பிப்ரவரி 07, 2013

ஐ. நா. அலுவலக முற்றுகை போராட்டம்எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு என்று ஒரு பொன்மொழி உண்டு. சகலசந்தர்ப்பங்களிலும் காரணகாரியத் தொடர்புகளை யோசித்தோ அதன் விளைவுகள் குறித்து ஆராய்ந்தோ செயலாற்ற முடியாது என்பது மனித யதார்த்தம். இது சாதாரண மனிதனுக்கும் அவனை உள்னின்று இயக்கும் வாழ்க்கைத் தத்துவத்துக்கும் பொருந்தும். அரசியல், போர், பஞ்சம், பசி, பிணி இவற்றிலிருந்து தப்பி உலகம் தழைத்திருக்க, மனிதம் காக்க என்று உருவாக்கப்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள் அதற்காய் உருவாக்கப்பட்ட பதவிகளின் விம்பங்கள் இவர்கள் தன்னியல்பினின்றும் விலகி தான் தோன்றித்தனாமாகவும், செயற்பாடுகளின் மையமாய்க் கொண்டியங்க வேண்டிய நிறுவன விதிகளுக்கும் அப்பாற்பட்டு துணியும் கருமம் இழுக்கன்றோ!

ஈழத்தமிழர்கள் தலைவிதியை 2009 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தீர்மானிக்கும் ஒரு முக்குய காரணியாய் ஐக்கிய நாடுகள் சபையையும் அதன் அதிகாரத்தை தம்மகத்தே தக்கவைத்துக் கொண்டவர்களையும் குறித்தே பேசுகிறேன். இலங்கையின் அடிப்படை யாப்பியல் அரசியல் அமைப்பில் கூட தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்காமல் போனதாலும்; ஈற்றில் அதுவே அரசியல் சுயநிர்ணயப் போராட்டமாக உருவாகி இன்று அதன் போக்குகளும் திசையும் உருமாறும், வழிமாறும் ஆபத்தில் இருக்கிறது. அல்லது, ஆபத்து இருப்பதை உணராமலே நகர்கிறது, நகர்த்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் அழிவை, சொல்லவொணாத் துயரை கண்ணுற்றும் கண்ணுறாதது போல் உண்மையைத் துறந்தே பொய்மையிடத்தில் அடைக்கலம் கொண்டவர்களுக்கு இடித்துரைக்க வேண்டித்தான் உள்ளது.

மனிதநேயம், சமாதானம் என்கிற போர்வையில் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் ஈழவிடுதலைப் போர் பாதி சிதைக்கப்பட்டது. அதிலும் விடுதலைப் புலிகளை குற்றம் சொல்லியே அரசியல் மேதாவித்தனம் காட்டியவர்கள் ஒருபுறம். தமிழீழவிடுதலைப் புலிகளை விடுதலை நோக்கிய பயணத்தினின்று களைந்தாயிற்று. அப்படியானால், விடுதலையின் நோக்கமும், தார்ப்பரியமும் புரிந்துகொண்டாயிற்றா சர்வதேசத்தால் என்றால் அதுவும் இல்லை என்பதே வரலாறு. தமிழீழவிடுதலைபுலிகள் அழித்தொழிக்கப்பட்டதே தமிழர்களின் கெளரவமான சுயநிர்ணயக் கோரிக்கையை சகுனித்தனமாக மறுக்கவும், ஒழிக்கவும் என்பதையும் ஐ. நா. வும் அதன் சில நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகளும் தான் தங்களையும் அறியாமல் எங்களிடம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நான் செய்தித்தளங்களை, ஐ. நா. வின் செய்திகளை வெளியிடும் Inner City Press வரை கவனித்ததில் ஈழம்குறித்த சர்வதேச அரசியல் விவகாரங்களில் சில பெயர்களை குறிப்பிடாமல் போவதென்பது பாவச்செயல். இவர்களில் முக்கியமானவர்கள் என்று என் அறிவுக்கு எட்டிய பெயர்கள், ஐ. நா. பொதுச்செயலர் பான் கி மூன், இவருக்கு உதவவென அமர்த்தப்பட்ட அதிகாரி விஜய் நம்பியார், ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது ஐ. நா. வின் பேச்சாளராய் இருந்த ஜோன் ஹோம்ஸ், பாதியிலேயே ஓய்வு பெற்ற கோர்டன் வைஸ், அதன் பிறகு ஐ. நா. வின் அதன் அதிகாரிகளின் ஆணையை ஏற்று அறிக்கை தயாரித்த தருஸ்மன் குழு, ஈழத்தின் இறுதி கட்ட நிகழ்வுகளில் ஐ. நா. வின் உள்ளக செயற்பாடுகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பித்த Charles Petrie. மேலேயுள்ளவர்களின் நெஞ்சின் (அ)நீதியை ஈழத்தமிழர்கள் விடயத்தில் உலகிற்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் மாத்யூ லீ என்பவர், இன்னர் சிட்டி ப்ரஸ் இன் செய்தியாளர்களில் ஒருவர். அவர் இப்போது அந்தப் பதவியில் இல்லை.

அடுத்து, பான் கி மூன், விஜய் நம்பியார், அவரது சகோதரர் சதீஸ் நம்பியார், ஜோன் ஹோம்ஸ் இவர்களது உள்முகம் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அதை இந்தக் கட்டுரையில் தெளிவாய் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார்கள் மே 17 இயக்கத்தினர். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சட்டபூர்வமற்றதாக ஆக்க இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச சுயாதீன விசாரணையை முடக்கி, தமிழர்களை நிரந்தர அரசியல் அடிமைகளாக்குவதே நோக்கம் என்பதை இவர்கள் மனிததர்மம் மற்றும் தொழில்தர்மத்தினின்றும் தங்களை விலக்கி வைத்து தன்னியல்பாக, தான்தோன்றித்தனமாக ஐ. நா. விதிகளையும் மீறிய செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கிறது. இவையனைத்தும் வெற்றுக் குற்றச்சாட்டுகள் அல்ல. ஐ. நா. வின் செயற்பாடுகள் குறித்த காலம் தாழ்த்தியேனும் வெளிவந்த Petrie Internal Review Report பகரும் சான்றுகள். மேலேயுள்ள பெயர்களிம் மேல் அழுத்தினால் ஆதாரங்கள் காணொளிகளோடு கிடைக்கும்.

 இதுபோல் இணையத்தில் செய்தித்தளங்களில் தேடினால் ஆயிரமாயிரம் ஆதாரங்கள் இந்த நேர்மையற்றவர்களின் சகுனித்தனமான சாணக்கியம் பற்றி கொட்டிக்கிடக்கிறது. அப்பப்பா, எத்தனை அறிக்கைகள் மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் என்கிற பெயரில் வல்லாதிக்க கொள்கைகளுக்கு துணைபோகிறவர்களின் அரசியல் பாடங்கள், ஆய்வறிக்கைகள், ஆணைக்குழுவின் போலியான அறிக்கைகளும் அதற்கான பதில் அறிக்கைகளும் என்று!

இத்தனை அறிக்கைகளையும் இதயசுத்தியோடு ஆராய்ந்து உண்மையை உரக்கச் சொன்னாலே தமிழனுக்குரிய சுயநிர்ணய உரிமை அதுவாய் அமைந்துவிடுமே!

இவர்களிடத்தே இல்லாத அரசியல் நேர்மையை என் எழுத்துக்கொண்டு அறுத்துத் தேடினாலும் பயனில்லை. என் கட்டுரையின் நோக்கம் ஒரு இனத்தையே குழிதோண்டிப் புதைதவர்களின் போலி அரசியல் முகம் வெளியுலகிற்கு காண்பிக்கப்படவேண்டும். அதில் நாம் எல்லோரும் ஒரே அணியில் நிற்கவேண்டும் என்பதே. தமிழர்களின் மக்கள் ஆணையை அவ்வப்போது தேர்ந்தெடுத்தே மறந்துபோகும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு முதற்கொண்டு, தமிழக அரசியல் கட்சிகள் வரை இவர்களின் அரசியல் பேச்சுகளும், செயற்பாடுகளும் காகித அரசியலாய் கோப்புகளை மட்டுமே நிறைக்கும். சிறு, சிறு அமைப்புகளாகவேனும் ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் நோக்கோடு செயற்படும் மே 17 இயக்கம் மற்றும் பல சிறிய அமைப்புகளின் ஆதரவோடு உலகெங்குமுள்ள ஐ. நா. அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்திற்கு எங்களாலான ஆதரவை கொடுப்பதும் எங்களின் அரசியல் தீர்வு நோக்கிய நகர்வுகளில் ஒன்றே.


தமிழக அரசியலிடம் ஈழவிடுதலைக்கான தார்மீக ஆதரவைக் கூட எதிர்பார்க்க முடியாது என்பதை அவர்களின் அரசியல் கேலிக்கூத்துகளிலேயே நிரூபித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாற்றி, மாற்றி அரசியல் பிரச்சாரம் செய்யவே பல சமயங்களில் ஈழப்பிரச்சனை கையாளப்படுகிறது அங்கே. ஆதலால், எங்கள் சுயநிர்ணய உரிமைப்போரின் நியாயத்தையும், அதன் அரசியல் அவசியத்தையும் புரிந்த தமிழகத் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எம் ஆதரவை தெரிவித்து நமக்குரிய ஆதரவை வலுப்படுத்திக்கொள்வதே சிறந்தது என்பது என் கருத்து.
 
வரும் மார்ச் மாதம் ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையில் மீண்டும் அமெரிக்கா இலங்கை குறித்த தீர்மானம் கொண்டுவரவிருப்பதாக செய்தி. அது என்னவாக இருக்கும் என்பது ஒருபுறம். ஆனால், அமெரிக்கா கொண்டுவரும் புதியதீர்மானம் இனி அணிசேரா நாடுகள், இஸ்லாமிய நாடுகள், வாக்கெடுப்பு, விலகியிருத்தல் என்கிற சம்பிரதாய நாடகங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் அதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவொரு நல்ல தீர்வும் கிடைக்காது என்பது திண்ணம். ஏற்கனவே மனித உரிமைசபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் குற்றமும் குறைகளும் நிறைந்ததென ஒதுக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் என்கிற பரிந்துரைகளில் ஒன்றுக்கேனும் செயல்வடிவம் கொடுக்காத இலங்கை சிங்கள அரசு, இனி புதிதாய் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இந்தியாவோடு சேர்ந்து ஆடும் நாடகமும் அயர்ச்சியையே கொடுக்கும்.
 
இலங்கை அரசதரப்பும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அவரவர் பயணங்களோடும் நிகழ்ச்சிநிரல்களோடும் உலாவருகிறார்கள். மறுபடியும், மார்ச் மாத மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசின் பிரச்சார பொம்மைகளான தமிழ் கட்சித்தலைவர்கள் முதல் இலங்கை அரசுடன் சேர்ந்தாலே தமக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைமை வரை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் ஒருகுறையுமின்றி வாழ்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்வார்கள்.
 
இந்தப் போலிப் பிரச்சாரங்களை ஓரளவுக்கேனும் தகர்க்க தமிழர்களின் இறுதியானதும், உறுதியானதுமான தீர்வு எதுவாய் இருக்கவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தியே ஆகவேண்டிய தேவையும் இருக்கிறது. சில சமூகவலைத்தளங்களில் உலவும் போதே தமிழர்கள் அல்லாத சிலர் சொல்வது இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை தேவையில்லையாம்! அதை ஒரு ஐ. நா. வின் மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்திவிட்டு முடிவை பார்க்கலாமே! என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமையே இறுதித்தீர்வாய் இருக்கமுடியும். அதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொன்னால் என்ன!


இது மே 17 இயக்கத்தின் கட்டுரையின் ஒரு பகுதி.....

இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்தியதை உடனடியாக நிறைவேற்றுவதே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி நிவாரணம்! ஐ.நாவே அதை நிறைவேற்று!!..... பிப்ரவரி 12, 2009இல் ஜெனிவாவில் ஐ.நா. அலுவலகத்திற்கு முன் தமிழீழ விடுதலையையும், மக்களையும் காக்கக் கோரி தீக்குளித்து தியாகம் எய்திய முருகதாசனின் நினைவு நாளில் ஐ.நா. அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். அயோக்கிய அதிகாரிகளையும் அதன் பின்னுள்ள இந்திய அரசினையும் விசாரிக்க வலியுறுத்துவோம். இவர்கள் தடுத்து வைத்துள்ள சர்வதேச பொது வாக்கெடுப்பையும், இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும் உடனே நடத்தச் சொல்லி சர்வதேசத்தினை நெருக்குவோம். நமது விடுதலையை நாமே வென்றெடுப்போம்.  மாவீரன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் பான் – கி- மூனினைப் பற்றி முன்வைத்த அவதானிப்புகள் வரலாற்றில் உண்மை என்றே அறியப்படுகின்றன. இந்த தமிழ்ச் சமூகத்தின் தியாக செம்மல்களை நினைத்து அவர்களின் நினைவாக நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுப்போம் என மே பதினேழு இயக்கம் அழைப்பு விடுக்கிறது. கட்சி, சாதி, எல்லைகள் கடந்து தமிழராய் ஒன்றாவோம். நாம் பெரும் திரளாய் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் சர்வதேச அரங்கில் நடக்கும் நாடகங்களை உடைத்து தமிழீழ விடுதலையை உறுதி செய்யட்டும். 2009இல் நாம் செய்யத் தவறிய பொறுப்புகளை தற்போது செய்து முடிக்க ஆயிரமாய் அல்ல, லட்சங்களாய் அவரவர் இயக்க, கட்சி அடையாளங்களோடு தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.” விவரங்களுக்கு மே 17 அமைப்பின் தளம்.

எங்களுக்குள் ஆயிரமாயிரம் வேறுபாடுகள் இருக்கட்டும். அது எம்மினத்தையே மீண்டும், மீண்டும் காவுகொள்ளவேண்டாமே! இலக்கும், நோக்கும் ஒன்றுபட்டால் வெற்றிக்கும், விடுதலைக்கும் தோள்கொடுக்கலாமே!


Image Courtesy: Google

 

கருத்துகள் இல்லை: