ஜூன் 11, 2012

ஊரான ஊர் இழந்தோம்......கண்டதும் கற்று பண்டிதன் ஆகிறது என்று ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். நான் எதிலும் பாண்டித்தியம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதையும் தெரிந்துகொள்வதில்லை. ஏன் இப்படி, யார் காரணம், எந்த இயங்குவிதி இப்படித்தான் சில விடயங்கள் குறித்து மனதில் கேள்விகள் எழும்போது பதில் தேடத்தூண்டுகிறது. ஒரு நிகழ்வு அதன் இயல்பில் நிகழ்கிறது. அதை உலக இயங்குவிதிகளோடு பொருத்துப்பார்க்கும், விடை தேடும் அறிவு. சிலவற்றை அது குறித்து ஆர்வமில்லாதவிடத்து கேட்டமாத்திரத்திலேயே மறந்தும் போவேன். சிலது மறக்கவே முடியாதபடி காலத்துக்கும் மூளையின் ஏதோவொரு மூலையில் ஒட்டிக்கொள்ளும். அப்படித்தான் இந்த ஆவணப்படமும், Coming Back - Crimea பார்த்தமாத்திரத்தில் மனதில் படமாய் ஒட்டிக்கொண்டது. அதைப் பார்த்து முடித்தபின்னும் மனம் கொஞ்சநேரம் அதன் காட்சிகளால் அலைக்கழிந்தது. அப்படியே சிலையாய் அசையாமல் அமர்ந்திருந்தேன்.

அதைப்பார்த்து முடித்து யோசிக்கையில் என்னையும் அறியாமல் மனதில் இப்படி ஓடியது, This, so called human history is full of BS.

வரலாறுகளை பின்னோக்கி பார்த்துக்கொண்டே போக அடிமை மனிதன் தான் அவலமாய், அலங்கோலமாய் நான் இழந்த உரிமைகளை ஞாபகப்படுத்துகிறான். என் தூக்கம் பறிக்கிறான். நான் அறுக்க நினைக்கும் என் அடிமைத்தனத்தை நினைவூட்டுகிறான்.  நூற்றாண்டுகளாய் பொருளாதார, அரசியல் அடிமைத்தனத்தின் ஆணிவேர் இன்னும் காத்திரமாய் வேரூன்றி அது பல்வேறு பெயர்களில் பரிணமித்து என் அன்றாட வாழ்வு வரை விழுது பரப்பி நிற்கிறது. நீ இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று மனதில் கேள்வி பிறக்கிறது.

ஒரு நாட்டு செய்திக்கு அந்த நாட்டு ஊடகம், செய்தியாளர்கள், ஆய்வாளர்கள் இவர்களால் தான் அதன் உள்ளரசியல் குறித்து தெளிவான கருத்துக்களை, விளக்கங்களை கொடுக்க முடியும். ஆனால், எந்த செய்திக்கும் அதன் பல கோணங்களை, அவரவர் கொண்ட வெவ்வேறு கொள்கைகளின் அடிப்படையில் அதன் தார்ப்பரியங்களை, அடிப்படைக்கூறுகளை விளக்குவார்கள். பிறகு, அங்கிருந்து அந்த சம்பவம், நிகழ்வு குறித்த பன்முகத்தன்மைகள் கொண்ட கருத்துருவாக்கங்கள் உற்பத்தியாகும். கொண்ட கொள்கைக்காக அதன் அடிப்படையில் நியாயங்களை மறுப்பவர்கள் உண்மையையும் மறுதலிப்பார்கள். கொள்கைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் மனிதம் குற்றுயிராய் பயமுறுத்தும்.

சரி, சுருக்கமாய் நான் பார்த்த ஆவணப்படத்தின் வரலாறு இது தான். ரஷ்யா உடைவதற்கு முன் க்ரீமியா (Crimea) என்கிற பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஜோசஃப் ஸ்டாலினால் எப்படி தேசத்துரோகிகள் என்று லட்சக்கணக்கில் நாடு கடத்தப்பட்டார்கள்; அவர்கள் இன்றுவரை எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்று விரிகிறது காட்சிகள். Crimea முஸ்லிம்கள் Tatar என்று அழைக்கப்படுகிறார்கள். அன்று ரஷ்யாவின் பகுதியாய் இருந்த க்ரீமியா இன்று உக்ரைனின் ஒரு பகுதியாய் இருக்கிறது, ரஷ்யா பிரிந்த பின். உக்ரைனின் இவர்களின் சனத்தொகை விகிதாசாரம் இவர்களை சிறுபான்மையினராய் (12%) ஆக்கியிருக்கிறது. ஜேர்மனுக்கு இரண்டாம் உலகப்போரின் போது உதவினார்கள் என்று பெண்கள், சிறுவர்கள் உட்பட நாடுகடத்தப்பட்டார்கள். ஏறக்குறைய 45-70 வருடங்கள் கழித்து இன்னும் சொந்தநாட்டுக்கு திரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் நிலம், வீடு என்பன தற்காலத்தில் ரஷ்யக்குடிமக்கள் வாழும் இடங்களாய் மாறிப்போயிருக்கிறது.

வீட்டு வாசலில் நின்றுகொண்டே நான் என் ஏழுவயதில் இந்த வீட்டில் இருந்திருக்கிறேன். என் ஐந்துவயதில் இந்த வீட்டில் இருந்திருக்கிறேன். ஒரேயொரு புகைப்படம் எடுக்க என்னை அனுமதி என்று இறைஞ்சுகிறார்கள். அந்த வலி சொந்தமண்ணை, மக்களை, உரிமைகளை இழந்தவனால் மட்டுமே உணரப்படக்கூடிய வலி. ஒரு ஈழத்தமிழனால் உணரப்படும் வலி.


இந்த ஆவணப்படத்தயாரிப்பிற்காய் சிலர் 1944 இல் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு திரும்பிச்சென்று வீட்டு வாசலில் நின்று, தற்போது ரஷயர்கள் இருக்கும் வீடு, தங்கள் வீட்டை ஒருமுறை பார்க்க அனுமதிக்குமாறு கெஞ்சும் போது உண்மையிலேயே உடைந்து போனேன். ஈழத்திற்கு நான் திரும்பிச்சென்றால் இது தான் என் நிலையுமா? கொஞ்சம், கொஞ்சமாய் எங்கள் சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, இறுதியில் சிங்களர்களால் எங்கள் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏதுமற்றவர்களாய்... எங்கே போய் முடியப்போகிறோம்.

Yes, this world is full of fucking bull-shit.

காணொளியை, அதாவது ஆவணப்படத்தை பார்க்க விரும்புபவர்களுக்காய்.


4 கருத்துகள்:

அகநாழிகை சொன்னது…

படிச்சிட்டேன். மிகவும் அருமை. எனக்கு உங்க வலைத்தளம் இருக்கிற விஷயம் இப்போதான் தெரியும்.

//ஒரு நாட்டு செய்திக்கு அந்த நாட்டு ஊடகம், செய்தியாளர்கள், ஆய்வாளர்கள் இவர்களால் தான் அதன் உள்ளரசியல் குறித்து தெளிவான கருத்துக்களை, விளக்கங்களை கொடுக்க முடியும். //

ஊடக தர்மம் என்பது எப்போதுமே இருந்தததாக தெரியவில்லை. செய்திகள் வெளியிடுவதில் சார்பு மனநிலை அன்றும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. இதை மீறிய சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், அவை குறிப்பிட்ட தளத்திற்குள் சுற்றறிக்கையாக பரவல் செய்யப்பட்டு அத்தோடு மடிந்து போகின்றன. அதிலும் காட்சி ஊடகங்கள் செய்கின்ற கருத்தாக்கங்கள் அநியாயம். காணொளி சீரழிவு கருத்தாக்க அரசியலின் உச்ச கட்ட நிகழ்வு.

நீங்கள் சொன்னது தவறேயில்லை.
Yes, this world is full of fucking bull-shit.

இதைக்கூட சொல்ல முடியவில்லையென்றால் உணர்வென்ற ஒன்று இருந்தாலென்ன இழந்தாலென்ன..

நான் ஏற்கனவே உன்னதம் இதழில் Road Movies பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பாலஸ்தீனிய படமான 'The New-Old Road to Jericho' ஆவணப்படத்தின்கருத்து இழையும் இதேதான்.

வாசிக்கப் பகிர்ந்தமைக்கு நன்றி.
இந்த ஆவணப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. இனிதான் பார்க்க வேண்டும்.

வேர்கள் சொன்னது…

எதுவும் சொல்ல தோணவில்லை :(((
ஒன்று மட்டும் உண்மை
yes
Yes, this world is full of fucking bull-shit

Rathi சொன்னது…

அகநாழிகை சார், இங்கே வந்து உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்ம்... என்ன சொல்ல எனக்கும் தெரியவில்லை. அந்த ஆவணப்படம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு அப்படி.