செப்டம்பர் 15, 2012

களவாணி ஈழத்தமிழர்களும் தமிழக சிறப்புமுகாம்களும்கீழேயுள்ள காணொளி எதேச்சையாக என் பார்வையில் பட்டது. இதில் ஈழத்தமிழர்களுக்கான தமிழ்நாட்டு சிறப்பு முகாம்கள் எனப்படும் செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய முகாம்கள் குறித்தும் அங்கே ஈழத்தமிழர்கள் நடத்தப்படும் விதங்கள் பற்றியும் சத்தியம் தொலைக்காட்சியின் உள்ளது உள்ளபடி நிகழ்ச்சியில் இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஒருவரும், சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞருமான புகழேந்தி என்பவருடனான கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன.

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாம்கள் பற்றி வழக்கறிஞர் புகழேந்தி சொன்னது, இலங்கையின் முள்வேலி முகாமை விட மோசமானது தமிழ்நாட்டு இலங்கை தமிழ் அகதிகளுக்கான முகாம்கள். 2008 வரை சிறையாக இருந்த பூந்தமல்லியை முகாமாக மாற்றினார்கள். பூந்தமல்லி என்று சொல்கிற அந்த சிறையைப் பார்த்தால், வானம் பார்க்கமுடியாது. வெயில் காலத்தில் அனல்......அதுமாதிரி ஒரு சிறை இந்தியாவில் எங்குமே இல்லை. அதை முகாம் என்று சொல்லி இந்த மக்களை அவமானப்படுத்துகிறார்கள். எல்லாம் கம்பிவேலி.   அந்த முகாம்கள் இரண்டுமே தமிழினத்தின் அவமானச்சின்னம். அதை மூடுவது தான் அனைத்து கட்சிகளின் வேலை. 

பூந்தமல்லி, செங்கல்பட்டு இரண்டுமுகாம்களுமே சிறப்பு கிளைச்சிறையாக இருந்தன.

பூந்தமல்லி முகாம் கூட சிறப்பு கிளைச்சிறையாக இருந்தது 2003 ம் ஆண்டுவரை. 
இனி கருத்தாடல்களில் காங்கிரஸ்காரர் பேசியவைகளும் கருத்து என்பதாக என் பிரதிபலிப்பும் கீழே.


காங்கிரஸ்காரர்:  சுபமாக இருக்கிற இந்தியாவில், நலமாக இருக்கிற தமிழ்நாட்டில் இவர்களால் (ஈழத்தமிழர்களை குறிப்பிடுகிறார்) ஏற்படுகிற அசிங்கங்கள், அவமானங்கள், துன்பங்கள், துயரங்கள், கடத்தல்கள், சிக்கல்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருட்கள் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதற்குத்தான் முகாம்.

கருத்து: இத்தாலியில் இருந்து வந்த மாம்ஜி ஒரு நாட்டையே சூறையாடிக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியவே தெரியாது. அப்புறம், இந்திய அமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களும் எங்களுக்கு மறக்க என்ன Selective Amnesia வா!

முள்ளிவாய்க்கால் கூட தெரியாமல் *முள்ளைவாய்க்கால்* என்று முக்குறீங்க. முடியாவிட்டால் விட்டுடுங்க.

காங்கிரஸ்காரர்: செந்தமிழ் பேசும் கட்சிகள் எல்லாம் எங்கே போச்சு! 

கருத்து: நல்ல கேள்வி. என்ன செய்ய ஒரு செந்தமிழ் கட்சி தான் அலைக்கற்றைக்கு இரையா(க்)கிவிட்டதே. அகதியாய் அவதிப்படுப்படுபவன் அவஸ்தையை பேசு என்று கூப்பிட்டால் பரதநாட்டியப்பாணியில் கையை, காலை அசைத்து அடுத்த கட்சி என்ன செய்தது என்கிற விளக்கெண்ணெய் விவரம் வேற.

காங்கிரஸ்காரர்: இலங்கையில் மத்திய மாகாணத்திலே *நவரெலியாவிலே (இவர் முக்கோ முக்கென்று முக்கி சொல்வது நுவரெலியா) மூன்றரை லட்சம் தமிழர்கள் திறமையாக வாழ்கிறார்கள், செம்மையாக வாழ்கிறார்கள், ப்ரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள். 

கருத்து: இலங்கையில் தமிழர்கள் இப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று பொய் சொல்ல காங்கிரஸ் காரர்களால் மட்டுமே முடியும். காஷ்மீரில் இந்தியர்கள் கூடத்தான் செம்மையாக வாழ்கிறார்கள் என்று சொல்றமாதிரி தான். நுவரெலியாவில் மட்டும் தான் தமிழர்கள் வாழ்கிறார்களா! தமிழர்களின் பாரம்பரிய மண் வடக்கும், கிழக்கும். அங்கே தமிழன் படும் தாங்கொணாத் துயரை ஏன் சோற்றில் முழுப்பூசணிக்காய் ஆக்குறீர்கள். 

காங்கிரஸ்காரர்: தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடவேண்டும் என்று செய்யும் சேட்டைகளால் வந்த விளைவு. 

கருத்து: ம்........ ஒருத்தன் உயிரை கையில் பிடித்துகொண்டு ஆழக்கடலில் உயிர் போனாலும் பரவாயில்லை என்று ஏன் தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடுறான்னு உங்க அறிவுக்கு தோணவே தோணாதா. அதெல்லாம் சேட்டையா! என்ன செய்ய உங்களுக்கெல்லாம் தொலைக்காட்சியில் இப்பிடி வந்து ஈழத்தமிழனைப் பற்றி சேட்டை பேசக்கூட இடமிருக்கு. ஈழத்தமிழனுக்கு அந்த வசதி  இருக்கா என்ன.

காங்கிரஸ்காரர்: இந்தியாவுக்கும் சிலோனுக்கும் சண்டை வருமோன்னு என்னைப்போன்றவர்கள் பயப்படுகிறோம். 

கருத்து: சிரிச்சு மாளலை! ஒரு மனட்சாட்சியோட பயப்படுங்கன்னு உங்களுக்கு காங்கிரஸ் பயிற்சிப்பட்டறையில் சொல்லிக்கொடுக்கவே இல்லையா. அட, நீங்க ஏன் பயப்படணும் உங்க போரை நடத்தி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்வது உட்பட, உங்களுக்காகப் போர் செய்யத்தான் ராஜபக்‌ஷேக்கள் இருக்கிறார்களே. பிறகென்ன பயம். 

ராஜபக்‌ஷேக்களிடம் வெட்கம், மானம், சூடு, சுறணை எதுவுமே இல்லாம சரணடைந்தவர்கள் பேசுற பேச்சா இது. (ஸாரி இந்த இடத்தில் துப்புறதை நினைக்கவே கேவலமா இருக்கு, என்னை சொன்னேன்.) 

காங்கிரஸ்காரர்: சிலோனில் கொடுமைகள் நடக்கிறபொழுதெல்லாம் இருகரம் கூப்பி வரவேற்கிறது தான் இந்தியதேசிய காங்கிரசின் வரலாறு...... கொக்கரித்த ஜெயவர்த்தனாவை எக்காளமிட்டு சிரித்த ஜெயவர்த்தனாவை விமானம் விட்டு ஏய் ஜெயவர்த்தனான்னு எச்சரித்தது காங்கிரஸ் அரசு..


கருத்து: ம்..... ஐயா படத்தில சரத்குமார் சொன்ன ஏய் போலவா. இப்பிடி ஒரு நாட்டுக்குள் அதன் வான்பரப்பில் எல்லை மீறி நுழைந்து பறந்ததையெல்லாம் வீரம் என்று சொல்றது ஒரு புறம் இருக்கட்டும். முள்ளிவாய்க்கால் முடிவில் காங்கிரஸில் யார் எக்காளமிட்டார்கள் அப்பிடீங்கறதையும் சொல்றமாதிரி உங்க கட்சியில் உங்களைப்போல யாரையாவது வளர்த்துவிட்டாங்கன்னா நல்லது.

காங்கிரஸ்காரர்: அவர்கள் செய்த தவறை திருப்பி திருப்பி செய்யாமல் தமிழக சர்க்கார் மூலமாக, கோர்ட் மூலமாக தனக்கு விடுதலை செய்யவேண்டும் என்று தாக்கல் செய்யலாம். எந்தவிதமான மாச்சர்யங்கள் இல்லை.....முகாம்கள் மூடவேண்டும் என்பதில்லை. முகாம்களிலே இருக்கிற சித்திரவதைகள் குறைக்கப்படவேண்டும். மனிதனாக நினைக்கவேண்டும், இந்தியதேசிய மனிதனாக நினைக்கவேண்டும். சண்டமாருதம் செய்கிற சண்டைமுகாமாக இருக்கக் கூடாது. 
     
கருத்து: அவர்கள் என்ன தப்பு செய்தார்கள் அதை தெளிவாக, பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்க. 

அப்புறம், முகாம்களில் சித்திரவதைகள் குறைக்கப்படவேண்டும் என்று அங்கே சித்திரவதைகள் நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் உங்களைப்போன்றவர்களை உங்கள் கட்சி சார்பில் அனுப்பினால் புகழேந்தி போன்றவர்களில் வேலை சுலபமாகும். சிறப்பு முகாமில் சித்திரவதையிலிருந்து விடுதலை வேண்டி காந்திய வழியில் உண்ணாவிரதம் இருக்கிறது இப்போ சண்டமாருதம் ஆகிவிட்டதா!

இறுதியாக சத்தியம் தொலைக்காட்சியின் உள்ளது உள்ளபடி நிகழ்ச்சியின் நடத்துனருக்கு ஒரு வேண்டுகோள். காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் போன்றவர்களையே அடுத்த ஈழத்தமிழர்கள் குறித்த விவாதத்திற்கும் தேர்ந்தெடுங்கள் என்பது என் வேண்டுகோள். எத்தனையோ பேரின் வேலைகளை இவர் போன்றவர்கள் சுலபமாக்குவார்கள்.Image Courtesy: Google

5 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

ரதி

நேற்று

நாங்கள இந்தியபடையைஅனுப்பவிட்டால் திரிகோணமலையை அமெரிக்கா பிடித்து விட்டிருக்கும்
எனவே இதிய அமைதி படையை ???அனுப்பினோம் என்றார்கள்

பிறகு

நாங்கள் ராணுவ உதவி செய்யவில்லை என்றால் சீனா செய்துவிடும் என்றார்கள்

தற்போது

இங்குவரும் சிங்களவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு ஆபத்து என்கிறார்கள்

நாளை

கூடங்குளம் அணுஉலையை திறந்த பிறகு நமது மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குகிறார்களே என்று கேட்டால்

கண்டிப்பாக இந்த காங்கிரஸ்காரர்கள் சொல்வார்கள் நாம் இதை தட்டிகேட்டால் கூடங்குளம் மீது குண்டு போடுவார்கள்

என்னசெய்வது என்பார்கள்

தமிழர்கள் இந்த நாட்டிற்கு தீண்டபடாதவர்கள்

Rathi சொன்னது…

வேர்கள், இலங்கையிடம் இந்தியாவின் பயம் என்ன என்பது தான் எல்லாத்துக்கும் மேல் யோசிக்க வைக்கிறது! சில நேரங்களில் யோசித்தால் சீனா என்பதை விடவும் வேறேதும் இருக்குமோ என்று தோணுது.

Rathi சொன்னது…

வேர்கள், காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி.

துஷ்யந்தன் சொன்னது…

காங்கிரஸ் காரன் இருக்கும் மட்டும் ஈழ தமிழன் என்ன இந்திய தமிழனுக்கும் விடிவே இல்லை :(

Rathi சொன்னது…

துஷி, வாங்கோ. ம்ம்ம்ம்....