ஜூன் 09, 2012

சிரியாவும் பெரியண்ணனும்சுற்றும் பூமியில் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை, அன்றாட வாழ்க்கைப்பிரச்சனைகள், அரசியல் ஆட்டங்களுக்கும் குறைவில்லை. அன்றாடப்பிரச்சனையில் மூழ்கிப்போய் அரசியலை கடந்துபோகவும் முடிவதில்லை. அது தானே எம்மை ஆட்டிப்படைக்கவும், ஓடவும் வைக்கிறது. எங்கே போனாலும் காதில்விழுவதும், கண்ணில்படுவதுமாய் இருப்பது இப்போது சிரியா, சிரியா, சிரியா.......!

சிரியாவில் மனித உரிமைமீறல்கள் என்கிற ஏகவசனம் தான் மேற்குலகம் முதல் அல்ஜசீரா வரை முதலாளித்துவ ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஒலிக்கிறது. நான் மத்தியகிழக்கு அரசியலை கரைத்து குடித்த ஆள் கிடையாது. இருந்தாலும் அந்தக்கேள்வி எங்கேயோ அடிமனதில் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏன் எத்தனையோ நாடுகளில்  மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் கண்டுகொள்ளாமல் சிரியா என்றவுடன் துடிக்கிறார்கள் என்று. அல்ஜசீரா உருகுவதில் ஒரு நியாயம் இருந்தாலும் இருக்கலாம், மேற்குலகம்!!!!

ஈழத்திலும் இதனை விட ஆயிரம் மடங்கில் தானே மனிதப்படுகொலைகள் நிகழ்ந்தன, பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், சிறுவர்கள் பட்டினிபோடப்பட்டு  படுகொலைசெய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் எந்த மேற்குலக ஊடகமும் இப்படி துடிக்கவில்லை மனித உரிமை மீறல்களுக்காய். ஏனென்று பதில் தெரியும் இருந்தாலும் கேட்கவேண்டிய இடத்தில், நேரத்தில் கேள்வியை கேட்டுவைக்கவேண்டும்.

மத்தியகிழக்கு என்றாலே எப்போதும் ஞாபகத்தில் வருபவர் பெரியண்ணன் அமெரிக்கா தானே. தமிழ்சினிமாவில் ஏதாவது குற்றங்கள் என்றால் காவல்துறைக்கு அவர்களை அறியாமலே யாரவது ஒரு திருடனின் அல்லது குற்றவாளியின் பெயர் ஞாபகம் வருவதில்லையா. அது போல் தான் இதுவும். மத்தியகிழக்காச்சே இதுக்கும் அமெரிக்காவும் சம்பந்தம் இல்லாமலா போகும் என்று அரசியல் தெரியாதவர் கூட யோசிப்பர். சரி, அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் என்ன விட்டகுறை, தொட்டகுறை என்று தோண்டினால் அது லெபனான் வரை நீள்கிறது ப்ளாஷ்பாக். இந்த பழையகதை எல்லாம் தொலைக்காட்சி நடுநிலைநாயகங்கள் சொல்லாமல் விட்டுவிட்டார்களா, இல்லையென்றால் நான் கவனிக்கவில்லையா தெரியவில்லை.

சொல்லியிருப்பாங்க, சொல்லியிருப்பாங்க சிரியாவில் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று.

சரி, சிரியாவுக்கும் லெபனானுக்கும் என்ன சம்பந்தம் என்று தேடினால், அமெரிக்காவும், அது எப்போதும் தன்  இறக்கையில் வைத்து பராமரிக்கும் இஸ்ரேலும் 1976 ம் ஆண்டு பாலஸ்தீனியர்களை அங்கு அழிக்கும் நோக்கத்துடன் சிரியாவை கண்டும்காணாமல் அங்கே அனுமதித்திருக்கிறார்கள். பாலஸ்தீனியர்களும் லெபனிய இடதுசாரிகளும் கிறிஸ்தவ வலது சாரிகளை தோற்கடிக்கும் நிலை வந்ததால் தான் இது நிகழந்தது என்கிறார் நோம்சாம்ஸ்கி. இவர்  மத்தியகிழைக்கைத் தவிர வேறெங்கு பிரச்சனைகள்
நடந்தாலும் அதுபற்றி அதிகம் பேசி நான் கவனித்ததில்லை. சரி, சிரியாவுக்கு வருவோம். பிறகு, 1977இல் வழக்கம்போல் அமெரிக்கா  பின்னிருந்து இயக்க சவுதிஅரேபியாவின் முயற்சியில் லெபனானில் சமாதான உடன்படிக்கை வந்து; அதுவும் பின்னர் இஸ்ரேல் மற்றும் எகிப்தில் அட்சிமாற்றங்கள் ஏற்பட எல்லாம் தலைகீழ். ஆனால், மத்தியகிழக்கில் அமெரிக்காவின் தலைமையில் மொத்த அரசியல் நிகழ்வும் இஸ்ரேலைக் காப்பது, சந்தைப்பொருளாதார முயற்சிகளுக்கு சிரிய ஆட்சியாளர்கள் தடையாய் இருக்கககூடாது என்பதுதான். அதுதான் இன்றுவரை அமெரிக்காவின் சிரியா குறித்த கொள்கை.

