ஆகஸ்ட் 29, 2012

முஸ்லிம்களும் கிழக்குமாகாணத்தேர்தலும்

 
பார்த்தவைகளை, படித்தவைகளை, கேட்டவைகளை உள்வாங்கி அது குறித்த எண்ணங்களின் பிரதிபலிப்பை எழுத்தில் கொண்டுவருவது ஒரு தனிக்கலை. அது சாதாரண அன்றாடவாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களின் நடவடிக்கைகள் முதல் நம் கண்களில் சிக்கி மனதில் பதிந்துபோகும் காட்சிகள், செய்திகள் வரை. அதற்கும் ஒரு படி மேலே போய் படித்த அரசியல் செய்திகளை உள்வாங்கி அதை ஆராய்ந்து எழுத தகவற்பற்றாக்குறை தவிர்க்கப்பட தொடர்வாசிப்பு இருக்கவேண்டும். செய்திகளை செய்திகளாகவே பகிர நினைத்து தோற்றுப்போவதுண்டு. அரசியல் நிகழ்வுகள் மிகப்பெரும்பாலான சமயங்களில் இயல்பானவையல்ல. ஆதலால், அரசியல் நிகழ்வுகளுக்குரிய அடிப்படை தத்துவங்களும், காரணங்களும், காரியமாய் செயற்படுபவர்கள் உள்நோக்கு பற்றியும் அடிப்படை அறிவு கொண்டு அந்த நிகழ்வுகளின் தகவுகள் அடிப்படையில் எழுதி, அதைப் படிப்பவர்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கவெண்டும் என்பது என் கருத்து. இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறாவிட்டால் சிலவிடயங்களை எழுதமுயன்று முடியாமற்போவதுண்டு. எழுதிக்குழப்புவதிலும் எழுதாமை மேல் என்று கடந்து போவதுண்டு.

இப்படி நான் அடிக்கடி கடந்து போகும் விடயம் ஈழத்தில் வட-கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகம் பற்றியது. இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய நுண்ணரசியல் பதிவு என்பது கல்லில் நார் உரிக்கும் ஒரு முயற்சி. ஆனாலும், தற்போதைய ஒரு சூழலில் அது முடியாது என்று ஒதுங்கமுடியவில்லை. இதே தளத்தில் இதற்கு முன் முஸ்லிம் சமூகம் பற்றி எழுதிய ஒரு கட்டுரை.
 
தற்காலத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களை மதரீதியான ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்த முற்பட்டு தாங்கள் இலங்கையில் ஒரு தனியான தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளப்படவேணுமென்று விரும்புகிறார்கள். அதற்குரிய நதிமூலம், ரிஷிமூலம் பார்த்தால் அது விளக்குவதற்கு சிரமமான விளங்கமுடியாப் பொருள் அல்ல என்பது எல்லோருக்கும் புரியும். இருந்தாலும், சர்வதேச சமூகம் என்கிற அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் பொருளாதார நலன்களும், உலகளாவிய ரீதியில் நிகழும் இஸ்லாமிய பண்பாட்டுப் புரட்சியும் தான் இலங்கை முஸ்லிம்களின் அடையாளப்படுத்தலின் அம்சம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
 
 
இலங்கையில் கிழக்குமாகாணத்தேர்தல் காரணமாக அவ்வப்போது நான் விரும்பாவிட்டாலும் அதுசார்ந்த அரசியல் கண்ணோட்டங்களை, கலந்துரையாடல்களை கடந்துவரவேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாணத்தேர்தலில் இலங்கை சுதந்திரக்கட்சி, முஸ்லிம் கட்சிகள், தமிழர்கட்சிகள் இவற்றில் யார் பெரும்பானமை வாக்குப்பெறப்போகிறார்கள் என்பதில் தமிழ் பேசும் முஸ்லிம் நலன்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பெரும்பாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் பேசும் அரசியல் ஆய்வாளர்கள் பொதுவாக ஒத்துக்கொள்ளும் ஒரு விடயம் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் எப்போதும் சிங்களப்பேரினவாத அரசியல்வாதிகளுடன் இயைந்து செயற்பட்டு தங்கள் நலன்களை மட்டும் முன்னிறுத்தியவர்கள் என்கிற ஒரு விடயம்.

இந்த இடத்தில் யாராவது மாற்றுத்திறனாளிகள், மதியுரைஞர்கள் கருத்து சொல்ல வேணுமென அவா உந்தித்தள்ளினால் மேலேயுள்ள இணைப்பை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அந்த இணைப்பு படிக்காமல் நான் சொல்லவரும் விடயமும் அதிலுள்ள நியாயமும் புரியப்போவதில்லை.
 
முஸ்லிம் சமூகம் பற்றிய வரலாறு குறித்த விடயத்தில் ஒத்தகருத்தைக் கொண்டிருந்தாலும் கிழக்குமாகாணத்தேர்தலில் முஸ்லிம்களுடன் தமிழர் உரிமைகளுக்காக போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் (ராஜபக்‌ஷேவின் எடுபிடி தமிழ்க்கட்சியல்ல) ஒன்றிணைந்து போட்டியிட வேண்டுமா என்கிற மிகச்சிக்கலான ஒரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட கேள்வி அது. அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனியாக போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் விளைவுகள் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரியும்.

கிழக்குமாகாணத்தேர்தல் அரசியல் பலப்பரீட்சையாக மாற்றப்பட்டு ஈற்றில் தமிழர்களாயினும், தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஆயினும் (தமிழ் பேசினாலும் தாங்கள் முஸ்லிம்கள், தமிழர்கள் அல்ல என்று சொல்வோர் ஏராளம்) தோற்றுப்போனால் பெளத்தசிங்களப்பேரினவாதம் இன்னும் மூர்க்கமாக திட்டமிடப்பட்டு, கிழக்கில் வாழும் மக்கட்தொகைக் கட்டமைப்பும் மேலும் மாற்றப்பட்டு சிங்களசமூகம் அரசியல் பெரும்பான்மை வகிக்கும் நிலைக்கு தள்ளப்படும் பரிதாபகரமானதும், கசப்பானதுமான நிலை உருவாகும் என்பது மட்டும் உறுதி.

கிழக்குமாகாணத்தேர்தல் வெற்றியை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற தமிழன் அழியக்காரணமானவர்களும் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருக்கிறார்களாம். காரணம், கிழக்கின் திருகோணமலைத்துறைமுகம். இதற்கிடையே வழக்கம் போல இந்தியாவின் இலங்கைப் படைகளுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் ராணுவப்பயிற்சி குறித்த தவிர்க்கவோ, தாண்டிச்செல்லவோ முடியாத செய்திகளும் உண்டு. ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமை விடயத்தில் இந்தியா தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்கிறது என்பது ராஜபக்‌ஷே, இந்திய காங்கிரஸ், சீனா முக்கோணக்காதல் கதையில் பல்லிளிக்கிறது. கிழக்கில் ராஜபக்‌ஷேக்கள் தவிர்த்து யார் வெல்லுகிறார்கள் என்பது சுவாரஸ்யமான விடயம். தமிழர்கள் வென்றால் இந்திய-சோனியா காங்கிரஸ் தன்பக்கம் இழுக்கப்பார்க்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை. ஏற்கனவே அவர்கள் சோனியா காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகிறவர்கள் என்கிற பழி உண்டு. முஸ்லிம் கட்சி வென்றால் அமெரிக்காவுக்கு ஒத்துக்கொள்ளாது. ஒருவேளை, முஸ்லிம்கட்சி ராஜபக்‌ஷேவின் ஆட்சிக்கு துணைநின்று தங்கள் நலன்களை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் என்றும் கணிக்கிறார்கள்.

இறுதியாக தமிழன் நிலை யாரையும் பாம்பென்று உதறவும் முடியாமல், பழுதென்று ஒதுக்கவும் முடியாமல்...........!!!


Image Courtesy: Google.
 

ஆகஸ்ட் 23, 2012

பாராட்டுக்களைக் குவிக்கும் ஹாலிவுட் மெகாதொடர்


மனித இயல்பிற்கு முன்னோடியானது மனித இருப்பு. Human existence proceeds human essence என்கிறது தனிமனித தத்துவம். மனித இருப்பிலிருந்தே மனித இயல்பு தோன்றுகிறது (தனிமனிதத் தத்துவம், அன்ரன் பாலசிங்கம்). உயிரோடிருந்து இயங்கும் நிலை இருத்தல். இந்த இருத்தல் என்பதை தக்கவைத்துக்கொள்ள உறவுகள், கூட்டுவாழ்க்கை அது சார்ந்த  தனிமனித அனுபவங்களும் என்கிற அம்சங்களும் இன்றியமையாததாகிப் போகிறது. மனிதனின் தனிப்பட்ட அனுபவங்களே அவனது இயல்புகளுக்கு காரணமாகிறது. இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டங்களில் ஆங்காங்கே மற்றையமனிதர்களுடன் ஒத்துப்போவதும், முரண்பட்டுப்போவதும் அனுபவமாகி இயல்புகளை தீர்மானிக்கிறது.

அன்றாட வாழ்வில் யாரும் வாழ்க்கை குறித்த தத்துவங்களை சிந்தித்தோஅல்லது பிரச்சனைகளை தீர்க்க அவைகளை அடிப்படையாகவோ கொள்வது கிடையாது. அப்பப்போ எங்களை நாங்களே கேள்வி கேட்டுக்கொள்பவர்கள் உண்டு. அப்படி இல்லாமல் சுற்றியிருப்பவர்களை கவனிக்கும் போதோ அல்லது திரைப்படங்களைப் பார்க்கும் போது அவை குறித்த சிந்தனைகளுக்கு இட்டுச்செல்லும் மனம். மனிதர்கள் ஏன் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறிப்பிட்ட விதமாய் நடந்துகொள்கிறார்கள் என்று யோசிக்க வைக்கும். அவ்வாறு என்னை அண்மையில் மனித இயல்புகள், இயல்பானதும் சூழ்நிலை காரணமானதுமான மனக்குழப்பங்கள், தவறான முடிவுகள் அதனால் குடும்பத்தில் உண்டாகும் குழப்பங்கள் என்று அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகும் Breaking Bad என்கிற ஒரு தொலைக்காட்சித் தொடர் மூலம் நுணுக்கமாக கவனிக்க வைத்தது.
 
நான் வழமையாக சினிமா குறித்த விமர்சனங்கள் எழுதுவதில் ஒன்றும் ஆர்வமோ, அது குறித்த திறமையோ இல்லாதவள். இருந்தும் இந்த தொடர் பார்த்துக்கொண்டிருக்க,  அதில் ஒன்றிப்போகிற அளவுக்கு அதை உருவாக்கியிருக்கிறார் Vince Gilligan. கதைக்களம் Albuquerque, New Mexico என்கிற இடம். கதையின் வகை Crime Thriller. Methamphetamine என்கிற ஒருவகையான போதைவஸ்து தயாரிப்பதும், அதை தயாரிப்பதனால் உருவாகும் குற்றங்களும், விளைவுகளுமே கதை. வாழ்க்கையை அதன் இயல்பில் வாழும் ஒரு திறமையான ஒரு வேதியல் ஆசிரியர். அவருடைய திறமையும் சாமர்த்தியமும் சரியானவிதத்தில் அடையாளம் காணப்படாமலோ அல்லது அவரது முயற்சிகளை வேறு யாரோ தங்களுக்கு சாதகமாக வெற்றியாக்கி் புகழும், பணமும் ஈட்டியதை வாழ்க்கையின் ஒரு சிக்கலானதும், கசப்பானதுமான ஒரு கட்டத்தில் உணரும் ஒருவரின் இயல்புகள் எவ்வாறு மாறிப்போகிறது என்பதை தத்ரூபமாக சினிமாத்தனங்களுக்கு அப்பாற்பட்டு இயல்பாய் காட்சிப்படுத்தியது கவர்கிறது.  தொடரில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்கள் Walter White (Bryan Cranston) Jesse Pinkman (Aaron Paul), Skyler White (Anna Gunn), Gusaro Fring (Giancarto Esposito). மற்றும் சில குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களும் உண்டு. ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார்கள் போல!!


சுவாசப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வோல்ட் தனக்குப்பிறகு தன் குடும்பத்துக்குத் தேவையான, மகன், மகள் படிப்பு உட்பட தேவையான வாழ்க்கைச் செலவுகளுக்கு தன் மனைவி தவிக்க நேரிடுமோ என்கிற மனதை அரிக்கும் கவலையில் என்னவெல்லாம் செய்யத்துணிகிறார் என்பதும்; பின்னர் அவர் அதிலிருந்து அவரே விரும்பினாலும் வெளியேற முடியாதபடி மாட்டிக்கொளவதும்; கதையின் முக்கியபாத்திரமான கோட்பாட்டு நாயகன் சமூகவிழுமியங்களிலிருந்து விலகி எப்படி எதிர்த்திசையில் பயணிக்கிறார் என்பதும் அழகாய் காட்சிகளின் வழி கண்முன்னே விரிகிறது.

வோல்ட் ஒவ்வொரு முறையும்  சூழ்நிலைக்கைதியாய் மனவழுத்தத்திற்கு உள்ளாகும் போது அதைச் சமாளிக்க மனைவியை புணர்வதில் காட்டும் அதீத ஆர்வத்திலிருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியாய் மனித உணர்வுகள் முதல் பயம் வரை அதன் காட்சி வடிவங்களில் மனிதமனங்களின் வக்கிரமும், பயங்களும் பார்ப்பவர் மனதில் ஆயிரம் கேள்விகளை உருவாக்கியபடியே பதிந்து போகிறது.
 
ஒரு அன்பான மனைவியாய், பணத்தை விடவும் கணவனின் நேர்மையை அதன் வழி வரும் சம்பாத்தியத்தை நேசிக்கும் ஒரு மனைவியின் மனவோட்டம் திசைமாறுவது இயல்பாய் சிதைவுகளின்றி அந்த கதாபாத்திரத்தின் வழி  வடிமைக்கப்பட்டிருக்கிறது. கணவன் தவறான வழியில் குடும்பத்திற்காய் பணம் சம்பாதித்தாலும்,  கணவனின் நியாயத்தில் காரணத்தை புரிந்து கொண்டாலும், அதை ஏற்கமுடியாமல் தவித்து இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதும்,பிறகு அதற்காய் குழம்பி தவிப்பதும் அமெரிக்க கலாச்சாரம் என்பதை மீறி மனித இயல்புகளை எடுத்துக்காட்டும் படி இருக்கிறது. அமெரிக்க வாழ்க்கைமுறைகளும் அதன் கலாச்சாரமும் விமர்சிக்கப்பட்டாலும் அழகான குடும்பம் என்பதன் சில அம்சங்களையும் எடுத்துக் காட்டத்தவறவில்லை இயக்குனர். அடுத்து பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றமுடியாத குழந்தைகள் எப்படி திசைமாறிப்போகிறார்கள் என்பது ஜெசியின் கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதே போல் Mr. Fring கதாபாத்திரமும் அதிகம் கவரும் ஒன்று.
 
இது போல் இந்த தொடர் பற்றி நிறைய சொல்லலாம். குறைகள் அல்லது நம்ப முடியாதது என்கிற ஒரு சில விடயங்களும் உண்டு. குறிப்பாக ஒருவர் எப்படி இத்தனை குற்றங்களை சர்வசாதாரணமாய் செய்துகொண்டே, தப்பிக்கவும் முடிகிறது என்பது தான். அமெரிக்க சட்டங்கள் குறித்து எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். இருந்தாலும் குடும்பத்தில், சமூகவாழ்வில் என்று எல்லா மனிதர்களின் நியாயமும் பார்வையாளர் கண்ணோட்டத்தில் சரியானதாய் இருக்க எங்கேயோ இருக்கும் தவறும், அதை சரி செய்ய முடியாத அரசியல் நடைமுறையும் மறைமுகமாக சொல்லப்படுகிறது.
 
தீவிரவாதத்தில் அமெரிக்ககொள்கைக்கும் கமல்ஹாசனின் திரைப்படங்களின் கதை, கருத்துதிணிப்பு, இயக்கத்திற்கும் வித்தியாசமில்லாத கதைகள; சேரனின் உணர்வுகளைப் பிழிந்தெடுக்கும் ஆட்டோகிராஃப் பார்த்துப் பழகிப்போன எனக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு நல்லதோர் தொடர் பார்த்த திருப்தியை Breaking Bad கொடுக்கிறது. இப்போது தான் 5 வது சீசன் தொடர்கள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. நான் இன்னும் 4வது சீசன் தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் :)
 

இது எனக்கு கவிதை எழுதுவதில் உள்ள குறைபாட்டினால் உரைநடையாய் :)

 
மேகங்களினூடே நடக்கிறார்கள். பிரிதலின் வலியும், அருகாமையின் சந்தோச அவஸ்தையும் வாட்டாத இடைவெளியும், நெருக்கமும்! இருப்பையும், உயிர்ப்பையும் ஒருசேர உணர்த்தும் தருணங்கள்!!

 

 
சொல்லுக்கும் பொருளுக்குமிடையே புரியாத அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது என்கிற வேலையற்ற வேலை ஒப்புவதில்லை. Ignorance is bliss.

நிதானமாய் வார்த்தைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து அகமும் புறமும் ஒரே பேச்சாய் நேர்படப் பேசப்பழக வெற்றுச்சொற்களின் ஒவ்வாமையில் தொலைவதில்லை சுயம்.
 

 
 
 
 
Image Courtesy: Google, கடைசிப்படம் உபயம், மகள்.
 
 
 

ஆகஸ்ட் 15, 2012

ஈழம்-சூத்திரவர்ணமா!ஏதேதோ நிகழ்வுகள் மெய்யுலகிலும், மெய்நிகர் உலகிலும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன, விமர்சனங்கள், வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் முதல் சினிமா கிசு கிசு வரை. வேலையின் நிமித்தம் தூக்கம் பறிக்கப்பட்டதால் எதையும் உள்வாங்கி கிரகித்துக்கொள்ள முடியாத அயற்சி மிஞ்சியிருந்தது. இருந்தும், நிகழ்வுகள் அதுவாய் அதன் இயல்பின் பால் இருக்க அறிவும், வகுக்கப்பட்ட அறமும் அந்நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கு வழமை மாறாமல் சமாதானமாய் பழக்கப்படுத்தப்பட்டதும், செளகர்யதுமான பதில்களை தேடிக்கொண்டிருந்தது. பாதுகாப்பான, சொகுசான எல்லைக்களைக் கடக்காமல் சுயம் குறித்த கேள்விகளும், கொள்கைகள் குறித்த விளக்கங்களும், அவை குறித்த பதிலும் என்னை என் குழுமனப்பான்மையிலிருந்து விலகவிடாமல், என்னுடைய Group Harmony ஐயை தக்கவைத்துக்கொள்ளும்!! Then, I will live in peace forever!! பொருளாதார ஏகாதிபத்தியத்தின் முன்னோடியான கொலம்பஸ் கண்டுபிடித்த அடிமைகளின் அம்சம் நான்.

சமூகக்கூட்டு வாழ்வின் இணக்கங்களையும், முரண்களையும் அறிந்தும், அறியாமலும், அறிந்து கொண்டே அறியாமலும் முன்னேறிக்கொண்டிருக்க வேண்டி பழக்கப்பட்டாயிற்று. ஊரோடு ஒத்திசைவாய் பேசவும், வாழவும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டால் நேர்பட வாழ்வதாய் சமாதானமாய் வாழ்ந்து தொலைக்கலாம். முரண்களோடு முட்டி மோதி கேள்வி கேட்டு குறைந்தபட்சம் என் திருப்திக்காகவேனும் சில பதில்களைத் தேடுவது என்பது என்னோடு நான் ஏற்படுத்திக்கொள்ளும் பிணக்கு. கூட்டுமனச்சாட்சியோடு ஒத்துப்போகாத போர்க்குணத்துக்கு தீனி போட்டாக வேண்டியுள்ளது. அனுபவங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகள், நான் காணும் காட்சிப்பிழைகள், அனுபூதிமான்களின் எதிர்வுகூறல்கள் எல்லாவற்றையும் முடிந்தவரை உள்வாங்கி கேள்விகளுக்கிடையேயான இடைவெளிகளை நிரவியதில் எனக்குரிய பதில்கள் தயார்ப்படுத்தப்படலாம். ஏற்கனவே நிறுவப்பட்ட ஒன்றை அல்லது அவ்வாறு நிறுவப்பட்டதாய் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை மீண்டும், மீண்டும் புதிதாய் நிறுவ முற்பட்டு வரலாற்றுச் சான்றுகள் காட்டலாம். அதில் எனக்கு அயர்ச்சியே மிஞ்சுகிறது. அந்தப் பதில்களில் எனக்கு திருப்தி இல்லையென்றால் குறைந்தபட்சம் அதை அலசி ஆராயாமல், விமர்சிக்காமல் நகரமுடிவதில்லை.

