செப்டம்பர் 20, 2012

கருத்துகளால் வனையப்பட....!

விடுதலை ஒரு அழகான உணர்வு. பற்றுகளால் கட்டுகளால் பிணைக்கப்பட்ட மானுடவாழ்வில் விடுதலை பகுத்தறிவால் பிரித்துணரப்படுவது. வாழ்வின் பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது விடுதலை ஆகுமா! பதில் நான் சொல்லத்தேவையில்லை. பிரியமுமில்லை. அது அவரவர் அனுபவம். அரவங்களற்ற காற்றுவெளியில் கைகளிரண்டும் அகலப்பரப்பி உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும், திசுக்களிலும் பிராணவாயுவை நிரப்பிக்கொள்ளும் தருணங்கள் அலாதியானது. என்னை என்னுள் உணரும் தருணங்கள் அவை. வாழும்போதே விடுதலை என்பது இதுதானோ என்னும் உள்ளுணர்வு அது.
 
எப்போதும் பரபரப்பாய் ஓடும்வாழ்வில் விடுதலை  என்பது உணர்வுக்குப் புறம்பாக செயல் குறித்த நோக்காய் அமைந்துவிடும் தருணங்களும் உண்டு. மாறாக, விடுதலையானது உணர்வாகவும், புறவாழ்வின் சிக்கல்களிலிருந்து விடுபடும் நோக்காகவும் ஆகிப்போகிற இரட்டைநிலையான சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. விடுதலை அறிவால் உணரப்பட்டு, புறநிலைகளை எப்போது அலுப்புகளின்றி ஒதுக்கித் தள்ளமுடிகிறது என்று யோசிக்கிறேன்.

அன்றாடவாழ்வில் கட்டுகள் என்பது அரசியல், பொருளாதார, சமூக காரணிகளோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. மனிதவிடுதலை என்பது தத்துவசித்தாங்களால் கட்டியமைக்கப்படுவதாகவும், அதே சித்தாங்களுக்கு கொடுக்கப்படும் வடிவங்களே அதை (மனிதவிடுதலையை) புறக்கணிக்கும் துர்ப்பாகிய நிலைக்கு தள்ளப்பட்டு தன்னைமட்டுமே நிருவ முற்படும்போது குழப்பங்கள், இழப்புகள் நிறைந்ததாகவும் ஆகிப்போகிறது. அதற்கு வரலாற்று நிகழ்வுகள் நிறைய உண்டு. இதுபற்றி அவ்வப்போது சிந்தனைகள் எனக்குள் ஓடினாலும் இப்போதெல்லாம் ஆங்காங்கே சமூகதொடர்பாடல் வலைகளில் இதுகுறித்து நிறைய கருத்துகள், எதிர்ப்புகள், சமநிலைக்கோட்பாடுகள் என்று பேசவும், கேட்கவும் நேரிடுகிறது.

அரசு, அரசின் கொள்கைகள், அரசின் நிறுவனங்கள் அவற்றின் நிர்வாக செயற்திறன் இவை பற்றியெல்லாம் அறிவூட்டல்களாய் பாடசாலையில் படிப்பது வேறு. அது ஏட்டுச்சுரக்காய். அதையே படித்து முடித்து வேலைச்சந்தையில் வேலை தேடி நிஜத்தில் பொருத்திப் பார்க்கும் போது தான் அதன் இடைவெளிகள், குறைபாடுகள் புரியத்தொடங்கும். யதார்த்தம் முகத்தில் அறையும். அது ஒருவகை. இன்னோர் வகை என்வரையில் எழுத்து, இலக்கியம் எனப்படும் கருவி மூலம் கடத்தப்படும் கொள்கைகள். சில நேரங்களில் வாசிப்பவனும், அரசியல் அறிவற்றவனும் கருத்துகளால் வனையப்படவே இலக்கியம் புனையப்படுகிறதென்பது வருந்தத்தக்கது. எழுத்தை படைப்பவர்களும், பெரும்பாலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யாருடைய அங்கீகாரம் வேண்டி எழுதுகிறார்கள், யாருக்காக எழுதுகிறார்கள் என்றும் யோசிக்கவைப்பார்கள்.


நேரம் கிடைக்கும் போது மட்டுமே வாசிக்கும் பழக்கம் என்னுடையது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எனக்குள் இந்தப் பதிவு குறித்த சிந்தனையை விட்டுச்சென்றவர்கள் எய்ன் ராண்ட் (Ayn Rand). இவரின் எழுத்தையும் அதிகம் படித்ததுமில்லை. அதேபோல், அதை விமர்சிக்கும் அளவுக்கு என்னிடம் இலக்கிய போதமையின் போதாமை! இருந்தும் அரசியல் நோக்கில் இவரது எழுத்தில் தூக்கி நிறுத்தப்படுவது Ethical Egoism என்கிற எண்ணம் தவிர்க்கமுடியாதது மட்டுமல்ல, அதுவே இவர் எழுத்து  பற்றிய உண்மையும் என்கிறார்கள் விமர்சகர்கள். எந்த எழுத்தாக இருந்தாலும் அந்த எழுத்தையும் மீறி எதுவோ ஒன்று அறிவை துருத்தினால் அதை கடந்து செல்லமுடிவதில்லை.

எய்ன் ராண்டின் எழுத்தில் என்னை உறுத்தியது அவரது கட்டுப்பாடுகளற்ற பொருளாதார செயற்பாடுகள் குறித்த கதாபாத்திரங்களின் உருவாக்கம். இதுவே இவர் முதலாளித்துவத்தின் கலப்படமற்ற வடிவமான Laissez Faire (தலையிடாமைக் கொள்கை) குறித்த வலியுறுத்தல்களே. எனக்குப் புரிந்தவரையில் அரசானது பொருளாதார கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தாமல் தனியாரை சுதந்திரமாக செயற்பட விடவேண்டும் என்பதே அது. அதாவது தொழில் நிறுவனங்களுக்கிடையேனா இயல்பான போட்டிகளே அவர்களை அரசகட்டுப்பாடுகளை விட கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்பதே.

20ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியை ஒட்டி அமைந்த கூட்டு முயற்சிகள், கூட்டு அமைப்புகள், கொள்கைகள், விதிகளால் அது தன் வலுவை இழந்தது. மெய்யியல் அல்லது தனிமனிதத்துவம் என்று நோக்கினால் Ethical Egoism (அறவழி தன்முனைப்பாக்கம்) என்பதை எய்ன் ராண்ட் வலியுறுத்துகிறார். ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் என்னும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு (விக்கிபீடியா). மனிதர்களை அவர்கள் இஷ்டப்படி செயற்படவிட்டால் தன்னலம் சார்ந்து அறவழியில் செயற்படுவார்கள் என்பதுதான் அது. எய்ன் ராண்ட் தனிமனித உரிமைகளை காத்திரமாக வலியுறுத்தினாலும், பலாத்தாகரம் மூலம் எதையும் திணிப்பதை எதிர்த்தாலும் அவரது Laissez Faire, தலையிடாமை கொள்கை என்பது சரியான ஒன்றல்ல என்பது பலரது கருத்து. Laissez-Faire, 18ம் நூற்றாண்டு சொற்பதத்தின் இன்றைய மறுவடிவம் திறந்த சந்தைபொருளாதாரம்.  முதலாளித்துவத்தில் முதலாளிகள் அரசின் கட்டுப்பாடுகள் இருந்தோ, இல்லாமலோ சுதந்திரமாய் செயற்பட்டு இன்று உலகமே பொருளாதார வங்குரோத்து நிலையில் உள்ளது.


இலக்கியம் என்பது எப்போதும் சமூகம் சார்ந்து, மக்கள் நலன்சார்ந்து மட்டுமே பேசும், எழுதும் என்று எல்லா நேரமும் நம்பிக்கையோடு படிக்க முடிவதில்லை. கதாபாத்திரங்களின் இயல்புகளோடும், கதையோட்டத்தோடு மெய்மறந்து ஒன்றிப்போனால் அதில்  புதைக்கப்பட்ட அரசியல் தெரியாமலே மாற்றுக்கருத்துகள் உருவாக்கப்படும். கருத்துகளால் வனையப்பட்ட சமூகம் உருவாக இலக்கியம் ஓர் கருவி என்றால் அதை தொடவும் ஒருவிதமான பயம் மட்டுமே மிஞ்சுகிறது. அரசியல் கலப்படம் இல்லாத இலக்கியம் தேர்ந்தெடுத்துப் படிக்க ஆசைப்பட மட்டுமே முடிகிறது அது எய்ன் ராண்ட் முதல் ஜெயமோகன் வரை.
 
Images: Google
 
 

செப்டம்பர் 15, 2012

களவாணி ஈழத்தமிழர்களும் தமிழக சிறப்புமுகாம்களும்கீழேயுள்ள காணொளி எதேச்சையாக என் பார்வையில் பட்டது. இதில் ஈழத்தமிழர்களுக்கான தமிழ்நாட்டு சிறப்பு முகாம்கள் எனப்படும் செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய முகாம்கள் குறித்தும் அங்கே ஈழத்தமிழர்கள் நடத்தப்படும் விதங்கள் பற்றியும் சத்தியம் தொலைக்காட்சியின் உள்ளது உள்ளபடி நிகழ்ச்சியில் இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஒருவரும், சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞருமான புகழேந்தி என்பவருடனான கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன.

செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாம்கள் பற்றி வழக்கறிஞர் புகழேந்தி சொன்னது, இலங்கையின் முள்வேலி முகாமை விட மோசமானது தமிழ்நாட்டு இலங்கை தமிழ் அகதிகளுக்கான முகாம்கள். 2008 வரை சிறையாக இருந்த பூந்தமல்லியை முகாமாக மாற்றினார்கள். பூந்தமல்லி என்று சொல்கிற அந்த சிறையைப் பார்த்தால், வானம் பார்க்கமுடியாது. வெயில் காலத்தில் அனல்......அதுமாதிரி ஒரு சிறை இந்தியாவில் எங்குமே இல்லை. அதை முகாம் என்று சொல்லி இந்த மக்களை அவமானப்படுத்துகிறார்கள். எல்லாம் கம்பிவேலி.   அந்த முகாம்கள் இரண்டுமே தமிழினத்தின் அவமானச்சின்னம். அதை மூடுவது தான் அனைத்து கட்சிகளின் வேலை. 

பூந்தமல்லி, செங்கல்பட்டு இரண்டுமுகாம்களுமே சிறப்பு கிளைச்சிறையாக இருந்தன.

பூந்தமல்லி முகாம் கூட சிறப்பு கிளைச்சிறையாக இருந்தது 2003 ம் ஆண்டுவரை. 
இனி கருத்தாடல்களில் காங்கிரஸ்காரர் பேசியவைகளும் கருத்து என்பதாக என் பிரதிபலிப்பும் கீழே.


காங்கிரஸ்காரர்:  சுபமாக இருக்கிற இந்தியாவில், நலமாக இருக்கிற தமிழ்நாட்டில் இவர்களால் (ஈழத்தமிழர்களை குறிப்பிடுகிறார்) ஏற்படுகிற அசிங்கங்கள், அவமானங்கள், துன்பங்கள், துயரங்கள், கடத்தல்கள், சிக்கல்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருட்கள் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதற்குத்தான் முகாம்.

கருத்து: இத்தாலியில் இருந்து வந்த மாம்ஜி ஒரு நாட்டையே சூறையாடிக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியவே தெரியாது. அப்புறம், இந்திய அமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களும் எங்களுக்கு மறக்க என்ன Selective Amnesia வா!

முள்ளிவாய்க்கால் கூட தெரியாமல் *முள்ளைவாய்க்கால்* என்று முக்குறீங்க. முடியாவிட்டால் விட்டுடுங்க.

காங்கிரஸ்காரர்: செந்தமிழ் பேசும் கட்சிகள் எல்லாம் எங்கே போச்சு! 

கருத்து: நல்ல கேள்வி. என்ன செய்ய ஒரு செந்தமிழ் கட்சி தான் அலைக்கற்றைக்கு இரையா(க்)கிவிட்டதே. அகதியாய் அவதிப்படுப்படுபவன் அவஸ்தையை பேசு என்று கூப்பிட்டால் பரதநாட்டியப்பாணியில் கையை, காலை அசைத்து அடுத்த கட்சி என்ன செய்தது என்கிற விளக்கெண்ணெய் விவரம் வேற.

காங்கிரஸ்காரர்: இலங்கையில் மத்திய மாகாணத்திலே *நவரெலியாவிலே (இவர் முக்கோ முக்கென்று முக்கி சொல்வது நுவரெலியா) மூன்றரை லட்சம் தமிழர்கள் திறமையாக வாழ்கிறார்கள், செம்மையாக வாழ்கிறார்கள், ப்ரச்சனையில்லாமல் வாழ்கிறார்கள். 

கருத்து: இலங்கையில் தமிழர்கள் இப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று பொய் சொல்ல காங்கிரஸ் காரர்களால் மட்டுமே முடியும். காஷ்மீரில் இந்தியர்கள் கூடத்தான் செம்மையாக வாழ்கிறார்கள் என்று சொல்றமாதிரி தான். நுவரெலியாவில் மட்டும் தான் தமிழர்கள் வாழ்கிறார்களா! தமிழர்களின் பாரம்பரிய மண் வடக்கும், கிழக்கும். அங்கே தமிழன் படும் தாங்கொணாத் துயரை ஏன் சோற்றில் முழுப்பூசணிக்காய் ஆக்குறீர்கள். 

காங்கிரஸ்காரர்: தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடவேண்டும் என்று செய்யும் சேட்டைகளால் வந்த விளைவு. 

கருத்து: ம்........ ஒருத்தன் உயிரை கையில் பிடித்துகொண்டு ஆழக்கடலில் உயிர் போனாலும் பரவாயில்லை என்று ஏன் தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடுறான்னு உங்க அறிவுக்கு தோணவே தோணாதா. அதெல்லாம் சேட்டையா! என்ன செய்ய உங்களுக்கெல்லாம் தொலைக்காட்சியில் இப்பிடி வந்து ஈழத்தமிழனைப் பற்றி சேட்டை பேசக்கூட இடமிருக்கு. ஈழத்தமிழனுக்கு அந்த வசதி  இருக்கா என்ன.

காங்கிரஸ்காரர்: இந்தியாவுக்கும் சிலோனுக்கும் சண்டை வருமோன்னு என்னைப்போன்றவர்கள் பயப்படுகிறோம். 

கருத்து: சிரிச்சு மாளலை! ஒரு மனட்சாட்சியோட பயப்படுங்கன்னு உங்களுக்கு காங்கிரஸ் பயிற்சிப்பட்டறையில் சொல்லிக்கொடுக்கவே இல்லையா. அட, நீங்க ஏன் பயப்படணும் உங்க போரை நடத்தி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்வது உட்பட, உங்களுக்காகப் போர் செய்யத்தான் ராஜபக்‌ஷேக்கள் இருக்கிறார்களே. பிறகென்ன பயம். 

ராஜபக்‌ஷேக்களிடம் வெட்கம், மானம், சூடு, சுறணை எதுவுமே இல்லாம சரணடைந்தவர்கள் பேசுற பேச்சா இது. (ஸாரி இந்த இடத்தில் துப்புறதை நினைக்கவே கேவலமா இருக்கு, என்னை சொன்னேன்.) 

காங்கிரஸ்காரர்: சிலோனில் கொடுமைகள் நடக்கிறபொழுதெல்லாம் இருகரம் கூப்பி வரவேற்கிறது தான் இந்தியதேசிய காங்கிரசின் வரலாறு...... கொக்கரித்த ஜெயவர்த்தனாவை எக்காளமிட்டு சிரித்த ஜெயவர்த்தனாவை விமானம் விட்டு ஏய் ஜெயவர்த்தனான்னு எச்சரித்தது காங்கிரஸ் அரசு..


கருத்து: ம்..... ஐயா படத்தில சரத்குமார் சொன்ன ஏய் போலவா. இப்பிடி ஒரு நாட்டுக்குள் அதன் வான்பரப்பில் எல்லை மீறி நுழைந்து பறந்ததையெல்லாம் வீரம் என்று சொல்றது ஒரு புறம் இருக்கட்டும். முள்ளிவாய்க்கால் முடிவில் காங்கிரஸில் யார் எக்காளமிட்டார்கள் அப்பிடீங்கறதையும் சொல்றமாதிரி உங்க கட்சியில் உங்களைப்போல யாரையாவது வளர்த்துவிட்டாங்கன்னா நல்லது.

காங்கிரஸ்காரர்: அவர்கள் செய்த தவறை திருப்பி திருப்பி செய்யாமல் தமிழக சர்க்கார் மூலமாக, கோர்ட் மூலமாக தனக்கு விடுதலை செய்யவேண்டும் என்று தாக்கல் செய்யலாம். எந்தவிதமான மாச்சர்யங்கள் இல்லை.....முகாம்கள் மூடவேண்டும் என்பதில்லை. முகாம்களிலே இருக்கிற சித்திரவதைகள் குறைக்கப்படவேண்டும். மனிதனாக நினைக்கவேண்டும், இந்தியதேசிய மனிதனாக நினைக்கவேண்டும். சண்டமாருதம் செய்கிற சண்டைமுகாமாக இருக்கக் கூடாது. 
     
கருத்து: அவர்கள் என்ன தப்பு செய்தார்கள் அதை தெளிவாக, பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்க. 

அப்புறம், முகாம்களில் சித்திரவதைகள் குறைக்கப்படவேண்டும் என்று அங்கே சித்திரவதைகள் நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் உங்களைப்போன்றவர்களை உங்கள் கட்சி சார்பில் அனுப்பினால் புகழேந்தி போன்றவர்களில் வேலை சுலபமாகும். சிறப்பு முகாமில் சித்திரவதையிலிருந்து விடுதலை வேண்டி காந்திய வழியில் உண்ணாவிரதம் இருக்கிறது இப்போ சண்டமாருதம் ஆகிவிட்டதா!

இறுதியாக சத்தியம் தொலைக்காட்சியின் உள்ளது உள்ளபடி நிகழ்ச்சியின் நடத்துனருக்கு ஒரு வேண்டுகோள். காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் போன்றவர்களையே அடுத்த ஈழத்தமிழர்கள் குறித்த விவாதத்திற்கும் தேர்ந்தெடுங்கள் என்பது என் வேண்டுகோள். எத்தனையோ பேரின் வேலைகளை இவர் போன்றவர்கள் சுலபமாக்குவார்கள்.Image Courtesy: Google

செப்டம்பர் 12, 2012

கோத்தபாயவுக்கு மனநோயா!!

 

கோத்தபாயவும் Royal Puppy யும்!

 
நேற்று ஒரு செய்தி கண்ணில் பட்டது இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷேவுக்கு மனநோயா என்று. சரி, என்னதான் பார்க்கலாம் என்று நூல்பிடித்துப்போனால் சில அதிர்ச்சி தரும் உண்மைகள்.
 
இலங்கையில் ராஜபக்‌ஷேக்களை அரசியல், ராணுவ ரீதியாக ஓரளவுக்கு துணிச்சலுடன் விமர்சிப்பது சண்டே லீடர் என்கிற ஆங்கிலப்பத்திரிகை. இப்பத்திரிகையின் ஃபவுண்டரும் எடிட்டருமான லசந்தா விக்ரமதுங்கே வின் அகால மரணம் இன்றும் கூட சர்வதேச அளவில் பேசப்படும் ஓர் அதிர்ச்சி கலந்த மரணம். அவர் வழியில் அவரது மரணத்திற்குப் பிறகு அவரது பதவியை அப்பத்திரிகைக்காக செய்து வருபவர் Frederica Jansz என்கிற பெண் பத்திரிக்கையாளர். ஃப்ரிடெரிகா பெற்ற ஊடகவியலாளர் விருதுகள் இவை. Zonta Woman of the Year in Media and Mass Communication” in 2002, and “Journalist of the Year and English Journalist of the Year” in 2004.
 
சரி, கதைச்சுருக்கம் இதுதான். ராஜபக்‌ஷேவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலருமான கோத்தபாய ராஜபக்‌ஷேவின் மனைவிக்கு சூரிச்லிருந்து ஒரு நாய்க்குட்டியை இறக்குமதி செய்ய முடிவெடுத்து அதை இலங்கைக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ராஜபக்‌ஷேக்களின் விமான அதிகாரியாகப் பணிபுரியும் Niece, மதினி சந்திரதாச (பெறாமகள்) மற்றும் அவரது காதலன், ப்ரவீன் விஜயசிங்கே இருவரது சொந்தப்பொறுப்பில் விடப்பட முடிவெடுக்கப்பட்டது. பிரச்சனை என்னவென்றால் ப்ரவீன் விஜயசிங்கே A340 விமானத்தை ஓட்ட பயிற்சிபெற்றவர் அல்லவாம். அதனால், A330 ஐ தேர்ந்தெடுத்து விமானத்தை அதன் அளவை குறைத்திருக்கிறார்கள். அப்படிக்குறைத்தால் ப்ரவீன் விஜயசிங்கே கோத்தபாய ராஜபக்‌ஷேவுக்கு நாய்க்குட்டியை மதினி பத்திரமாக கொண்டுவந்து சேர்க்க ஏதுவாயிருக்கும் என்பது தான் காரணம்.நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார சூழ்நிலை காரணமாக இது குறித்து செய்தி வெளியிட முன்னர் ராஜபக்‌ஷேக்களிடம் அது குறித்து உறுதிப்படுத்த சண்டேலீடர் பத்திரிகையின் எடிட்டர் ஃப்ரிடெரிகா ராஜபக்‌ஷேக்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் ராஜபக்‌ஷேக்களிடம் நாய்க்குட்டி கொண்டுவருவது தொடர்பாக நடந்த விடயங்களை தெளிவுபடுத்தி செய்தி வெளியிடுவது தொடர்பாக ஏதோ கேட்கப்போக அவர்கள் இருவரும் சகட்டுமேனிக்கு பத்திரிகையாளரை வசைபாடியிருக்கிறார்கள். ஒரு அரசை கட்டியாளும் இருவரது பேச்சும் ப்ரயன் செனிவிரட்னே அவர்களின் பார்வையில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
 
இதையெல்லாம் ஓரளவிற்கு சண்டே லீடர் பத்திர்கையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் அது குறித்து அவுஸ்திரேலியாவில் வாழும் மருத்துவர் ப்ரையன் செனிவிரட்னே அவர்கள் கோத்தபாயவுக்கு மனநோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக தன் தளத்தில் எழுதியது கண்ணில் பட்டது.
 
மருத்துவர் ப்ரையன் செனிவிரட்னேவின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட மிகச்சில பகுதிகள் இவை. முழுவிவரத்துக்கு இணைப்பை படிக்கவும்.
 
A Medical assessment
The possibilities are that the Defence Secretary has:
  1. A Medical problem
  2. A Psychiatric disorder
  3. A Personality problem
A Medical problem.
To write him off as ‘nuts’ or ‘crazy’ is unacceptable, nor is it wise to refer him to a psychiatrist (as a first step). In a dvd I am just recording of a talk I gave in New York, Sydney and several other places in Australia, “Mental Disorders as seen by a Physician in Internal (General) Medicine”, I have set out the dangers and the traps. I have stressed that patients who seem, at first blush, to have a mental illness, must first be checked by a Physician, if serious problems are to be avoided.
Psychiatric conditions
One thing is certain: the Defence Secretary has delusions of grandeur. This “I am not afraid of bloody Courts, I can bring an elephant if I so choose, I will put you in jail” etc are not ‘normal’.
So also is his decision to bomb hospitals in the Tamil North and East, with patients in them (as documented in the dvds I have recorded which have visual clips of his interview inLondon). This “I-can-do- what-the-hell-want attitude”, “the Geneva Convention can go to hell” – are delusions of grandeur.
There is also not the slightest doubt that he is prone to outbursts of rage that are not appropriate, to the ‘provocation’ and entirely inappropriate to the position he holds.
Let me walk you through some of the medical terms in language you can understand.
 
The ‘Bible’ of Psychiatry, the DSM (Diagnosis and Statistical Manuel of Mental Disorders) now in its 4th Edition, which is about to be updated to the 5th Edition, defines 6 subtypes of delusions. The most important one here is the Grandiose subtype.
 
Grandiose delusions (GD)
Grandiose delusions are states where the person believes that he/she is the greatest, richest (it might actually be true here), and/or the most intelligent person ever. There is an inflated opinion of power, knowledge, and identity. They are characterised by fantastical beliefs that one is famous, omnipotent, and very powerful (which might not be a delusion in this case). They often have a supernatural or science-fiction theme.
GDs occur in a wide range of mental disorders including manic states, schizophrenia, substance abuse and some medical conditions.
 
மருத்துவர் செனிவிரட்னே அவர்கள் கோத்தபாயவின் பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு அதன் தாக்கத்தை, கோத்தபாயவுக்கு இருக்கக்கூடிய, மருத்துவ உதவியுடன் அணுகவேண்டிய பிரச்சனைகள் என்று அவரது துறைசார் அறிவின் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். இந்தச் செய்தி நிச்சயம் அரசியல் ரீதியாக எந்த மாற்றத்தையும் கொண்டுவருமா தெரியவில்லை. ஆனால், தமிழர்களின் மனோநிலை இச்செய்தி குறித்து யாவரும் அறிந்ததே.
 
 

செப்டம்பர் 09, 2012

கிழக்கு மாகாணத்தேர்தல் முதல் வரலாற்று இந்திய அறிவுசீவிகள் வரை

 

சில விடயங்களைப் பார்க்கும் போதும் சரி, கேட்கும் போதும் சரி உடனடியாக ஆழ்மனதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு உருவாகும். அதுதான் உண்மையானது. பின்னர் அந்த விடயங்களை அறிவு ஏற்கனவே அதுகுறித்த மனப்பதிவுகளுடன் ஒப்பிட்டு அதற்குரிய விடைகளை கண்டுபிடிக்கும். அதுபோல், என்னை படித்ததும், பார்த்ததும் பாதித்த விடயங்கள் சில.
 
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான தொடர்பினையும் நட்பையும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள் அறிவுஜீவிகள். இந்திய மெளரிய வரலாற்றுப் பேரொளி ரொமிலா தாப்பர் முதல் இலங்கை ஜனாதிபதி வரை இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான பந்தம் புத்தரின் பெயரால் அரசியல் தேவைகள் கருதி நிகழ்ச்சி நிரல்களாகின்றன. இலங்கை ஜனாதிபதி இந்தியாவின் மத்திய பிரதேசத்துக்கு புத்தர் சம்பந்தமான ஒரு அமைப்பை தொடங்கி வைக்க அழைக்கப்பட்டிருக்கிறார். அவரை பாரதீய ஜனதா கட்சியின் சுஷ்மா சுவராஜ் தான் அழைத்தார் என்றும், அவரோ இல்லை இந்திய வெளியுறவுத்துறையை மீறி எதிர்க்கட்சியின் சார்பாய் தான் அவரை அழைக்க முடியாதென்றும் கண்ணாமூச்சி அரசியல் விளையாட்டுகள். இலங்கையும் இந்தியாவும் நட்போ, நட்போ என்று கூவிக்கூவி விற்கிறார்கள் இலங்கை குறித்த  செய்திகளில்.


இதற்கிடையே தமிழ்நாட்டில் இலங்கையிலிருந்து வந்த சுற்றுலாப் பிரயாணிகள் குறித்த சர்ச்சை, இலங்கை காற்பந்து அணியின் பயிற்சிக்கு அனுமதி மறுத்த தமிழக முதல்வரின் அரசியல் ஸ்டண்ட் என தமிழகச் செய்திகளுக்கும் குறைவில்லை. இந்த நிகழ்வுகளுக்கும், செய்திகளுக்கும் அரசியல் கட்சிகள் சார்ந்த, சாராத விமர்சங்கள் கண்டனங்களுக்கு மத்தியில் இந்தியாவின் பத்திரிகையான Outlook India ஒரு பொருத்தமான கட்டுரையை வெளியிட்டிருந்தது ஆறுதல். அதில் இந்து பத்திரிக்கையின் இலங்கை அரசுக்கான ஆதரவு குறித்த முகமூடியை கிழிக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்கு இடம் தர மறுத்தது என தமிழகமுதல்வர் ஜெயலலிதா மிகமோசமான முறையில் சிங்கள அரசு சார்புப் பத்திரிகையான லக்பிம வில் கேலிச்சித்திரம் மூலம் எள்ளிநகையாடப்பட்டிருக்கிறார். இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் செயற்திறனற்ற மந்திரிப்பதவி குறித்து அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்க அதற்கு அமெரிக்காவிடமிருந்து மன்னிப்பு எதிர்பார்க்கிறது இந்தியா. லக்பிம கேலிச்சித்திர விடயத்தில் மன்மோகன் சிங், ஜெயலலிதா இரண்டுபேருமே மனிதநாகரீகப் பண்புகளுக்கு அப்பாற்பட்டு, பத்திரிகை தர்மம் மீறி சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன!

முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் முள்ளிவாய்க்கால் முடிவில் தமிழர்களின் இடுக்கண் களைந்தவர்கள் அல்ல. இருந்தும் தற்போதைய தமிழகமுதல்வர் குறித்த லக்பிம கேலிச்சித்திரம் பார்த்தமாத்திரத்தில் மனதை தாக்கியது. இந்தியாவின் ஒரு Powerful Chief Minister ஒருவருக்கே இந்த நிலை என்றால், என் ஈழத்து தாயகளும் சகோதரிகளும் சிங்களக்காடைகளின் கைகளில் என்னென்ன கொடுமைகளை சந்தித்திருப்பார்கள் என்றுதான் மனதிற்குள் ஓடியது. இனி இது குறித்த அரசியல் நிகழ்வுகளை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஜெயலலிதாவை உசுப்பேத்தி சிங்களர்கள் எதையாவது சாதித்தால் பார்க்கலாம். இதெல்லாம் தமிழக கட்சி அரசியல் வளர்க்கவும், தேர்தலில் வாக்குகளை கவரவுமே உதவுமேயன்றி ஈழத்தமிழனுக்கு ஏதாவது நனமை நடக்குமா என்பது சந்தேகமே!

இது தவிர சுப்ரமணிய சுவாமியின் ஒரு பேட்டி, காணொளி காணக்கிடைத்தது. வழக்கமாக இவரது அகம்பாவமான பேச்சு யதார்த்ததையும் மீறி எரிச்சலூட்டுபவை. இருந்தும் அவர் அப்படி என்னதான் சொல்கிறார் என்று அவருடைய தமிழில் கேட்டேன். எனக்கு புரிந்தது அவர் இந்தியாவில் இந்துமறுமலர்ச்சி உருவாக்கப்பட வேண்டுமாம். இன்னொரு விடயம் ஏதோ இவருடைய வீட்டு சொத்து ஈழம் போலவும் அதை நாங்கள் கேட்பது போலவும் ஒரே அல்டாப்பு! அடுத்து அவர் சொன்னது இந்தியாவில் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்றார். இந்தக் கூற்று நிறையவே யோசிக்க வைத்தது. இந்திய வரலாற்று ஆசிரியரான ரொமிலா தாப்பர் அம்மையாரை மேற்கோள் காட்டி ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமவும்; சில வரலாற்று தடயங்கள், குறிப்புகளை ஆதாரங்களாக காட்டி BBC தொலைக்காட்சியும் தற்போதைய இந்தியாவில் ஆரியர் வருகையும் அதன் அரசியல் தாக்கம் குறித்தும் நிறையவே எழுதியும், காண்பித்தும் இருக்கிறார்கள். இடையே சுப்ரமணியசாமி எதை மறுக்கிறார்!

இருவரது, ரொமிலா தாப்பர், பிபிசி ஆராய்ச்சிகள், கணிப்புகளின் படியும் ஏறக்குறைய கி.மு.2500ம் ஆண்டளவில் தான் இந்தியாவில் ஆரியர் வருகை நிகழ்ந்தததாக சொல்கிறார்கள். கி.மு. 2500, 2400, 2300, 2200........தற்போது 2012 என்று கணக்குப் பார்த்தாலும் மொத்தம் 4512 வருடங்கள் ஆகிறதே. இதெல்லாம் இப்போ தேவையில்லாத கணக்கு தான். ஆனாலும் சு. சாமி அநியாயத்துக்கு ஞாபகப்படுத்துறார். தமிழர்களின் வரலாறு குறித்து சு.சாமிக்கு தெரியாதா அல்லது அதை மறுக்கிறாரா! இந்தியாவில் 65,000 வருடங்களுக்கு மேலான பழங்குடி தமிழர்கள் என்பதை ஏன் சு.சுவாமி உணரக்கூட மறுக்கிறார். தவிர, பேட்டி காண்பவர் கேள்விக்குக் கூட மதிப்பளிக்காமல் இடையே குறுக்கிட்டு தன் ஆதிக்கத்தை பேச்சிலும் திணிக்கும் ஒரு Intellctual, அறிவுசீவி!! சு. சுவாமியின் அறிவுரையின் பேரில் இலங்கையில் பெளத்தமறுமலர்ச்சி நடக்குமோ என்றும் பயம் ஒருபுறம். அது தான் இலங்கையில் வேறு பெயரில் நடக்கிறது என்பதும் யதார்த்தம்.
 
சரி, ஈழத்துக்கு வருவோம். இலங்கையின் வடமத்திய, கிழக்கு மற்றும் தென்மேற்கு (சப்ரகமுவ) மாகாணசபைத்தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய எதிர்பார்த்தது போலவே இருக்கு. அதாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டி இருக்கிறது. கிழக்கு மாகாணசபத்தேர்தல் முடிவுகள்,
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஆளும் கட்சி) 14 இடங்கள்
தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) 11 இடங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி (எதிர்க்கட்சி) 4 இடங்கள்
 

தேர்தல் முடிவின் பின்னர் இரா. சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் ஆதரவை வழங்கியிருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் உடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்கிறார்கள். தவிர, ஆளும்கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். சரி, அப்படியானால் முடிவு ஓரளவு ஊகிக்க கூடியதே. 
 

 இது புள்ளிவிவர தேர்தல் முடிவுகள். இதை விட உள்ளரசியல் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் தெரியவில்லை. கிழக்கில் உள்ள மாகாணசபைக்கு ஒரு அரச அதிபரையோ அல்லது சமூகசேவகரையோ (விதானை) நியமனம் செய்யவோ; கல்வி பணிப்பாளரையோ, ஆசிரியரையோ கூட நியமிக்கும், இடமாற்றம் செய்யும் அதிகாரங்கள் கிடையவே கிடையாது. காரணம், அது தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணம். இப்படி எந்த அதிகாரமுமற்ற ஒரு சபைக்கு இனி கொஞ்சம் பிச்சை போடுங்கள் என்று தமிழர் தரப்பு கூட்டாக மாகாணசபை ஆட்சியமைத்தால் கெஞ்சலாம். இது தவிர வேறென்ன எதிர்பார்க்கமுடியும். ஆனாலும் ஏதோ தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தது ஓரளவு தமிழர்களின் வெற்றி என்றே சொல்லவேண்டும்.
 
கிழக்குமாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றது எப்படி என்பது ஜனநாயகத்தின் பிதாமகர்களுக்கே வெளிச்சம். ஆனாலும், இனி இலங்கையின் ராஜபக்‌ஷேக்கள் கிழக்கு மாகாணத்தமிழர்கள் தேர்தல் வழி தங்களையே (சிங்கள ஆட்சியாளர்களை) தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து உலகத்துக்கு அறைகூவல் விடுவது என்னவென்றால் பாணியில் பேசுவார்கள். இனி இலங்கையின் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம், மனித உரிமைகள் மீறல் எதுவும் இறுதி யுத்தத்தில் நடைபெறவில்லை, இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பார்கள். இனி வரப்போகும் மனித உரிமைகள் சபைக்கூட்டத்தில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட ஏமாற்று தீர்மானம் ஒன்றுக்கு எப்படியும் பதில் சொல்ல வேண்டும். அதற்கு இந்த தேர்தல் முடிவுகள் ஓரளவிற்கு பயன்படும்.

இந்த தேர்தல்கள் குறித்த சர்வதேச கண்ணோட்டம் (சர்வதேசம் என்றால் அமெரிக்கா என்று கொள்ளவேண்டும்) எவ்வாறு என்று தேடிப்பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளியிடும் முன்னமே New York Times ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் ரெண்டும் கெட்டானாக எழுதுவது போல் எழுதி கிழக்குமாகாண தமிழ் மீனவர் ஒருவரின் ரெண்டு வரி கருத்தும் இருந்தது. அதை சேமித்து வைத்து திரும்பச்சென்று பார்த்தால், கிழக்குமாகாணசபைத்தேர்தல் முடிவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவு என்று உள்ளூற சந்தோசப்பட்டு எழுதியிருக்கிறது அல்லது update செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக மூன்றாம் உலக தேர்தல் முடிவுகள் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக அமைந்தால் அது ஜனநாயகமான தேர்தல் முடிவுகள். இல்லையென்றால் அது ஜனநாயகத்தேர்தல் இல்லை. New York Times தேர்தல் முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை என்று எழுதாமல் இருப்பதால் இதை என்வரையில் ஜனநாயகத்தேர்தலாகவே கொள்ளவேண்டியிருக்கிறது துர்ப்பாக்கியம். New York Tims, Washington Post இரண்டு செய்தித்தளங்களும் கிழக்கில் 1948 ம் ஆண்டுக்குப் பிறகு திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்களால் தமிழர்களின் மக்கட்தொகை கட்டமைப்பு மாற்றப்பட்டு சிங்களர்களும் பெரும்பான்மை ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுவதாக செய்தியில் குறிப்பிடுகிறார்கள்.
 
தவிர, நோர்வேயுடன் சேர்ந்து முள்ளிவாய்க்கால் முடிவிற்கு வித்திட்ட அமெரிக்காவின் ரோபர்ட் ஓ பிளேக் இலங்கை சென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார் என்று செய்தியும் உண்டு. மனித உரிமைகள் சபையின் நவிப்பிள்ளை என்னும் நவநீதம்பிள்ளையும் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கை மீதான விவாதம் மனித உரிமைகள் சபையில் நடக்கும் முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து இலங்கைக்கு சென்று நிலைமையை நேரில் பார்ப்பாராம்.
 
இதெல்லாம் இலங்கையில் தமிழர்கள் எதிர்காலம் குறித்த தற்காலச் செய்திகளைப் படித்ததன் விளைவில் உண்டான கருத்துகள். இவற்றுக்குப் பிறகு ஈழத்தமிழனுக்கு எந்த நீதியும் நியாயமும் உடனே கிடைக்கப்போவதில்லை என்பதை தவிர இதில் சொல்ல ஏதுமில்லை. புத்தரை நடுநாயகமாக்கி இலங்கையும் இந்தியாவும் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பை, தொடர்பை கொண்டது என்று ரொமிலாக்களும், சுஷ்மாக்களும் நிருவமுற்படுவார்கள். சம்பந்தப்பட்ட ஈழத்தமிழனுக்கு குரல் இல்லை. ஆனால், ஈழத்துக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத சு. சாமி ஆஜராகி எரிச்சலூட்டுவது போன்ற நிகழ்ச்சிகள இப்போது வேடிக்கை பார்ப்பதை தவிர வேறேதும் இல்லை. தமிழகமுதல்வர் பற்றிய அவதூறு கேலிச்சித்திர விளைவுகளையும் பொறுத்திருந்து பார்க்கலாம். மொத்தத்தில் அறிவுசீவிகள் கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள்.
 
தமிழராய் இருப்பதில் தற்போதைய நிலை பொறுத்திருந்து பார்ப்பதுதான் என்பது விதிக்கப்பட்ட விதி.
 
Image Courtesy: Google
 

செப்டம்பர் 07, 2012

சொல், பொருள், சுயம்!

உயிரின் தரிப்பிடம்!

 
 


கடந்துபோன காலம், பழகிக்கழித்த மனிதர்கள், இறந்துபட்ட நிகழ்வுகள் எல்லாவற்றிலும் எதையோ தேடிக்கொண்டிருந்தேன் ஞாபகமாய். எல்லாமும் என்னை மட்டுமே எனக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. அந்த நினைவுகளின் வெளிகளில் என்னை நானே ஆட்கொள்ளும் தருணங்கள் வெறுமையா, ஏகாந்தமா, அல்லது ஏதுமற்ற ஏதோவொன்றாய் உயிர் தரிக்கும் நிலைத்தடமா, சொல்லத்தெரிவதில்லை! இருந்தும், என் உயிரின் தரிப்பிடம் மனிதசஞ்சாரமற்ற மனவெளி என்றால் பிடிக்கவே செய்கிறது.

 

வெற்றுச்சொற்களின் ஒவ்வாமை!சொல்லுக்கும் பொருளுக்குமிடையே புரியாத அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது என்கிற வேலையற்ற வேலை ஒப்புவதில்லை. Ignorance is bliss.

நிதானமாய் வார்த்தைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து அகமும் புறமும் ஒரே பேச்சாய் நேர்படப் பேசப்பழக வெற்றுச்சொற்களின் ஒவ்வாமையில் தொலைவதில்லை சுயம்.


இதை நான் முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்... அதாவது....

“....சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே அனேகம் மிஸ்மேச்சிங் இருக்குன்னு தத்துவஞானிகள் பறைகிறார்கள்.” இதைச்சொல்லி எனக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் On Mind and Thought என்னும் கட்டுரை வடிவிலான ஓரு உரையை வாசிக்க கொடுத்திருந்தார். இதை வாசித்துவிட்டு எனக்கு புரிந்ததை எழுதலாம் என்று தோன்றியது.

அவ்வப்போது நானும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்தை படிப்பவள் தான். அவருடைய எழுத்து தத்துவவங்களாகவோ, ஆன்மிகமாகவோ அல்லது கருத்துருவாக்கமோ கிடையாது. படிப்பவர்களை தங்களைத்தாங்களே கேள்வி கேட்டு சுயவிசாரணை செய்யும் பொருட்டு ஈற்றில் கேள்வியோடு கூடிய ஏதோவொரு பிடிப்பை விட்டுச்செல்லும். அகவுலகம் புறவுலகம் இரண்டுக்குமிடையே எப்படி ஒருவர் தன்னைச் சமப்படுத்துவது என்கிற விட்டுக்கொடுப்புகளை கற்றுக்கொடுப்பதில்லை. நீதான் சமூகம். நீ தான் உலகம்.  உன்னை கேள்வி கேள். உன்னிடமிருந்து பதிலை கண்டுபிடி. உனக்குள் தெளிவை உண்டாக்கு. இதுதான் அவர் உண்மையை, உள்மனவிழிப்புணர்வை ஒரு மனிதன் தன்னிடத்தே உருவாக்க, சுயத்தை கட்டமைத்துக்கொள்ள தேவை என்கிறார்.

நான் மேலே சொன்னது ஒரு சொல்லுக்கு அகராதி விளக்கம் (Definition) இருக்கும். அது உலகம் பெரும்பாலும் பொதுவாக ஒத்துக்கொண்டது. ஒரு சொல்லின் அர்த்தம் (Meaning) என்பது தனிப்பட்ட அனுபவ, அனுமானங்களில் அடிப்படையில் புரிந்து அர்த்தப்படுத்துவது. ஒரு சொல்லின் விளக்கத்தை மட்டும் கருத்திற்கொண்டு மேலோட்டமாய் பேசாமல், ஒரு சொல்லை அதன் அர்த்தத்தை உணர்ந்து உள்ளும் புறமும் இசைவாய் பேசும்போதும் வெற்றுசொற்களில் உணமைத்தன்மை தொலைவதில்லை. போலியான வார்த்தைகளில் எங்களை நாங்களே தொலைக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. மனிதர்களின் தொடர்பாடலில்(Communication) வார்த்தைகளின் பொருள் புரிதலின் பொறுட்டு வேறுபடும். அவ்வாறு வேறுபடும் பட்சத்திலேயே முரண்பாடுகள், குழப்பங்கள் தோன்றுகின்றன.
 
நான் சொல்ல வந்தது ஒருவர் தனக்குள்ளே அகமும் புறமுமாய் வார்த்தைகளால், எண்ணங்களால் வேறுபட்டு, பிளவுபட்டு தன்னோடு முரண்படாமல் இருப்பது என்பது!! தனக்குள்ளே முரண்படாதவர் மட்டுமே மற்றோர்க்கு வார்த்தைகளின், எண்ணங்களின் தெளிவை, தங்கள் உள்ளக்கிடக்கைகளை குறைகளின்றி உணர்த்தமுடியும். தொடர்பாடலில் கருத்தானது தொடர்பாடுபவர்களால்  புரிந்துகொள்ளப்படவேண்டும். தற்கால தொலைத்தொடர்பு யுகத்தில் அது எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்பதும் சந்தேகமே! அகராதியின் பொருள் கொண்டும், அதன் வழியே ஏற்கனவே உள்ள அனுமாங்களோடு பொருத்திப்பார்த்து பேசுபவர்களிடம் என்னை அதிகம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பதுண்டு. அதான், Ignorance is bliss!!

ஜே.கே. எப்போதும் சொல்வது சமூகமாற்றத்தின் முன்னோடி தனிமனித மாற்றம். அதாவது அகப்புரட்சி என்று வலியுறுத்துகிறார். அதையே தான் On Mind and Thought என்கிற சொற்பொழிவிலும் சொல்லவருகிறார் என்பது என் புரிதல். அதைத்தவிர அவர் சொல்லுக்கும் பொருளுக்குமிடையே வேறுபாடு உள்ளது என்பதை விளக்கமுற்படவில்லை. தொடர்பாடும்போது குறைபாடுகள் தவிர்க்கப்படவேண்டும் என்கிறார். அவர் குறிப்பிடுவது “And to be able to observe impersonally, without any opinion, judgement, to observe in such a manner demands complete freedom, otherwise you cannot possibly observe.”

ஜே.கே. தன் கட்டுரையில்/உரையில் Freedom என்கிற வார்த்தையை உதாரணமாய் கொண்டிருந்தார். சுதந்திரம்/விடுதலை என்பதன் பொருள் ஒவ்வொருவரின் புரிதலிலும் வேறுபடலாம் அல்லது வேறுவிதமாய் விளக்கம் கொடுக்கலாம். விடுதலை என்ற சொல் உள்ளீடாக நோக்கப்பட வேண்டும் என்கிறார். ஒரு வார்த்தையோடு அதற்குரிய தோற்றம், குறியீடு, தீர்மானம் என்பவற்றின் அடிப்படையில் ஒருவர் பேசலாம். ஆனால், அவை குறிக்கும் அர்த்தம் தவறவிடப்படும்போது தொடர்பாடல் பொருத்தமற்ற ஒன்றாகும் என்று குறிப்பிடுகிறார். ஜே.கே.வின் உரைகளில் சுயமுகதரிசனம் குறித்த கேள்விகளும், அதற்கு பதில் சொல்ல விளைந்து இன்னோர் கேள்விக்கு உள்ளாகி, கேள்விக்கணைகளால் துளைக்கப்படுவீர்கள். கீழே ஒரு உதாரணம்.
 
"When you listen to those words, do you translate it into an abstraction? You understand what I mean by an abstraction - draw from listening to that statement a conclusion, which is an abstraction, and therefore you are not listening to the statement but listening to the abstraction.

be sensitive to the truth of that statement.

Do you, irrespective of your environment, irrespective of the speaker, irrespective of any influence, impression, demand, do you see the truth of it for yourself? If you do then what is the state of your mind? What is the state of the mind that sees the truth of a statement? ------ Is it an intellectual conviction and therefore not truth?
 
Life is serious and it is only the man who is really serious knows how to live, not the flippant, not the ones who are merely seeking entertainment."
 
அடுத்து உரையாடப்படுவது Listening and Knowledge! தொடர்பாடலில் செவிமடுத்தல் என்பதும் ஒரு முக்கியமான அங்கம். ஞானம், புலமை என்பது எப்படி தொடர்பாடலுக்கு இடையூறாக அமைய வாய்ப்புண்டு என்றும் கூறுகிறார். ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு உரை! ஜே.கே.வின் கட்டுரையில் எனக்கு புரிபடாத ஏதாவது கோணம் இருந்தால் அதை தெரியப்படுத்துங்கள். ஜே.கிருஷணமூர்த்தி அவர்களின் On Mind and Thoght கட்டுரையை பகிர்ந்துகொண்ட நண்பருக்கு என் நன்றிகள்.
 
வார்த்தை, பொருள் என்ற யோசனையில் இருந்தபோது மனதில் தோன்றியது இது.

வார்த்தையெனும் வாள் கொண்டு....!

 

 
என்னுடைய கோபம்
வார்த்தைகளோடு இல்லையென்றாலும்
அவற்றோடுதான் நான் மெளனவிரதம்.
மனவெளியில் மெளனசஞ்சாரம் கலைத்து
என்னையறியாமலே எனக்குள் என் இருப்பு உணர்த்தப்பட
இருகூர்மருங்குடை வார்த்தைகளின் வாளோடு
நான் வியாபித்திருந்தேன்
 
 
 
 
உணர்வுகளால் பிணைக்கப்பட்ட சமூகவிலங்கு தான் மனிதன். மனித உணர்வுகள் எதுவாயினும் அவை அதிகமாக உணர்த்தப்படுவது வார்த்தை என்னும் ஊடகத்தின் வழியே. வார்த்தைகளுக்கு தனிச்சக்தி உண்டு. அது மனித மனங்களை பண்படுத்த மட்டும் பயன்படட்டும்!!
 
Image Courtesy: Google.
 
 

செப்டம்பர் 04, 2012

ஜெயமோகனும் அறமும்!

 
 
தமிழ்நாட்டு எழுத்தாளர் ஜெயமோகன், ஞாநி போன்றோர் எழுத்தை படிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கிட்டியதில்லை. படிக்க அதிகம் ஆர்வம் காட்டியதுமில்லை. ஒருவேளை இலக்கியம் என்கிற பெயரில் ஈழம், ஈழவிடுதலை குறித்த இவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த எண்ணங்கள் விமர்சனங்கள் வழி எனக்குள் பதிந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஞாநியின் தவிப்பு தமிழீழவிடுதலைப் புலிகள் குறித்த அரசியல் விமர்சனப்பார்வையின் கதைவடிவமும் சுருக்கமுமே என்பதை விமர்சனங்கள் வழி தெரிந்துகொண்டேன். ஜெ. மோ. வின் ஈழம் குறித்த கருத்துகள் இலக்கியம் என்கிற வரையறையும் தாண்டி அரசியலாகிப்போனது அவர் எழுத்துக்கே இழுக்கு. பழையதை கிளறவேண்டாமென்றாலும், காலம் அதைக் கடந்துபோக அனுமதிப்பதில்லை.

ஜெயமோகனின் அறம் கதைத்தொகுப்பு ஈழம் பற்றியதல்ல. அதனால் துணிந்து படித்தேன். எல்லாக்கதைகளும் படித்து முடிக்கவில்லை இன்னும். அறம் என்னும் ஒரு சிறுகதை படித்தேன்.

நான் ஜெ.மோ.வின் எழுத்தை, அதுவும் சிறுகதைகளை படிப்பது இது தான் முதல் தரம். அவருடைய எழுத்தைப் படிக்குமுன்னமே அவரது எழுத்துக்குறித்து நிறைய பாரபட்சமற்ற விமர்சனங்களைப் படிக்க நேரிட்டதால் அதிகம் எதிர்பார்ப்புகளின்றியே அறம் கதையையும் படித்து முடித்தேன்.

எழுத்தாளர்கள் என்றாலே அறிவாளிகள், அதுவும் ஜெ.மோ. எழுத்தில் சூட்சுமமாய் கருத்துகளைத் திணிப்பவர் என்கிற அவர் எழுத்துப் பற்றிய விமர்சனங்கள் உள்ளுக்குள் எங்கோ ஒர் மூலையில் ஓடிக்கொண்டே இருந்தது வாசிப்பினூடே! தவிர்க்கமுடியாததாய்ப் போனது. மேலும் அவர் கதைகள் படிக்க நேரிட்டால் என்னுடைய இந்த முன்முடிவுகளின் தாக்கம் குறைந்து போகலாம் எதிர்காலத்தில்

அறம் என்னும் கதையின் வழி அவர் எழுத்துப்பற்றி என் கருத்தை சொல்லவேண்டுமானால், Linguistic என்று தோன்றியது. மொழியின் நாடி பிடித்து  ஒரு சமூகத்தின் மனட்சாட்சியை அறம் குறித்து உலுக்கிப்பார்க்கிறது. மொழியின் ஆளுமை நிறையவே தெரிகிறது. சில இடங்களில் ஜெயமோகனா, சுயபிரஸ்தாப மோகனா என்று புருவங்களை உயர்த்தவைக்கிறார்.

You paint a picture with words என்று சொல்வார்கள். அது நல்லாவே கைவரப்பெற்ற எழுத்து. வார்த்தைகளில் காட்சியையும், மனித உணர்வுகளையும் கச்சிதமாக கவ்வியிருக்கிறார். பெரிய எழுத்தாளராச்சே! :) சில இடங்களில் காட்சிகள், உணர்வுகள், படிப்பவரின் எண்ணவோட்டம் எல்லாவற்றையும் ஒருசேர கொண்டு சேர்க்கும் Pitch perfect prose! சிறப்பு. எனக்கு பிடித்த இடம் இது.

“என் வயத்தில அடிச்ச நீயும் உன் பிள்ளகுட்டிகளும் வாழ்ந்திடுமா...வாழ்ந்தா சரஸ்வதி தேவடியான்னு அர்த்தம்ன்னு சொல்லிட்டே...” படிப்பவர் அந்தக்கதாபாத்திரத்தின் வலியை அடிவயிற்றில் பகீரென உணரவைக்கும் இடம்.

ஜெ. மோ.விடம் அறம் கதையில் எது மிஸ்ஸிங் என்றால் Simplicity, எளிமை! என்று தோன்றியது! சில இடங்களில் வார்த்தைகளை திருகுகிறாரோ என்றும் குழப்பம். வார்த்தைகளைத் திருகி கருத்தை திரிப்பதும் மொழிசார் இலக்கியமோ! நானறியேன். தவிர நிறைய quotes, அதுவும் சிறுகதையில். எனக்கு ஒத்துவராத ஒரு விடயம்.

கதையின் நீதி பற்றி என்ன சொல்வது! நான் தப்பி பிழைச்சு வாழ்ந்த போரியல் வாழ்வின் அறம் என் வீட்டுப்பெண்கள், என் சமூகத்தில் வாழும் பெண்கள் சிங்களின் சப்பாத்துக்கால்களில் மண்டியிட்டு வீட்டு பிள்ளைகளுக்கு, ஆண்களுக்கு, கணவன், மகன், பேரனுக்கு உயிர்ப்பிச்சை கேட்பது்; பத்து வயது சிறுமி உட்பட பெண்களின் கற்பை காப்பாற்ற சிங்கள காடைகளின் காலில் விழுந்து இறைஞ்சுவது என்பவை தான். என் அறம் குறித்த புரிதல் வேறு. அது ஜெ. மோ. வுக்கும் புரியாதது என்று இந்திய ராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் ஆற்றிய சேவையை அவர் எழுத்தில் படித்தபோது தெரிந்து கொண்டது. ஒரு இனத்தின் வலியை தன் எழுத்தில் பிரதிபலிக்கத் தெரியாவிட்டாலும் குறைந்தபட்சம் அதை கீழே போடாமல் இருந்தாலே போதுமே. ஆனால், அவர் எழுத்து அதைச்செய்யத்தவறிவிட்டது.
 
Image Courtesy: Google.