அக்டோபர் 22, 2012

புலிகள் ஏன் சரணடையவில்லை!


 
ஈழத்தில் இனப்படுகொலை உச்சமடைந்த காலத்தில் அதாவது முள்ளிவாய்க்கால் 2009 இன் முடிவிலிருந்து பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களால் கேட்கப்படும் கேள்வி; மற்றும் நோர்வேயின் தோல்வியடந்தவர் என விமர்சிக்கப்பட்ட சமாதானத்தூதுவர் எரிக் சொல்கெய்ம் போன்றோர் முதல் பிரபல ஊடகவியலாளரான Frances Harrison வரை பெரும்பாலும் சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து ஊதுபவர்களின் வாய்ப்பாட்டு புலிகள் சரணடைந்திருந்தால் இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பது தான். ஆனால், தமிழக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் முதல் அரசியல் படிப்பில் ஆராய்ச்சி செய்யும் கார்த்திக் ஆர். எம் போன்றோரது தெளிவுபடுத்தல் என்பது, புலிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு சரணடைந்திருந்தால், சாட்சி இல்லாத இனவொழிப்பு என்றாலும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை உலகத்தின் கண்களுக்கு தெரியாமலேயே நிகழ்த்தப்பட்டிருக்கும். இன்னும் மோசமான இனப்படுகொலைக்குரிய ஏதுக்கள் தோன்றியிருக்கும் என்பது தான். ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கூட கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். ஆனால், கடைசி வரை கொண்ட கொள்கைக்கு மாறில்லாமல் போராடியவர்கள் நியாயத்தை விலைபேசத்தான் எத்தனை பேர்!

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சீனிவாச ராவ் அவர்கள் நோர்வேயின் சமாதான தூதுவரிடம் கேட்ட கேள்வியில் தொக்கி நிற்கும் உண்மைகள் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்துமுடிக்க தவறியதையே ராஜபக்‌ஷேவை கொண்டு இந்தியா முதல் சர்வதேசம் 2009 இல் நிகழ்த்தி முடித்திருக்கிறது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு State Acotors எனப்படும், ஈழத்தமிழர்கள் விடயத்தில், இலங்கை அரசை, அவர்களின் குற்றங்களை மூடிமறைத்து, Non-State Actors அதாவது ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டும் விமர்சிக்கும் வேலையையே எரிக் சொல்கெய்ம் முதல் சர்வதேச அறிவுசீவிகள் வரை செய்து கொண்டிருப்பது கூழ்முட்டை நியாயம் என்பதை விளக்குகிறார் சீனிவாச ராவ். புலிகள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு பூர்வீக மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அமையவே ஆயுதம் ஏந்திப்போராடினார்கள் என்பதை நாங்கள் எத்தனை முறை உரக்கச் சொன்னாலும், அதையே அமெரிக்காவின் தற்போதைய ராஜாங்க திணைக்களச் செயலர் கிலாரி கிளிண்டன் வரை முன்னாளில் சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் தமிழர்கள் மறந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இவர்கள் அடிக்கும் சாயத்தையே நாங்களும் பூசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போல. இதையே சர்வதேசத்துக்கு வசதியாக ஒத்து ஊதும் தமிழின இணையப்போராளிகளை ஏன் சீனிவாச ராவ் சுட்டவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது.
 
 

தமிழக அரசியல் சூழலில் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ப.சிதம்பரம், தமிழ் உணர்வாளர் பழ. நெடுமாறன் வரை நிகழ்த்தி முடித்த, நிகழ்த்துகிற அரசியல் கூத்துகள் இந்திய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உடந்தையாவதை விளக்குகிறார். மனித உரிமைகள் காப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச அமைப்புகளாலேயே கூட்டாக குறைபாடுகள் உடைய கட்டமைப்பு, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அமைக்கப்படவில்லை என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அதன் அறிக்கையை அறிக்கையை ஏற்க மறுத்தன. அந்த அறிக்கை மூலம் ஈழத்தமிழர்களின் உரிமைகள் கிடைக்கும் எனவும், அதன் மூலம் எங்களின் இன்னல்கள் தீரும் என்று அமெரிக்கா சொல்வதற்கு தலையாட்டும் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் செய்யவேண்டியதையும், புலம்பெயர் குடியுரிமை சமூகம் செய்யவேண்டிய கடமைகளையும் விளக்குகிறார். மிகுதி காணொளியில்.

 
 
Images: Google
 

அக்டோபர் 14, 2012

இதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள்!

சமீபகாலமாய் பதிவு எழுதவென்பதில் ஆர்வமற்ருப் போயிருந்தேன். எதையும் ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும் இல்லையேல் அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளைப் படித்துவிட்டு நகர்ந்துவிடவேண்டும். பாம்புக்குப் பல் விளக்கிப் பார்க்கும் பதிவுகளை எழுதும் திறமையும் நோக்கமும் எனக்கில்லை. எனவே என் தளத்தை மூடிவிட்டு போய்விடலாம் என்று கூட யோசித்தேன்.  அதுதான் பதிவெழுதுவதில் இந்த கால இடைவெளி.

தற்போது என் திருப்திக்காகவேனும் எழுதவேண்டிய தேவையும், நிமித்தமும் இது தான். பொதுவாகவே இப்போதெல்லாம் ஈழப்பிரச்சனையின் களம் பெரும்பாலும் ஈழம் தாண்டி நகர்ந்துவிட்டது. சர்வதேச அரங்கில் ஈழம் குறித்து எதை யார் பேசுகிறார்கள், எதற்காக அப்படிப் பேசுகிறார்கள் என்பதை கவனிப்பதிலேயே காலம் கழிகிறது. அவர்கள் பேசுவதை நான் விலாவாரியாக விளக்கினாலும் அதில் அக்கறைகொண்டு படிக்கும் தேவை என்பது அருகிவிட்டது ஈழவிடயத்தில். நான் சினிமா பதிவெழுதினால அதன் பலன் வேறுவிதமாய் நானே எதிர்பார்க்காததாய் அமைகிறது.

அண்மைய காலங்களில் ஈழம் குறித்து அதிகம் பேசப்படுவது நோர்வேயின் சமாதான தூதுவராய் (!!) ஈழத்தின் அமைதிக்கான முயற்சிகளில் களப்பணியாற்றிய எரிக்சொல்கெய்மின் பேச்சு. அவர் வழக்கம்போல மறைமுகமாய் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை வாய்திறந்து, மறந்தும் பேசக்கூடாது என்பதன் அடிப்படையில் பேசியும், களப்பணி ஆற்றியும் வருகிறார் என்பது வெளிச்சம்.

அதுவல்ல விடயம் இப்போது. நான் வழக்கம் போல் தமிழ்நெட் தவிர ஈழம் குறித்த செய்திகளுக்கு வேறு தளங்களை படிப்பதும் நிறுத்தியாகிவிட்டது. காரணம், தமிழ் நெட்டில் தான் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த சர்வதேச அரசியல் கள நிலவரங்களை அலசுகிறார்கள். அப்படி அண்மையில் அலசப்பட்ட விடயம் பலகணி விவாதத்தில் Still Counting the Dead என்னும் ஈழத்தின் இறுதிக்காலப் போரில் தப்பித்து வந்தவர்களது அனுபவத்தை அரசியல், ராணுவக்கண்ணோட்டம் இல்லாமல் எழுதியிருக்கிறேன் என்கிறார் முன்னாள் பிபிசி ஊடகவியலாளர் Frances Harrison. அவரது புத்தகத்தின் மீதான விமர்சன விவாதம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோருவதை முன்னெடுப்பதில் அப்புத்தகம் என்ன கருத்துருவாக்கங்களை சர்வதேச சமூகத்திற்கு அளிக்கிறது, தமிழர்களின் அடிப்படை பிரச்சனைக்குரிய அரசியற்காரணங்கள் பேசப்படாமல் போன காரணங்களை அப்புத்தகத்தை எழுதியவரிடமே கேட்கப்படுகிறது. Chronological order இல் புத்தகம் எழுதுபவர் புலிகளின் காலம் மட்டும் தான் நினைவில் வருமா! அதற்கு முந்தைய அரசியல் அடக்குமுறைகள், அதற்கான போராட்டங்கள் நினைவில் வராதா! அதற்கு அவர் கொடுக்கும் சப்பைக் காரணங்கள் எரிச்சல் வரவைக்கிறது.

கிருஷ்ணா சரவணமுத்துவின் அரசியல் அறிவை மெச்சுகிற அளவுக்கு எனக்கு தகுதி இல்லையென்றாலும் சொல்லாமல் கடந்து போக முடியவில்லை.

Very good insight of Still Counting the Dead, Krishna.

It gives me the impression that these western journalists try to white wash crimes commited against Tamils by the Sri Lankan govt., write books about it, and claim that it is not from a political or military perspective.

இது தான் காணொளி.அடுத்து தமிழ்நெட் பலகணியில் காணக்கிடைத்த இன்னோர் காணொளி. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தமிழர்கள் எப்படி தங்களுக்குரிய இலக்குகளை (Goals) வகுத்துக்கொள்ளவேண்டும், அதற்கு எப்படி செயற்படவேண்டும் என்கிற அரசியல் அடிப்படைகளை விளக்கியிருந்தார்கள். அவர்கள் இந்த விவாதத்தில் சொன்னதன் சாராம்சம் இது தான். ஒன்று, ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கோரும் மற்றைய மக்களைப்போலவே எல்லா உரிமைகளும் உண்டு. எங்களுக்குரிய உரிமைகளை நாங்கள் விடுக்கொடுக்காமல் அதில் உறுதியாய் இருக்கவேண்டும். எங்களின் தேவை எது என்பதை அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நாங்கள் தான் தீர்க்கமாய் இருக்கவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டது என்பதையே புத்தகம் எழுதும்போது எழுத மறுப்பவர்கள் வரிசையில் Frances Harrison முதலாமவரோ அல்லது அவரே கடைசியாயும் இருக்கப்போவதில்லை. இது போல் புத்தகங்கள் எதிர்காலத்தில் இன்னும் வரலாம். சுயநிர்ணய உரிமைப்போராட்டத்துக்கான அரசியல் காரணங்களை இதுபோல் புத்தகம் எழுதுபவர்கள் கவனித்தும் கவனிக்காதது போல் எழுதுவதன் சூட்சுமம் எல்லோரும் அறிந்தது என்றாலும், அதையும் குயுக்தியாய் மறுக்கிறார்கள். ஆனாலும், எங்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகள், எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எங்களுக்கான தீர்வு, நீதி எவையென்று நாங்கள் தான் வரயறை செய்யவேண்டும், நாங்கள் தான் அதற்குரிய களங்களை நோக்கி பயணப்படவேண்டும் என்று அது குறித்த செயற்பாடுகளின் முனைப்புகள் குறித்து பேசியிருக்கிறார்கள்.

ஈழம், சுயநிர்ணய உரிமை, போர்க்குற்ற சுயாதீன விசாரணை என்று பேசுபவர்கள் இப்பிடிப் பேசவேண்டும் அறுத்துறுத்து.

காணொளி இதுதான்


Image: Google

அக்டோபர் 02, 2012

வேலிக்கு ஓணான் சாட்சி!!கோரப்போர் ஒன்றை ஈழத்தமிழர்கள் மீது தொடுத்து அடிமைகளாக்கி தடுப்புமுகாம்களை அமைத்து அங்கே உலகத்தின் வரலாற்றில் இடம்பெற்ற எல்லாவிதமான கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டு, இனவழிப்புக்கு நிகழ்ச்சி நிரல் போட்டு தமிழினத்தை அவர்கள் சொந்தமண்ணில் அழித்தொழித்த பின் இப்போது எல்லா தடுப்பு முகாம்களும் மூடப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டார்களாம். இலங்கை சொல்கிறது. இது தான் அவர்களை ஐ.நா. வின் சட்டதிட்டங்களுக்கு இணங்க மீளக்குடியமர்த்திய லட்சணம். உண்மையை பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கிறார்கள்.

