பிப்ரவரி 17, 2013

இயற்கையான இயல்புகள்

All human beings are political in nature. - Aristotle.

 

காலப்பிரவாக வெள்ளத்தில் கரையைத் தேடுவது மானுடவாழ்வு. அறிவை, அது தரும் அகந்தையை, நம்பிக்கையை மூடநம்பிக்கைகளில், பொருளாசையில், காதலில், காமத்திடம் அடகுவைத்து தேடல்கள் நிறைந்த வாழ்வில் தொலைவதும்,தெளிவதும்; வலியும், இதமும்; வாழ்க்கைமுறைகளும் என வாழ்வை இயக்குவது எது, எவை என்று சதா கேள்விகளோடு நகர்த்தப்படுகிறது. காலப்பரிணாம மாற்றத்திற்கேற்ப பண்பாடு, கலாச்சார எச்சங்களோடு இனங்களின் வரலாற்று மூலமும் அரசியல் வாழ்வுமுறையும் ஆராய்ச்சிகளின் வழி, அனுபவங்களின் வழி கண்டறியப்படுகிறது. மனித சமூகவாழ்வு பரிணாமவளர்ச்சியின் பலகூறுகளைக் கடத்திக்கொண்டும், திருத்திக்கொண்டும் பரிமளிக்கவும், பல்லிளிக்கவும் செய்கிறது. குழுவாழ்விலிருந்து தொடங்கி ஆண்டான், அடிமை, அரசன், மன்னராட்சி வழிவந்த அரசியல் முறைகள் புதுவடிவங்களோடு நம்மை நாமே ஆளவும் அரசியல் நிறுவனங்களை, அதன் நிர்வாகிகளை எங்கள் பிரதிநிதிகள் என்று தேர்ந்தெடுத்தும் கொள்கிறோம். இருந்தும், என்றுமே மாறாத மனிதனின் அடிப்படையான நிரந்தர இயல்புகளே இவையெல்லாம் நிலைத்திருக்க வழிசமைக்கிறது.

ஆண்டாண்டு காலம் அறிவாற்றலால் தேடி, கண்டுபிடிப்புகளால் தேடியடைந்த சமகால நாகரிகம் ஒரு முலாம் பூச்சு. அதன்பின்னே இன்னும் விகாரமாய் இளிக்கிறது மனித இயல்புகள். பணம், பொருள், அங்கீகாரம், அரசியல் செல்வாக்கு, கசடு கழிக்கும் காமம் எல்லாம் பாரபட்சமின்றி கிடைத்துவிட்டால் உலகம் சொர்க்கம். அந்த சொர்க்கத்தின் வாசல் திறக்க முயற்சி என்னும் திறவுகோல் தேவை. அடிப்படையான தேவைக்கும் விருப்பத்திற்குமிடையே ஆசைகள், அபிலாஷைகளோடு சதிராடும் சமூகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேவைக்கதிகமான அலங்காரங்கள், அலட்டங்கள் இவைதான் சொர்க்கத்தின் திறவுகோல் என்பது வலிந்தே திணிக்கப்படுகிறது. விளைவு, தனிமனிதனாய், சமூகமாய் வாழ்க்கைச் சிக்கல்களின் பிடியில் சிக்குப்பட்டே அரசியல், பொருளாதார அடிமைகள் ஆகும் நிலைமை.

மனிதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாகரிகமடைந்ததாயும் பிற உயிர்களை, அவர்தம் உரிமைகளை மதிப்பதாகவும் வரலாற்றில் பதிந்துகொண்டேதானிருக்கிறான். கொலம்பஸ் காலத்தில் நிகழ்ந்தகொலைகள் இனப்படுகொலைகள் என்று கொள்ளப்படுமா; கறுப்பினத்தவர்களை அடிமைகளாக்கி வெள்ளை இனத்தவர்கள் உரிமைகொண்டாடியதும், வருத்தியே வேலைவாங்கியதும் அந்தக்காலங்களில் தவறென்று தோன்றவில்லையா! இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜப்பான் சீனாவில் படையெடுத்து செய்த கொடூரக்கொலைகளுக்கு அமெரிக்கப் படைவீரர்கள் பயம்கொள்ளவில்லையா; அதே அமெரிக்கா இன்று மற்றைய நாடுகளில் தன் நேரடியான, மறைமுகமான ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கவில்லையா; இன்றும் ஐ.நா.வின் சில ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட நாடுகள், Roman Statute இல் கையொப்பமிட்ட நாடுகள் என்றும்; அதில் கையொப்பமிடவில்லையென்றால் அவர்களுக்கு சில பாரதூரமான விளைவுகளிலிருந்து தப்பிக்கவைக்கிறது என்றெல்லாம் படிக்கநேரிடுகிறது.

