நவம்பர் 25, 2013

மாவீரர் நாளும் தமிழர் ஒற்றுமையும்!


வரலாறு அதன் அசைவியக்கத்தின் வழி மானுடவிடுதலைக்காய் சாதாரணர்களை சரித்திரநாயகர்களாக்கி பெரும் திருப்பங்களை, பிரளயங்களை உருவாக்கிச் செல்லும். உலகமே எப்போதும் வரலாற்று அச்சாணியின் சுழற்சியில் தான் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சுழற்சியில் எத்தனையோ இனங்களைப் போல, மக்கள்குழுக்களைப்போல தமிழர்களுக்கும் ஒரு தனித்தவரலாறு, அவர்தம் தனித்தன்மையோடு கூடிய அரசியல், பொருளாதார, நில, பண்பாட்டு, சமூகக்கட்டமைப்பும் அதுசார் வாழ்வியலும் மொழியும் கூட உண்டு. இவற்றின் மாட்சிமையும், மீட்சியும் தான் இலங்கை என்கிற நாடு பிரித்தானியக் காலனியாதிக்கதிலிருந்து விடுதலைவாங்கிய நாள்முதற்கொண்டு தமிழர்களுக்கு உரிமைகளாக மறுக்கப்பட்டும் வருகிறது. 

ஈழத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு அவப்பெயர் சூட்டிப்பார்க்க நினைக்கும் மனட்சாட்சியைத் தொலைத்தவர்கள் ஒருபுறமிருக்க, அனேகமாக ஒட்டுமொத்த உலகத்தமிழினமும் அவ்விடுதலைப் போராளிகளை கார்த்திகை 27 இல் வருடந்தோறும் நினைவுகூருகிறது. போரில் இறந்தவர்களுக்கான மரியாதை செலுத்துவதென்பது ஒரு சாதாரண மனிதாபிமான உணர்வு. அந்த உணர்வைக்கூட மதிக்காத சிங்கள பெளத்த பேரினவாதப்பிடியில் இன்றும் சிக்குண்டு கிடக்கிறது ஈழத்தின் வடக்கும், கிழக்கும். ஒன்றுகூடத்தடை, விளக்கோ, மெழுகுவர்த்தியோ ஏற்றத்தடை, சுவரொட்டிகள் ஒட்டத்தடை. இப்படி எத்தனையோ தடைகளைத் தாண்டியும் எப்படியோ தங்கள் வணக்கத்தை மானசீகமாவேனும் இதயசுத்தியுடன் செலுத்த தவறியதில்லை ஈழம்வாழ் தமிழர்கள். 

புலம்பெயர் தேசங்களில் இன்னும் பூரணமான ஒன்றுபட்ட ஒற்றுமை தமிழர்களிடையே தமிழ்தேசிய விடுதலை குறித்த அரசியல் முன்நகர்வுகளில் இல்லை என்கிற பெரும்குறை இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தது போன்ற போட்டிகள் அதிகம் இல்லை என்றே தோன்றுகிறது மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் நடத்துவதில். 

ஒரு விடுதலைப்போராட்ட வரலாற்றின் சின்னங்கள் தான் இதுபோன்றதொரு நிகழ்வில் சுமைகளைச் சுமக்கும் அடையாளங்களாய் விளங்குவதுமட்டுமல்ல, அவையே ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளாகவும் பதியப்படும். இன்று தமிழர்கள் மண்ணில் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் கட்டப்பட்ட தலைவர்கள் சிலை முதல் விடுதலைப்போரின் வரலாற்றுச் சான்றுகளாய் திகழ்ந்த அனைத்தும் அழிக்கப்பட்டே வருகின்றன, தந்தை செல்வா சிலை முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் வரை. 


இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற தமிழறிஞர்கள், தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் முதல் ஈழவிடுதலைபோரின் தார்ப்பரியங்கள், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் சிற்பக்கலைகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கான Strategic/Historical Location selection குறித்த கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தன. அவற்றை சமூகவலைத்தளங்களில் கேள்வியாக்கிய போது எனக்குக் கிடைத்த இரு பதில்கள் இவை. 

என் அறிவுக்கு எட்டியவரை தஞ்சாவூர் என்பது தமிழ்மன்னர்களான சோழர்களின் ஆட்சியில் புலிக்கொடி பறந்த ஊர் என்கிற அளவே. அதற்கும் மேல் இப்படியும் காரணம் இருக்கிறது என்றார் கே. ஆர். பி. செந்தில். 

மேலும் ஒருங்கினைந்த தஞ்சைப் பகுதி(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்) மக்கள் மிகுதியாக ஈழத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள். வேதரண்யத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரைக்கும் விசா இல்லாமல் வரலாம், திருமணம் முடிக்கலாம் என அனுமதி இருந்தது. கோடியக்கரை எப்போதும் யாழிற்கு பக்கத்து ஊரும் கூட, என்ன குறுக்கே முன்பு கொஞ்சம் கடல் இருந்தது. இப்போது இந்திய- இலங்கை அரசுகளில் சுயநலம் இருக்கிறது.” 

இதற்கு விந்தைமனிதன் ராஜாராமன் என்பவரின் பதில் இப்படி இருந்தது. 

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் புரவலருக்கு சொந்த ஊர் விளார் என்பதாகவும் இருக்கலாம்!”

இதைத்தொடர்ந்து வந்த விவாதங்களில் விந்தைமனிதன் ராஜாராமனின் கருத்துகளின் சில பகுதிகள் இங்கே. 

அஸ்தினாபுரத்துக்குத் தூதுசென்ற கண்ணன், பொன்னும் மணியும் வேயப்பட்ட துரியோதன மாளிகையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தங்கத்தட்டில் நிறைந்த அறுசுவை உண்டி வேண்டாமென்று விதுரனின் குடிலுக்குச் சென்று பழைய சோறு சாப்பிட்டானாம்!


கலைஞர்கள் தம் உணர்வையும் உழைப்பையும் சிந்தி உழைத்த கலைக்கூடம்தான்! அங்கே இருப்பது எம் தமிழ் உறவுகளின் ரத்தமும் ஜீவனும் கசியும் கண்ணீர்க்கதைகளின் காட்சிகள்தாம்! ஆனால்... !மானத்தோடும் சுதந்திர தாகத்தோடும் வாழ்ந்து மண்ணில் விதையான போராளிகளுக்கும், மக்களுக்கும் நினைவுச்சின்னம் ஒரு மாஃபியாக்கும்பலின் பணத்தில்!


ஒவ்வொரு நாளும் உழைத்துத் தன் சுயசம்பாத்தியத்தில் வீதிக்கு வந்து நம் உறவுகளுக்காகப் போராடினார்களே... அரசுக்கலைக்கல்லூரியிலும், பாலிடெக்னிக்கிலும் படித்துக் கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் குழந்தைகள்! அவர்களிடம் துண்டேந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வாங்கி ஒரு நினைவுக்குடிசை கட்டி இருந்தால் அது காலத்துக்கும் தன்மானத்தோடு நிமிர்ந்து நின்று அழியாச்சின்னமாகி இருக்குமே?! இன்னும் கீழ்வெண்மணிக்குடிசைகளில் சாம்பலாய்ப்போனவர்களின் ரத்தசாட்சியாய் நிமிர்ந்து நிற்கின்றதே வெண்மணி நினைவுச்சின்னம்?!


இன்று புரச்சியம்மாளின் கருணைப்பார்வைக்காய் ஏங்கும், கோபப்பார்வைக்காய் நடுங்கும் நெடுமரங்களிடம் இல்லை ஈழத்தின் நினைவுச்சின்னம் என்பதை அப்பாவித் தமிழுணர்வாளர்கள் உணர்வார்களா?!விளாரில் அமைந்த காரணம் சோழமோ, புலிக்கொடியோ, தஞ்சைக்கும் ஈழத்துக்குமுள்ள உறவோ அல்ல! ‘புரவலர் பெருமானின்’ சொந்த ஊர் மட்டுமே காரணம் என்பதைச் சிந்திப்பார்களா?”

மேலேயுள்ள கூற்றொன்றிற்கான பதில் இது....

//மாஃபியாக்களின் பணத்தில் மக்கள் விடுதலைப்போர் வென்றதில்லை என்பது வரலாறு//


”புலிகளையே மாஃபியாக்கள் என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பவர்கள் உள்நோக்கம் என்பது மட்டமான பார்வையாக இருக்கிறது. முள்ளி வாய்க்கால் முற்றம் எனபதின் நோக்கத்தை கொச்சைப்படுத்துவது மோசமான அடிப்படைவாதிகளின் சுயநலம்..”

இதற்கு மேலும் விவாதத்தில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை இந்தப் பதிவில் தேவையற்றது என்பதால் தவிர்க்கிறேன். 

ஆக, ஈழத்தமிழர்களோ, தமிழகத்தமிழர்களோ இன்னும் எதிரிக்குச் சாதகமாகவே எமக்குள் நாமே சேற்றை வாரி இறைத்துக்கொண்டு ஒரு இனப்படுகொலையின் பின்னான விடுதலைக்கான நியாங்களை மறந்துபோக ஏதுவாகிறது இதுபோன்ற வாக்குவாதங்கள். இந்த மாவீரர் நாளிலேனும் வருடந்தோறும் தமிழர்கள் தங்களுக்குள்ளான ஒற்றுமையை மீட்டெடுப்போம் என உறுதிகொள்வது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, வரலாற்று கடமையும் கூட. 

ஈழவிடுதலைப்போரின் மாண்ட அனைத்து வீரர்களுக்கும், அப்பாவிப் பொதுமக்களுக்கும் மாவீரர் தின வணக்கங்கள். 
Image Courtesy: Google.


நவம்பர் 23, 2013

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்.


வரலாற்று அரசியல் காலந்தொட்டு இருவேறு உலகங்களாய் சந்தோசங்கள், துக்கம், கருத்துகள், வேறுபாடுகள் என மனிதவரலாறு அதன் இயங்குவிதிகளோடும், உருவாக்கப்பட்ட விதிகளோடும் இயல்பாக்கம் அடைந்தவண்ணமே இருக்கிறது. இதுகுறித்து அதிகம் கேள்வி கேட்கவோ, தேடிப்பிடித்து காரணகாரியத் தொடர்புகளை அறியவோ, அல்லது உட்பொருள் தேடவோ பொழுதும், அறிவும், முயற்சியும் நிறையவே தேவை. இதையெல்லாம் கலைப்படைப்பாக ஒரு இரண்டரை மணிநேரத்துளிகளில் எம் கண்முன்னே ஆவணமாகவோ, கற்பனையாகவோ காண்பிக்கப்படும்போது அது குறித்து விமர்சனங்கள் எழவே செய்கின்றன. 

இரண்டாம் உலகம்

எனக்கு செல்வராகவன் படைப்புகள் குறித்து நிறைய விமர்சனங்கள் என்வரையில், என் புரிதலுக்கு எட்டியவரையில் எழுதியதுண்டு. அவருடைய வழமைகள் இதிலும் மீறப்படப்போவதில்லை என்கிற ஒரு முன்முடிவோடு, அதிக எதிர்பார்ப்புகளின்றியே திரையரங்கில் இன்னும் 5 மட்டுமே படம் பார்த்தோம், என்னைத்தவிர 5 பேர். இரண்டாம் உலகம் திரைப்படம் குறித்து நிறையவே விமர்சனங்கள் எதிர்மறையாக வருகின்றன. இரண்டாம் உலகம் முற்றுமுழுதாக அவ்விமர்சனங்களை ஒட்டியபடி தான் இருக்கிறதென்பதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. நான் பொதுவெளியில் திரைவிமர்சனம் எழுதுவதில்லை. இது இரண்டாம் உலகம் பற்றிய என் பார்வை. 

Beautiful Mind, Russel Crow நடிச்ச படம் ஒன்று ஓஸ்கார் விருது பெற்றது. அதில் ரஸலின் பாத்திரத்தின் மனைவியின் அறிமுகத்தின் போது அவரை ஒரு Problem Solver ஆக அறிமுகக்காட்சியில் காட்டுவார்கள். 

அவர் வகுப்பறையில் இருப்பார். விரிவுரையாளர் பாடம் நடத்துவார். வெளியே கட்டிட வேலை நடந்துகொண்டிருக்க சத்தம் பெரிதாக இருக்கும். எல்லாரும் பேசாமலே இருக்க, இவர் சர்வசாதாரணமாக எழுந்து போய் யன்னலை மூடிவிட்டு வருவார். 


அவரை அவ்வாறு காட்டியதன் நோக்கம், அவர் தான் தன் கணவனின் பிரச்சனைகளை, மனநோயின் பிடியிலிருந்து அதன் தாக்கங்களிலிருந்து காக்கிறார் என்பதற்கான ஒரு அழகான பாத்திரப்படைப்பு. 


கணவருக்கு Paranoid Schizophrenia. அவர் இரு வேறு உலகில் தன்வரையில் வாழ்பவர். அந்த இரண்டும் ஒருபுள்ளியில் சந்திக்கும் போது பார்வையாளர்களுக்கு ஒரு திகைப்புவரும். 


இப்படித்தான் இருக்கப்போகிறது என்று காத்திருந்தேன் இங்கேயும், இரண்டாம் உலகம். ஆர்யாவின் கதாபாத்திரமான மதுபாலகிருஷ்ணனுக்கு ஏதும் உளவியல் பிரச்சனை என்கிற நோக்கோடும்; அனுஷ்காவை ஒரு problem solver ஆக ஒரு முன்னனுமானத்தோடு கவனித்தேன் திரைக்கதையை. 


செல்வராகவனின் காதல் கொண்டேன் ஏழ்மை-செல்வம்; ஆயிரத்தில் ஒருவன் சரித்திரகாலம்-தற்காலம்; அதே போல் இப்போதும் இரண்டாம் உலகம் இப்பூலோகம் - இன்னோர் புதுவுலகம். 


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் விட்டதை இதில் பிடிக்கவேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ரசிகர்களை Medieval Period போன்ற ஒரு காலப்பகுதிக்கு கூட்டிச்சென்று, அக்கால அரசியலையும் (ஒன்றே மதம், ஒரே கடவுள், ஒரே மொழி.... இப்படி, அதாவது எனக்குப் புரிந்தது அந்தக்காலப்பகுதியில் தான் இஸ்லாமிய ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்துவ ஐரோப்பா விடுவித்த காலப்பகுதி. I am not a historical buff.) ஆங்காங்கே குறியீடாகக் காட்டியிருப்பதாய் தோன்றியது. இங்கே தொன்ம அரசியல், வரலாற்று, சமூகக் குறியீட்டுப் படிமங்கள் இருப்பதாக என் அறிவுக்கு ஏனோ தோன்றியது. அந்த அரசியல் வரலாற்றுக் காலப்பகுதியிலேயே இரட்டை இலை, ‘அம்மா, அம்மா’ குறியீடு. ஏன் செல்வராகவன்! 


ஏன் வரலாற்றின் ஒரு மத்தியகாலப்பகுதி என்றால் எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அந்தக்காலப்பகுதியை ஒரு புதிய உலகமாக்கி, அதை பிரபஞ்சத்தால் சூழவைத்து, காணவைத்த Visuals பார்க்கும்போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. காரணம், தமிழ்த்திரைப்படங்களில் அதையெல்லாம் கொண்டுவருகிறார்கள் என்று. சரி, கதைக்கும், செல்வராகவனின் கதாபாத்திரங்களிடமும் வருவோம். செல்வராகவனின் அதே கதைக்களமும், பாத்திரங்களின், ஆண்-பெண் psychological behavioral concept ம் மாறவே இல்லை. இரண்டாம் உலகில் அனுஷ்காவின் பாத்திரமான ‘வர்ணா’ ஆணாதிக்க ஆண்களுக்கு பிடிக்காத வழமையான செல்வராகவனின் உருவாக்கம். யாருக்கும் அடிமையாய் இருக்கமாட்டேன் என்று திருமணத்தையே வெறுப்பவர். சந்தர்ப்பசூழ்நிலை ’மருவா’ வை (ஆர்யா) கல்யாணம் செய்கிற சூழல். மருவாவுடன் சேர்ந்துவாழப்பிடிக்காததால் தனித்தே காட்டில் வாழ்கிறார் வர்ணா. காரணம் அதுமட்டுமல்ல, கட்டாயக்கல்யாணம் செய்துவைத்த ராஜாவை கொலைசெய்ய எடுத்த முயற்சியும் கூடவே. எதுவும் வழமை மாறவில்லை இயக்குனரின் வழக்கமான கதையிலிருந்து. இது ஒரு உலகம். அங்கே ஒரு ஆர்யா-அனுஷ்கா சோடி. 


