செப்டம்பர் 07, 2012

சொல், பொருள், சுயம்!

உயிரின் தரிப்பிடம்!

 
 


கடந்துபோன காலம், பழகிக்கழித்த மனிதர்கள், இறந்துபட்ட நிகழ்வுகள் எல்லாவற்றிலும் எதையோ தேடிக்கொண்டிருந்தேன் ஞாபகமாய். எல்லாமும் என்னை மட்டுமே எனக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. அந்த நினைவுகளின் வெளிகளில் என்னை நானே ஆட்கொள்ளும் தருணங்கள் வெறுமையா, ஏகாந்தமா, அல்லது ஏதுமற்ற ஏதோவொன்றாய் உயிர் தரிக்கும் நிலைத்தடமா, சொல்லத்தெரிவதில்லை! இருந்தும், என் உயிரின் தரிப்பிடம் மனிதசஞ்சாரமற்ற மனவெளி என்றால் பிடிக்கவே செய்கிறது.

 

வெற்றுச்சொற்களின் ஒவ்வாமை!சொல்லுக்கும் பொருளுக்குமிடையே புரியாத அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது என்கிற வேலையற்ற வேலை ஒப்புவதில்லை. Ignorance is bliss.

நிதானமாய் வார்த்தைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து அகமும் புறமும் ஒரே பேச்சாய் நேர்படப் பேசப்பழக வெற்றுச்சொற்களின் ஒவ்வாமையில் தொலைவதில்லை சுயம்.


இதை நான் முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்... அதாவது....

“....சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே அனேகம் மிஸ்மேச்சிங் இருக்குன்னு தத்துவஞானிகள் பறைகிறார்கள்.” இதைச்சொல்லி எனக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் On Mind and Thought என்னும் கட்டுரை வடிவிலான ஓரு உரையை வாசிக்க கொடுத்திருந்தார். இதை வாசித்துவிட்டு எனக்கு புரிந்ததை எழுதலாம் என்று தோன்றியது.

அவ்வப்போது நானும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்தை படிப்பவள் தான். அவருடைய எழுத்து தத்துவவங்களாகவோ, ஆன்மிகமாகவோ அல்லது கருத்துருவாக்கமோ கிடையாது. படிப்பவர்களை தங்களைத்தாங்களே கேள்வி கேட்டு சுயவிசாரணை செய்யும் பொருட்டு ஈற்றில் கேள்வியோடு கூடிய ஏதோவொரு பிடிப்பை விட்டுச்செல்லும். அகவுலகம் புறவுலகம் இரண்டுக்குமிடையே எப்படி ஒருவர் தன்னைச் சமப்படுத்துவது என்கிற விட்டுக்கொடுப்புகளை கற்றுக்கொடுப்பதில்லை. நீதான் சமூகம். நீ தான் உலகம்.  உன்னை கேள்வி கேள். உன்னிடமிருந்து பதிலை கண்டுபிடி. உனக்குள் தெளிவை உண்டாக்கு. இதுதான் அவர் உண்மையை, உள்மனவிழிப்புணர்வை ஒரு மனிதன் தன்னிடத்தே உருவாக்க, சுயத்தை கட்டமைத்துக்கொள்ள தேவை என்கிறார்.

நான் மேலே சொன்னது ஒரு சொல்லுக்கு அகராதி விளக்கம் (Definition) இருக்கும். அது உலகம் பெரும்பாலும் பொதுவாக ஒத்துக்கொண்டது. ஒரு சொல்லின் அர்த்தம் (Meaning) என்பது தனிப்பட்ட அனுபவ, அனுமானங்களில் அடிப்படையில் புரிந்து அர்த்தப்படுத்துவது. ஒரு சொல்லின் விளக்கத்தை மட்டும் கருத்திற்கொண்டு மேலோட்டமாய் பேசாமல், ஒரு சொல்லை அதன் அர்த்தத்தை உணர்ந்து உள்ளும் புறமும் இசைவாய் பேசும்போதும் வெற்றுசொற்களில் உணமைத்தன்மை தொலைவதில்லை. போலியான வார்த்தைகளில் எங்களை நாங்களே தொலைக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. மனிதர்களின் தொடர்பாடலில்(Communication) வார்த்தைகளின் பொருள் புரிதலின் பொறுட்டு வேறுபடும். அவ்வாறு வேறுபடும் பட்சத்திலேயே முரண்பாடுகள், குழப்பங்கள் தோன்றுகின்றன.
 
நான் சொல்ல வந்தது ஒருவர் தனக்குள்ளே அகமும் புறமுமாய் வார்த்தைகளால், எண்ணங்களால் வேறுபட்டு, பிளவுபட்டு தன்னோடு முரண்படாமல் இருப்பது என்பது!! தனக்குள்ளே முரண்படாதவர் மட்டுமே மற்றோர்க்கு வார்த்தைகளின், எண்ணங்களின் தெளிவை, தங்கள் உள்ளக்கிடக்கைகளை குறைகளின்றி உணர்த்தமுடியும். தொடர்பாடலில் கருத்தானது தொடர்பாடுபவர்களால்  புரிந்துகொள்ளப்படவேண்டும். தற்கால தொலைத்தொடர்பு யுகத்தில் அது எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்பதும் சந்தேகமே! அகராதியின் பொருள் கொண்டும், அதன் வழியே ஏற்கனவே உள்ள அனுமாங்களோடு பொருத்திப்பார்த்து பேசுபவர்களிடம் என்னை அதிகம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பதுண்டு. அதான், Ignorance is bliss!!

ஜே.கே. எப்போதும் சொல்வது சமூகமாற்றத்தின் முன்னோடி தனிமனித மாற்றம். அதாவது அகப்புரட்சி என்று வலியுறுத்துகிறார். அதையே தான் On Mind and Thought என்கிற சொற்பொழிவிலும் சொல்லவருகிறார் என்பது என் புரிதல். அதைத்தவிர அவர் சொல்லுக்கும் பொருளுக்குமிடையே வேறுபாடு உள்ளது என்பதை விளக்கமுற்படவில்லை. தொடர்பாடும்போது குறைபாடுகள் தவிர்க்கப்படவேண்டும் என்கிறார். அவர் குறிப்பிடுவது “And to be able to observe impersonally, without any opinion, judgement, to observe in such a manner demands complete freedom, otherwise you cannot possibly observe.”

ஜே.கே. தன் கட்டுரையில்/உரையில் Freedom என்கிற வார்த்தையை உதாரணமாய் கொண்டிருந்தார். சுதந்திரம்/விடுதலை என்பதன் பொருள் ஒவ்வொருவரின் புரிதலிலும் வேறுபடலாம் அல்லது வேறுவிதமாய் விளக்கம் கொடுக்கலாம். விடுதலை என்ற சொல் உள்ளீடாக நோக்கப்பட வேண்டும் என்கிறார். ஒரு வார்த்தையோடு அதற்குரிய தோற்றம், குறியீடு, தீர்மானம் என்பவற்றின் அடிப்படையில் ஒருவர் பேசலாம். ஆனால், அவை குறிக்கும் அர்த்தம் தவறவிடப்படும்போது தொடர்பாடல் பொருத்தமற்ற ஒன்றாகும் என்று குறிப்பிடுகிறார். ஜே.கே.வின் உரைகளில் சுயமுகதரிசனம் குறித்த கேள்விகளும், அதற்கு பதில் சொல்ல விளைந்து இன்னோர் கேள்விக்கு உள்ளாகி, கேள்விக்கணைகளால் துளைக்கப்படுவீர்கள். கீழே ஒரு உதாரணம்.
 
"When you listen to those words, do you translate it into an abstraction? You understand what I mean by an abstraction - draw from listening to that statement a conclusion, which is an abstraction, and therefore you are not listening to the statement but listening to the abstraction.

be sensitive to the truth of that statement.

Do you, irrespective of your environment, irrespective of the speaker, irrespective of any influence, impression, demand, do you see the truth of it for yourself? If you do then what is the state of your mind? What is the state of the mind that sees the truth of a statement? ------ Is it an intellectual conviction and therefore not truth?
 
Life is serious and it is only the man who is really serious knows how to live, not the flippant, not the ones who are merely seeking entertainment."
 
