மார்ச் 06, 2013

அமெரிக்கத் தீர்மானமும், ஐ. நா. வும் மற்றும் பலரும்!!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் இலங்கை குறித்த நிகழ்ச்சி நிரலில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது அமெரிக்காவால் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் இரண்டாம் பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
 
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் நான்கின் ஆவணப்படமும் தமிழர் தரப்புக்கு கொஞ்சம் வலுச் சேர்ப்பதாகவே இருக்கிறது. கூடவே, தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் சிறு அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் என்பனவும் நடைபெறுகின்றன. தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், மற்றைய சிறிய அமைப்புகளின் இலங்கை குறித்த கொள்கைகளும், போராட்டங்களும் வேறுபாடுடையதாகவே இருப்பதாய் காணப்படுகிறது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு அமெரிக்கா கொண்டுவரவிருப்பதாய் சொல்லப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரி என்பதாகும். ஆனால், சிறிய அமைப்புகளின் கோரிக்கையானது சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையும், சுயநிர்ணய உரிமைக்கான ஐ. நா. தலைமியிலான வாக்கெடுப்பும் என்பதாகும்.
 
இதற்கிடையே ஐ. நா. வின்  Accountability Assessment Observation Project தொடர்பான கண் துடைப்பு அறிக்கை ஜப்பானின் பிரதிநிதி தலைமையில் ஐ. நா. செயலாளரிடம் கையளிப்பு நடைபெற்றது. அது ஐ. நா. செயலுருக்கு திருப்தியாம். ஆனால், அது இன்றுவரை வெளியிடப்படவில்லை. 
 
மறுபுறம், ஐ. நா. செயலருக்கு ஐ. நா. வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்க ஐ. நா. வின் அறிக்கையிலேயே போர்க்குற்றம் புரிந்திருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சவேந்திர சில்வா அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி அன்ரொனின் ஸ்கேலியாவுடன் கூட படம் பிடித்தும், அமெரிக்க கடற்படைக்கு முன் பேச்சு நிகழ்த்தியும் தன் நெருக்கத்தை காட்டிக்கொண்டிருக்கிற அரசியல் காட்சிப்பிழைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
 
இதைவிட அமெரிக்காவின் முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர் மைக்கேல் எஸ். போஸ்னர் ஓய்வுபெறும் தறுவாயில் இலங்கையைப் பொறுத்தவரை அமெரிக்க ஜனாதிபதி வெற்றியை சந்தித்தார் என்று பேசியதாக இன்னர் சிட்டி ப்ரஸ் குறிப்பிட்டிருக்கிறது. 2009 இல் நிகழ்ந்த பாரிய இனப்படுகொலைக்கு யாரும் பொறுப்புக் கூறவேண்டிய தேவையை கடந்தே எல்லாம் நிகழ்ந்தேறுகிறது. ஒரு புறம் சவேந்திரா சில்வா, பாலித ஹோஹனவுக்கும் அமெரிக்கா உறவு. கூடவே தமிழர்களுக்கும் மனித உரிமைகள் சபயில் காவல் என்கிற அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து தமிழனுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்பது ஈழத்தமிழ் பச்சைப்பிள்ளைக்கும் தெரியும்.
 
இந்த அமெரிக்காவின் முயற்சியில் தான்  இத்தீர்மானம் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஐ. நா. இரண்டினதும் கண்களை மூடிக்கொண்டே யானை தடவும் கதைகளை தவிர்த்து, இந்த தீர்மானம் பற்றி தமிழகம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்திய பிரதமர் என்போர் அவரவர் கருத்துகளோடு செயலாற்றுகிறார்கள், பேசுகிறார்கள்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிறேமச்சந்திரன் சொல்வது இதுவரை வரைவுத் தீர்மானத்தின் வார்த்தைகள் வரையில் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு திருப்தியாய் இல்லை. அது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இல்லை என்கிறார். கூடவே, சுயாதீன, சர்வதேச விசாரணையே தேவை எனவும் வலியுறுத்துகிறார்.
 
தமிழக அரசியல் கட்சி சார்பில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதும், அந்த தீர்மானத்தில் இடம்பெறும் வார்த்தைகளின் அடிப்படையிலேயே இந்தியா அதற்கான ஆதரவு குறித்து தீர்மானிக்கும் என்பதாய் இந்திய பிரதமர் கூறுவதாய் செய்திகள் சொல்லுகின்றன. இடையே சு. சுவாமி வேறு இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலரை சந்தித்துவிட்டு, பிறகு எங்கே போனார்....!!
 
எந்த தீர்மானமும் அழிந்துகொண்டிருக்கும், அவதிப்பட்டுத் தத்தளிக்கும் ஈழத்தில் வாழ்பவருக்கு எந்த விடிவையும் கொண்டுவருமா என்பதே எதிர்பார்ப்பு என்றாலும், அதன் யதார்த்தம் கசப்பாகவே இருக்கும்.
 
 
படம்: கூகுள்.
 

3 கருத்துகள்:

kaliya raj சொன்னது…

ரதி நலமா ...
எல்லாம் காட்சி பிழையே ரதி. எந்த தீர்மானம் போட்டு என்ன செய்யபோகிறார்கள் அழிந்தவையும் இழந்தவையும் திரும்பவா போகிறது.

Rathi சொன்னது…

நலம், தவறு.

இழந்தைவகள் திரும்பாது. ஆனால், இழந்தைவகளுக்கான நியாயமும், நீதியும் கிடைக்கவேண்டுமெ.

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!அமெரிக்க தீர்மானத்தின் வரைவு நகலை காண நேர்ந்தது.தமிழர்கள் எதிர்பார்க்கும் தேவைகளோ அல்லது சொற்பதங்களோ இல்லையென்ற போதிலும் இந்தியா போன்ற இலங்கை நட்பு நாடு என்பவைகளுக்கு மத்தியில் அமெரிக்க தீர்மானங்கள் சிறு சல சலப்பையாவது உருவாக்குகின்றதென நினைக்கிறேன்.இன்னும் கால தவணைகள் கொடுத்தாலும் கூட இலங்கை அரசுக்கு தீர்வுகளுக்கான மனமோ உறுதியில்லையென்பதால் மீண்டும் ஒரு தீர்மானத்தில் இலங்கையின் முகத்திரை இன்னும் கிழிவதற்கான வாய்ப்பே அதிகம்.புவியியல் பொருளாதார அரசியல் தமிழர்களுக்கான கனவுகளை இன்னும் நீட்டிக்கவே செய்கிறது என்பதில் வருத்தமே.