ஆகஸ்ட் 29, 2012

முஸ்லிம்களும் கிழக்குமாகாணத்தேர்தலும்

 
பார்த்தவைகளை, படித்தவைகளை, கேட்டவைகளை உள்வாங்கி அது குறித்த எண்ணங்களின் பிரதிபலிப்பை எழுத்தில் கொண்டுவருவது ஒரு தனிக்கலை. அது சாதாரண அன்றாடவாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களின் நடவடிக்கைகள் முதல் நம் கண்களில் சிக்கி மனதில் பதிந்துபோகும் காட்சிகள், செய்திகள் வரை. அதற்கும் ஒரு படி மேலே போய் படித்த அரசியல் செய்திகளை உள்வாங்கி அதை ஆராய்ந்து எழுத தகவற்பற்றாக்குறை தவிர்க்கப்பட தொடர்வாசிப்பு இருக்கவேண்டும். செய்திகளை செய்திகளாகவே பகிர நினைத்து தோற்றுப்போவதுண்டு. அரசியல் நிகழ்வுகள் மிகப்பெரும்பாலான சமயங்களில் இயல்பானவையல்ல. ஆதலால், அரசியல் நிகழ்வுகளுக்குரிய அடிப்படை தத்துவங்களும், காரணங்களும், காரியமாய் செயற்படுபவர்கள் உள்நோக்கு பற்றியும் அடிப்படை அறிவு கொண்டு அந்த நிகழ்வுகளின் தகவுகள் அடிப்படையில் எழுதி, அதைப் படிப்பவர்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கவெண்டும் என்பது என் கருத்து. இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறாவிட்டால் சிலவிடயங்களை எழுதமுயன்று முடியாமற்போவதுண்டு. எழுதிக்குழப்புவதிலும் எழுதாமை மேல் என்று கடந்து போவதுண்டு.

இப்படி நான் அடிக்கடி கடந்து போகும் விடயம் ஈழத்தில் வட-கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகம் பற்றியது. இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய நுண்ணரசியல் பதிவு என்பது கல்லில் நார் உரிக்கும் ஒரு முயற்சி. ஆனாலும், தற்போதைய ஒரு சூழலில் அது முடியாது என்று ஒதுங்கமுடியவில்லை. இதே தளத்தில் இதற்கு முன் முஸ்லிம் சமூகம் பற்றி எழுதிய ஒரு கட்டுரை.
 
தற்காலத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களை மதரீதியான ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்த முற்பட்டு தாங்கள் இலங்கையில் ஒரு தனியான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளப்படவேணுமென்று விரும்புகிறார்கள். அதற்குரிய நதிமூலம், ரிஷிமூலம் பார்த்தால் அது விளக்குவதற்கு சிரமமான விளங்கமுடியாப் பொருள் அல்ல என்பது எல்லோருக்கும் புரியும். இருந்தாலும், சர்வதேச சமூகம் என்கிற அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் பொருளாதார நலன்களும், உலகளாவிய ரீதியில் நிகழும் இஸ்லாமிய பண்பாட்டுப் புரட்சியும் தான் இலங்கை முஸ்லிம்களின் அடையாளப்படுத்தலின் அம்சம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
 
 
இலங்கையில் கிழக்குமாகாணத்தேர்தல் காரணமாக அவ்வப்போது நான் விரும்பாவிட்டாலும் அதுசார்ந்த அரசியல் கண்ணோட்டங்களை, கலந்துரையாடல்களை கடந்துவரவேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாணத்தேர்தலில் இலங்கை சுதந்திரக்கட்சி, முஸ்லிம் கட்சிகள், தமிழர்கட்சிகள் இவற்றில் யார் பெரும்பானமை வாக்குப்பெறப்போகிறார்கள் என்பதில் தமிழ் பேசும் முஸ்லிம் நலன்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பெரும்பாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் பேசும் அரசியல் ஆய்வாளர்கள் பொதுவாக ஒத்துக்கொள்ளும் ஒரு விடயம் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் எப்போதும் சிங்களப்பேரினவாத அரசியல்வாதிகளுடன் இயைந்து செயற்பட்டு தங்கள் நலன்களை மட்டும் முன்னிறுத்தியவர்கள் என்கிற ஒரு விடயம்.

இந்த இடத்தில் யாராவது மாற்றுத்திறனாளிகள், மதியுரைஞர்கள் கருத்து சொல்ல வேணுமென அவா உந்தித்தள்ளினால் மேலேயுள்ள இணைப்பை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அந்த இணைப்பு படிக்காமல் நான் சொல்லவரும் விடயமும் அதிலுள்ள நியாயமும் புரியப்போவதில்லை.
 
