பிப்ரவரி 27, 2013

வருமுன் வழிமொழியப்படும் தீர்மானம்!

இலங்கையில் 65 வருடங்களுக்கு மேலாக நடந்துகொண்டிருப்பது வெறும் மனித உரிமை மீறல்களே என்று வல்வந்தமாகத் திணிக்கப்பட நிறைய முயற்சிகள் நடைபெறுகிறது. ஆம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் அமெரிக்கத் தீர்மானம் தான் இப்போதைய ஈழத்தமிழர்களுக்கெதிரான ஆயுதம். அது ஈழத்தமிழர்களுக்கான அரசியல் சுயநிர்ணய உரிமையை வென்றுதராமல், அவர்களை மேலும் பெளத்த-சிங்கள அரசியலுக்கு பலியாக்குவதே ஆகும்.
 
இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால் இந்தத் தீர்மானத்தை வரும்முன்னமே இந்தியாவால் வழிமொழியப்படுமோ என்னும் எதிர்பார்ப்பைக் கொடுப்பது  அரசியல்வாதிகளின் அரைகுறை அறிக்கைகள் தான். இலங்கை எதிரி நாடு கிடையாது; தமிழர்களுக்கு அரசியல் யாப்பு, சாசனத்தின் வழி உரிமைகள் கிடைக்க வலியுறுத்தப்படும் என்று திடீரென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகிறார். அப்படியானால், ஏற்றுக்குள்ளுகிறதா இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசியல் சாசனத்திலேயே உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை!

அரசியல் சாசனத்தில் மறுக்கப்படும் உரிமைகள் எப்படி இரண்டு பக்க மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் கேள்வி எழுகிறது மனதில். இல்லையென்றால் வேறோர் நாட்டின் தயாரிக்கப்பட்ட பேச்சை ஐ. நா. சபையில் வாசித்த முன்னாள் வெளியுறவு அமைச்சரின் செயல் போல் தானா இதுவும்!! ஏன் இந்த தீர்மானம் குறித்து இத்தனை விளம்பரங்கள் என்று கேள்விகளும் ஓடாமல் இல்லை. பிரித்தானிய காட்சி ஊடகத்தின் வழி வெளிவந்த 'No Fire Zone - Sri Lanka's Killing Fields' ஆவணக்காட்சிப்படுத்தலும் காரணமோ!

தவிர, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி இம்மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டதும் செய்திகளில் வெளிவந்தது. நாராயணசாமியும், சல்மான் குர்ஷித்தும்   மாற்றி, மாற்றி என்ன சொல்லவருகிறார்கள் என்பது ஒருபுறம்!  இப்படி இந்த தீர்மானத்தை இந்தியாவானது வருமுன் ஆதரிக்கிறேன், ஆதரிக்கவில்லை என்பது போன்ற அரைகுறையான   அறிக்கைகள் எப்படி இருந்தாலும், இலங்கை-இந்திய உறவுக்குப் பின்னான வரலாற்று நிகழ்வுகளை, அதனால் தமிழர்களுக்கு ஏதும் நன்மைகள் விளைந்ததா என்பதையும் மீளப்பார்க்க வைக்கிறது.

1840-1850 வரையான காலப்பகுதியில் பிரிதானிய காலனியாதிக்கத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் தமிழகத்தமிழர்கள் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து தோட்டத்தொழிலுக்காக தேயிலைதோட்டங்களில் வேலை செய்யக் கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் குரியுரிமையை பறிக்கும் இலங்கையின் குடியுரிமைச் சட்டம் முதல், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றோரது காலத்தில் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் அவர்களில் ஒருபகுதியினர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டது, இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன் பின்னான அமைதிப்படை அட்டூழியம், அதைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முடிவு என்பது கடந்தகால இந்தியாவின் தமிழர்கள் குறித்த வரலாற்று அரசியல். இப்போது மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான அமெரிக்கத்தீர்மானமும், தமிழர்கள் மீது மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்படும் Structural Genocide க்கு எந்தவொரு கண்டனமோ, வருத்தமோ கூட இல்லாத அந்த தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவும், இதிலெல்லாம் இந்தியாவின் பங்கை உள்ளூர் முதல் உலக, சர்வதேச ஊட்கங்கள் வரை பேசிவிட்டன. என்ன, சில உள்ளூர் அரசியல்வாதிகள் தான் இன்னும் selective amnesia விலேயே இருக்கிறார்கள்.
 
 
அவர்கள் எப்போதுமே அப்படித்தானே என்று இந்தமுறையும் கடக்கிறேன். மொத்தத்தில் இந்தியா ஈழத்தமிழர்களின் நலன் கருதி எந்தவொரு ஒப்பந்தமும் இலங்கையுடன் செயதே இல்லை என்பதே வரலாறு.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த தீர்மானத்தில் என்று அதன் Draft ஐ இணையத்தில் தேடிப் படித்தேன். அடேங்கப்பா! பெளத்த-சிங்கள அரசியல் யாப்பை சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி முனையில் நடைமுறைப்படுத்தி, ஈழத்தமிழனுக்கான 65 வருட உரிமை மறுப்புகளை அமெரிக்கா ஒன்றிரண்டு பக்கங்களில் ஏதோ எழுதி தீர்க்கப்போகிறதா என்று வியந்து தான் போனேன். படித்துப் பார்த்தால் அந்த தீர்மான வார்த்தைகளில் தமிழன் என்றோ அல்லது தமிழர்களுக்கான உரிமைகள் என்கிற வார்த்தைப் பிரயோகமோ மருந்துக்கும் கிடையாது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்கம் என்கிற ஒரு பாரிய குறைபாடுகளுடனான ஒரு அறிக்கையை ஒட்டியே இந்த தீர்மானமும் (L.2). இலங்கையின் அரச நிர்வாகம், நீதிபரிபாலனம், பத்திரிகை சுதந்திரம் எல்லாமே சீர்கெட்டுக்கிடக்க அந்த நாட்டிடமிருந்து Meaningful Accountability யை எதிர்பார்க்கிறது என்கிற வெற்று நாடகங்களின் தீர்மானம்.
 
சென்றமுறை மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்துக்கு என்ன ஆனது என்று தேடினால், Inner City Press (http://innercitypress.blogspot.ca/2013/02/on-sri-lanka-uns-ban-ki-moon-accepts.html காட்டும் ஆதாரம் காறி உமிழ வைக்கிறது கேடுகெட்ட ஐ. நா. வின் செயற்பாடுகள் மீது. இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்காணித்து இப்போது 'Whitewash Report' கொடுத்திருக்கிறது என்கிறது Inner City Press. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஜப்பான் பிரதிநிதி, பங்களாதேஷ், ருமேனியா, மற்றும் Columbia University பிரதிநிதிகளை கொண்டதாம் இந்தக் குழு. இன்னொரு செய்தியில் இதே இன்னர் சிட்டி ப்ரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது, இலங்கையின் மனித உரிமைகள் சபைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்கேவுக்கு ஐ. நா. வின் செயலர் இலங்கைப் பிரச்சனை ஐ. நா. வின் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறினாராம் பெருமையாக பீத்திக்கொள்கிறாராம்.

இவை தவிர, இந்தியாவில் சனல் 4 இன் Callum Macrae தயாரித்த No Fire Zone - Sri Lanka's Killing Field காட்சிப்படுத்தல் ஒருவிதமான அலையை அரசியல் மட்டம் முதல் பொதுமக்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது. இந்தியாவானது அமெரிக்கா இம்முறை கொண்டுவரவிருக்கும் தீர்மானம் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் யாப்பின் வழியான பெளத்த-சிங்கள அடக்குமுறையும், காலங்காலமாக இடம்பெறும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையும் தடுத்த நிறுத்தப்படும் என்கிற ஒற்றை வார்த்தை கூட இல்லாத ஓரு தீர்மானம் யாருக்கு என்ன லாபம்!
 
வல்லான் வகுத்ததே சட்டம். வென்றவன் எழுதியதே வரலாறு. இது தான் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழினத்துக்கே வரலாற்று சறுக்கல். எங்கள் சுயநிர்ணய உரிமையை மறுப்பதில், வரலாற்றை திசைதிருப்புவதில் தான் எத்தனை சர்வதேச கூட்டு முயற்சிகள்.

Image: Google.
 

4 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோதரி,

மன‌தில் இருப்பதை சொற்களால் வடித்து விட்டீர்கள். யாருக்கும் ஈழம்,ஈழ தமிழர் பற்றி அக்கரை கிடையாது. வல்லரசுகளின் போட்டியில் பலிகடா ஆகும் பிரச்சினை மட்டுமே!!.
தமிழர்களின் குறைந்த பட்ச தீர்வு சுயநிர்ணய உரிமை!! என்பதை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இந்த தீர்மானமும் அரசியல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் ஒரு நகர்வு மட்டுமே!!!.

இதில் இந்தியா ஒரு மதில் மேல் பூனையாய் சீனா பக்கமும் செல்ல முடியாமல், அமெரிக்காவைவும் எதிர்க்க முடியாமல்,தமிழருக்கும் எதுவும் செய்ய விரும்பாமலும் முழிக்கிறது!!

ஆகவே இந்த தீர்மானம் பற்றி எதிர்பார்ப்பு இல்லாமல், அவதானிப்பதே நல்லது!!

நன்றி!!

Rathi சொன்னது…

சார்வாகன்,வணக்கம்.

ம்ம்... இந்த தீர்மானம் குறித்து எந்தத் எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை.

ஆனால், குறைந்தபட்சம் அதுபற்றி பேசவேண்டியுள்ளது.

ஈழத்தில் பறிபோகும் தமிழர்களின் நிலம், வாழ்வாதாரங்கள், சிங்களக்குடியேற்றங்களை என்றாலும் தடுத்து நிறுத்தமுடியாத இந்தியாவிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.

ராஜ நடராஜன் சொன்னது…

இலங்கைப் பிரச்சினை மட்டுமல்ல,உலக அரசியல் எதற்கும் மென்று முழுங்கும் முதுகெலும்பற்ற தன்மையே எப்பொழுதும் இந்தியாவின் நிலைப்பாடு.அதை டிப்ளமெட்டிக்காக சொன்னால் ராஜதந்திரமாம்.

காங்கிரஸ் அரசு சார்ந்த இலங்கை நிலைப்பாடு நாம் அறிந்த ஒன்றே.

ராஜிவ் காந்தி,ஜெயவர்த்தனா 13ம் ஒப்பந்தத்தை குப்பையில் போடுவதற்கு இலங்கை முயற்சி செய்து மாதங்கள் பலவாகி விட்டன.அது பற்றி இந்திய வெளியுறவுத்துறை வாயே திறக்கவில்லை.ஒருபுறம் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று சொல்லி விட்டு இலங்கை நட்பு நாடு என்று அறிக்கை.தொடர் காங்கிரஸ் அரசின் இந்திய நிலைப்பாட்டைக் கவனித்தால் இந்தியா சார்ந்த தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமில்லாத ஒன்று.அதே நேரத்தில் பூகோள ரீதியாக இந்தியாவை மீறி செயல்பட இயலாத சூழல்.

இலங்கை சீனாவுக்கு தலையையும்,இந்தியாவுக்கு வாலையும் காட்டுகிறது.சீனாவிற்கு இலங்கை நலன் சார்ந்த உதவியென்ற பெயரில் இந்தியாவிற்கு செக்மேட் வைக்கிறது.இந்தியா என்ற மதில் மேல் பூனைக்கு அமெரிக்க தலையீடும் வேண்டாம்,சீனாவும் இலங்கை மீது ஆளுமை செய்யக்கூடாதென்ற பரிதாப நிலை.மன்மோகனுக்கோ இதற்கெல்லாம் நேரமேயில்லை.

ஏதாவது மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்றால் மனித உரிமைக் குழுக்கள் உதவியுடனும்,உலக நீதிமன்ற துணையுடன் மட்டுமே இயலும்.

Rathi சொன்னது…

ராஜ நட,

//13ம் ஒப்பந்தத்தை குப்பையில் போடுவதற்கு இலங்கை முயற்சி செய்து மாதங்கள் பலவாகி விட்டன.//

அது அம்னீசியாவில் இருந்து அப்பப்போ மீள்பவர் மாதிரி இலங்கை பற்றி பேச்சு வரும்போது இந்தியா பேசுவது.

அது, 13வது திருத்தச்சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் :))