மார்ச் 15, 2013

எத்தனைமுறை திரும்பி, திருப்பி பார்க்க..!

பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஒரு தீர்வு கிடைக்காமலே, மறுக்கப்பட்டுகொண்டே இருக்கும் நியாயத்தை குறித்து யோசிக்கும் போது அது குறித்த வரலாற்றை திரும்பிப் பார்க்க நேரிடுகிறது. எத்தனை முறை அதை திருப்பித் திருப்பி யோசிக்கும்போதும் எங்கே பிழை விடுகிறோம், எங்கே தோற்றுப்போகிறோம் என்று கேள்விகள் உள்ளுக்குள் அறைந்துகொண்டே இருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமை மீட்டெடுக்க அகிம்சை முதல் ஆயுதப்போராட்டம் வரை எல்லா வழிகளிலும் போராடியாயிற்று. இருந்தும் தீர்வுகள் தான் இன்னும் மனித உரிமைகள் சபை, ஐ. நா. சபை என்று சர்வதேசத்தினை நோக்கியே வாய்பார்க்க வைக்கிறது. ஐ. நா. வின் பொதுச்சபையில் பேசவேண்டியதை இன்னும் கூட மனித உரிமைகள் சபையில் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது சர்வதேச சமூகம்.

வரலாற்று ரீதியாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்கள் தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீகபூமி, தமிழர்களுக்கு வரலாற்றுரீதியான இறையாண்மை இருந்தது. எந்தவொரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை யாரும் மறுக்க முடியாது. இதிலெல்லாம் மற்றவர்கள் யாரும் உரிமை கோரவோ அதை தட்டிப்பறிக்கவோ முடியாது என்பது காகிதங்களில் எழுதப்பட்ட நியாயம்.

இதனடிப்படையில் தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகள், சுயநிர்ணய உரிமைகள் பற்றி உரக்கப்பேசினாலும், வட்டுக்கோட்டை தீர்மானம் முதல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதல் மக்கள் ஆணையை வழங்கினாலும் அதெல்லாம் கணக்கில் எடுக்கப்படாமல் தயவுதாட்சண்யமின்றி தட்டிக்கழிக்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இது குறித்தெல்லாம் தொடர்ந்து பேசவேண்டிய கட்டாய சூழலும் இருந்துகொண்டே இருக்கிறது. இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தியாவின் அனுசரணை, ஆதரவின்றி ஈழத்தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்கிறார்கள் சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள். சரி, இந்தியாவின் ஈழத்தமிழர்கள் குறித்த நிலைப்பாட்டை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளாலே மாற்ற முடியும் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு மாற்றம் நிகழ தமிழகத்தமிழர்களின் காத்திரமான அரசியல் பரப்புரை மற்றும் செயற்பாடுகள் தேவை என்பது ஈழத்தமிழர்கள் எண்ணம். ஆனால், தமிழகத்தில் எத்தனை சதவீதமானோருக்கு ஈழப்பிரச்சனை குறித்து தெரிந்திருக்கிறது என்கிற யதார்த்தமான உண்மையோடு; ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழகத்தமிழர்களை நம்பிப் பலன் இல்லை என்கிற தமிழகத்தமிழர்களின் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

இந்த சூழ்நிலையில் தான் இப்போது தமிழகத்தில் தலையெடுத்திருக்கும் கல்லூரி மாணவர்களின் எழுச்சி ஈழத்தை நோக்கி எழுந்திருக்கிறது. இந்த எழுச்சியின் காரிய, வீரியத்தை வரவிருக்கும் நாட்களே தீர்மானிக்கும். காலங்காலமாக தமிழகத்தில் இருக்கும் திராவிட மற்றும் பெரியார் கொள்கைகள் சார் அமைப்புகளிடம் இருந்து ஒலிக்கும் குரலானது நியாயத்தை ஒலித்தாலும், அது பலரை சென்றடைவதில்லை. இது அதிகம் பேரை சென்றடையாவிட்டாலும் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் அற்பத்தனமான உளறல்கள் போலன்றி உலகவரலாற்றோடும், மனித விடுதலை குறித்த கொள்கைகள் சார்ந்து இருக்கின்றன.

கொளத்தூர் மணி அவர்களின் இந்தப் பேச்சு ஈழத்தமிழர்களின் இறையாண்மை குறித்து தெளிவாக விவரிக்கிறது. இந்தியாவும், இலங்கையும் பேசும் போலி இறையாண்மை அல்ல இது. ஈழத்தமிழர்களின் வரலாற்று இறையாண்மை (Historical Sovereignty), அது பெளத்த சிங்கள பேரினவாதத்தால் விழுங்கப்பட தமிழீழ விடுதலைப் புலிகளால் வென்றெடுக்கப்பட்ட இறையாண்மை (Earned Sovereignty), இப்போது புலிகளின் பின் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கான தீர்வான இறையாண்மை (Remedial Sovereignity) என்பவற்றை தெளிவாக உலகவரலாற்றில் இன்றுவரையுள்ள உதாரணங்களோடு விளக்குகிறார். தமிழகத்தமிழர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் எங்கே தவறியிருக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருக்கிறார்.
 
அதேபோல், சர்வதேச ரீதியில் உலகமக்களின் விடுதலை நோக்கிய மார்க்சிய தத்துவத்தை கடைப்பிடிக்கும் ரஷ்யா, சீனா, க்யூபா என்கிற சோஷலிச நாடுகள் இம்முறை சுழற்சி முறையில் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பயன்படுத்த இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கூட சந்தோசமான ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுவதாக கொளத்தூர் மணி சொல்வதும் கசப்பான யதார்த்தம். இந்தப் போலிகள் நிறைந்தது தான் சர்வதேசம்.

எங்களுக்கான நியாயங்களும், அதற்கான போராட்டங்களும் சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், தீர்வுகள் மட்டும் தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
 

 

1 கருத்து:

வேர்கள் சொன்னது…

எவ்வளவு துரத்தில் என்பது தெரியாமல் இருப்பது வெறுப்பையும் ,கோபத்தையும் தருகிறது ,
ஆனாலும் விடாமல் போராடும் எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழ தமிழர்களை நினைத்து பெருமையாகவும் இருக்கிறது
தமிழ் நாட்டை நம்பாதீர்கள் என்பது ஒரு தப்பித்தல் மனநிலை
ஒவ்வொரு தமிழனுக்குமான வரலாற்று கடமை இது
ஈழ தமிழினம் தங்கள் அன்பு சொந்தங்களை லட்ச்சக்கணக்கில் இந்த சுதந்திரம் வேண்டி விலையாக கொடுத்துள்ளார்கள்
நம்மிடம் கேட்பதெல்லாம் அவர்களுக்கான தார்மீக ஆதரவு உயிர் அல்ல