செப்டம்பர் 09, 2012

கிழக்கு மாகாணத்தேர்தல் முதல் வரலாற்று இந்திய அறிவுசீவிகள் வரை

 

சில விடயங்களைப் பார்க்கும் போதும் சரி, கேட்கும் போதும் சரி உடனடியாக ஆழ்மனதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு உருவாகும். அதுதான் உண்மையானது. பின்னர் அந்த விடயங்களை அறிவு ஏற்கனவே அதுகுறித்த மனப்பதிவுகளுடன் ஒப்பிட்டு அதற்குரிய விடைகளை கண்டுபிடிக்கும். அதுபோல், என்னை படித்ததும், பார்த்ததும் பாதித்த விடயங்கள் சில.
 
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான தொடர்பினையும் நட்பையும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள் அறிவுஜீவிகள். இந்திய மெளரிய வரலாற்றுப் பேரொளி ரொமிலா தாப்பர் முதல் இலங்கை ஜனாதிபதி வரை இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான பந்தம் புத்தரின் பெயரால் அரசியல் தேவைகள் கருதி நிகழ்ச்சி நிரல்களாகின்றன. இலங்கை ஜனாதிபதி இந்தியாவின் மத்திய பிரதேசத்துக்கு புத்தர் சம்பந்தமான ஒரு அமைப்பை தொடங்கி வைக்க அழைக்கப்பட்டிருக்கிறார். அவரை பாரதீய ஜனதா கட்சியின் சுஷ்மா சுவராஜ் தான் அழைத்தார் என்றும், அவரோ இல்லை இந்திய வெளியுறவுத்துறையை மீறி எதிர்க்கட்சியின் சார்பாய் தான் அவரை அழைக்க முடியாதென்றும் கண்ணாமூச்சி அரசியல் விளையாட்டுகள். இலங்கையும் இந்தியாவும் நட்போ, நட்போ என்று கூவிக்கூவி விற்கிறார்கள் இலங்கை குறித்த  செய்திகளில்.


இதற்கிடையே தமிழ்நாட்டில் இலங்கையிலிருந்து வந்த சுற்றுலாப் பிரயாணிகள் குறித்த சர்ச்சை, இலங்கை காற்பந்து அணியின் பயிற்சிக்கு அனுமதி மறுத்த தமிழக முதல்வரின் அரசியல் ஸ்டண்ட் என தமிழகச் செய்திகளுக்கும் குறைவில்லை. இந்த நிகழ்வுகளுக்கும், செய்திகளுக்கும் அரசியல் கட்சிகள் சார்ந்த, சாராத விமர்சங்கள் கண்டனங்களுக்கு மத்தியில் இந்தியாவின் பத்திரிகையான Outlook India ஒரு பொருத்தமான கட்டுரையை வெளியிட்டிருந்தது ஆறுதல். அதில் இந்து பத்திரிக்கையின் இலங்கை அரசுக்கான ஆதரவு குறித்த முகமூடியை கிழிக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்கு இடம் தர மறுத்தது என தமிழகமுதல்வர் ஜெயலலிதா மிகமோசமான முறையில் சிங்கள அரசு சார்புப் பத்திரிகையான லக்பிம வில் கேலிச்சித்திரம் மூலம் எள்ளிநகையாடப்பட்டிருக்கிறார். இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் செயற்திறனற்ற மந்திரிப்பதவி குறித்து அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்க அதற்கு அமெரிக்காவிடமிருந்து மன்னிப்பு எதிர்பார்க்கிறது இந்தியா. லக்பிம கேலிச்சித்திர விடயத்தில் மன்மோகன் சிங், ஜெயலலிதா இரண்டுபேருமே மனிதநாகரீகப் பண்புகளுக்கு அப்பாற்பட்டு, பத்திரிகை தர்மம் மீறி சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன!

முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் முள்ளிவாய்க்கால் முடிவில் தமிழர்களின் இடுக்கண் களைந்தவர்கள் அல்ல. இருந்தும் தற்போதைய தமிழகமுதல்வர் குறித்த லக்பிம கேலிச்சித்திரம் பார்த்தமாத்திரத்தில் மனதை தாக்கியது. இந்தியாவின் ஒரு Powerful Chief Minister ஒருவருக்கே இந்த நிலை என்றால், என் ஈழத்து தாயகளும் சகோதரிகளும் சிங்களக்காடைகளின் கைகளில் என்னென்ன கொடுமைகளை சந்தித்திருப்பார்கள் என்றுதான் மனதிற்குள் ஓடியது. இனி இது குறித்த அரசியல் நிகழ்வுகளை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஜெயலலிதாவை உசுப்பேத்தி சிங்களர்கள் எதையாவது சாதித்தால் பார்க்கலாம். இதெல்லாம் தமிழக கட்சி அரசியல் வளர்க்கவும், தேர்தலில் வாக்குகளை கவரவுமே உதவுமேயன்றி ஈழத்தமிழனுக்கு ஏதாவது நனமை நடக்குமா என்பது சந்தேகமே!

