மார்ச் 30, 2013

அமெரிக்காவும் தமிழ் சினிமா நடிகரும்

 
 
உலகத்தின் ஊடகங்களின் பக்கங்களில் எப்போதுமே ஏதோவொரு செய்தி பரப்பரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வல்லவன் மட்டும் வாழ வழிசமைக்கும் செய்திகளை எழுதி, இயக்கி அவர்கள் வசதிக்கேற்றாற்போல் மக்களிடம் ஒப்புதலும் வாங்கி அரங்கேற்றப்படும் நாடகங்கள் அரசியல் நீதியாகிறது. இப்போது பரபரப்பாக தலையங்கம் தீட்டப்படும் செய்தி வடகொரியா அமெரிக்கா மீது ஆயுதங்களை ஏவுமா, தென்கொரியா மீது போர் தொடுக்குமா என்பதே. இது காலங்காலமாக அமெரிக்கா நடத்தும் நாடகங்களில் ஒன்று.

இந்த நாடகங்களைக் கடந்து ஈழம் தொடர்பாக அமெரிக்கா நடத்திய நாடகத்தின் இன்னொரு அங்கம் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானம் என்கிற வடிவில் அண்மையில் நடந்தது யாவரும் அறிந்ததே. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவது என்கிற கண் துடைப்புடன் நின்றுவிடாமல் போர்க்குற்ற விசாரணை செய்ய சுயாதீனமான சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்கிற தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப்போனது. அதை நீர்த்துப்போக வைத்தது இந்தியா என்பது அவுஸ்திரேலியப் பத்திரிகை முதல் அமெரிக்கப் பத்திரிகை ஊடகங்கள் வரை உறுதிப்படுத்தியது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள், ராணுவ, ராஜ்யரீதியான தந்திரங்கள் உலகிற்கு புதிதும் அல்ல. இலங்கை மீதான தீர்மானத்தை மனித உரிமைகள் சபையில் கொண்டுவந்த போது அமெரிக்காவின் கடந்தகால ஆக்கிரமிப்புக் கொள்கைகளை திரும்பிப் பார்க்க வைத்தது. இதில் அடங்கும் சில நாடுகள் அல்லது மக்கள் போராட்டங்கள் கேர்டிஷ் (Kurdish) மக்களின் போராட்டம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடுகள், கொசோவோ, கிழக்கு திமோர் போன்றன.

கேர்டிஷ் மக்களின் தனிதேசத்துக்கான போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. ஒட்டமன் சாம்ராஜ்யத்திலிருந்து பிரிந்து ஈராக், சிரியா மற்றும் துருக்கி என்று நாடுகள் உருவாக இவர்கள் மட்டும் இந்த நாடுகளில் எல்லாம் சிறுபான்மையாய் வாழநேரிட்டது இன்றுவரை தொடரும் வரலாறு. துருக்கி, ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இவர்கள் சிறுபான்மையாக்கப்பட்டு அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
1990 களில் துருக்கி, ஈராக் இரண்டு நாடுகளிலும் அவர்கள் தாக்கி அழிக்கப்பட்டபோதும் துருக்கி அவர்களை அடக்குகிறது என்கிற மென்மையான போக்கையும், அதேவேளை சதாம் ஹூசேன் அமெரிக்காவின் எதிரியாக ஆகிவிட்ட நிலையில் கேர்டிஷ் மக்களை சதாம் இனப்படுகொலை செய்ததாகவும் அமெரிக்காவால் கூறப்பட்டது. அதே 1990 களில் துருக்கி அரசுக்கு கேர்டிஷ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்புக்கு கிளிண்டன் அரசு உதவிகள் செய்த்தாக Edward S. Heman & Noam Chomsky, Manufacturing Consent இல் குறிப்பிடுகிறார்கள். கொசோவோவின் அல்பேனியர்கள் சேர்பியர்களால் நேட்டோ குண்டுவீச்சுக்கு முன்பு கொல்லப்பட்டவர்கள் 2000 மும், அதன்பின்னர் சேர்பியர்களால் கொல்லப்பட்டவர்கள் 3000 வரையிலானவர்களே என்றாலும் அதை இனப்படுகொலை என்று வரையறுத்து கொசோவோவுக்கு தனிநாடும் அங்கீகரிக்கப்பட்டது. இத்தனைக்கும் கொசோவோ அல்பேனியர்களை விட கேர்டிஷ் இனமக்கள் மிக அதிகளவில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் அழிவு ஒட்டுமொத்தமாக இனப்படுகொலையாக கொள்ளப்படவில்லை. இந்தோனேசியா கிழக்கு தீமோர் மக்கள் மீதும் இதேபோல் அடக்குமுறையை, வன்முறையை ஏவிவிட்டு அம்மக்கள் இனப்படுகொலையில் அழிந்துகொண்டிருக்கும்போதும் அதை இனப்படுகொலை என்று அமெரிக்கா ஒருபோதும் சொன்னதில்லை. சர்வதேச அழுத்தத்திற்குப் பின்னரே அவர்களுக்கும் தனியே பிரிந்துசெல்ல வாக்கெடுப்பு நடத்தி கிழக்கு திமோர் பிரிந்து சென்றது. (Edward S. Herman and Noam Chomsky, Maufacturing Consent (2002))

இந்த நாடுகள் அமெரிக்காவின் நேர்மையற்ற அரசியல் சாணக்கியங்களைக் கடந்தும் தமக்குரிய சுதந்திரத்தை பெற்றிருக்கின்றன என்கிற நம்பிக்கை தான் ஈழத்தின் விடுதலையிலும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்தியா ஈழத்தின் விடுதலைக்கு குறுக்கே நின்றாலும், என்றோ ஒரு நாள் ஈழத்தின் தேவையை உணரும் காலம் வரும். அமெரிக்காவின் நேர்மையற்ற அரசியலும், இந்தியாவின் கள்ளமெளனமுமே ஈழத்தமிழர்களின் இனவழிப்பு தொடரவும் காரணங்களாகிப் போகின்றன என்கிற யதார்த்த உண்மைகளையும் தவிர்க்க முடியவில்லை.
 
இனப்படுகொலை என்கிற வார்த்தையை மனித உரிமைகள் சபையில் இலங்கையின் மீது கொண்டுவந்த தீர்மானத்தில் தவிர்த்து இன்னும் சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை மேலும், மேலும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு தள்ளுவதும், தமிழர்களுக்குச் சொந்தமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக்குடியேற்றங்களை உருவாக்கி மக்கட்தொகை கட்டமைப்பை மாற்றி தமிழர்களின் அரசியற் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதும், தமிழர்களின் கல்வியை பறிப்பதையும் ஊக்கப்படுத்தவும் கால அவகாசம் கொடுக்கிறது அமெரிக்கா. தவிர, எப்போதும் ஈழத்தின் வடக்கு பற்றி மட்டும் இவர்களின் அறிக்கைகள் பேசும். கிழக்கில் சிங்களராணுவம் பற்றியோ, தமிழர்கள் பகுதிகளில் சிங்களகுடியேற்றங்கள் பற்றியோ மறந்தும் வாய் திறப்பதில்லை.

அது ஒருபுறமிருக்க, அண்மையில் தமிழ்நாட்டில் உருவான மாணவர் எழுச்சி குறித்து நிருபர்கள் கேள்வி கேட்கப்போக நடிகர் கமல்ஹாசன் தவிர்க்கமுடியாமல் சில பதிலகளை சொல்லியிருந்தார். மாணவர் எழுச்சிக்கு ஆதரவை தெரிவித்துப் பேசியது போல் தான் தோன்றியது. ஆனாலும் அவர் எப்போதும் போல ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குறித்து நேரடியாய்ப் பேசுவதை தவிர்த்தது நகைச்சுவையாகவே பட்டது எனக்கு. ஈழத்தமிழர்கள் தங்களுக்கான நியாயமான சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்றோ; ஈழத்தமிழச்சிகள் கொடூரமான முறையில் சிங்களப்படையால் வெறியோடு சீரழிக்கப்பட்டார்கள் அதற்காக மனிதாபிமான அடிப்படையில் குரல்கொடுக்கலாம் என்றோ சொல்லவில்லை. சுற்றிச் சுற்றி முசோலினியின் மனைவிக்கு நிகழ்ந்ததெல்லாம் கதையாய் சொல்லிக்கொண்டிருந்தார். முசோலினியின் மனைவியின் மானத்திற்காய் வருந்தியவர் மறந்தும் ஒரு 12 வயது சிறுவனின் படுகொலை குறித்து பேசமாட்டார்.
 
நடிகர் கமல் அவர்களின் கூற்றுக்கு முக்கியம் கொடுத்துப் பேசவது எரிச்சலே என்றாலும் நிஜ உலகிலும் இவர்களின் சாகச நடிப்பை பேசாமல் கடந்து போகமுடிவதில்லை. தமிழக மாணவர்களின் எழுச்சியே ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே. ஒருவேளை ஏப்ரல் மாதம் 2ம் திகதி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாய் திரையுலகம் அடையாள உண்ணாவிரதம் இருந்து, அதற்கு கமல் தன் பங்களிப்பை வழங்கினாலும் இப்படித்தான் பொதுவாக ஏதும் பேசிவைப்பார். நீங்க பேசுங்கள் கமல். உங்கள் படங்களைப் புறக்கணிப்போம் என்றெல்லாம் புலம்பெயர் தமிழன் சொல்லமாட்டான்.
 
ஈழத்தமிழர்களும் உலகில் எந்தவிடுதலைப் போராட்டத்திற்கும் குறையாமல் ஒரு விடுதலைப்போராட்டதை வழிநடத்தியவர்கள் தான். அரசியல், தொழில்நுட்பம் அறிந்தவன் தான். ஈழத்தமிழர்களை எப்போதும் காமெடி பீஸ்களாகவே பார்க்கும் உலகநாயனுக்கு அதெல்லாம் தெரியாது, புரியாது என்றே கடந்து செல்வோம். இவர் ஒருவருக்காக ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலக உண்ணாவிரத்தையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை. நடிகர் சிம்பு மாணவர்களின் உண்ணாவிரதம் ஆரம்பித்த காலத்திலேயே தான் ஒரு தமிழனாக அவர்களுக்கு தன் தார்மீக ஆதரவை தெரிவித்ததையும் நினைக்கவேண்டியுள்ளது.
 
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக அமெரிக்காவோ, இல்லையென்றால் கமல் போன்றோரோ குரல்கொடுக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவு. எப்படி கிழக்கு திமோர், தெற்கு சூடானுக்கு விடுதலைக்கான சர்வதேச அழுத்தம் உருவானதோ, அதேபோன்ற அழுத்தங்கள் உருவாக்கப்படவேண்டும் தமிழர்களால். அமெரிக்கத் தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு விடிவைக் கொண்டுவராது என்பது ஈழத்தின் குழந்தைக்கும் தெரியும்.
 
Image: Google.

8 கருத்துகள்:

kaliya raj சொன்னது…

"இந்தியா ஈழத்தின் விடுதலைக்கு குறுக்கே நின்றாலும், என்றோ ஒரு நாள் ஈழத்தின் தேவையை உணரும் காலம் வரும். அமெரிக்காவின் நேர்மையற்ற அரசியலும், இந்தியாவின் கள்ளமெளனமுமே ஈழத்தமிழர்களின் இனவழிப்பு தொடரவும் காரணங்களாகிப் போகின்றன என்கிற யதார்த்த உண்மைகளையும் தவிர்க்க முடியவில்லை"

ஈழத்தின் தேவையை இந்தியா அந்நாள் எந்நாளோ ரதி....இந்தியாவின் கள்ளமௌனம் வெட்கப்படுகிறேன்.

வேர்கள் சொன்னது…

சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த புதியதலைமுறை தொலைக்காட்சி இன்று அதிகார மையத்தின் அழுத்தத்திற்கு கட்டுப்பாட்டு தனது வேகத்தை குறைத்துகொண்டது
காலத்தின் தேவைகருதியும்,வருங்கால தலைமுறை தெரிந்துகொள்ளவும் இதுபோன்ற பதிவுகள் அவசியமான ஒன்று

உள்ளங்கை நெல்லிக்கனிபோல களநிலவரங்களை விளக்கியுள்ளீர்கள்

நன்றி ரதி

Rathi சொன்னது…

தவறு, இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் தன் தவறுகளை உணரும் நாளில்....! இந்தியாவின் கள்ள மெளனம் வெட்கப்பட அல்ல வேதனைக்குரியது.

Rathi சொன்னது…

பாலு, தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல, ஐ.நா. விலிருந்து செய்திகளை வெளியிடும் Inner City Press ஊடகமும் இலங்கை குறித்த செய்திகளை வெளியிடுவதற்காக மிரட்டப்படுகிறது. இந்த இணைப்பில் உள்ளது விவரம்.

http://www.innercitypress.com/sri1uncaturtle033013.html

இலங்கை என்ன அவ்வளவு பலம் வாய்ந்த நாடா!!!

Bala subramanian சொன்னது…

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக அமெரிக்காவோ, இல்லையென்றால் கமல் போன்றோரோ குரல்கொடுக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவு. எப்படி கிழக்கு திமோர், தெற்கு சூடானுக்கு விடுதலைக்கான சர்வதேச அழுத்தம் உருவானதோ, அதேபோன்ற அழுத்தங்கள் உருவாக்கப்படவேண்டும் தமிழர்களால். அமெரிக்கத் தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு விடிவைக் கொண்டுவராது

Avargal Unmaigal சொன்னது…

//அமெரிக்காவின் நேர்மையற்ற அரசியலும், இந்தியாவின் கள்ளமெளனமுமே ஈழத்தமிழர்களின் இனவழிப்பு தொடரவும் காரணங்களாகிப் போகின்றன என்கிற யதார்த்த உண்மைகளையும் தவிர்க்க முடியவில்லை.///

மிக மிக உண்மைகள் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் இந்தியன் என்று சொல்ல வெட்கப்டுகிறேன் & வேதனையும் படுகிறேன் தோழி

Rathi சொன்னது…

பால சுப்ரமணியன், நான் சொன்னதையே பிரதிபலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

Rathi சொன்னது…

அவர்கள் உண்மைகள், ம்ம்....