இன்னொரு உலகம், தற்காலம். அங்கே இன்னோர் ஆர்யா-அனுஷ்கா. இவ்வுலகில் வழமையான காதல் துரத்தல்கள், துருத்தல்கள். 

இறுதியில், இருப்பதோ ஒரேயொரு அனுஷ்கா இரண்டு உலகிலும் சஞ்சரிக்கும் ஆர்யாக்களுக்கும். இரண்டு உலகிலுமுள்ள ஆர்யாக்களும் என்ன செய்வார்கள் என்று ரசிகர்களை கொஞ்சம் கவலைப்படவும் வைக்க முயற்சித்திருக்கிறார்.

எது எப்படியோ, கடைசியில் தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்றிவிட்டார் செல்வராகவன். செல்வராகவனின் கதைக்களத்தில் என்ன குறை என்று நான் நினைக்கிறேன் என்றால், இவர் ஆண், பெண் இருவரும் சார்ந்த காதல், கல்யாணம் என்பது அவர்கள் சுயாதீனமானக முடிவெடுத்து சுயமாய் வாழவேண்டும், அவர்களது முடிவின் அடிப்படையில் என்பதைச் சொன்னாலும், இவரது நாயக - நாயகியைப் பொறுத்தவரை ஏன் சமூகம் என்பது எப்போதும் ஒரு முடமானதாகவே இருப்பதை சித்தரிக்க மறுக்கிறார். இணையாய் ஆண் - பெண் வாழ்வில் சமூகத்தின் பங்கு என்ன என்பதை ஏதோ குறியீடு போலப் பயந்து, பயந்தே காண்பிப்பது போல உள்ளது. 

வழமையான தமிழ் சினிமாக்களில் அழுவாச்சிக்காவியமாக காட்டப்படும் சில காட்சிகளை இயல்பாக அமைத்திருப்பது கவர்கிறது. தன் மனைவிக்கும், தன்னைப்போல இருக்கும் இன்னொரு ஆடவனுக்கும் இடையேயான உறவு இருப்பதாக நினைத்து, ‘கூசுதடி’ என்று ஆர்யா சொல்லுமிடம் இயல்பாய், அழகாய் கவர்கிறது. ஏன் செல்வராகவன், பெண்களுக்கு காதல் வந்தால் வாள் சுற்றமாட்டார்கள் என்கிற தமிழ்மரபை நீங்களும் காப்பாற்றியே தான் ஆகவேண்டுமா. உயிரா, சாவா என்கிற இடத்தில் அனுஷ்கா வெட்கப்பட்டே தான் ஆகவேண்டுமா! என்னமோ போங்க. 


இரண்டாம் உலகத்தின் Visuals, அனிருத்தின் பின்னணி இசை இரண்டையும் மிகவும் ரசித்தேன். சில பின்னணிகாட்சிகளின் இசையில் உடுக்கையும் இருக்குமோ!


பார்க்கலாம், Entertaining. ஆனால், நிச்சயம் ‘வர்ணா’வை எத்தனை ஆண்களுக்குப் பிடிக்கும்!! வர்ணாக்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை.


