பிப்ரவரி 27, 2013

வருமுன் வழிமொழியப்படும் தீர்மானம்!

இலங்கையில் 65 வருடங்களுக்கு மேலாக நடந்துகொண்டிருப்பது வெறும் மனித உரிமை மீறல்களே என்று வல்வந்தமாகத் திணிக்கப்பட நிறைய முயற்சிகள் நடைபெறுகிறது. ஆம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் அமெரிக்கத் தீர்மானம் தான் இப்போதைய ஈழத்தமிழர்களுக்கெதிரான ஆயுதம். அது ஈழத்தமிழர்களுக்கான அரசியல் சுயநிர்ணய உரிமையை வென்றுதராமல், அவர்களை மேலும் பெளத்த-சிங்கள அரசியலுக்கு பலியாக்குவதே ஆகும்.
 
இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால் இந்தத் தீர்மானத்தை வரும்முன்னமே இந்தியாவால் வழிமொழியப்படுமோ என்னும் எதிர்பார்ப்பைக் கொடுப்பது  அரசியல்வாதிகளின் அரைகுறை அறிக்கைகள் தான். இலங்கை எதிரி நாடு கிடையாது; தமிழர்களுக்கு அரசியல் யாப்பு, சாசனத்தின் வழி உரிமைகள் கிடைக்க வலியுறுத்தப்படும் என்று திடீரென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகிறார். அப்படியானால், ஏற்றுக்குள்ளுகிறதா இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசியல் சாசனத்திலேயே உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை!

அரசியல் சாசனத்தில் மறுக்கப்படும் உரிமைகள் எப்படி இரண்டு பக்க மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் கேள்வி எழுகிறது மனதில். இல்லையென்றால் வேறோர் நாட்டின் தயாரிக்கப்பட்ட பேச்சை ஐ. நா. சபையில் வாசித்த முன்னாள் வெளியுறவு அமைச்சரின் செயல் போல் தானா இதுவும்!! ஏன் இந்த தீர்மானம் குறித்து இத்தனை விளம்பரங்கள் என்று கேள்விகளும் ஓடாமல் இல்லை. பிரித்தானிய காட்சி ஊடகத்தின் வழி வெளிவந்த 'No Fire Zone - Sri Lanka's Killing Fields' ஆவணக்காட்சிப்படுத்தலும் காரணமோ!

தவிர, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி இம்மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டதும் செய்திகளில் வெளிவந்தது. நாராயணசாமியும், சல்மான் குர்ஷித்தும்   மாற்றி, மாற்றி என்ன சொல்லவருகிறார்கள் என்பது ஒருபுறம்!  இப்படி இந்த தீர்மானத்தை இந்தியாவானது வருமுன் ஆதரிக்கிறேன், ஆதரிக்கவில்லை என்பது போன்ற அரைகுறையான   அறிக்கைகள் எப்படி இருந்தாலும், இலங்கை-இந்திய உறவுக்குப் பின்னான வரலாற்று நிகழ்வுகளை, அதனால் தமிழர்களுக்கு ஏதும் நன்மைகள் விளைந்ததா என்பதையும் மீளப்பார்க்க வைக்கிறது.

1840-1850 வரையான காலப்பகுதியில் பிரிதானிய காலனியாதிக்கத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் தமிழகத்தமிழர்கள் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து தோட்டத்தொழிலுக்காக தேயிலைதோட்டங்களில் வேலை செய்யக் கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் குரியுரிமையை பறிக்கும் இலங்கையின் குடியுரிமைச் சட்டம் முதல், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றோரது காலத்தில் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் அவர்களில் ஒருபகுதியினர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டது, இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன் பின்னான அமைதிப்படை அட்டூழியம், அதைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முடிவு என்பது கடந்தகால இந்தியாவின் தமிழர்கள் குறித்த வரலாற்று அரசியல். இப்போது மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான அமெரிக்கத்தீர்மானமும், தமிழர்கள் மீது மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்படும் Structural Genocide க்கு எந்தவொரு கண்டனமோ, வருத்தமோ கூட இல்லாத அந்த தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவும், இதிலெல்லாம் இந்தியாவின் பங்கை உள்ளூர் முதல் உலக, சர்வதேச ஊட்கங்கள் வரை பேசிவிட்டன. என்ன, சில உள்ளூர் அரசியல்வாதிகள் தான் இன்னும் selective amnesia விலேயே இருக்கிறார்கள்.
 
