மார்ச் 15, 2013

எத்தனைமுறை திரும்பி, திருப்பி பார்க்க..!

பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஒரு தீர்வு கிடைக்காமலே, மறுக்கப்பட்டுகொண்டே இருக்கும் நியாயத்தை குறித்து யோசிக்கும் போது அது குறித்த வரலாற்றை திரும்பிப் பார்க்க நேரிடுகிறது. எத்தனை முறை அதை திருப்பித் திருப்பி யோசிக்கும்போதும் எங்கே பிழை விடுகிறோம், எங்கே தோற்றுப்போகிறோம் என்று கேள்விகள் உள்ளுக்குள் அறைந்துகொண்டே இருக்கின்றன. ஈழத்தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமை மீட்டெடுக்க அகிம்சை முதல் ஆயுதப்போராட்டம் வரை எல்லா வழிகளிலும் போராடியாயிற்று. இருந்தும் தீர்வுகள் தான் இன்னும் மனித உரிமைகள் சபை, ஐ. நா. சபை என்று சர்வதேசத்தினை நோக்கியே வாய்பார்க்க வைக்கிறது. ஐ. நா. வின் பொதுச்சபையில் பேசவேண்டியதை இன்னும் கூட மனித உரிமைகள் சபையில் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது சர்வதேச சமூகம்.

வரலாற்று ரீதியாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்கள் தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீகபூமி, தமிழர்களுக்கு வரலாற்றுரீதியான இறையாண்மை இருந்தது. எந்தவொரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை யாரும் மறுக்க முடியாது. இதிலெல்லாம் மற்றவர்கள் யாரும் உரிமை கோரவோ அதை தட்டிப்பறிக்கவோ முடியாது என்பது காகிதங்களில் எழுதப்பட்ட நியாயம்.

இதனடிப்படையில் தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகள், சுயநிர்ணய உரிமைகள் பற்றி உரக்கப்பேசினாலும், வட்டுக்கோட்டை தீர்மானம் முதல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதல் மக்கள் ஆணையை வழங்கினாலும் அதெல்லாம் கணக்கில் எடுக்கப்படாமல் தயவுதாட்சண்யமின்றி தட்டிக்கழிக்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இது குறித்தெல்லாம் தொடர்ந்து பேசவேண்டிய கட்டாய சூழலும் இருந்துகொண்டே இருக்கிறது. இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தியாவின் அனுசரணை, ஆதரவின்றி ஈழத்தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்கிறார்கள் சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள். சரி, இந்தியாவின் ஈழத்தமிழர்கள் குறித்த நிலைப்பாட்டை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளாலே மாற்ற முடியும் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு மாற்றம் நிகழ தமிழகத்தமிழர்களின் காத்திரமான அரசியல் பரப்புரை மற்றும் செயற்பாடுகள் தேவை என்பது ஈழத்தமிழர்கள் எண்ணம். ஆனால், தமிழகத்தில் எத்தனை சதவீதமானோருக்கு ஈழப்பிரச்சனை குறித்து தெரிந்திருக்கிறது என்கிற யதார்த்தமான உண்மையோடு; ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழகத்தமிழர்களை நம்பிப் பலன் இல்லை என்கிற தமிழகத்தமிழர்களின் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

இந்த சூழ்நிலையில் தான் இப்போது தமிழகத்தில் தலையெடுத்திருக்கும் கல்லூரி மாணவர்களின் எழுச்சி ஈழத்தை நோக்கி எழுந்திருக்கிறது. இந்த எழுச்சியின் காரிய, வீரியத்தை வரவிருக்கும் நாட்களே தீர்மானிக்கும். காலங்காலமாக தமிழகத்தில் இருக்கும் திராவிட மற்றும் பெரியார் கொள்கைகள் சார் அமைப்புகளிடம் இருந்து ஒலிக்கும் குரலானது நியாயத்தை ஒலித்தாலும், அது பலரை சென்றடைவதில்லை. இது அதிகம் பேரை சென்றடையாவிட்டாலும் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் அற்பத்தனமான உளறல்கள் போலன்றி உலகவரலாற்றோடும், மனித விடுதலை குறித்த கொள்கைகள் சார்ந்து இருக்கின்றன.

கொளத்தூர் மணி அவர்களின் இந்தப் பேச்சு ஈழத்தமிழர்களின் இறையாண்மை குறித்து தெளிவாக விவரிக்கிறது. இந்தியாவும், இலங்கையும் பேசும் போலி இறையாண்மை அல்ல இது. ஈழத்தமிழர்களின் வரலாற்று இறையாண்மை (Historical Sovereignty), அது பெளத்த சிங்கள பேரினவாதத்தால் விழுங்கப்பட தமிழீழ விடுதலைப் புலிகளால் வென்றெடுக்கப்பட்ட இறையாண்மை (Earned Sovereignty), இப்போது புலிகளின் பின் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கான தீர்வான இறையாண்மை (Remedial Sovereignity) என்பவற்றை தெளிவாக உலகவரலாற்றில் இன்றுவரையுள்ள உதாரணங்களோடு விளக்குகிறார். தமிழகத்தமிழர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் எங்கே தவறியிருக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருக்கிறார்.
 
அதேபோல், சர்வதேச ரீதியில் உலகமக்களின் விடுதலை நோக்கிய மார்க்சிய தத்துவத்தை கடைப்பிடிக்கும் ரஷ்யா, சீனா, க்யூபா என்கிற சோஷலிச நாடுகள் இம்முறை சுழற்சி முறையில் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பயன்படுத்த இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கூட சந்தோசமான ஒரு விடயமாகத்தான் பார்க்கப்படுவதாக கொளத்தூர் மணி சொல்வதும் கசப்பான யதார்த்தம். இந்தப் போலிகள் நிறைந்தது தான் சர்வதேசம்.

எங்களுக்கான நியாயங்களும், அதற்கான போராட்டங்களும் சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், தீர்வுகள் மட்டும் தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
 

 

மார்ச் 12, 2013

தமிழக மாணவர்களும் ஈழத்தமிழர் உரிமையும்!

 
உலகவரலாற்றில் போராட்டங்களின் வழி தமக்கென்று தனி நாட்டையோ அல்லது பறிக்கப்பட்ட தங்கள் தேசத்தையோ மீளப்பெற்று தமக்கென்று இறையாணமையுடனான தேசத்தை உருவாக்கிய இனங்கள், மக்கள் உண்டு. கொசொவோ 2008 இல் இறையாண்மையுடன் கூடிய தனித்தேசமாக தன்னை நிறுவிக்கொண்டதும்; சர்வதேசத்தின் மேற்பார்வையிலான சுதந்திரமான வாக்கெடுப்பில் 2011 இல் விடுதலை அடைந்த தெற்கு சூடானும்  அண்மைய உதாரணங்கள்.
 
இதைப்போலவே தமிழர்களுக்கான இறையாண்மையுடன் கூடிய வெளியக சுயநிர்ணய உரிமை உண்டு. ஆனால், கிடைக்கப் பெறுவதிலுள்ள சர்வதேச, பிராந்திய அரசியல் சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன. மனித உரிமை சபையின் கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதே சமயம், அங்கேயே இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களின் தனித்தமிழீழத்துக்கான நியாயமான காரண காரியத்தொடர்புகளை, அரசியல் வரலாற்றுப் பின்னணிகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான முயற்சியில் சர்வதேசத்தைச் சேர்ந்த அரசியல் ஆராய்ச்சிப் படிப்பில் அது சார்ந்த துறையில் இருப்போர் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது, கொசோவோவிற்கும், தெற்கு சூடானுக்கும் எந்த அடிப்படையில் சுதந்திரம் கிட்டியதோ அதே அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் சுதந்திரமாகவும், இறையாண்மையோடும் வாழும் உரிமை உண்டு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு Remedial Sovereignty உண்டு என்பது முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இன்னும் காத்திரமாக சொல்லப்படுகிறது.
 
Remedial Sovereignty சொல்வது, சரிசெய்யமுடியாத இழப்பு என்பது இனப்படுகொலை, மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் வரையானவற்றை ஒரு இனத்தின் மீது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டால் அவர்களுக்கு தனியே பிரிந்துசென்று தங்களைத்தாங்களே ஆளும் உரிமை உண்டு என்பதே. அதாவது சரிசெய்யவோ, சமப்படுத்தவோ முடியாத இழப்புகளுக்கான பரிகாரமான இறையாண்மையுடன் கூடிய தனியாட்சி வழங்குவது. தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானர்கள் என்பதற்கான நேரடியான வார்த்தைப் பிரயோகம் ஐ. நா. வின் அறிக்கைகளிலேயே இல்லை என்றாலும், அதை சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார்கள். அது இனப்படுகொலையை குறிக்கிறது என்று ஏன் நேரடியாகச் சொல்லமாட்டார்கள் என்பது ஏகாதிபத்திய சர்வதேச அரசியல்.
 
இப்போது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவிருப்பதாக சொல்லப்படும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் Remedial Sovereignty என்பது கண்டிப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஆனால் வழக்கம் போல் ஈழத்தமிழர்களின் உரிமையின் பால் காட்டப்படும் மெத்தனப்போக்காக அது தவிர்க்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
 
ஈழத்தில் வாழ்பவர்களுக்கோ குரல்வளைகள் நெரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எவ்வளவு தான் தொண்டை வறளும் அளவு கத்தினாலும் புறக்கணிக்கப்பதையே பழக்கமாக கொண்ட மேற்குலகம், இவைகளுக்கு மத்தியில் இப்போது ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான குரலாக யாருமே எதிர்பாராத வகையில் தமிழக மாணவர்களிடம் தன்னெழுச்சியான போராட்டங்கள் காலத்தின் தேவைக்கேற்றாற்போல் முளைத்திருக்கிறது! இவர்களது கோரிக்களுக்கான நிலைப்பாடானது மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச கண்காணிப்புடனான வாக்கெடுப்பைக் கோரியும், ஆசிய நாடுகள் அல்லாத தலைமையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்பதாகும். இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமானதும், சுதந்திரமானதுமான தீர்வு தனித்தமிழீழம் என்பதே இவர்களின் நிலைப்பாடு.

தமிழக மாணவர் போராட்டம் இப்போது தான் முளைவிட்டாலும் அதன் நோக்கங்கள், கோரிக்கைகளில் ஈழம் தொடர்பில் தெளிவான போக்கு காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக-இந்திய அரசியல்வாதிகளை நம்பி, நம்பி ஏமாந்துபோன கசப்பும், வெறுப்பும் அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.  இது குறித்து தமிழகத்தின் காட்சி ஊடகமான புதியதலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி பார்த்தபின் உருவான எண்ணங்களும், பிரதிபலிப்பும்.
 
ஈழம் குறித்த அமெரிக்க தீர்மானம் பற்றிய கோரிக்கைகளில் மாணவர்கள் மிகத்தெளிவான, காத்திரமான, திட்டவட்டமான முடிவுகளுடன் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள் என்பது பேச்சில் தெரிகிறது.

இருந்தாலும் 2 அல்லது 3 நாட்களே ஆன போராட்டம் பற்றிய இலக்குகளை கேட்கிறோம் பேர்வழிகள் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளரும், இலக்கியவாதியுமான மனுஷ்யப்புத்திரன் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவரின் கேள்விகளும் அவரே தங்கபாலு ஐயா நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்கன்னு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவையே பேசவைத்து அழகுபார்த்ததும் நிகழ்ச்சியின் சறுக்கல் மட்டுமல்ல, எரிச்சலும் கூட.

பெரும்பாலும் இலக்கியவாதிகள் என்றாலே நுண்திரிபு நயமாக அரசியல் பேசுபவர்கள் மற்றும் அரசியலிலிருந்து விலகி யதார்த்தம் என்னும் பேரில் மனிதவாழ்வை எழுத்தில் அறுத்துப் பார்ப்பவர்களுக்கு மத்தியில் ஒரு இலக்கியவாதியாக மனுஷ்யப்புத்திரன் தங்கபாலுவிடம் கேட்ட தடாலடிக் கேள்விகளுக்கு சபாஷ். பிறகு, அவரே மாணவர்கள் தங்களுக்கு அரசியல்வாதிகளோடு இணைய விருப்பமில்லை என்று சொன்னபிறகும் அதையே வற்புறுத்தி இல்லை அவர்களோடு இணைந்து போராடுங்கள் என்கிற கருத்தை விதைப்பது போல் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. அரசியல் சாராமல் யாருமே ஒரு பொதுப்பிரச்சனைக்காகப் போராடவே முடியாதா! ஆனால், மாணவர்களின் நிலைப்பாடு இதுவரை அரசியல்வாதிகளை இதில் சேர்த்துக்கொள்வதாய் இல்லை.

ஒரு வேளை தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போல் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவோடு போராடுவதென்றாலும், இந்நாட்களில் எந்தக்கட்சி அவ்வாறான நம்பிக்கைத்தன்மையை வைக்குமளவிற்கு இருக்கிறது.

மாணவர்கள் அவர்கள் வழியில் அவர்களுக்கு தெரிந்தவரையில் போராடுகிறார்கள். அவர்களே தான் பிரச்சனைகளை முன்னெடுத்து போராடவேண்டுமென்றால் எதற்காக அரசியல், ஜனநாயகம், அதன் பிரதிநிதிகள் என்கிற அலுப்பான கேள்விகளும் தோன்றித்தொலைக்கிறது.
 
சமூகவலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றி சொல்லப்பட்ட ஒரு கருத்து.
 
“தமிழ் நாட்டில் ஈழ பிரச்சனை மாணவர் அமைப்பு போன்று எந்த அமைப்பால் முன்னெடுக்கபட்டாலும்  அதனுடைய உடனடி பலனை அறுவடை செய்யபோவது அ தி மு க தான்  ஏனென்றால் இந்த போராட்டம் தீவிரமாகும்போது போர் உச்சகட்டத்தில்  ஆட்சியில் இருந்த தி மு க  வின் செயலற்ற தன்மைதான் பேசுபொருளாக மாறும் அது அ தி மு க விற்கு வாக்குகளாக மாறும் இதுதான் சட்டசபை தேர்தலிலும் நடந்தாது

உண்மையில்  கருணாநிதிக்கு பயமெல்லாம் ஜெயலலிதாவின் மேல்தான் அதனால் தான் இந்த டெசோவெல்லாம்  ஆளும் கட்சி இதை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்

என்னை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராத அளவுக்கு  ஆளும் கட்சி இதை ஆதரிக்கிறது

ஏனென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்தால் கருணாநிதி அதை வைத்து அரசியல் செய்துவிடுவார்.”
 
 ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், கெளரவமான வாழ்வுக்கும் குரல்கொடுக்கும் தமிழக மாணவர்களுக்கு நன்றியை தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள்.


Image: Google.
 

மார்ச் 06, 2013

அமெரிக்கத் தீர்மானமும், ஐ. நா. வும் மற்றும் பலரும்!!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் இலங்கை குறித்த நிகழ்ச்சி நிரலில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது அமெரிக்காவால் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் இரண்டாம் பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
 
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் நான்கின் ஆவணப்படமும் தமிழர் தரப்புக்கு கொஞ்சம் வலுச் சேர்ப்பதாகவே இருக்கிறது. கூடவே, தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் சிறு அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் என்பனவும் நடைபெறுகின்றன. தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், மற்றைய சிறிய அமைப்புகளின் இலங்கை குறித்த கொள்கைகளும், போராட்டங்களும் வேறுபாடுடையதாகவே இருப்பதாய் காணப்படுகிறது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு அமெரிக்கா கொண்டுவரவிருப்பதாய் சொல்லப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரி என்பதாகும். ஆனால், சிறிய அமைப்புகளின் கோரிக்கையானது சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையும், சுயநிர்ணய உரிமைக்கான ஐ. நா. தலைமியிலான வாக்கெடுப்பும் என்பதாகும்.
 
இதற்கிடையே ஐ. நா. வின்  Accountability Assessment Observation Project தொடர்பான கண் துடைப்பு அறிக்கை ஜப்பானின் பிரதிநிதி தலைமையில் ஐ. நா. செயலாளரிடம் கையளிப்பு நடைபெற்றது. அது ஐ. நா. செயலுருக்கு திருப்தியாம். ஆனால், அது இன்றுவரை வெளியிடப்படவில்லை. 
 
மறுபுறம், ஐ. நா. செயலருக்கு ஐ. நா. வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்க ஐ. நா. வின் அறிக்கையிலேயே போர்க்குற்றம் புரிந்திருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சவேந்திர சில்வா அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி அன்ரொனின் ஸ்கேலியாவுடன் கூட படம் பிடித்தும், அமெரிக்க கடற்படைக்கு முன் பேச்சு நிகழ்த்தியும் தன் நெருக்கத்தை காட்டிக்கொண்டிருக்கிற அரசியல் காட்சிப்பிழைகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
 
இதைவிட அமெரிக்காவின் முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர் மைக்கேல் எஸ். போஸ்னர் ஓய்வுபெறும் தறுவாயில் இலங்கையைப் பொறுத்தவரை அமெரிக்க ஜனாதிபதி வெற்றியை சந்தித்தார் என்று பேசியதாக இன்னர் சிட்டி ப்ரஸ் குறிப்பிட்டிருக்கிறது. 2009 இல் நிகழ்ந்த பாரிய இனப்படுகொலைக்கு யாரும் பொறுப்புக் கூறவேண்டிய தேவையை கடந்தே எல்லாம் நிகழ்ந்தேறுகிறது. ஒரு புறம் சவேந்திரா சில்வா, பாலித ஹோஹனவுக்கும் அமெரிக்கா உறவு. கூடவே தமிழர்களுக்கும் மனித உரிமைகள் சபயில் காவல் என்கிற அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து தமிழனுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்பது ஈழத்தமிழ் பச்சைப்பிள்ளைக்கும் தெரியும்.
 
இந்த அமெரிக்காவின் முயற்சியில் தான்  இத்தீர்மானம் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஐ. நா. இரண்டினதும் கண்களை மூடிக்கொண்டே யானை தடவும் கதைகளை தவிர்த்து, இந்த தீர்மானம் பற்றி தமிழகம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்திய பிரதமர் என்போர் அவரவர் கருத்துகளோடு செயலாற்றுகிறார்கள், பேசுகிறார்கள்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிறேமச்சந்திரன் சொல்வது இதுவரை வரைவுத் தீர்மானத்தின் வார்த்தைகள் வரையில் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு திருப்தியாய் இல்லை. அது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இல்லை என்கிறார். கூடவே, சுயாதீன, சர்வதேச விசாரணையே தேவை எனவும் வலியுறுத்துகிறார்.
 
தமிழக அரசியல் கட்சி சார்பில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதும், அந்த தீர்மானத்தில் இடம்பெறும் வார்த்தைகளின் அடிப்படையிலேயே இந்தியா அதற்கான ஆதரவு குறித்து தீர்மானிக்கும் என்பதாய் இந்திய பிரதமர் கூறுவதாய் செய்திகள் சொல்லுகின்றன. இடையே சு. சுவாமி வேறு இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலரை சந்தித்துவிட்டு, பிறகு எங்கே போனார்....!!
 
எந்த தீர்மானமும் அழிந்துகொண்டிருக்கும், அவதிப்பட்டுத் தத்தளிக்கும் ஈழத்தில் வாழ்பவருக்கு எந்த விடிவையும் கொண்டுவருமா என்பதே எதிர்பார்ப்பு என்றாலும், அதன் யதார்த்தம் கசப்பாகவே இருக்கும்.
 
 
படம்: கூகுள்.
 

மார்ச் 05, 2013

இங்கிலிஷ் விங்கிலிஷ் - திரைவிமர்சனம்


இந்தப் படம் பற்றி ஏன் விமர்சனம் எழுதத்தோன்றியது என்றால், இப்படம் பற்றி நிறையப்பேசினார்கள், எழுதினார்கள், கட்டாயம் பார்க்கவேண்டிய படம் என்றார்கள். அதனால் என் இரண்டு சதங்கள் மட்டுமல்ல. இது பெண்கள் பற்றிய அவர்களின் self-esteem, சுயமரியாதை குறித்த படம் என்பதால் எழுதத்தோன்றியது.

மூன்றாம் உலகையும் முழுதாய் விழுங்கிவிட்ட உலகமயமாக்கல் வாழ்வியல் சூழலில் நடுத்தரவர்க்க குடும்பத்தலைவிகளின் சுயகெளரவத்தைச் சோதிக்கும் சவாலான ஆங்கில மொழி பற்றிய படம். சசி என்கிற ஸ்ரீதேவியின் பாத்திரப்படைப்பின் அறிமுகத்துடன் படம் ஆரம்பிக்கிறது. உலகமயமாக்கப்பட்ட கல்வித்திட்ட பாடவிதானங்களின், பாடசாலை நடைமுறைகளின் பின்னணியில் ஸ்ரீதேவி எதிர்கொள்ளும் சவால்களும், அதில் அவர் துவண்டுபோவதும் காட்சியாக்கப்படுவதில் தொடங்குகிறது கதைக்களம்.

தனது மகள் தன் வயதுக்குரிய குட்டி, குட்டி கெளரவங்களோடு தாயாராடு மல்லுக்கட்டுவதும், அம்மாவான ஸ்ரீதேவி அதில் சிக்கி மகளிடமே அவமானபடுவதும் இயல்பாய் அமைந்திருக்கிறது. சுட்டியாய் ஒரு மகன் அம்மாவுக்கு ஆறுதல். காலையில் சாப்பாட்டு மேசையில் குழந்தைகளோடு சாப்பிடுவது, இரவில் தனிமையில் மனைவியிடம் பேச்சுக்கு இடமில்லை ஒன்லி ஆக்‌ஷன் என்கிற  தனக்குரிய தேவைகளை எதிர்பார்க்கும் சராசரி Bread winner கணவர் என்பதைத் தவிர வேறேதும் தோன்றாத கதாபாத்திரம். அதற்கேற்றாற் போன்ற வசன அமைப்பு. மறுபடியும், காட்சியின் நீட்சி ஸ்ரீதேவி மறுநாள் காலையில் சமயலறையில் பிரசன்னமாவதோடு தொடர்வது கச்சிதம். கணவர் சின்னச் சின்ன விசயங்களில் மனைவியின் சுயகெளரவத்தை சுட்டுவிட தனக்குள் சுருண்டுபோன ஸ்ரீதேவி எப்படி அதிலிருந்து தான் குறித்த சுயத்தை கட்டி எழுப்புகிறார் என்பதே மீதிப்படம்.

தன் அக்கா மகள் கல்யாணத்துக்கு அமெரிக்கா போவதில் தொடங்கி ஸ்ரீதேவியின் ஆங்கில பேச்சாற்றலுக்கு அவர் இந்தியா திரும்பி வரும்வரை யார் யாரெல்லாம் positive reinforcement ஆக இருக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
அஜித் கதாபாத்திரம் ஸ்ரீதேவிக்கு ஊக்கம் கொடுப்பது போலவே அமெரிக்க அதிகாரியிடம் எள்ளலாக அவர்கள் நாட்டு பொருளாதாரத்தை குத்திக்காட்டும் கொஞ்சம் உலக அனுபவம் உள்ள பாத்திரப்படைப்பு.

அமெரிக்காவில் ஆங்கிலம் கற்கும் காலத்தில் எதேச்சையாய் பிரான்ஸ் நாட்டு  ஆண் ஒருவர் ஸ்ரீதேவியின் பால் கவரப்பட்டு அவரை நெருங்குவதில் ஊடாடும் மெல்லிய காதல். ஆங்கிலம் கற்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதை ஆரம்பத்தில் கவனிக்காத ஸ்ரீதேவி, பின்னர் தனக்குரிய மரியாதையை கொடுக்காத உறவுகள் பற்றிய மனக்குமுறலை தன் மொழியில் கொட்டக் கேட்டுக்கொண்டே இருக்கும் பிரெஞ் காரரிடம், ‘நல்லாருக்கில்ல, இப்பிடி புரியாமலே பேசிக்கிறது’ என்பதில் கொஞ்சம் நெருக்கமாகிறார்கள். பின்னர் வரும் காட்சி ஒன்றில் அவரும் ப்ரெஞ்சில் ஏதோ உருக்கமாய் சொல்வதும், அதை ஸ்ரீதேவி புரிந்துகொண்டாரா என்பது பார்வையாளரான எனக்குப் புரியாததும் கூட அழகு.  இவரும் நாயகியின் ஆங்கிலப் பேச்சுத்திறமையை மெச்சுவதில் தன் பங்கை செய்கிறார்.

தவிர, இந்த மெல்லிய காதலை நாயகி ஏன் கன்னாபின்னாவென்று பதட்டத்தில் வார்த்தைகளை கொட்டித்தான் மறுக்கவேண்டுமா, வழக்கமான சினிமாக்கள் போல. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்பிடியே காட்டுவார்களோ. இன்னும் கொஞ்சம் ஆழமாக adult talk ஆக புரிந்துணர்வுடன் ஏன் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் பேச முடியவில்லை. மற்றப்படி, அவர் சொல்லும் எனக்கு காதல் தேவையில்லை. எனக்கு வேண்டியது கொஞ்சம் மரியாதை என்பதை இன்னும் தெளிவாக பிரெஞ்காரரிடமே சொல்லியிருக்கலாமோ! அப்படிச் சொல்லியிருந்தால் அவரும் கடைசி வரை சோகமாவே முகத்தை வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.மற்றப்படி, வகுப்பில் எல்லோரையும் போல சர்வசாதாரணமாய் பிரெஞ்காரர் நாயகியை She is beautiful என்பதும்; தான் ஆங்கில வகுப்பில் அதிகம் விரும்பி வருவது நாயகிக்காகவே என்று இயல்பாய் சொல்வதும்; அதற்கு நாயகி கலாச்சார நயங்களோடு சங்கடப்படுவதும்; கூட இருந்த இந்தியர் நீ எப்படி ஒரு பெண்ணைப் பற்றி பொதுவெளியில் இப்படிப் பேசலாம் என்பதும் சமூகம் குறித்த குறியீடுகள். பிரெஞ்காரர் பாவம் ஙேஏஏஏ என்று பார்க்கிறார்.


இவர்களை விட, நாயகியான ஸ்ரீதேவியின் அக்கா மகள், மற்றும் ஆங்கில வகுப்பின் ஆசிரியர், கூடப்படித்தவர்கள் என எல்லோரும் ஸ்ரீதேவியின் ஆங்கிலத்தை பாராட்டி ஊக்கம் கொடுக்கிறார்கள். தான் ஆங்கிலம் கற்கும் முயற்சியில் இருக்கும் போது, சிறிய விபத்தாய் குழந்தைக்கு அடிபடும் இடத்தில் குழம்பும் அம்மாவின் பொறுப்பு குறித்த குற்ற உணர்வு, குழப்பம், அழுகை, கணவர் உனக்குள்ளேயே நீ தனியாய் சந்தோசமாய் இருக்கிறாய் என்னுமிடத்தில் அதிர்ச்சியாவது எல்லாம் சராசரிப் பெண்ணின் உருவகப்படுத்தல்கள்.

இதையெல்லாம் கடந்து வீடு விட்டு வெளியே வந்ததும் தான் சந்தித்த மனிதர்களின் வழி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, தன் சொந்தமுயற்சியில் ஒரு அந்நிய மொழியை கற்பதும் பெண்களுக்கான செய்தி.

இறுதியாக, ஆங்கிலம் கற்கவேண்டுமென்றால் அமெரிக்காவுக்குத் தான் போகவேண்டுமா என்கிற கேள்வி மனதில் ஏனோ எழாமல் இல்லை. பொருளாதாரச் சிக்கலின்றி வாழும் ஒரு நடுத்தரவர்க்க குடும்பப் பெண்ணின் அன்றாடவாழ்வின் சுயகெளரவம் குறித்த சவால்கள் என்பதும்; பெண் என்பவள் தனக்குரிய சுயமரியாதையை தானே கட்டியமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைத் தவிர பெரிதாய் ஏதும் சொல்லத்தோன்றவில்லை படம் பற்றி.

படம்: கூகுள்