நான் பொருத்திப்பார்த்த Beautiful Mind போல் இருவேறு உலகம் பொருந்தவுமில்லை. அவை சந்திக்கும் புள்ளியில் லாஜிக்கும் இல்லை.கதைக்குள்ளேயே அந்த இருவுலகங்களும் இணையும் புள்ளியில் லாஜிக் இன்னும் கொஞ்சம் வலுவாவனதாய் அமைத்திருக்கலாம். அனுஷ்கா வழக்கம்போல் வியாபாரக்குறியீடாய் ஆகியிருக்கிறார். 

இது கூகுள் ப்ளஸ் இல் அந்தியூரான் பழமைபேசி என்பவர் எழுதிய விமர்சனம். அவரது அனுமதியோடு இங்கே பகிர்கிறேன். 

”இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது.

இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும்.பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம்.”

இது MSK Saravana என்பவர் எழுதியது கூகுள் ப்ளஸ் இல். 

”நாமிருக்கும் Milkyway Galaxy-ல மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கு. இந்த மொத்த Observable Universe-ல மட்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் Galaxies இருக்கு. இதைத் தாண்டியும் இந்த Universe எவ்வளவு தூரம் விரிவடைந்திருக்குன்னு நமக்கு தெரியாது. நம் universe தவிர்த்து, அடுத்தடுத்த Universe/Universes இருக்கிறதா என்றும் நாமறியோம். நாமிருக்கும் பூமியில் கூட கார்பன் மூல உயிரினங்கள் மட்டுமல்லாது மீத்தேன் மூல பாக்டீரியாக்கள் இருக்கு. மில்லியன்கணக்கான விந்தணுக்கள்ல்ல நாம் மட்டுமே பிறந்திருக்கிறோம். இந்த மொத்த சராச்சரத்தின் ஒரே எளிய உண்மை Coincidence and Possibilities.

இங்க செல்வராகவன் ஒரு சின்ன fantasy possibility சொல்லியிருக்கார். இன்னமும் காதல் மலராத ஒரு வேற்றுலகத்துல, தன் காதலியையொத்த பெண்ணொருத்திக்கு, அதி அற்புதமான காதலையுணர்ந்த பூமியை சார்ந்த ஒருவன் காதல் உணர செய்கிறான், தன் பயணங்களை தொடர்கிறான். ரொம்பவே எளிய காதல் கதைதான். நிச்சயம் உங்களுக்கும் இந்தப்படம் பிடிக்கலாம், if you're not CYNICAL.

இங்கே, புவியில் நடக்கிற காதல் கதை typical செல்வராகவன் கதை. இது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வேற்றுலக காட்சிகள்தான் நம் மக்கள் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கும். லாஜிக்/குறியீடு/க்ராபிக்ஸ் அது இதுன்னு மண்டையை உடைச்சிருப்பாங்க. நான் கொஞ்சமும் எதிர்பார்ப்பின்றி ரொம்பவே மொக்கையாயிருக்கும்ன்னு எண்ணத்தோடு எவ்வித முன்முடிவுகளுமின்றி ஒரு observer-ஆ படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.

The Fountain படம் மாதிரியெல்லாம் இல்ல. ஆர்யாவோட நடிப்பு வழக்கம்போல கொடுமை. அனுஷ்கா கொஞ்சம் அழகு, நிறைய முதிர்ச்சி. அனிருத் பின்னணியிசை சில இடங்களில் அருமை, சில இடங்களில் ஹாரிஸ் மாதிரி கொடுமை. ராம்ஜியின் ஒளிப்பதிவு அட்டகாசம். நிறைய துணைக்கோள்களை கொண்ட அந்த வேற்றுலகம் உயிர்ப்பு. Game of thrones மாதிரியான பறக்கும் ட்ராகன்கள் க்ராபிக்ஸ் அட்டகாசம். சிங்கம் யாளி, நரி பண்டோரா.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செய்த நிறைய தவறுகளை சரிசெய்து செல்வராகவன் கொடுத்திருக்கும் ஒரு நல்ல படம் இந்த இரண்டாம் உலகம். கொஞ்சம் அன்பும் பொறுமையும் கொண்டு பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் :)”


எனது இந்த சினிமா விமர்சனம் தேவையற்றதாகக் கூட இருக்கலாம். சினிமா வணிகமே என்றாலும் சில படைப்புகளுக்கான கிரடிட் கொடுக்கப்படவேண்டுமென்பதால் இப்பதிவு. 

