ஜூலை 22, 2012

பட்டிப்பூ ஸ்பரிசங்கள் மற்றும் ‘நான்’!


மனம் நிலையில்லாத, வினோதமான ஒரு உணரமுடியாப் பொருள். எத்தனை சொன்னாலும், தட்டிக்கொடுத்தாலும் சில சமயங்களில் விடாப்பிடியாய் ஏதோவொன்றை மறக்க, வெறுக்க அல்லது நினைக்க வைக்கிறது. சில நேரங்களில் இயல்பாகவும், சில நேரங்களில் வலுக்கட்டாயமாகவும் நினைவுகள் பின்னலாய் உயிரை கட்டிப்போடவும் செய்கிறது. அதிலிருந்து விடுவிக்க வேறேதோவொன்றில் கவனமாற்றம் வேண்டியிருக்கிறது. ஏதாவது வாசிக்க வேண்டும் எனக்கு. பிடிப்புகள் ஏதுமில்லையென்றால் நினைவுகள் காற்றில் குதிரையாய் அலைந்து திரிகிறது.

ஏகாந்தப்பொழுதுகளில் கடற்கரையில் சின்னச்சின்ன, வட்டவட்ட குமிழிகளோடு தவழ்ந்து வந்து அலை என் கால் நனைக்க வருவதாயும்; அது என் பாதங்களுக்கு அருகில் வரும்வரை காத்திருந்து பின்னர் நான் ஓடுவதாயும் என் சிறுபிராய கடற்கரை அனுபவ நினைவலைகளுக்குள்  என்னை இழுதுக் கொள்வதுமுண்டு. எப்போதும் மனதோடு அசைபோடும் ஒரு சுகமான வாழ்வனுபவம் இது. பொங்கியெழுந்து எதையோ அள்ளிக்கொண்டு போகப்போவது போல் பிரவாகம் எடுத்து, மெல்ல, மெல்ல தன் வேகம் குறைத்து கரை தொட்டு, மறுபடியும் சுருண்டு, மடிந்து பின்நோக்கி நகரும் அலைகளைப்போலவே சில நினைவுகளும், என் இயல்புகளும் ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்.

இது போல் சிறுபிராய நினைவுகள் என்றாலே மனம் இயல்பாய் ஈழத்தில் வாழ்ந்த நாட்களுக்குள் நினைவுகளுக்குள் என்னை தள்ளிவிடும். உருண்டோடும் வருடங்கள் வயதோடு இளமையை பறிக்க, சிலநேரங்களில் மனமோ அதையும் தாண்டி இளம்பிராயத்திற்கு திரும்பி, தேங்கி நின்று திரும்ப மறுத்து அடம்பிடிக்கிறது, சிறுகுழந்தையாய். மனம் ஏழுகடல், ஏழுமலை கடந்து ஈழத்துக் கடற்கரையில் கால் பதிக்கிறது. நான் வாழ்ந்த ஊரில் இலங்கை கடற்படை தாக்குதலுக்குப் பயந்தே கைவிடப்பட்ட, எப்போதுமே பெயிண்ட் அடிக்கப்படாமல், திருத்தப்படாமல் பட்டிப்பூக்களால் இயற்கையாய் ஒழுங்கின்றி சுற்றிச்சூழப்பட்டு கடற்கரையோடு ஒட்டியிருந்த ஒரு உடைந்த, துருப்பிடித்த ராட்டினம். அதன் நினைவுகள் கலையாமல்  இப்போதும் சுற்றிக்கொண்டே மயக்கம் வரவைக்கிறது உள்ளுக்குள்.

ஈழத்துக்குழந்தைகளின் பறிக்கப்பட்ட, இழந்த சந்தோசங்களின் சின்னங்களாய் இது போல் என் மண்ணில் நிறைய இருக்கும். இருந்தும் எங்களுக்கு அது தான் ஏதோ பெரிய பொழுதுபோக்கு போல் அதில் ஏறியமர்ந்து துருக்களையும், துருத்தல்களையும் மறந்து எதையெதையோ கற்பனை செய்து விளையாடி இருக்கிறோம். காலப்போக்கில் அதன் பயனைவிட ஆபத்து அதிகம் என்பதால் அதை கடற்கரை ஓரத்திலிருந்து அகற்றி விட்டார்கள் ஊரிலுள்ள இளைஞர்கள். சிறுபிராயத்தில் தான் யதார்த்தத்தின் உறுத்தல்களின்றி எத்தனை, எத்தனை கற்பனை அற்புதங்களை மனதில் நிகழ்த்திப்பார்க்க முடிந்தது.

கடற்கரை மணலில் பூத்திருக்கும் மெல்லிய ரோஸ் நிறமும், கத்தரிப்பூ நிறமும் கலந்த அந்த பட்டிப்பூக்கள் (சுடலைப்பூ) மென்மை இன்றும் கண்மூடி உணர்ந்தால் என் விரல்களின் ஸ்பரிசத்தோடு உயிர்த்திருக்கிறது. அந்தப்பிரயாத்திலிருந்தே பட்டிப்பூக்களை நினைக்குந்தோறும் ஒரு அபூர்வ சிந்தனை என் மனதில் ஓடும். ஒவ்வாத சமூகப் போலிப்பூச்சுகளால் தன்னை உயர்வாய்க் காட்டிக்கொள்ளும் ஒரு பெண்ணிடம் இருப்பதை விடவும் இயல்பான அழகு, அறிவு அதனுடன் கூடிய திமிர் எல்லாம் ஒரு ஏழைக்குடிசை அப்பாவிப் பெண்ணிடம் குடிகொண்ட தோற்றம் காட்டும் காட்டுப்பூவுக்கு ஒப்பானது இந்தப்பூவும்! அட, இவ்வளவு அழகான பூக்கன்றுகளை ஏன் வீட்டில் வளர்க்க கூடாது என்று யோசிப்பதுண்டு அப்போது.

எந்த உயிரும், மரமும், கொடியும், செடியும் அதன் வாழ்நிலை சூழலிருந்து வேரோடு புடுங்கியெறியப்பட்டால் வாழாமலே போகும் என்கிற பேரரறிவு அல்லது யதார்த்தம் அப்போது உறைத்ததேயில்லை. இந்த இயற்கையையும் தாண்டி ஒன்று உயிர்த்திருக்கிறது என்றால் அதை தக்கன பிழைப்பதாய் கொள்ளவேண்டியிருக்கிறது.  நான் வளர்ந்து பெரியவளாகி என் இஸ்டப்படி ஒரு வீடு கட்டி இந்தப்பூவைத் தான் என் வீட்டு முற்றம் முழுக்க நட்டுவைப்பேன் என்கிற குழந்தைப்பருவ சிந்தனை என்னை விட்டு இன்னமும் முற்றுமுழுதாய் நீங்கிவிடவில்லை. என் சிறுபிள்ளைத்தனங்களுக்கு மத்தியிலும் மறுதலிப்புகளை முற்றுமுழுதாய் நிராகரிக்காமல் உள்நோக்குடன் ஆராயவும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நான் வளர்ந்தாயிற்று! வயதில் மட்டுமல்ல போர், சாவு, ரத்தம், பசி, அகதிவாழ்க்கை அனுபவங்கள், இவற்றைவிட வாழ்வின் சில சந்தோசமான கணங்களும் நாட்களும், எனக்கு நானே தேடிக்கொண்ட அசெளகர்யங்கள், துன்பங்கள், பிறர் பரிசாய் கொடுத்த கசப்பான அனுபவங்கள், நான் சொந்தமுயற்சியில்  தேடிச்சேர்த்த பொருள் என்று எல்லாமே எனக்கே எனக்காய் நான் தேடிக்கொண்ட அனுபவங்களாய் அவற்றை அசைபோடவும் பழகிக்கொள்கிறேன். இதிலெல்லாம் நான், எனது என்கிற அகம்பாவம் மட்டுமல்ல சுயமுகதரிசனமும் நீக்கமற நிறையவே நிறைந்திருக்கிறது. சந்தோசங்களில் நான் தேடியது என்கிற கர்வமும், துன்பங்களில் இது சரியா, தவறா என்பதே தெரியாமல், புரியாமல் என்னை நானே வருத்திக்கொண்டதாயும் எங்கேயும், எந்த நினைவுகளிலும் நான், நான், நான்...... நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த நான் தான் என்னை இயங்கவைக்கும் உந்துசக்தி என்றால் அதில் மிகையுமில்லை. நான் என்கிற தனிமனிதத் தத்துவம் தான் என்னை என்னைப்பற்றிய பிரக்ஞையுடன் நான் நிலைத்திருக்க உதவுகிறது. இந்த நான் எப்போதும் நானாகவே இருக்கிறேன். அப்படியே இருக்கவும், நிலைக்கவும் வேண்டும்.