அடுத்து உரையாடப்படுவது Listening and Knowledge! தொடர்பாடலில் செவிமடுத்தல் என்பதும் ஒரு முக்கியமான அங்கம். ஞானம், புலமை என்பது எப்படி தொடர்பாடலுக்கு இடையூறாக அமைய வாய்ப்புண்டு என்றும் கூறுகிறார். ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு உரை! ஜே.கே.வின் கட்டுரையில் எனக்கு புரிபடாத ஏதாவது கோணம் இருந்தால் அதை தெரியப்படுத்துங்கள். ஜே.கிருஷணமூர்த்தி அவர்களின் On Mind and Thoght கட்டுரையை பகிர்ந்துகொண்ட நண்பருக்கு என் நன்றிகள்.
 
வார்த்தை, பொருள் என்ற யோசனையில் இருந்தபோது மனதில் தோன்றியது இது.

வார்த்தையெனும் வாள் கொண்டு....!

 

 
என்னுடைய கோபம்
வார்த்தைகளோடு இல்லையென்றாலும்
அவற்றோடுதான் நான் மெளனவிரதம்.
மனவெளியில் மெளனசஞ்சாரம் கலைத்து
என்னையறியாமலே எனக்குள் என் இருப்பு உணர்த்தப்பட
இருகூர்மருங்குடை வார்த்தைகளின் வாளோடு
நான் வியாபித்திருந்தேன்
 
 
 
 
உணர்வுகளால் பிணைக்கப்பட்ட சமூகவிலங்கு தான் மனிதன். மனித உணர்வுகள் எதுவாயினும் அவை அதிகமாக உணர்த்தப்படுவது வார்த்தை என்னும் ஊடகத்தின் வழியே. வார்த்தைகளுக்கு தனிச்சக்தி உண்டு. அது மனித மனங்களை பண்படுத்த மட்டும் பயன்படட்டும்!!
 
Image Courtesy: Google.
 
 

6 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

ரதி
ஏதேதோ சொல்கிறீர்கள்......
கொஞ்சம் புரிகிறது
நானெல்லாம் கற்றது கடுகள.... ம்ஹும்
ஒன்றுமேயில்லை....
பூக்களின் படங்கள் அழகாக இருக்கிறது :)

Rathi சொன்னது…

பாலு, :))) பூக்களின் பட உபயம் கூகுள்!

நான் சரியாக தொடர்பாடவில்லையோ :)

அது வேறொன்றுமில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே என்று ஜே.கே. சொல்லியிருக்கிறார். உன்னிடத்தில் கேள்வி கேட்டு உள்ளொளி பெருக்கு. இதான் பாலு.

வேர்கள் சொன்னது…

நன்றி ரதி :)

ஹேமா சொன்னது…

ரதி......மன உளைச்சல்..அல்லது மன அலைச்சலை மிக அவதானமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.சொல்லுக்கும் பொருளுக்கும் நாம் கொடுக்கும் குரலின் பாவம்தான் அதன் அர்த்தத்தை வெளிப்படுத்துகிரது.பாவம் இல்லயென்றால் அன்புகூட அதிகாரமாகவே அர்த்தப்படுகிறது.


கவிதை போதுமே....பெரிய விஷயத்தை அப்படியே சுருக்கி வைத்திருக்கிறது.’இருகூர்மருங்குடை;....வார்த்தை அழகு.பொருள் தேடுகிறேன் !

நாளைக்குத் தேர்தல் அலசலை எதிர்பார்க்கிறேன் !

Rathi சொன்னது…

ஹேமா..... உண்மையை சொன்னால், நான் தேர்தல் பற்றித்தான் எழுத நினைச்சு உண்மையிலேயே பயத்தின் காரணமாக தவிர்த்துவிட்டேன்.

கிழக்கு மாகாணத்தேர்தல் விடைகள் எங்களை எப்படி ஆட்டிவைக்குமோ...... !!

ஆனா நிச்சயம் எழுதவேண்டும்.

Rathi சொன்னது…

ஹேமா, இருகூர் மருங்குடை(ய)- வாளின் இருபக்க விளிம்புகளும் கூருடைய-வழக்கமா ஒரு பக்கம் தானே கூராய் இருக்கும்.