Image Courtesy: Google


நவம்பர் 13, 2013

தமிழக அரசியலும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றமும்

அன்புள்ள ரதி இப்படி இணையமடல் வழி என்னை விளித்து Grassroot மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பிரச்சனைகளை மடைதிருப்பி, குழப்பி அரசியலாக்கும் எழுத்துக்கான திறனோ அல்லது தேவையோ இல்லாத; ஈழம் குறித்து மட்டுமே அனேகமாக பதிவெழுதும் எனக்கும் ஈழம் குறித்து நான் எழுதும் பதிவுகளின் விளைவால் ஒருவர் தமிழ்நாட்டின் தற்போதைய முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதால் மனம் நொந்து மடல் எழுதியிருந்தார். அவர் பெயர் வெளியிடவேண்டாம் என்கிற வேண்டுகோள் மதிக்கப்படுகிறது. 

தமிழக அரசியல் ஈழத்தமிழர்கள் குறித்து எந்தவகையான புரிதலோடு, செயற்திறனோடு செயலாற்றுகிறது என்பதை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடங்கிய நாள் முதல் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னான இன்றைய நாள்வரை கவனித்தே வருகிறோம். ஈழவரலாற்றின் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு வரையப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய பக்கங்களைப் போலவே வெட்கி, வேதனைப்படவேண்டிய பக்கங்களும் உண்டு. வார்த்தைகளை வளர்த்து ஆறியபுண்ணை மீண்டும் கிளறிப்பார்க்க மனம் ஒப்பவில்லை. இதோ அந்த மடல். 

”இதற்கான மூலம் டெல்லி இப்போது தமிழ்நாட்டில் உள்ள  சுயநலமே  அரசியல் கொள்கையாக கொண்ட எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதைதான் செய்யும். நான் இணைத்த ndtv விவாதம் மற்றும்  பல வட இந்திய  ஊடகங்களில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை சார்ந்த செயலாளர்கள் எல்லோரும் தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. காமன்வெல்த்தில் இந்தியா கல்ந்துகொள்ளகூடாது என்று நாம் கேட்பது அவர்களுக்கு கோபமூட்டுகிறது. அவர்களுக்கு இந்தியாதான் முக்கியம் அதற்க்கு தமிழர்களின் இரத்தம் கொடுத்துதான் வாங்கவேண்டுமென்றால் அதையும் செய்வார்கள்.

ஈழம் குறித்து பெரிதாய் அக்கறை கொள்பவர்கள் வெகு சிலரே.


நான் பார்த்த வரையில் ரதி, 


இந்தியாவில தமிழர்களை பிடிக்காத, இவ்வளவு அழிவுகளுக்கும் பின்புலமாய் இருந்த, இன்றைய இந்தியாவை இயக்கிகொண்டிருக்கிற சக்திகளை கேள்வி கேட்க்கும் வல்லமை பொருந்திய ஆளுமைகள் இன்றைய தமிழ் நாட்டு அரசியல் வெளியில் யாரும் இல்லை. 


தேர்தல் அரசியலில் உள்ள யார்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை வைகோ ,சீமான் உட்பட எனக்கு தெரிந்த அரசியல் அறிவை கொண்டு நான் பார்த்த வரையில் அந்த சக்திகளை அசைத்து பார்த்தவர்கள் ஒன்று பெரியார் மற்றொருவர் பிரபாகரன் 

தன்னலம் பாராமல் தனது கடைசி காலம்வரையில் அரசியல் தளத்தில்  தனது பிரச்சாரத்தின் மூலமே அந்த சக்திகளை  அசைத்து பார்த்தவர் பெரியார் (தமிழ் நாட்டில் அவரின் உழைப்பின் பலனை அறுவடை செய்துகொண்டவர்கள் திமுக ).

மற்றொருவர் பற்றி உங்களுக்கு தெரியும். 

நான் அவதானித்த யதார்த்தத்தில் இருந்து சொல்கிறேன் களத்தில் புலிகள் எவ்வளவுதான் சாதித்திருந்தாலும் அரசியல் களத்தில் (உலக அளவிலும், இந்திய அளவிலும் ) பெரிய தோல்வி அடைந்துவிட்டோம் என்பதையே பார்க்கமுடிகிறது. வடஇந்திய ஊடகங்களில் ஈழம் தொடர்பான விவாதங்களை முடிந்த அளவு தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் நமக்காக வாதிடுபவர்களின் குரல் எடுபடுவ்தே இல்லை பெரும்பாலும் டி ராஜாதான் பங்கேற்ப்பார் தமிழ்நாட்டில் மக்களுடன் தொடர்பிலே இல்லாத ஒரு கும்பல் இங்கு இருக்கிறது அவர்கள்தான் அறிவுஜீவி கணக்காய் அத்தகைய தொலைகாட்சிகளில் காட்சி தருவார்கள் நாம் ஒரு செண்டிமீட்டர் மேலே ஏறினால் ஒரு மீட்டர் கீழே இழுத்துவிடுவார்கள். அதைத்தான் இந்த இந்தியாவில் நம்பவைக்கபடுகிறது. இதை உடைக்கும் வல்லமை இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் யாரும் இல்லை.


மற்றவர்களை காட்டிலும் சிறிதளவு நம்பிக்கை வைகோவின் மீது இருக்கிறது அவருடைய அனுபவம்,வட இந்தியாவில் அவருக்கிருக்கிற செல்வாக்கை வைத்து சொல்கிறேன் அவருக்கு போதுமான பலம் இருந்தால் அவரால் சாதிக்கமுடியும்.


மற்றபடி எதிர்காலத்தில் யாரோ ஒரு தலைவன் அல்லது தலைவி கையில் தான் தமிழ் இனத்தின் தலைவிதி இருக்கிறது.”
செய்திகளை, அரசியல் குறித்த சில அடிப்படைகளைப் படித்து எழுதுவதோடு சரி. எனக்கென்று எந்தவொரு அரசியல் வட்டமோ அல்லது தொடர்புகளோ கிடையாது. இதைக் கவனிப்பவர்கள் கவனித்து செயலாற்ற வேண்டும் என்பதே என் அவா. மடலில் அவர் குறிப்பிட்டது போல ஒரு தலைவன் அல்லது தலைவியல்ல தமிழர்களின் விதியை நிர்ணயிப்பது என்பது என் கருத்து. தமிழர்களுக்கான அரசியல், பொருளாதார நிறுவனங்கள், கட்டுமானங்கள் (Political and Economic Institutions) வலுவானதாக இருக்கவேண்டும். அதைக்குறித்த கேள்விகேட்கும் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்திய மைய அரசியலில் சிக்கி ஈழத்தமிழனின் நிலை தமிழகத்தமிழர்களுக்கு வராமல் இருக்கட்டும். 


மெய்நிகர் உலக ஈழம் குறித்த விவாதங்களில் நான் தமிழகம் மனதுவைத்தால் ஈழத்தமிழர்களுகான அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் வெளியக சுயநிர்ணய உரிமை சாத்தியம் என்று வாதாடினால், ஒன்று கிண்டலடிக்கப்படுகிறேன், இல்லையேல், தமிழகத்தை நம்பாதீர்கள்; ஈழத்தை நீங்களாகவே போராடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வருகிறது. அதிலெல்லாம் சுரணை போய் நாட்களாகிவிட்டது. காரணம் எனக்கு என் இனம் குறித்த சுரணை மட்டுமே என்னிடம் மிஞ்சியிருக்கிறது. 

மரணத்தின் போதும் என் இனத்துக்காக எதையாவது கிறுக்கியிருக்கிறேன் என்கிற திருப்தியாவது மிஞ்சும். 

Image: Google.