 
அவர்கள் எப்போதுமே அப்படித்தானே என்று இந்தமுறையும் கடக்கிறேன். மொத்தத்தில் இந்தியா ஈழத்தமிழர்களின் நலன் கருதி எந்தவொரு ஒப்பந்தமும் இலங்கையுடன் செயதே இல்லை என்பதே வரலாறு.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த தீர்மானத்தில் என்று அதன் Draft ஐ இணையத்தில் தேடிப் படித்தேன். அடேங்கப்பா! பெளத்த-சிங்கள அரசியல் யாப்பை சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி முனையில் நடைமுறைப்படுத்தி, ஈழத்தமிழனுக்கான 65 வருட உரிமை மறுப்புகளை அமெரிக்கா ஒன்றிரண்டு பக்கங்களில் ஏதோ எழுதி தீர்க்கப்போகிறதா என்று வியந்து தான் போனேன். படித்துப் பார்த்தால் அந்த தீர்மான வார்த்தைகளில் தமிழன் என்றோ அல்லது தமிழர்களுக்கான உரிமைகள் என்கிற வார்த்தைப் பிரயோகமோ மருந்துக்கும் கிடையாது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்கம் என்கிற ஒரு பாரிய குறைபாடுகளுடனான ஒரு அறிக்கையை ஒட்டியே இந்த தீர்மானமும் (L.2). இலங்கையின் அரச நிர்வாகம், நீதிபரிபாலனம், பத்திரிகை சுதந்திரம் எல்லாமே சீர்கெட்டுக்கிடக்க அந்த நாட்டிடமிருந்து Meaningful Accountability யை எதிர்பார்க்கிறது என்கிற வெற்று நாடகங்களின் தீர்மானம்.
 
சென்றமுறை மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்துக்கு என்ன ஆனது என்று தேடினால், Inner City Press (http://innercitypress.blogspot.ca/2013/02/on-sri-lanka-uns-ban-ki-moon-accepts.html காட்டும் ஆதாரம் காறி உமிழ வைக்கிறது கேடுகெட்ட ஐ. நா. வின் செயற்பாடுகள் மீது. இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்காணித்து இப்போது 'Whitewash Report' கொடுத்திருக்கிறது என்கிறது Inner City Press. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஜப்பான் பிரதிநிதி, பங்களாதேஷ், ருமேனியா, மற்றும் Columbia University பிரதிநிதிகளை கொண்டதாம் இந்தக் குழு. இன்னொரு செய்தியில் இதே இன்னர் சிட்டி ப்ரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது, இலங்கையின் மனித உரிமைகள் சபைப் பிரதிநிதி மகிந்த சமரசிங்கேவுக்கு ஐ. நா. வின் செயலர் இலங்கைப் பிரச்சனை ஐ. நா. வின் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறினாராம் பெருமையாக பீத்திக்கொள்கிறாராம்.

இவை தவிர, இந்தியாவில் சனல் 4 இன் Callum Macrae தயாரித்த No Fire Zone - Sri Lanka's Killing Field காட்சிப்படுத்தல் ஒருவிதமான அலையை அரசியல் மட்டம் முதல் பொதுமக்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது. இந்தியாவானது அமெரிக்கா இம்முறை கொண்டுவரவிருக்கும் தீர்மானம் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் யாப்பின் வழியான பெளத்த-சிங்கள அடக்குமுறையும், காலங்காலமாக இடம்பெறும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையும் தடுத்த நிறுத்தப்படும் என்கிற ஒற்றை வார்த்தை கூட இல்லாத ஓரு தீர்மானம் யாருக்கு என்ன லாபம்!
 
வல்லான் வகுத்ததே சட்டம். வென்றவன் எழுதியதே வரலாறு. இது தான் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழினத்துக்கே வரலாற்று சறுக்கல். எங்கள் சுயநிர்ணய உரிமையை மறுப்பதில், வரலாற்றை திசைதிருப்புவதில் தான் எத்தனை சர்வதேச கூட்டு முயற்சிகள்.

Image: Google.
 

பிப்ரவரி 21, 2013

பொய்களை வாங்கும் உலகம்!


ஒரு தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ அநியாயம் நிகழ்ந்துவிட்டால் அதற்குரிய நியாயம் கிடைக்கவேண்டும் என்று பதைப்பதும், துடிப்பதும் மனித இயல்பு. இந்த அடிப்படையே தற்காலத்தில் எத்தனையோ  வழக்குகள், மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்த பிரச்சனைகள் குறித்த தொலைக்காட்சித் தொடர்கள்  வெற்றிக்கு காரணம் என்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒருவருக்கு நியாயம் கிடைக்கும் என்று அது வழங்கப்பட்ட பரிமாணங்களைக் கொண்டு பார்வையாளர் ஒரு முடிவுக்கு வரலாம். சில சமயங்களில் ஏற்கனவே அறியப்பட்ட ஒரு வழக்கு அல்லது நிகழ்வு குறித்த பல்கோணப்பார்வையை கொண்டவர்களுக்கு அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த பார்வைப் பரிமாணம் அதுவழங்கப்பட்ட கோணத்திலிருந்தும் மாறுபடலாம்.

