பிப்ரவரி 01, 2014

தமிழருக்கு வாய்த்த பிரதிநிதிகள்!

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை 25வது கூட்டத்தொடரில் இலங்கையின் தமிழர்களுக்கு தீர்வு சொல்லாத, தமிழர்களின் இனப்படுகொலையை ஒப்புக்கொள்ள மறுக்கிற, தமிழர்களால் மட்டுமல்ல சர்வதேச அமைப்புகளால் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அமைக்கப்படாததும், நடத்தப்பட்டதுமான நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை, மற்றும் அறிக்கையின் பரிந்துரையின் பிரகாரம் ஏதோ மனித உரிமைப் பிரச்சனை மட்டுமே எங்கள் பிரச்சனை என்கிற ரீதியில் மறுபடியும் பேசப்போகிறார்கள். அதற்காக இப்போது முஸ்தீபுகள் நடைபெறுகின்றன. 

அவை எவை என்று பார்த்தால், இந்தியாவிலிருந்து ஒரு குழு தமிழர்களை வடக்கில் சந்தித்தது. அமெரிக்காவின் பிரதி ராஜாங்க மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான நிஷா தேசாய் பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சகிதம் யாழ்ப்பாணத்தில் மரியாதைக்குரிய ஆயர் தோமஸ் சுந்தரநாயகம் முதற்கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு அனந்தி சசிதரன் மற்றும் சிலரை சந்தித்து அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பேசுவதாக செய்திகள் சொல்லுகின்றன. 

குறிப்பாக, யாழ்ப்பாண ஆயர் இனப்படுகொலை நிகழ்ந்தமைக்கான விசாரணை வேண்டும் என்கிற வேண்டுகோளுக்கு அமெரிக்க பிரதிநிதிகள்   மீளிணக்கத்தை வலியுறுத்திப் பேசியதாக செய்தி. கூடவே, காணாமற்போனோருக்கு என்ன கதி என்பதை பற்றியும் அறிய உதவும்படி அவர்களிடம் ஆயர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதையெல்லாம் கேட்டு மனித உரிமைகள் சபையில் தமிழர்களுக்காகப் பேசுமாம் அமெரிக்கா. நாங்கள் நம்பத்தான் வேண்டும்!

தமிழர்களுக்காகப் பேசவேண்டுமெனில் ஐ. நா. வின் பொதுச்சபையில் பாலஸ்தீனியப் பிரச்சனையைப் பேசியது போல் ஈழத்தமிழர்கள் பிரச்சனையைப் பேசலாம். ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள், இன்னும் தமிழர்களுக்கெதிரான மொழி, கல்வி, கலாச்சார, அரசியல், பொருளாதார, இனப்படுகொலை தொடர்கிறது என்று தமிழர் தரப்பு வேண்டுவதைப் போல உண்மையைப் பேசலாம். அதுதானே நியாயமும் கூட. அப்புறம், நீங்கள் மன்னார் புதைகுழிப் பிணங்களுக்கான விசாரணை பற்றி ஏதும் கேட்கவில்லையா! அது தமிழர்களின் எலும்புக்கூடுகள் என்று மன்னார் ஆயர் குறிப்பிட்டு சொன்னதாக AFP செய்தி வெளியிட்டிருந்தது. 

ஏற்கனவே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தில் 2009 ம் ஆண்டு நிகழ்ந்தது இனப்படுகொலை என திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கியதும்; இலங்கை தன் முயற்சியில் மட்டும் இந்த இனப்படுகொலையை நடத்தி முடிக்கும் வல்லமையற்றது. அதற்குத் துணைபோனவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இன்னும் நிரூபிக்க ஆதாரம் வேண்டும் என்கிற இந்தியாவின் பங்கு வரை தீர்ப்பாயம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. 


