செப்டம்பர் 16, 2013

புலிகளின் நேர்மைஒருவரின் நேர்மை பற்றி அவர் நட்புகளிடம் கேட்காதே, அவர் எதிரிகளிடம் கேள் என்று நான் நினைப்பது உண்டு. ஈழவிடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மை பற்றி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அல்லது அராஜகத்தில் இயங்கும் இலங்கை ஊடகங்கள், இந்திய ஊடகங்கள், குறிப்பாக இந்து நாளேடு, சர்வதேச ஊடகங்களின் போலிப்பரப்புரைப் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளில் தங்களை அறியாமலே புலிகளின் நேர்மயை பேச நேரிட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. 

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரணம் குறித்த செய்திகளின் ஆதாரங்களை பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் Callum Macrae வின் கட்டுரையை இந்து நாளேடு Op-Ed. இல் வெளியிட்டு தன் ராஜபக்‌ஷேக்களின் விசுவாசத்தை கொஞ்சம் மடைதிருப்பியது. யூதர்களைக் கொலைசெய்ய உருவாக்கப்பட்ட தடுப்பு முகாம்களுக்கு 21ம் நூற்றாண்டில் இணையானதாக சாதாரணர்களால் கூடப் புரிந்துகொள்ளப்பட்ட உண்மையை இந்து நாளேடு அங்கே தமிழர்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள் என்று கூறிவந்ததை பாலச்சந்திரன் விடயத்தில் சனல் 4 போட்டுடைத்தவுடன் தேவதை வேடம் தரித்தது இந்து நாளேடு. 

சிங்கள பெளத்த ஆட்சியாளர்களுக்கும், சர்வதேச பூகோள அரசியலின் அஜெண்டாவுக்கு முண்டு கொடுக்கும் இந்திய ஆளும்வர்க்கம் மற்றும் அரசியல் பொம்மைகளுக்கும் தெரியும் புலிகளின் நேர்மை பற்றி. தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் சுதந்திரமானதும், கெளரவமானதுமான அரசியல் உரிமைகளுக்காகவே போராடினார்கள். அதனால் தான் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று புளகாங்கிதம் அடைந்த பின்னும் புலிகள் பற்றிப் பேசவும், அவர்கள் பற்றி போலிப்பிரச்சாரப் பாணியிலான கருத்துருவாக்கப் படைப்புகளை உருவாக்கவும் வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இவர்கள் மீண்டும், மீண்டும் தங்களையும் அறியாமல் நிரூபிக்க முயல்வது புலிகளின் நேர்மைக்குப் பின்னால் மறைக்கப்படும் தங்கள் சுயநல அரசியல் இலாபங்களின் கூட்டுமுயற்சி பற்றிய போலிக்கருத்துருவாக்கமே. 

இதன் அண்மைய எதிரொலி Madras Cafe என்கிற ஒரு இந்திய ஆளும்வர்க்கத்தின் பார்வையிலான ஈழம் பற்றி அல்லது புலிகள் பற்றிய போலிப்பரப்புரை திரைப்படம் என்பது செய்திகள் மற்றும் சமூகவலைத்தளக் கருத்தாடல்களின் வழி தெரிகிறது. வழக்காமாக ஈழம் பற்றிய படைப்புகள் என்றால் தவிர்ப்பதில்லை நான், பார்த்துவிடுவேன். இதைப் பார்க்க மனம் ஒப்பவில்லை. இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் அதற்குண்டான அரசியல் பிரச்சாரங்களின் ஆரம்பங்களும் தென்படவே செய்கிறது. படைப்புகளின் அடிநாதம் எதுவாயினும் அதைப் புரிந்து செயற்படவேண்டிய தேவை தமிழர் தரப்புக்கு உண்டு. 

ஆனால், படம் பார்த்த சிலரது விமர்சனப்பார்வை என்பது திரைக்கதையின் நாயகனின் பார்வையில் அவர் அவரது பிரதமரை இழந்திருக்கிறார் என்பது தானாம். அத்தோடு ஏன் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளையும், அட்டூழியங்களையும் மருந்துக்கேனும் காட்சிப்படுத்தவில்லை என்றும் எழுதியிருந்தார்கள். இதெல்லாம் தமிழகத்தின் செயற்பாட்டாளார்கள் கருத்தைக் கொண்டு நான் முன்மொழியவில்லை. சாதாரணர்களின் கருத்துகள் இவை. 

பிரதமருக்காய் ஒரு இனமும் அதன் விடுதலைப் போரும் காவுகொள்ளப்பட்டது எந்தவகையில் சேர்த்தி. இந்தியாவின் இன்னொரு பிரதமரின் மரணத்துக்குப் பின்னான அரசியல் கோபங்களை, இழப்பின் சூத்திரங்களை கருவாக்கி, கதைக்களம் அமைக்கலாமே!

இதுக்குப் பிறகு, தற்போது மிக அண்மையில் பார்த்தது, கேட்டது தமிழக ஓய்வுபெற்ற ஆட்சித்துறைப் பணியாளரான (IAS) பெண் அதிகாரியின் புலிகள் மீதான விமர்சனம். சிவகாமி பழனிமுத்து என்கிற ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி தன்னிடம் புலம்பெயர் தமிழர்கள் புலிகள் பெண் போராளிகளை தங்கள் பாலியல் தேவைகளுக்காக வைத்திருந்தார்கள் என்பது எவ்வளவு அபாண்டமான பொய். இவரின் கூற்றை ஆதாரமற்றதென அங்கிருந்த மற்றைய சிறப்பு விருந்தினர் ஒரிருவர் மறுத்தார்கள். அதன் பிறகு, பொய்குற்றச்சாட்டை புலிகள் மீது சுமத்தியவர் முகநூல் பக்கத்தில் ஒருவிதமான மன்னிப்பு போன்ற ஒரு நிலைத்தகவலைப் பார்க்க நேர்ந்தது. தன்னிடம் தக்க ஆதாரங்கள் இல்லாமல் தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாதாம். ஒரேயொரு தாழ்மையான கருத்து, புலிகள் இயக்கத்தின் பண்பொழுக்கம் பற்றி சர்வதேசமும் அறியும். வீணே இல்லாததுக்கெல்லாம் ஆதாரம் தேடி சோர்ந்துபோகாதீர்கள். 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவதூறு பேசியவர்களில் நீங்கள் முதலுமல்ல, கடைசியுமல்ல. இருந்தும், நடக்கவே நடக்காத ஒரு விடயத்தை நடந்ததாகச் சொல்லி அதற்கு ஆதாரம் தேடும் ஒரு ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் நேர்மைக்கு இதுபோன்ற சான்றுகள் தேவைதான்.  

இனிமே இவர் போன்றவர்கள் ஈழம்பற்றியோ அல்லது ஈழவிடுதலைக்காகப் போராடியவர்கள் பற்றியோ பேசி இழிவுபடுத்தவும் வேண்டாம். பிறகு, ஒப்புக்கு மன்னிப்பும் கேட்கவேண்டாம். குறைந்தபட்சம் உங்கள் மனசாட்சிக்காகவாவது நேர்மையாய்ப் பேசுங்கள். அப்பிடியே இன்னொரு விடயத்தையும் புரிந்துகொள்ளுங்கள் அம்மணி. ஈழத்தமிழர்கள் போராடுவது உங்கள் பாஷையில் 'Equal Status' க்கு அல்ல, சுயநிர்ணய உரிமைக்காக. 

சும்மா, சும்மா தமிழ உணர்வாளர்கள் மேல் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் இதை கவனித்தால் நல்லது. சிவகாமி பழனிமுத்து போன்றவர்களின் அநியாயமான பேச்சுக்கு தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பும் இல்லையென்றால் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொட்டுவார்கள் போல. 

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தங்கள் சார்பில் வேட்பாளராக தெரிவுசெய்த சி.வி. விக்னேஸ்வரன் சிங்களர்களும் தமிழர்களும் கணவன் - மனைவி போன்றவர்கள் என்கிற கூற்றும், மறுப்பும் என்று இந்தியாவின் இந்து பத்திரிகையும் அவரும் ஒருபுறம். நான் பத்து கேள்விகளுக்கு பதில் சொன்னேன் அவர்கள் இந்த ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தியிருக்கிறார்கள் என்று தமிழகத் தமிழர்களும் அமைப்புகளும் கணவன் - மனைவி விவாகரத்து செய்துகொள்ளுங்கள் என்று சொல்லக்கூடாது என்று கூத்து வேறு. ஆனாலும், ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கோரவில்லை, மாகாண சுயாட்சியே கோருகிறார்கள். அதற்கு தமிழ்நாட்டின் அறிவுரை ஏதும் தேவைப்படும் என்பது போல் பேசி மளுப்பி, ஒப்பேத்தியிருக்கிறார். ஏன் இப்பிடி! 

இவர்களைப் போல் அரசியல் படிப்பும் பட்டமும் இல்லாதவர்களின் சார்பில் கேட்கத்தான் தோன்றுகிறது. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ஈழத்தமிழர்களை! உங்களுக்கு இலங்கையின் 6வது திருத்தச்சட்டம் ஒரு பயம் என்றால் அதைவெளிப்படையாய் முன்பு எத்தனை தடவை ஒத்துக்கொண்டது போல் ஒத்துக்கொண்டு போகவேண்டியது தானே. இலங்கை அரசு எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது புலம்பெயர் தமிழர்களால், தமிழ்நாட்டு தமிழர்களால் என்றால் தந்தை செல்வாவையும் சேர்த்தே குற்றஞ்சொல்லலாமே. தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வாய் முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் சேர்த்தே புதைக்கலாமே. அங்கே இருக்கிற சாதாரணனுக்கு இருக்கும் நெருக்கடியே உங்களுக்குமா! பிறகெதற்கு மாகாணசபைத் தேர்தல். அதற்கு ஒரு பிரதிநிதி. புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்தமிழர்களை குற்றஞ்சொல்வது போல் ஏன் உங்களால் அமெரிக்காவையோ இந்தியாவையோ விமர்சிக்க முடிவதில்லை. 

புலிகள் கேட்டதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்கிறது என்று சிங்கள பெளத்த அரசின் ஆட்சியாளர்கள் கோபித்துக்கொள்கிறார்களாம். புலிகளா கேட்டார்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் போடு என்று. தந்தை செல்வா தீர்மானம் போட்டார். புலிகள் அதற்கு வடிவம் கொடுக்க தம்வரையில் முனைந்தார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின்  நேர்மையை சந்தேகிக்கவில்லை. ஆனாலும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு இனத்தின் பிரதிநிதிகளான உங்கள் அசமந்தமான பேச்சுகளும், மறுப்புகளும் கேட்கும் போதும், பார்க்கும் போதும் தான் புலிகளின் நேர்மையும் இழப்பும் இன்னும் ஆழமாய் தைக்கிறது மனதில். Image Courtesy: Google.


2 கருத்துகள்:

sorupan சொன்னது…

akka negal ovaru week um eluthuko naan unkada articals vedama padikeranan

Rathi சொன்னது…

நன்றி, சொரூபன்.