ஜூலை 08, 2012

சர்வதேச இலக்கிய இந்தியா!!


அண்மையில் என்னை, “இவையளுக்கு என்ன விசரோ...”  என்று சொல்லவைத்த ஒரு விடயம், தமிழ்நாட்டின் இலக்கிய எழுத்தாளர்கள் என்று பட்டம் சூட்டப்பட்ட ஜெயமோகனுக்கும். எஸ். ராமகிருஷ்ணனுக்கும் கனடாவில் வாழும் ஈழத்தமிழர்கள் ஏதோ இலக்கியவிருது கொடுத்தது தான். முன்னவர் ஈழப்போராட்டத்தையும், ஈழப்போராளிகளையும் கேவலப்படுத்தி எழுதுவதையே ஈழம் குறித்த இலக்கியமாய் கருதுபவர் என்பது அவர் எழுத்திலேயே வெளிப்படும் உண்மை. ஈழத்தமிழச்சிகள் இந்திய அமைதிப்படையிடம் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகளைக்கூட எள்ளிநகையாடியவர். மற்றவர் என்ன எழுதுகிறார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரைப் படித்ததும் கிடையாது. ஆனால், இவர் ஈழம் பற்றி ஏதாச்சும் எழுதினாரா, பேசினாரா என்பது ஈழத்தமிழர்கள் பலர் அறியாத விடயம். ஈழம்பற்றி பேசினால், எழுதினால் தான் அவர்கள் இலக்கியவாதிகள் என்கிற விதண்டாவாதம் செய்யவும் நான் தயாரில்லை.

இவர்கள் பற்றி நான் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மேற்கொண்டு என்ன எழுத வந்தேன் என்பதை சொல்லுகிறேன். நான் ஒரு இலக்கிய ஞானசூனியம்.  இலக்கியம் என்றால் தமிழ்பேசும் நல்லுலகில் எப்படி புரிந்துகொள்ளப்படுகிறது என்பதே எனக்குப் புரிவதில்லை. மனிதமாண்புகளை, அவர் தம் சமூக-அரசியல்-வாழ்வாதாரப் பிரச்சனைகளை அதன் அடித்தளத்தை, மனித இயல்புகளோடு சொல்ல முனைவதெல்லாம் என் வரையில் இலக்கியம்! இலக்கியத்துக்கு நான் நட்போ, பகையோ கிடையாது. அது குறித்த என் புரிதல் வேறு. இலக்கியங்கள் மீது நான் விமர்சனம் வைக்கவில்லை. இலக்கியம் என்கிற பெயரில் திணிக்கப்படும், திரிபுபடுத்தப்படும் யதார்த்தங்கள் இலக்கியவாதிகளின் எழுத்து மீது கசப்பையே உண்டாக்குகிறது என்பதையே பதிய விரும்புகிறேன்.

ஜெயமோகன் என்பவர் சோரம்போகும் பெண் தன் கணவனுடன் நல்ல உறவைப் பேணுவாள், மற்றும் ஈழத்தமிழ்ப்பெண்கள் யாரும் இந்திய அமைதிப்படையால் பாலியல் வன்முறைக்கு ஆளாகவில்லை என்பது மாதிரியான படைப்புகளை இலக்கியம் என்பதும்; மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள், கலாச்சாரம் என்கிற பழக்கப்படுத்தப்பட்ட வழக்குகள் எப்படி தனிமனித சிந்தனைகளை கட்டியமைக்கிறது என்கிற யதார்த்தம் மீறி மனிதவாழ்வு ஏன் பெண்குறியோடு சம்பந்தப்படுத்தப்பட்டே பார்க்கப்படுகிறது என்று யோசிக்க வைக்கிறது. இதைத்தவிர்த்து வேறேதாவது எழுதினால் பெரும்பாலும் Irrational Pride, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பெருமைகளை உயர்த்திப்பிடிக்கிறார்கள். அரசியல் கொள்கைவகுப்பாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு இலக்கியம் படைக்கும் திறமையை மதிக்கவும் கூசுகிறது மனசு. அதையெல்லாம் படித்துவிட்டு இந்த எழுத்தாளர்களுக்காக சப்பை கட்டு கட்டும் வித்தை எனக்கு தெரியாதது, பழக்கமில்லாதது.

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் கதையையும் எப்போதோ படித்த ஞாபகம். அதில் கூட அசந்தர்ப்பமான ஒரு சூழ்நிலையில் நடந்த ஆண், பெண் கலவியின் மையத்தை வைத்தே ஏன் காட்சிகளும், கதையும் நகர்த்தப்படுகிறது, விரிவாக்கம் பெறுகிறது என்று யோசித்ததுண்டு. அது ஒரு விபத்து, அதை கடந்து போ என்று ஏன் அந்த நாயகியின் அம்மாவும் சொல்லத்தலைப்படவில்லை. அங்கும் பெண் தான் குற்றவாளியாகவும் ஆக்கப்படுகிறாள். அல்லது, அவள் குற்றவாளியாக்கப்படும் அளவுக்கு சமூகக்கூட்டுமனம் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. ஆண் தன் சமூகத்தளைகளிலிருந்து, முகச்சுழிப்புகளிலிருந்து தப்பித்தலுக்கான நியாங்களையும் இன்னொரு பெண்ணான தன் மனைவியின் பெயராலேயே நியாயப்படுத்த முடிகிறது. ஜெயகாந்தன் எழுத்தை ஆராய்ச்சி செய்யும் இலக்கிய அறிவு என்னிடம் இல்லை. இருந்தும், அந்தக் கதையை படித்த போது உருவான கேள்வி குறித்த மனவோட்டம் இது. இலக்கியவிருது பெற்ற இதுபோன்ற தமிழ் இலக்கியம் பெண்கள், ஒழுக்காற்று விழுமியங்கள் குறித்தே வனையப்படுகிறதா! அது தவிர்த்து தனிமனித விருப்பு, வெறுப்பு, சமூக நிந்தனைகள், அரசியல்-பொருளாதார வாழ்வு எப்படி மனிதவாழ்க்கையை தீர்மானிக்கிறது, புரட்டிப்போடுகிறது என்பது பற்றி எழுதப்படுவது குறைவாகவே உள்ளதா!

பெண்களுக்கு தங்கள் மீதே கழிவிரக்கமும், குற்ற உணர்வும், அவர்களையே குற்றவாளிகளாகவும் ஆக்கும் குயுக்தியான எழுத்துக்குப் பெயர் தான் இலக்கியம் என்றால், அந்த இலக்கியத்தை நான் புறக்கணிக்கிறேன்.


இது போன்ற இலக்கியம் என்பது ஒரு சமூகத்தை, அதன் கூட்டுமனதை பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதை இவர்கள் மறந்து போகிறார்களா! அந்த கூட்டுமனோபாவத்தை மாற்றி, தனிமனித சிந்தனையை மேம்படுத்தும் வேலையை இலக்கியம் மூலம் செய்தால் என்ன கெட்டுப்போகும்!இலக்கியம் என்பதும் அது குறித்த புரிதல் என்பதும் கூட என்வரையில் சில இந்திய எழுத்தாளர்களின் எழுத்து மூலமே அறிமுகமானது, கட்டியமைக்கப்பட்டது. என்னைக்கவர்ந்த இந்திய எழுத்தாளர்கள், படைப்பாளிகள் சிலர், அருந்ததி ராய், Rohinton Mistry (A Fine Balance), ஏப்ரஹாம் வர்ஹீஸ் (An amazing writer!!!- Abraham Verghese-Cutting for Stone, இது பற்றி ஒரு தனிப்பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன்.), தீபா மேத்தா. இவர்கள் எழுத்தும், படைப்புகளும் ஏன் எனக்குப் பிடிக்கிறது என்று படிப்பவர்கள் யோசிக்கலாம். மனிதமாண்புகளை, இயல்புகளை ஒதுக்கி மத, கலாச்சார, அரசியல் விழுமியங்களை அரசியல் கொள்கைவகுப்பாளர்களுக்காய் தூக்கி நிறுத்தும் எத்தனிப்புகள் இன்றி இவையெல்லாம் எப்படி இயல்பாய் மனிதவாழ்வை, தனிமனித சிந்தனையை, வாழ்க்கை நெறிகளை உருவாக்குகிறது, புடம்போடுகிறது என்பதை சொல்லும் கதைகள், படைப்புகள் இவர்களுடையது.

மற்றப்படி, இவர்களின் அரசியல் சார்புநிலைகள் பற்றி நான் இதுவரை அறிந்ததில்லை. அவர்கள் எழுத்தில் அது அதிகம் புலப்பட்டதும் இல்லை. இருந்தும், அரசியல் கடந்தும் இலக்கியம் என்பது சாதாரண, சராசரி மனிதர்களின் மனவழி உண்மையை, யதார்த்தத்தைப் பேசும் என்பது இவர்கள் எழுத்தின் வழி புரிந்துகொண்டது. எல்லாவற்றுக்கும் மேல் இவர்கள் இந்தியா கடந்து சர்வதேச அளவில் அறியப்பட்டவர்கள். அதனால், இவர்களின் எழுத்தின் வழி இந்தியா 2020 இல் ஒளிரும் என்பதையும் தாண்டி இந்தியாவின் யதார்த்தம் சர்வதேச மட்டத்தில் அறியப்படுகிறது.

துரதிஷ்டவசமாக, நானறிந்த வரையில் அருந்ததி ராய் தவிர்ந்த மற்றவர்கள் எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதில்லை. அவை மொழிபெயர்க்கப்பட்டால் வாசிக்காமல் போகக்கூடாது.

நான் வாழும் சூழல் தமிழ் இலக்கியத்துக்கு என்னை அதிகம் அறிமுகப்படுத்தியதில்லை. அதுவும் எனக்கு ஒரு குறையே. ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ரா இவர்களையே இலக்கியவாதிகள் என்று கொண்டாடினால், அவர்கள் குறித்த தமிழ்கூறும் நல்லுலகின் விமர்சனங்களே இவர்கள் எழுத்தை படிக்காமல் கடந்து போக வைக்கிறது. இன்னொரு பெரிய குறை எனக்கு ஈழத்து இலக்கியவாதிகள் குறித்தும் அதிகம் அறிமுகம் இல்லாமற்போனது. ஷோபாசக்தியை இலக்கியவாதி என்று கொண்டாடும் அபத்தத்தை என்னால் செய்யமுடியாது. அ. முத்துலிங்கம் பலரால் அறியப்பட்டவர். இவர் எழுத்து ஏனோ என்னை கவர்ந்ததில்லை. பொழுதுபோக்க வாசிப்பவர்களை இவரின் எழுத்து ஏமாற்றாது. தமிழ்நதியின் ஈழத்தின் போரியல்வாழ்வு, போர் குறித்த படைப்புகள் நான் விரும்பிப் படிப்பதுண்டு. உயிர்ப்பயம், மரணம், இரத்தம், சதை, பசி, நாடோடியாய் அகதி வாழ்க்கை, இவற்றுக்கிடையே சமூகத்துக்காய் காபந்து பண்ணப்படவேண்டிய கற்பு என்பது எல்லா ஈழத்தமிழர்களுக்கும் பொருந்துவது போல் எனக்கும் பொருந்துவதால் அவர் எழுத்தோடு ஒன்றிப்போகவும் முடிகிறது.

வேலைத்தளத்தில் நான் எல்லாவிதமான மனிதர்களுடனும் பேசும் சந்தர்ப்பம் உண்டு. வேலை அதிகம் இல்லாத நேரங்களில் இந்தியாவின் தயாரிப்பான முகத்தின் தோலை வெள்ளையாக்கும் (Bleaching) முகக்களி (Cream) இல் உள்ளடக்கப்பட்டிருக்கும் இரசாயன கலவையும் (Benzoyl Peroxide) அதன் அளவு இந்திய கனேடிய உற்பத்திகளின் இடையே உள்ள விகிதாசார வித்தியாசங்கள் முதல் உலக அரசியல் வரை அலசுவதுண்டு. இவர்களுக்கு எப்படி அந்த முகக்களி பற்றி தெரியும் என்று கேட்டேன். உபயம் ஷாருக்கான் நடித்த விளம்பரம் என்றார்கள். அதே போல் புத்தகங்கள் பற்றியும் அவரவர் படித்த விடயங்களை நாளை என்று ஒன்று இல்லையென்கிற அளவுக்கு அலசோ, அலசென்று அலசித்தீர்ப்போம். அப்படி பேசிய பொழுது தான் ஒரு புத்தகம் பற்றி பேசத்தொடங்கினார்கள்.

Behind the Beautiful Forevers - Katherine Boo, இந்தியாவின் மும்பையின் சேரிவாழ் மக்கள் பற்றிய ஓரு படைப்பு. அதை கடைக்கு போய் உடனடியாக வாங்கி எனதாக்கிக்கொண்டேன். நல்ல படைப்புகள் என்றால் தவறவிடக்கூடாது என்பது என் கொள்கை :) கதையை படித்துக்கொண்டு போகப்போக புரிந்தது அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் தமிழ்நாட்டில் இருந்து விமானநிலையக்கட்டுமானப் பணிகளுக்காக அழைத்துவரப்பட்டு மும்பாயில் சேரி ஒன்றை உருவாக்கி அங்கேயே தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்கள் என்பது. மும்பாயின் சேரிகள் பற்றி இதற்கு முன் அறியாததில்லை. ஆனால், அந்த மனிதர்களின் இயல்புகள், வாழ்க்கை முறைகள், அன்றாட வாழ்வாதாரப்பிரச்சனையின் சவால்கள், அவர்கள் வாழ்வை அலைக்கழிக்கும் அரசியல், குடும்ப பிரச்சனைகள் பற்றி முழுதாய் ஒரே புத்தகத்தில் படித்ததில்லை. கதாசிரியர் மும்பாயில் அண்ணாவாடி என்கிற சேரியைப் பற்றி ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு மேல் கவனித்து, ஆராய்ந்து உண்மைகளை கதைவடிவத்தில் கொடுத்திருக்கிறார்.

அப்துல் என்கிற 17 வயது சிறுவனின் கதாபாத்திரம் மூலம் கதை நகர்த்தப்படுகிறது. அவனின் வயதை உடற்பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தும் மருத்துவர் நீ 2000 ரூபாய் கொடுத்தால் உன் வயது 17. இல்லையென்றால் 20 வயது என்று சொல்வது எனக்கு அதிர்ச்சியில்லை. ஆனால், இங்கு வாழும் சிலருக்கு அது பெரிய அதிர்ச்சி. அதேபோல் எல்லா சராசரி இந்தியர்களின் பிரச்சனைகளையும் ஒரு பதினேழு வயதுப் பொடியனின் பார்வையில் சொல்லி இந்தியாவின் மறுபக்கத்தை எழுத்தில் வடிக்கிறார் எழுத்தாளர். ஃபாத்திமா என்கிற பெண்ணின் பாத்திரப்படைப்பு சமூகத்தால் ஏதோவொரு காரணத்தால் ஒதுக்கப்படும் பெண் இந்த சமூகத்தை தன் வழியில் எப்படி பழிவாங்குவாள் என்பதன் வடிவம். ஆஷா என்கிற இன்னோர் பெண் பாத்திரம் ஆண்களை, ஆணாதிக்கத்தை எள்ளிநகையாடும் வடிவம் என்று எல்லாரும் வேதனைகளோடு, அவரவர் இலக்குகளோடு படிப்பவர்களின் மனங்களில் நிறைகிறார்கள்.  இது எல்லாத்தையும் விட, அது அண்ணாவாடி என்கிற தமிழர்கள் வாழும் சேரி என்பது, தமிழா நீ எங்கே போனாலும் அவலவாழ்வா என்று வேதனைப்படவும் வைக்கிறது.

உலகின் மூன்றில் ஒரு பங்கு வறுமையையும், நான்கில் ஒரு பங்கு பட்டினியையும் எதிர்கொள்ளும் நாட்டின் மறுபக்கத்தை தான் தன் எழுத்தில் கொண்டுவர நினைத்ததாக Behind the Beautiful Forevers - Katherine Boo குறிப்பிடுகிறார். இந்தியாவின் அரசியல், பொருளாதார கொள்கைள் ஈழத்தமிழர்கள் வாழ்வையும் சீரழிக்கும் அபாயம் உண்டு. இதுபோல் யாராவது ஈழம்பற்றி புத்தகம் எழுதும்முன் ஈழத்தமிழர்கள் விழித்துக்கொள்வது நல்லது.

மூன்றாம் உலகத்தில் இன்னல்கள் நிறைந்த, கஸ்டஜீவனம் நடத்தும் மாந்தரின் வாழ்வியல் போராட்டங்களை இது போன்று சர்வதேச எழுத்தாளர்கள் வெளிக்கொணரும் போது, நான் பேசும் மொழிசார் இலக்கியங்கள் எதைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறது என்றும் யோசிக்க வைக்கிறது. அதேபோல், தோலை வெள்ளையாக்க முகக்களியில் சேர்க்கப்படும் Benzoyl Peroxide போன்றது தான் இலக்கியத்தில் சேர்க்கப்படும் அரசியலின் அளவும். அது இல்லையென்றாலும் பலனில்லை. அது கொள்கைத்திணிப்புகள் என்கிற அளவில் இருந்தால் ஆபத்துவிளைவிப்பதாகவும் ஆகிப்போகிறது. பெண்ணின் குறி தாண்டியும் சமைக்கப்ட்ட  சமூக தமிழ் இலக்கியங்கள் குறித்து அறிந்து கொள்ள எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. யாராவது நல்ல இலக்கியங்களை, இலக்கியவாதிகளை அடையாளம் காட்டுங்கள் எனக்கு.