வரலாற்றின் நிகழ்வுகளை கேள்விக்குள்ளாக்குவது அறிவியல் என்றால் ஒத்துக்கொள்ளலாம். ஒரு இனத்தின் இருப்பையே வரலாற்றை கேள்விக்குள்ளாக்குகிறோம் பேர்வழிகள் கிண்டலடிப்பது என்னவகையென்று புரிவதில்லை. வரலாற்றுத் தவறுகள் அந்தக்காலகட்டத்தில் தவறாய் தோன்றாமல் போகலாம். எதிர்காலங்களில் கொடுமையிழைத்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் முகம் பார்க்கக் கூட கூசும் என்பதையும் வரலாற்றுக் கதைகள் திரையில் தோன்றி மனட்சாட்சியை உலுக்கும் காலம் இது.

புதிய பிரச்சனைகளும், பழைய பிரச்சனைகளுக்கு புதியவடிவம் கொடுத்து அரசியல் நிகழ்த்தப்பட்டதுமென நிறைய வரலாறு உண்டு. அது இன்றும் மெய்யுலகில், மெய்நிகர் உலகில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கப்படுகிறது. ஒரு இனத்தின் இருப்பு என்பதே கேள்விக்குள்ளாக்கப்படும் அவலம் நிகழ்த்தப்படுகிறது. தமிழர்கள் யார்! யாரெல்லாம் தமிழர்கள்! என்கிற கேலியோடு கூடியவை அவை. ஏற்கனவே இதுபோன்ற ஒரு கேள்விக்கு சிறப்பாகவே நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதை நான் துணைக்கு அழைக்கப்போவதில்லை. எத்தனை தடவை உண்மையை உறைக்கச் சொன்னாலும் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக எங்கள் இருப்பு கூட மறுக்கப்படும். வரலாறு திரிக்கப்படும்.

ஏன் தமிழர்கள் யார் என்று இப்போது புதிதாய் கேள்வி என்று யோசித்தேன். எனக்குப் புரிந்தவரை தமிழன் என்கிற இனம் யாருக்கோ அல்லது ஏதோவொன்றுக்கு இடையூறாக இருக்கிறது. அதனால் இதுபோன்ற சந்தேகங்களை கிளப்பிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் யாருக்கோ இருக்கவே செய்கிறது. மிகப்பெரும்பாலோருக்குத் தெரியும் தமிழன் என்பவன் தனியினம். அவனிடம் தமிழன் என்கிற ஒற்றை அடையாளத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பது.

தமிழன் என்கிற அடையாளத்தோடு வேறு ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளத்தை (Multiple identity) தேடுபவர்களுக்கு மதம், ஜாதி என்று இன்னும் என்னென்னவோ இருக்கலாம். தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல மாற்றிக்கொள்ள அடையாளமற்றவர்கள் தான் இங்கே நிறையப்பேர் இருப்பார்கள். அவர்களில் நானும் ஒருத்தி. அவரவர்க்குரிய மொழி பேசும் எல்லையைக் கடந்து வேறிடம் போனால் அங்கே மதம் அல்லது வேறொன்று அடையாளமாகிப் போகிறது பிழைப்பு அல்லது தப்பித்தல் பொருட்டு. என்னைப் போன்றவர்களிடம் தமிழன் என்கிற அடையாளம் தவிர வேறொன்றும் இல்லாத காரணத்தால் சொந்தமண்ணிலிருந்தும் விரட்டியடிக்கப்படும் துர்ப்பாக்கியம். பன்முக அடையாளங்களை (Multiple indentity) தேடுபவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. அது அவரவர் வசதி. அது மனித இயல்பு. உங்கள் இருப்பை நிலைநிறுத்தவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ ஒரு இனத்தின் இருப்பை, அதன் அடையாளங்களை கேள்விக்குள்ளாக்குவது நியாயமில்லை.
 
அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி அறிவியல் ரீதியாக ஒரு இனத்தோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை அவர்களின் முன்னோடிகளை Y-chromosome, Mitrochondrial DNA என்பவற்றைக் கொண்டு சுலபமாக கண்டுபிடித்தாலும், அதையெல்லாம் விட மொழிக்களுக்கிடையேயான தொடர்புகளைக் கொண்டு இனங்களுக்கிடையேயான தொடர்புகள் அறியப்படுவது இன்னும் சாலப்பொருத்தம் என்கிற அளவுக்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கிறது.

