நவம்பர் 25, 2012

கார்த்திகை 27!


பரிணாமவளர்ச்சியில் படிப்படியாய் மனிதகுலம் தனது தனியியல்புகளிலிருந்தும், குழுவாய் கூட்டுவாழ்க்கை வாழத்தொடங்கி கூட்டுமனப் போக்கு கொண்டு சமூகமாய் வாழ்ந்தும், தனக்குரிய அரசியல் ஆட்சிமுறைகளைத் தேர்ந்தெடுத்து எப்போதும் மாற்றார் தலையீடுகள், அடக்குமுறைகள் இன்றியே வாழவிரும்புகிறது. நான், என் வாழ்வு, என் நிலம், என் உறவு, என் சுற்றம் இப்படித்தான் எல்லாமே ஆரம்பமாகிறது தேவைகளின் நிமித்தம். ஒருவருக்கு மற்றவரின்  தேவைகளின் மூலங்கள் தேவைப்படாதவிடத்து முரண்கள் தோன்ற ஏதுக்களில்லை. அந்த எல்லைகளைக் கடந்து ஆலாய்ப்பறந்து, ஆவலாதிப்பட்டு அடுத்தவனிடத்தில் தான் தன்வாழ்விற்குரிய எல்லாம் கொட்டிக்கிடக்கிறது என்கிற பேராசை தான் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் கொடுமை.
 
மானிடவியல் ஆராய்ச்சிகளின் ஆதிமூலங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரிகிறது  மனிதசமூகத்தின் வரலாறு கட்டியமைக்கப்பட்ட விதமும், அதை தக்கவைத்து, காத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளும். ஒவ்வொரு சமூகமும் தன் இயல்புகள், பண்புகள், பொருண்மிய வளங்களுக்கேற்றவாறு ஒரு தன்னிறைவுச் சமூகமாக தன் அரசியல் சுதந்திரத்திற்கான அடிப்படைகளை தன்னிடத்தே ஆரம்பம் முதல் கொண்டிருக்கிறது.  இதே அடிப்படையில் ஈழத்தமிழ் சமூகத்திற்கும் ஒரு வரலாற்றுப்பாரம்பரியம் உண்டு. அவ்வாறான வரலாற்று வழி வந்த நில, பொருண்மிய, மொழி, கலாச்சார, பண்பாட்டு அம்சங்களை அரசியல் யாப்பில் காவு கொள்ளப்பட்ட கதை தான் ஈழப்போராட்டம் என்பதன் ஆரம்பம், கரு எல்லாமே. ஆனாலும், தற்காலத்தில் சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தமிழீழ சுயநிர்ணயக்கோரிக்கை கடந்த  26-30 வருடங்களுக்குள் சுருக்கப்பட்டுவிட்டது.


வல்லான் வகுத்ததே சட்டம் என்கிற தான்தோன்றித்தனமான பொருளாதார அரசியலின் அடக்குமுறை வடிவங்கள் தான் சுதந்திரப்போராட்டங்கள் வடிவம் பெற ஏதுவாகிறது போலும். அடிமைப்பட்டு வாழ்தலின் குறுகுறுப்பு இல்லாதவர்க்கு  ஒப்புக்குச் சொல்லிக்கொள்ள ஆயிரம் சமாதானங்கள் இருக்கும். மூன்றுவேளை உணவும், இன்னபிறவும் கொண்டால் அவர்தம் வாழ்வு முழுமைபெறலாம்! இயற்கையைப்போல சுதந்திரமாய் சுவாசிக்க நினைப்பவனுக்கு போராட்ட குணம், விடுதலை உணர்வு குறித்த வேட்கை  எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டே தான் இருக்கும். ஆண்டாண்டுகாலமாய்  போர்கொண்ட  உலகம் அதன்வழி யாரையும் அடக்கி ஆளமுடியாது என்று உலகளாவிய ரீதியில் மன்றம் வைத்து, ஒப்பந்தங்கள் போட்டு ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் சார்ந்த குழுவுக்கும், இனத்துக்கும் அரசியல், பொருளாதார, குடியியல் சமூக உரிமைகள் உண்டு என்று எழுதிவைத்தே இருக்கிறது. அது பெரும்பாலும் எழுதிவைப்பதோடு தோற்றும் போகிறது என்பது அண்மைக்கால வரலாறுகள்.

உலகவரலாற்றில் எத்தனையோ நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்ட இனங்கள், குழுக்களைப்போலவே இலங்கையிலும் உள்நாட்டில் அரசியல் யாப்பில் எழுதிவைத்த அடக்குமுறையின் வடிவங்களை சாத்வீக முறையில் எதிர்த்து, பேச்சுவார்த்தை நடத்தி, ரகசிய ஒப்பந்தங்கள் என்று ஒவ்வொரு அரசியல் ஆட்சிமாற்றத்திலும் தவறாமல் சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு; தீர்வுக்கு  அரசியல் வன்முறை தவிர வேறுவழியில்லை என்று இலங்கை ராணுவ அடக்குமுறைக்கு எதிராக உருவானது தான் ஈழப்போராளிக்குழுக்கள். பேரினவாத அரசு எப்படி போராட்டத்தை நசுக்கும் என்கிற யதார்த்தம் புரிந்தபோது எதிரியிடம் புகலிடம் கோரியவர்கள், காணாமற் போனவர்கள், தங்களை வல்லரசுக்கனவு காண்பவர்களின் முதுகின் பின்னே ஒளித்துக்கொண்டவர்கள் போக மீதம் இருந்தவர்கள் இறுதிவரை விடுதலைக்காய் ஈழமண்ணில் போராடினார்கள்.
 
போராடும் வழியிலிருந்து விலகி தங்களை தற்காத்துக்கொண்டவர்கள் எதிரியுடன் சேர்ந்து, தனி ஈழம் என்கிற நியாயமான இலக்கோடு போராடியவர்களை மேஜை மாநாடு போட்டு விமர்சித்து, சர்ச்சைகளை கிளப்பி அடக்குமுறையாளனின் எண்ணத்தை ஈடேற்றி, அவர்களின் அடக்குமுறை அரசியலுக்கு துணைபோய்க்கொண்டும் இருக்கிறார்கள். மரணித்தவர்களுக்காய் அஞ்சலி செலுத்தும் நாளிலும் கூட துரோகத்தின் விம்பங்களை, காரணகர்த்தாக்களை கடந்துசெல்ல முடியவில்லை. விடுதலைக்காய் இதயசுத்தியுடன் போராடியவர்களை விமர்சனம் என்கிற பெயரில் இழிவுபடுத்தினாலும் அவர்களின் மனட்சாட்சிக்கே தெரியும் கொள்கைகளின் இலக்கு எதுவென்பது.
 
ஈழம் தற்காலிகமாக வீழக்காரணம் விடுதலைக்கான இலக்கின் தளர்வோ அல்லது மனவுறுதியோ அல்ல, அது  துரோகம். துரோகங்களால் வீழ்ந்த, வீழ்த்தப்பட்ட இனம் ஈழத்தமிழினம். துரோகங்களைத் தாண்டியும் இழப்புகளிலிருந்து எங்கள் விடுதலைக்கான வழிகளைக் கட்டமைக்கவேண்டும், சர்வதேச சூழ்ச்சி அரசியலைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்கிற அவாவுடன் இதுகாறும் ஈழப்போராட்டத்தில் தங்களை ஈகையாக்கி மரணித்த அனைவருக்கும் மாவீரர்தின வணக்கங்கள்.

 

நவம்பர் 20, 2012

தமிழகத்தை நம்பலாமா!
உலகத்தில் கொடுமையான விடயம் பசி, தாகம் தவிர, கிடைக்கவேண்டிய நீதி மறுக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதும் தான். சமீபகாலங்களில் ஈழம் தொடர்பான நிகழ்வுகள், செய்திகள் கொஞ்சம் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. ஐ. நா. சபையின் மூவர்குழு அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் தொடர்பான படிமுறையில் இறுதியாக வெளியிடப்பட்ட இலங்கை விவகாரம் தொடர்பான ஐ.நா. வின் செயற்பாடுகள் குறித்த உள்ளக அறிக்கையிலுள்ள அடித்தல் திருத்தல்களின் அவலங்களோடு ஈழத்தமிழனின் நிலையைப்போலவே வெளியாகி இருக்கிறது. அது குறித்து ஏகப்பட்ட அதிர்வலைகள்.

தமிழீழ ஆதரவு அமைப்பு என்று தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பின் சார்பாய் ஐ. நா. பிரதிநிதிகளிடம் அறிக்கை சமர்ப்பித்த அரசியல் கூத்து.அரசியல் ஒருபுறமிருக்க ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த போராட்டத்துக்கு தமிழகத்தமிழர்களின் தார்மீக, அரசியல் ஆதரவு என்பதும் ஒரு பக்கதுணையே. அது குறித்து சமூகவலைத்தளத்தில் எழுந்த ஒரு விவாதமும் கருத்துப் பரிமாற்றமும். நிகழ்வுகள் அதன் போக்கில் நிகழ்ந்தாலும் பொறுப்புகள் என்பது சுதந்திரமாய் கெளரவத்தோடு வாழவிரும்பும் எங்களிடம் தான் உண்டு.

சமூகவலைத்தளதில் நான் பகிர்ந்த ஒரு கருத்துக்கு பதியப்பட்ட கருத்துகள் இவை. அதாவது ஆனந்த விகடனில் வெளியான ஒரு கட்டுரை தொடர்பில் தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பூங்குழலி நெடுமாறன் என்பவரும் ஒருவர். பழ. நெடுமாறன் குறித்த ஈழத்தமிழர்களின் நம்பிக்கை தமிழகத்தின் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் வெளிப்பட்டது அவநம்பிக்கையை அவரிடத்தே தோற்றுவித்தது தவிர்க்கமுடியாதது. இதன் தொடர்பாய் யாரை ஈழத்தமிழர்கள் நம்புவது என்கிற ஒரு குழப்பம் என்னுள் ஓடியது. அதன் வெளிப்பாடு தான் இக்கூற்று.


 
“ஈழத்தமிழர்களாய் யாரையும் சந்தேகிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல, விதி.”

இதற்கான கருத்துப்பதிவுகள் இவை. இவை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிலரது கருத்துகளும், எனது கருத்துகளும்.

பு.அ: "இதைத்தான் நான் அப்பலேந்து சொல்லிகிட்டு இருக்கேன். யாரையும் நம்பாதிங்க. அதிலும் குறிப்பா எங்களை ( தமிழகத் தமிழர்களை).”

D.B: "ஈழத்தவர்க்ள் தமிழக தமிழர்களை நம்பாதீர்கள்! வெறும் வெத்து பேச்சுதான்!”

உ.த: "எங்களை என்றால், எங்களது அரசியல் தலைமைகளை..! உணர்வுள்ள தமிழர்களை அல்ல..!”


D.B: "உணர்வுள்ள தமிழர்களும் ஒன்னும் செய்துட முடியாது! சும்மா மெழுகுவர்த்தி ஏத்தலாம்!”

உ.த: ”அதையாவது செய்றோமே..!!!”

கு.கு: "உணர்வு பூர்வமான ஆதரவு என்பது
துவக்குகளுக்கு சற்றும் குறைவில்லாதது D.B.
அதற்காக நேரில் போய்த்தான் பங்கெடுக்க வேண்டுமென்பதில்லை.”

D.B: "ஆஃபீஸ் மீட்டிங் இல்லாத நேரத்தில் டூர் மாதிரி மெரினாவுல போயி விளக்கு பிடிக்கறதால ஒரு மண்ணும் நடக்காது! சும்மா உணர்வு பூர்வமான்னு பத்திரிக்கையில படம் போட உதவலாம்.

ஈழத்தில் அடுத்தகட்ட தலைமை வேண்டும். அவர்கள் கல்வியில் உயரவேண்டும். ராஜபக்‌ஷேக்கு முன்னால உக்கார்ந்து பேசற டிப்ளோமஸி வேணும்! முதல்ல தேவை ஈழமக்களின் யுனிஃபிக்கேஷன்! அதை செயல்படுத்த ஒரு தலைமை தேவை! மொன்னையா சொன்னா ஈழத்துக்கு ஒரு காந்தி வேணும்!”

பு.அ: "// மொன்னையா சொன்னா ஈழத்துக்கு ஒரு காந்தி வேணும்! //

வெல் செட் D.B. அருமை. "எந்த ஒரு ஆயுதப் போராட்டமும் இறுதியில் மேசையில் வந்தே முடியும். நாங்களும் தனிநாடு கேட்டோம். இன்று தனிநாட்டை விட அனைத்தையும் அடைந்து இருக்கிறோம். ஜனநாயகம் பக்கம் திரும்பி முதலில் உங்களுக்கு வழங்கும் சுயாட்ச்சியை ஏற்றுக்கொள்ளுங்கள்." என்று சொன்னதால்தான் இன்று வரை கலைஞர் ஈழப் பிரச்சனையில் துரோகியாகவே பார்க்கப்படுகின்றார். இப்போது மட்டுமல்ல இனி எப்போதும் ஈழத்துக்குத் தேவை அரசியல் தலைமையே. அன்டன் மறைவே புலிகளின் தோல்வி என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை."

பு.அ: "ரதியக்கா, உ.த. சொல்லும் உணர்வுப் பூர்வம் என்பதெல்லாம் இங்கு வெறும் பேச்சு. காரணம் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வலிகளின்றி வாழ்ந்து வருகிறோம். சண்டை அதனால் ஏற்படும் இழப்பு, கண் முன்பே உறவுகளைக் காவு கொள்ளும் கொடுமை இதன் வலியெல்லாம் எங்களுக்குத் தெரியவும் தெரியாது. புரியவும் புரியாது. பின்னர் எங்கிருந்து வரும் உணர்வு??? பச்சையா சொல்றேன்...ஒரு நாயை ஒருத்தன் கல்லால் அடிக்கும் போதும் நாங்கள் அதைப் பார்த்து உச்சு கொட்டுவோம். அதை உணர்வு என்றால் ஈழத்தவர்களின் இன்னல் பார்த்து நாங்கள் உச்சு கொட்டுவதும் உணர்வுதான்."

கொ.செள: "நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது நன்றாக நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் ஈழத்திலிருந்து இங்கு யாராவது வந்தால் அவ்ளோ மரியாதை அவர்களுக்கு. இங்கிருக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் அவ்ளோ மரியாதை கிடைக்கும்.

காரணம் இலங்கையிலிருந்து வரும் தமிழர்கள் எல்லோருமே நல்ல வளமுடன் இருப்பார்கள். இலங்கைக்கு சென்று வரும் எங்கள் உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன்... அங்குள்ள மக்கள் எவ்வளவு வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று....

இன்றைக்கு அனைத்தும் போய் விட்டது.... காரணம் இதேப் போன்ற போலி உணர்வாளர்கள் தான். நல்லாயிருந்தவனை உசுப்பி விட்டு நடுத்தெருவுக்கு கொண்டு வந்த கெடுபுத்திக் காரர்கள் தான்.(("

நான்: “நீங்க ரெண்டுபேரும் தமிழக அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள். அதனடிப்படையில் பேசுகிறீர்கள் என்கிற எண்ணப்பதிவை கொடுக்கிறது உங்கள் கருத்துகள்.