அங்கே குடிக்க கூட தண்ணீர் இல்லை. சிலருக்கு அவர்களது சொந்த நிலம் திருப்பி கொடுக்கப்படாமல் வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். இது சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக மீள்குடியமர்த்தப்படும் லட்சணம்.
 
இந்த லட்சணத்தில் ஐ. நா. வின் செயலர் பாங்கி மூன் இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கான (கருமாந்தரம் பிடிச்சதுகளுக்கு எத்தனை தரம் சொல்றது நாங்கள் சிறுபான்மை இல்லை. ஒரு தனித்தேசிய இனம்) அரசியல் தீர்வு காணவேண்டுமாம். அதுமட்டுமில்லாமல் ஐ. நா. மீள்குடியேற்றம் தொடர்பாக அவதானத்துடன் கண்காணித்து வருகிறதாம். வேலிக்கு ஓணான் சாட்சி!!
 
இதற்கிடையே இவர்கள் ஐ. நா. வும் UNICEF ம் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது அவதானியோ, அவதானியென்று அவதானித்த லட்சணத்தை ஒரு தனிப்பட்ட, பக்கச்சார்பற்ற அறிக்கை Julian Vigo என்பவரால் Independent Report on Sri Lanka and United Nations Human Rights Vilolations என்கிற அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரியும் ஐ. நா. ஈழத்தில் இறுதிப்போரில் பணியாற்றிய அவலட்சணம். ஆர்வமுள்ளவர்கள் அதன் பிரதியை தமிழ் நெட் இணையத்தளத்தில் காணலாம். இவர்களால் எவ்வளவு அலட்சியமாக ஈழமக்களின் அவலமும், இழப்பும் கையாளப்பட்டிருக்கிறது என்பது அறிக்கையில் தெளிவுபடுத்தப்படுகிறது. இலங்கை அரசு எப்படி ராணுவ அடக்குமுறை மூலம் முடிவை எட்ட விரும்பியதோ அதே போல் எல்லாத்தையும் முடித்துவிட்டது. அதை மனித உரிமைகள் அமைப்பும் பாராட்டியது என்கிறார். ஒரு வரி அதிலிருந்து.....

"Many of these United Nations workers whom I interviewed state unequivocally that UNICEF maintained its silence most of the final months of the conflict where the total mortality rate is estimated between 80,000 and 1 00, 000."
 
 
ஈழம் எரிந்து சாம்பாலாகும் வரை பிடில் வாசித்தே தீருவோம் என்று இரண்டு இந்திய தேசிய கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு வேறு நிகழ்ச்சி நிரல் வைத்து செயற்படுவதை இந்த வின் தொலைக்காட்சியின் உரிமைக்குரல் நிகழ்ச்சி பேசுகிறது.


ஈழத்தமிழர்களை அழிப்பதில், இனப்படுகொலை செய்வதில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, பார்தீய ஜனதா கட்சி, இலங்கையின் சுதந்திர ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி என எல்லாக்கட்சிகளுக்கும் ஒரே கொள்கை தான். கபிலவஸ்து, புத்தர் சிலை, ராஜபக்‌ஷே மூன்றையும் இந்தியா இலங்கைக்காக தோள் மேல் தாங்கோ, தாங்கென்று தாங்குகிறது. அதன் ஒரு நாடகம் தான் ராஜபக்‌ஷே இந்தியாவின் சுஸ்மா சுவராஜ் தலைமையில் மத்தியபிரதேசத்தில் பெளத்த நிறுவனம் அமைப்பதற்கான விழாவிற்கு அழைக்கப்பட்டது. இந்துத்துவா என்று பாரதீய ஜனதா கட்சியும், ராஜீவின் கொலையென்று அதே பல்லவியை பாடிக்கொண்டு காங்கிரசும், பெளத்தம் என்று இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியும் ஒரே கொள்கையை கொண்டவை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில். அதே வேலை, அதே ஓணான்! மீதியை இந்த காணொளி விளக்கும்.
 
படம்: கூகுள்