளிப்படுத்தியதாய் எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. ஈழத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இருப்பவர்களின் ஆளொருக்கொரு கூற்றுக்குள் அவர்களுக்குள் முரண்பட்டு சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறெதுவும் மனதில் தோன்றவில்லை. தங்கள் கட்சியைப் பதிவதில் இன்னமும் தமிழரசு கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு என்று உள்கட்சி பூசல்கள் மறுபுறம். தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையையும், இழப்புகளுக்கான அரசியல் தீர்வையும் பேசும் நிலையிலிருந்து வழுவிக்கொண்டே இருக்கிறது தமிழர்களின் பிரதிநிதித்துவம். 

மறுபுறம், புலம்பெயர் தமிழர்களை ஓரங்கட்டும் சர்வதேச சதியும் ஒரு அங்கமாய் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. International Crisis Group இன் முனைநாள் தலைவர் Gareth Evans  புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று மிகைப்படுத்தி சொல்கிறார்கள் என்று கருத்தறிவித்திருக்கிறார். இவ்வளவு இழப்புகளை சந்தித்த தமிழர்களுக்கு தீர்வாக Remedial Sovereignty பற்றிக் கேட்டால் இவர்களின் மேற்குலக அரசியற்சார்புகளோடே பதில் சொல்லி மழுப்புகிறார். இலங்கைக்குள் ஒற்றையாட்சி, தமிழ் மாகாணங்களுக்கு எந்த அதிகாரமுமில்லாத 13வது திருத்தச்சட்டம், சிங்கள - பெளத்த மொழி மதத் திணிப்புகள், தமிழர்களை அழிக்கும் திட்டமிடப்பட்ட இனவழிப்பு, கல்வி, கலாச்சார, பண்பாட்டு, பொருளியல் அழிவுகளை பேரினவாதத்துக்கு ஆதரவாகவும் ஊக்கப்படுத்தியும் தமிழர்களை எள்ளிநகையாடும் விதமாகவே International Crisis Group அமெரிக்கா - இந்தியா சார்பாக மந்திர உச்சாடனமாய் பேசிக்கொண்டிருக்கிறது. 

தமிழக அரசியல் சூழல்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இனிவரும் காலங்களிலும் அதே பழைய குருடி கதைவத்திற என்கிற போக்கிலேயே இருக்கும் போல. இன்னும் கூட ஈழத்தமிழ் அகதிகள் புழல் சிறையில் அடைக்கப்படுவது முதல் அவர்கள் தமிழகச் சிறைகளில் மோசமாக நடத்தப்படுவதும், தற்கொலை செய்வதும் தொடர்கிறது. இப்படி இருக்க எப்படி நம்பிக்கை வரும் தமிழகத்தின் அரசியல் மேல். ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பேசக்கூடியவர்களும் அரசியல் பலமற்றவர்களாக இருப்பதும் ஒரு குறைபாடு. 

தன் கையே தனக்குதவி என்பது போல், எல்லாப் பிரச்சனைகளுக்கும் புலம்பெயர் தமிழர்களே இன்று முன்னின்று உழைக்கவேண்டியது அவசியமாகிறது. புலம்பெயர் தமிழர்கள் மேலும் உறுதிபெற்று முள்ளிவாய்க்காலில் தம் உயிர்களை இழந்தவர்களுக்காக உழைப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது சொந்தமண்ணில் சிறைவைக்கப்பட்ட இளம் தலைமுறை.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்! Image Couretsy: TamilNet, Google and Google Plus.