ஜூன் 15, 2012

நாம் தமிழர் கட்சியும் ஈழத்தமிழனும்


என் மனப்பதிவுகள்..... Bury your head in the sand!


ஈழத்தமிழாய் பிறந்ததால் அரசியல் பற்றி எதையாவது கண்டபடி புலம்புகிறேனோ என்று எதையும் எழுதாமல், புலம்பாமல் புதினம் மட்டும் பார்க்கலாம் என்று ஒன்றிரண்டு நாட்கள் பேசாமலிருந்தேன். ஆடினகாலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பது போல் எனக்கு எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாததால் சுதந்திரமாக என் கருத்தை பகிராமலும் இருக்க முடியவில்லை.

எல்லா நிகழ்வுகளும் அதன் போக்கில் தான் நிகழ்கிறது. அதுகுறித்து  நாம் அலட்டிக்கொள்வதால் எதுவும் மாறப்போவதில்லை என்று பாதிக்கப்படாதவர்கள் நியாயம் கற்பிக்கலாம். என்னால் முடியவில்லை அப்படி வாழாதிருக்க. தமிழக அரசியல், ஈழ அரசியல் நிகழ்வுகள், நகர்வுகள் எங்கோ எனக்குள் ஒரு பாதிப்பை உருவாக்கிச் செல்கிறது.

எங்கள் உரிமைப்பிரச்சனை அரசியல் சேற்றுக்குள் மீண்டும், மீண்டும் சிக்கவைக்கப்படுவது என் அறிவுக்கு எட்டியவரையில். தமிழக அரசியலில் அவதானித்த இரண்டு விடயங்கள், ஒன்று டெசோ (TESO) தமிழீழ ஆதரவாளர் அமைப்பு, தி.மு.க. அரசியல் கட்சியால் ஈழ ஆதரவுக்காய் உருவாக்கப்பட்டதாம். இன்னொன்று சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் ஆவணம் என்கிற பெயரில் அதன் யாப்பு குறித்த விமர்சனங்கள், அவர் பெரியார் கருத்துகள் பற்றி பேசுவதன் விமர்சனங்கள்.

டெசோ பற்றி எனக்கு அதிகம் பேச ஒன்றுமே இல்லை. முன்னாள் தமிழகமுதல்வர் தனக்கு அரசியல் வளர்க்க நேரிடும் போதெல்லாம் உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி முதல் இது போன்ற அமைப்பு என்று எதை வேண்டுமானாலும் பொழுதுபோக்கிற்காய் செய்பவர். இவரை ஈழத்தமிழர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை என்று புரிந்துகொண்டிருக்கிறோம். தவிர, ஹிந்தியை எதிர்த்தால் அது இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்துக்கு எதிரானது என்று தமிழக தமிழ்த்தேசியம், திராவிடக்கொள்கையை அரசியலுக்காய் கைவிட்டதையும் நினைவு கூறுகிறோம்.

ஆனாலும், குறிப்பாக நாம் தமிழர் கட்சி குறித்த விமர்சனங்கள், சீமான் பெரியார் குறித்து பேசும் பேச்சுகள், நாம் தமிழர் கட்சி யாப்பு பற்றிய விமர்சனங்கள், இதில் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை (தமிழ்த்தேசியம்) கூட அதன் உள்ளீடாக பார்ப்பது என்று நிறைய இருக்கிறது.

என்னுடைய அறிவுக்கு எட்டியவரையில் தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நியாயபூர்வமாய் முன்னிறுத்தியது கிடையாது. இப்போது என்ன புதிதாய் என்று மண்டையை உடைக்க மட்டுமே முடிகிறது.

எல்லாத்துக்கும் மேல் தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது மக்கள் மயப்படுத்தப்பட்ட ஈழ ஆதரவு என்பது என் புரிதல். இங்கே மக்களை ஒருங்கிணைக்க அரசியல் தேவைப்படுகிறது. ஆனால், அரசியல் வழக்கம்போல் குழப்பங்களை, குறைபாடுகளை கொண்டதாய் இருக்கிறது.
அரசியல் என்கிற நோக்கில் ஈழப்பிரச்சனையை, ஈழத்தமிழ்த்தேசியத்தை எடுத்தாள்வது எரிச்சலையும், வேதனையையும் மட்டுமே மிஞ்சவைக்கிறது.

“....அதாவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இதன்படி ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக முடியாது......”

இது நாம் தமிழர் கட்சியின் ஆவணம் பற்றிய கீற்று கட்டுரையில் கண்டது. கட்டுரையாளர் என்னைவிட அரசியல் தெரிந்தவர் என்று நம்புகிறேன். இருந்தாலும் என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.

நாம் தமிழர் அமைப்பு தங்களை அரசியல் கட்சியாய் மாற்றிக்கொள்ளும், தேர்தலில் போட்டியிடும் என்றுதான் ஆரம்பித்த நாள் முதல் சொல்லிக்கொள்கிறது. அது அரசியல் அமைப்பாகவோ அல்லது அரசியல் கட்சியாகவோ தங்களை கட்டமைத்தோ அல்லது பதிவு செய்துகொள்ளும் பொருட்டு அது இந்திய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இருக்கும், இருக்கவேண்டும். ஆக, ஒரு நாட்டின் அரசியல் கட்சியில் இன்னொரு நாட்டு அல்லது தேசிய இனத்தை சேர்ந்தவர் உறுப்பினராக சேரமுடியாது என்கிற யதார்த்த அரசியல் புரியாதவன் அல்ல ஈழத்தமிழன்.

அடுத்து, தமிழக அரசியலில் ஈழத்தமிழ்த்தேசியம் என்ன பாடுபடுகிறது என்பது நாங்கள் ஏற்கனவே அறிந்தது தான். இது புதிது அல்ல. இருந்தாலும் கட்டுரையாளர் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொண்டால் நல்லது. இங்கே கனடாவில் இருக்கும் நாம் தமிழர் அமைப்பு தங்களுடைய அமைப்பு வேறு, தமிழகத்தின் நாம் தமிழர் அமைப்பு வேறு என்று பகிரங்கமாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இனிமேல் விளக்கமளிக்க வேண்டியவர்கள் கனடாவிலோ அல்லது மற்ற நாடுகளிலோ இருக்கும் நாம் தமிழர் என்கிற அமைப்பின் செயற்பாட்டாளர்கள்.

கட்டுரையின் நடுநிலை என்பது ஈழவிடயத்தில் புலிகளை விமர்சிப்பதால் உருவாக்கப்படும் என்பது ஒரு ஃபாஷனாகவே போய்விட்டது.  கூடவே தமிழியம் என்பது மதத்தோடு சம்பந்தப்படுத்துவதை நாம் தமிழர் அமைப்பு செய்கிறதா அல்லது கட்டுரையாளரின் மாற்றுத்திறனா என்பது என்போன்றவர்களுக்கு புரியுதோ இல்லையோ, மனதில் கேள்வி மட்டும் எழுகிறது. எதுக்கு புதிதாய் பூதத்தை கிளப்புகிறார்கள் என்று.


4 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

இராமேஸ்வரம் பேச்சின் மூலம் தமிழக பொதுமக்களுக்கு அடையாளம் காணப்பட்டார் சீமான் ,
அந்த காலத்தில் அவருக்கு அதரவு தெரிவித்த பலருடைய ஆதரவை தற்போது இழந்திருக்கிறார் ஏன்??
ஒருசமயம் அவர்கள் அனைவரும் துரோகிகளா!!!!!!
எனக்கு தெரியவில்லை......
சீமான் மற்றவர்கள் மேல் குறைசொல்வதும்... மற்றவர்கள் சீமானை குறைசொல்வதும்... அமையபோகும் தமிழ் ஈழத்திற்கு எவ்வாறு உதவும்
அல்லது ஈழத்திற்கு எதிரானவர்களின் நிகழ்ச்சி நிரலை இவர்களில் யார் செயல்படுத்துபவர்கள்
தெரியவில்லை......

Rathi சொன்னது…

வேர்கள், சீமான் மேல் எனக்கு மட்டுமல்ல என்னைப்போல் நிறைய ஈழத்தமிழர்களுக்கு இன்றும் மரியாதை உண்டு.

நான் செய்திகளில் படித்ததைக் கொண்டும், சமூகவலைத்தளங்களில் காணப்படும் தனிமனிதர்களின் கருத்துகள் அடிப்படையில் இவரின் அரசியல் போக்கில் ஒரு தெளிவில்லாத தன்மை காணப்படுவது போல் தெரிகிறது. சரி, அரசியலுக்கு புதியவர் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்கள் சொல்வது போல் சீமானை யாரெல்லாம் முதுகில் குத்தினார்கள் என்பது அவருக்கே வெளிச்சம்.

சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பலர் அவரை விமர்சிக்கும் வேலையே செவ்வனே செய்து முடித்து விட்டார்கள்.

இப்போது நாம் தமிழர் ஆவணத்தை விமர்சிக்கிறார்கள்.

முடிவுகள், விளைவுகளுக்கு காலம் தான் பதில் சொல்லும்.

நான் என் பதிவில் சொல்ல வந்தது தமிழகத்தின் நாம் தமிழர் இயக்கத்தையும் புலத்து தமிழர்களின் அங்கத்துவத்தையும் ஏன் குழப்பிக்கொள்கிறார்கள் என்பதைத்தான்.

பழனி.கந்தசாமி சொன்னது…

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் தேவை என்ன? இதைப்பற்றி ஏதாவது பதிவுகள் இருக்கின்றனவா?

Rathi சொன்னது…

பழனி. கந்தசாமி, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின் மூன்றுவருடங்கள் கடந்து நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.

ஈழத்தமிழர்களின் தேவை என்றைக்குமே கெளரவத்துடன் வாழக்கூடிய சுயநிர்ணய உரிமை தான்.

இடையே எங்களை சோத்துக்கும், துணிக்கும், நாம் இழந்த வாழ்நிலத்துக்கும் , பறிக்கப்பட்ட உரிமைகளுக்கும் அலையோ, அலை என்று எங்களை அலைவதே எங்கள் தேவை என்று இந்தியாவின், இலங்கையின் கொள்கையாகிவிட்டது.

சோற்றுக்கு அலைவதோடு முடிந்துபோவதல்ல எங்கள் பிரச்சனை. அது உரிமைப்பிரச்சனை.

உங்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்களின் தேவைகள் குறித்து தெரிந்துகொள்ளும் ஆவல் இருந்தால் என் பழைய பதிவுகளை படித்துப்பாருங்கள். அதுவுமில்லையென்றால் இல்லையென்றால் தமிழ்மணத்தில் உங்கள் கேள்விக்கு பதில் நிறைய கொட்டிக்கிடக்கிறது.

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.