அக்டோபர் 31, 2013

வெள்ளக்காடும் அற்றகுளத்துப் பறவைகளும் - Kiribati


ஒளவையார் சொன்ன முதுமொழி அல்லது பழமொழி ஒன்று, Do not lose (your) dignity. ஒளவையார் எப்போது ஆங்கிலத்தில் பழமொழி சொன்னார் என்றால், மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று தமிழில் தான் சொல்லியிருந்தார். எப்போது மானம் உயிரை வதைக்கும்! உயிர்ப்பிச்சை போடு, பசிக்கு ஒரு பிடி உணவு கொடு என்று கெஞ்சும்போது மட்டுமல்ல; என் நிலம் இழந்தேன், என் இனம் இழந்தேன், என் மக்களை, மண்ணைப் பிரிந்ததில் சகலமும் இழந்தேன் என்னும் நிலை வரும்போது எங்கேயோ வேண்டாத விருந்தாளியாய் வாழ ஒரு வழிகாட்டு, உயிர்ப்பிச்சை கொடு என்று கெஞ்சும்போது உயிருக்குள் முள்ளாய் உறுத்தும் அவமானம். அதை உணர்ந்தவனுக்கு மட்டுமே அது உயிர்வலி.

உலகமயமாக்கலுக்குத் தேவையான அல்லது ஒரு Global Village உருவாக்கத்துக்குத் தேவையான படிப்பைப் படித்தவர்களையெல்லாம் அடிமாட்டுவிலைக்கு மேலைத்தேசங்கள் வாங்கிக்கொள்ளும். அந்த எல்லையைத்தாண்டிய படிப்புபடித்தவர்கள் எல்லாம் அல்லது படிப்பே கிடைக்காதவர்கள் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ வாழும் உரிமை கேட்கத் தகுதியில்லாதவர்கள் ஆகக்கூடும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எல்லாரும் குடியேற நினைத்தால் முடியுமா என்று நினைக்கலாம் மறுவளத்தில். முடியவே முடியாது தான். ஐரோப்பாவின் அன்றைய காலனியாதிக்கமும், அமெரிக்காவின் இன்றைய நவீன காலனியாதிக்கமும் தான் மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் வாழ வழிவகை தெரியாமல் ஆனவர்களாய், பாரம்பரிய தொழில்முறைகளை, வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் ஆகக்காரணமும் கூட.

எழுதப்படாத அபத்தமான சமூகவிதிகளின் வழி தான்சார்ந்த ஒரு சமூகத்தோடு ஒருங்கிணைந்து வாழமுடியாமற்போகும் தன்னிலைக்கொவ்வாத சூழ்நிலைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும், தன்னிறைவுக்கான அத்தனையும் கிடைக்குமிடத்திலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை இடம்பெயர்த்துக்கொள்ளத் துணியமாட்டார்கள் என்பதே பொருத்தம். தான்வாழும் சூழலில் தன் அத்தியாவசியத் தேவைகளுக்கான வளங்கள், தன் ஆரோக்கியமான உடல் மற்றும் உளநல வாழ்வுக்க்குத் தேவையான ஆதாரங்கள் என்று தன் அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஏற்றபடி தான் நம்பும் அத்தனையும் கிடைக்கும் செளகர்யமான வாழ்க்கைச்சூழலில் இருந்து தன்னை இடம்பெயர்த்துக்கொள்ளாத சுயநலம் தான் மனிதர்களின் இயற்கயோடு இயைந்த இயல்பு. அதைத் தவறென்று இயற்கையை நான் விமர்சிக்கவும் இல்லை. உடலை இடம்பெயர்க்கலாம். நினைவுகளை என்ன செய்ய என்கிற போது, சில உணர்வுகளைக் கடந்தே வாழ்க்கையை வாழ்ந்துமுடிக்க வேண்டிய காலம் விதித்த கட்டாயமும் உண்டு.

மூன்று பந்திகள் எழுதிய பின்னும் தலைப்புக்குச் சம்பந்தமான விடயத்தைச் சொல்லாமல் இழுத்தடிக்கக் கூடாது. இருந்தாலும், இனி எழுதப்போவதைப் படித்தபின் மறுபடியும் படித்தால் நான் சொலவதன் அர்த்தம் புரியலாம். அண்மையில் எந்த நாட்டின் மைய ஊடகங்களிலும் அதிகம் பேசப்படாத, ஆனால் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது Kiribati என்கிற ஒரு குடியரசு அமைப்பைக்கொண்ட நாட்டில். மத்திய பசுபிக்கடலில், ஹவாய்த்தீவிலிருந்து பாதிதூரத்திற்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே இருக்கிற நாடாம் என்பது தேடித்தெரிந்து கொண்டது. ஐக்கிய ராச்சியத்திடமிருந்து 1979ம் ஆண்டு விடுதலை பெற்றிருக்கிறது கூகுள் கூற்றுப்படி. பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் இருந்தது என்பதால் அங்கே Christianity மற்றும் ஆங்கிலத்தின் பாதிப்பு இருக்குமென்று நினைதேன். நான் நினைத்தது சரிதான். அங்குள்ள மக்கள்தொகையில் 55% வீதத்திற்கு மேலானோர் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவுபவர்களாம். அந்த நாட்டு மக்கள் மதம் சார்ந்த கொள்கையால் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. 

அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாதவர்களுக்காக, கிரிபாற்றி Climate change, Global warming அதாவது புவி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் அளவு அந்த குட்டித்தீவை முழுதுமாய் விழுங்கிவிடும் ஆபத்தில் இருக்கிறது. அந்த நாட்டின் சனத்தொகை ஒருலட்சத்தி சொச்சம். இவ்வளவு பேரும் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து ஆதரிக்க ஏனைய பிறநாடுகள் மிகவும் தயக்கம் காட்டி ஆரம்பத்திலேயே அவர்கள் வருகையை தங்கள் நாடுகளிலிருந்து தட்டிக்கழிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தி இப்போது எப்படி முதலாளித்துவ நாடுகளை யோசிக்கவைக்கிறது என்று தேடினால் கிரிபாற்றி நாட்டிலிருந்து ஒரு குடியானவன் தன் மனைவியுடன் நியுசிலாந்து நாட்டுக்கு ஆறுவருடங்களுக்கு முன் சென்று அகதி அந்தஸ்து கோரியிருக்கிறார். அந்த வழக்கு இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டு இப்போது தீர்ர்புச் சொல்லும் காலத்தை எட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறது. புவிவெப்பமடைதலால் கடல்மட்டம் உயர்ந்து அதன் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து கோரவோ அல்லது கொடுக்கவோ ஐக்கிய நாடுகள் சபையின் அகதிநிலைக் கோரிக்கைகள் தொடர்பான உடன்பாட்டில் இதுபோன்று அகதிநிலை கோரியவர்களுக்கு தீர்வாக அகதி அந்தஸ்து கொடுப்பது பற்றி ஏதும் சொல்லவில்லையாம். அதுதான் உண்மையும் கூட.

ஐக்கியநாடுகளின் அகதிநிலைக்கான இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் முன்னமே யோசித்திருந்தால் இதுபோன்றவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது என்று தீர்மானத்தை திண்ணமாய் நிறைவேற்றி இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

ஆறுவருடங்களுக்கு முன் கிரிபாற்றி தீவு அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதை மறுத்தவர்கள், அந்த மனிதரின் வழக்கில் இப்போது விஞ்ஞானிகள் அத்தீவு கடல்மட்டத்தில் எல்லை மீறி அழிவுக்கு உட்படும் அபாயம் இருக்கிறது என்று எதிர்வுகூற, அகதி அந்தஸ்து கொடுக்கும் நிலையில் ஐ. நா. உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் யோசிக்கிறார்கள் இப்போது. அனேகமாக எல்லா நாடுகளுமே இவ்வழக்கின் தீர்ப்பை ஆவலாய் எதிர்நோக்கியிருக்கின்றனவாம். சுத்தமான குடிநீர் கூட கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவரும் வேளையில் அந்நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவண்ணம் இருக்கிறார்களாம். 