மனிதனுக்கு ஞாபகமறதி மட்டும் இல்லையென்றால் என்னாகும்! இந்த உலகமே கொலைக்களம் ஆகியிருந்தாலும் இருக்கும். எண்ணங்கள், ஞாபகங்கள் ஒன்றையொன்று போட்டிபோட்டு விழுங்க மனிதன் நிலை என்னாவது! இருந்தாலும் நடைமுறை வாழ்வில் ஒரு நிகழ்வையும் அதன் விளைவுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களையும் ஒட்டவைத்துப்பார்த்தால் வெறும் பார்வையாளனாய் கடந்து போக முடிவதில்லை. அதை குறைந்தபட்சம் விமர்சிக்காமலேனும் கடக்க முடிவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பு நடத்திய டெசோ மாநாடு பற்றித்தான் இங்கே முக்கி, முக்கி பேசவிளைகிறேன். தமிழக இருபெரும் அரசியல் கட்சிகள் ஈழத்தமிழர்கள் விடயத்தில் நியாயமாய், ஆக்கபூர்வமாய் செயற்பட்டடதை விட ஈழத்தை ஆதாரமாய் வைத்து கட்சி அரசியல் வளர்த்துக்கொண்ட வரலாறு இந்நாட்களில் மேலும் கசப்பையே உண்டுபண்ணுகிறது. அதற்கு இன்னோர் சான்று டெசோ மாநாடு.

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று மேற்குலகால் பெரிதும் பாராட்டப்படுகிறது. ஜனநாயகக் கோட்பாட்டின் விழுமியங்களை கடைத்தேற்ற சட்டமும், நீதியும், அரச நிறுவனங்களும் எல்லாக்குடிமக்களுக்கும் பொதுவாய் உருவாக்கப்படுகிறது. அது உலக ஜனநாயக வழக்கும் கூட. இருந்தும் இந்திய ஜனநாயகத்தின் தார்மீக விழுமியங்கள் சமூகமட்டத்தில் மனுசாஸ்திரத்தால் ஆளப்படும் ஓர் நிலை இன்னும் கூட வழக்கொழியாமல் இருக்கிறது. ஈழம் என்கிற வார்த்தையும் இந்திய மனுதர்மசாஸ்திர அரசியல் அகராதியில் சூத்திர, சண்டாள வர்ணமாக்கப்பட்டதோ என்று டெசோ மாநாட்டில் அந்த வார்த்தைக்கு விதிக்கப்பட்ட தடை யோசிக்க வைத்தது. சமூகமட்டத்தின் மனுசாஸ்திரமும், அரசியல் மட்டத்தின் ஜனநாயக விழுமியங்களுக்குமிடையேயான முரண்பாட்டு இடைவெளியில் ஒடுக்கப்பட்ட இந்திய கடைநிலை குடிமகன் போல் சிக்கிகொண்டது ஈழத்தமிழன் தலைவிதியும்.

டெசோ மாநாட்டின் தலையங்கத்தில் ஈழம் என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு கோரியதாக செய்திகள் அடிபட்டுக் கொண்டேயிருந்தன. ஈழம் என்கிற வார்த்தையின் வரலாற்றைத் தேடிப்பார்த்தால் அது விளக்கமுடியாத அளவுக்கு நீண்ட, நெடிய வரலாறாய் இருக்கிறது. ஈழம் என்கிற வார்த்தை ஒன்றும் இந்திய சட்டத்திற்கோ, தார்மீக தர்மத்திற்கோ எதிரானதல்ல. சங்ககாலத்து பட்டினப்பாலையில் ஈழம் என்கிற வார்த்தையின் தொன்மையானது அது ஒரு பிரதேசம் எனப்படுகிறது. அத்தோடு, புவியியல் சார்ந்து தான் ஒரு இடத்தின் மூலப்பெயர் தோன்றுகிறதேயன்றி அது மக்கள் சார்ந்தோ, புராணக்கதைகள் சார்ந்து தோன்றுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தமிழீழ விடுதலை வேண்டிப்போராடியவர்கள் தமிழீழம் என்பதை முன்னிறுத்த அது பேச்சுவழக்கில் ஈழம் ஆகிப்போனது. இலங்கை அரசு அதை தன் அரசியல் சாணக்கியத்திற்கேற்ப கையாண்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பறிக்க நினைக்கும் சதிக்கு இந்தியாவும் துணை. இது ஈழத்து பச்சைமண்ணுக்கும் தெரியும்.

குறளோவியம், தொல்காப்பியப்பூங்கா என்கிற உரையோவியங்களை வடித்த கலைஞர் கருணாநிதிக்கு ஈழம் என்கிற வார்த்தையின் தொன்மவரலாறு தெரியாமற் போனது துர்ப்பாக்கிய நிலை. ஐயா நீங்கள் மாநாடு நடத்தாவிட்டால் கூட பரவாயில்லை. ஈழம் என்கிற வார்த்தைக்கு உங்கள் அரசியல் ஆட்சியாளர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுத்து மாநாட்டையே புறக்கணித்திருந்தால் கூட வரலாற்றில் மீண்டும் நிலைத்திருப்பீர்கள் என்பது என் கருத்து. அந்த ஒற்றை வார்த்தையின் தொன்மத்தை நீங்கள் நிறுவியிருந்தால் மீண்டும் ஒருமுறை ஈழத்தமிழனின் சுயநிர்ணய உரிமைக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கும். மாநாடு நடந்தேறுவதே அரசியல் சாணக்கியம். உங்கள் அரசியல் எதிரியை வீழ்த்த அதுவே உங்கள் தந்திரம் என்று மறுபடியும் சறுக்கல்.

உங்கள் வரலாற்று சறுக்கல்களை பட்டியலிட்டு அடிமேல் அடி வாங்கிய எங்களுக்கு களைப்பு உண்டாகிறது. தமிழினத்தலைவன் என்று சுயதம்பட்டம் அடிக்கும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஈழத்தமிழர்களுக்காய் அல்லது தமிழினத்துக்காய் இதய சுத்தியோடு ஒரு துரும்பை தூக்கிப்போடுங்கள். அதன் பிறகு பாருங்கள் ஈழத்தமிழன் அவன் மனதில் உங்களுக்கு கொடுக்கும் இடத்தை. தமிழகத்தமிழர்கள்  ஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் குறித்துச் சொல்வது எதிரியை விட துரோகிகள் மோசமானவர்கள் என்பது. ஐயா, எங்களுக்கு தமிழக அரசியலில் எதிரி யார், துரோகி யார் என்று பிரித்துப்பார்த்து அடையாளம் காண்பதே சிரமமாய் உள்ளது. நீங்களோ கோடுகிழித்து இரண்டுக்குமிடையே அகலக்கால் வைத்து நின்று தடுமாறுகிறீர்கள். இன்னும் சில உணர்வாளர்களோ உங்களுக்கு கொடிபிடிக்கிறார்கள் அல்லது அவர்கள் வாயில் வருவதையெல்லாம் உச்சபட்சமாய் உளறிவைக்கிறார்கள். இலங்கையின் ராஜபக்‌ஷேக்களை விட அதிகம் பயம் காட்டுகிறது தமிழக அரசியல்.

இதற்கு மேல் எனக்கு சொல்ல வேறொன்றும் தோன்றவில்லை; எங்களையும் வாழவிடுங்கள் என்பதைத் தவிர.

Thanks to Google for these images!

ஆகஸ்ட் 04, 2012

தமிழக அரசியல் முதல் ஒலிபிக்ஸ் வரை


ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அது அரசியல் முதல் கலை, விளையாட்டுப்போட்டிகள் வரை எங்கேயும் எப்போதும் பொருந்திவரும் போல. ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டிகளில் பதக்க வரிசையில் அமெரிக்கா, சீனாவின் முன்னணி களேபரங்கள். முன்னர் விவரம் புரியும் வரை விளையாட்டுப் போட்டிகளை, கலைகளை பொழுதுபோக்காகவும், அரசியலை கவன சிரத்தையுடனும் கவனித்ததுண்டு. காலமாற்றம், அரசியல் பொருளாதார சின்னாபின்னங்கள், காற்றுப்புகா இடங்களிலும் அரசியலின் ஊடுருவல், பொருளியல்வாழ்வின் தன்னிலை வளர்ச்சிக்காய் தத்தெடுத்துக் கொண்ட மேற்கத்தைய கலாச்சாரப் பண்புகளும் பண்பாடுகளும் என்று எல்லாமே இப்போது அரசியலையும் கேலிக்கூத்தாய் பொழுதுபோக்க மட்டுமே கவனிக்க வைக்கிறது.

பொழுது போக்க மட்டும் கவனித்து ஒன்றுமே ஆகப்போவதுமில்லை என்று சும்மா இருக்கவும் முடியாது. சும்மா இருத்தல் சுகம் என்று நினைக்க அரசியல் உரிமைகள் மறுக்கப்படாத நாட்டில் பிறந்திருக்க வேண்டும். அல்லது அடுத்தவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தன்னைத்தானே சமூகத்திலிருந்து பிரித்துப் பார்த்து திருப்தியடைந்து கொள்ளும் சுயநலமான சுயமுக விருத்தியடைந்திருக்க வேண்டும். அதுவும் இல்லையா சோற்றால் அடித்த பிண்டங்களாய் இதெல்லாம் புரிவதில்லை என்று விலகிப்போய்விட வேண்டும். இதில் ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறோம் என்பது அவரவர் மனட்சாட்சிக்குத் தெரியும்.

வெள்ளித்திரையில் தோன்றுபவர்கள் தேர்தல்  அரசியல் விஞ்ஞாபனத்திலும், விளையாட்டுகளில் வெற்றியீட்டியவர்கள் பல்தேசிய நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுவதும் காலத்தின் வழுவன்று. இவர்களைப் போற்றும் பொருட்டு நானும் கூட்டத்தோடு ஐக்கியமாக வேண்டுமா! தமிழனை பொருளாதார அடிமையாய் இருப்பதானால் இரு இல்லையென்றால் புலம்பாதே என்கிற சர்வதேச அரசியல் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, தமிழர்களின் அரசியல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறதா! இந்தக் குண்டுச்சட்டி அரசியல் நடத்தும் தேர்தல் பிழைப்புவாத அரசியல்வாதிகளை நம்பி ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை காவுகொடுக்க முடியாது. கொள்கைகளின் குன்றுகளில் ஏறி நின்று கொடிபிடிக்கும் ஆர்வமும், ஆரவாரமும் இல்லாமல் ஏன் அரசியல் அபிலாசைகளை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போகிறது ஒரு சராசரி குடிமகனால். தத்துவ சித்தாங்களின் துணையின்றி அரசியலை சுத்தம் செய்யவே முடியாதா! இது போல் ஆயிரம் கேள்விகள். பதில் தெரியும், ஆனா தெரியாது!

கலைஞர் கருணாநிதி கையில் கிலுகிலுப்பை தான் டெசோ! அதை சோனியா காங்கிரஸ் புடுங்கிக்கொள்ளும் போது கலைஞர் வீல் என்று வீரிடுவார், ஐயகோ! நான் என்செய்வேன் என்று புலம்புவது போல் நாடகமாடுவார். தி.மு.க அமைச்சர் கனிமொழி குறீப்பிடுவது ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை மாநாட்டை எதிரிகளால் தடுத்து நிறுத்த முடியாதாம். தமிழீழ ஆதரவு காற்றோடு போய் இப்போது அது ‘வாழ்வுரிமை’ மாநாடு ஆகிவிட்டது. அது, இது, எது என்று தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி போல் தேர்தலில் வெற்றி பெற்றால் ஈழம் அமைப்பேன் என்றும், தி.மு.க. வா அல்லது அ.இ.அ.தி.மு.க.வா என்றும் முடிவெடு தமிழா என்று ஆட்சியில் அமர்ந்த தற்போதைய தமிழக முதல்வருக்கு தெரியும் தனக்கு வாக்களித்தவர்களை எப்படி ஞாபகமறதிக்காரர்கள் ஆக்குவதென்று. முன்னவர் மானாட மயிலாட மற்றும் இலவசங்களை கொடுத்தே அதை சாதித்தவர். பின்னவர், விலைவாசி ஏற்றத்தால், மின்தடையால் மூச்சுத்திணற வைப்பவர். இது போன்ற அரசியல் பொறியில் சிக்கிக்கொண்ட தமிழகத்தமிழர்களிடம்  ஈழத்தமிழனின் சுயநிர்ணய உரிமைக்காய் குரல்கொடுங்கள் என்று கேட்கவும், நினைக்கவும் கூட குற்ற உணர்வாய் தோன்றுகிறது. ஆனால், எப்படி எந்தவித குற்ற உணர்வுமின்றி அழிந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தை பகடைக்காயாக்கி அரசியல் நடத்தமுடிகிறது அரசியல் பிழைப்பு நடத்துபவர்களால். குற்ற உணர்வில் குன்றிப்போகாமல் ஈழத்தமிழர்கள் இன்னும் சர்வதேச அரசியல் முயற்சிகளில் முன்னேறிக்கொண்டிருப்பதும் ஒரு ஆறுதலே. விடுதலை வேண்டுவது என்ன கொலைக்குற்றமா!

எங்கள் சொந்த அரசியல் பிரச்சனைகள் இவ்வாறு இருக்க, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுபோட்டி நிகழ்வுகளும் அவை அரசியலாக்கப்படுவதும் நிறையவே பொழுதுபோக்காக, சுவாரஸ்யமாக இருக்கிறது. 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் இல் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் பதக்கம் வாங்குவதில் போட்டி சூடுபிடிப்பதற்குரிய ஆரவாரங்கள் நன்றாகவே தெரிகிறது. Ye Shiwen 16 வயதேயான சீனதேசத்து நீச்சல் வீராங்கனை 400m (400 metre Individual Medley, butterfly, breast stroke, & freestyle - ) நீச்சல் போட்டியில் சில கணப்பொழுதுகள் வித்தியாசத்தில் உலகசாதனையை முறியடித்து புதியசாதனை படைத்து தங்கப்பதக்கம் வாங்க அமெரிக்கா கொந்தளித்துப் போனது அமெரிக்க நீச்சல் குழுவின் தலைவர் வடிவத்தில். Ryan Lochte என்கிற அமெரிக்க வீரரின் சாதனையை கூட அது முறியடித்துவிட்டது தான் அதிர்ச்சிக்கு காரணமோ என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். நிலைமையை ஊதிப்பெருக்கவைத்த பெருமை அமெரிக்க ஊடகங்களையே சாரும்.


கொஞ்சக்காலமாகவே ஒருவர் விளையாட்டுப் போட்டிகளில் உலகசாதனை நிகழ்த்திவிட்டால் ஊக்கமருந்து பாவித்துவிட்டார், உடனே பரிசோதி என்கிற கூக்குரல்கள் கிளம்பிவிடும். அது தான் Ye விடயத்திலும் நடந்தது. இரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட Ye இன் இரத்தத்தில் ஊக்கமருந்தின் தாக்கத்திற்குரிய கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை என்பது தீர்ப்பாகிப்போனது. அமெரிக்காவின் Michael Phelps இப்போது 18 தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்திருக்கிறார். Ye ஐயை குற்றம் சொன்னவுடன், சீனதேசத்தவர்கள் நாங்கள் Being போட்டிகளில் Michael Phelps ஐ சந்தேகப்பட்டோமா என்று கேட்டார்கள். நியாயமான கேள்வியாய்ப் பட்டது எனக்கு.

உண்மையை சொன்னால் எனக்கு Ye Shiwen, Michael Phleps இருவர் பற்றியோ அல்லது அவர்கள் வெற்றி குறித்தோ அதிகம் அக்கறையோ, ஆர்வமோ ஏறபடவில்லை. இது போன்ற விளையாட்டுக்களில் ஏன் காலந்தொட்டு தகிடுதத்தங்கள் நடந்தேறுகின்றன என்பதே மனதில் ஓடியது. ஒலிம்பிக்ஸ் கூட வியாபாரம் தான் என்பது அதை நடத்த நாடுகளுக்கிடையேயான போட்டியும் அதுகுறித்த சர்ச்சைகளும் மறுபடியும் ஒருமுறை சமீபத்தில் நிரூபித்திருக்கின்றன.


இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க கண்ணில் பட்டது சீனதேசத்தில் எப்படி குழந்தைகள் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களுக்கு தயார்ப்படுத்தப்படுகிறார்கள் என்கிற படங்கள். திடீரென்று எங்கிருந்துதான் அதையெல்லாம் கண்டுபிடித்தார்களோ! யார் கண்டெடுத்தார்களோ! வழக்கமாக சீனா மேல் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிறையவே உண்டு. இது போன்ற பதக்க கனவுகளுக்காக, சர்வதேசத்தில் சீனாவின் பெருமையை உயர்த்த குழந்தைகளை சீன அரசு தனியே பெற்றோரிடமிருந்து கூட்டிச்சென்று பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்துகிறார்கள் என்பதை பீயிங் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டிகளின் போது கேட்டும் பார்த்தும் இருக்கிறேன். சரியென்று, என் பங்கிற்கு என் சீனதேசத்து தோழியை கேட்டேன் இதுபற்றி. அவர் சொன்னார் பெற்றோர்கள் பணத்துக்காக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். இவர்கள் வென்றுவிட்டால் பின்னர் விளம்பரங்களில் நடித்தும் மற்றும் புகழ் மூலம் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்றார். சரி அதுதான் எழுதப்படாத விதியாயிற்றே!

ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், ஈழத்தில் என்று குழந்தைகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படாத அமெரிக்கா திடீரென்று சீனக்குழந்தைகள் மேல் கரிசனை கொள்ளும். ஈராக்கின் மீதான பொருளாதாரத்தடையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் அரை மில்லியன் (5 லட்சம்) என்கிறார்கள். உலகத்தின் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளை எம் ஈழத்துக்குழந்தைகளின் தலை மேல் ராஜபக்‌ஷேக்கள் கொட்டியபோதும் அமெரிக்கா துடிக்காமல் சீனத்தேசத்து குழந்தைகளுக்காக, அங்கே மீறப்படும் மனித உரிமைகளுக்காக துடிக்கிறது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. சீனா உலகை ஆளும் காலம் வந்தால் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் என்ன நடக்கும் என்பதை காண நான் ஆவலாய் உள்ளேன். நான் மட்டுமல்ல என்போன்ற ஈழத்தமிழர்கள் அனேகரும்!

சரி, விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி மாட்டிக்கொள்ளும் ஊக்கமருந்து குறித்து பார்க்கலாம்.  Reuters செய்தித்தளத்தில் ஆரம்பகாலங்களில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெல்ல என்னவெல்லாம் சாப்பிட்டார்கள் என்று படித்த போது லேசா வயிற்றைப் பிரட்டுது. பழைய காலங்களில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்கள் தங்கள் ஹார்மோன்களை ஊக்கப்படுத்த மிருகங்களின் Raw Testicles ஐ சாப்பிட்டார்கள் என்கிறது Reuters செய்தி. Reuters, Ye இன் பெயரை தவிர்த்திருக்கிறதா அல்லது அவரது ஊக்கமருந்து குறித்த சர்ச்சைக்கு மறைமுகமாக பதில் சொல்கிறதா! எல்லாம் அரசியல் மயம்.

”As soon as the fight against stimulants and steroids began to produce results, potential cheats rapidly shifted towards blood doping in the 1970s and 1980s.”

”The IOC banned blood doping as a method in 1986, but was not able to put in place a reliable test for the blood drug erythropoietin (EPO) until the Sydney Olympic Games in 2000.”

இதெல்லாம் புதிதுமில்லை. இனிமேல் நடக்காது என்று யாரும் உத்தரவாதம் தரப்போவதுமில்லை. 1896 இல் ஒலிம்பிக்ஸ் தொடங்கிய நாள் முதல் அதன் வீரர்கள் ஊக்கமருந்தின் வடிவங்களாக எதையெதையோ பாவித்திருக்கிறார்களாம்.

”Now the World Anti-Doping Agency's "prohibited" list runs to hundreds of substances. And the liquid chromatography and mass spectrometry testing equipment at the London 2012 anti-doping lab can screen up to 400 samples a day for more than 240 banned substances in less than 24 hours.
Yet Olympic historians are sure dopers will always be ahead.”


ஒரு ஆத்மதிருப்திக்காய் திறமையுடன் விளையாடும் ஒரு விளையாட்டு வீராங்கனை, வீரரின் வெற்றியை கூட சந்தேக கண்கொண்டு பார்ப்பது மட்டுமல்ல, தகிடுதத்தம் செய்து வெல்லுபவர்களால் மற்றவர்களின் நிஜத்திறமையும் அடிபட்டுப்போகிறது.

ஒலிம்பிக்ஸ் முதல் கிரிக்கெட் வரை தகிடுதத்தங்கள் நடந்த வரலாறுகள் அந்த விளையாட்டுகள் குறித்த கசப்பையே உண்டாக்குகிறது. விளையாட்டுக்களில் வன்முறையும் பங்குவகிக்கிறது உதாரணம் Ice Hockey. விளையாட்டுகளில்  அரசியலும் தன் பங்கிற்கு ஆட்சி செலுத்துகிறது. அரசியல் தனியாய் கேலிக்கூத்து நடத்துவது வேறு. அது தனிப்பொழுதுபோக்கு. அரசியல், விளையாட்டு என்று எங்குமே எதிலுமே வெற்றி, புகழ் என்னும் போதை, பணம் என்னும் சன்மானம் தான் குறியாகிப்போகிறது.


நன்றி: படங்கள் Google, Google +