செப்டம்பர் 18, 2013

தேர்தல் விஞ்ஞாபன வைபோகமே!


தேர்தல், இது மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில் இன்னும் ஜனநாயகம் என்பதன் ஒரு வரப்பிரசாதம் போன்றே கணிக்கப்படுகிறது. இலங்கை போன்ற நாட்டில் இனவாத அரசியல் செய்யும் ஆட்சியும், தேர்தல் என்கிற கண்துடைப்பும் போரிலிருந்து மீண்ட வடக்கிற்கு என்ன புதிதாய் நம்பிக்கையை கொண்டுவரும் என்பதே குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமளவுக்கு இல்லையென்றாலும், குறைந்தபட்சம் நீதியும், நியாயமானதுமான தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம். இது ஒன்றும் பாராளுமன்றத் தேர்தல் கூட கிடையாது. எதிர்வரும் 21ம் திகதி நடைபெறப் போவது மாகாணசபைத் தேர்தல் மட்டுமே. இலங்கையின் வடக்கு, தெற்கு, வடமேல், மத்திய, ஊவா மாகாணசபைத் தேர்தல் இது. 

மற்றைய மாகாணங்களை விடவும் வடக்கின் மாகாணசபைத் தேர்தல் அதிகளவில் சூடுகண்ட களமாக ஆகிவிட்டிருக்கிறது. வடக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமே தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை ஒன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தல் விஞ்ஞாபனமானது இலங்கையின் அரசியலமைப்பை மீறாமலே தயாரிக்கப்பட்டதாய் மன்னார் ஆயர் ராயப்பு கூறியிருக்கிறார். மற்றைய கட்சிகளான ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசக் கட்சி, ஜேவிபி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன மற்றைய மாகாணங்களில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை அறிமுகம் செய்யவில்லை என்கிறார் அரசின் ஊதுகுழலாய் செயற்படும் விமல் வீரவன்சே. தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை என்பதெல்லாம் ஜனநாயக விழுமியப் பண்பு என்பது புரியாத ஜென்மங்களுக்கு என்ன சொல்வது. 

அப்பிடி தமிழர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் என்னதான் இருக்கிறது இவர்கள் குதிக்க என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் உள்ளக சுயநிர்ணய உரிமையை தமிழர்களின் அரசியல் அபிலாசையாகக் குறிப்பிட்டதாக அரச சார்பில் வழக்கம் போல் கூக்குரல். தமிழர்கள் உண்மையில் வெளியக சுயநிர்ணய உரிமையைத் தான் விரும்புகிறார்கள். ஆனால், உங்கள் சோசலிச ஜனநாயக் குடியரசு தான் சட்டம் போட்டு பேசக்கூட தடைவிதிக்கிறதே தமிழனுக்கு. பிறகேன், இத்தனை ஆர்ப்பாட்டம். த. தே. கூ. வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருகிறார்கள், அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படவேண்டுமென கேட்கிறார்கள்; இதெல்லாம் புலிகளின் கருத்துகளை நிறைவேற்றுவதாகும் என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லஷ்மன் யாப்பாவின் ஆணவப் பேச்சு. 

காலங்காலமாக தமிழனின் வாழ்நிலம், தமிழனுக்கு சொந்தமான பூமி தான் தற்போதைய இலங்கையின் வடக்கும், கிழக்கும். அதில் தமிழன் ராணுவம் வேண்டாம், காணி, காவல்துறை அதிகாரங்களைக் கொடு என்றால் கூட வழங்க மறுக்கும் ஒரு மாகாண சபை ஆட்சியை அரசின் கைப்பாவையாய் செயற்படும் ஒரு முதலமைச்சருடன் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகிறது என்றே வைத்துக்கொண்டாலும், அதைக்கூட அறுபது வருடங்களாகவே மறுப்பவன் தானே சிங்களன். 

இதெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களின் வழக்கமான தமிழர்களுக்கு எதிரான ஆண்டாண்டுகால எதிர்ப்புகள். இதுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் பெரும்பான்மை வெற்றி பெறவேண்டும் என்பதே அனேகமான தமிழர்களின் விருப்பும், எதிர்பார்ப்பும். ஈழத்தின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிர்வரும் 21 ம் திகதி தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுமாறு கூறுவதோடு, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபை என்பது தமிழர்களின் தேசியக்கேள்விக்கு தீர்வாகாது என்பதையும் கூறுகிறார்கள். மாகாணசபை மூலம் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது என்பதை த. தே. கூ. சரியாக தேர்தல் அறிக்கையில் விளக்கவில்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடு. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படும் மக்கள் ஆணையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான அரசியல் தீர்வுக்கான களங்களை உருவாக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

எப்படியென்றாலும், வடக்கிலேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றே ஆகவேண்டியது காலத்தின் தேவை, கட்டாயம். இல்லேயேல், சிங்களப் பேரினவாதத்தின் கைகள் தாம் வடக்கிலும் மேலும், மேலும் உயர்ந்து, தமிழர்களின் குரல்வளைகள் இன்னும் நெரிக்கப்படும். இதற்கிடையே, வடக்கின் தேர்தல் முறைகேடுகள், அதிகாரிகளின் நியமிப்புகளில் அதிக சிங்களர்களின் தெரிவு, மற்றும் பொதுமக்கள் வாக்களிக்கச் சென்றால் குண்டுவெடிக்கும் என்கிற ராணுவ மிரட்டல்களும் உண்டு. இதையெல்லாம் கண்காணிக்க சார்க் அமைப்பின் பிரதிநிதிகள் வடக்கிற்கும் வந்திருப்பதாகச் செய்திகள் சொன்னாலும், அவர்களும் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு மாகாணசபைத் தேர்தலுக்கே தமிழனுக்கு இத்தனை கெடுபிடிகள். இங்கே தான் ஜனநாயகம் வாழ்கிறது என்று தேர்தலுக்குப் பின் அமெரிக்க ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தவிர, ஐ. நா. வின் 24 வது மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் ஆரம்பித்திருக்கிறது. இந்த மாகாணசபைத் தேர்தல் கூட மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து காப்பாற்றும் ஒரு யுக்தி தான். ஒரு இனப்படுகொலையை மனித உரிமைகள் பிரச்சனையாக்கி இலங்கையில் தமிழர்கள் என்னும் ஒரு இனத்தையே சிங்களப் பேரினவாதத்துக்கு காவுகொடுக்காமல் எப்போது தமிழனை வாழவிடுவார்களோ!

மாகாணசபை தமிழர்களின் அரசியல் தேசிய அபிலாசைகளுக்கு தீர்வாகாது என்பதையும், தமிழர்கள் தொடர்ந்தும் சுயநிர்ணய உரிமைக்கான முயற்சிகளை தொடரவேண்டும் என்பதைஉம் கருத்திற்கொள்ளவேண்டியே இருக்கிறது. 


Image: Google. 

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

akka nala unmayana karuthai soli irukeregal

Rathi சொன்னது…

சொரூபன், இன்று தான் கவனித்தேன் உங்கள் கருத்தை. நன்றி :)