நவம்பர் 25, 2013

மாவீரர் நாளும் தமிழர் ஒற்றுமையும்!


வரலாறு அதன் அசைவியக்கத்தின் வழி மானுடவிடுதலைக்காய் சாதாரணர்களை சரித்திரநாயகர்களாக்கி பெரும் திருப்பங்களை, பிரளயங்களை உருவாக்கிச் செல்லும். உலகமே எப்போதும் வரலாற்று அச்சாணியின் சுழற்சியில் தான் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சுழற்சியில் எத்தனையோ இனங்களைப் போல, மக்கள்குழுக்களைப்போல தமிழர்களுக்கும் ஒரு தனித்தவரலாறு, அவர்தம் தனித்தன்மையோடு கூடிய அரசியல், பொருளாதார, நில, பண்பாட்டு, சமூகக்கட்டமைப்பும் அதுசார் வாழ்வியலும் மொழியும் கூட உண்டு. இவற்றின் மாட்சிமையும், மீட்சியும் தான் இலங்கை என்கிற நாடு பிரித்தானியக் காலனியாதிக்கதிலிருந்து விடுதலைவாங்கிய நாள்முதற்கொண்டு தமிழர்களுக்கு உரிமைகளாக மறுக்கப்பட்டும் வருகிறது. 

ஈழத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு அவப்பெயர் சூட்டிப்பார்க்க நினைக்கும் மனட்சாட்சியைத் தொலைத்தவர்கள் ஒருபுறமிருக்க, அனேகமாக ஒட்டுமொத்த உலகத்தமிழினமும் அவ்விடுதலைப் போராளிகளை கார்த்திகை 27 இல் வருடந்தோறும் நினைவுகூருகிறது. போரில் இறந்தவர்களுக்கான மரியாதை செலுத்துவதென்பது ஒரு சாதாரண மனிதாபிமான உணர்வு. அந்த உணர்வைக்கூட மதிக்காத சிங்கள பெளத்த பேரினவாதப்பிடியில் இன்றும் சிக்குண்டு கிடக்கிறது ஈழத்தின் வடக்கும், கிழக்கும். ஒன்றுகூடத்தடை, விளக்கோ, மெழுகுவர்த்தியோ ஏற்றத்தடை, சுவரொட்டிகள் ஒட்டத்தடை. இப்படி எத்தனையோ தடைகளைத் தாண்டியும் எப்படியோ தங்கள் வணக்கத்தை மானசீகமாவேனும் இதயசுத்தியுடன் செலுத்த தவறியதில்லை ஈழம்வாழ் தமிழர்கள். 

புலம்பெயர் தேசங்களில் இன்னும் பூரணமான ஒன்றுபட்ட ஒற்றுமை தமிழர்களிடையே தமிழ்தேசிய விடுதலை குறித்த அரசியல் முன்நகர்வுகளில் இல்லை என்கிற பெரும்குறை இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தது போன்ற போட்டிகள் அதிகம் இல்லை என்றே தோன்றுகிறது மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் நடத்துவதில். 

ஒரு விடுதலைப்போராட்ட வரலாற்றின் சின்னங்கள் தான் இதுபோன்றதொரு நிகழ்வில் சுமைகளைச் சுமக்கும் அடையாளங்களாய் விளங்குவதுமட்டுமல்ல, அவையே ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளாகவும் பதியப்படும். இன்று தமிழர்கள் மண்ணில் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் கட்டப்பட்ட தலைவர்கள் சிலை முதல் விடுதலைப்போரின் வரலாற்றுச் சான்றுகளாய் திகழ்ந்த அனைத்தும் அழிக்கப்பட்டே வருகின்றன, தந்தை செல்வா சிலை முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் வரை. 


இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற தமிழறிஞர்கள், தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் முதல் ஈழவிடுதலைபோரின் தார்ப்பரியங்கள், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் சிற்பக்கலைகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கான Strategic/Historical Location selection குறித்த கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தன. அவற்றை சமூகவலைத்தளங்களில் கேள்வியாக்கிய போது எனக்குக் கிடைத்த இரு பதில்கள் இவை. 

என் அறிவுக்கு எட்டியவரை தஞ்சாவூர் என்பது தமிழ்மன்னர்களான சோழர்களின் ஆட்சியில் புலிக்கொடி பறந்த ஊர் என்கிற அளவே. அதற்கும் மேல் இப்படியும் காரணம் இருக்கிறது என்றார் கே. ஆர். பி. செந்தில். 

மேலும் ஒருங்கினைந்த தஞ்சைப் பகுதி(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்) மக்கள் மிகுதியாக ஈழத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள். வேதரண்யத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரைக்கும் விசா இல்லாமல் வரலாம், திருமணம் முடிக்கலாம் என அனுமதி இருந்தது. கோடியக்கரை எப்போதும் யாழிற்கு பக்கத்து ஊரும் கூட, என்ன குறுக்கே முன்பு கொஞ்சம் கடல் இருந்தது. இப்போது இந்திய- இலங்கை அரசுகளில் சுயநலம் இருக்கிறது.” 

இதற்கு விந்தைமனிதன் ராஜாராமன் என்பவரின் பதில் இப்படி இருந்தது. 

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் புரவலருக்கு சொந்த ஊர் விளார் என்பதாகவும் இருக்கலாம்!”

இதைத்தொடர்ந்து வந்த விவாதங்களில் விந்தைமனிதன் ராஜாராமனின் கருத்துகளின் சில பகுதிகள் இங்கே. 

அஸ்தினாபுரத்துக்குத் தூதுசென்ற கண்ணன், பொன்னும் மணியும் வேயப்பட்ட துரியோதன மாளிகையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தங்கத்தட்டில் நிறைந்த அறுசுவை உண்டி வேண்டாமென்று விதுரனின் குடிலுக்குச் சென்று பழைய சோறு சாப்பிட்டானாம்!


கலைஞர்கள் தம் உணர்வையும் உழைப்பையும் சிந்தி உழைத்த கலைக்கூடம்தான்! அங்கே இருப்பது எம் தமிழ் உறவுகளின் ரத்தமும் ஜீவனும் கசியும் கண்ணீர்க்கதைகளின் காட்சிகள்தாம்! ஆனால்... !மானத்தோடும் சுதந்திர தாகத்தோடும் வாழ்ந்து மண்ணில் விதையான போராளிகளுக்கும், மக்களுக்கும் நினைவுச்சின்னம் ஒரு மாஃபியாக்கும்பலின் பணத்தில்!


ஒவ்வொரு நாளும் உழைத்துத் தன் சுயசம்பாத்தியத்தில் வீதிக்கு வந்து நம் உறவுகளுக்காகப் போராடினார்களே... அரசுக்கலைக்கல்லூரியிலும், பாலிடெக்னிக்கிலும் படித்துக் கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் குழந்தைகள்! அவர்களிடம் துண்டேந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வாங்கி ஒரு நினைவுக்குடிசை கட்டி இருந்தால் அது காலத்துக்கும் தன்மானத்தோடு நிமிர்ந்து நின்று அழியாச்சின்னமாகி இருக்குமே?! இன்னும் கீழ்வெண்மணிக்குடிசைகளில் சாம்பலாய்ப்போனவர்களின் ரத்தசாட்சியாய் நிமிர்ந்து நிற்கின்றதே வெண்மணி நினைவுச்சின்னம்?!


இன்று புரச்சியம்மாளின் கருணைப்பார்வைக்காய் ஏங்கும், கோபப்பார்வைக்காய் நடுங்கும் நெடுமரங்களிடம் இல்லை ஈழத்தின் நினைவுச்சின்னம் என்பதை அப்பாவித் தமிழுணர்வாளர்கள் உணர்வார்களா?!விளாரில் அமைந்த காரணம் சோழமோ, புலிக்கொடியோ, தஞ்சைக்கும் ஈழத்துக்குமுள்ள உறவோ அல்ல! ‘புரவலர் பெருமானின்’ சொந்த ஊர் மட்டுமே காரணம் என்பதைச் சிந்திப்பார்களா?”

மேலேயுள்ள கூற்றொன்றிற்கான பதில் இது....

//மாஃபியாக்களின் பணத்தில் மக்கள் விடுதலைப்போர் வென்றதில்லை என்பது வரலாறு//


”புலிகளையே மாஃபியாக்கள் என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பவர்கள் உள்நோக்கம் என்பது மட்டமான பார்வையாக இருக்கிறது. முள்ளி வாய்க்கால் முற்றம் எனபதின் நோக்கத்தை கொச்சைப்படுத்துவது மோசமான அடிப்படைவாதிகளின் சுயநலம்..”

இதற்கு மேலும் விவாதத்தில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை இந்தப் பதிவில் தேவையற்றது என்பதால் தவிர்க்கிறேன். 

ஆக, ஈழத்தமிழர்களோ, தமிழகத்தமிழர்களோ இன்னும் எதிரிக்குச் சாதகமாகவே எமக்குள் நாமே சேற்றை வாரி இறைத்துக்கொண்டு ஒரு இனப்படுகொலையின் பின்னான விடுதலைக்கான நியாங்களை மறந்துபோக ஏதுவாகிறது இதுபோன்ற வாக்குவாதங்கள். இந்த மாவீரர் நாளிலேனும் வருடந்தோறும் தமிழர்கள் தங்களுக்குள்ளான ஒற்றுமையை மீட்டெடுப்போம் என உறுதிகொள்வது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, வரலாற்று கடமையும் கூட. 

ஈழவிடுதலைப்போரின் மாண்ட அனைத்து வீரர்களுக்கும், அப்பாவிப் பொதுமக்களுக்கும் மாவீரர் தின வணக்கங்கள். 
Image Courtesy: Google.


கருத்துகள் இல்லை: