நவம்பர் 13, 2013

தமிழக அரசியலும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றமும்

அன்புள்ள ரதி இப்படி இணையமடல் வழி என்னை விளித்து Grassroot மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பிரச்சனைகளை மடைதிருப்பி, குழப்பி அரசியலாக்கும் எழுத்துக்கான திறனோ அல்லது தேவையோ இல்லாத; ஈழம் குறித்து மட்டுமே அனேகமாக பதிவெழுதும் எனக்கும் ஈழம் குறித்து நான் எழுதும் பதிவுகளின் விளைவால் ஒருவர் தமிழ்நாட்டின் தற்போதைய முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதால் மனம் நொந்து மடல் எழுதியிருந்தார். அவர் பெயர் வெளியிடவேண்டாம் என்கிற வேண்டுகோள் மதிக்கப்படுகிறது. 

தமிழக அரசியல் ஈழத்தமிழர்கள் குறித்து எந்தவகையான புரிதலோடு, செயற்திறனோடு செயலாற்றுகிறது என்பதை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடங்கிய நாள் முதல் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னான இன்றைய நாள்வரை கவனித்தே வருகிறோம். ஈழவரலாற்றின் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு வரையப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய பக்கங்களைப் போலவே வெட்கி, வேதனைப்படவேண்டிய பக்கங்களும் உண்டு. வார்த்தைகளை வளர்த்து ஆறியபுண்ணை மீண்டும் கிளறிப்பார்க்க மனம் ஒப்பவில்லை. இதோ அந்த மடல். 

”இதற்கான மூலம் டெல்லி இப்போது தமிழ்நாட்டில் உள்ள  சுயநலமே  அரசியல் கொள்கையாக கொண்ட எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதைதான் செய்யும். நான் இணைத்த ndtv விவாதம் மற்றும்  பல வட இந்திய  ஊடகங்களில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை சார்ந்த செயலாளர்கள் எல்லோரும் தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. காமன்வெல்த்தில் இந்தியா கல்ந்துகொள்ளகூடாது என்று நாம் கேட்பது அவர்களுக்கு கோபமூட்டுகிறது. அவர்களுக்கு இந்தியாதான் முக்கியம் அதற்க்கு தமிழர்களின் இரத்தம் கொடுத்துதான் வாங்கவேண்டுமென்றால் அதையும் செய்வார்கள்.

ஈழம் குறித்து பெரிதாய் அக்கறை கொள்பவர்கள் வெகு சிலரே.


நான் பார்த்த வரையில் ரதி, 


இந்தியாவில தமிழர்களை பிடிக்காத, இவ்வளவு அழிவுகளுக்கும் பின்புலமாய் இருந்த, இன்றைய இந்தியாவை இயக்கிகொண்டிருக்கிற சக்திகளை கேள்வி கேட்க்கும் வல்லமை பொருந்திய ஆளுமைகள் இன்றைய தமிழ் நாட்டு அரசியல் வெளியில் யாரும் இல்லை. 


தேர்தல் அரசியலில் உள்ள யார்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை வைகோ ,சீமான் உட்பட எனக்கு தெரிந்த அரசியல் அறிவை கொண்டு நான் பார்த்த வரையில் அந்த சக்திகளை அசைத்து பார்த்தவர்கள் ஒன்று பெரியார் மற்றொருவர் பிரபாகரன் 

தன்னலம் பாராமல் தனது கடைசி காலம்வரையில் அரசியல் தளத்தில்  தனது பிரச்சாரத்தின் மூலமே அந்த சக்திகளை  அசைத்து பார்த்தவர் பெரியார் (தமிழ் நாட்டில் அவரின் உழைப்பின் பலனை அறுவடை செய்துகொண்டவர்கள் திமுக ).

மற்றொருவர் பற்றி உங்களுக்கு தெரியும். 

நான் அவதானித்த யதார்த்தத்தில் இருந்து சொல்கிறேன் களத்தில் புலிகள் எவ்வளவுதான் சாதித்திருந்தாலும் அரசியல் களத்தில் (உலக அளவிலும், இந்திய அளவிலும் ) பெரிய தோல்வி அடைந்துவிட்டோம் என்பதையே பார்க்கமுடிகிறது. வடஇந்திய ஊடகங்களில் ஈழம் தொடர்பான விவாதங்களை முடிந்த அளவு தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் நமக்காக வாதிடுபவர்களின் குரல் எடுபடுவ்தே இல்லை பெரும்பாலும் டி ராஜாதான் பங்கேற்ப்பார் தமிழ்நாட்டில் மக்களுடன் தொடர்பிலே இல்லாத ஒரு கும்பல் இங்கு இருக்கிறது அவர்கள்தான் அறிவுஜீவி கணக்காய் அத்தகைய தொலைகாட்சிகளில் காட்சி தருவார்கள் நாம் ஒரு செண்டிமீட்டர் மேலே ஏறினால் ஒரு மீட்டர் கீழே இழுத்துவிடுவார்கள். அதைத்தான் இந்த இந்தியாவில் நம்பவைக்கபடுகிறது. இதை உடைக்கும் வல்லமை இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் யாரும் இல்லை.


மற்றவர்களை காட்டிலும் சிறிதளவு நம்பிக்கை வைகோவின் மீது இருக்கிறது அவருடைய அனுபவம்,வட இந்தியாவில் அவருக்கிருக்கிற செல்வாக்கை வைத்து சொல்கிறேன் அவருக்கு போதுமான பலம் இருந்தால் அவரால் சாதிக்கமுடியும்.


மற்றபடி எதிர்காலத்தில் யாரோ ஒரு தலைவன் அல்லது தலைவி கையில் தான் தமிழ் இனத்தின் தலைவிதி இருக்கிறது.”
செய்திகளை, அரசியல் குறித்த சில அடிப்படைகளைப் படித்து எழுதுவதோடு சரி. எனக்கென்று எந்தவொரு அரசியல் வட்டமோ அல்லது தொடர்புகளோ கிடையாது. இதைக் கவனிப்பவர்கள் கவனித்து செயலாற்ற வேண்டும் என்பதே என் அவா. மடலில் அவர் குறிப்பிட்டது போல ஒரு தலைவன் அல்லது தலைவியல்ல தமிழர்களின் விதியை நிர்ணயிப்பது என்பது என் கருத்து. தமிழர்களுக்கான அரசியல், பொருளாதார நிறுவனங்கள், கட்டுமானங்கள் (Political and Economic Institutions) வலுவானதாக இருக்கவேண்டும். அதைக்குறித்த கேள்விகேட்கும் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்திய மைய அரசியலில் சிக்கி ஈழத்தமிழனின் நிலை தமிழகத்தமிழர்களுக்கு வராமல் இருக்கட்டும். 


மெய்நிகர் உலக ஈழம் குறித்த விவாதங்களில் நான் தமிழகம் மனதுவைத்தால் ஈழத்தமிழர்களுகான அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் வெளியக சுயநிர்ணய உரிமை சாத்தியம் என்று வாதாடினால், ஒன்று கிண்டலடிக்கப்படுகிறேன், இல்லையேல், தமிழகத்தை நம்பாதீர்கள்; ஈழத்தை நீங்களாகவே போராடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வருகிறது. அதிலெல்லாம் சுரணை போய் நாட்களாகிவிட்டது. காரணம் எனக்கு என் இனம் குறித்த சுரணை மட்டுமே என்னிடம் மிஞ்சியிருக்கிறது. 

மரணத்தின் போதும் என் இனத்துக்காக எதையாவது கிறுக்கியிருக்கிறேன் என்கிற திருப்தியாவது மிஞ்சும். 

Image: Google. 


3 கருத்துகள்:

விவரணன் நீலவண்ணன் சொன்னது…

இலங்கைத் தமிழருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுத் தமிழருக்கு வரும் என்பது அதீதமானது. நடுவண் அரசின் கொள்கை தெளிவில்லாமல் உள்ளதாலும், இலங்கைத் தமிழர் மற்றும் மீனவ பிரச்சனைகள் போன்றவையாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அரசியல்வாதிகள், ஊழல் பிரச்சனைகள் மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் இந்தியா எங்கும் பல மக்களும் சந்திக்கும் பிரச்சனைகளே. இந்தி பேசும் மாநிலங்கள் தமிழகத்தை விட மோசமாக உள்ளதும், தமிழகத்தின் அரசியல் பொருளாதார நிலைத்தன்மையும் ஒப்பு நோக்கினால் தமிழக மக்களின் நலனுக்கு திராவிட கட்சிகள் நிறைய செய்துள்ளன, செய்கின்றன. மீனவப் பிரன்னையும், இலங்கைத் தமிழ் பிரச்சனையும் பத்தோடு பதினொன்றாம் நிலையில் மாநிலத்திலும், நூற்றோடு ஒன்றாக மத்தியிலும் உள்ளதால் தான் அவற்றின் மீதான அழுத்தங்கள் குறைகின்றன. இலங்கைத் தமிழர்கள் வடக்கில் தமது பொருளாதாரம், மக்கள் தொகையை பெருக்கி இலங்கையின் அரசியலில் வலுபெற வேண்டும். அதை தமிழகமோ, இந்தியாவோ, மேற்கோ செய்யும் என இலவு காத்த கிளியாக இருப்பதை விட உள்நாட்டில் கடுமையாக உழைக்கவும் போராடவும் வேண்டும், வாய்ப்பில்லை என்றோ அடக்குமுறை என்றோ கூறலாம், உண்மைதான் ஆனால் ஒரு இனம் தனது இருப்பைத் தக்க வைக்க போராடியே ஆக வேண்டும், போராட்டம் என்றதும் ஆயுதம் எடுத்து சுடுவதும், மனித வெடிகுண்டாய் வெடிப்பதும் அல்ல. மக்கள் தொகையை, கல்வியை, பொருளாதாரத்தை வலிமை ஆக்குவது, அதற்கு என்ன வழிகள் என சிந்திப்பதே சிறந்தது. ஒரு வேளை ஈழத் தமிழர் தமிழ் பேசாது, வேறு மொழி பேசி இருப்பின் என்ன செய்திருப்பார்களோ, அதைத் தான் செய்ய வேண்டும், !!! எதார்த்தமான புத்தியுள்ள வடிவங்களே இனி இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை, தமிழ்நாட்டுத் தமிழர்களை பயமுறுத்தியோ, உசுப்பிவிட்டோ அதனால் இந்தியா பயந்தோ இலங்கையை அடக்கியோ இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கு என்பது பிளவுபட்டுள்ள இலங்கைத் தமிழ் சமூகங்களின் பிரச்சனையை தீர்க்கும் என்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல.

Nat சொன்னது…

ரதி!நலமா?உங்கள் எழுத்து நடைக்கும் கருத்துக்கும் ரசிகன் நான்.இருந்தாலும் பதிவின் கருத்தில் நெருடியதை முந்தைய பின்னூட்டக்காரர் முதல் வரியில் தொட்டு சென்றுள்ளார்,

பதிவில் குறிப்பிட்டது போல் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் மட்டுமே அரசியல் சுயநலங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இறுதிவரை தமிழர் நலன் அரசியல் செய்தார்.

நான் பதிவுலகில் தொடர்வதில்லையென்பதால் உலக நிகழ்வுகளின் மொத்த சத்தத்தில் ஈழத்துயரக் குரல் எழுவதே இல்லை என்பது புலப்படுகிறது.

அரசியல் காய்நகர்த்துபவர்களும் தமது தேச நலன் குறித்த அக்கறை என்ற முகமூடி போட்டுக்கொண்டே அரசியல் சதுரங்கம் விளையாடுகிறார்கள்.இதில் தமிழகத்தில் அரசியல் செய்பவர்களின் முகப்பூச்சும்,தொலைநோக்கு பார்வையுமில்லாத தேர்தல் நேரத்து நிலைப்பாடுகள் கொண்டவர்களாகவும்,ஈயம் மாதிரி வளைந்து விடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.இதில் முக்கிய சோகம் ஈழ ஆதரவு கொள்பவர்கள் தனித்த ஆளுமை இல்லாமல் போவது.இரு திராவிட கட்சிகள் என்பதற்கு மாற்று நிலை உருவாக்கும் திறன் யாருக்கும் இல்லை.

முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற வரலாற்று ஆவணப்படுத்தல் கால ஓட்டத்தில் சிதைவுகளாகப் போகவேண்டிய நிலைமாறி வரலாற்றின் காலகட்டத்திலேயே சிதைவாகிப்போவது இன்னுமொரு சோகம்.

Rathi சொன்னது…

Nat, நான் நலம். நானும் கவனித்தேன் நீங்கள் முன்போல் அதிகம் அரசியல் பதிவுகள் எழுதுவதில்லை போல!!