ஒரு இனம் தன் அரசியல் அடையாளங்களை பாதுகாக்கவும் இயல்பாய் துணைவருவது மனிதகுலத்திற்கேயான நிரந்தரமான இயல்புகளே என்கிறார்கள் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி கண்ட மனித இயல்புகளை ஆராய்ச்சி செய்தவர்கள். பன்முக அடையாளங்களுக்கு அடுத்து identity politics, அரசியல் அடையாளங்கள் மூலமே எல்லா இன மக்களும் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறார்கள் என்பது உலகமயமாக்கல் சூழலிலும் கூட உண்மை. எதெல்லாம் ஒரு இனத்தின் அடையாளங்கள் ஆகின்றன. எவையெல்லாம் ஒரு இனத்தின் அல்லது குழுமத்தின் அடையாளங்களாகக் கொள்ளப்படுகின்றன. இதற்குப் பதில் தேடிப்போக இது கிட்டியது. மனிதக்குரங்குகளின் வகையிலிருந்து மனிதன் 1% மட்டுமே மாறுபடுவதாயும்; அந்த ஒரு வீதம் மொழி, மதம், கருத்தியல்சார் எண்ணங்கள் மற்றும் சில உடற்கூற்று மாற்றங்களாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். (Francis Fukuyama, The origins of Political Order, The State of Nature, pg. 31). Francis Fukuyama வின் எழுத்தை ஆராயவதல்ல என் நோக்கு. அவர் எழுத்து எப்படி என்னை என் ஈழம் குறித்த உணர்வுகளோடு பொருத்திப் பார்க்க வைக்கிறது என்பதே நான் சொல்லவருவது.

Plato and Aristotle argued that a just city had to exist in conformity with man's permanent nature and not what ephemeral and changing.
 
-Francis Fukuyama, The origins of Political Order.

மாற்றம் ஒன்றே நிலையானது இப்படியும் படித்திருக்கிறேன். எவையெல்லாம் மாற்றத்திற்கு உள்ளாகும்!

மனிதன் - மனிதவாழ்வு, கடவுட்கொள்கை, சமூகம், அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் இவற்றில் எவையெல்லாம் மாற்றத்திற்கு உள்ளாகிறது!

அரசியல், பொருளாதார கொள்கைகளுக்கேற்ப வாழ்வியல் அசைவியக்கங்கள் மாறலாம். ஒரு மனிதனின் மொழி, மதம், அவன் பண்பாகிப்போன இயல்புகள் கூட சில சமயங்களில் புதிதாய் எதையோ சேர்த்தோ, கழித்தோ கொள்ளலாம். என்னிடம் மதம் இல்லை. அதை தூக்கிக்கொண்டு அலைவதும் எனக்கு அசெளகர்யம். இந்துமதத்தோடு இணைந்ததே தமிழினவரலாறு என்பதும் வரலாற்று திரிபு என்பதே என் வாசிப்பின் முடிவும். என் மொழியும், பழமையான மரபுவழிப் பண்பாடுகளும் என்னை என் சார்ந்த இனத்தோடு இணைக்கிறது பாலமாய். இவை கூட காலவெள்ளத்தில் சில மாற்றங்களுக்கு உள்ளாகவே செய்கிறது. அதுவும் இயற்கை தான். அரசியல் பொருளாதார வாழ்வில் பிழைத்திருத்தலில் அதுவும் மாறவே செய்கிறது. இருந்தும் என் மொழி, அதன்வழி உருவாகி வழிவந்த மரபுவழிப் பண்பாடுகள், அது சார்ந்த என் நிலம், பொருளாதாரவாழ்வும் என் இயற்கையின் இயல்பாய் ஆகிப்போகிறது.  
 
ஆயிரம் இருந்தாலும், என்றுமே மாறாதது என்பது என் இனம் என்னும் துடிப்பு தான். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதை முன்னே கேட்டபோதெல்லாம் எனக்குள் சிரித்ததும் உண்டு. அதையே இன்று அறிவியல் ஆராய்ச்சிகளின் ஆதாரங்களோடு விஞ்ஞான ரீதியில் படிக்கும் போது தட்டிக்கழிக்க முடியவில்லை. அதையே கேலி பேசுபவர்களும் உண்டு. அப்படிக் கேலிபேசுபவர்கள் யாரென்றால், ‘ஈழத்தமிழர்கள் ஏதோ பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மூன்றுவேளை சோறு, இருக்க, உறங்க சிங்கள பெளத்த ஆட்சியாளர்கள் வீதியோரம் அனுமதி கொடுத்தால் வாங்கிக் கொண்டு பேசாதிருக்க வேண்டும்’ என்று சொல்பவர்கள்.
 
இறுதியாக அடையாளங்களைக் கொண்டு எதைக் கடத்தினாலும் என் இனம், என் உறவுகள் என்கிற என்றும் மாறாத உள்ளுணர்வே மேற்சொன்ன கூற்றின் படி மனிதர்களுக்கான நிரந்தரமான இயற்கையே ஒரு இனத்தை ஒன்றாய் இணைத்துவைத்திருக்கும். அந்த ஒன்றுபட்ட உணர்வே மேலும் அரசியல் நிறுவனங்களாகவும் பரிமாண வளர்ச்சியடையும். அந்த வளர்ச்சியை நோக்கிய பாதையில் தான் இன்னமும் தடம்புரண்டுகொண்டிருக்கிறான் தமிழன்! உலகமும் நம்மைச் சுற்றியிருக்கும் ஒருசாராராரும் சுயநல  அரசியலை முன்னெடுக்க தமிழன் மட்டும் எங்கோ தடங்கித், தேங்கி நிற்பதா என்பதே இந்தப் பதிவின் ஆதங்கம்.
 
உதவி: Francis Fukuyama, The origins of Political Order, Ed. 2011

Image: Google.

8 கருத்துகள்:

sorupan சொன்னது…

hi akka i read ur blogspot please write more

sorupan சொன்னது…

could you send ur email id

Rathi சொன்னது…

சொரூபன், உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே முடிந்தால் தாருங்கள். தொடர்புகொள்கிறேன்.

வேர்கள் சொன்னது…

//ஆண்டாண்டு காலம் அறிவாற்றலால் தேடி, கண்டுபிடிப்புகளால் தேடியடைந்த சமகால நாகரிகம் ஒரு முலாம் பூச்சு. அதன்பின்னே இன்னும் விகாரமாய் இளிக்கிறது மனித இயல்புகள். பணம், பொருள், அங்கீகாரம், அரசியல் செல்வாக்கு, கசடு கழிக்கும் காமம் எல்லாம் பாரபட்சமின்றி கிடைத்துவிட்டால் உலகம் சொர்க்கம். அந்த சொர்க்கத்தின் வாசல் திறக்க முயற்சி என்னும் திறவுகோல் தேவை. அடிப்படையான தேவைக்கும் விருப்பத்திற்குமிடையே ஆசைகள், அபிலாஷைகளோடு சதிராடும் சமூகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேவைக்கதிகமான அலங்காரங்கள், அலட்டங்கள் இவைதான் சொர்க்கத்தின் திறவுகோல் என்பது வலிந்தே திணிக்கப்படுகிறது. விளைவு, தனிமனிதனாய், சமூகமாய் வாழ்க்கைச் சிக்கல்களின் பிடியில் சிக்குப்பட்டே அரசியல், பொருளாதார அடிமைகள் ஆகும் நிலைமை.//

கசப்பான உண்மை

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!நலமாக இருக்கிறீர்களா?நேற்று பதிவு வாசித்த பின் பின்னூட்டமிட இயலவில்லை.

உங்கள் எழுத்து நடை தனித்துவமானது.நிறைய எழுதுங்கள்.

உலக தமிழர்களின் எதிர்ப்பு மற்றும் மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேட அழுத்தங்களையெல்லாம் தாண்டியும்,இலங்கை நீதிமன்ற உட்பூசல்களையெல்லாம் தாண்டி இலங்கை அரசு இன்னும் ஆட்சி பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறது.இதற்கான முக்கிய காரணம் சீனா,ரஷ்யா,இந்திய கேடயத்தை சாதுர்யமாக பயன்படுத்துவதுதான்.

ராஜபக்சேவுக்கும் அடி சறுக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே மிஞ்சியிருக்கிறது.வரலாறு இன்னும் எப்படி எழுதப்படுகிறதெனப் பார்க்கலாம்.

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்.... கசப்பான உண்மைகளைக் கடந்துவருவது என்பது தான் கடினமாக உள்ளது.

Rathi சொன்னது…

ராஜ நட, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்பிடி இருக்கீங்க!

ம்ம்ம்.... வரலாறு எழுதப்படக் கருவியாய் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து அடிசறுக்கிக் கொண்டே இருக்கிறது.

//உங்கள் எழுத்து நடை தனித்துவமானது.நிறைய எழுதுங்கள்.//

நன்றி, ராஜ நட. முயற்சிக்கிறேன்.

sorupan சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.