தவறு ஒன்று இழைக்கப்பட்டது என்றாலே உடனடி நியாயம் கிடைக்கவேண்டும் என்னும் மனித இயல்பின் தன்மையே ஒரு சினிமா குறியீட்டு நாயகன் அல்லது நாயகி தன்வழியில் தீர்ப்பு வழங்கும் மசாலா சினிமாக்களின் வெற்றிக் குறியீடும் ஆகியும் போகிறது.


சரி, இதிலிருந்து விலகி நான் பேசவந்ததை பேசுகிறேன். இலங்கை என்கிற நாட்டில் தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இறுதித்தீர்வை நோக்கிய போராட்டமும் பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஈழத்தமிழர்களின் போராட்டக் களம் அந்த மண்ணைக் கடந்தும் சர்வதேச அளவில் அப்பிரச்சனை பேசப்படும் அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பரிமாண வளர்ச்சியை கண்டிருக்கிறது, லட்சணக்கான அப்பாவிகளின் உயிர்ப்பலி, காணாமற்போனோர், மற்றும் விடுதலைக்காகப் போராடியவர்களின் தியாகம் என்பவற்றை உள்ளடக்கியபடி. 2009 மே மாதத்திற்குப் பிறகு இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் எத்தனையோ பிரச்சனைகளில் ஒன்றாக தவணைமுறையில் பேசப்பட்டு வருகிறது. ஈழப்பிரச்சனை பாலஸ்தீனப் பிரச்சனை போல் ஐ. நா. வின் பொதுச்சபையில் பேசப்படவேண்டியது. ஆனால், அவ்வாறு பேசப்படுவது கிடையாது.


முள்ளிவாய்க்காலில் இழைக்கப்பட்டது போர்க்குற்றம் என்கிற குறுகிய சட்டத்திற்குள் இப்பிரச்சனையை அடக்கியதோடு மட்டுமில்லாமல், ஏதோ தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காரணத்தால் தான் அங்கே தங்கள் சொந்தமண்ணில் வாழ்ந்த தமிழர்களுக்கு எந்தவொரு அரசியல் உரிமையும் கொடுக்கமுடியவில்லை என்பது போல் நாடகமாடிய பெளத்த  சிங்கள  அரசாட்சியாளர்களுக்கு கொஞ்சம் நெருக்கடி. இயலுமானவரை Lobbying Group, International Crisis Group, இந்தியா, அமெரிக்கா போன்றோரது உதவியுடன் ஒருவேளை இதை தட்டிக்கழிக்கழிக்கலாமென்றால் மனித உரிமை அமைப்புகள் விடுவதாயில்லை. கூடவே பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 வேறு கிடுக்கிப் பிடி போடுகிறார்கள். விளைவு இலங்கை ஆட்சியாளர்கள் வழக்கம் போல் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்கிற தென்னாபிரிக்கப் பாணியில் ஏதோ ஒரு குறைகளுடன் கூடிய அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் மனித உரிமைகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் நாடகம்.  நல்லிணக்க ஆணைக்குழுவை மனித உரிமை அமைப்புகள் கூட்டாக அது சர்வதேச தரத்தை கொண்டதல்ல என்பதோடு மட்டுமல்ல அந்த அமைப்பின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.


இம்முறையும் எதிர்வரும் மார்ச் மாதம் மறுபடியும் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரமும் பேசப்படும், நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், அதை பரிசீலனை செய்யவும் மறுபடியும் கால அவகாசம் வழங்கப்படும்.


பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதுமே தங்களுக்குரிய நீதி தாமதமின்றி கிடைக்கவேண்டுமென்றே நினைப்பார்கள். ஆனால், அந்த நீதியை வழங்கும் ஜனநாயக பரிபாலனமும், நீதியலகுகளும் எவ்வாறு குறைபாடுகளைக் கொண்டது என்பது இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு கிடைத்த அனுபவமும் சாட்சி. இதுகுறித்த அடிப்படைகளை வசதியாய் ஒதுக்கிவிட்டு, இலங்கை அரசியல் யாப்பின் வழி தமிழர்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை மறந்துவிட்டு வெறுமனே நான்கு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய இறுதித்தீர்வு நோக்கிய நடைமுறை அல்ல.

இதைப் பலமுறை எழுதியாகிவிட்டது என்றாலும் மறுபடியும் காலத்தின் தேவைகருதி, இலங்கை அந்நியப்படையெடுப்புக்கு முன் மூன்று தனித்தனி ராச்சியங்களை கொண்டிருந்தது. யாழ்ப்பாண ஆட்சி (Kingdom) 1215-1619 AD வரை நிலைத்திருந்தது என்பதும்; Colebroke-Cameron Reforms 1833 தான் மூன்று ராச்சியங்களையும் பிரிதானிய ஆட்சியில் ஒன்றிணைத்து அபிவிருத்திக்கான ஆட்சி அதிகாரத்தையும் சிங்களர்களிடம் கொடுத்தது என்பது வரலாற்று உண்மைகள். இதன் பிறகு சுதந்திர இலங்கையின் பெளத்த சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் அரசியல் யாப்பில் தமிழர்களுக்குரிய அடிப்படை உரிமைகளைக் கூட பறித்ததும், தாங்களே ஆளுவதற்கு ஏற்றவாறு யாப்பை மாற்றியமைத்ததும் வரலாறு. சுயநிர்ணய உரிமை குறித்து எந்தவொரு அரசியல்வாதியும் பேசமுடியாது என்கிறது இலங்கை அரசியல் யாப்பின் 6வது திருத்தச்சட்டம். இது தான் இலங்கை பேணும் ஜனநாயகத்தின் போலிமுகம்.

இலங்கை அரசியல் யாப்புக்கு முற்பட்ட வெளியக சுயநிர்ணய உரிமையையும் எமக்குரிய வரலாற்று நிலத்தையும் மீளக்கேட்டால் அது தவறு இல்லை. அதைப்போலவே, வரலாற்று ரீதியான சுயநிர்ணய உரிமையையும் தாண்டி ஒரு தனித்தேசிய இனமாக எங்களுக்கு ஐ. நா. சர்வதேச ஒப்பந்தங்களின் படி சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்கும் உரிமை உண்டு. ஆனால் இதெல்லாம் 2009 மே மாதத்திற்குப் பிறகு நிறையவே அரசியல் திசைதிருப்பல்களால் போர்க்குற்ற விசாரணை என்கிற ஒரு கோணத்தில் வேறு பார்க்கப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை தேவைதான், மறுக்கவில்லை. அத்தோடு சேர்த்து சமாந்தரமாக தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்தும் பேசவேண்டியது கட்டாயம் என்பது என் புரிதல்.


இந்த அடிப்படைகளை மாற்றித்தான் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கவேண்டும். ஆனால், அதற்கு காலம் நிறைய எடுக்கும். இதெல்லாம் நான் அவ்வப்போது ஈழத்தமிழர்கள் குறித்த விடயங்களை அறியத்தரும் தமிழ் ஊடக அரசியல் அவதானிகள் சொல்வது. சில அரசியல் அவதானிகள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அது ஒருபுறமிருக்க, இந்தமுறை ஐ. நா. மனித உரிமை சபைக் கூட்டத்தொடர் இடம்பெறும் போது அங்கே இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை உடைக்க தமிழர்கள் அமைப்புகள் இருக்குமா என்றால், நான் வாழும் நாட்டிலிருந்து இரண்டே இரண்டு அமைப்புகள் பங்குபற்றும் என்கிறார்கள் தமிழ் ஊடகங்கள். ஒன்று, Canadian Centre for Tamils, மற்றது Lawyers Right Watch. இந்த அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் தங்கள் செயற்பாடுகளை, மனித உரிமை சபையின் நடைமுறைகளை இலங்கை விடயத்தில் கொஞ்சம் அறியத்தந்தார்கள்.

இதில் நாடுகடந்த தமிழீழ அரச நிலைப்பாடுகள் என்னவென்றால், அவர்கள் இந்தமுறை இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளப்போவதில்லையாம். அவர்களின் நிலைப்பாட்டை உருத்திரகுமாரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கினார் போலிருக்கிறது. நான் தவறவிட்டுவிட்டேன். இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்களால் எப்படி தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எப்படி மக்கள் ஆணை வழங்கப்பட்டதோ அதே போல் தானே புலம்பெயர்தேசத்தில் ஜனநாயக வழியில் நாடு கடந்த அரசுக்கும் மக்கள் தங்கள் தார்மீக ஆதரவை ஈழம் நோக்கிய இறுதிதீர்வை நோக்கி முன்னெடுக்க வேண்டுமென்று ஆதரவு வழங்கினார்கள். இடையில் இவர்கள் இருவரது நிலைப்பாடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் குழப்பமடையவே வைக்கிறது. கொடுக்கப்பட்ட மக்கள் ஆணையை நிறைவேற்றாதவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டியதும் எம் கடமை.

