அக்டோபர் 02, 2012

வேலிக்கு ஓணான் சாட்சி!!கோரப்போர் ஒன்றை ஈழத்தமிழர்கள் மீது தொடுத்து அடிமைகளாக்கி தடுப்புமுகாம்களை அமைத்து அங்கே உலகத்தின் வரலாற்றில் இடம்பெற்ற எல்லாவிதமான கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டு, இனவழிப்புக்கு நிகழ்ச்சி நிரல் போட்டு தமிழினத்தை அவர்கள் சொந்தமண்ணில் அழித்தொழித்த பின் இப்போது எல்லா தடுப்பு முகாம்களும் மூடப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டார்களாம். இலங்கை சொல்கிறது. இது தான் அவர்களை ஐ.நா. வின் சட்டதிட்டங்களுக்கு இணங்க மீளக்குடியமர்த்திய லட்சணம். உண்மையை பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கிறார்கள்.

அங்கே குடிக்க கூட தண்ணீர் இல்லை. சிலருக்கு அவர்களது சொந்த நிலம் திருப்பி கொடுக்கப்படாமல் வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். இது சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக மீள்குடியமர்த்தப்படும் லட்சணம்.
 
இந்த லட்சணத்தில் ஐ. நா. வின் செயலர் பாங்கி மூன் இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கான (கருமாந்தரம் பிடிச்சதுகளுக்கு எத்தனை தரம் சொல்றது நாங்கள் சிறுபான்மை இல்லை. ஒரு தனித்தேசிய இனம்) அரசியல் தீர்வு காணவேண்டுமாம். அதுமட்டுமில்லாமல் ஐ. நா. மீள்குடியேற்றம் தொடர்பாக அவதானத்துடன் கண்காணித்து வருகிறதாம். வேலிக்கு ஓணான் சாட்சி!!
 
இதற்கிடையே இவர்கள் ஐ. நா. வும் UNICEF ம் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது அவதானியோ, அவதானியென்று அவதானித்த லட்சணத்தை ஒரு தனிப்பட்ட, பக்கச்சார்பற்ற அறிக்கை Julian Vigo என்பவரால் Independent Report on Sri Lanka and United Nations Human Rights Vilolations என்கிற அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரியும் ஐ. நா. ஈழத்தில் இறுதிப்போரில் பணியாற்றிய அவலட்சணம். ஆர்வமுள்ளவர்கள் அதன் பிரதியை தமிழ் நெட் இணையத்தளத்தில் காணலாம். இவர்களால் எவ்வளவு அலட்சியமாக ஈழமக்களின் அவலமும், இழப்பும் கையாளப்பட்டிருக்கிறது என்பது அறிக்கையில் தெளிவுபடுத்தப்படுகிறது. இலங்கை அரசு எப்படி ராணுவ அடக்குமுறை மூலம் முடிவை எட்ட விரும்பியதோ அதே போல் எல்லாத்தையும் முடித்துவிட்டது. அதை மனித உரிமைகள் அமைப்பும் பாராட்டியது என்கிறார். ஒரு வரி அதிலிருந்து.....

"Many of these United Nations workers whom I interviewed state unequivocally that UNICEF maintained its silence most of the final months of the conflict where the total mortality rate is estimated between 80,000 and 1 00, 000."
 
 
ஈழம் எரிந்து சாம்பாலாகும் வரை பிடில் வாசித்தே தீருவோம் என்று இரண்டு இந்திய தேசிய கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு வேறு நிகழ்ச்சி நிரல் வைத்து செயற்படுவதை இந்த வின் தொலைக்காட்சியின் உரிமைக்குரல் நிகழ்ச்சி பேசுகிறது.


ஈழத்தமிழர்களை அழிப்பதில், இனப்படுகொலை செய்வதில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, பார்தீய ஜனதா கட்சி, இலங்கையின் சுதந்திர ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி என எல்லாக்கட்சிகளுக்கும் ஒரே கொள்கை தான். கபிலவஸ்து, புத்தர் சிலை, ராஜபக்‌ஷே மூன்றையும் இந்தியா இலங்கைக்காக தோள் மேல் தாங்கோ, தாங்கென்று தாங்குகிறது. அதன் ஒரு நாடகம் தான் ராஜபக்‌ஷே இந்தியாவின் சுஸ்மா சுவராஜ் தலைமையில் மத்தியபிரதேசத்தில் பெளத்த நிறுவனம் அமைப்பதற்கான விழாவிற்கு அழைக்கப்பட்டது. இந்துத்துவா என்று பாரதீய ஜனதா கட்சியும், ராஜீவின் கொலையென்று அதே பல்லவியை பாடிக்கொண்டு காங்கிரசும், பெளத்தம் என்று இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியும் ஒரே கொள்கையை கொண்டவை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில். அதே வேலை, அதே ஓணான்! மீதியை இந்த காணொளி விளக்கும்.
 
படம்: கூகுள்

 

கருத்துகள் இல்லை: