ஆகஸ்ட் 23, 2012

பாராட்டுக்களைக் குவிக்கும் ஹாலிவுட் மெகாதொடர்


மனித இயல்பிற்கு முன்னோடியானது மனித இருப்பு. Human existence proceeds human essence என்கிறது தனிமனித தத்துவம். மனித இருப்பிலிருந்தே மனித இயல்பு தோன்றுகிறது (தனிமனிதத் தத்துவம், அன்ரன் பாலசிங்கம்). உயிரோடிருந்து இயங்கும் நிலை இருத்தல். இந்த இருத்தல் என்பதை தக்கவைத்துக்கொள்ள உறவுகள், கூட்டுவாழ்க்கை அது சார்ந்த  தனிமனித அனுபவங்களும் என்கிற அம்சங்களும் இன்றியமையாததாகிப் போகிறது. மனிதனின் தனிப்பட்ட அனுபவங்களே அவனது இயல்புகளுக்கு காரணமாகிறது. இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டங்களில் ஆங்காங்கே மற்றையமனிதர்களுடன் ஒத்துப்போவதும், முரண்பட்டுப்போவதும் அனுபவமாகி இயல்புகளை தீர்மானிக்கிறது.

அன்றாட வாழ்வில் யாரும் வாழ்க்கை குறித்த தத்துவங்களை சிந்தித்தோஅல்லது பிரச்சனைகளை தீர்க்க அவைகளை அடிப்படையாகவோ கொள்வது கிடையாது. அப்பப்போ எங்களை நாங்களே கேள்வி கேட்டுக்கொள்பவர்கள் உண்டு. அப்படி இல்லாமல் சுற்றியிருப்பவர்களை கவனிக்கும் போதோ அல்லது திரைப்படங்களைப் பார்க்கும் போது அவை குறித்த சிந்தனைகளுக்கு இட்டுச்செல்லும் மனம். மனிதர்கள் ஏன் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறிப்பிட்ட விதமாய் நடந்துகொள்கிறார்கள் என்று யோசிக்க வைக்கும். அவ்வாறு என்னை அண்மையில் மனித இயல்புகள், இயல்பானதும் சூழ்நிலை காரணமானதுமான மனக்குழப்பங்கள், தவறான முடிவுகள் அதனால் குடும்பத்தில் உண்டாகும் குழப்பங்கள் என்று அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகும் Breaking Bad என்கிற ஒரு தொலைக்காட்சித் தொடர் மூலம் நுணுக்கமாக கவனிக்க வைத்தது.
 
நான் வழமையாக சினிமா குறித்த விமர்சனங்கள் எழுதுவதில் ஒன்றும் ஆர்வமோ, அது குறித்த திறமையோ இல்லாதவள். இருந்தும் இந்த தொடர் பார்த்துக்கொண்டிருக்க,  அதில் ஒன்றிப்போகிற அளவுக்கு அதை உருவாக்கியிருக்கிறார் Vince Gilligan. கதைக்களம் Albuquerque, New Mexico என்கிற இடம். கதையின் வகை Crime Thriller. Methamphetamine என்கிற ஒருவகையான போதைவஸ்து தயாரிப்பதும், அதை தயாரிப்பதனால் உருவாகும் குற்றங்களும், விளைவுகளுமே கதை. வாழ்க்கையை அதன் இயல்பில் வாழும் ஒரு திறமையான ஒரு வேதியல் ஆசிரியர். அவருடைய திறமையும் சாமர்த்தியமும் சரியானவிதத்தில் அடையாளம் காணப்படாமலோ அல்லது அவரது முயற்சிகளை வேறு யாரோ தங்களுக்கு சாதகமாக வெற்றியாக்கி் புகழும், பணமும் ஈட்டியதை வாழ்க்கையின் ஒரு சிக்கலானதும், கசப்பானதுமான ஒரு கட்டத்தில் உணரும் ஒருவரின் இயல்புகள் எவ்வாறு மாறிப்போகிறது என்பதை தத்ரூபமாக சினிமாத்தனங்களுக்கு அப்பாற்பட்டு இயல்பாய் காட்சிப்படுத்தியது கவர்கிறது.  தொடரில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்கள் Walter White (Bryan Cranston) Jesse Pinkman (Aaron Paul), Skyler White (Anna Gunn), Gusaro Fring (Giancarto Esposito). மற்றும் சில குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களும் உண்டு. ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார்கள் போல!!


சுவாசப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வோல்ட் தனக்குப்பிறகு தன் குடும்பத்துக்குத் தேவையான, மகன், மகள் படிப்பு உட்பட தேவையான வாழ்க்கைச் செலவுகளுக்கு தன் மனைவி தவிக்க நேரிடுமோ என்கிற மனதை அரிக்கும் கவலையில் என்னவெல்லாம் செய்யத்துணிகிறார் என்பதும்; பின்னர் அவர் அதிலிருந்து அவரே விரும்பினாலும் வெளியேற முடியாதபடி மாட்டிக்கொளவதும்; கதையின் முக்கியபாத்திரமான கோட்பாட்டு நாயகன் சமூகவிழுமியங்களிலிருந்து விலகி எப்படி எதிர்த்திசையில் பயணிக்கிறார் என்பதும் அழகாய் காட்சிகளின் வழி கண்முன்னே விரிகிறது.

வோல்ட் ஒவ்வொரு முறையும்  சூழ்நிலைக்கைதியாய் மனவழுத்தத்திற்கு உள்ளாகும் போது அதைச் சமாளிக்க மனைவியை புணர்வதில் காட்டும் அதீத ஆர்வத்திலிருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியாய் மனித உணர்வுகள் முதல் பயம் வரை அதன் காட்சி வடிவங்களில் மனிதமனங்களின் வக்கிரமும், பயங்களும் பார்ப்பவர் மனதில் ஆயிரம் கேள்விகளை உருவாக்கியபடியே பதிந்து போகிறது.
 
ஒரு அன்பான மனைவியாய், பணத்தை விடவும் கணவனின் நேர்மையை அதன் வழி வரும் சம்பாத்தியத்தை நேசிக்கும் ஒரு மனைவியின் மனவோட்டம் திசைமாறுவது இயல்பாய் சிதைவுகளின்றி அந்த கதாபாத்திரத்தின் வழி  வடிமைக்கப்பட்டிருக்கிறது. கணவன் தவறான வழியில் குடும்பத்திற்காய் பணம் சம்பாதித்தாலும்,  கணவனின் நியாயத்தில் காரணத்தை புரிந்து கொண்டாலும், அதை ஏற்கமுடியாமல் தவித்து இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதும்,பிறகு அதற்காய் குழம்பி தவிப்பதும் அமெரிக்க கலாச்சாரம் என்பதை மீறி மனித இயல்புகளை எடுத்துக்காட்டும் படி இருக்கிறது. அமெரிக்க வாழ்க்கைமுறைகளும் அதன் கலாச்சாரமும் விமர்சிக்கப்பட்டாலும் அழகான குடும்பம் என்பதன் சில அம்சங்களையும் எடுத்துக் காட்டத்தவறவில்லை இயக்குனர். அடுத்து பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றமுடியாத குழந்தைகள் எப்படி திசைமாறிப்போகிறார்கள் என்பது ஜெசியின் கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதே போல் Mr. Fring கதாபாத்திரமும் அதிகம் கவரும் ஒன்று.
 
இது போல் இந்த தொடர் பற்றி நிறைய சொல்லலாம். குறைகள் அல்லது நம்ப முடியாதது என்கிற ஒரு சில விடயங்களும் உண்டு. குறிப்பாக ஒருவர் எப்படி இத்தனை குற்றங்களை சர்வசாதாரணமாய் செய்துகொண்டே, தப்பிக்கவும் முடிகிறது என்பது தான். அமெரிக்க சட்டங்கள் குறித்து எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். இருந்தாலும் குடும்பத்தில், சமூகவாழ்வில் என்று எல்லா மனிதர்களின் நியாயமும் பார்வையாளர் கண்ணோட்டத்தில் சரியானதாய் இருக்க எங்கேயோ இருக்கும் தவறும், அதை சரி செய்ய முடியாத அரசியல் நடைமுறையும் மறைமுகமாக சொல்லப்படுகிறது.
 
தீவிரவாதத்தில் அமெரிக்ககொள்கைக்கும் கமல்ஹாசனின் திரைப்படங்களின் கதை, கருத்துதிணிப்பு, இயக்கத்திற்கும் வித்தியாசமில்லாத கதைகள; சேரனின் உணர்வுகளைப் பிழிந்தெடுக்கும் ஆட்டோகிராஃப் பார்த்துப் பழகிப்போன எனக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு நல்லதோர் தொடர் பார்த்த திருப்தியை Breaking Bad கொடுக்கிறது. இப்போது தான் 5 வது சீசன் தொடர்கள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. நான் இன்னும் 4வது சீசன் தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் :)
 

இது எனக்கு கவிதை எழுதுவதில் உள்ள குறைபாட்டினால் உரைநடையாய் :)

 
மேகங்களினூடே நடக்கிறார்கள். பிரிதலின் வலியும், அருகாமையின் சந்தோச அவஸ்தையும் வாட்டாத இடைவெளியும், நெருக்கமும்! இருப்பையும், உயிர்ப்பையும் ஒருசேர உணர்த்தும் தருணங்கள்!!

 

 
சொல்லுக்கும் பொருளுக்குமிடையே புரியாத அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது என்கிற வேலையற்ற வேலை ஒப்புவதில்லை. Ignorance is bliss.

நிதானமாய் வார்த்தைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து அகமும் புறமும் ஒரே பேச்சாய் நேர்படப் பேசப்பழக வெற்றுச்சொற்களின் ஒவ்வாமையில் தொலைவதில்லை சுயம்.
 

 
 
 
 
Image Courtesy: Google, கடைசிப்படம் உபயம், மகள்.
 
 
 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாதது...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

Rathi சொன்னது…

திண்டுக்கல் தனபாலன், You are welcome!