இதைத் தவிர்த்து மனித உரிமை கூட்டத்தொடரின்போது பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 காண்பிக்கப்போகும் இன்னொரு இறுதிப்போரின் No Fire Zone இல் நடைபெற்ற போர்க்குற்றங்களின் காணொளி ஒன்றையும் காண்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது குறித்த எதிர்ப்பார்ப்புகளும் உண்டு. ஏற்கனவே அது இந்தியப் பாராளுமன்றத்தில் காட்டப்பட்டும் விட்டது. அதில் வரும் ஒரு சில காட்சிகள் குறித்த நம்பகத்தன்மையை குறித்து இந்திய உள்துறை அமைச்சர் சந்தேகம் எழுப்பியிருந்தார் என்பது தெரிந்ததே.

வழக்கம் போல் இலங்கை ஆட்சியாளர்கள் இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவார்கள். அதை போலி என்றே தாங்களே ஆராய்ந்து அறிக்கை விடுவார்கள். அல்லது சென்ற முறை போல் "Lies Agreed Upon" என்கிற ஒரு பிரச்சாரப் படம் International Crisis Group இன் உதவியுடன் வெளியிடப்பட்டதாக இந்தத் தளம் சொல்கிறது.
 "This story starts in September of last year with a screening of “Lies Agreed Upon” – a government of Sri Lanka propaganda film which was expertly deconstructed by the International Crisis Group."
இந்த தளத்தின் இணைப்பை இங்கே கொண்டுவர இஸ்டமில்லை என்றாலும் தேவை கருதி இணைப்பை கொடுத்திருக்கிறேன்.

இதுபோன்ற பாலுக்கும் காவல். பூனைக்கும் காவல் என்கிற இரட்டை வேடதாரிகள் சொல்வதைக் கொண்டு இப்போது மீளிணக்கம் பிறகு சுயநிர்ணய உரிமை என்பதற்காகவா இவ்வளவு போராட்டம் இழப்பு எல்லாம். எதிர்வரும் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் மீண்டும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் செய்திகள் கண்ணில் படுகின்றன. எல்லாமே போர்க்குற்ற சர்வதேச விசாரணையை மழுங்கடித்து, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை கைவிடவேண்டும் தமிழர்கள் என்பதே காரணம் என்கிறார்கள் சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள்.
ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அது நீண்ட நாட்கள் எடுக்கலாம். இதெல்லாம் யதார்த்த உண்மைகள் என்றே கொண்டாலும், எப்படி தெற்கு சூடானுக்கு விடுதலை கிடைத்தது! அதையும் கொஞ்சம் கருத்திற்கொள்ளலாமே. சர்வதேச போர்க்குற்ற விசாரணை  தேவை என்கிற அதேவேளை சுயநிர்ணய உரிமையையும் முன்னிறுத்தி பேசலாமே அரசியல் தெரிந்தவர்கள்.
இதற்கு மேல் எனக்கும் சொல்ல ஏதுமில்லை. மீதியை மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடக்கும் போது காணவேண்டியது தான். நீதி வேண்டுமென்று ஏங்கிக் கிடக்கும் ஈழத்தமிழனுக்கு மனித உரிமைகள் சபையின் செயற்பாடுகள் நிச்சயம் குறியீட்டு திரை நாயக, நாயகிகள் போன்ற வெற்றுத்தோற்றமே என்பதையும் ஜீரணிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
Image: Google.

பிப்ரவரி 07, 2013

ஐ. நா. அலுவலக முற்றுகை போராட்டம்எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு என்று ஒரு பொன்மொழி உண்டு. சகலசந்தர்ப்பங்களிலும் காரணகாரியத் தொடர்புகளை யோசித்தோ அதன் விளைவுகள் குறித்து ஆராய்ந்தோ செயலாற்ற முடியாது என்பது மனித யதார்த்தம். இது சாதாரண மனிதனுக்கும் அவனை உள்னின்று இயக்கும் வாழ்க்கைத் தத்துவத்துக்கும் பொருந்தும். அரசியல், போர், பஞ்சம், பசி, பிணி இவற்றிலிருந்து தப்பி உலகம் தழைத்திருக்க, மனிதம் காக்க என்று உருவாக்கப்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள் அதற்காய் உருவாக்கப்பட்ட பதவிகளின் விம்பங்கள் இவர்கள் தன்னியல்பினின்றும் விலகி தான் தோன்றித்தனாமாகவும், செயற்பாடுகளின் மையமாய்க் கொண்டியங்க வேண்டிய நிறுவன விதிகளுக்கும் அப்பாற்பட்டு துணியும் கருமம் இழுக்கன்றோ!

ஈழத்தமிழர்கள் தலைவிதியை 2009 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தீர்மானிக்கும் ஒரு முக்குய காரணியாய் ஐக்கிய நாடுகள் சபையையும் அதன் அதிகாரத்தை தம்மகத்தே தக்கவைத்துக் கொண்டவர்களையும் குறித்தே பேசுகிறேன். இலங்கையின் அடிப்படை யாப்பியல் அரசியல் அமைப்பில் கூட தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்காமல் போனதாலும்; ஈற்றில் அதுவே அரசியல் சுயநிர்ணயப் போராட்டமாக உருவாகி இன்று அதன் போக்குகளும் திசையும் உருமாறும், வழிமாறும் ஆபத்தில் இருக்கிறது. அல்லது, ஆபத்து இருப்பதை உணராமலே நகர்கிறது, நகர்த்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் அழிவை, சொல்லவொணாத் துயரை கண்ணுற்றும் கண்ணுறாதது போல் உண்மையைத் துறந்தே பொய்மையிடத்தில் அடைக்கலம் கொண்டவர்களுக்கு இடித்துரைக்க வேண்டித்தான் உள்ளது.

மனிதநேயம், சமாதானம் என்கிற போர்வையில் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் ஈழவிடுதலைப் போர் பாதி சிதைக்கப்பட்டது. அதிலும் விடுதலைப் புலிகளை குற்றம் சொல்லியே அரசியல் மேதாவித்தனம் காட்டியவர்கள் ஒருபுறம். தமிழீழவிடுதலைப் புலிகளை விடுதலை நோக்கிய பயணத்தினின்று களைந்தாயிற்று. அப்படியானால், விடுதலையின் நோக்கமும், தார்ப்பரியமும் புரிந்துகொண்டாயிற்றா சர்வதேசத்தால் என்றால் அதுவும் இல்லை என்பதே வரலாறு. தமிழீழவிடுதலைபுலிகள் அழித்தொழிக்கப்பட்டதே தமிழர்களின் கெளரவமான சுயநிர்ணயக் கோரிக்கையை சகுனித்தனமாக மறுக்கவும், ஒழிக்கவும் என்பதையும் ஐ. நா. வும் அதன் சில நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகளும் தான் தங்களையும் அறியாமல் எங்களிடம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நான் செய்தித்தளங்களை, ஐ. நா. வின் செய்திகளை வெளியிடும் Inner City Press வரை கவனித்ததில் ஈழம்குறித்த சர்வதேச அரசியல் விவகாரங்களில் சில பெயர்களை குறிப்பிடாமல் போவதென்பது பாவச்செயல். இவர்களில் முக்கியமானவர்கள் என்று என் அறிவுக்கு எட்டிய பெயர்கள், ஐ. நா. பொதுச்செயலர் பான் கி மூன், இவருக்கு உதவவென அமர்த்தப்பட்ட அதிகாரி விஜய் நம்பியார், ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது ஐ. நா. வின் பேச்சாளராய் இருந்த ஜோன் ஹோம்ஸ், பாதியிலேயே ஓய்வு பெற்ற கோர்டன் வைஸ், அதன் பிறகு ஐ. நா. வின் அதன் அதிகாரிகளின் ஆணையை ஏற்று அறிக்கை தயாரித்த தருஸ்மன் குழு, ஈழத்தின் இறுதி கட்ட நிகழ்வுகளில் ஐ. நா. வின் உள்ளக செயற்பாடுகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பித்த Charles Petrie. மேலேயுள்ளவர்களின் நெஞ்சின் (அ)நீதியை ஈழத்தமிழர்கள் விடயத்தில் உலகிற்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர் மாத்யூ லீ என்பவர், இன்னர் சிட்டி ப்ரஸ் இன் செய்தியாளர்களில் ஒருவர். அவர் இப்போது அந்தப் பதவியில் இல்லை.

அடுத்து, பான் கி மூன், விஜய் நம்பியார், அவரது சகோதரர் சதீஸ் நம்பியார், ஜோன் ஹோம்ஸ் இவர்களது உள்முகம் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அதை இந்தக் கட்டுரையில் தெளிவாய் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார்கள் மே 17 இயக்கத்தினர். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சட்டபூர்வமற்றதாக ஆக்க இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச சுயாதீன விசாரணையை முடக்கி, தமிழர்களை நிரந்தர அரசியல் அடிமைகளாக்குவதே நோக்கம் என்பதை இவர்கள் மனிததர்மம் மற்றும் தொழில்தர்மத்தினின்றும் தங்களை விலக்கி வைத்து தன்னியல்பாக, தான்தோன்றித்தனமாக ஐ. நா. விதிகளையும் மீறிய செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கிறது. இவையனைத்தும் வெற்றுக் குற்றச்சாட்டுகள் அல்ல. ஐ. நா. வின் செயற்பாடுகள் குறித்த காலம் தாழ்த்தியேனும் வெளிவந்த Petrie Internal Review Report பகரும் சான்றுகள். மேலேயுள்ள பெயர்களிம் மேல் அழுத்தினால் ஆதாரங்கள் காணொளிகளோடு கிடைக்கும்.

 இதுபோல் இணையத்தில் செய்தித்தளங்களில் தேடினால் ஆயிரமாயிரம் ஆதாரங்கள் இந்த நேர்மையற்றவர்களின் சகுனித்தனமான சாணக்கியம் பற்றி கொட்டிக்கிடக்கிறது. அப்பப்பா, எத்தனை அறிக்கைகள் மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் என்கிற பெயரில் வல்லாதிக்க கொள்கைகளுக்கு துணைபோகிறவர்களின் அரசியல் பாடங்கள், ஆய்வறிக்கைகள், ஆணைக்குழுவின் போலியான அறிக்கைகளும் அதற்கான பதில் அறிக்கைகளும் என்று!

இத்தனை அறிக்கைகளையும் இதயசுத்தியோடு ஆராய்ந்து உண்மையை உரக்கச் சொன்னாலே தமிழனுக்குரிய சுயநிர்ணய உரிமை அதுவாய் அமைந்துவிடுமே!

இவர்களிடத்தே இல்லாத அரசியல் நேர்மையை என் எழுத்துக்கொண்டு அறுத்துத் தேடினாலும் பயனில்லை. என் கட்டுரையின் நோக்கம் ஒரு இனத்தையே குழிதோண்டிப் புதைதவர்களின் போலி அரசியல் முகம் வெளியுலகிற்கு காண்பிக்கப்படவேண்டும். அதில் நாம் எல்லோரும் ஒரே அணியில் நிற்கவேண்டும் என்பதே. தமிழர்களின் மக்கள் ஆணையை அவ்வப்போது தேர்ந்தெடுத்தே மறந்துபோகும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு முதற்கொண்டு, தமிழக அரசியல் கட்சிகள் வரை இவர்களின் அரசியல் பேச்சுகளும், செயற்பாடுகளும் காகித அரசியலாய் கோப்புகளை மட்டுமே நிறைக்கும். சிறு, சிறு அமைப்புகளாகவேனும் ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் நோக்கோடு செயற்படும் மே 17 இயக்கம் மற்றும் பல சிறிய அமைப்புகளின் ஆதரவோடு உலகெங்குமுள்ள ஐ. நா. அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்திற்கு எங்களாலான ஆதரவை கொடுப்பதும் எங்களின் அரசியல் தீர்வு நோக்கிய நகர்வுகளில் ஒன்றே.


தமிழக அரசியலிடம் ஈழவிடுதலைக்கான தார்மீக ஆதரவைக் கூட எதிர்பார்க்க முடியாது என்பதை அவர்களின் அரசியல் கேலிக்கூத்துகளிலேயே நிரூபித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாற்றி, மாற்றி அரசியல் பிரச்சாரம் செய்யவே பல சமயங்களில் ஈழப்பிரச்சனை கையாளப்படுகிறது அங்கே. ஆதலால், எங்கள் சுயநிர்ணய உரிமைப்போரின் நியாயத்தையும், அதன் அரசியல் அவசியத்தையும் புரிந்த தமிழகத் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எம் ஆதரவை தெரிவித்து நமக்குரிய ஆதரவை வலுப்படுத்திக்கொள்வதே சிறந்தது என்பது என் கருத்து.
 
வரும் மார்ச் மாதம் ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையில் மீண்டும் அமெரிக்கா இலங்கை குறித்த தீர்மானம் கொண்டுவரவிருப்பதாக செய்தி. அது என்னவாக இருக்கும் என்பது ஒருபுறம். ஆனால், அமெரிக்கா கொண்டுவரும் புதியதீர்மானம் இனி அணிசேரா நாடுகள், இஸ்லாமிய நாடுகள், வாக்கெடுப்பு, விலகியிருத்தல் என்கிற சம்பிரதாய நாடகங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் அதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவொரு நல்ல தீர்வும் கிடைக்காது என்பது திண்ணம். ஏற்கனவே மனித உரிமைசபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் குற்றமும் குறைகளும் நிறைந்ததென ஒதுக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் என்கிற பரிந்துரைகளில் ஒன்றுக்கேனும் செயல்வடிவம் கொடுக்காத இலங்கை சிங்கள அரசு, இனி புதிதாய் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இந்தியாவோடு சேர்ந்து ஆடும் நாடகமும் அயர்ச்சியையே கொடுக்கும்.
 
இலங்கை அரசதரப்பும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அவரவர் பயணங்களோடும் நிகழ்ச்சிநிரல்களோடும் உலாவருகிறார்கள். மறுபடியும், மார்ச் மாத மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசின் பிரச்சார பொம்மைகளான தமிழ் கட்சித்தலைவர்கள் முதல் இலங்கை அரசுடன் சேர்ந்தாலே தமக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைமை வரை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் ஒருகுறையுமின்றி வாழ்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்வார்கள்.
 
இந்தப் போலிப் பிரச்சாரங்களை ஓரளவுக்கேனும் தகர்க்க தமிழர்களின் இறுதியானதும், உறுதியானதுமான தீர்வு எதுவாய் இருக்கவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தியே ஆகவேண்டிய தேவையும் இருக்கிறது. சில சமூகவலைத்தளங்களில் உலவும் போதே தமிழர்கள் அல்லாத சிலர் சொல்வது இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை தேவையில்லையாம்! அதை ஒரு ஐ. நா. வின் மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்திவிட்டு முடிவை பார்க்கலாமே! என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமையே இறுதித்தீர்வாய் இருக்கமுடியும். அதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொன்னால் என்ன!


இது மே 17 இயக்கத்தின் கட்டுரையின் ஒரு பகுதி.....

இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்தியதை உடனடியாக நிறைவேற்றுவதே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி நிவாரணம்! ஐ.நாவே அதை நிறைவேற்று!!..... பிப்ரவரி 12, 2009இல் ஜெனிவாவில் ஐ.நா. அலுவலகத்திற்கு முன் தமிழீழ விடுதலையையும், மக்களையும் காக்கக் கோரி தீக்குளித்து தியாகம் எய்திய முருகதாசனின் நினைவு நாளில் ஐ.நா. அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். அயோக்கிய அதிகாரிகளையும் அதன் பின்னுள்ள இந்திய அரசினையும் விசாரிக்க வலியுறுத்துவோம். இவர்கள் தடுத்து வைத்துள்ள சர்வதேச பொது வாக்கெடுப்பையும், இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும் உடனே நடத்தச் சொல்லி சர்வதேசத்தினை நெருக்குவோம். நமது விடுதலையை நாமே வென்றெடுப்போம்.  மாவீரன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் பான் – கி- மூனினைப் பற்றி முன்வைத்த அவதானிப்புகள் வரலாற்றில் உண்மை என்றே அறியப்படுகின்றன. இந்த தமிழ்ச் சமூகத்தின் தியாக செம்மல்களை நினைத்து அவர்களின் நினைவாக நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுப்போம் என மே பதினேழு இயக்கம் அழைப்பு விடுக்கிறது. கட்சி, சாதி, எல்லைகள் கடந்து தமிழராய் ஒன்றாவோம். நாம் பெரும் திரளாய் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் சர்வதேச அரங்கில் நடக்கும் நாடகங்களை உடைத்து தமிழீழ விடுதலையை உறுதி செய்யட்டும். 2009இல் நாம் செய்யத் தவறிய பொறுப்புகளை தற்போது செய்து முடிக்க ஆயிரமாய் அல்ல, லட்சங்களாய் அவரவர் இயக்க, கட்சி அடையாளங்களோடு தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.” விவரங்களுக்கு மே 17 அமைப்பின் தளம்.

எங்களுக்குள் ஆயிரமாயிரம் வேறுபாடுகள் இருக்கட்டும். அது எம்மினத்தையே மீண்டும், மீண்டும் காவுகொள்ளவேண்டாமே! இலக்கும், நோக்கும் ஒன்றுபட்டால் வெற்றிக்கும், விடுதலைக்கும் தோள்கொடுக்கலாமே!


Image Courtesy: Google