நவம்பர் 25, 2012

கார்த்திகை 27!


பரிணாமவளர்ச்சியில் படிப்படியாய் மனிதகுலம் தனது தனியியல்புகளிலிருந்தும், குழுவாய் கூட்டுவாழ்க்கை வாழத்தொடங்கி கூட்டுமனப் போக்கு கொண்டு சமூகமாய் வாழ்ந்தும், தனக்குரிய அரசியல் ஆட்சிமுறைகளைத் தேர்ந்தெடுத்து எப்போதும் மாற்றார் தலையீடுகள், அடக்குமுறைகள் இன்றியே வாழவிரும்புகிறது. நான், என் வாழ்வு, என் நிலம், என் உறவு, என் சுற்றம் இப்படித்தான் எல்லாமே ஆரம்பமாகிறது தேவைகளின் நிமித்தம். ஒருவருக்கு மற்றவரின்  தேவைகளின் மூலங்கள் தேவைப்படாதவிடத்து முரண்கள் தோன்ற ஏதுக்களில்லை. அந்த எல்லைகளைக் கடந்து ஆலாய்ப்பறந்து, ஆவலாதிப்பட்டு அடுத்தவனிடத்தில் தான் தன்வாழ்விற்குரிய எல்லாம் கொட்டிக்கிடக்கிறது என்கிற பேராசை தான் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் கொடுமை.
 
மானிடவியல் ஆராய்ச்சிகளின் ஆதிமூலங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரிகிறது  மனிதசமூகத்தின் வரலாறு கட்டியமைக்கப்பட்ட விதமும், அதை தக்கவைத்து, காத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளும். ஒவ்வொரு சமூகமும் தன் இயல்புகள், பண்புகள், பொருண்மிய வளங்களுக்கேற்றவாறு ஒரு தன்னிறைவுச் சமூகமாக தன் அரசியல் சுதந்திரத்திற்கான அடிப்படைகளை தன்னிடத்தே ஆரம்பம் முதல் கொண்டிருக்கிறது.  இதே அடிப்படையில் ஈழத்தமிழ் சமூகத்திற்கும் ஒரு வரலாற்றுப்பாரம்பரியம் உண்டு. அவ்வாறான வரலாற்று வழி வந்த நில, பொருண்மிய, மொழி, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களை அரசியல் யாப்பில் காவு கொள்ளப்பட்ட கதை தான் ஈழப்போராட்டம் என்பதன் ஆரம்பம், கரு எல்லாமே. ஆனாலும், தற்காலத்தில் சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தமிழீழ சுயநிர்ணயக்கோரிக்கை கடந்த  26-30 வருடங்களுக்குள் சுருக்கப்பட்டுவிட்டது.


வல்லான் வகுத்ததே சட்டம் என்கிற தான்தோன்றித்தனமான பொருளாதார அரசியலின் அடக்குமுறை வடிவங்கள் தான் சுதந்திரப்போராட்டங்கள் வடிவம் பெற ஏதுவாகிறது போலும். அடிமைப்பட்டு வாழ்தலின் குறுகுறுப்பு இல்லாதவர்க்கு  ஒப்புக்குச் சொல்லிக்கொள்ள ஆயிரம் சமாதானங்கள் இருக்கும். மூன்றுவேளை உணவும், இன்னபிறவும் கொண்டால் அவர்தம் வாழ்வு முழுமைபெறலாம்! இயற்கையைப்போல சுதந்திரமாய் சுவாசிக்க நினைப்பவனுக்கு போராட்ட குணம், விடுதலை உணர்வு குறித்த வேட்கை  எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டே தான் இருக்கும். ஆண்டாண்டுகாலமாய்  போர்கொண்ட  உலகம் அதன்வழி யாரையும் அடக்கி ஆளமுடியாது என்று உலகளாவிய ரீதியில் மன்றம் வைத்து, ஒப்பந்தங்கள் போட்டு ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் சார்ந்த குழுவுக்கும், இனத்துக்கும் அரசியல், பொருளாதார, குடியியல் சமூக உரிமைகள் உண்டு என்று எழுதிவைத்தே இருக்கிறது. அது பெரும்பாலும் எழுதிவைப்பதோடு தோற்றும் போகிறது என்பது அண்மைக்கால வரலாறுகள்.

உலகவரலாற்றில் எத்தனையோ நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்ட இனங்கள், குழுக்களைப்போலவே இலங்கையிலும் உள்நாட்டில் அரசியல் யாப்பில் எழுதிவைத்த அடக்குமுறையின் வடிவங்களை சாத்வீக முறையில் எதிர்த்து, பேச்சுவார்த்தை நடத்தி, ரகசிய ஒப்பந்தங்கள் என்று ஒவ்வொரு அரசியல் ஆட்சிமாற்றத்திலும் தவறாமல் சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு; தீர்வுக்கு  அரசியல் வன்முறை தவிர வேறுவழியில்லை என்று இலங்கை ராணுவ அடக்குமுறைக்கு எதிராக உருவானது தான் ஈழப்போராளிக்குழுக்கள். பேரினவாத அரசு எப்படி போராட்டத்தை நசுக்கும் என்கிற யதார்த்தம் புரிந்தபோது எதிரியிடம் புகலிடம் கோரியவர்கள், காணாமற் போனவர்கள், தங்களை வல்லரசுக்கனவு காண்பவர்களின் முதுகின் பின்னே ஒளித்துக்கொண்டவர்கள் போக மீதம் இருந்தவர்கள் இறுதிவரை விடுதலைக்காய் ஈழமண்ணில் போராடினார்கள்.
 
போராடும் வழியிலிருந்து விலகி தங்களை தற்காத்துக்கொண்டவர்கள் எதிரியுடன் சேர்ந்து, தனி ஈழம் என்கிற நியாயமான இலக்கோடு போராடியவர்களை மேஜை மாநாடு போட்டு விமர்சித்து, சர்ச்சைகளை கிளப்பி அடக்குமுறையாளனின் எண்ணத்தை ஈடேற்றி, அவர்களின் அடக்குமுறை அரசியலுக்கு துணைபோய்க்கொண்டும் இருக்கிறார்கள். மரணித்தவர்களுக்காய் அஞ்சலி செலுத்தும் நாளிலும் கூட துரோகத்தின் விம்பங்களை, காரணகர்த்தாக்களை கடந்துசெல்ல முடியவில்லை. விடுதலைக்காய் இதயசுத்தியுடன் போராடியவர்களை விமர்சனம் என்கிற பெயரில் இழிவுபடுத்தினாலும் அவர்களின் மனட்சாட்சிக்கே தெரியும் கொள்கைகளின் இலக்கு எதுவென்பது.
 
ஈழம் தற்காலிகமாக வீழக்காரணம் விடுதலைக்கான இலக்கின் தளர்வோ அல்லது மனவுறுதியோ அல்ல, அது  துரோகம். துரோகங்களால் வீழ்ந்த, வீழ்த்தப்பட்ட இனம் ஈழத்தமிழினம். துரோகங்களைத் தாண்டியும் இழப்புகளிலிருந்து எங்கள் விடுதலைக்கான வழிகளைக் கட்டமைக்கவேண்டும், சர்வதேச சூழ்ச்சி அரசியலைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்கிற அவாவுடன் இதுகாறும் ஈழப்போராட்டத்தில் தங்களை ஈகையாக்கி மரணித்த அனைவருக்கும் மாவீரர்தின வணக்கங்கள்.

 

3 கருத்துகள்:

புலவர் சா இராமாநுசம் சொன்னது…ஈழம் தற்காலிகமாக வீழக்காரணம் விடுதலைக்கான இலக்கின் தளர்வோ அல்லது மனவுறுதியோ அல்ல, அது துரோகம். துரோகங்களால் வீழ்ந்த, வீழ்த்தப்பட்ட இனம் ஈழத்தமிழினம்.

இவ் வரிகள் முற்றிலும் உண்மையே சகோதரி! நலமா !

Rathi சொன்னது…

நான் நலம் புலவர் சா இராமாநுசம் அவர்களே :) நன்றி.

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்