தமிழர்களின் தலைவிதியே இதுதான் போலும். ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்ய முன்நின்று உழைத்த சிங்கள ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ்தேசிய கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்து தமிழர்களை அவரைக்கூட ஆதரிக்கும் நிலைக்கு தள்ளியது முதல் அமெரிக்கா, பிரித்தானியா வரை மிகவும் நல்லவர்கள் என்று நம்பும்படி நம்மை எட்டித்தள்ளும் இடக்கு முடக்கான எட்டிக்காய் உள்ளூர், சர்வதேச அரசியல் சூழல். தற்போது, வடமாகாண சபை என்று ஏதோ கொஞ்சம் அதிகாரம் என்கிற பெயரில் கூட்டம் கூட்டவும் பேசவும் இருக்கும் அதிகாரத்தில் இருந்து கொண்டு அதன் பிரதமர் சி.வி. விக்னேஸ்வரன் சொல்வது ’இனப்படுகொலை விசாரணை’ வேண்டுமென்று நேரடியாகச் சொல்லக்கூடாதாம். அதற்கு இணையான என்று சொல்லவேண்டுமாம். அதாவது இனப்படுகொலைக்கு இணையான விசாரணை என்று சொல்வது. 

தற்போதிருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் இந்த தரத்தில் இருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, அண்மையில் கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் Scarborough Rouge River தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபயீசன் பேட்டி ஒன்று தமிழகத்தின் புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி இணையத்தில் பார்க்க நேர்ந்தது. மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபயீசனிடம் ஒரேயொரு முக்கியமான கேள்விதான்; புலம்பெயர் தமிழர்கள் என்றால் யாரென்று ஒரு வரையறை சொல்லுங்களேன். 

புலம்பெயர் தமிழர்கள்! யார் இவர்கள்! ஈழத்திலிருந்து ஏறக்குறைய 250 000 தமிழர்கள் 31 நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என்பது ஒரு புள்ளிவிவரம்.  இவர்களுக்கும் ஈழத்து மண்ணில் இனவழிப்புக்கு மத்தியிலும் இன்னும் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு என்று எங்களை நிறையவே யோசிக்க வைக்கிறார்கள். 2009 ம் ஆண்டுக்குப் பிறகு புலம்பெயர் தமிழர்கள் வேண்டப்படாதவர்கள் போலவும், பிரச்சனைக்குரியவர்கள் போலவும் உள்ளூரிலும், புலம்பெயர்தேசங்களிலும் ஈழம் தொடர்பான விடயங்களில் திட்டமிடப்பட்டே புறக்கணிக்கப்படுகிறார்கள். இதை இலங்கை அரசாங்கம் மிகத்திறமையாகச் செய்துவருகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான இலங்கை தூதரகங்களின் விஷப்பிரச்சாரம் தமிழர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் கசப்பான அனுபவம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. 

அப்படிப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபயீசன் பேச்சும் துணைபோகும் படியாய் இருக்கிறதோ என்று ஐயம் தோன்றியது புதியதலைமுறையில் அவர் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாகவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் பேசிய பேச்சுக்கள். 

புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேட்டி கண்டவர் தமிழக, இந்திய அரசியலுக்கு எதுவேண்டுமோ அதற்கேற்றவாறு கேள்விகளை கேட்டு, பதிலையும் வாங்கிக்கொண்டார். அந்த இடத்தில் ராதிகா சிற்சபயீசன் தான் ஒரு அனுபவமில்லாத மேற்கத்திய அரசியல்வாதி என்பதை நன்றாகவே வெளிப்படுத்திக்கொண்டார். முக்கியமாக இரண்டு விடயங்களை திருப்பி, திருப்பி கேட்டார் பேட்டி கண்டவர். ஒன்று புலம்பெயர் தமிழர்கள் பற்றியது. மற்றது, ஈழத்து மண்ணில் வாழும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கேட்டார்களா அல்லது போர்க்குற்ற விசாரணை வேண்டுமென்று கேட்டார்களா என்பது. 

தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் ராதிகா சிற்சபயீசன் தமிழரே என்றாலும் அவர் ஈழத்தமிழர்களின் பிரச்சனையைப் பேசும் தமிழர்களுக்கான ஒரு பிரதிநிதி அல்ல. அவர் தொகுதியில் வாழும் மற்றும் அவருக்கு வாக்களித்து அவரைத் தங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தவர்களுக்காகவே உழைப்பார். அப்படித்தான் உழைக்கவும் வேண்டும். அதுதான் நியாயம். இது புரியாதவர்கள் அல்ல தமிழர்கள். 

அவரது பேச்சுக்களை கனேடிய மண்ணில் தமிழர்கள் மத்தியில் பேசியபோதுகூட அவர் தன் அரசியல், தான் சார்ந்த கட்சி கொள்கைகள், கோட்பாடுகளுக்கு வெளியே பரந்துபட்ட ரீதியில் ஈழம் தொடர்பாகப் பேசியதில்லை. இங்கே மேடைகளில் பேசும்போதும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றி மறந்தும் அவர் பேசி நான் கவனித்ததில்லை. மாறாக, அவர் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்கிற ரீதியிலேயே பேசியிருக்கிறார். அப்படியே அந்த எல்லைக்குட்பட்டே தன் பயண அனுபவம் என்கிற ரீதியில் புதியதலைமுறை தொலைக்காட்சியிலும் பேசியிருக்கலாம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான கேள்விகளுக்கும், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான கேள்விகளுக்கும் அவரது பதில்கள் மேற்கத்திய அரசியல்வாதி ஒருவரின் ஈழப்பிரச்சனையின் அடிப்படை புரியாத ரகமான பதில்கள் அயர்ச்சியையே உருவாக்கின. 

என்னதான் அனுபவம் போதவில்லை என்றாலும் வட்டுக்கோட்டை தீர்மானம் முதல் தமிழர்களுக்கு Historical, earned and Remedial Sovereignty இருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியே இருந்திருந்திருந்தால் இங்கே இதை நான் மாண்டு, மாண்டு எழுதவேண்டியிருந்திருக்காது. தமிழர்களுக்கு இவ்வளவு நடந்த பிறகும், இவ்வளவு துன்பத்துக்கு ஆளான பிறகு இனி ராணுவப் பயமின்றி நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு தான் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கேள்விகளுக்குப் பதில். அதை ஏனோ சொல்லத்தவறிவிட்டார் மரியாதைக்குரிய கனேடிய பாராளுமன்ற உறுப்பினர். கனடாவிலும் Quebec மாகாணம் பிரிந்துபோக நினைத்து அதற்கு ஒருமுறை பொதுவாக்கெடுப்பு நடத்திய நாட்டில் தானே வாழ்கிறீர்கள். பிறகேன், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்து பேச இவ்வளவு ஒளிவுமறைவு. உங்கள் கட்சி கொள்கைகள், கோட்பாடுகளுக்குட்பட்டு அரசியலைப் பேசுங்கள் பாதகமில்லை. புலம்பெயர் தமிழர்கள் ‘வீரவசனம் பேசுபவர்கள்’ என்கிற முத்திரை குத்தாதீர்கள். 


அதைவிடுத்து கனடாவில் தன் தொகுதியில் எத்தனைவீதமானோர் தனக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்கிற கணக்குப் பார்க்கத் தெரிந்தவருக்கு ஈழத்தில் தன்னிடம் பேசியவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை பேசினார்கள், பேசவில்லை என்பதை ஆராய்நது பார்க்க, சொல்ல ஒப்பீட்டுரீதியிலான கணக்கு தெரியாதா? இப்படித்தான் இருக்கிறார்கள் 2009 ம் ஆண்டுக்குப் பிறகு தமிழர்களுக்கு வாய்த்த தலைவர்களும், தங்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களும். இவர்களை நம்பலாமா வேண்டாமா என்கிற பாரதூரமான கேள்விகளுக்குள்ளாக்குகிறார்கள் எங்களை. இவர்களை நம்புவது ஒருபுறமிருக்க எங்களை நாங்களே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக கற்பித்துக்கொள்வதும், அதற்கு இவர்கள் செவிசாய்த்து எங்கள் பிரதிநிதியாக இருங்கள் என்று சொல்வதுமே சரியாக இருக்கும். இவர்களின் மேடைப்பேச்சுக்களை அப்படியே நம்பாமல் சீர்தூக்கி ஆராய்ந்து பார்ப்பதுவே நன்று. 

Image Courtesy: Google. 

கருத்துகள் இல்லை: