மே 15, 2013

முள்ளிவாய்க்கால் - முடிவில்லா அரசியல்!

 
 
நம்பிக்கை, இதை மட்டுமே ஒவ்வொரு வருடமும் மே மாதம் வரும்போதும் முன்பை விட அதிகமாய் வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். மே 18 வரும்போதெல்லாம் கொலைகாரர்கள் எம் இனத்தை மரணயாத்திரை போகவைத்ததையே மறுபடியும், மறுபடியும் நினைந்தாக வேண்டிய கொடுமை. இனவழிப்பின் சூத்திரதாரிகளிடமே தமிழர்களை விடுதலைக்காய் கையேந்து என்கிறது ஒரு அறிவுஜீவிக்கூட்டம். தமிழீழம் என்பதையே மறந்து விடுங்கள் என்கிறது அமெரிக்கா, இந்தியா, பிரித்தானிய என்கிற சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களை அனுசரிக்கும் இன்னொரு தரப்பு. எங்களின் பறிக்கப்பட்ட வரலாற்று இறையாண்மையை இன்று இனப்படுகொலைக்குப் பின் மீண்டும் திருப்பிக் கேட்கிறோம் என்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உரத்துப் பேச ஒரு தலைமை, பிரதிநிதித்துவம் இல்லாத நிலைமை தான் இன்னமும் தமிழர்களுக்கு.

மண்ணின் நிலவரங்களோ இன்னுமின்னும் கலவர நிகழ்வுகளாகவே சிங்கள பெளத்த அரசால் அரசியலாக்கப்படுகிறது. வடக்குமாகாணசபைத் தேர்தல் இழுபறி. அதில் தமிழர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்பதை விடவும், தமிழர்களின் தாயகபூமியான வடக்கிலும் சிங்கள பெளத்த அரசே வென்று தமிழர்களின் மனங்களை வென்றுவிட்டோம் என்று சர்வதேசத்துக்கு காகிதங்களில் காட்டுவார்கள். பிறகென்ன, தமிழர்களின் ஒரே தலைவன் தான் என்று ராஜபக்‌ஷேவும் மார்தட்டுவான். இதற்குத்தானா தமிழன் போராடினான்! தமிழர்களின் தாயகத்தின் ஒருபகுதியான கிழக்கும் கூட இலங்கை அரசு - தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்த விரும்பாத முஸ்லிம் அரசியல் சார்ந்தவர்களின் கூட்டுமுயற்சியில் சின்னாபின்னப்படுகிறது. தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களிலேயே சிங்களர்கள், முஸ்லிம்கள் என்று குடிவைக்கப்படுவதை தடுக்கும் தமிழர்களின் போராட்டம் பரிதாபத்திற்குரியது. சிங்களராணுவத்தின் முழுப்பாதுகாப்புடன் மக்கட்தொகை கட்டமைப்பை, தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மாற்றியமக்க குடியேற்றப்படும் சிங்களர்களை சொந்தமண்ணில் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு ஒரு பேரினவாத அரசநிர்வாகத்தில் ஆட்சிக்குப் பணியும் நீதி நிர்வாகம். இதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது ஜனநாயகம் கற்றுத்தரும் கனவு. இதில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கும், ஜனநாயக விழுமிய பாரம்பரியத்துக்கு பங்கம் நேராமல் ராஜபக்‌ஷேக்களும் ஜனநாயகவாதிகள் தான் என்று தமிழர்களின் மனங்களை வெல்லும் அரசியல் பகற்கனவு.

வடமாகாணசபைத்தேர்தல் குறித்த அரசின் பயம் காரணமாக ஊடகசுதந்திரம் தமிழர்கள் பகுதியில் முற்றுமுழுதாக நசுக்கப்படுகிறது. உதயன் பத்திரிகை அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் வரலாற்றுத் தொடர்கதை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வீடுபுகுந்து தாக்குதல் என்கிற தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தபவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்கிறது. முற்றுமுழுதாக ராணுவக்கட்டுப்பாட்டில் 6-7 தமிழர்களுக்கு ஒரு சிங்கள ராணுவச்சிப்பாய் என்ற விகிதத்தில் இருக்கும் மண்ணில் யார் அவர்களையும் மீறித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று தெரியாது விசாரிக்கிறோம் என்கிற பேரினவாத அரசு. இப்படி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தலைநகர் வந்து அமெரிக்க, இந்திய தூதரகங்களில் சொல்லி அழுதாலும் நிலைமகளில் ஏதும் முன்னேற்றம் கிடையாது.
 
களத்திலும் புலத்திலும் தமிழர்கள் அரசியல் தலைமைகளும் பிரதிநிதித்துவமும் தலைகீழ் விகிதங்களாய் புரியாமலே செயற்படுகின்றன, நகர்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்சியாய் பதிவது பற்றி தமிழ் அரசுக் கட்சி காட்டும் பிடிவாதம் தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்து மட்டுமல்ல, சொந்தமண்ணில் சோற்றுக்கும் அல்லாடும் தமிழர்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலத்தை காட்டுமா என்கிற கேள்விக்கு யாரும் உறுதியான பதில் சொல்லக்காணோம். மன்னார் ஆயர் கூட இந்தப் பூனைகளுக்கு மணிகட்டும் பொறுப்பை எடுத்து ஏதோ செய்ய முயன்றாலும் திக்கொன்றாய் இழுப்பது மட்டுமன்றி இப்போது புதிதாய் தமிழ் தேசிய சபை என்கிற அமைப்பின் உருவாக்கம் பற்றிய கருத்துருவாக்கம் உலவுகிறது. எந்த அரசியல் நகர்வு என்ன விளைவுகளைக் கொண்டுவரும் என்கிற எதிர்வுகூறல்களுக்குப் பதில் இவர்களின் செயற்பாடுகளை செய்தியாகப் பார்ப்பதும், வேடிக்கை பார்ப்பதுமே இப்போதைக்கு செய்யமுடிகிறது. இதில் புதிதாய் எந்த அமைப்பும் என்ன சாதிக்கப்போகிறார்கள். தமிழர்களிடம் ஒற்றுமையை என்ன அமைப்பு வைத்தா உருவாக்கமுடியும். கொத்துக்கொத்தாய் உயிர்களைக் காவுகொடுத்த பின்பும் திருந்தாத இனம் வேறெவ்வழியில் திருந்தும்.

புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவது பற்றியும் பேசுகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களின் அரசியல் துறையும் இருந்தவரையில் தேசம், தேசியம், தன்னாட்சி என்கிற தமிழ்த் தேசியம் அமைப்பின் வடிவில் உயிர்ப்போடு இருந்தது. அதற்குரிய அர்த்தமான செயற்பாடுகளும் நடந்தேறின. தேசியம் என்பதற்கு கருத்துருவாக்கம் கொடுக்கும் ஒரு அமைப்பு இல்லாது போனால் அது அடிபட்டுப் போகும் ஆபத்து இருக்கிறது. அதன் ஒரு வடிவமாகத்தான் புலத்தில் கூட நாடு கடந்த தமிழீழ அரசு என்கிற ஒரு அமைப்பின் வடிவத்திற்கு ஜனநாயக வழியில் தமிழர்கள் ஆதரவு வழங்கினார்கள். நாடுகடந்த தமிழீழ அரசு அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு முன் மக்கள் போராட்டம் நிகழ்த்திய ஒன்றிரண்டு நிகழ்வுகளைத் தவிர வேறேதும் எனக்கு நினைவில் வரவில்லை அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்து. தமிழ் தேசியம் என்கிற ஒன்றையே அமைப்பின் வழி வாழவைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், சுயநிர்ணய உரிமைகளை முன்நகர்த்தும் விதமாக தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையாவது மக்களுக்கு ஒரு அமைப்பு என்கிற முறையில் விளக்கலாம்.
 
இருட்டில் வழியின்றி தவிப்பவனுக்கு ஒளியாய் இருப்பது இப்போதைக்கு தமிழக மாணவர் போராட்டம் மட்டுமே. தமிழகத்தின் யார் பெரிசு அரசியல், ஜாதிக் கட்சி அரசியல் தாண்டி மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை இந்திய ஊழல் அரசியல் தாண்டியும் பேசவைப்பவர்கள் தமிழக மாணவர்கள். வியாபார, சர்வதேச நிகழ்ச்சி நிரல் அரசியலுக்குள் சிக்காமல் மாணவர்கள் போராட்டம் வீச்சம் பெறுமாயின் அதுவும் ஈழத்தமிழர்களுக்கான விடுதலையின் ஒரு படி முன்னேற்றமே.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுவது திட்டமிடப்பட்ட இனப்படுகொலையே என்பதை ஒட்டுமொத்தமாக உலகத்தமிழர்கள் ஒன்றுபட்டுச் சொல்லாவிட்டால் ஈழத்தமிழினம் அதன் நிலம், வாழ்வு என்று அத்தனையும் இழந்து இல்லாதொழிக்கப்படும் அபாயம் உண்டு. அதை உருப்படியாய் இந்த மே 18 நாளில் உலகிற்கு சொல்லுவதோடு எங்களுக்குள்ளும் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்வது நல்லது.
 
இதுவரை ஈழத்தின் விடுதலையில் சிங்கள பெளத்த ராணுவ இரத்த வெறியாட்டங்களில் பலியாகிய ஒவ்வொரு தமிழனின் உயிருக்கும் இலங்கையின் பேரினவாதிகள் பதில் சொல்லும் காலம் வரட்டும். அதுவரை அனைவருக்கும் என் அஞ்சலிகள்.