மார்ச் 12, 2013

தமிழக மாணவர்களும் ஈழத்தமிழர் உரிமையும்!

 
உலகவரலாற்றில் போராட்டங்களின் வழி தமக்கென்று தனி நாட்டையோ அல்லது பறிக்கப்பட்ட தங்கள் தேசத்தையோ மீளப்பெற்று தமக்கென்று இறையாணமையுடனான தேசத்தை உருவாக்கிய இனங்கள், மக்கள் உண்டு. கொசொவோ 2008 இல் இறையாண்மையுடன் கூடிய தனித்தேசமாக தன்னை நிறுவிக்கொண்டதும்; சர்வதேசத்தின் மேற்பார்வையிலான சுதந்திரமான வாக்கெடுப்பில் 2011 இல் விடுதலை அடைந்த தெற்கு சூடானும்  அண்மைய உதாரணங்கள்.
 
இதைப்போலவே தமிழர்களுக்கான இறையாண்மையுடன் கூடிய வெளியக சுயநிர்ணய உரிமை உண்டு. ஆனால், கிடைக்கப் பெறுவதிலுள்ள சர்வதேச, பிராந்திய அரசியல் சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன. மனித உரிமை சபையின் கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதே சமயம், அங்கேயே இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களின் தனித்தமிழீழத்துக்கான நியாயமான காரண காரியத்தொடர்புகளை, அரசியல் வரலாற்றுப் பின்னணிகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான முயற்சியில் சர்வதேசத்தைச் சேர்ந்த அரசியல் ஆராய்ச்சிப் படிப்பில் அது சார்ந்த துறையில் இருப்போர் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது, கொசோவோவிற்கும், தெற்கு சூடானுக்கும் எந்த அடிப்படையில் சுதந்திரம் கிட்டியதோ அதே அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் சுதந்திரமாகவும், இறையாண்மையோடும் வாழும் உரிமை உண்டு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு Remedial Sovereignty உண்டு என்பது முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இன்னும் காத்திரமாக சொல்லப்படுகிறது.
 
Remedial Sovereignty சொல்வது, சரிசெய்யமுடியாத இழப்பு என்பது இனப்படுகொலை, மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் வரையானவற்றை ஒரு இனத்தின் மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டால் அவர்களுக்கு தனியே பிரிந்துசென்று தங்களைத்தாங்களே ஆளும் உரிமை உண்டு என்பதே. அதாவது சரிசெய்யவோ, சமப்படுத்தவோ முடியாத இழப்புகளுக்கான பரிகாரமான இறையாண்மையுடன் கூடிய தனியாட்சி வழங்குவது. தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானர்கள் என்பதற்கான நேரடியான வார்த்தைப் பிரயோகம் ஐ. நா. வின் அறிக்கைகளிலேயே இல்லை என்றாலும், அதை சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார்கள். அது இனப்படுகொலையை குறிக்கிறது என்று ஏன் நேரடியாகச் சொல்லமாட்டார்கள் என்பது ஏகாதிபத்திய சர்வதேச அரசியல்.
 
இப்போது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவிருப்பதாக சொல்லப்படும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் Remedial Sovereignty என்பது கண்டிப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஆனால் வழக்கம் போல் ஈழத்தமிழர்களின் உரிமையின் பால் காட்டப்படும் மெத்தனப்போக்காக அது தவிர்க்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
 
ஈழத்தில் வாழ்பவர்களுக்கோ குரல்வளைகள் நெரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எவ்வளவு தான் தொண்டை வறளும் அளவு கத்தினாலும் புறக்கணிக்கப்பதையே பழக்கமாக கொண்ட மேற்குலகம், இவைகளுக்கு மத்தியில் இப்போது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான குரலாக யாருமே எதிர்பாராத வகையில் தமிழக மாணவர்களிடம் தன்னெழுச்சியான போராட்டங்கள் காலத்தின் தேவைக்கேற்றாற்போல் முளைத்திருக்கிறது! இவர்களது கோரிக்களுக்கான நிலைப்பாடானது மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச கண்காணிப்புடனான வாக்கெடுப்பைக் கோரியும், ஆசிய நாடுகள் அல்லாத தலைமையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்பதாகும். இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமானதும், சுதந்திரமானதுமான தீர்வு தனித்தமிழீழம் என்பதே இவர்களின் நிலைப்பாடு.

தமிழக மாணவர் போராட்டம் இப்போது தான் முளைவிட்டாலும் அதன் நோக்கங்கள், கோரிக்கைகளில் ஈழம் தொடர்பில் தெளிவான போக்கு காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக-இந்திய அரசியல்வாதிகளை நம்பி, நம்பி ஏமாந்துபோன கசப்பும், வெறுப்பும் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.  இது குறித்து தமிழகத்தின் காட்சி ஊடகமான புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி பார்த்தபின் உருவான எண்ணங்களும், பிரதிபலிப்பும்.
 
ஈழம் குறித்த அமெரிக்க தீர்மானம் பற்றிய கோரிக்கைகளில் மாணவர்கள் மிகத்தெளிவான, காத்திரமான, திட்டவட்டமான முடிவுகளுடன் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள் என்பது பேச்சில் தெரிகிறது.

இருந்தாலும் 2 அல்லது 3 நாட்களே ஆன போராட்டம் பற்றிய இலக்குகளை கேட்கிறோம் பேர்வழிகள் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளரும், இலக்கியவாதியுமான மனுஷ்யப்புத்திரன் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவரின் கேள்விகளும் அவரே தங்கபாலு ஐயா நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்கன்னு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவையே பேசவைத்து அழகுபார்த்ததும் நிகழ்ச்சியின் சறுக்கல் மட்டுமல்ல, எரிச்சலும் கூட.

பெரும்பாலும் இலக்கியவாதிகள் என்றாலே நுண்திரிபு நயமாக அரசியல் பேசுபவர்கள் மற்றும் அரசியலிலிருந்து விலகி யதார்த்தம் என்னும் பேரில் மனிதவாழ்வை எழுத்தில் அறுத்துப் பார்ப்பவர்களுக்கு மத்தியில் ஒரு இலக்கியவாதியாக மனுஷ்யப்புத்திரன் தங்கபாலுவிடம் கேட்ட தடாலடிக் கேள்விகளுக்கு சபாஷ். பிறகு, அவரே மாணவர்கள் தங்களுக்கு அரசியல்வாதிகளோடு இணைய விருப்பமில்லை என்று சொன்னபிறகும் அதையே வற்புறுத்தி இல்லை அவர்களோடு இணைந்து போராடுங்கள் என்கிற கருத்தை விதைப்பது போல் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. அரசியல் சாராமல் யாருமே ஒரு பொதுப்பிரச்சனைக்காகப் போராடவே முடியாதா! ஆனால், மாணவர்களின் நிலைப்பாடு இதுவரை அரசியல்வாதிகளை இதில் சேர்த்துக்கொள்வதாய் இல்லை.

ஒரு வேளை தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போல் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவோடு போராடுவதென்றாலும், இந்நாட்களில் எந்தக்கட்சி அவ்வாறான நம்பிக்கைத்தன்மையை வைக்குமளவிற்கு இருக்கிறது.

மாணவர்கள் அவர்கள் வழியில் அவர்களுக்கு தெரிந்தவரையில் போராடுகிறார்கள். அவர்களே தான் பிரச்சனைகளை முன்னெடுத்து போராடவேண்டுமென்றால் எதற்காக அரசியல், ஜனநாயகம், அதன் பிரதிநிதிகள் என்கிற அலுப்பான கேள்விகளும் தோன்றித்தொலைக்கிறது.
 
சமூகவலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்து.
 
“தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை மாணவர் அமைப்பு போன்று எந்த அமைப்பால் முன்னெடுக்கபட்டாலும்  அதனுடைய உடனடி பலனை அறுவடை செய்யபோவது அ தி மு க தான்  ஏனென்றால் இந்த போராட்டம் தீவிரமாகும்போது போர் உச்சகட்டத்தில்  ஆட்சியில் இருந்த தி மு க  வின் செயலற்ற தன்மைதான் பேசுபொருளாக மாறும் அது அ தி மு க விற்கு வாக்குகளாக மாறும் இதுதான் சட்டசபை தேர்தலிலும் நடந்தாது

உண்மையில்  கருணாநிதிக்கு பயமெல்லாம் ஜெயலலிதாவின் மேல்தான் அதனால் தான் இந்த டெசோவெல்லாம்  ஆளும் கட்சி இதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்

என்னை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராத அளவுக்கு  ஆளும் கட்சி இதை ஆதரிக்கிறது

ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் கருணாநிதி அதை வைத்து அரசியல் செய்துவிடுவார்.”
 
 ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், கெளரவமான வாழ்வுக்கும் குரல்கொடுக்கும் தமிழக மாணவர்களுக்கு நன்றியை தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள்.


Image: Google.
 

4 கருத்துகள்:

Sundari சொன்னது…

// ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக-இந்திய அரசியல்வாதிகளை நம்பி, நம்பி ஏமாந்துபோன கசப்பும், வெறுப்பும் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது. // -

உண்மை தான் ரதி, ஒருத்தரும் உருப்படி இல்லை பின் ஏன் நாம் அவங்களை நம்ப வேண்டும் என்ற நிலைமைக்கு இன்றைய தலைமுறையினர் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொன்று மாணவர்களின் உண்மையான போராட்டத்தில் பல அரசியல் கட்சிகள் குளிர் காய்வதையும் அவர்கள் விரும்பவில்லை. ஏதோ அரசியல் கட்சிகளின் ஆணை படி தான் இவர்கள் போரடுவதுபோல் அவர்களின் வெளிபாடுகள் இருக்கும்.

அருமையான பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.....

Rathi சொன்னது…

நன்றி, சுந்தரி.

ம்ம்... மாணவர்கள் இந்த அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்தாலே பயப்படுகிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் ராம் கூட நேர்படப் பேசு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

இவர்களுக்குள் மாணவர்களை யார் தங்கள் பக்கம் சாய்க்கிறார்கள் என்பதில் போட்டியாக இருக்கும் போல. அதுவும் பயம் வரக்காரணமாக இருக்கலாம்.

ராஜ நடராஜன் சொன்னது…

முந்தைய பதிவின் பின்னூட்டத்துக்குப் பின்பு இங்கே.நேற்று புதிய தலைமுறையின் நேர்பட பேசு நேரலையை காண நேர்ந்தது.மாணவர்களின் போராட்டத்தை இன்னும் கூர்ந்து கவனிக்க விரும்புகிறேன்.மாணவர்களுக்கு சுயநலமில்லாத போராட்ட குணமிருக்கிறதென்ற போதிலும் கல்லூரிக்கு கல்லூரி கோரிக்கைகள் மாறுபடுகிறது.எப்படியோ சுயமாக உருவான உணர்வுகள் என்பதால் நீடிக்கும் பட்சத்தில் பொதுவான கொள்கைகளுக்கு வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.போராட்ட குணம் நீடித்தாலும் அதனை மழுங்கடிக்க செய்யும் சூழல்களும் உருவாகலாம்.முந்தைய தி.மு.க ஆட்சியில் விடுமுறை விட்டு ஆறப்போட்டது போல் இல்லாமல் குரல்கள் வெளிப்படுவதற்கான அவகாசம் கிடைப்பது வரவேற்புற்குரியதே.நீங்கள் சொன்னது போல் முந்தைய ஆட்சியின் செயல்பாடற்ற தன்மை காரணம் கொண்டும்,இப்பொழுது போராட்ட களங்கள் உருவாகும் வாய்ப்புக்களை அ.தி.மு.க அறுவடை செய்யும் வாய்ப்புக்கள் இருக்கிறது.எப்படியோ மாணவர் போராட்டங்கள் புது எழுச்சியை உருவாக்கினால் மகிழ்ச்சியே.தமிழக அரசியல் களம்,மத்திய அரசின் நிலைப்பாடு,நிழலாக குழப்பும் ரா போன்ற சக்திகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

Rathi சொன்னது…

ராஜ நட, உங்க கருத்துக்கு நான் பதில் சொல்றத விட உண்மைத் தமிழனின் இந்தப் பதிவு பொருத்தமா இருக்கும். நேரம் கிடைக்கும் போது படிச்சுப் பாருங்க.

http://truetamilans.blogspot.com/2013/03/blog-post_13.html