டிசம்பர் 22, 2013

2013, மீட்டவை!


2013, இன்னொரு வருடம். தன் வருட முடிவுக்கான நாட்களை எண்ணியபடி நிறைவுபெற்றுக்கொண்டிருக்கிறது. காலம் நிகழ்த்திச் செல்லும் அரசியல், வாழ்வியல், பொருளியல் மாற்றங்களை வருடம் மாதம், நாள், கிழமை என்று ஞாபகப்படுத்திக் கொண்டாடுவது வரலாறாகிவிட்டது. வரலாறு என்று தனியாய் ஏதுமில்லை. மனிதவிடுதலையே வரலாறாக கொள்ளப்படுகிறது. மனிதவிடுதலையே மனிதர்குலம் சென்றடைய வேண்டிய இலக்கு என்றாலும் வாழ்வியல் நிகழ்வுகளில் பொழுதுபோக்குகள் என்று இந்த வருடத்தில் எனக்குப் பிடித்தது என்று திரைப்படங்களை, பாடல்களை, வியாபாரநோக்கில் முக்கியப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைப் பட்டியலிட எனக்குத் தோன்றவில்லை. மாறாக, ஈழம் குறித்தே என்ன நடந்தது என்று திரும்பிப்பார்க்க வைக்கிறது. ஒரு தேசிய இனமான மக்களுக்கு (Peoples) கிடைக்கும் விடுதலை என்பதும் மானிடவரலாற்றின் ஒரு அசைவே.

அரசியல் விடுதலை பெறும் ஒரு இன மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பானது, உலகநடைமுறைகளோடு ஒத்துப்போவது, தங்களை பொருளாதார, அரசியல் ரீதியாக கட்டமைத்துக்கொள்வது என்பதான் பண்புகள், நெறிகளோடு; தம்மைத்தாமே ஆள்வதற்கு தகவமைத்துக்கொள்ளும் அரசநிர்வாக, ஆட்சி நிறுவனங்களின் கட்டமைப்புக்குக் கட்டுப்படும் அதேநேரம், கெளரவமாகவும், மனித உரிமைகளோடு சுதந்திரமாகவும் வாழவே விரும்புகிறார்கள். இருந்தும், ஒரு தேசிய இனம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவலப்படும்போது , தனக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க,வரலாற்று தேசத்தை கட்டியமைக்க செத்துப்பிழைக்கவேண்டியிருப்பதை நினைக்கும் தோறும்; கடந்தகால மனிதவரலாற்றைப் படிக்கும்போது மனதில் நிகழ்காலமும் இறந்தே பிறக்கிறது என்பதாய் தோன்றுகிறது. 

பாறைகளை முட்டி, மோதி முளைத்துக்கிளம்பும் சின்னஞ்சிறிய ஒற்றைச் செடியாய் அடிமைவாழ்விலிருந்து அரசியல் விடுதலைப் பெற மக்கள் இழந்ததும், இழந்துகொண்டிருப்பதும் ஏராளம். மனிதவிடுதலை முற்றுப்பெற்றுவிட்டதாய் நிறுவமுற்படும் அரசியல் தத்துவங்களும் உண்டு. முதலாளித்துவமும் ஜனநாயகமுமே மனிதன் தன்னை ஆள்வதற்கான தீர்வான அரசியல் மற்றும் சனநாயக நிறுவனங்கள் என தீர்மானமாக நிறுவமுற்படுவதால் அனைவருக்கும் அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது என்று நம்பவேண்டுமா! ஆள்வதற்கு வசதியாய் ஆயிரம் வழிவகைகளைக் கண்டுபிடித்தவர்கள் விடுதலைக்கான சர்வதேச சாசனங்களை, நியதிகளை, நீதிகளை அவரவர் வசதிக்கேற்றாற்போல் மறந்தும், மறைத்தும் விடுகிறார்கள். கிடைப்பதை, இருப்பதில் சிறந்ததாய் திணிக்கப்படுவதைத் தேர்ந்தெடுத்து திருப்திப்பட்டுக்கொள்ள மனிதவிடுதலையும் சுதந்திரமும் என்ன முதலாளித்துவச் சந்தையின் பண்டமா!

தமிழீழவிடுதலை கேட்டு சாத்வீக வழிகளிலும், ‘அரசியல்’ வன்முறையின் வழிகளில் ஆயுதப்போராட்டத்தின் வழி கேட்டபோது எப்போதும் புறக்குடத்தில் நீராய் ஊற்றப்படுவது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு.’ தீர்வு கொடுக்க மனமிருப்பவனுக்கு எதுக்கு ஆறு அல்லது ஏழு தசாப்தங்கள்! உலகம் தரமறுக்கும் நீதிக்காய், நாங்கள் விரும்பும் நியாயமான அரசியல் தீர்வுக்காய் போராடிப் போராடி இனவழிப்பின் கொடுமையையும் தாண்டமுடியாமல் இன்னும் எங்கள் மண்ணை, மக்களை காப்பாற்று என்று அபயக்குரல்  எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இந்த அபயக்குரலை ஒலித்தபடி அவ்வப்போது இன்னும் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும் ஒரு சில நீதியைப் பிழைக்கவைக்கும் அமைப்புகள் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற சர்வதேசம் உணர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உண்மையைப் போட்டுடைத்திருக்கிறார்கள். தமிழர்கள் இலங்கையில்  இன்னும் இனப்படுகொலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையை உரைக்கிறார்கள்.

மேலே தொடர்வதற்கு முன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples' Tribunal) பற்றி ஓரிரு வரிகள். இந்த அமைப்பு 1979 இல் இத்தாலியில் Bologna என்கிற இடத்தில் உருவாக்கம் பெற்றிருக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவது, எந்த ஒரு நாட்டின் அரசையும் சாராத, சுயாதீனமான அமைப்பு என்று தன்னை கட்டமைத்து செயற்பட்டுவருவதாய் சொல்லப்படுகிறது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அவற்றை விசாரணை செய்கிறது. இதில் நீதிபதிகளாக அங்கம் வகிப்பவர்கள் சர்வதேச அளவில் பிரபலமான நீதிபதிகளும், நோபல் பரிசு வாங்கியவர்களும் அடங்குவர். 

புலம்பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்ட ஒரு சில சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பான, ‘இலங்கையில் நடந்தது தமிழின இனப்படுகொலை’ என்பது இந்தவருடத்தின் தமிழர்களின் ஈழவிடுதலை நோக்கிய ஒரு சிறியவெற்றியே. இலங்கை அரசு போர்க்குற்றவாளி என்கிற தீர்ப்போடு தமிழர்களின் நிலங்கள் தொடர்ந்தும் தமிழர்கள் பகுதியில் சூறையாடப்படுவதும்; தமிழர்களின் பிறப்புவீதத்தை குறைப்பதற்கான இலங்கை அரசின் திட்டங்களையும் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பான குற்றமாக இலங்கை அரசின் மீது வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவோ அல்லது தங்கள் மீதான நம்பகத்தன்மையை இன்னும் மக்கள் விட்டுவிடக்கூடாது என்கிற நோக்கிலோ ஐக்கிய நாடுகள் சபையின் உரிய பிரதிநிதிகளும், ஐ. நா. இலங்கையில் போரின் உச்சக்கட்டதின் போது தன் (திட்டமிடப்பட்ட) செயலின்மையை பட்டும், படாமலும் ஒப்புக்கு "Systematic Failure" என்று ஒப்புக்கொள்கிறது. சார்ள்ஸ் பெற்றி என்பவரின் ஐ. நா. வின் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான நடவடிக்கைகள் குறித்த உள்ளக அறிக்கை யாவரும் அறிந்ததே. இருந்தும், அண்மையில் கூட ஐ. நா. வின் பிரதி செயலர் Jan Eliasson தங்கள் செயலின்மையை அராயோ, ஆராயோ, ஆரோயோ என்று ஆராய்ந்து இப்பொழுது 'Rights Up Front' என்கிற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்களாம் செயற்திட்டத்துக்காக, அதாவது 'Action Plan.' 

2008 இன் இறுதிப்பகுதிகளில் கிளிநொச்சியில் இருந்து இவர்களின் மனிதாபிமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நீங்கள் போனால் நாங்கள் சாட்சியின்றி கொல்லப்படுவோம் என்கிற தமிழர்களின் கூற்று முதல் ஆரம்பக்கட்டத்திலேயே இறந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கையை குறைத்தும், மறைத்தும் செய்த களவுநாடகங்களை, ஐ. நா. வின் செயலற்றதன்மையை ஈழத்தின் இறுதியுத்தம் சம்பந்தமாக இன்னர் சிட்டி பிரஸ் தன் செய்திக்குறிப்பில் சொல்லிச்செல்கிறது. ஐ. நா. பிரதி செயலர் மறுபடியும் சொல்வது, “Never again" என்று சொல்லிவிட்டு ஐ. நா. மறுபடியும், மறுபடியும் ஐ. நா. செயலர் மட்டும் தோற்கவில்லையாம், கூடவே அங்கத்துவ நாடுகளும் தோற்றுவிட்டனவாம். அவர் உதாரணமாய் கூறுவது ருவாண்டா. ருவாண்டாவில் நடைபெற்றது இனப்படுகொலை என உலகமே ஒப்புக்கொண்டது. அப்படியானால் ருவாண்டாவில் நடந்தது போல ஈழத்தில் நடந்ததும் ‘இனப்படுகொலை’ என்று தன்னை அறியாமலே உள்ளுக்குள் ஒத்துக்கொள்கிறாரா இந்த கனவான். அதை வெளிப்படையாக எப்போது சொல்வார்களோ! ஐ. நா. வின் செயலற்ற தன்மைகளைப் பேசினால் ஆயுளுக்கும் அதைப்பற்றியே பேசி காலவிரயமும் அயற்சியும் மட்டுமே மிஞ்சும். 

அடுத்து, இந்த வருடம் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகள் மற்றும் பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் உருவான நாடுகளின் விளையாட்டு அமைப்பான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் பங்குகொள்ளும் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தொடர் இலங்கையில் நடைபெற்றது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளை எல்லாம் சேர்த்தும், கரைத்தும் நடந்துமுடிந்திருக்கிறது. மருத்துவர் பிரயன் செனிவிரட்னே சொல்வது, இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாக ராஜபக்‌ஷேவை பொறுப்புக்கூற (Accountability) வைப்பதை பொதுநலவாய நாடுகளின் தலைமைகள் செய்யும் என்று நம்புவர்கள் 'realpolitik' தெரியாதவர்கள் என்று. 

ஐ. நா.வின் மனித உரிமைகள் சபையின் ஆணையர் நவநீதம்பிள்ளை சொல்வது போல், இலங்கை  ஏதேச்சாதிகார ஆட்சியின் திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அது தமிழர்களு மட்டுமல்ல, சிங்கள மற்றும் மற்றைய இனசமூகத்துக்கும் இலங்கையில் அச்சுறுத்தலே. எப்படியோ, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தொடரில் பங்குபற்றிய பிரித்தானியக் கூட்டமைப்பின் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் இறுதி யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு ‘சுயாதீன விசாரணை’ தேவை என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். 1799 ம் ஆண்டில் இலங்கையில் மூன்று ராச்சியங்கள் இருந்தது, தமிழர்களின் கோட்டை ராச்சியம் உட்பட, என்று ஒப்புக்கொண்டவர்கள் பின்னர் 1833 ம் ஆண்டு Colebrooke - Cameron Reforms என்று மூன்று ராச்சியங்களையும் ஒன்றாக்கி, இன்று ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு முதற்புள்ளி வைத்த பிரித்தானியாவுக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகம் பொறுப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார் திரு.செனிவிரட்னே. (The British Owe a Lot to the Tamil People, November 14, 2013). அரசநிர்வாகம் முதல் அரச ஆட்சி நிறுவனங்கள் வரை எல்லாமே தோற்றுப்போன இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான அரசியல் உரிமைக்காகப் பேசவேண்டிய, செயற்படவேண்டிய கடமை பிர்த்தானியாவுக்கு உண்டு. 

