டிசம்பர் 22, 2013

2013, மீட்டவை!


2013, இன்னொரு வருடம். தன் வருட முடிவுக்கான நாட்களை எண்ணியபடி நிறைவுபெற்றுக்கொண்டிருக்கிறது. காலம் நிகழ்த்திச் செல்லும் அரசியல், வாழ்வியல், பொருளியல் மாற்றங்களை வருடம் மாதம், நாள், கிழமை என்று ஞாபகப்படுத்திக் கொண்டாடுவது வரலாறாகிவிட்டது. வரலாறு என்று தனியாய் ஏதுமில்லை. மனிதவிடுதலையே வரலாறாக கொள்ளப்படுகிறது. மனிதவிடுதலையே மனிதர்குலம் சென்றடைய வேண்டிய இலக்கு என்றாலும் வாழ்வியல் நிகழ்வுகளில் பொழுதுபோக்குகள் என்று இந்த வருடத்தில் எனக்குப் பிடித்தது என்று திரைப்படங்களை, பாடல்களை, வியாபாரநோக்கில் முக்கியப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைப் பட்டியலிட எனக்குத் தோன்றவில்லை. மாறாக, ஈழம் குறித்தே என்ன நடந்தது என்று திரும்பிப்பார்க்க வைக்கிறது. ஒரு தேசிய இனமான மக்களுக்கு (Peoples) கிடைக்கும் விடுதலை என்பதும் மானிடவரலாற்றின் ஒரு அசைவே.

அரசியல் விடுதலை பெறும் ஒரு இன மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பானது, உலகநடைமுறைகளோடு ஒத்துப்போவது, தங்களை பொருளாதார, அரசியல் ரீதியாக கட்டமைத்துக்கொள்வது என்பதான் பண்புகள், நெறிகளோடு; தம்மைத்தாமே ஆள்வதற்கு தகவமைத்துக்கொள்ளும் அரசநிர்வாக, ஆட்சி நிறுவனங்களின் கட்டமைப்புக்குக் கட்டுப்படும் அதேநேரம், கெளரவமாகவும், மனித உரிமைகளோடு சுதந்திரமாகவும் வாழவே விரும்புகிறார்கள். இருந்தும், ஒரு தேசிய இனம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவலப்படும்போது , தனக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க,வரலாற்று தேசத்தை கட்டியமைக்க செத்துப்பிழைக்கவேண்டியிருப்பதை நினைக்கும் தோறும்; கடந்தகால மனிதவரலாற்றைப் படிக்கும்போது மனதில் நிகழ்காலமும் இறந்தே பிறக்கிறது என்பதாய் தோன்றுகிறது. 

பாறைகளை முட்டி, மோதி முளைத்துக்கிளம்பும் சின்னஞ்சிறிய ஒற்றைச் செடியாய் அடிமைவாழ்விலிருந்து அரசியல் விடுதலைப் பெற மக்கள் இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும் ஏராளம். மனிதவிடுதலை முற்றுப்பெற்றுவிட்டதாய் நிறுவமுற்படும் அரசியல் தத்துவங்களும் உண்டு. முதலாளித்துவமும் ஜனநாயகமுமே மனிதன் தன்னை ஆள்வதற்கான தீர்வான அரசியல் மற்றும் சனநாயக நிறுவனங்கள் என தீர்மானமாக நிறுவமுற்படுவதால் அனைவருக்கும் அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது என்று நம்பவேண்டுமா! ஆள்வதற்கு வசதியாய் ஆயிரம் வழிவகைகளைக் கண்டுபிடித்தவர்கள் விடுதலைக்கான சர்வதேச சாசனங்களை, நியதிகளை, நீதிகளை அவரவர் வசதிக்கேற்றாற்போல் மறந்தும், மறைத்தும் விடுகிறார்கள். கிடைப்பதை, இருப்பதில் சிறந்ததாய் திணிக்கப்படுவதைத் தேர்ந்தெடுத்து திருப்திப்பட்டுக்கொள்ள மனிதவிடுதலையும் சுதந்திரமும் என்ன முதலாளித்துவச் சந்தையின் பண்டமா!

தமிழீழவிடுதலை கேட்டு சாத்வீக வழிகளிலும், ‘அரசியல்’ வன்முறையின் வழிகளில் ஆயுதப்போராட்டத்தின் வழி கேட்டபோது எப்போதும் புறக்குடத்தில் நீராய் ஊற்றப்படுவது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு.’ தீர்வு கொடுக்க மனமிருப்பவனுக்கு எதுக்கு ஆறு அல்லது ஏழு தசாப்தங்கள்! உலகம் தரமறுக்கும் நீதிக்காய், நாங்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வுக்காய் போராடிப் போராடி இனவழிப்பின் கொடுமையையும் தாண்டமுடியாமல் இன்னும் எங்கள் மண்ணை, மக்களை காப்பாற்று என்று அபயக்குரல்  எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இந்த அபயக்குரலை ஒலித்தபடி அவ்வப்போது இன்னும் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும் ஒரு சில நீதியைப் பிழைக்கவைக்கும் அமைப்புகள் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற சர்வதேசம் உணர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார்கள். தமிழர்கள் இலங்கையில்  இன்னும் இனப்படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையை உரைக்கிறார்கள்.

மேலே தொடர்வதற்கு முன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples' Tribunal) பற்றி ஓரிரு வரிகள். இந்த அமைப்பு 1979 இல் இத்தாலியில் Bologna என்கிற இடத்தில் உருவாக்கம் பெற்றிருக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவது, எந்த ஒரு நாட்டின் அரசையும் சாராத, சுயாதீனமான அமைப்பு என்று தன்னை கட்டமைத்து செயற்பட்டுவருவதாய் சொல்லப்படுகிறது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அவற்றை விசாரணை செய்கிறது. இதில் நீதிபதிகளாக அங்கம் வகிப்பவர்கள் சர்வதேச அளவில் பிரபலமான நீதிபதிகளும், நோபல் பரிசு வாங்கியவர்களும் அடங்குவர். 

புலம்பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்ட ஒரு சில சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பான, ‘இலங்கையில் நடந்தது தமிழின இனப்படுகொலை’ என்பது இந்தவருடத்தின் தமிழர்களின் ஈழவிடுதலை நோக்கிய ஒரு சிறியவெற்றியே. இலங்கை அரசு போர்க்குற்றவாளி என்கிற தீர்ப்போடு தமிழர்களின் நிலங்கள் தொடர்ந்தும் தமிழர்கள் பகுதியில் சூறையாடப்படுவதும்; தமிழர்களின் பிறப்புவீதத்தை குறைப்பதற்கான இலங்கை அரசின் திட்டங்களையும் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பான குற்றமாக இலங்கை அரசின் மீது வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவோ அல்லது தங்கள் மீதான நம்பகத்தன்மையை இன்னும் மக்கள் விட்டுவிடக்கூடாது என்கிற நோக்கிலோ ஐக்கிய நாடுகள் சபையின் உரிய பிரதிநிதிகளும், ஐ. நா. இலங்கையில் போரின் உச்சக்கட்டதின் போது தன் (திட்டமிடப்பட்ட) செயலின்மையை பட்டும், படாமலும் ஒப்புக்கு "Systematic Failure" என்று ஒப்புக்கொள்கிறது. சார்ள்ஸ் பெற்றி என்பவரின் ஐ. நா. வின் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான நடவடிக்கைகள் குறித்த உள்ளக அறிக்கை யாவரும் அறிந்ததே. இருந்தும், அண்மையில் கூட ஐ. நா. வின் பிரதி செயலர் Jan Eliasson தங்கள் செயலின்மையை அராயோ, ஆராயோ, ஆரோயோ என்று ஆராய்ந்து இப்பொழுது 'Rights Up Front' என்கிற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்களாம் செயற்திட்டத்துக்காக, அதாவது 'Action Plan.' 

2008 இன் இறுதிப்பகுதிகளில் கிளிநொச்சியில் இருந்து இவர்களின் மனிதாபிமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நீங்கள் போனால் நாங்கள் சாட்சியின்றி கொல்லப்படுவோம் என்கிற தமிழர்களின் கூற்று முதல் ஆரம்பக்கட்டத்திலேயே இறந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கையை குறைத்தும், மறைத்தும் செய்த களவுநாடகங்களை, ஐ. நா. வின் செயலற்றதன்மையை ஈழத்தின் இறுதியுத்தம் சம்பந்தமாக இன்னர் சிட்டி பிரஸ் தன் செய்திக்குறிப்பில் சொல்லிச்செல்கிறது. ஐ. நா. பிரதி செயலர் மறுபடியும் சொல்வது, “Never again" என்று சொல்லிவிட்டு ஐ. நா. மறுபடியும், மறுபடியும் ஐ. நா. செயலர் மட்டும் தோற்கவில்லையாம், கூடவே அங்கத்துவ நாடுகளும் தோற்றுவிட்டனவாம். அவர் உதாரணமாய் கூறுவது ருவாண்டா. ருவாண்டாவில் நடைபெற்றது இனப்படுகொலை என உலகமே ஒப்புக்கொண்டது. அப்படியானால் ருவாண்டாவில் நடந்தது போல ஈழத்தில் நடந்ததும் ‘இனப்படுகொலை’ என்று தன்னை அறியாமலே உள்ளுக்குள் ஒத்துக்கொள்கிறாரா இந்த கனவான். அதை வெளிப்படையாக எப்போது சொல்வார்களோ! ஐ. நா. வின் செயலற்ற தன்மைகளைப் பேசினால் ஆயுளுக்கும் அதைப்பற்றியே பேசி காலவிரயமும் அயற்சியும் மட்டுமே மிஞ்சும். 

அடுத்து, இந்த வருடம் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகள் மற்றும் பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் உருவான நாடுகளின் விளையாட்டு அமைப்பான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் பங்குகொள்ளும் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தொடர் இலங்கையில் நடைபெற்றது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளை எல்லாம் சேர்த்தும், கரைத்தும் நடந்துமுடிந்திருக்கிறது. மருத்துவர் பிரயன் செனிவிரட்னே சொல்வது, இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌ஷேவை பொறுப்புக்கூற (Accountability) வைப்பதை பொதுநலவாய நாடுகளின் தலைமைகள் செய்யும் என்று நம்புவர்கள் 'realpolitik' தெரியாதவர்கள் என்று. 

ஐ. நா.வின் மனித உரிமைகள் சபையின் ஆணையர் நவநீதம்பிள்ளை சொல்வது போல், இலங்கை  ஏதேச்சாதிகார ஆட்சியின் திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அது தமிழர்களு மட்டுமல்ல, சிங்கள மற்றும் மற்றைய இனசமூகத்துக்கும் இலங்கையில் அச்சுறுத்தலே. எப்படியோ, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தொடரில் பங்குபற்றிய பிரித்தானியக் கூட்டமைப்பின் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் இறுதி யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு ‘சுயாதீன விசாரணை’ தேவை என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். 1799 ம் ஆண்டில் இலங்கையில் மூன்று ராச்சியங்கள் இருந்தது, தமிழர்களின் கோட்டை ராச்சியம் உட்பட, என்று ஒப்புக்கொண்டவர்கள் பின்னர் 1833 ம் ஆண்டு Colebrooke - Cameron Reforms என்று மூன்று ராச்சியங்களையும் ஒன்றாக்கி, இன்று ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முதற்புள்ளி வைத்த பிரித்தானியாவுக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகம் பொறுப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார் திரு.செனிவிரட்னே. (The British Owe a Lot to the Tamil People, November 14, 2013). அரசநிர்வாகம் முதல் அரச ஆட்சி நிறுவனங்கள் வரை எல்லாமே தோற்றுப்போன இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான அரசியல் உரிமைக்காகப் பேசவேண்டிய, செயற்படவேண்டிய கடமை பிர்த்தானியாவுக்கு உண்டு. 

அதே நேரம் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் இலங்கை அரசு இப்படி ஒரு இனப்படுகொலையை தனியாக செய்துமுடிக்க சக்தியற்றவர்கள். இதற்கு ஐக்கியராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் துணைப்போதலும் இருந்திருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். இவ்வண்ணம் குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிடம் தமிழர்கள் இன்னும் வலுவான கோரிக்கைகளை வைத்தவண்ணமே இருக்கிறார்கள், தமிழர்களின் அரசியல் நிர்ணய உரிமைகள், மற்றும் தமீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு என. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை நிறுவ இன்னும் ஆதாரம் தேவை என்கிறது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். காலங்காலமாக தமிழகத்தின் சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்கள் சார்பில் இயற்றப்படும் தீர்மானங்கள் எழுத்து வடிவில் அமோகமாகவே இருந்தன, இருக்கின்றன. அவற்றை எல்லாம் மத்தியில் கிடப்பில் போட்டுவிட்டு, இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்கள் ஈழத்தமிழர்கள் தலையில் மண் அள்ளிப்போடுவதையே வரலாற்றுக் கடமையாகவும் கொண்டிருக்கிறார்கள். 


எது எப்படியோ, தொடர்ந்தும் சர்வதேசத்துக்கு தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும், தமிழீழத்துக்கான சுதந்திரமான பொதுவாக்கெடுப்பும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் நடத்தப்படவேண்டுமென அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமென அரசியல் ஞானம் உள்ளவர்கள் கருத்து சொல்கிறார்கள். இனி வரும் 2014 வது ஆண்டாவது தமிழர்களுக்கான ஒரு நல்ல தீர்வுக்கான திட்டத்தை கொண்டுவரும், சர்வதேசத்திடமும் இருந்து அவர்களால் தமிழர்களுக்கு இளைத்த குற்றங்களுக்கான தீர்வும் கிட்டும் என்கிற நம்பிக்கையுடன்! 

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2014 இனிமையாக அமையட்டும் அனைவருக்கும். 

Image Courtesy: Google.