செப்டம்பர் 04, 2012

ஜெயமோகனும் அறமும்!

 
 
தமிழ்நாட்டு எழுத்தாளர் ஜெயமோகன், ஞாநி போன்றோர் எழுத்தை படிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கிட்டியதில்லை. படிக்க அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை. ஒருவேளை இலக்கியம் என்கிற பெயரில் ஈழம், ஈழவிடுதலை குறித்த இவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த எண்ணங்கள் விமர்சனங்கள் வழி எனக்குள் பதிந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஞாநியின் தவிப்பு தமிழீழவிடுதலைப் புலிகள் குறித்த அரசியல் விமர்சனப்பார்வையின் கதைவடிவமும் சுருக்கமுமே என்பதை விமர்சனங்கள் வழி தெரிந்துகொண்டேன். ஜெ. மோ. வின் ஈழம் குறித்த கருத்துகள் இலக்கியம் என்கிற வரையறையும் தாண்டி அரசியலாகிப்போனது அவர் எழுத்துக்கே இழுக்கு. பழையதை கிளறவேண்டாமென்றாலும், காலம் அதைக் கடந்துபோக அனுமதிப்பதில்லை.

ஜெயமோகனின் அறம் கதைத்தொகுப்பு ஈழம் பற்றியதல்ல. அதனால் துணிந்து படித்தேன். எல்லாக்கதைகளும் படித்து முடிக்கவில்லை இன்னும். அறம் என்னும் ஒரு சிறுகதை படித்தேன்.

நான் ஜெ.மோ.வின் எழுத்தை, அதுவும் சிறுகதைகளை படிப்பது இது தான் முதல் தரம். அவருடைய எழுத்தைப் படிக்குமுன்னமே அவரது எழுத்துக்குறித்து நிறைய பாரபட்சமற்ற விமர்சனங்களைப் படிக்க நேரிட்டதால் அதிகம் எதிர்பார்ப்புகளின்றியே அறம் கதையையும் படித்து முடித்தேன்.

எழுத்தாளர்கள் என்றாலே அறிவாளிகள், அதுவும் ஜெ.மோ. எழுத்தில் சூட்சுமமாய் கருத்துகளைத் திணிப்பவர் என்கிற அவர் எழுத்துப் பற்றிய விமர்சனங்கள் உள்ளுக்குள் எங்கோ ஒர் மூலையில் ஓடிக்கொண்டே இருந்தது வாசிப்பினூடே! தவிர்க்கமுடியாததாய்ப் போனது. மேலும் அவர் கதைகள் படிக்க நேரிட்டால் என்னுடைய இந்த முன்முடிவுகளின் தாக்கம் குறைந்து போகலாம் எதிர்காலத்தில்

அறம் என்னும் கதையின் வழி அவர் எழுத்துப்பற்றி என் கருத்தை சொல்லவேண்டுமானால், Linguistic என்று தோன்றியது. மொழியின் நாடி பிடித்து  ஒரு சமூகத்தின் மனட்சாட்சியை அறம் குறித்து உலுக்கிப்பார்க்கிறது. மொழியின் ஆளுமை நிறையவே தெரிகிறது. சில இடங்களில் ஜெயமோகனா, சுயபிரஸ்தாப மோகனா என்று புருவங்களை உயர்த்தவைக்கிறார்.

You paint a picture with words என்று சொல்வார்கள். அது நல்லாவே கைவரப்பெற்ற எழுத்து. வார்த்தைகளில் காட்சியையும், மனித உணர்வுகளையும் கச்சிதமாக கவ்வியிருக்கிறார். பெரிய எழுத்தாளராச்சே! :) சில இடங்களில் காட்சிகள், உணர்வுகள், படிப்பவரின் எண்ணவோட்டம் எல்லாவற்றையும் ஒருசேர கொண்டு சேர்க்கும் Pitch perfect prose! சிறப்பு. எனக்கு பிடித்த இடம் இது.

“என் வயத்தில அடிச்ச நீயும் உன் பிள்ளகுட்டிகளும் வாழ்ந்திடுமா...வாழ்ந்தா சரஸ்வதி தேவடியான்னு அர்த்தம்ன்னு சொல்லிட்டே...” படிப்பவர் அந்தக்கதாபாத்திரத்தின் வலியை அடிவயிற்றில் பகீரென உணரவைக்கும் இடம்.

ஜெ. மோ.விடம் அறம் கதையில் எது மிஸ்ஸிங் என்றால் Simplicity, எளிமை! என்று தோன்றியது! சில இடங்களில் வார்த்தைகளை திருகுகிறாரோ என்றும் குழப்பம். வார்த்தைகளைத் திருகி கருத்தை திரிப்பதும் மொழிசார் இலக்கியமோ! நானறியேன். தவிர நிறைய quotes, அதுவும் சிறுகதையில். எனக்கு ஒத்துவராத ஒரு விடயம்.

கதையின் நீதி பற்றி என்ன சொல்வது! நான் தப்பி பிழைச்சு வாழ்ந்த போரியல் வாழ்வின் அறம் என் வீட்டுப்பெண்கள், என் சமூகத்தில் வாழும் பெண்கள் சிங்களின் சப்பாத்துக்கால்களில் மண்டியிட்டு வீட்டு பிள்ளைகளுக்கு, ஆண்களுக்கு, கணவன், மகன், பேரனுக்கு உயிர்ப்பிச்சை கேட்பது்; பத்து வயது சிறுமி உட்பட பெண்களின் கற்பை காப்பாற்ற சிங்கள காடைகளின் காலில் விழுந்து இறைஞ்சுவது என்பவை தான். என் அறம் குறித்த புரிதல் வேறு. அது ஜெ. மோ. வுக்கும் புரியாதது என்று இந்திய ராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் ஆற்றிய சேவையை அவர் எழுத்தில் படித்தபோது தெரிந்து கொண்டது. ஒரு இனத்தின் வலியை தன் எழுத்தில் பிரதிபலிக்கத் தெரியாவிட்டாலும் குறைந்தபட்சம் அதை கீழே போடாமல் இருந்தாலே போதுமே. ஆனால், அவர் எழுத்து அதைச்செய்யத்தவறிவிட்டது.
 
Image Courtesy: Google.
 
 

2 கருத்துகள்:

sunaa சொன்னது…

நீங்க இன்னும் வளரனும் தங்கச்சி..ஜெயமோகன் -லாம் அப்புறம்..அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுரா-வெல்லாம் மொதல்ல படிங்க..

Rathi சொன்னது…

sunaa, என்னோட வளர்ச்சி பற்றி அக்கறையா வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி :))


நான் வளர்ந்து இலக்கியவாதி ஆகிற கெட்ட எண்ணம் எனக்கு இல்லை :))