அதே நேரம் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் இலங்கை அரசு இப்படி ஒரு இனப்படுகொலையை தனியாக செய்துமுடிக்க சக்தியற்றவர்கள். இதற்கு ஐக்கியராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் துணைப்போதலும் இருந்திருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். இவ்வண்ணம் குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிடம் தமிழர்கள் இன்னும் வலுவான கோரிக்கைகளை வைத்தவண்ணமே இருக்கிறார்கள், தமிழர்களின் அரசியல் நிர்ணய உரிமைகள், மற்றும் தமீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு என. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை நிறுவ இன்னும் ஆதாரம் தேவை என்கிறது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். காலங்காலமாக தமிழகத்தின் சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்கள் சார்பில் இயற்றப்படும் தீர்மானங்கள் எழுத்து வடிவில் அமோகமாகவே இருந்தன, இருக்கின்றன. அவற்றை எல்லாம் மத்தியில் கிடப்பில் போட்டுவிட்டு, இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்கள் ஈழத்தமிழர்கள் தலையில் மண் அள்ளிப்போடுவதையே வரலாற்றுக் கடமையாகவும் கொண்டிருக்கிறார்கள். 


எது எப்படியோ, தொடர்ந்தும் சர்வதேசத்துக்கு தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும், தமிழீழத்துக்கான சுதந்திரமான பொதுவாக்கெடுப்பும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் நடத்தப்படவேண்டுமென அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமென அரசியல் ஞானம் உள்ளவர்கள் கருத்து சொல்கிறார்கள். இனி வரும் 2014 வது ஆண்டாவது தமிழர்களுக்கான ஒரு நல்ல தீர்வுக்கான திட்டத்தை கொண்டுவரும், சர்வதேசத்திடமும் இருந்து அவர்களால் தமிழர்களுக்கு இளைத்த குற்றங்களுக்கான தீர்வும் கிட்டும் என்கிற நம்பிக்கையுடன்! 

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2014 இனிமையாக அமையட்டும் அனைவருக்கும். 

Image Courtesy: Google. 


நவம்பர் 25, 2013

மாவீரர் நாளும் தமிழர் ஒற்றுமையும்!


வரலாறு அதன் அசைவியக்கத்தின் வழி மானுடவிடுதலைக்காய் சாதாரணர்களை சரித்திரநாயகர்களாக்கி பெரும் திருப்பங்களை, பிரளயங்களை உருவாக்கிச் செல்லும். உலகமே எப்போதும் வரலாற்று அச்சாணியின் சுழற்சியில் தான் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சுழற்சியில் எத்தனையோ இனங்களைப் போல, மக்கள்குழுக்களைப்போல தமிழர்களுக்கும் ஒரு தனித்தவரலாறு, அவர்தம் தனித்தன்மையோடு கூடிய அரசியல், பொருளாதார, நில, பண்பாட்டு, சமூகக்கட்டமைப்பும் அதுசார் வாழ்வியலும் மொழியும் கூட உண்டு. இவற்றின் மாட்சிமையும், மீட்சியும் தான் இலங்கை என்கிற நாடு பிரித்தானியக் காலனியாதிக்கதிலிருந்து விடுதலைவாங்கிய நாள்முதற்கொண்டு தமிழர்களுக்கு உரிமைகளாக மறுக்கப்பட்டும் வருகிறது. 

ஈழத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு அவப்பெயர் சூட்டிப்பார்க்க நினைக்கும் மனட்சாட்சியைத் தொலைத்தவர்கள் ஒருபுறமிருக்க, அனேகமாக ஒட்டுமொத்த உலகத்தமிழினமும் அவ்விடுதலைப் போராளிகளை கார்த்திகை 27 இல் வருடந்தோறும் நினைவுகூருகிறது. போரில் இறந்தவர்களுக்கான மரியாதை செலுத்துவதென்பது ஒரு சாதாரண மனிதாபிமான உணர்வு. அந்த உணர்வைக்கூட மதிக்காத சிங்கள பெளத்த பேரினவாதப்பிடியில் இன்றும் சிக்குண்டு கிடக்கிறது ஈழத்தின் வடக்கும், கிழக்கும். ஒன்றுகூடத்தடை, விளக்கோ, மெழுகுவர்த்தியோ ஏற்றத்தடை, சுவரொட்டிகள் ஒட்டத்தடை. இப்படி எத்தனையோ தடைகளைத் தாண்டியும் எப்படியோ தங்கள் வணக்கத்தை மானசீகமாவேனும் இதயசுத்தியுடன் செலுத்த தவறியதில்லை ஈழம்வாழ் தமிழர்கள். 

புலம்பெயர் தேசங்களில் இன்னும் பூரணமான ஒன்றுபட்ட ஒற்றுமை தமிழர்களிடையே தமிழ்தேசிய விடுதலை குறித்த அரசியல் முன்நகர்வுகளில் இல்லை என்கிற பெரும்குறை இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தது போன்ற போட்டிகள் அதிகம் இல்லை என்றே தோன்றுகிறது மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் நடத்துவதில். 

ஒரு விடுதலைப்போராட்ட வரலாற்றின் சின்னங்கள் தான் இதுபோன்றதொரு நிகழ்வில் சுமைகளைச் சுமக்கும் அடையாளங்களாய் விளங்குவதுமட்டுமல்ல, அவையே ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளாகவும் பதியப்படும். இன்று தமிழர்கள் மண்ணில் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் கட்டப்பட்ட தலைவர்கள் சிலை முதல் விடுதலைப்போரின் வரலாற்றுச் சான்றுகளாய் திகழ்ந்த அனைத்தும் அழிக்கப்பட்டே வருகின்றன, தந்தை செல்வா சிலை முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் வரை. 


இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற தமிழறிஞர்கள், தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் முதல் ஈழவிடுதலைபோரின் தார்ப்பரியங்கள், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளை சித்தரிக்கும் சிற்பக்கலைகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கான Strategic/Historical Location selection குறித்த கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தன. அவற்றை சமூகவலைத்தளங்களில் கேள்வியாக்கிய போது எனக்குக் கிடைத்த இரு பதில்கள் இவை. 

என் அறிவுக்கு எட்டியவரை தஞ்சாவூர் என்பது தமிழ்மன்னர்களான சோழர்களின் ஆட்சியில் புலிக்கொடி பறந்த ஊர் என்கிற அளவே. அதற்கும் மேல் இப்படியும் காரணம் இருக்கிறது என்றார் கே. ஆர். பி. செந்தில். 

மேலும் ஒருங்கினைந்த தஞ்சைப் பகுதி(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்) மக்கள் மிகுதியாக ஈழத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள். வேதரண்யத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரைக்கும் விசா இல்லாமல் வரலாம், திருமணம் முடிக்கலாம் என அனுமதி இருந்தது. கோடியக்கரை எப்போதும் யாழிற்கு பக்கத்து ஊரும் கூட, என்ன குறுக்கே முன்பு கொஞ்சம் கடல் இருந்தது. இப்போது இந்திய- இலங்கை அரசுகளில் சுயநலம் இருக்கிறது.” 

இதற்கு விந்தைமனிதன் ராஜாராமன் என்பவரின் பதில் இப்படி இருந்தது. 

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் புரவலருக்கு சொந்த ஊர் விளார் என்பதாகவும் இருக்கலாம்!”

இதைத்தொடர்ந்து வந்த விவாதங்களில் விந்தைமனிதன் ராஜாராமனின் கருத்துகளின் சில பகுதிகள் இங்கே. 

அஸ்தினாபுரத்துக்குத் தூதுசென்ற கண்ணன், பொன்னும் மணியும் வேயப்பட்ட துரியோதன மாளிகையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தங்கத்தட்டில் நிறைந்த அறுசுவை உண்டி வேண்டாமென்று விதுரனின் குடிலுக்குச் சென்று பழைய சோறு சாப்பிட்டானாம்!


கலைஞர்கள் தம் உணர்வையும் உழைப்பையும் சிந்தி உழைத்த கலைக்கூடம்தான்! அங்கே இருப்பது எம் தமிழ் உறவுகளின் ரத்தமும் ஜீவனும் கசியும் கண்ணீர்க்கதைகளின் காட்சிகள்தாம்! ஆனால்... !மானத்தோடும் சுதந்திர தாகத்தோடும் வாழ்ந்து மண்ணில் விதையான போராளிகளுக்கும், மக்களுக்கும் நினைவுச்சின்னம் ஒரு மாஃபியாக்கும்பலின் பணத்தில்!


ஒவ்வொரு நாளும் உழைத்துத் தன் சுயசம்பாத்தியத்தில் வீதிக்கு வந்து நம் உறவுகளுக்காகப் போராடினார்களே... அரசுக்கலைக்கல்லூரியிலும், பாலிடெக்னிக்கிலும் படித்துக் கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் குழந்தைகள்! அவர்களிடம் துண்டேந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வாங்கி ஒரு நினைவுக்குடிசை கட்டி இருந்தால் அது காலத்துக்கும் தன்மானத்தோடு நிமிர்ந்து நின்று அழியாச்சின்னமாகி இருக்குமே?! இன்னும் கீழ்வெண்மணிக்குடிசைகளில் சாம்பலாய்ப்போனவர்களின் ரத்தசாட்சியாய் நிமிர்ந்து நிற்கின்றதே வெண்மணி நினைவுச்சின்னம்?!


இன்று புரச்சியம்மாளின் கருணைப்பார்வைக்காய் ஏங்கும், கோபப்பார்வைக்காய் நடுங்கும் நெடுமரங்களிடம் இல்லை ஈழத்தின் நினைவுச்சின்னம் என்பதை அப்பாவித் தமிழுணர்வாளர்கள் உணர்வார்களா?!விளாரில் அமைந்த காரணம் சோழமோ, புலிக்கொடியோ, தஞ்சைக்கும் ஈழத்துக்குமுள்ள உறவோ அல்ல! ‘புரவலர் பெருமானின்’ சொந்த ஊர் மட்டுமே காரணம் என்பதைச் சிந்திப்பார்களா?”

மேலேயுள்ள கூற்றொன்றிற்கான பதில் இது....

//மாஃபியாக்களின் பணத்தில் மக்கள் விடுதலைப்போர் வென்றதில்லை என்பது வரலாறு//


”புலிகளையே மாஃபியாக்கள் என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பவர்கள் உள்நோக்கம் என்பது மட்டமான பார்வையாக இருக்கிறது. முள்ளி வாய்க்கால் முற்றம் எனபதின் நோக்கத்தை கொச்சைப்படுத்துவது மோசமான அடிப்படைவாதிகளின் சுயநலம்..”

இதற்கு மேலும் விவாதத்தில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவை இந்தப் பதிவில் தேவையற்றது என்பதால் தவிர்க்கிறேன். 

ஆக, ஈழத்தமிழர்களோ, தமிழகத்தமிழர்களோ இன்னும் எதிரிக்குச் சாதகமாகவே எமக்குள் நாமே சேற்றை வாரி இறைத்துக்கொண்டு ஒரு இனப்படுகொலையின் பின்னான விடுதலைக்கான நியாங்களை மறந்துபோக ஏதுவாகிறது இதுபோன்ற வாக்குவாதங்கள். இந்த மாவீரர் நாளிலேனும் வருடந்தோறும் தமிழர்கள் தங்களுக்குள்ளான ஒற்றுமையை மீட்டெடுப்போம் என உறுதிகொள்வது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, வரலாற்று கடமையும் கூட. 

ஈழவிடுதலைப்போரின் மாண்ட அனைத்து வீரர்களுக்கும், அப்பாவிப் பொதுமக்களுக்கும் மாவீரர் தின வணக்கங்கள். 
Image Courtesy: Google.


நவம்பர் 23, 2013

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்.


வரலாற்று அரசியல் காலந்தொட்டு இருவேறு உலகங்களாய் சந்தோசங்கள், துக்கம், கருத்துகள், வேறுபாடுகள் என மனிதவரலாறு அதன் இயங்குவிதிகளோடும், உருவாக்கப்பட்ட விதிகளோடும் இயல்பாக்கம் அடைந்தவண்ணமே இருக்கிறது. இதுகுறித்து அதிகம் கேள்வி கேட்கவோ, தேடிப்பிடித்து காரணகாரியத் தொடர்புகளை அறியவோ, அல்லது உட்பொருள் தேடவோ பொழுதும், அறிவும், முயற்சியும் நிறையவே தேவை. இதையெல்லாம் கலைப்படைப்பாக ஒரு இரண்டரை மணிநேரத்துளிகளில் எம் கண்முன்னே ஆவணமாகவோ, கற்பனையாகவோ காண்பிக்கப்படும்போது அது குறித்து விமர்சனங்கள் எழவே செய்கின்றன. 

இரண்டாம் உலகம்

எனக்கு செல்வராகவன் படைப்புகள் குறித்து நிறைய விமர்சனங்கள் என்வரையில், என் புரிதலுக்கு எட்டியவரையில் எழுதியதுண்டு. அவருடைய வழமைகள் இதிலும் மீறப்படப்போவதில்லை என்கிற ஒரு முன்முடிவோடு, அதிக எதிர்பார்ப்புகளின்றியே திரையரங்கில் இன்னும் 5 மட்டுமே படம் பார்த்தோம், என்னைத்தவிர 5 பேர். இரண்டாம் உலகம் திரைப்படம் குறித்து நிறையவே விமர்சனங்கள் எதிர்மறையாக வருகின்றன. இரண்டாம் உலகம் முற்றுமுழுதாக அவ்விமர்சனங்களை ஒட்டியபடி தான் இருக்கிறதென்பதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. நான் பொதுவெளியில் திரைவிமர்சனம் எழுதுவதில்லை. இது இரண்டாம் உலகம் பற்றிய என் பார்வை. 

Beautiful Mind, Russel Crow நடிச்ச படம் ஒன்று ஓஸ்கார் விருது பெற்றது. அதில் ரஸலின் பாத்திரத்தின் மனைவியின் அறிமுகத்தின் போது அவரை ஒரு Problem Solver ஆக அறிமுகக்காட்சியில் காட்டுவார்கள். 

அவர் வகுப்பறையில் இருப்பார். விரிவுரையாளர் பாடம் நடத்துவார். வெளியே கட்டிட வேலை நடந்துகொண்டிருக்க சத்தம் பெரிதாக இருக்கும். எல்லாரும் பேசாமலே இருக்க, இவர் சர்வசாதாரணமாக எழுந்து போய் யன்னலை மூடிவிட்டு வருவார். 


அவரை அவ்வாறு காட்டியதன் நோக்கம், அவர் தான் தன் கணவனின் பிரச்சனைகளை, மனநோயின் பிடியிலிருந்து அதன் தாக்கங்களிலிருந்து காக்கிறார் என்பதற்கான ஒரு அழகான பாத்திரப்படைப்பு. 


கணவருக்கு Paranoid Schizophrenia. அவர் இரு வேறு உலகில் தன்வரையில் வாழ்பவர். அந்த இரண்டும் ஒருபுள்ளியில் சந்திக்கும் போது பார்வையாளர்களுக்கு ஒரு திகைப்புவரும். 


இப்படித்தான் இருக்கப்போகிறது என்று காத்திருந்தேன் இங்கேயும், இரண்டாம் உலகம். ஆர்யாவின் கதாபாத்திரமான மதுபாலகிருஷ்ணனுக்கு ஏதும் உளவியல் பிரச்சனை என்கிற நோக்கோடும்; அனுஷ்காவை ஒரு problem solver ஆக ஒரு முன்னனுமானத்தோடு கவனித்தேன் திரைக்கதையை. 


செல்வராகவனின் காதல் கொண்டேன் ஏழ்மை-செல்வம்; ஆயிரத்தில் ஒருவன் சரித்திரகாலம்-தற்காலம்; அதே போல் இப்போதும் இரண்டாம் உலகம் இப்பூலோகம் - இன்னோர் புதுவுலகம். 


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் விட்டதை இதில் பிடிக்கவேண்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ரசிகர்களை Medieval Period போன்ற ஒரு காலப்பகுதிக்கு கூட்டிச்சென்று, அக்கால அரசியலையும் (ஒன்றே மதம், ஒரே கடவுள், ஒரே மொழி.... இப்படி, அதாவது எனக்குப் புரிந்தது அந்தக்காலப்பகுதியில் தான் இஸ்லாமிய ஒட்டமன் சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்துவ ஐரோப்பா விடுவித்த காலப்பகுதி. I am not a historical buff.) ஆங்காங்கே குறியீடாகக் காட்டியிருப்பதாய் தோன்றியது. இங்கே தொன்ம அரசியல், வரலாற்று, சமூகக் குறியீட்டுப் படிமங்கள் இருப்பதாக என் அறிவுக்கு ஏனோ தோன்றியது. அந்த அரசியல் வரலாற்றுக் காலப்பகுதியிலேயே இரட்டை இலை, ‘அம்மா, அம்மா’ குறியீடு. ஏன் செல்வராகவன்! 


ஏன் வரலாற்றின் ஒரு மத்தியகாலப்பகுதி என்றால் எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அந்தக்காலப்பகுதியை ஒரு புதிய உலகமாக்கி, அதை பிரபஞ்சத்தால் சூழவைத்து, காணவைத்த Visuals பார்க்கும்போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. காரணம், தமிழ்த்திரைப்படங்களில் அதையெல்லாம் கொண்டுவருகிறார்கள் என்று. சரி, கதைக்கும், செல்வராகவனின் கதாபாத்திரங்களிடமும் வருவோம். செல்வராகவனின் அதே கதைக்களமும், பாத்திரங்களின், ஆண்-பெண் psychological behavioral concept ம் மாறவே இல்லை. இரண்டாம் உலகில் அனுஷ்காவின் பாத்திரமான ‘வர்ணா’ ஆணாதிக்க ஆண்களுக்கு பிடிக்காத வழமையான செல்வராகவனின் உருவாக்கம். யாருக்கும் அடிமையாய் இருக்கமாட்டேன் என்று திருமணத்தையே வெறுப்பவர். சந்தர்ப்பசூழ்நிலை ’மருவா’ வை (ஆர்யா) கல்யாணம் செய்கிற சூழல். மருவாவுடன் சேர்ந்துவாழப்பிடிக்காததால் தனித்தே காட்டில் வாழ்கிறார் வர்ணா. காரணம் அதுமட்டுமல்ல, கட்டாயக்கல்யாணம் செய்துவைத்த ராஜாவை கொலைசெய்ய எடுத்த முயற்சியும் கூடவே. எதுவும் வழமை மாறவில்லை இயக்குனரின் வழக்கமான கதையிலிருந்து. இது ஒரு உலகம். அங்கே ஒரு ஆர்யா-அனுஷ்கா சோடி. 


இன்னொரு உலகம், தற்காலம். அங்கே இன்னோர் ஆர்யா-அனுஷ்கா. இவ்வுலகில் வழமையான காதல் துரத்தல்கள், துருத்தல்கள். 

இறுதியில், இருப்பதோ ஒரேயொரு அனுஷ்கா இரண்டு உலகிலும் சஞ்சரிக்கும் ஆர்யாக்களுக்கும். இரண்டு உலகிலுமுள்ள ஆர்யாக்களும் என்ன செய்வார்கள் என்று ரசிகர்களை கொஞ்சம் கவலைப்படவும் வைக்க முயற்சித்திருக்கிறார்.

எது எப்படியோ, கடைசியில் தமிழ்கலாச்சாரத்தை காப்பாற்றிவிட்டார் செல்வராகவன். செல்வராகவனின் கதைக்களத்தில் என்ன குறை என்று நான் நினைக்கிறேன் என்றால், இவர் ஆண், பெண் இருவரும் சார்ந்த காதல், கல்யாணம் என்பது அவர்கள் சுயாதீனமானக முடிவெடுத்து சுயமாய் வாழவேண்டும், அவர்களது முடிவின் அடிப்படையில் என்பதைச் சொன்னாலும், இவரது நாயக - நாயகியைப் பொறுத்தவரை ஏன் சமூகம் என்பது எப்போதும் ஒரு முடமானதாகவே இருப்பதை சித்தரிக்க மறுக்கிறார். இணையாய் ஆண் - பெண் வாழ்வில் சமூகத்தின் பங்கு என்ன என்பதை ஏதோ குறியீடு போலப் பயந்து, பயந்தே காண்பிப்பது போல உள்ளது. 

வழமையான தமிழ் சினிமாக்களில் அழுவாச்சிக்காவியமாக காட்டப்படும் சில காட்சிகளை இயல்பாக அமைத்திருப்பது கவர்கிறது. தன் மனைவிக்கும், தன்னைப்போல இருக்கும் இன்னொரு ஆடவனுக்கும் இடையேயான உறவு இருப்பதாக நினைத்து, ‘கூசுதடி’ என்று ஆர்யா சொல்லுமிடம் இயல்பாய், அழகாய் கவர்கிறது. ஏன் செல்வராகவன், பெண்களுக்கு காதல் வந்தால் வாள் சுற்றமாட்டார்கள் என்கிற தமிழ்மரபை நீங்களும் காப்பாற்றியே தான் ஆகவேண்டுமா. உயிரா, சாவா என்கிற இடத்தில் அனுஷ்கா வெட்கப்பட்டே தான் ஆகவேண்டுமா! என்னமோ போங்க. 


இரண்டாம் உலகத்தின் Visuals, அனிருத்தின் பின்னணி இசை இரண்டையும் மிகவும் ரசித்தேன். சில பின்னணிகாட்சிகளின் இசையில் உடுக்கையும் இருக்குமோ!


பார்க்கலாம், Entertaining. ஆனால், நிச்சயம் ‘வர்ணா’வை எத்தனை ஆண்களுக்குப் பிடிக்கும்!! வர்ணாக்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை.


நான் பொருத்திப்பார்த்த Beautiful Mind போல் இருவேறு உலகம் பொருந்தவுமில்லை. அவை சந்திக்கும் புள்ளியில் லாஜிக்கும் இல்லை.கதைக்குள்ளேயே அந்த இருவுலகங்களும் இணையும் புள்ளியில் லாஜிக் இன்னும் கொஞ்சம் வலுவாவனதாய் அமைத்திருக்கலாம். அனுஷ்கா வழக்கம்போல் வியாபாரக்குறியீடாய் ஆகியிருக்கிறார். 

இது கூகுள் ப்ளஸ் இல் அந்தியூரான் பழமைபேசி என்பவர் எழுதிய விமர்சனம். அவரது அனுமதியோடு இங்கே பகிர்கிறேன். 

”இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது.

இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும்.பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம்.”

இது MSK Saravana என்பவர் எழுதியது கூகுள் ப்ளஸ் இல். 

”நாமிருக்கும் Milkyway Galaxy-ல மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கு. இந்த மொத்த Observable Universe-ல மட்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் Galaxies இருக்கு. இதைத் தாண்டியும் இந்த Universe எவ்வளவு தூரம் விரிவடைந்திருக்குன்னு நமக்கு தெரியாது. நம் universe தவிர்த்து, அடுத்தடுத்த Universe/Universes இருக்கிறதா என்றும் நாமறியோம். நாமிருக்கும் பூமியில் கூட கார்பன் மூல உயிரினங்கள் மட்டுமல்லாது மீத்தேன் மூல பாக்டீரியாக்கள் இருக்கு. மில்லியன்கணக்கான விந்தணுக்கள்ல்ல நாம் மட்டுமே பிறந்திருக்கிறோம். இந்த மொத்த சராச்சரத்தின் ஒரே எளிய உண்மை Coincidence and Possibilities.

இங்க செல்வராகவன் ஒரு சின்ன fantasy possibility சொல்லியிருக்கார். இன்னமும் காதல் மலராத ஒரு வேற்றுலகத்துல, தன் காதலியையொத்த பெண்ணொருத்திக்கு, அதி அற்புதமான காதலையுணர்ந்த பூமியை சார்ந்த ஒருவன் காதல் உணர செய்கிறான், தன் பயணங்களை தொடர்கிறான். ரொம்பவே எளிய காதல் கதைதான். நிச்சயம் உங்களுக்கும் இந்தப்படம் பிடிக்கலாம், if you're not CYNICAL.

இங்கே, புவியில் நடக்கிற காதல் கதை typical செல்வராகவன் கதை. இது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வேற்றுலக காட்சிகள்தான் நம் மக்கள் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கும். லாஜிக்/குறியீடு/க்ராபிக்ஸ் அது இதுன்னு மண்டையை உடைச்சிருப்பாங்க. நான் கொஞ்சமும் எதிர்பார்ப்பின்றி ரொம்பவே மொக்கையாயிருக்கும்ன்னு எண்ணத்தோடு எவ்வித முன்முடிவுகளுமின்றி ஒரு observer-ஆ படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.

The Fountain படம் மாதிரியெல்லாம் இல்ல. ஆர்யாவோட நடிப்பு வழக்கம்போல கொடுமை. அனுஷ்கா கொஞ்சம் அழகு, நிறைய முதிர்ச்சி. அனிருத் பின்னணியிசை சில இடங்களில் அருமை, சில இடங்களில் ஹாரிஸ் மாதிரி கொடுமை. ராம்ஜியின் ஒளிப்பதிவு அட்டகாசம். நிறைய துணைக்கோள்களை கொண்ட அந்த வேற்றுலகம் உயிர்ப்பு. Game of thrones மாதிரியான பறக்கும் ட்ராகன்கள் க்ராபிக்ஸ் அட்டகாசம். சிங்கம் யாளி, நரி பண்டோரா.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செய்த நிறைய தவறுகளை சரிசெய்து செல்வராகவன் கொடுத்திருக்கும் ஒரு நல்ல படம் இந்த இரண்டாம் உலகம். கொஞ்சம் அன்பும் பொறுமையும் கொண்டு பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் :)”


எனது இந்த சினிமா விமர்சனம் தேவையற்றதாகக் கூட இருக்கலாம். சினிமா வணிகமே என்றாலும் சில படைப்புகளுக்கான கிரடிட் கொடுக்கப்படவேண்டுமென்பதால் இப்பதிவு. 

Image Courtesy: Google


நவம்பர் 13, 2013

தமிழக அரசியலும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றமும்

அன்புள்ள ரதி இப்படி இணையமடல் வழி என்னை விளித்து Grassroot மட்டத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பிரச்சனைகளை மடைதிருப்பி, குழப்பி அரசியலாக்கும் எழுத்துக்கான திறனோ அல்லது தேவையோ இல்லாத; ஈழம் குறித்து மட்டுமே அனேகமாக பதிவெழுதும் எனக்கும் ஈழம் குறித்து நான் எழுதும் பதிவுகளின் விளைவால் ஒருவர் தமிழ்நாட்டின் தற்போதைய முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதால் மனம் நொந்து மடல் எழுதியிருந்தார். அவர் பெயர் வெளியிடவேண்டாம் என்கிற வேண்டுகோள் மதிக்கப்படுகிறது. 

தமிழக அரசியல் ஈழத்தமிழர்கள் குறித்து எந்தவகையான புரிதலோடு, செயற்திறனோடு செயலாற்றுகிறது என்பதை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடங்கிய நாள் முதல் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னான இன்றைய நாள்வரை கவனித்தே வருகிறோம். ஈழவரலாற்றின் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு வரையப்படவேண்டிய, போற்றப்படவேண்டிய பக்கங்களைப் போலவே வெட்கி, வேதனைப்படவேண்டிய பக்கங்களும் உண்டு. வார்த்தைகளை வளர்த்து ஆறியபுண்ணை மீண்டும் கிளறிப்பார்க்க மனம் ஒப்பவில்லை. இதோ அந்த மடல். 

”இதற்கான மூலம் டெல்லி இப்போது தமிழ்நாட்டில் உள்ள  சுயநலமே  அரசியல் கொள்கையாக கொண்ட எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதைதான் செய்யும். நான் இணைத்த ndtv விவாதம் மற்றும்  பல வட இந்திய  ஊடகங்களில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை சார்ந்த செயலாளர்கள் எல்லோரும் தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. காமன்வெல்த்தில் இந்தியா கல்ந்துகொள்ளகூடாது என்று நாம் கேட்பது அவர்களுக்கு கோபமூட்டுகிறது. அவர்களுக்கு இந்தியாதான் முக்கியம் அதற்க்கு தமிழர்களின் இரத்தம் கொடுத்துதான் வாங்கவேண்டுமென்றால் அதையும் செய்வார்கள்.

ஈழம் குறித்து பெரிதாய் அக்கறை கொள்பவர்கள் வெகு சிலரே.


நான் பார்த்த வரையில் ரதி, 


இந்தியாவில தமிழர்களை பிடிக்காத, இவ்வளவு அழிவுகளுக்கும் பின்புலமாய் இருந்த, இன்றைய இந்தியாவை இயக்கிகொண்டிருக்கிற சக்திகளை கேள்வி கேட்க்கும் வல்லமை பொருந்திய ஆளுமைகள் இன்றைய தமிழ் நாட்டு அரசியல் வெளியில் யாரும் இல்லை. 


தேர்தல் அரசியலில் உள்ள யார்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை வைகோ ,சீமான் உட்பட எனக்கு தெரிந்த அரசியல் அறிவை கொண்டு நான் பார்த்த வரையில் அந்த சக்திகளை அசைத்து பார்த்தவர்கள் ஒன்று பெரியார் மற்றொருவர் பிரபாகரன் 

தன்னலம் பாராமல் தனது கடைசி காலம்வரையில் அரசியல் தளத்தில்  தனது பிரச்சாரத்தின் மூலமே அந்த சக்திகளை  அசைத்து பார்த்தவர் பெரியார் (தமிழ் நாட்டில் அவரின் உழைப்பின் பலனை அறுவடை செய்துகொண்டவர்கள் திமுக ).

மற்றொருவர் பற்றி உங்களுக்கு தெரியும். 

நான் அவதானித்த யதார்த்தத்தில் இருந்து சொல்கிறேன் களத்தில் புலிகள் எவ்வளவுதான் சாதித்திருந்தாலும் அரசியல் களத்தில் (உலக அளவிலும், இந்திய அளவிலும் ) பெரிய தோல்வி அடைந்துவிட்டோம் என்பதையே பார்க்கமுடிகிறது. வடஇந்திய ஊடகங்களில் ஈழம் தொடர்பான விவாதங்களை முடிந்த அளவு தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் நமக்காக வாதிடுபவர்களின் குரல் எடுபடுவ்தே இல்லை பெரும்பாலும் டி ராஜாதான் பங்கேற்ப்பார் தமிழ்நாட்டில் மக்களுடன் தொடர்பிலே இல்லாத ஒரு கும்பல் இங்கு இருக்கிறது அவர்கள்தான் அறிவுஜீவி கணக்காய் அத்தகைய தொலைகாட்சிகளில் காட்சி தருவார்கள் நாம் ஒரு செண்டிமீட்டர் மேலே ஏறினால் ஒரு மீட்டர் கீழே இழுத்துவிடுவார்கள். அதைத்தான் இந்த இந்தியாவில் நம்பவைக்கபடுகிறது. இதை உடைக்கும் வல்லமை இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் யாரும் இல்லை.


மற்றவர்களை காட்டிலும் சிறிதளவு நம்பிக்கை வைகோவின் மீது இருக்கிறது அவருடைய அனுபவம்,வட இந்தியாவில் அவருக்கிருக்கிற செல்வாக்கை வைத்து சொல்கிறேன் அவருக்கு போதுமான பலம் இருந்தால் அவரால் சாதிக்கமுடியும்.


மற்றபடி எதிர்காலத்தில் யாரோ ஒரு தலைவன் அல்லது தலைவி கையில் தான் தமிழ் இனத்தின் தலைவிதி இருக்கிறது.”
செய்திகளை, அரசியல் குறித்த சில அடிப்படைகளைப் படித்து எழுதுவதோடு சரி. எனக்கென்று எந்தவொரு அரசியல் வட்டமோ அல்லது தொடர்புகளோ கிடையாது. இதைக் கவனிப்பவர்கள் கவனித்து செயலாற்ற வேண்டும் என்பதே என் அவா. மடலில் அவர் குறிப்பிட்டது போல ஒரு தலைவன் அல்லது தலைவியல்ல தமிழர்களின் விதியை நிர்ணயிப்பது என்பது என் கருத்து. தமிழர்களுக்கான அரசியல், பொருளாதார நிறுவனங்கள், கட்டுமானங்கள் (Political and Economic Institutions) வலுவானதாக இருக்கவேண்டும். அதைக்குறித்த கேள்விகேட்கும் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்திய மைய அரசியலில் சிக்கி ஈழத்தமிழனின் நிலை தமிழகத்தமிழர்களுக்கு வராமல் இருக்கட்டும். 


மெய்நிகர் உலக ஈழம் குறித்த விவாதங்களில் நான் தமிழகம் மனதுவைத்தால் ஈழத்தமிழர்களுகான அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் வெளியக சுயநிர்ணய உரிமை சாத்தியம் என்று வாதாடினால், ஒன்று கிண்டலடிக்கப்படுகிறேன், இல்லையேல், தமிழகத்தை நம்பாதீர்கள்; ஈழத்தை நீங்களாகவே போராடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வருகிறது. அதிலெல்லாம் சுரணை போய் நாட்களாகிவிட்டது. காரணம் எனக்கு என் இனம் குறித்த சுரணை மட்டுமே என்னிடம் மிஞ்சியிருக்கிறது. 

மரணத்தின் போதும் என் இனத்துக்காக எதையாவது கிறுக்கியிருக்கிறேன் என்கிற திருப்தியாவது மிஞ்சும். 

Image: Google. 


அக்டோபர் 31, 2013

வெள்ளக்காடும் அற்றகுளத்துப் பறவைகளும் - Kiribati


ஒளவையார் சொன்ன முதுமொழி அல்லது பழமொழி ஒன்று, Do not lose (your) dignity. ஒளவையார் எப்போது ஆங்கிலத்தில் பழமொழி சொன்னார் என்றால், மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று தமிழில் தான் சொல்லியிருந்தார். எப்போது மானம் உயிரை வதைக்கும்! உயிர்ப்பிச்சை போடு, பசிக்கு ஒரு பிடி உணவு கொடு என்று கெஞ்சும்போது மட்டுமல்ல; என் நிலம் இழந்தேன், என் இனம் இழந்தேன், என் மக்களை, மண்ணைப் பிரிந்ததில் சகலமும் இழந்தேன் என்னும் நிலை வரும்போது எங்கேயோ வேண்டாத விருந்தாளியாய் வாழ ஒரு வழிகாட்டு, உயிர்ப்பிச்சை கொடு என்று கெஞ்சும்போது உயிருக்குள் முள்ளாய் உறுத்தும் அவமானம். அதை உணர்ந்தவனுக்கு மட்டுமே அது உயிர்வலி.

உலகமயமாக்கலுக்குத் தேவையான அல்லது ஒரு Global Village உருவாக்கத்துக்குத் தேவையான படிப்பைப் படித்தவர்களையெல்லாம் அடிமாட்டுவிலைக்கு மேலைத்தேசங்கள் வாங்கிக்கொள்ளும். அந்த எல்லையைத்தாண்டிய படிப்புபடித்தவர்கள் எல்லாம் அல்லது படிப்பே கிடைக்காதவர்கள் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ வாழும் உரிமை கேட்கத் தகுதியில்லாதவர்கள் ஆகக்கூடும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எல்லாரும் குடியேற நினைத்தால் முடியுமா என்று நினைக்கலாம் மறுவளத்தில். முடியவே முடியாது தான். ஐரோப்பாவின் அன்றைய காலனியாதிக்கமும், அமெரிக்காவின் இன்றைய நவீன காலனியாதிக்கமும் தான் மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் வாழ வழிவகை தெரியாமல் ஆனவர்களாய், பாரம்பரிய தொழில்முறைகளை, வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் ஆகக்காரணமும் கூட.

எழுதப்படாத அபத்தமான சமூகவிதிகளின் வழி தான்சார்ந்த ஒரு சமூகத்தோடு ஒருங்கிணைந்து வாழமுடியாமற்போகும் தன்னிலைக்கொவ்வாத சூழ்நிலைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும், தன்னிறைவுக்கான அத்தனையும் கிடைக்குமிடத்திலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை இடம்பெயர்த்துக்கொள்ளத் துணியமாட்டார்கள் என்பதே பொருத்தம். தான்வாழும் சூழலில் தன் அத்தியாவசியத் தேவைகளுக்கான வளங்கள், தன் ஆரோக்கியமான உடல் மற்றும் உளநல வாழ்வுக்க்குத் தேவையான ஆதாரங்கள் என்று தன் அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஏற்றபடி தான் நம்பும் அத்தனையும் கிடைக்கும் செளகர்யமான வாழ்க்கைச்சூழலில் இருந்து தன்னை இடம்பெயர்த்துக்கொள்ளாத சுயநலம் தான் மனிதர்களின் இயற்கயோடு இயைந்த இயல்பு. அதைத் தவறென்று இயற்கையை நான் விமர்சிக்கவும் இல்லை. உடலை இடம்பெயர்க்கலாம். நினைவுகளை என்ன செய்ய என்கிற போது, சில உணர்வுகளைக் கடந்தே வாழ்க்கையை வாழ்ந்துமுடிக்க வேண்டிய காலம் விதித்த கட்டாயமும் உண்டு.

மூன்று பந்திகள் எழுதிய பின்னும் தலைப்புக்குச் சம்பந்தமான விடயத்தைச் சொல்லாமல் இழுத்தடிக்கக் கூடாது. இருந்தாலும், இனி எழுதப்போவதைப் படித்தபின் மறுபடியும் படித்தால் நான் சொலவதன் அர்த்தம் புரியலாம். அண்மையில் எந்த நாட்டின் மைய ஊடகங்களிலும் அதிகம் பேசப்படாத, ஆனால் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது Kiribati என்கிற ஒரு குடியரசு அமைப்பைக்கொண்ட நாட்டில். மத்திய பசுபிக்கடலில், ஹவாய்த்தீவிலிருந்து பாதிதூரத்திற்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே இருக்கிற நாடாம் என்பது தேடித்தெரிந்து கொண்டது. ஐக்கிய ராச்சியத்திடமிருந்து 1979ம் ஆண்டு விடுதலை பெற்றிருக்கிறது கூகுள் கூற்றுப்படி. பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் இருந்தது என்பதால் அங்கே Christianity மற்றும் ஆங்கிலத்தின் பாதிப்பு இருக்குமென்று நினைதேன். நான் நினைத்தது சரிதான். அங்குள்ள மக்கள்தொகையில் 55% வீதத்திற்கு மேலானோர் ரோமன் கத்தோலிக்கத்தை தழுவுபவர்களாம். அந்த நாட்டு மக்கள் மதம் சார்ந்த கொள்கையால் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. 

அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாதவர்களுக்காக, கிரிபாற்றி Climate change, Global warming அதாவது புவி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தின் அளவு அந்த குட்டித்தீவை முழுதுமாய் விழுங்கிவிடும் ஆபத்தில் இருக்கிறது. அந்த நாட்டின் சனத்தொகை ஒருலட்சத்தி சொச்சம். இவ்வளவு பேரும் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து ஆதரிக்க ஏனைய பிறநாடுகள் மிகவும் தயக்கம் காட்டி ஆரம்பத்திலேயே அவர்கள் வருகையை தங்கள் நாடுகளிலிருந்து தட்டிக்கழிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தி இப்போது எப்படி முதலாளித்துவ நாடுகளை யோசிக்கவைக்கிறது என்று தேடினால் கிரிபாற்றி நாட்டிலிருந்து ஒரு குடியானவன் தன் மனைவியுடன் நியுசிலாந்து நாட்டுக்கு ஆறுவருடங்களுக்கு முன் சென்று அகதி அந்தஸ்து கோரியிருக்கிறார். அந்த வழக்கு இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டு இப்போது தீர்ர்புச் சொல்லும் காலத்தை எட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறது. புவிவெப்பமடைதலால் கடல்மட்டம் உயர்ந்து அதன் விளைவாய் இடம்பெயர்ந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து கோரவோ அல்லது கொடுக்கவோ ஐக்கிய நாடுகள் சபையின் அகதிநிலைக் கோரிக்கைகள் தொடர்பான உடன்பாட்டில் இதுபோன்று அகதிநிலை கோரியவர்களுக்கு தீர்வாக அகதி அந்தஸ்து கொடுப்பது பற்றி ஏதும் சொல்லவில்லையாம். அதுதான் உண்மையும் கூட.

ஐக்கியநாடுகளின் அகதிநிலைக்கான இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் முன்னமே யோசித்திருந்தால் இதுபோன்றவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது என்று தீர்மானத்தை திண்ணமாய் நிறைவேற்றி இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

ஆறுவருடங்களுக்கு முன் கிரிபாற்றி தீவு அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதை மறுத்தவர்கள், அந்த மனிதரின் வழக்கில் இப்போது விஞ்ஞானிகள் அத்தீவு கடல்மட்டத்தில் எல்லை மீறி அழிவுக்கு உட்படும் அபாயம் இருக்கிறது என்று எதிர்வுகூற, அகதி அந்தஸ்து கொடுக்கும் நிலையில் ஐ. நா. உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் யோசிக்கிறார்கள் இப்போது. அனேகமாக எல்லா நாடுகளுமே இவ்வழக்கின் தீர்ப்பை ஆவலாய் எதிர்நோக்கியிருக்கின்றனவாம். சுத்தமான குடிநீர் கூட கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவரும் வேளையில் அந்நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவண்ணம் இருக்கிறார்களாம். 

உலகம் சனத்தொகைப் பெருக்கத்தால் பிதுங்கிப்போய் இருக்கும் கட்டத்தில் இப்படி நடந்தால் யாராவது கண்டுகொள்வார்களா என்று யோசித்து, அப்பிடியே கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் தேடிப்பார்த்தேன். பூவுலகின் மக்கள் தொகையும், மதங்கள் கண்டுபிடித்த இறப்பின் பின் சொர்க்கத்தின் மக்கள் தொகையும் எப்படி சமப்படும் என்றால் வெள்ளப்பெருக்கு, வறட்சி, நோய்கள் வரும்போது என்று 1700களில் சீனாவின் Qing ராஜ்யத்தில் வாழ்ந்த Hong Liangji என்கிற ஒரு அறிஞர் சொல்லி வைத்திருக்கிறார் என்பது காணநேர்ந்தது. இவர் Thomas Robert Malthus சனத்தொகைப் பெருக்கத்துக்கும், உணவு உற்பத்திக்குமிடையேயான விகிதாசாரத் தொடர்பு, வளர்ச்சிவீதம் குறித்த தியரியை அந்தக் காலத்தில் சரியென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுக்கு முன்பே, அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பே, ஹாங் சீனாவின் சனத்தொகைப் பெருக்கம் மற்றும் உணவு உற்பத்திக்கும் இடையேயான தொடர்பை விளக்கியிருக்கிறார். 

தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து மனித இனம் செல்வத்தையும் அறிவையும் வளர்த்துக்கொண்டே போகிறது. அல்லது, சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவதால் ஏற்படும் மண்ணை அழிப்பதும், பல்வேறு உயிரினங்களை அழிப்பதும், காலநிலை மாற்றங்களுக்கு பூமி உட்பட்டு இப்படி மனித இனம் இடம்பெயர்க்கப்படுவதும் தொடருமா என்று கேள்விகளை விட்டுச்செல்கிறார்கள். ஆனால், அதன் விளைவுகளான இதுபோன்ற பூதாகரமான பிரச்சனைகள் வந்தால் ஏற்கனவே எழுதிவைத்த guidelines ஐத் தேடுகிறார்கள். 

கிரிபாற்றி பிரச்சனைக்கு எல்லா நாடுகளும் அந்த நாடு தன்னாலான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவர்களும் ஓரளவு இதற்கு தீர்வு என்று ஒன்றை எட்ட ஜப்பானுடன் சேர்ந்து யோசிக்கிறார்களாம். ஆனால், அதுக்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் தேவைப்படுமாம். இந்த நாட்டுக் குடிகளின் இடப்பெயர்வும் அகதிநிலைக் கோரிக்கையும் எப்படியோ வேண்டா வெறுப்பாகவே இனி எல்லா நாடுகளாலும் பார்க்கப்படும். ஏற்கனவே தேசப்பாதுகாப்பு முக்கியம் அது, இதுவென்று உளறத்தொடங்கியிருக்கிறார்கள். 

அனேகமாக, நியுசிலாந்தில் அகதிநிலைக் கோரிக்கை வைத்தவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தான் சில சர்வதேச சட்டவல்லுனர்கள் எதிர்வுகூறுகிறார்கள். அந்த நாட்டின் சார்பில் அல்லது அந்த மக்களின் சார்பில் பேசுபவர்கள் அவர்கள் அகதிநிலையை விரும்பவில்லை. வேறோர் நாட்டில் கெளரவமான "Migrant Status" ஐ விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இல்லையா பின்ன, அகதிநிலை என்பதும் இடப்பெயர்வு என்பதும் யாருக்குத்தான் பிடிக்கும். ஆங்கிலத்தில் 'Persecution' என்று சொல்லப்படும் மனிதர்களால் துன்பத்துக்கு ஆளாகும் நிலைக்கே அகதிநிலை அந்தஸ்து வழங்கப்படுமாம் ஐ. நா. சாசனத்தின் படி. 

மேலும் இதுகுறித்து தெரியவிரும்பினால் கூகுளில் தேடினால் நிறையவே கொட்டுகிறது அந்தந்த நாட்டு ஊடகதர்மத்தின் படி. இருந்தாலும், எனக்கு சரியென்று பட்டது இந்தப் பக்கத்திலுள்ளது. 
Image: Google.

அக்டோபர் 12, 2013

ஏன் இந்த மயக்கம்

வாசிப்பு பற்றி எத்தனை தடவை என் அனுபவத்தின் வழி எழுதியிருப்பேனோ தெரியாது. அதைப் பற்றோடு செய்தால் மனம் ஒருவழிப்படும், தன்னம்பிக்கையும் அதிகமாகும் என்பதாய் தோன்றும். தன்னம்பிக்கை என்பது உலகம் பற்றியும், தன்னைப்பற்றியும் ஒருவர் முழுதாய் அறியும் போது ஆழப்படுவதுமாகும். இப்படித்தான் கொஞ்சம் வாசிப்பில் மூழ்கிப்போவேன் அவ்வப்போது. 

Dune by Frank Herbert (Science Fiction), The Politics of Genocide by Edward S. Herman and David Peterson (Non-Fiction), Unbroken by Laura Hillenbrand - A World War II Story of Survival, Resilience, and Redemption (Based on a True story). 

ஆரம்பத்தில் ஒவ்வொரு புத்தகத்தையும் தனித்தனியாக அவ்வப்போது பொழுதுபோகாமல் தான் படிக்கத்தொடங்கினேன். பிறகு, ஒவ்வொன்றிலும் படிக்கும்போது அலுப்புத் தட்ட மாற்றி, மாற்றி படிக்கத்தொடங்கியாகிவிட்டது. படித்துக்கொண்டு போகத்தான் மூன்றுக்கும் இடையே உலகவரலாற்றை கற்பனையாகவும், சான்றுகளாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் சொல்லப்பட்டது சுவாரஸ்யப்பட்டது. இந்த மூன்று வாசிப்பிலும் ஒரே முடிச்சு அவிழ்வது போலத் தோன்றியது. இருந்தாலும், இப்பதிவானது நான் வாசித்த இப்புத்தகங்கள் பற்றியல்ல. 

மூன்று புத்தகங்களிலுமே போர் என்பதும் அதன் ராஜதந்திரங்கள், அரசியல் சாணக்கியங்கள், எதிர்பார்த்த முடிவுகள், எதிர்பாராத விளைவுகள் பற்றியனவாக கவனத்தை ஈர்த்தன. இதெல்லாம் எப்படியோ ஈழத்தை எப்போதும் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும் எனக்கு. ஏன் தொடர்ச்சியாக உலகில் விடுதலை வேண்டியோ அல்லது சுயநிர்ணய உரிமை வேண்டியோ போராடும் இனம் அல்லது மக்களின் உரிமையும், குரலும் நசுக்கப்பட்டே வருகிறது என்று எப்போதுமே ஒரு கேள்வி உண்டு. அதற்குப் பதில், உலகமயமாக்கல் என்பதும், ஒரு மண்ணின் சொந்த வளங்கள் அந்நியரால் சுரண்டப்படுவதுமே காரணங்கள் என்பது வெளிப்படையாய் தெரியாமல் பூசி மெழுகப்படும் உண்மை என்பதை அறைந்தாற்போல் சொல்லவும், யோசிக்கவும் வைக்கும் வாசிப்புகள் மூன்றும். 

இந்த வாசிப்பிலிருந்து கொஞ்சம் விலகி வென்றவர்கள் எழுதிய உலகவரலாற்றிலும் சில உண்மைகளைப் படிக்க நேரிடுவது அபூர்வம். அதில் ஒன்று எப்படி கொலம்பஸ் வட அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்பது. கொலம்பஸ் காலத்தில் ஐரோப்பாவில் இருந்த ஆட்சியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அல்லது Elites க்கும் சீனாவின் Textile, Porcelain, Spices இதுபோன்றவற்றிற்காக அவர்களுடன் வியாபார ஒப்பந்தங்கள் செய்வது அல்லது அவர்கள் பிராந்தியஙக்ளைப் பிடிப்பது என்கிற நோக்கத்துடன் முனைந்தார்களாம்.

கொலம்பஸ்க்கோ நிறைய ஆர்வக்கோளாறு போல! அவர் உலகத்தின் வடிவம், சுற்றளவு கணக்கெல்லாம் ஒரு குத்துமதிப்பா கணக்குப்போட்டு ஸ்பெயின் ராஜ்யத்திடம் ஒப்படைத்தாராம். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவின் இவர்கள் விரும்பிய பகுதிகளுக்குச் செல்ல விரும்பினாலும் 8 ம் நூற்றாண்டில் மொஹமட்டின் ராணுவம் (மொஹமட் மறைந்தது 632 இல் என்கிறது மற்றொரு குறிப்பு) இஸ்லாமிய ஆட்சியில் (ஒட்டமன் ராஜ்சியம்) ஸ்பெயின், போச்சுக்கல் எல்லாம் இஸ்லாமியர்களின் ஆட்சியில் பிடிக்குள் வீழ்த்தப்பட்டதை ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டார்களாம் ஐரோப்பியர்கள். ஸ்பெயின், போர்ச்சுக்கல் 711ம் ஆண்டில் Umayyad Dynasty அல்லது உமாயட் பரம்பரையின் ஆட்சிவிஸ்தரிப்பில் அரபிய ராணுவத்தின் படையெடுப்பில் அவர்கள் வசமானதாய் ஃப்ரான்சிஸ் ஃபுக்குயாமா The Origins of Political Order இல் குறிப்பிடுகிறார். அந்தப் பகையின் தொடர்ச்சியால் கொலம்பஸ் அவர்கள் கடல் எல்லையைத் தாண்டிப்போவதில் இருந்த சிக்கல்களை சமாளிக்க இருந்த வழியாய் அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து போய் சீனாவை அடையலாம் என்று சொன்னாராம்.  ஐரோப்பாவில் எந்த ராச்சியத்திலும் யாருமே அவருக்கு Financial assistance கொடுக்காமல் இருக்க ஸ்பெயின் உதவியதாம். அதற்கும் அவர்கள் ராச்சியத்திலிருக்கும் ஒரு குழுவிடம் (Astronomy, Navigation, Natural Philosophy experts) அவர்களிடம் கொலம்பஸ் இன் கணிப்புகள் சரிதானா என்று சோதிக்கச்சொன்னார்களாம். 

அந்த குழுவிலுள்ளவர்களும் சோதித்துவிட்டு இவர் எப்படி இவருக்கு முன்னர் இருந்த அறிவாளிகள் சொல்வதையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவது என்று நினத்தோ என்னவோ கொலம்பஸ் கணக்கு தவறு என்றார்களாம். இருந்தாலும், ஸ்பெயின் ராஜ்யம் அதைக் கணக்கில் கொள்ளாமல் இவரது சீனாவை, இந்தியாவை அடையும் முயற்சிக்கு ஃபைனான்ஸ் செய்தார்களாம். ஆனால், கொலம்பஸ் முயற்சி தோல்விதான். அவர் கண்டுபிடித்தது தான் வட அமெரிக்காவாச்சே. 

இன்றைய காலகட்டத்திலும் Biologists ’சிலர்’ Homogenocene க்கு முன்னோடி கொலம்பஸ் என்கிறார்களாம். இதைத்தான்  எளிய தமிழில் உலகமயமாக்கல் என்கிறார்கள்.  

கொலம்பஸ் சீனாவை, இந்தியாவை கண்டடையும் முயற்சி தோல்வியாக அந்தக்காலத்தில் கருதப்பட்டதால் ஸ்பெயின் அவருக்குரிய சலுகைகளை ரத்துசெய்துவிட்டதாம். இவரும் சளைக்காமல் ஸ்பெயின் சாம்ராஜ்யத்தின் மன்னருக்கு கடைசியாய் ஒரு கடிதம் எழுதினாராம். அதில் அவர் சொன்னது சீனாவின் ராச்சியத்தை கிறிஸ்த்துவமத்தை தழுவுபடி மாற்ற தன்னால் முடியும் என்று (1493 by Charles C. Mann). கொஞ்சம் சிரிப்பும் வந்தது இதைப் படித்த போது. 


அது எப்படியோ, ஆனால், இவர்கள் பின்நாட்களில் வட அமெரிக்காவை வந்தடைந்த ஆங்கிலேயர்களும் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்வியந்திர்களை தங்கள் Church மூலம், அதாவது மத்தின் வழி தங்களை ஆள்பவராகவும், மாட்சிமை கொண்டவர்களாகவும் ஏற்றுக்கொண்டால், தங்களுக்கு அவர்கள் அடிமைசேவகம் செய்யாமல் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழலாம் என்று சொன்ன உண்மைக்கதைகள் வரலாற்றில் அதிகம் பேசப்படுவதில்லையாம். 


இதைத்தான் கொலம்பஸ் கண்டுபிடித்து இன்று அமெரிக்கா என்கிற பூவோடு சேர்ந்த நாராக இல்லாமல் நரகலாகவும் உலக மக்கள் பூராவும் நாற்றத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. 


கொலம்பஸ் கண்டுபிடித்து அதன்வழி வந்த அமெரிக்கா இன்றுவரை எந்தவொரு போரிலும் நேரடியாகப் பாதிக்கப்படாதது என்றும்; ஆனால், அதேநேரம் 1959-2009 ம் ஆண்டுவரை அமெரிக்கா 29 நாடுகளில் மிகத்தீவிரமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள் The Politics of Genocide ஆசிரியர்கள். 2009 ம் ஆண்டு என்றால் ஈழமும் அடங்குமோ என்று யோசிக்கவைக்கிறார்கள்.  The Politics of Genocide இல் லிபியா மற்றும் ஈழத்தின் இறுதிப்போரில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் இரண்டையும் ஒப்பிட்டு தமிழர்களது இனப்படுகொலையானது எவ்வளவு மோசமாக கண்டும் காணாதது போல் நிகழ அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்பிடுகிறார்கள். 

நாங்களும் தமிழின இனப்படுகொலை மிகத்தீவிரமாக முள்ளிவாய்க்காலில் முடுக்கிவிடப்பட்ட நாளிலிருந்து ஏன் ஐ. நா. தன் R 2 P, Responsibility to Protect என்கிற கோட்பாட்டை அப்பிடியே அமுல்படுத்தி ஈழத்தமிழினப் படுகொலையை தடுத்திருக்கவில்லை என்றெல்லாம் தமிழின சில அரசியல் ஆலோசகர்களால் அறிவூட்டப்பட்டோம். ஆனால், இப்போது தான் படித்து தெரிந்துகொண்டேன் அந்த R2P என்பது ஐ. நா. வின் பாதுகாப்பு சபையின் அனுமதிக்கு காத்திராமல் அமெரிக்கா போன்ற வல்லரசு ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு கோட்பாடாகும் (Doctrine) என்பதை. 

அமெரிக்காவானது தனது பொருளாதார நலன்களுக்காக மூன்றாம் உலக நாடுகளில் மக்களை அடிமைகளாக வைத்திருக்கும், மக்களின் உரிமைகளுக்கான எந்தவொரு அரசியல் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாத ஜனநாயகத்தை மதிக்காத ஆட்சியாளர்களை அந்தந்த நாடுகளில் வளர்த்தெடுத்து அதன்வழி சமத்துவமில்லா கட்டமைப்பை பேணிவருவதும், இனப்படுகொலைக்கு துணைபோவதும், தூண்டிவிடுவதுமான செயல்களைச் செய்துவருவதாக விளக்குகிறார்கள். 

இதெல்லாம் ஏன் என்னை யோசிக்கவைக்கிறது என்றால், இலங்கையின் வடக்கு மாகாணசபைத்தேர்தல் முடிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றவுடன் இனி தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் பையப் பைய கிடைக்கும் என்கிற சிலரது வாதப்பிரதிவாதங்கள் தான். மாகாணசபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களது ஒரே இலங்கைக்குள் அதாவது ஒற்றையாட்சிக்குள் தீர்வும் அதற்கான ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தனின் தமிழ் தேசியம் என்றால் தமிழ் தேசியம் என்பதை வலியுறுத்தும் அதேவேளை கொஞ்சம் அதிகப்படியான, வரம்புமீறிய வார்த்தைப் பிரயோகப் பதில்களும்; தமிழ்தேசிய கூட்டமைப்பை அதன் தலைவர்களின் சில அபத்தமான பேச்சுக்களுக்கு சப்பைக்கட்டு கட்டி பிழையைப் பிழையெனக் கூறாமல் மழுப்பும் சில தமிழின அரசியல் ஆலோசகர்களும் என் போன்றவர்களுக்கு பயத்தையே விளைவிக்கிறார்கள். 

இப்படித்தான் கனடாவின் தமிழ்தொலைக்காட்சியில் ஒரு அரசியல் களவிவாதம் ஈழம் பற்றி நடந்துகொண்டிருந்தது. அதில் எப்போதும் தமிழ்தேசிய கூட்டமைப்பை ஆதரித்து பேசும் ஒரு ஐயா ஒருவர் சொன்னார் விக்னேஸ்வரன் உண்மையிலேயே துணிச்சலானவர் என்று. எனக்கு இவர்கள் அளவுக்கு அரசியல் அறிவு இல்லை என்றாலும் ஆர்வக்கோளாறில் ஏன் என்று அறிய தொடர்ந்து கவனித்ததில் அறிந்தது என்னவென்றால், அவர் இலங்கை ஆட்சியாளர்களுக்குப் பயமில்லாமல் தமீழத் தேசிய தலைவரை “Freedom fighter" என்று சொல்லிவிட்டாராம். அடக்கொடுமையே என்றிருந்தது எனக்கு. விக்னேஸ்வரன் அதற்குப் பின் சொன்னது இந்திய மைய ஊடகங்களில் காணப்பட்டது அந்த ஐயாவின் கண்களில் படவில்லை போலும். பிரபாகரனை ராஜபக்‌ஷேக்களோடு ஒப்பிட்டு கொலையாளி ஆக்குவது தான் தமிழின அரைகுறை சாணக்கியம் என்பது ஒருவேளை என் சிற்றறிவுக்கு எட்டாமல் போய்விட்டதோ! இதுபோன்ற சில தமிழின அரசியல் ஐயாக்கள் பேச்சைக் கேட்டால் எனக்கு தலை சுற்றும். உங்களுக்கும் இப்படி தலைசுற்றினால் நீங்கள் என் இனம். 

இதுபோன்ற பேச்சுக்களால் இவர்கள் யாரை சந்தோசப்படுத்துகிறார்கள் என்கிற கேள்வியும் மனதில் எழும்பும். பதிலாய் அமெரிக்கா, இந்தியா என்பதைத் தவிர வேறொன்றும் தோன்றாது. இப்படி அமெரிக்காவை, இந்தியாவை மனம்குளிரச்செய்ய பேசுவதும், நாடகம் நடத்துவமே தமிழினத்தலைவர்கள் செயல் என்றால் உங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு என்ன மதிப்பு. தமிழர்களின் தமிழ் தேசியத்தை மக்கள் கேவலப்படுத்துவதில்லை. அதை அவர்கள் இன்றுவரை மறக்கவுமில்லை. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வழி மக்கள் ஆணை வழங்கப்பட்ட தமிழ்தேசியத்தை இவர்கள் காக்கும் லட்சணம் அதன் எதிர்காலம் குறித்து பயம் கொள்ளச் செய்கிறது. 

வடக்கு மாகாணச் சபை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் பதவியேற்பு விழாவும் அதன் இந்துமத அடையாளத்தூக்கல்களும் என்ன வகையான சாணக்கியமோ. அது அசூசையாகவே இருக்கிறது. தவறு என்னுடையதல்ல. ஏன் விக்னேஸ்வரனை மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கு சம்பந்தன் ஐயாவின் விளக்கம் தந்தை செல்வா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, யாரை தேர்வு செய்திருப்பாரோ அதையே நானும் செய்தேன் என்பது. ஈழவிடுதலைக்காகப் போராடிய புலிகளை ஆங்காங்கே விக்னேஸ்வரன் மறைமுகமாகத் தாக்கிப் பேசுகிறார் என்கின்றன சில ஊடகச் செய்திகள். இப்படி, தந்தை செல்வாவின் தமிழ் தேசியம், புலிகள் கடைசிவரை கொண்ட கொள்கைக்காக உறுதியாய் இருந்ததென எல்லாத்தையும் ஆணவம் என்கிற ஒற்றைச் சொல்லில் கடந்துபோய்விட முடிவதில்லை எம்மால் சுலபமாய். 

உங்களைப்போல அரசியல் படிப்போ அல்லது சாணக்கியமோ கற்றவர்கள் அல்ல நாங்கள். உலகவரலாற்றை சான்றுகளாகவும், கற்பனை கலந்த கதைகளாகவும் படிக்கும் போது தெரிகிறது யாரை நம்பவேண்டும், யாருடைய சாணக்கியத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும் என்பது. இவையெல்லாம் மாட்சிமை பொருந்திய பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல்வாதிகளான உங்களுக்குப் புரியாமல் போனால் அது தமிழர்களின் தலைகளை அல்லவா காவு கொள்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் ஒட்டுமொத்த தமிழினத்தையே ஏய்ப்பது உங்களுக்குப் புரியவில்லையா! இது புரியாமல் இருக்கிறீர்களா அல்லது புரிந்தும் நடிக்கிறீர்களா! 

ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகம் என்பது உய்ய ஏதோவொரு புதுவழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், இனி மானுடம் விடுதலை பெற்றுவிடும் என்பதும் சொல்லப்பட்டே வருகிறது. Tribal Society ஆக இருந்த மனிதகுலம் முன்னேறி ஜனநாயகத்தின் வழி எல்லா உரிமைகளையும் பெற்றுவிடுவார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இன்னும் அது பூர்த்தியாகவுமில்லை; மானுடம் விடுதலை அடையவும் இல்லை. கொலம்பஸ் கண்ட கனவுக்கு இன்னும் தீவிரமாக வடிவம் கொடுத்தபடி சுயநிர்ணய உரிமைப்போரையும், மக்கள் விடுதலையையும் நசுக்கியபடியே இருக்கிறார்கள் வல்லமை படைத்தவர்கள்.   ஆளும்முறைமைகளும், அதன் பிரதிநிதித்துவங்களும் குறைபாடுகளுடன் விளங்கும் பட்சத்தில் இதுபோன்ற வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சிநிரல்களுக்கு துணைபோகிறவர்களால் மனிதகுலத்துக்கு மீட்சியும் இல்லை, மாட்சிமையும் இல்லை. 


Image Courtesy: Google & TamilNet. 

செப்டம்பர் 18, 2013

தேர்தல் விஞ்ஞாபன வைபோகமே!


தேர்தல், இது மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில் இன்னும் ஜனநாயகம் என்பதன் ஒரு வரப்பிரசாதம் போன்றே கணிக்கப்படுகிறது. இலங்கை போன்ற நாட்டில் இனவாத அரசியல் செய்யும் ஆட்சியும், தேர்தல் என்கிற கண்துடைப்பும் போரிலிருந்து மீண்ட வடக்கிற்கு என்ன புதிதாய் நம்பிக்கையை கொண்டுவரும் என்பதே குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமளவுக்கு இல்லையென்றாலும், குறைந்தபட்சம் நீதியும், நியாயமானதுமான தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம். இது ஒன்றும் பாராளுமன்றத் தேர்தல் கூட கிடையாது. எதிர்வரும் 21ம் திகதி நடைபெறப் போவது மாகாணசபைத் தேர்தல் மட்டுமே. இலங்கையின் வடக்கு, தெற்கு, வடமேல், மத்திய, ஊவா மாகாணசபைத் தேர்தல் இது. 

மற்றைய மாகாணங்களை விடவும் வடக்கின் மாகாணசபைத் தேர்தல் அதிகளவில் சூடுகண்ட களமாக ஆகிவிட்டிருக்கிறது. வடக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமே தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை ஒன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தல் விஞ்ஞாபனமானது இலங்கையின் அரசியலமைப்பை மீறாமலே தயாரிக்கப்பட்டதாய் மன்னார் ஆயர் ராயப்பு கூறியிருக்கிறார். மற்றைய கட்சிகளான ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசக் கட்சி, ஜேவிபி, முஸ்லிம் காங்கிரஸ் என்பன மற்றைய மாகாணங்களில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை அறிமுகம் செய்யவில்லை என்கிறார் அரசின் ஊதுகுழலாய் செயற்படும் விமல் வீரவன்சே. தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை என்பதெல்லாம் ஜனநாயக விழுமியப் பண்பு என்பது புரியாத ஜென்மங்களுக்கு என்ன சொல்வது. 

அப்பிடி தமிழர்களின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் என்னதான் இருக்கிறது இவர்கள் குதிக்க என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் உள்ளக சுயநிர்ணய உரிமையை தமிழர்களின் அரசியல் அபிலாசையாகக் குறிப்பிட்டதாக அரச சார்பில் வழக்கம் போல் கூக்குரல். தமிழர்கள் உண்மையில் வெளியக சுயநிர்ணய உரிமையைத் தான் விரும்புகிறார்கள். ஆனால், உங்கள் சோசலிச ஜனநாயக் குடியரசு தான் சட்டம் போட்டு பேசக்கூட தடைவிதிக்கிறதே தமிழனுக்கு. பிறகேன், இத்தனை ஆர்ப்பாட்டம். த. தே. கூ. வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருகிறார்கள், அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படவேண்டுமென கேட்கிறார்கள்; இதெல்லாம் புலிகளின் கருத்துகளை நிறைவேற்றுவதாகும் என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லஷ்மன் யாப்பாவின் ஆணவப் பேச்சு. 

காலங்காலமாக தமிழனின் வாழ்நிலம், தமிழனுக்கு சொந்தமான பூமி தான் தற்போதைய இலங்கையின் வடக்கும், கிழக்கும். அதில் தமிழன் ராணுவம் வேண்டாம், காணி, காவல்துறை அதிகாரங்களைக் கொடு என்றால் கூட வழங்க மறுக்கும் ஒரு மாகாண சபை ஆட்சியை அரசின் கைப்பாவையாய் செயற்படும் ஒரு முதலமைச்சருடன் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகிறது என்றே வைத்துக்கொண்டாலும், அதைக்கூட அறுபது வருடங்களாகவே மறுப்பவன் தானே சிங்களன். 

இதெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களின் வழக்கமான தமிழர்களுக்கு எதிரான ஆண்டாண்டுகால எதிர்ப்புகள். இதுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் பெரும்பான்மை வெற்றி பெறவேண்டும் என்பதே அனேகமான தமிழர்களின் விருப்பும், எதிர்பார்ப்பும். ஈழத்தின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிர்வரும் 21 ம் திகதி தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுமாறு கூறுவதோடு, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபை என்பது தமிழர்களின் தேசியக்கேள்விக்கு தீர்வாகாது என்பதையும் கூறுகிறார்கள். மாகாணசபை மூலம் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது என்பதை த. தே. கூ. சரியாக தேர்தல் அறிக்கையில் விளக்கவில்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடு. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படும் மக்கள் ஆணையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான அரசியல் தீர்வுக்கான களங்களை உருவாக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

எப்படியென்றாலும், வடக்கிலேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றே ஆகவேண்டியது காலத்தின் தேவை, கட்டாயம். இல்லேயேல், சிங்களப் பேரினவாதத்தின் கைகள் தாம் வடக்கிலும் மேலும், மேலும் உயர்ந்து, தமிழர்களின் குரல்வளைகள் இன்னும் நெரிக்கப்படும். இதற்கிடையே, வடக்கின் தேர்தல் முறைகேடுகள், அதிகாரிகளின் நியமிப்புகளில் அதிக சிங்களர்களின் தெரிவு, மற்றும் பொதுமக்கள் வாக்களிக்கச் சென்றால் குண்டுவெடிக்கும் என்கிற ராணுவ மிரட்டல்களும் உண்டு. இதையெல்லாம் கண்காணிக்க சார்க் அமைப்பின் பிரதிநிதிகள் வடக்கிற்கும் வந்திருப்பதாகச் செய்திகள் சொன்னாலும், அவர்களும் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு மாகாணசபைத் தேர்தலுக்கே தமிழனுக்கு இத்தனை கெடுபிடிகள். இங்கே தான் ஜனநாயகம் வாழ்கிறது என்று தேர்தலுக்குப் பின் அமெரிக்க ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தவிர, ஐ. நா. வின் 24 வது மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் ஆரம்பித்திருக்கிறது. இந்த மாகாணசபைத் தேர்தல் கூட மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து காப்பாற்றும் ஒரு யுக்தி தான். ஒரு இனப்படுகொலையை மனித உரிமைகள் பிரச்சனையாக்கி இலங்கையில் தமிழர்கள் என்னும் ஒரு இனத்தையே சிங்களப் பேரினவாதத்துக்கு காவுகொடுக்காமல் எப்போது தமிழனை வாழவிடுவார்களோ!

மாகாணசபை தமிழர்களின் அரசியல் தேசிய அபிலாசைகளுக்கு தீர்வாகாது என்பதையும், தமிழர்கள் தொடர்ந்தும் சுயநிர்ணய உரிமைக்கான முயற்சிகளை தொடரவேண்டும் என்பதைஉம் கருத்திற்கொள்ளவேண்டியே இருக்கிறது. 


Image: Google. 

செப்டம்பர் 16, 2013

புலிகளின் நேர்மைஒருவரின் நேர்மை பற்றி அவர் நட்புகளிடம் கேட்காதே, அவர் எதிரிகளிடம் கேள் என்று நான் நினைப்பது உண்டு. ஈழவிடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மை பற்றி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அல்லது அராஜகத்தில் இயங்கும் இலங்கை ஊடகங்கள், இந்திய ஊடகங்கள், குறிப்பாக இந்து நாளேடு, சர்வதேச ஊடகங்களின் போலிப்பரப்புரைப் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளில் தங்களை அறியாமலே புலிகளின் நேர்மயை பேச நேரிட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. 

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரணம் குறித்த செய்திகளின் ஆதாரங்களை பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் Callum Macrae வின் கட்டுரையை இந்து நாளேடு Op-Ed. இல் வெளியிட்டு தன் ராஜபக்‌ஷேக்களின் விசுவாசத்தை கொஞ்சம் மடைதிருப்பியது. யூதர்களைக் கொலைசெய்ய உருவாக்கப்பட்ட தடுப்பு முகாம்களுக்கு 21ம் நூற்றாண்டில் இணையானதாக சாதாரணர்களால் கூடப் புரிந்துகொள்ளப்பட்ட உண்மையை இந்து நாளேடு அங்கே தமிழர்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள் என்று கூறிவந்ததை பாலச்சந்திரன் விடயத்தில் சனல் 4 போட்டுடைத்தவுடன் தேவதை வேடம் தரித்தது இந்து நாளேடு. 

சிங்கள பெளத்த ஆட்சியாளர்களுக்கும், சர்வதேச பூகோள அரசியலின் அஜெண்டாவுக்கு முண்டு கொடுக்கும் இந்திய ஆளும்வர்க்கம் மற்றும் அரசியல் பொம்மைகளுக்கும் தெரியும் புலிகளின் நேர்மை பற்றி. தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் சுதந்திரமானதும், கெளரவமானதுமான அரசியல் உரிமைகளுக்காகவே போராடினார்கள். அதனால் தான் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று புளகாங்கிதம் அடைந்த பின்னும் புலிகள் பற்றிப் பேசவும், அவர்கள் பற்றி போலிப்பிரச்சாரப் பாணியிலான கருத்துருவாக்கப் படைப்புகளை உருவாக்கவும் வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இவர்கள் மீண்டும், மீண்டும் தங்களையும் அறியாமல் நிரூபிக்க முயல்வது புலிகளின் நேர்மைக்குப் பின்னால் மறைக்கப்படும் தங்கள் சுயநல அரசியல் இலாபங்களின் கூட்டுமுயற்சி பற்றிய போலிக்கருத்துருவாக்கமே. 

இதன் அண்மைய எதிரொலி Madras Cafe என்கிற ஒரு இந்திய ஆளும்வர்க்கத்தின் பார்வையிலான ஈழம் பற்றி அல்லது புலிகள் பற்றிய போலிப்பரப்புரை திரைப்படம் என்பது செய்திகள் மற்றும் சமூகவலைத்தளக் கருத்தாடல்களின் வழி தெரிகிறது. வழக்காமாக ஈழம் பற்றிய படைப்புகள் என்றால் தவிர்ப்பதில்லை நான், பார்த்துவிடுவேன். இதைப் பார்க்க மனம் ஒப்பவில்லை. இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் அதற்குண்டான அரசியல் பிரச்சாரங்களின் ஆரம்பங்களும் தென்படவே செய்கிறது. படைப்புகளின் அடிநாதம் எதுவாயினும் அதைப் புரிந்து செயற்படவேண்டிய தேவை தமிழர் தரப்புக்கு உண்டு. 

ஆனால், படம் பார்த்த சிலரது விமர்சனப்பார்வை என்பது திரைக்கதையின் நாயகனின் பார்வையில் அவர் அவரது பிரதமரை இழந்திருக்கிறார் என்பது தானாம். அத்தோடு ஏன் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளையும், அட்டூழியங்களையும் மருந்துக்கேனும் காட்சிப்படுத்தவில்லை என்றும் எழுதியிருந்தார்கள். இதெல்லாம் தமிழகத்தின் செயற்பாட்டாளார்கள் கருத்தைக் கொண்டு நான் முன்மொழியவில்லை. சாதாரணர்களின் கருத்துகள் இவை. 

பிரதமருக்காய் ஒரு இனமும் அதன் விடுதலைப் போரும் காவுகொள்ளப்பட்டது எந்தவகையில் சேர்த்தி. இந்தியாவின் இன்னொரு பிரதமரின் மரணத்துக்குப் பின்னான அரசியல் கோபங்களை, இழப்பின் சூத்திரங்களை கருவாக்கி, கதைக்களம் அமைக்கலாமே!

இதுக்குப் பிறகு, தற்போது மிக அண்மையில் பார்த்தது, கேட்டது தமிழக ஓய்வுபெற்ற ஆட்சித்துறைப் பணியாளரான (IAS) பெண் அதிகாரியின் புலிகள் மீதான விமர்சனம். சிவகாமி பழனிமுத்து என்கிற ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி தன்னிடம் புலம்பெயர் தமிழர்கள் புலிகள் பெண் போராளிகளை தங்கள் பாலியல் தேவைகளுக்காக வைத்திருந்தார்கள் என்பது எவ்வளவு அபாண்டமான பொய். இவரின் கூற்றை ஆதாரமற்றதென அங்கிருந்த மற்றைய சிறப்பு விருந்தினர் ஒரிருவர் மறுத்தார்கள். அதன் பிறகு, பொய்குற்றச்சாட்டை புலிகள் மீது சுமத்தியவர் முகநூல் பக்கத்தில் ஒருவிதமான மன்னிப்பு போன்ற ஒரு நிலைத்தகவலைப் பார்க்க நேர்ந்தது. தன்னிடம் தக்க ஆதாரங்கள் இல்லாமல் தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாதாம். ஒரேயொரு தாழ்மையான கருத்து, புலிகள் இயக்கத்தின் பண்பொழுக்கம் பற்றி சர்வதேசமும் அறியும். வீணே இல்லாததுக்கெல்லாம் ஆதாரம் தேடி சோர்ந்துபோகாதீர்கள். 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவதூறு பேசியவர்களில் நீங்கள் முதலுமல்ல, கடைசியுமல்ல. இருந்தும், நடக்கவே நடக்காத ஒரு விடயத்தை நடந்ததாகச் சொல்லி அதற்கு ஆதாரம் தேடும் ஒரு ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் நேர்மைக்கு இதுபோன்ற சான்றுகள் தேவைதான்.  

இனிமே இவர் போன்றவர்கள் ஈழம்பற்றியோ அல்லது ஈழவிடுதலைக்காகப் போராடியவர்கள் பற்றியோ பேசி இழிவுபடுத்தவும் வேண்டாம். பிறகு, ஒப்புக்கு மன்னிப்பும் கேட்கவேண்டாம். குறைந்தபட்சம் உங்கள் மனசாட்சிக்காகவாவது நேர்மையாய்ப் பேசுங்கள். அப்பிடியே இன்னொரு விடயத்தையும் புரிந்துகொள்ளுங்கள் அம்மணி. ஈழத்தமிழர்கள் போராடுவது உங்கள் பாஷையில் 'Equal Status' க்கு அல்ல, சுயநிர்ணய உரிமைக்காக. 

சும்மா, சும்மா தமிழ உணர்வாளர்கள் மேல் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் இதை கவனித்தால் நல்லது. சிவகாமி பழனிமுத்து போன்றவர்களின் அநியாயமான பேச்சுக்கு தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பும் இல்லையென்றால் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொட்டுவார்கள் போல. 

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தங்கள் சார்பில் வேட்பாளராக தெரிவுசெய்த சி.வி. விக்னேஸ்வரன் சிங்களர்களும் தமிழர்களும் கணவன் - மனைவி போன்றவர்கள் என்கிற கூற்றும், மறுப்பும் என்று இந்தியாவின் இந்து பத்திரிகையும் அவரும் ஒருபுறம். நான் பத்து கேள்விகளுக்கு பதில் சொன்னேன் அவர்கள் இந்த ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தியிருக்கிறார்கள் என்று தமிழகத் தமிழர்களும் அமைப்புகளும் கணவன் - மனைவி விவாகரத்து செய்துகொள்ளுங்கள் என்று சொல்லக்கூடாது என்று கூத்து வேறு. ஆனாலும், ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கோரவில்லை, மாகாண சுயாட்சியே கோருகிறார்கள். அதற்கு தமிழ்நாட்டின் அறிவுரை ஏதும் தேவைப்படும் என்பது போல் பேசி மளுப்பி, ஒப்பேத்தியிருக்கிறார். ஏன் இப்பிடி! 

இவர்களைப் போல் அரசியல் படிப்பும் பட்டமும் இல்லாதவர்களின் சார்பில் கேட்கத்தான் தோன்றுகிறது. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ஈழத்தமிழர்களை! உங்களுக்கு இலங்கையின் 6வது திருத்தச்சட்டம் ஒரு பயம் என்றால் அதைவெளிப்படையாய் முன்பு எத்தனை தடவை ஒத்துக்கொண்டது போல் ஒத்துக்கொண்டு போகவேண்டியது தானே. இலங்கை அரசு எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது புலம்பெயர் தமிழர்களால், தமிழ்நாட்டு தமிழர்களால் என்றால் தந்தை செல்வாவையும் சேர்த்தே குற்றஞ்சொல்லலாமே. தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வாய் முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் சேர்த்தே புதைக்கலாமே. அங்கே இருக்கிற சாதாரணனுக்கு இருக்கும் நெருக்கடியே உங்களுக்குமா! பிறகெதற்கு மாகாணசபைத் தேர்தல். அதற்கு ஒரு பிரதிநிதி. புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்தமிழர்களை குற்றஞ்சொல்வது போல் ஏன் உங்களால் அமெரிக்காவையோ இந்தியாவையோ விமர்சிக்க முடிவதில்லை. 

புலிகள் கேட்டதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்கிறது என்று சிங்கள பெளத்த அரசின் ஆட்சியாளர்கள் கோபித்துக்கொள்கிறார்களாம். புலிகளா கேட்டார்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் போடு என்று. தந்தை செல்வா தீர்மானம் போட்டார். புலிகள் அதற்கு வடிவம் கொடுக்க தம்வரையில் முனைந்தார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின்  நேர்மையை சந்தேகிக்கவில்லை. ஆனாலும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு இனத்தின் பிரதிநிதிகளான உங்கள் அசமந்தமான பேச்சுகளும், மறுப்புகளும் கேட்கும் போதும், பார்க்கும் போதும் தான் புலிகளின் நேர்மையும் இழப்பும் இன்னும் ஆழமாய் தைக்கிறது மனதில். Image Courtesy: Google.