ஜூன் 04, 2013

எண்ணமும் எழுத்தும் இனப்படுகொலையும்

 
 
நவீன தொழில்நுட்ப தகவல் பரிமாற்று யுகத்தில் கணனியின் அறிமுகம் மற்றும் இணைய வசதி இருந்தால் அவர்கள் யாவரும் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்தவும், தம்மைச் சுற்றி நடப்பவைகளை, தம்மை பாதிப்பவைகளை, தம் எண்ணங்களை பகிரவும் முடிகிறது. உலகில் நீதியையும் நியாயத்தையும் நம்பும் சக்திவாய்ந்த மனிதர்கள் முதல் சாதாரணன் வரை இன்னும் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் தானிருக்கிறார்கள். அதேபோல், அநியாயம் அக்கிரமம் செய்பவனும் பேசுகிறான், எழுதுகிறான். அதை அதற்குத் துணைபோனவனின் அனுசரணையுடன்.
 
இலங்கையின் இயற்கை அனர்த்தம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ் விஜேசிங்க கனடா ரொரண்டோவில் 'Mirrored Images' என்கிற (அனர்த்த) கவிதைப் புத்தக வெளியிடப்பட இருப்பதாக செய்தி.

முள்ளிவாய்க்கால் தமிழனின் விதியான பின் எழுதியபடியே இருக்கும் தமிழ் எழுத்தாளர்களின் அக்கப்போருக்கு மத்தியில் இது ஒரு அரசியற்போர். இதற்கெல்லாம் எந்த முன்னோடி எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா தெரியாது. இதே ரஜீவ் விஜேசிங்க தான் முள்ளிவாய்க்கால் முடிவின் பின் தடுப்புக்காவல் முகாமில் சிங்களச்சிப்பாய்களுடன் நள்ளிரவு தாண்டி தமிழச்சிகள் கிரேக்க தத்துவம் பற்றி பேசுவார்களா இருக்கும். அல்லது சந்தோசத்துக்காகவோ, ஏதாவது காரியங்களுக்காகவோ தமிழச்சிகள் முகாமில் சிங்கள ராணுவத்தைப் புணர்ந்தவர்கள் என்றுரைத்தவன்.

இந்த கவிதை தொகுப்பில் ரஜீவ் விஜேசிங்க சொல்ல முற்படுவது எல்லாருக்கும் ஏதோ ஒன்று பொதுவா இருக்காம். சமூகமட்டத்தில் எல்லா அளவுகளிலும் இருக்கும் குரோதம் இந்தக் கவிதைகளில் வெளிப்படவே இல்லையாம். இந்த புத்தகத்தை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தூ சடங்கு ரீதியாகப் பெற்றுக்கொண்டாராம்.

தமிழர்களிடத்தில் பகையே இல்லை. இலங்கை சிங்களப்பேரினவாதம் இனப்படுகொலை செய்யவே இல்லை என்று இன்னும் எத்தனை நாட்டுக்கு சொல்லுவார்கள்! தமிழர்களை இனப்படுகொலை செய்ததை மறுத்துக்கொண்டே இன்னும் மேலும், மேலும் திட்டமிட்ட இனப்படுகொலையை செய்துகொண்டே இருக்கிறவர்களை ஆதரிப்பது சர்வதேச அரசியல் நடைமுறையாய்ப் போனது. இனப்படுகொலையை மறுப்பவன் புத்தகம் வெளியிட்டு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் அதைப் பெற்றுக்கொள்வதும் என்னே ஒரு சிறப்பு!!

துருக்கி என் பார்வையில்.....

 
அருந்ததி ராய் எழுதிய ஒரு கட்டுரை Listening to Grasshoppers, படித்ததில் அறிமுகமானது ஒட்டமன் சாம்ராஜ்யம். அதன் பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக அது குறித்து படித்தபோது ஃபுக்குயாமாவின் ஆராய்ச்சியில் தெரிந்துகொண்டது; அன்றைய இஸ்லாமிய ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் தலைநகராய் விளங்கியது இஸ்தான்புல். இன்று அது துருக்கியின் மிகப்பெரிய ஒரு நகரம். கிறிஸ்துவரான சிறுவர்களை அன்றைய தங்கள் சாம்ராஜ்யத்துக்குள் உட்பட்ட பால்கன் பகுதிலிருந்து அடிமைகளாக்கி, அவர்களுக்கு தங்கள் சுய அடையாளங்களை மறக்கவைத்து தங்கள் சாம்ராஜ்யத்தின் ஆட்சி அதிகார அலகுகளாக நியமித்துக்கொண்டது; அதேபோல் பால்கன் பகுதி மற்றும் தெற்கு ரஷ்யாவிலிருந்து பெண்களைக் கொண்டுவந்து மணமுடித்தும், திருமண உறவுமுறையற்ற வழிகளில் (எனக்குத் தெரிந்த தமிழ்ப்பதம் தாசி) தங்கள் அடிமைகளாக ஆக்கியும் கொண்டார்கள்.  பெண்களை தாசிகள் ஆக்கினார்கள் என்று இன்னும் எத்தனை வரலாற்றில் படிக்கவேண்டுமோ! இது ஒரு நீண்ட வரலாறு. நிறைய சுவாரஸ்யமான தகவல்களை கொண்டது. விரிவாக எழுதினால் பல பதிவுகள், சர்ச்சைகள் தான் மிஞ்சும்.
 
18ம் நூற்றாண்டுகளில் உலகஜனநாயகத்தின் வரைமுறை விழுமியங்களிலிருந்து துருக்கி மாறுபட்டு, வேறுபட்டு நிற்கிறது என்றுணர்ந்தபோது ஒட்டமன் சாம்ராஜ்யத்துக்கு அரசபணியாற்றிய Janissaries என்பவர்கள் நெருப்புமூட்டிக் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதும் வரலாறு. அதன்பின்னர், தங்கள் ராஜ்யத்தை நடத்த நவீன ஐரோப்பிய வடிவிலான ராணுவத்தை கட்டியமைத்தார்களாம். நிச்சயம் அறிந்துகொள்ள சுவாரஸ்யமானது ஒட்டமன் சாம்ராஜ்ய வரலாறு.
 
இதே துருக்கி தான் 1915ம் ஆண்டு ஒன்றரை மில்லியன் அல்பேனியர்களை இனப்படுகொலை செய்ததாக அருந்ததி ராய் எழுதியிருந்தார் சாட்சியங்களின் மற்றும் உலக வரைவிலக்கணங்களின் படி.
 
மதம், இனம், நிறம் என்கிற பெயரால் மறைமுகமாகவும் நேரடியாகவும் வரலாற்றுப்பிழைகளை இழைத்துவிட்டு மீண்டும் சப்பைக் கட்டு கட்டிக்கொண்டிருப்பவர்களும், அதற்கு துணைபோகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதோ, இன்று மீண்டும் துருக்கியில் ஒரு மக்கள் கலகம் அந்நாட்டின் பிரதமரின் அடிப்படைவாதப் போக்குகளுக்கு எதிராக. பூங்காவை மாற்றி ஷாப்பிங் மால் கட்டுவது, அருங்காட்சியகம் அமைப்பது, நகரிலுள்ள வரலாற்று சின்னத்துக்கு ஒட்டமன் சாம்ராஜ்ய சுல்தானின் பெயரைச் சூட்டுவது, மதுப்பாவனை குறித்த கட்டுப்பாடுகள், இஸ்லாமிய அடிப்படைவாத மாற்றங்களை திணிப்பது என்று ஒவ்வொரு ஊடகமும் அந்நாட்டின் பிரதமர் பற்றி விதம்விதமாக காரணங்களைச் சொன்னாலும் மக்கள் தற்போதைய பிரதமந்திரிக்கு எதிராக கிளர்ந்துள்ளார்கள் என்பதை மட்டும் எல்லாரும் ஒருபடச் சொல்கிறார்கள்.
 
தற்காலத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைத்தனங்களின் அடிப்படை எதுவாக இருக்கும் என்று யோசித்தால் அதுக்கு ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் பாதிப்பும் இருக்குமோ என்றும் யோசிக்கத்தோன்றுகிறது. நிகழ்காலத்தின் அரசியல் என்பதை அறியமுற்பட்டால் கடந்தகால வரலாறும் நினைவுக்கு வரவே செய்கிறது. காலங்கள் மாறினாலும் வரலாறு மீண்டும், மீண்டும் ஏதோவொரு அரசியலுக்காய் புதுப்பிக்கப்படுகிறது. இன்று துருக்கியில் ஜனநாயகம் வளர்கிறது என்றும் ஆய்வாளர்கள் ந்ம்பிக்கை வெளியிடுகிறார்கள்.  
 
எது எப்படியோ அடக்குமுறையாளர்கள் வீழ்வார்கள் என்கிற நம்புக்கையுடன் நான், நாம்.  
 
Image: Google