ஈழப்போராட்டம் என்பது ஈழத்தையும் தாண்டி சர்வதேச அரசியல் மட்டத்தை எட்டிவிட்டதால் நாங்களும் கொஞ்சம் அப்படித்தான் யோசிக்கப்பழகிக்கொண்டோம். இதெல்லாம் நாங்களாவே யோசிக்கிறது தான். யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுக்கும் நல்லது. நாங்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் இனி இழக்க கோவணமும் எங்களிடம் மிச்சம் இல்லை. மீதமிருக்கும் சொச்ச பட்ச உயிரும் மண்ணுமே மிச்சம்.

உலகமயமாக்கல் சூழலில் Fault Line War என்பது அது உருவான பூமியிலேயே தக்கவைக்கப்படும் சூழல் மாறி நிறைய நாட்களாகிவிட்டது. இது சர்வதேச அரசியல். இதற்கு ஒரு உதாரணம் என்று அறிவியல் அறிஞர்கள் சுட்டுவதில் ஒன்று உடைந்து போன முன்னாள் யூகோசிலாவியா. மதம், இனம் என்கிற அடிப்படையில் தான் உலகம் பிளவுபட்டிருக்கிறது. எல்லாரும் ஓர் குலம், ஓர் இனம் என்றாலும் அவரவர் தனித்தன்மைகளை ஓர் இனமாக அல்லது மதத்தின் அடிப்படையில் பேணிக்காக்கவே விரும்புகிறார்கள்.

அவை சார்ந்த உணர்வுகளின் சார்பில்லாமல் இல்லை மனிதர்கள். அந்த உணர்வுபூர்வமான பிரச்சனைகளுக்கு அறிவுபூர்வமாக தீர்வுகள் எட்டப்படவே பொருளாதார முன்னேற்றத்தோடு அரசியலும் ஒரு வழி. அதை பிழைப்புக்காக வளர்த்துக்கொண்டால் ஈழம் போன்ற விடுதலைப்போருக்கு உதவுவது கஸ்டம் என்றுதான் தோன்றும்.”

இனி தொடர்ந்து மற்றவர்கள் கருத்து.

K.K: "If some one claims Tamilan they should have guts to separate Eelazm and local politics. But sadly the so called Tamil Thalais (irrespective of their party affiliation) simply uses this issue just to hit home run.

K.K: "yes all they (losers ) can do is light few candle when they don't have any work to do. You are 100% right. But people who has similar thoughts (like you) don't have a heart to realize that they do with out having any hidden agenda (vote harvesting) and simply echoing their hearts. It may look like bunch of jokers for you and others but leave them alone. :((”

D.B: “இந்த மெரினா கூட்டத்தை வைத்து நடந்த அரசியல் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை போல! அதையும் தேடி படித்துவிடுங்கள்!

இப்படி அப்பாவிகளாய் மெரினாகூட்டத்துக்கு போபவர்களை அவர்கள் அரசியல் ஆகாரத்திற்கு இரையாக்கி விடுகிறார்கள்!

ஈழத்திற்க்காக தமிழகத்தில் இருந்து கருவேப்பிலை கூட கிள்ளிப்போடமாட்டார்கள் என்பதை முழுமையாக நம்புகிறேன்! அரசியல்வாதிகளும் சரி, சாமான்யர்களும் சரி. ஈழத்தவர்கள் தங்களுக்குள்ளே சுத்திகரிப்பு செய்து கொள்ளவேண்டிய தருணமிது. தமிழகத்தையும் அதன் உதவியையும் அவர்கள் எதிர்நோக்கக்கூடாது. இப்போது நடந்த நிகழ்வுகள் அதைத்தான் உறுதி செய்கிறது. ஈழத்தவர்கள் தங்களுக்குள்ளேயே தங்களுக்கான தலைமையை பெற வேண்டும். அதற்கான டிப்ளொமசியை வளர்த்துக்கொள்ள வேண்டும்! இதெல்லாம் கசப்பான உண்மைகள், முகத்தில் அறைந்தாற்போலத்தான் இருக்கும். ஆனால் அதுதான் வழி! நான் அவர்களை (கேன்டில் ஹோல்டர்ஸ்) ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் அவர்களின் வெள்ளத்தி மனம் அரசியல்வாதிகளால் தவறான முறையில்தான் பயன்படுத்தப்படும்! அதுதான் வரலாறு, அது தொடரக்கூடியது! அதைத்தான் பு.அ. சொல்கிறார்!”

K.K: "I know the inside details of that. Including #TNfisherman which happened at same time. I disagree with you. :(

In Tamil Nadu it is hard to mobilize like minded people without any big political party. All the big movements in history started small. May be there are some hidden agenda in the beach candle show which I am not aware of. But I doubt that and support such activities. When the leaders started taking care of their own clan and to save their parties rest left with no choice ..let them try some thing new.”

D.B: "கேள்வியை இப்படி மாற்றிக்கேட்கிறேன். ஈழத்தில் உள்ள ரியாலிட்டியே தமிழகத்தினருக்கு தெரியாது. யாழ்பாணம் தவிர்த்து வடகிழக்கு ஏனைய ஈழப்பகுதியில் உள்ள மக்கள் நிலை என்ன என்று நமக்கு சரியான தகவல்கள் இருக்கிறதா?

இதில் ஈழத்திற்க்காக தமிழகத்தவர்கள் எப்படி உதவமுடியும் என்று நீங்கள் சொல்லுங்களேன்?

உங்கள் பதில் பொருத்து என் கருத்துகளை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.”


K.K: "Sorry for English :("


K.K: "I wish I could... As you know it is not simple. :(

The reason I support people movement like beach candle show is at least such activities make the people to unite.

If you ask me what is next? I don't know :((... but I am not able to take it when some one undermining such a activities.

Majority of the Tamil people in Tamil Nadu (common man ) least bother about any thing other than their own. This is the reason no one unites for any. For example , if it is Teachers issus only teacher will fight , if it is farmer's issue (like rat eating in Thanjavoor) only that area farmer will fight.

Most of the common people don't show any real interest in Eelazm .It is a sad truth. I believe it is just because of the media and shifting nature of our politics an their own agenda.

So in this society , if some thing happens like this I support that.

I still believe( since I know some who involved directly) beach candle is a movement happened without any expectations of political and/or any personal benefits.

What TN people can do?
Even in Kudangulam like local issue and their own #TNfisherman issue rest wont bother. I just expect some awareness and act based on that.”

பு.அ: ”// நீங்க ரெண்டுபேரும் தமிழக அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள். அதனடிப்படையில் பேசுகிறீர்கள் என்கிற எண்ணப்பதிவை கொடுக்கிறது உங்கள் கருத்துகள்.//

நிச்சயமாய் இல்லை ரதியக்கா. தமிழக அரசியலைத் தொட்டு பேசுவது அல்லது அதன் அடிப்படையில் பேசுவது என்றால் எங்களை நம்புங்கள் என்று அல்லவா சொல்லி இருப்பேன்? இங்கு யாரையும் நம்பாதே என்று அல்லவா சொல்கிறேன்... என்னையும் சேர்த்து. ”

கொ.செள: “ரதி அவர்களே, உங்களுக்கு விளக்கம் சொல்லி மாலாது என்று தான் கடந்து போய் விட்டேன். ஆனால் பு.அ.விளக்கம் அளித்து விட்டார். கலைஞரையோ, திமுகவையோ உங்களைப் போன்றவர்கள் ஒதுக்க ஆரம்பித்து வெகுகாலமாகிவிட்டது. அது எங்களுக்கும் தெரியும்/புரியும். ஆகையால் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு நிச்சயமாக அவரைக் குற்றம் சாட்ட இயலாது. இது முதலாவது.

ஆனால் இந்த உணர்வாளர்கள் என்ற பெயரோடு திரிபவர்களை இனியும் நீங்கள் நம்பும் நிலை தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகும் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

திமுகவோ அதிமுகவோ இலங்கைப் பிரச்சினையை முன்னிருத்தி ஓட்டரசியல் செய்ய வேண்டிய நிலையில் இங்கு இல்லை. தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர தகுதியுள்ள இந்த இரு கட்சிகளுக்கும் இலங்கைப் பிரச்சினை என்பது ஆட்சியில் அமர்வதற்கான ஒரு அளவுகோல் கிடையாது. அதற்கு தமிழக மக்களின் அன்றாட வாழ்வியல் சம்பந்தப்பட்ட வேறு பல எண்ணற்ற காரணிகள் இருக்கின்றன.

இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால், இலங்கைப் பிரச்சினையை முன்னிருத்தி திமுக ஆட்சியைப் பிடித்த வரலாறு என்பது ஒரு முறை கூட நிகழவில்லை. மாறாக அந்தப் பிரச்சினையால் ஆட்சியை இழந்த வரலாறு இருக்கிறது. ஆகையால் நாங்கள் ஏதோ திமுகவுக்கு ஆதரவாக, அக்கட்சியை நீங்கள் நம்புங்கள் என்று கேட்பதாக எண்ணி விடாதீர்கள். அதற்கான முகாந்திரமே கிடையாது என்பது தான் நிதர்சனம்.”

நான்: விடுங்க, விளக்கவேண்டாம். மக்கள் சக்தியே மகேசன் சக்தி :)

ஈழப்பிரச்சனையை ஓட்டரசியல் ஆக்காதவர்கள் எதுக்கு மாநாடு கூட்டி, லண்டன் போய் ஐ. நா. வில் அறிக்கை கொடுத்து...... எனக்கும் விளக்கம் சொல்லி களைக்குது...... :)

கொ.செள: “நிச்சயமாக இதற்காக ஒரு ஓட்டுக் கூட கூடுதலாக திமுகவுக்கு விழப்போவதில்லை. அதேப் போன்று உங்களைப் போன்றவர்கள் மற்றும் உணர்வாளர்கள் என்ற பெயர் கொண்டவர்களின் பரிகாசங்களும் கிடைக்கும். இதெல்லாமே திமுகவுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் உண்மையிலேயே போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னமும் வாழ்ந்து கொண்டு சிங்கள அரசின் கொடுமைகளை நாள் தோரும் அனுபவித்துக் கொண்டு, எந்த ஒரு சிறு உதவியும் யார் மூலம் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கின்ற அல்லல்படும் தன் தாய் மொழி பேசும் மக்களுக்காக தொலைநோக்கில் பயன் தரக் கூடிய ஏதாவது ஒன்றைச் செய்து விட முடியாதா என்ற ஏக்கத்தில் எழுந்த செயல்பாடு தான் இதெல்லாமே!

நான்: “செயற்பாடுகளுக்கு நன்றி.

அரசியல் வாழ்வு என்றாலே தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மீறினால் பரிகாசம் செய்யப்படுவது உலகநியதி. இதைப் பொதுவா சொன்னேன்.”


இவை அனைத்தும் அங்கே பேசியவர்களின் அனுமதியுடனேயே இங்கே பதியப்பட்டிருக்கிறது.....

இதுக்கெல்லாம் ஒரு பதில் சொல்வதாய் அமைந்தது இன்று காணக்கிடைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 என்கிற இயக்கத்தின் திருமுருகன் அவர்களின் நேர்காணல், தமிழ்நேட்டில். மானிடவியல் அடிப்படையில் (Anthropology) தமிழர்கள் தங்களுக்கென்று தற்கால இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு தனியரசு கொண்டு ஆண்ட சமூகம். இன்று எங்களது உரிமைகள் பறிக்கப்பட்டு இனவழிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் வேளையில் மே 17 போன்ற தமிழக அமைப்புகளின் செயற்பாடுகள் தமிழகத் தமிழர்களிடம் உண்மையை கொண்டு சேர்த்து எங்கள் சுயநிர்ணய உரிமைக்கான தார்மீக ஆதரவை வழங்கும் என்பது தெளிவாகிறது.

 
Image: Google +