இது தவிர சுப்ரமணிய சுவாமியின் ஒரு பேட்டி, காணொளி காணக்கிடைத்தது. வழக்கமாக இவரது அகம்பாவமான பேச்சு யதார்த்ததையும் மீறி எரிச்சலூட்டுபவை. இருந்தும் அவர் அப்படி என்னதான் சொல்கிறார் என்று அவருடைய தமிழில் கேட்டேன். எனக்கு புரிந்தது அவர் இந்தியாவில் இந்துமறுமலர்ச்சி உருவாக்கப்பட வேண்டுமாம். இன்னொரு விடயம் ஏதோ இவருடைய வீட்டு சொத்து ஈழம் போலவும் அதை நாங்கள் கேட்பது போலவும் ஒரே அல்டாப்பு! அடுத்து அவர் சொன்னது இந்தியாவில் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்றார். இந்தக் கூற்று நிறையவே யோசிக்க வைத்தது. இந்திய வரலாற்று ஆசிரியரான ரொமிலா தாப்பர் அம்மையாரை மேற்கோள் காட்டி ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமவும்; சில வரலாற்று தடயங்கள், குறிப்புகளை ஆதாரங்களாக காட்டி BBC தொலைக்காட்சியும் தற்போதைய இந்தியாவில் ஆரியர் வருகையும் அதன் அரசியல் தாக்கம் குறித்தும் நிறையவே எழுதியும், காண்பித்தும் இருக்கிறார்கள். இடையே சுப்ரமணியசாமி எதை மறுக்கிறார்!

இருவரது, ரொமிலா தாப்பர், பிபிசி ஆராய்ச்சிகள், கணிப்புகளின் படியும் ஏறக்குறைய கி.மு.2500ம் ஆண்டளவில் தான் இந்தியாவில் ஆரியர் வருகை நிகழ்ந்தததாக சொல்கிறார்கள். கி.மு. 2500, 2400, 2300, 2200........தற்போது 2012 என்று கணக்குப் பார்த்தாலும் மொத்தம் 4512 வருடங்கள் ஆகிறதே. இதெல்லாம் இப்போ தேவையில்லாத கணக்கு தான். ஆனாலும் சு. சாமி அநியாயத்துக்கு ஞாபகப்படுத்துறார். தமிழர்களின் வரலாறு குறித்து சு.சாமிக்கு தெரியாதா அல்லது அதை மறுக்கிறாரா! இந்தியாவில் 65,000 வருடங்களுக்கு மேலான பழங்குடி தமிழர்கள் என்பதை ஏன் சு.சுவாமி உணரக்கூட மறுக்கிறார். தவிர, பேட்டி காண்பவர் கேள்விக்குக் கூட மதிப்பளிக்காமல் இடையே குறுக்கிட்டு தன் ஆதிக்கத்தை பேச்சிலும் திணிக்கும் ஒரு Intellctual, அறிவுசீவி!! சு. சுவாமியின் அறிவுரையின் பேரில் இலங்கையில் பெளத்தமறுமலர்ச்சி நடக்குமோ என்றும் பயம் ஒருபுறம். அது தான் இலங்கையில் வேறு பெயரில் நடக்கிறது என்பதும் யதார்த்தம்.
 
சரி, ஈழத்துக்கு வருவோம். இலங்கையின் வடமத்திய, கிழக்கு மற்றும் தென்மேற்கு (சப்ரகமுவ) மாகாணசபைத்தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய எதிர்பார்த்தது போலவே இருக்கு. அதாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டி இருக்கிறது. கிழக்கு மாகாணசபத்தேர்தல் முடிவுகள்,
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஆளும் கட்சி) 14 இடங்கள்
தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) 11 இடங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (எதிர்க்கட்சி) 4 இடங்கள்
 

தேர்தல் முடிவின் பின்னர் இரா. சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் ஆதரவை வழங்கியிருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் உடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்கிறார்கள். தவிர, ஆளும்கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். சரி, அப்படியானால் முடிவு ஓரளவு ஊகிக்க கூடியதே. 
 

 இது புள்ளிவிவர தேர்தல் முடிவுகள். இதை விட உள்ளரசியல் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் தெரியவில்லை. கிழக்கில் உள்ள மாகாணசபைக்கு ஒரு அரச அதிபரையோ அல்லது சமூகசேவகரையோ (விதானை) நியமனம் செய்யவோ; கல்வி பணிப்பாளரையோ, ஆசிரியரையோ கூட நியமிக்கும், இடமாற்றம் செய்யும் அதிகாரங்கள் கிடையவே கிடையாது. காரணம், அது தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணம். இப்படி எந்த அதிகாரமுமற்ற ஒரு சபைக்கு இனி கொஞ்சம் பிச்சை போடுங்கள் என்று தமிழர் தரப்பு கூட்டாக மாகாணசபை ஆட்சியமைத்தால் கெஞ்சலாம். இது தவிர வேறென்ன எதிர்பார்க்கமுடியும். ஆனாலும் ஏதோ தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தது ஓரளவு தமிழர்களின் வெற்றி என்றே சொல்லவேண்டும்.
 
கிழக்குமாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றது எப்படி என்பது ஜனநாயகத்தின் பிதாமகர்களுக்கே வெளிச்சம். ஆனாலும், இனி இலங்கையின் ராஜபக்‌ஷேக்கள் கிழக்கு மாகாணத்தமிழர்கள் தேர்தல் வழி தங்களையே (சிங்கள ஆட்சியாளர்களை) தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து உலகத்துக்கு அறைகூவல் விடுவது என்னவென்றால் பாணியில் பேசுவார்கள். இனி இலங்கையின் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம், மனித உரிமைகள் மீறல் எதுவும் இறுதி யுத்தத்தில் நடைபெறவில்லை, இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பார்கள். இனி வரப்போகும் மனித உரிமைகள் சபைக்கூட்டத்தில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட ஏமாற்று தீர்மானம் ஒன்றுக்கு எப்படியும் பதில் சொல்ல வேண்டும். அதற்கு இந்த தேர்தல் முடிவுகள் ஓரளவிற்கு பயன்படும்.

இந்த தேர்தல்கள் குறித்த சர்வதேச கண்ணோட்டம் (சர்வதேசம் என்றால் அமெரிக்கா என்று கொள்ளவேண்டும்) எவ்வாறு என்று தேடிப்பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளியிடும் முன்னமே New York Times ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் ரெண்டும் கெட்டானாக எழுதுவது போல் எழுதி கிழக்குமாகாண தமிழ் மீனவர் ஒருவரின் ரெண்டு வரி கருத்தும் இருந்தது. அதை சேமித்து வைத்து திரும்பச்சென்று பார்த்தால், கிழக்குமாகாணசபைத்தேர்தல் முடிவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவு என்று உள்ளூற சந்தோசப்பட்டு எழுதியிருக்கிறது அல்லது update செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக மூன்றாம் உலக தேர்தல் முடிவுகள் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக அமைந்தால் அது ஜனநாயகமான தேர்தல் முடிவுகள். இல்லையென்றால் அது ஜனநாயகத்தேர்தல் இல்லை. New York Times தேர்தல் முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை என்று எழுதாமல் இருப்பதால் இதை என்வரையில் ஜனநாயகத்தேர்தலாகவே கொள்ளவேண்டியிருக்கிறது துர்ப்பாக்கியம். New York Tims, Washington Post இரண்டு செய்தித்தளங்களும் கிழக்கில் 1948 ம் ஆண்டுக்குப் பிறகு திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்களால் தமிழர்களின் மக்கட்தொகை கட்டமைப்பு மாற்றப்பட்டு சிங்களர்களும் பெரும்பான்மை ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுவதாக செய்தியில் குறிப்பிடுகிறார்கள்.
 
தவிர, நோர்வேயுடன் சேர்ந்து முள்ளிவாய்க்கால் முடிவிற்கு வித்திட்ட அமெரிக்காவின் ரோபர்ட் ஓ பிளேக் இலங்கை சென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார் என்று செய்தியும் உண்டு. மனித உரிமைகள் சபையின் நவிப்பிள்ளை என்னும் நவநீதம்பிள்ளையும் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கை மீதான விவாதம் மனித உரிமைகள் சபையில் நடக்கும் முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து இலங்கைக்கு சென்று நிலைமையை நேரில் பார்ப்பாராம்.
 
இதெல்லாம் இலங்கையில் தமிழர்கள் எதிர்காலம் குறித்த தற்காலச் செய்திகளைப் படித்ததன் விளைவில் உண்டான கருத்துகள். இவற்றுக்குப் பிறகு ஈழத்தமிழனுக்கு எந்த நீதியும் நியாயமும் உடனே கிடைக்கப்போவதில்லை என்பதை தவிர இதில் சொல்ல ஏதுமில்லை. புத்தரை நடுநாயகமாக்கி இலங்கையும் இந்தியாவும் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பை, தொடர்பை கொண்டது என்று ரொமிலாக்களும், சுஷ்மாக்களும் நிருவமுற்படுவார்கள். சம்பந்தப்பட்ட ஈழத்தமிழனுக்கு குரல் இல்லை. ஆனால், ஈழத்துக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத சு. சாமி ஆஜராகி எரிச்சலூட்டுவது போன்ற நிகழ்ச்சிகள இப்போது வேடிக்கை பார்ப்பதை தவிர வேறேதும் இல்லை. தமிழகமுதல்வர் பற்றிய அவதூறு கேலிச்சித்திர விளைவுகளையும் பொறுத்திருந்து பார்க்கலாம். மொத்தத்தில் அறிவுசீவிகள் கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள்.
 
தமிழராய் இருப்பதில் தற்போதைய நிலை பொறுத்திருந்து பார்ப்பதுதான் என்பது விதிக்கப்பட்ட விதி.
 
Image Courtesy: Google