இப்போ இந்த நானுக்கு என்ன வந்தது என்று யோசிக்கிறேன். பொருளியல் வாழ்வும், பொருள் வாழ்வும் (Material Life) என் ஆழ்மன நுண்ணுணர்வுகளும், அற்ப ஆசைகளும் மட்டும் ‘நான்’ என்று என்னை சுருக்கிக்கொள்ளத் தெரியவில்லை எனக்கு. எனக்கு சமூகக் கூட்டுவாழ்வும் தேவையாய் இருக்கிறது. சமூகக்கூட்டு வாழ்வில் சமூக, அரசியல் மாற்றங்கள், நிகழ்வுகள் எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் போது ‘நான்’ வியாபித்து அங்கேயும் ஒரு அங்கமாகிறேன். சொந்தவாழ்வோ, சமூகக்கூட்டுவாழ்வோ எனக்கு குறை என்று பட்டியலிடவோ, அழுது புலம்பவோ அதிகம் தெரிவதில்லை. அதில் ஒப்புதலுமில்லை. ஏதாவது இல்லையென்றால் அதை நானே தேடியடைய முயற்சித்துவிட்டு குறைப்பட்டுக்கொள்ளலாம்  என்று நினைப்பேன். ஆனால், முயன்று பின் அது கிடைக்காவிட்டால் புலம்ப மனம் ஒப்புவதில்லை. முயன்றேன் என்கிற திருப்தி கூட என்வரையில் ஒரு சந்தோசமே! எவ்வளவுதான் முயன்றாலும், புலம்பினாலும் நாம் விரும்பியது நடக்காமலே போவதென்பது எனக்கு ஈழம் குறித்த இழப்புகளும் அதன் வலிகளுமே. என் வீட்டுமுற்றத்து பட்டிப்பூ கனவு பொய்த்துப்போனாலும், அந்நியமண்ணில் நான் வாழ எனக்கென்றோர் வீடு நான் தேடிக்கொள்ள முடிந்தது. சொந்தமண்ணில் இன்றும் கூட வாழ்ந்த வீடு, தொழில் இவற்றை இழந்து வீதியில் நின்று ராணுவ அடக்குமுறைக்கு முகம்கொடுக்கும் எம்மவர்  நிலை தான் மனசைப் பிசைகிறது.

இலங்கை ராணுவத்தின் 75% பிரிவுகளில் 60% ராணுவப்படையினரின் எண்ணிகை மற்றைய படைகளையும் சேர்த்து 1, 98, 000 வடக்கில் மட்டும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதை இன்னும் கொஞ்சம் விளக்கினால்..... வடக்கில்

1 ராணுவம் : 5.04 அப்பாவி மக்கள்
அல்லது

200 ராணுவம் : 1000 அப்பாவி மக்கள்.

நன்றி: தமிழ்நெட், Economic and Political Weekly- Mumbai

சொந்தமண்ணில் வாழ்நிலங்களை, வாழ்நிலைகளை இழந்து நித்தியப்படி என்பது சிங்களராணுவத்தின் கொடுமைகள் தான் என்றால் அதை நம்பவும் உலகம் மறுக்கிறது. தமிழீழத்தின் வடக்கு வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் வரையும், கிழக்கிலும் நில ஆக்கிரமிப்பு, நிலம் மற்றும் சொத்து அபகரிப்பு என்பது அன்றாட அரசகருமம் என்கிற அளவு இயல்பாகிப்போனது. ஒன்றல்ல, இரண்டல்ல ஏக்கர் கணக்கில் காணிகள் சிங்கள அரசால், ராஜபக்‌ஷேவின் அரசகண்காணிப்பில் பறிமுதல் செய்யப்படுகிறது தமிழர்களிடமிருந்து. இவர்கள் பறிமுதல் செய்வது காடு, களனி மட்டுமல்ல. ஒற்றைப்பனை தோப்பாய் கருதிய தமிழர்களின் குடிசை வீ்டுகளு, நிலமும், தொழில்வளமும்.

நன்றி: தமிழ் நெட்

இது பழைய செய்தித்தாள் தான். ஆனால், நிலைமைகள் இன்னும் அதே தீவிரத்துடன் தான் தொடர்கிறது. பறிக்கப்படும் நிலங்களுக்கான ஆவணங்கள்- தமிழ் நெட்.

எப்போதும் பிரசன்னமாயிருக்கும் சிங்களராணுவத்தின் மத்தியில் வாழ்வது துயரம் என்றால், அதை விட கொடுமை அரசு நடத்தும் சித்திரவைதைப் படுகொலைகள். அண்மையில் நடைபெற்ற நிமலரூபன் என்கிற ஒரு அரசியல் கைதியின் மரணம் பலரையும் மீண்டும் ஒருமுறை பதறவைத்திருக்கிறது. நிமல ரூபனின் மரணம் பற்றி அவர் தாயார் குறிப்பிடுகையில் “அவனது கால்கள் நேரான திசையில் இல்லாது பிரண்டு திரும்பியிருக்கிறது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இறைவடிவத்திருவுருவங்கள் தான் பாரளுமன்ற கட்டிடங்களுக்குள் கொலுவிருந்து கோலோச்சுகிறது என்பது போன்ற 17 ம் நூற்றாண்டு சிந்தனைகள் இன்னும் கூட மாற்றமடையவில்லை என்பதற்கு இப்படி எத்தனையோ சர்வாதிகார ஆட்சிவடிவங்களை அதன் பிரதிநிதிகளை பார்த்துக்கொண்டிருக்கிறது உலகம். அரசியலும் அறிவியலும் சேர்ந்தே நடத்தும் கண்கட்டு வித்தைகளில் கட்டுண்டு அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை  போற்றித்துதிக்கவும் தொண்டர்படைகள், அபிமானிகளுக்கும் குறைச்சல் இல்லை.   

1757 ம் ஆண்டு மார்ச் மாதம் ப்ரெஞ்ச் நாட்டு மன்னனை சிறிய கத்தியால் தாக்கி சின்னக் காயத்தை உருவாக்கியமைக்காக டேமியன் என்கிற ஒரு மனிதனுக்கு மிகக்கொடிய தண்டனையாக அவனை உடல்ரீதியாக துன்புறுத்தி, சதைப்பிண்டக்குவியலாக்கி கொன்றார்களாம். அந்த தண்டனையின் ஒரு பகுதி அவனது கைகளையும், கால்களையும் நாற்கோணமாக, நான்கு குதிரைகளில் கட்டியிழுத்து, நான்கு துண்டங்களாக அவன் உடலைப் பிய்த்தெறிய வேண்டும் என்பதே. இது மட்டுமல்ல அவன் சதைப் பகுதிகளை வெட்டியும், காயங்களில் அமிலத்தை ஊற்றி எரித்தும் கொடுமைப்படுத்தியதை தண்டனை என்று ஆட்சியாளர்கள் நியாயப்படுத்தியதாக பூக்கோ (Michel Foucault - Discipline and Punish: The Birth of the Prison - ஒழுங்கும் தண்டனையும்: சிறையின் பிறப்பு, 1975) தன் ஆய்வு நூலில் விளக்குகிறார்.

இது போன்ற ஒரு காட்சியமைப்பு Mel Gibson நடித்த ஒரு திரைப்படத்தில் (Braveheart!) தத்ரூபமாய் (Graphics!!) காட்சியாக்கப்பட்டிருந்தது. காட்சி மட்டுமே பூக்கோ விவரிக்கும் காட்சியை ஒத்ததாய் இருக்கும். கதைக்களம் வேறு. அதைப் பார்க்க முடியாமல் ’நான்’ கண்களை மூடி, முகத்தை திருப்பிக்கொண்டது வேறு விடயம். திரைப்படத்தின் பெயர் சரியாய் நினைவில் இல்லை. யாராவது நினைவூட்டினால் நல்லது. பூக்கோவின் ஒழுங்கும் தண்டனையும்: சிறையின் பிறப்பு என்கிற நூல் பற்றிப் படித்துக்கொண்டு போக நினைவில் வந்து போன மூன்று முகங்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்! மரணதண்டனை என்பது குடிமக்களுக்கு கடும் எச்சரிக்கையாக, அரச அதிகாரத்தை, மேலாதிக்கத்தை குறியீடு செய்வதாய் இருக்கவேண்டும் என்று ஆட்சி செய்பவர்கள் நினைப்பதாய் பூக்கோ விளக்குகிறார். அதைப் படித்த போது இம்மூவரின் முகங்கள் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

நான் சொல்ல வருவது டேமியனை நாற்கோணமாய் கட்டியிழுத்து குதிரைகளால் கூட பிய்த்தெடுக்க முடியாத மனித தசைநார்களைத் தான் நிமல ரூபன் தாயார் இப்படிக் குறிப்பிடுகிறார்; “அவனது (நிமல ரூபன்) கால்கள் நேரான திசையில் இல்லாது பிரண்டு திரும்பியிருக்கிறது.”் அதாவது அவன் இடுப்பு எலும்பு அதன் இயற்கையான அமைப்பிலிருந்து விலகியிருந்திருக்க வேண்டும், அவர் தாயாரின் கூற்றுப்படி. அதுமட்டுமல்ல, உடலில் ஏகப்பட்ட காயங்கள் வேறு. தாயார் மகனின் உடலையாவது கொடுங்கள் என்றால் சிங்கள அரசு அதற்கும் ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்து, நிமல ரூபன் என்கிற இளைஞன் மாரடைப்பில் தான் இறந்தான் என்று அறிக்கை தயாரித்து கையொப்பமிடச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.

இதைவிடக் கொடூரங்களை எல்லாம் சந்தித்திருக்கிறான் ஈழத்தமிழன். ஆனால், அவையெல்லாம் வெளியே வந்தாலும் பரிதாபத்திற்குரிய பிறவிகள் என்பது போன்ற பாவனைகளோடு பார்வையாளர்கள் கடந்து போவது அன்றாட நிகழ்வாகிப் போனது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கழிவிரக்கம் அல்ல அவன் தேவை. எங்கள் சுயநிர்ணய உரிமைக்குரிய நியாயத்தையும், அதற்குரிய அரசியல் அங்கீகாரத்தையும் தேடிக்கொள்வதும், தேடிக்கொடுப்பதுமே ஆகும். எங்கள் ஈழத்துக் கலைவடிவங்களில் ஒன்று காத்தவராயன் கூத்து என்பது. தமிழக அரசியலில் கூட ஈழ ஆதரவு என்பதும் அமைப்பு (TESO) வைத்து ஈழ ஆதரவு குறித்து மாறி, மாறி வாக்குப் பிறழ்வதும் எங்களுக்கு காத்தவராயன் கூத்து பார்ப்பதற்கு சமம், வேறொன்றுமில்லை.

என் பட்டிப்பூ ஸ்பரிசங்கள் குறித்த நினைவுகள் மட்டுமல்ல ‘நான்’ என்பது. என்னை சூழ நடக்கும் சமூக, அரசியல் கண்கட்டு வித்தைகள், சமூகக் கூட்டுவாழ்வு என்கிற அங்கங்களிலும் ‘நான்’ நிரம்பி இருக்கிறேன். இவற்றின் காட்சிகள், நிகழ்வுகள், கட்டுக்கதைகள், குறித்த விளைவுகளுக்கு எப்படி ‘நான்’ கருத்துரீதியாக வனையப்படுகிறேன் என்பதுவே என் இருப்பு குறித்தும் அதன் அர்த்தங்கள் குறித்தும் சிந்திக்கத் தூண்டுகிறது!


Images: TamilNet, Google


7 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…

///ஏதாவது வாசிக்க வேண்டும் எனக்கு. பிடிப்புகள் ஏதுமில்லையென்றால் நினைவுகள் காற்றில் குதிரையாய் அலைந்து திரிகிறது.//

மிக மிக உண்மைதான் ரதி

Avargal Unmaigal சொன்னது…

பதிவை படித்து முடித்ததும் மனம் கணக்கிறது.....

வேர்கள் சொன்னது…

இது போல் சிறுபிராய நினைவுகள் என்றாலே .....
என்று தொடங்கி //உருண்டோடும் வருடங்கள் வயதோடு இளமையை பறிக்க// //ஏறியமர்ந்து துருக்களையும், துருத்தல்களையும் மறந்து எதையெதையோ கற்பனை செய்து விளையாடி இருக்கிறோம்.//
என்று
உங்களின் இளமை பருவ நினைவுகளை விவரித்த முறை அழகோ அழகு
பட்டி பூக்கள் குறித்து நீங்கள் சொன்ன விடயங்கள் எனக்கும் தோன்றியதுண்டு
பட்டிபூச்செடியை ஒரு ஏழை பெண்ணோடு ஒப்பிட்டது உண்மையிலே அபூர்வ அழகான சிந்தனைதான்.

// இந்த நான் தான் என்னை இயங்கவைக்கும் உந்துசக்தி என்றால் அதில் மிகையுமில்லை.//

உங்களின் பல கட்டுரைகளில் இந்த "நான்" காணக்கிடைக்கும் :)

//அவையெல்லாம் வெளியே வந்தாலும் பரிதாபத்திற்குரிய பிறவிகள் என்பது போன்ற பாவனைகளோடு பார்வையாளர்கள் கடந்து போவது அன்றாட நிகழ்வாகிப் போனது. //

உண்மையிலும் உண்மை
இதனால்தான் இந்த சமூகம் போலியானது என்ற எண்ணம் வலுப்பட்டுகொண்டே செல்கிறது
மொத்தத்தில் இந்த கட்டுரை பட்டிபூவில் தொடங்கி நீங்கள் சொல்லவந்த விடயம் தெளிவாக சொல்கிறது

Rathi சொன்னது…

அவர்கள் உண்மைகள்,

ம்ம்ம்ம்..... வாசிப்பு என்பது பழக்கமாக்கப் பட்டால் மனதை அமைதிப்படுத்தும் ஒரு நல்ல விடயம்.

Rathi சொன்னது…

வேர்கள், நன்றி.

என் இடுகைகளில் நான் என்பது அதிகம் இருக்கும் :) காரணம் எனக்கு முன்னிலை அல்லது படர்கையில் எழுதுவதென்பது பரிச்சயம் இல்லாத ஒன்று. நான் என்று தன்மையில் எழுதுவது அனுபவப்பகிர்வு கூட. முன்னிலை அல்லது படர்கையில் எழுதினால் இன்னும் மற்றவர்களின் மனவோட்டம் குறித்த ஆழமான பார்வை வேண்டும். நான் இலக்கிய எழுத்தாளர் இல்லையே.

ம்ம்.... சமூகம் குறித்த நம்பிக்கைகள் இற்றுப்போகும் தருணங்களை நானும் உணர்ந்ததுண்டு.

ஹேமா சொன்னது…

பட்டுப்போகாத பட்டிப்பூ வண்ணவண்ணமாய் மனதிற்குள் வாடாமல் ரதி.என்னியும் இழுத்துப்போய் இருந்தி வைத்துக் கதை சொன்னதுபோல இருக்கு.பட்டிப்பூவை இங்கு கோடைகாலப் பூக்களோடு காணுவேன்.நினைப்பதுண்டு வெளிநாடுகளின் அதற்குக் கிடைக்கும் மதிப்பு.சுடலைப்பூவாய் ஒதுக்கும் பட்டுப்பூவும் பட்டுமெத்தையில் வாழும் இங்கு.ஆழச் சிந்தித்து அலையில் கால நனைத்துத் திரும்பும் குழந்தையில் மனநிலையில் ஒரு தளும்பல் மனதுக்குள் !

Rathi சொன்னது…

ஹேமா, வாங்கோ, வாங்கோ :) நீண்டநாளைக்கு பிறகு வந்திருக்கிறியள்.

நான் பட்டிப்பூவை இங்கே பார்த்ததில்லை. ஆனா, நாய் உண்ணிப்பூ என்று ஒரு பூ இருக்கெல்லோ. அதை இங்கே கோடைகாலத்தில் பல நிறங்கள்ல விப்பினம். வீட்டு வாசல்களில் அழகாய் நட்டு வைச்சிருக்கினம்.


//ஆழச் சிந்தித்து அலையில் கால நனைத்துத் திரும்பும் குழந்தையில் மனநிலையில் ஒரு தளும்பல் மனதுக்குள் !//

ம்ம்.......