உலகம் சனத்தொகைப் பெருக்கத்தால் பிதுங்கிப்போய் இருக்கும் கட்டத்தில் இப்படி நடந்தால் யாராவது கண்டுகொள்வார்களா என்று யோசித்து, அப்பிடியே கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் தேடிப்பார்த்தேன். பூவுலகின் மக்கள் தொகையும், மதங்கள் கண்டுபிடித்த இறப்பின் பின் சொர்க்கத்தின் மக்கள் தொகையும் எப்படி சமப்படும் என்றால் வெள்ளப்பெருக்கு, வறட்சி, நோய்கள் வரும்போது என்று 1700களில் சீனாவின் Qing ராஜ்யத்தில் வாழ்ந்த Hong Liangji என்கிற ஒரு அறிஞர் சொல்லி வைத்திருக்கிறார் என்பது காணநேர்ந்தது. இவர் Thomas Robert Malthus சனத்தொகைப் பெருக்கத்துக்கும், உணவு உற்பத்திக்குமிடையேயான விகிதாசாரத் தொடர்பு, வளர்ச்சிவீதம் குறித்த தியரியை அந்தக் காலத்தில் சரியென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுக்கு முன்பே, அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பே, ஹாங் சீனாவின் சனத்தொகைப் பெருக்கம் மற்றும் உணவு உற்பத்திக்கும் இடையேயான தொடர்பை விளக்கியிருக்கிறார். 

தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து மனித இனம் செல்வத்தையும் அறிவையும் வளர்த்துக்கொண்டே போகிறது. அல்லது, சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவதால் ஏற்படும் மண்ணை அழிப்பதும், பல்வேறு உயிரினங்களை அழிப்பதும், காலநிலை மாற்றங்களுக்கு பூமி உட்பட்டு இப்படி மனித இனம் இடம்பெயர்க்கப்படுவதும் தொடருமா என்று கேள்விகளை விட்டுச்செல்கிறார்கள். ஆனால், அதன் விளைவுகளான இதுபோன்ற பூதாகரமான பிரச்சனைகள் வந்தால் ஏற்கனவே எழுதிவைத்த guidelines ஐத் தேடுகிறார்கள். 

கிரிபாற்றி பிரச்சனைக்கு எல்லா நாடுகளும் அந்த நாடு தன்னாலான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவர்களும் ஓரளவு இதற்கு தீர்வு என்று ஒன்றை எட்ட ஜப்பானுடன் சேர்ந்து யோசிக்கிறார்களாம். ஆனால், அதுக்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் தேவைப்படுமாம். இந்த நாட்டுக் குடிகளின் இடப்பெயர்வும் அகதிநிலைக் கோரிக்கையும் எப்படியோ வேண்டா வெறுப்பாகவே இனி எல்லா நாடுகளாலும் பார்க்கப்படும். ஏற்கனவே தேசப்பாதுகாப்பு முக்கியம் அது, இதுவென்று உளறத்தொடங்கியிருக்கிறார்கள். 

அனேகமாக, நியுசிலாந்தில் அகதிநிலைக் கோரிக்கை வைத்தவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தான் சில சர்வதேச சட்டவல்லுனர்கள் எதிர்வுகூறுகிறார்கள். அந்த நாட்டின் சார்பில் அல்லது அந்த மக்களின் சார்பில் பேசுபவர்கள் அவர்கள் அகதிநிலையை விரும்பவில்லை. வேறோர் நாட்டில் கெளரவமான "Migrant Status" ஐ விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இல்லையா பின்ன, அகதிநிலை என்பதும் இடப்பெயர்வு என்பதும் யாருக்குத்தான் பிடிக்கும். ஆங்கிலத்தில் 'Persecution' என்று சொல்லப்படும் மனிதர்களால் துன்பத்துக்கு ஆளாகும் நிலைக்கே அகதிநிலை அந்தஸ்து வழங்கப்படுமாம் ஐ. நா. சாசனத்தின் படி. 

மேலும் இதுகுறித்து தெரியவிரும்பினால் கூகுளில் தேடினால் நிறையவே கொட்டுகிறது அந்தந்த நாட்டு ஊடகதர்மத்தின் படி. இருந்தாலும், எனக்கு சரியென்று பட்டது இந்தப் பக்கத்திலுள்ளது. 
Image: Google.