முஸ்லிம் சமூகம் பற்றிய வரலாறு குறித்த விடயத்தில் ஒத்தகருத்தைக் கொண்டிருந்தாலும் கிழக்குமாகாணத்தேர்தலில் முஸ்லிம்களுடன் தமிழர் உரிமைகளுக்காக போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் (ராஜபக்‌ஷேவின் எடுபிடி தமிழ்க்கட்சியல்ல) ஒன்றிணைந்து போட்டியிட வேண்டுமா என்கிற மிகச்சிக்கலான ஒரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட கேள்வி அது. அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனியாக போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் விளைவுகள் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரியும்.

கிழக்குமாகாணத்தேர்தல் அரசியல் பலப்பரீட்சையாக மாற்றப்பட்டு ஈற்றில் தமிழர்களாயினும், தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஆயினும் (தமிழ் பேசினாலும் தாங்கள் முஸ்லிம்கள், தமிழர்கள் அல்ல என்று சொல்வோர் ஏராளம்) தோற்றுப்போனால் பெளத்தசிங்களப்பேரினவாதம் இன்னும் மூர்க்கமாக திட்டமிடப்பட்டு, கிழக்கில் வாழும் மக்கட்தொகைக் கட்டமைப்பும் மேலும் மாற்றப்பட்டு சிங்களசமூகம் அரசியல் பெரும்பான்மை வகிக்கும் நிலைக்கு தள்ளப்படும் பரிதாபகரமானதும், கசப்பானதுமான நிலை உருவாகும் என்பது மட்டும் உறுதி.

கிழக்குமாகாணத்தேர்தல் வெற்றியை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற தமிழன் அழியக்காரணமானவர்களும் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருக்கிறார்களாம். காரணம், கிழக்கின் திருகோணமலைத்துறைமுகம். இதற்கிடையே வழக்கம் போல இந்தியாவின் இலங்கைப் படைகளுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் ராணுவப்பயிற்சி குறித்த தவிர்க்கவோ, தாண்டிச்செல்லவோ முடியாத செய்திகளும் உண்டு. ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமை விடயத்தில் இந்தியா தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்கிறது என்பது ராஜபக்‌ஷே, இந்திய காங்கிரஸ், சீனா முக்கோணக்காதல் கதையில் பல்லிளிக்கிறது. கிழக்கில் ராஜபக்‌ஷேக்கள் தவிர்த்து யார் வெல்லுகிறார்கள் என்பது சுவாரஸ்யமான விடயம். தமிழர்கள் வென்றால் இந்திய-சோனியா காங்கிரஸ் தன்பக்கம் இழுக்கப்பார்க்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை. ஏற்கனவே அவர்கள் சோனியா காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகிறவர்கள் என்கிற பழி உண்டு. முஸ்லிம் கட்சி வென்றால் அமெரிக்காவுக்கு ஒத்துக்கொள்ளாது. ஒருவேளை, முஸ்லிம்கட்சி ராஜபக்‌ஷேவின் ஆட்சிக்கு துணைநின்று தங்கள் நலன்களை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் என்றும் கணிக்கிறார்கள்.

இறுதியாக தமிழன் நிலை யாரையும் பாம்பென்று உதறவும் முடியாமல், பழுதென்று ஒதுக்கவும் முடியாமல்...........!!!


Image Courtesy: Google.
 

9 கருத்துகள்:

இக்பால் செல்வன் சொன்னது…

மதங்கள் மனிதர்களைப் பிரிக்கவே செய்யும் என்பதற்கான ஒரு ஆதாரம் தான், கிழக்கு மாகாணத் தமிழர்கள் - தமிழ் முஸ்லிம்களிம் பிரிவினையைக் காட்டுகின்றது ... !!!

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்பது பழமொழி..

கிட்டத்தட்ட ஆறு லட்சம் தமிழர்கள், ஐந்தரை லட்சம் முஸ்லிம்கள் பிரிந்துக் கிடப்பதால் பயனடையப் போவது சிங்களவர் என்பது உறுதி .. தமிழர்கள் இருக் கூறாகவும், முஸ்லிம்கள் இருக் கூறாகவும் போட்டியிடுகின்றன என நினைக்கின்றேன். இதெல்லாம் ஒரு தேர்தலா ? இதெல்லாம் ஒரு மாகாணசபையா என்றுக் கேட்பதுக் கூட காதில் விழுந்தாலும், ஒன்றும் செய்ய முடியாது .. இதுவும் முக்கியமாகின்றது ..

புத்தளம் மாவட்டத்தில் தமிழர்கள் - முஸ்லிம்கள் - கத்தோலிக்கர்கள் எனப் பிளவுப்பட்டதால். இன்று அங்கு சிங்களவர்களே அதிகமாகிவிட்டனர். இதே நிலை கிழக்கு மாகாணத்துக்கும் வருவது வெகு தொலைவில் இல்லை ...

ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து அங்கு தமிழர்கள் - முஸ்லிம்கள் இருக்க மாட்டார்கள். பலரும் சிங்களப் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருப்பார்கள். சிங்கள கிராமவாசிகள் தமிழர்களின் தாயக நிலத்தை அபகரித்துவிட்டு இருப்பார்கள்.

தமிழர்கள் - முஸ்லிம்கள் புரிந்துக் கொள்ளாதவரை சிங்களவர் காட்டில் மழைதான் !

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!நலமா?ஈழம் குறித்த கலந்துரையாடல்களை உங்களைப் போன்றோர்கள் அத்திபூத்தாற் போல பதிவிடுவதன் மூலமே பகிர்ந்து கொள்ள முடிகிறது.முள்ளிவாய்க்காலுக்கும் அப்பால் இணைய தளங்களில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு தலைவலியாகப் போகிறது என்பதை கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்தே இந்தியா உணரத்தொடங்கியுள்ளது.அப்படியிருந்த போதும் தமிழகத்தின் எதிர்ப்புக் குரல்களையும் தாண்டி நண்பேன்டா என்று இலங்கையுடன் நட்பு பாராட்டுவது தமிழகத்தை கிள்ளிவிட்டு இலங்கை தொட்டிலையும் ஆட்டும் இரட்டைக் கொள்கை மாதிரியே தோன்றுகிறது.தேவைக்கு ஏற்ப நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வசதியிருக்கிறதே!

புலம் பெயர்ந்தும்,தமிழகம் சார்ந்தும் வரும் எதிர்ப்புக்குரலோடு,முந்தைய அனுபவங்கள் தந்த பாடத்தால் இந்தியாவை நம்பாமல் சீனாவை சார்ந்து நிற்பது பொருளாதார ரீதியாகவும்,பாதுகாப்பு ரீதியாகவும் சரியென்று இலங்கை தீர்மானித்திருக்கலாம்.

துவக்கம் முதலே தமிழர்,சிங்களவர்கள் பிரச்சினையென்றே இலங்கைப்பிரச்சினை நோக்கப்படுகிறது.மொழி சார்ந்து தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்று அடையாளப்படுத்தலை விட நாங்கள் முஸ்லீம்கள் என்றே இலங்கை இஸ்லாமியர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழர்களோடு சேர்ந்து குரல் கொடுக்காத படி அவர்களுக்கான குழுமனப்பான்மையோடு விடுதலைப்புலிகளின் காலத்து இடநகர்வு போன்ற நியாயமான காரணங்களும் இலங்கை இஸ்லாமியர்களுக்கு இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.மாறும் கால சூழலில் தமிழர்களோடு சார்ந்து இணைந்து குரல் கொடுத்தால் அவர்களுக்கான உரிமைகளும் மீட்கப்படும்.ஆனால் இலங்கையில் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு தமிழர்களின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலித்தால் தமக்கான பங்கீடு கேட்கவும் அல்லது இலங்கை நலன் சார்ந்த உலக அரசியல் தொடர்ந்தால் இலங்கை அரசோடும் பதவி பகிர்வுகள் என்ற இரட்டை நிலையிலேயே இருக்கிறார்கள்.

தற்போது ஈழத்தவன் மட்டுமே தொடர்ந்து பதிவுகள் செய்து வருகிறார்.நாம் அனைவரிடமும் ஒரு தொய்வு நிலையே காணப்படுகிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

நண்பர் இக்பால் செல்வனின் பின்னூட்டத்தில் சொன்னது போல புத்தள மாவட்டத்தில் தமிழர்கள் குறைந்ததும் ஒற்றை இலங்கையில் தமிழர்களின் வாழ்வு முறையும்,மொழி தனித்துவமும் குறைந்து காலப்போக்கில் தமிழும் அல்லாத சிங்களமல்லாத புது சிங்களத்தன்மையை உருவாகும் என்பதற்கு தென் ஆப்பிரிக்கா,சீசெல்ஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களை குறிப்பிடலாம்.

அடுத்து வரும் ஐ.நா மனித உரிமைக்கூட்டம் இலங்கைக்கு சார்ந்து LLRC யை முறையாக பயன்படுத்தியுள்ளதாகவோ மனித உரிமை மீறல்கள் இருக்கின்றன என்று தொட்டும் தொடாமலும் அறிக்கை வாசிக்குமென எதிர்பார்க்கிறேன்.மூவர் குழுவில் ஒன்றான இந்தியாவின் வார்த்தை ஜாலங்களையும் உற்றுக்கவனிக்க வேண்டியது அவசியம்.

வேர்கள் சொன்னது…

// இறுதியாக தமிழன் நிலை யாரையும் பாம்பென்று உதறவும் முடியாமல், பழுதென்று ஒதுக்கவும் முடியாமல்...........!!!//
என்ன சொல்வதென்று தெரியவில்லை...
உலகில் தற்போது அனாதையான இனம் தமிழ் இனம்

Rathi சொன்னது…

ராஜ நட, வாங்கோ! நான் நலம். நீங்க நலமா!

உங்களுக்கு அனுப்ப என்று 2 காணொளிகள் சேகரித்து இன்னும் அனுப்பாமலே வைத்திருக்கிறேன். விரைவில் அனுப்புகிறேன்.

இப்போ நிறையப்பேர் செய்திகளையே பதிவாக எழுதுவதால் நான் கொஞ்சம் ஈழம் பற்றி எழுதுதவதைக் குறைத்தும் கொண்டேன் :) மறுபடியும் full scale இல் எழுதவேண்டும் போலுள்ளது.

பதிவு, குறித்து.... இந்தியா மீது எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை, அது ஈழவிடயமே ஆனாலும். யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப்போடுவது போன்றது தான் இந்திய அரசியல், எனக்குத்தெரிந்தவரையில் ஈழவிடயத்தில். இந்தியா என்கிற நாடு புனர்ஜென்மம் எடுத்தாலேயன்றி அதுக்கு மீட்சி இல்லை.

இஸ்லாமியர்கள் இலங்கையில் இரட்டை நிலைப்பாட்டுடன் தான் இருக்கிறார்கள் என்பது வரலாறு. அதையேதான் காலநிதி Imtiaz போன்றோர் கூட குறிப்பிட்டுக்காட்டுகிறார்கள். அவருடைய எழுத்தைப் படித்தாலே தெரியும் விடுதலைப்புலிகள் காலத்து நிகழ்வுகள் மட்டும் காரணமில்லை இலங்கை இஸ்லாமியர்களின் இரட்டைநிலைக்கு என்பது.

யார், யாரோவின் (இந்தியா, இலங்கை இஸ்லாமியர்கள்) சில நியாயங்களுக்காக துரோகங்களையும், முதுகில் குத்தியதையும் கூட மறந்து, மன்னித்து ஈழத்தமிழர்கள் நட்புக்கரம் நீட்டினாலும் அதை பற்றிக்கொள்ள யாரும் தயாரில்லை.

ஈழத்தமிழனை அழித்துமுடித்துவிட்டு அடுத்தது யாரென்று சிங்களன் திரும்பிப்பார்ப்பான். அப்போது பார்க்கலாம் மிகுதியை!!

Rathi சொன்னது…

வேர்கள், நன்றி உங்கள் இணைப்பிற்கு. நீங்கள் தமிழ்மொட்டு தளத்தில் பதிவை பகிர்ந்துகொண்டபின்னர் தான் இந்தப்பதிவும் அவசர, அவசரமாக எழுதி முடித்தேன். பார்க்கலாம் காலம் என்ன பதில் தருகிறது என்று.

Rathi சொன்னது…

ராஜ நட, இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதற்கு எத்தனையோ காரணங்கள் என்றாலும் முக்கியகாரணங்களில் ஒன்று இந்தியாவிடம் இல்லாத, சீனாவிடம் இருக்கும் ஐ. நா. மனமகிழ் மன்றத்தின் வீட்டோ வாக்கு.

ஹேமா சொன்னது…

ரதி..சுகம்தானே.எனக்கு இவ்வளவு அறிவு இல்லை.என் தேசம் பற்றிய ஆதங்கம் மட்டுமே.உங்கள் பதிவுகளோடு இக்பால்,நடா மற்றும் வேர்கள் பின்னூட்டங்கள் வாசித்து விளங்கிக்கொள்கிறேன்.நாலு பேருக்கும் நன்றி !

Rathi சொன்னது…

ஹேமா, நான் நலம். உங்கள் தளத்திற்கும் வந்து நாளாச்சு.

என்ன நடக்குதெண்டு ஊமையன் கூத்து பாத்தமாதிரி பார்த்துக்கொண்டிருக்கிறம். அவ்ளோதான்.

பார்க்கலாம் 8ம் திகதி எப்படி முடிவுகள் என்று.