ஆகஸ்ட் 15, 2012

ஈழம்-சூத்திரவர்ணமா!



ஏதேதோ நிகழ்வுகள் மெய்யுலகிலும், மெய்நிகர் உலகிலும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன, விமர்சனங்கள், வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் முதல் சினிமா கிசு கிசு வரை. வேலையின் நிமித்தம் தூக்கம் பறிக்கப்பட்டதால் எதையும் உள்வாங்கி கிரகித்துக்கொள்ள முடியாத அயற்சி மிஞ்சியிருந்தது. இருந்தும், நிகழ்வுகள் அதுவாய் அதன் இயல்பின் பால் இருக்க அறிவும், வகுக்கப்பட்ட அறமும் அந்நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கு வழமை மாறாமல் சமாதானமாய் பழக்கப்படுத்தப்பட்டதும், செளகர்யதுமான பதில்களை தேடிக்கொண்டிருந்தது. பாதுகாப்பான, சொகுசான எல்லைக்களைக் கடக்காமல் சுயம் குறித்த கேள்விகளும், கொள்கைகள் குறித்த விளக்கங்களும், அவை குறித்த பதிலும் என்னை என் குழுமனப்பான்மையிலிருந்து விலகவிடாமல், என்னுடைய Group Harmony ஐயை தக்கவைத்துக்கொள்ளும்!! Then, I will live in peace forever!! பொருளாதார ஏகாதிபத்தியத்தின் முன்னோடியான கொலம்பஸ் கண்டுபிடித்த அடிமைகளின் அம்சம் நான்.

சமூகக்கூட்டு வாழ்வின் இணக்கங்களையும், முரண்களையும் அறிந்தும், அறியாமலும், அறிந்து கொண்டே அறியாமலும் முன்னேறிக்கொண்டிருக்க வேண்டி பழக்கப்பட்டாயிற்று. ஊரோடு ஒத்திசைவாய் பேசவும், வாழவும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டால் நேர்பட வாழ்வதாய் சமாதானமாய் வாழ்ந்து தொலைக்கலாம். முரண்களோடு முட்டி மோதி கேள்வி கேட்டு குறைந்தபட்சம் என் திருப்திக்காகவேனும் சில பதில்களைத் தேடுவது என்பது என்னோடு நான் ஏற்படுத்திக்கொள்ளும் பிணக்கு. கூட்டுமனச்சாட்சியோடு ஒத்துப்போகாத போர்க்குணத்துக்கு தீனி போட்டாக வேண்டியுள்ளது. அனுபவங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகள், நான் காணும் காட்சிப்பிழைகள், அனுபூதிமான்களின் எதிர்வுகூறல்கள் எல்லாவற்றையும் முடிந்தவரை உள்வாங்கி கேள்விகளுக்கிடையேயான இடைவெளிகளை நிரவியதில் எனக்குரிய பதில்கள் தயார்ப்படுத்தப்படலாம். ஏற்கனவே நிறுவப்பட்ட ஒன்றை அல்லது அவ்வாறு நிறுவப்பட்டதாய் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை மீண்டும், மீண்டும் புதிதாய் நிறுவ முற்பட்டு வரலாற்றுச் சான்றுகள் காட்டலாம். அதில் எனக்கு அயர்ச்சியே மிஞ்சுகிறது. அந்தப் பதில்களில் எனக்கு திருப்தி இல்லையென்றால் குறைந்தபட்சம் அதை அலசி ஆராயாமல், விமர்சிக்காமல் நகரமுடிவதில்லை.

மனிதனுக்கு ஞாபகமறதி மட்டும் இல்லையென்றால் என்னாகும்! இந்த உலகமே கொலைக்களம் ஆகியிருந்தாலும் இருக்கும். எண்ணங்கள், ஞாபகங்கள் ஒன்றையொன்று போட்டிபோட்டு விழுங்க மனிதன் நிலை என்னாவது! இருந்தாலும் நடைமுறை வாழ்வில் ஒரு நிகழ்வையும் அதன் விளைவுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களையும் ஒட்டவைத்துப்பார்த்தால் வெறும் பார்வையாளனாய் கடந்து போக முடிவதில்லை. அதை குறைந்தபட்சம் விமர்சிக்காமலேனும் கடக்க முடிவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பு நடத்திய டெசோ மாநாடு பற்றித்தான் இங்கே முக்கி, முக்கி பேசவிளைகிறேன். தமிழக இருபெரும் அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் நியாயமாய், ஆக்கபூர்வமாய் செயற்பட்டடதை விட ஈழத்தை ஆதாரமாய் வைத்து கட்சி அரசியல் வளர்த்துக்கொண்ட வரலாறு இந்நாட்களில் மேலும் கசப்பையே உண்டுபண்ணுகிறது. அதற்கு இன்னோர் சான்று டெசோ மாநாடு.

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று மேற்குலகால் பெரிதும் பாராட்டப்படுகிறது. ஜனநாயகக் கோட்பாட்டின் விழுமியங்களை கடைத்தேற்ற சட்டமும், நீதியும், அரச நிறுவனங்களும் எல்லாக்குடிமக்களுக்கும் பொதுவாய் உருவாக்கப்படுகிறது. அது உலக ஜனநாயக வழக்கும் கூட. இருந்தும் இந்திய ஜனநாயகத்தின் தார்மீக விழுமியங்கள் சமூகமட்டத்தில் மனுசாஸ்திரத்தால் ஆளப்படும் ஓர் நிலை இன்னும் கூட வழக்கொழியாமல் இருக்கிறது. ஈழம் என்கிற வார்த்தையும் இந்திய மனுதர்மசாஸ்திர அரசியல் அகராதியில் சூத்திர, சண்டாள வர்ணமாக்கப்பட்டதோ என்று டெசோ மாநாட்டில் அந்த வார்த்தைக்கு விதிக்கப்பட்ட தடை யோசிக்க வைத்தது. சமூகமட்டத்தின் மனுசாஸ்திரமும், அரசியல் மட்டத்தின் ஜனநாயக விழுமியங்களுக்குமிடையேயான முரண்பாட்டு இடைவெளியில் ஒடுக்கப்பட்ட இந்திய கடைநிலை குடிமகன் போல் சிக்கிகொண்டது ஈழத்தமிழன் தலைவிதியும்.

டெசோ மாநாட்டின் தலையங்கத்தில் ஈழம் என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு கோரியதாக செய்திகள் அடிபட்டுக் கொண்டேயிருந்தன. ஈழம் என்கிற வார்த்தையின் வரலாற்றைத் தேடிப்பார்த்தால் அது விளக்கமுடியாத அளவுக்கு நீண்ட, நெடிய வரலாறாய் இருக்கிறது. ஈழம் என்கிற வார்த்தை ஒன்றும் இந்திய சட்டத்திற்கோ, தார்மீக தர்மத்திற்கோ எதிரானதல்ல. சங்ககாலத்து பட்டினப்பாலையில் ஈழம் என்கிற வார்த்தையின் தொன்மையானது அது ஒரு பிரதேசம் எனப்படுகிறது. அத்தோடு, புவியியல் சார்ந்து தான் ஒரு இடத்தின் மூலப்பெயர் தோன்றுகிறதேயன்றி அது மக்கள் சார்ந்தோ, புராணக்கதைகள் சார்ந்து தோன்றுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தமிழீழ விடுதலை வேண்டிப்போராடியவர்கள் தமிழீழம் என்பதை முன்னிறுத்த அது பேச்சுவழக்கில் ஈழம் ஆகிப்போனது. இலங்கை அரசு அதை தன் அரசியல் சாணக்கியத்திற்கேற்ப கையாண்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பறிக்க நினைக்கும் சதிக்கு இந்தியாவும் துணை. இது ஈழத்து பச்சைமண்ணுக்கும் தெரியும்.

குறளோவியம், தொல்காப்பியப்பூங்கா என்கிற உரையோவியங்களை வடித்த கலைஞர் கருணாநிதிக்கு ஈழம் என்கிற வார்த்தையின் தொன்மவரலாறு தெரியாமற் போனது துர்ப்பாக்கிய நிலை. ஐயா நீங்கள் மாநாடு நடத்தாவிட்டால் கூட பரவாயில்லை. ஈழம் என்கிற வார்த்தைக்கு உங்கள் அரசியல் ஆட்சியாளர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுத்து மாநாட்டையே புறக்கணித்திருந்தால் கூட வரலாற்றில் மீண்டும் நிலைத்திருப்பீர்கள் என்பது என் கருத்து. அந்த ஒற்றை வார்த்தையின் தொன்மத்தை நீங்கள் நிறுவியிருந்தால் மீண்டும் ஒருமுறை ஈழத்தமிழனின் சுயநிர்ணய உரிமைக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கும். மாநாடு நடந்தேறுவதே அரசியல் சாணக்கியம். உங்கள் அரசியல் எதிரியை வீழ்த்த அதுவே உங்கள் தந்திரம் என்று மறுபடியும் சறுக்கல்.

உங்கள் வரலாற்று சறுக்கல்களை பட்டியலிட்டு அடிமேல் அடி வாங்கிய எங்களுக்கு களைப்பு உண்டாகிறது. தமிழினத்தலைவன் என்று சுயதம்பட்டம் அடிக்கும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஈழத்தமிழர்களுக்காய் அல்லது தமிழினத்துக்காய் இதய சுத்தியோடு ஒரு துரும்பை தூக்கிப்போடுங்கள். அதன் பிறகு பாருங்கள் ஈழத்தமிழன் அவன் மனதில் உங்களுக்கு கொடுக்கும் இடத்தை. தமிழகத்தமிழர்கள்  ஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் குறித்துச் சொல்வது எதிரியை விட துரோகிகள் மோசமானவர்கள் என்பது. ஐயா, எங்களுக்கு தமிழக அரசியலில் எதிரி யார், துரோகி யார் என்று பிரித்துப்பார்த்து அடையாளம் காண்பதே சிரமமாய் உள்ளது. நீங்களோ கோடுகிழித்து இரண்டுக்குமிடையே அகலக்கால் வைத்து நின்று தடுமாறுகிறீர்கள். இன்னும் சில உணர்வாளர்களோ உங்களுக்கு கொடிபிடிக்கிறார்கள் அல்லது அவர்கள் வாயில் வருவதையெல்லாம் உச்சபட்சமாய் உளறிவைக்கிறார்கள். இலங்கையின் ராஜபக்‌ஷேக்களை விட அதிகம் பயம் காட்டுகிறது தமிழக அரசியல்.

இதற்கு மேல் எனக்கு சொல்ல வேறொன்றும் தோன்றவில்லை; எங்களையும் வாழவிடுங்கள் என்பதைத் தவிர.

Thanks to Google for these images!

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ரதி....வாசித்தேன்.உங்கள் மனநிலைதான் எனக்கும்.என்னத்தைச் சொல்லிஅழ என்பதுபோலத்தான்.ஈழ வியாபாரம் நடக்கிறது எங்கும் இப்போதெல்லாம் !

Rathi சொன்னது…

என்ன சொல்றது ஹேமா! இப்பவெல்லாம் வேடிக்கை பார்த்து எரிச்சல் தான் மிஞ்சுது.

இக்பால் செல்வன் சொன்னது…

ஈழம் - ஹெல என்ற வார்த்தை பூர்வ சொல்லாகவே இருக்க வேண்டும். ஒரு அறிஞர் இதுக் குறித்து ஆராய்ந்த போது ஈழம் என்ற சொல் பனை மரம் மற்றும் கள்ளிறக்கும் தொழில் உடையவர்களோடு தொடர்புடையது எனக் கூறிய ஒரு கட்டுரையை வாசித்தேன் ...

ஈழத் தமிழகத்தின் சுயநிர்ணயத்தை இந்தியாவோ - தமிழக அரசியல்வாதிகளோ பெற்றுத் தருவார்கள் என யாரேனும் நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும் என்பதை நினைவூட்டுகின்றேன் ... !!!

ஈழத் தமிழர்கள் பலமுறை தமக்கான உரிமையைப் பெற தவறியுள்ளார்கள் ( 1948, 1972, 1987, 2004 ) ... இனிமேல் கிடைக்குமா ? கிடைக்காதா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !!!