அப்படி, இப்படி என்று லெபனானில் மிஞ்சியிருந்த சிரியாப்படைகளை 2004 இல் தான் அமெரிக்காவும்,பிரான்சும் ஐ.நாவில் தீர்மானம்
போட்டு வெளியேற்ற முடிந்ததாம். அதுக்கு காரணம் சிரியா 1990 ஐப்போல 2003இல் ஈராக் மீது அமேரிக்கா போர்தொடுக்க அனுசரணை செய்யாமல் ரஷ்யா பேச்சை கேட்டது தான் என்கிறது வரலாறு. சிரியாவுக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இருக்கும் தொடர்புகள் சுவாரஸ்யமான பெரிய தொடர்கதை. அதை நான் விளக்கினால் பதிவு நீளும். எனக்கும் அது குறித்த உள்ளரசியல் இன்னும் தெரிந்துகொள்ள புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த பெரிய புஷ், கிளிண்டன் வரை அதன் ஆட்சியாளர்கள் சிரியா சொல்பேச்சு கேழாததால் தட்டிவைக்க நினைத்திருக்கிறார்கள், இன்னும் நினைக்கிறார்கள். ஆனால் ஏனோ இழுபறி யாவே தொடர்கிறது கதை.

ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் 47 நாடுகளில் 41 நாடுகள் ஆதரவாய் வாக்களிக்க சிரியாவில் மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து விசாரணை செய்யவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார்கள். வழக்கம் போல் ரஷ்யா, சீனாவுடன் க்யூபாவும் எதிர்த்து நின்றார்கள்.


இதில் ஈழத்தமிழர்கள் விடயத்தை ஒப்பிட்டுப் பார்க்க..... தமிழ்நெட் செய்தித் தளத்திலிருந்து சில பகுதிகள் எனக்கு தெரிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

No UN official called for anything while the massive genocide, including thousands and thousands of women and children was taking place in Vanni.


வன்னியில் ஆயிரம், ஆயிரம் பெண்களும் குழந்தைகளும் உட்பட இனப்படுகொலை செய்யப்பட்ட போது  எந்த ஐ.நா. அதிகாரியும் அதை தடுக்க எதுவும் செய்யப்பட வேண்டும் என்று செயற்படவில்லை.

Former UN chief Kofi Annan runs to and fro for peace mission of UN-Arab League on Syria. In the case of the Vanni war, the Norwegian ‘peace facilitators’ failed even in making the world aware of what was happening.

சிரியா விடயத்தில் முன்னாள் ஐ. நா. செயலர் கோபி அனான் ஐ.நா.-அரபு லீக் இற்குமிடையே (அதாவது அமெரிக்காவின் சார்பில் என்பது என் புரிதல்) ஓடுகிறார் சமாதான முயற்சிக்காய்! வன்னியில் நோர்வேயின் சமாதான முயற்சியாளர்கள் அதிலிருந்து தவறிவிட்டார்கள்.

(அவர்களின் நோக்கம் சமாதன முயற்சியா என்ன!!)

German Chancellor Angela Merkel directly entered into talks with the Russian President Vladimir Putin in Berlin.
ரஷ்யா எதிர்த்தவுடன் ஜெர்மனின் ஏங்கலா மெர்க்கல் ஓடிச்சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உடன் நேரடியாக பேசுகிறார்.

இதுதவிர, அமெரிக்கா, ரஷ்யா சிரியாவுக்கு ஆயுதம் கொடுத்தது என்று குற்றம் சாட்ட, விளாடிமிர் புட்டின் நாங்கள் உள்நாட்டு யுத்தத்தை உண்டு பண்ணுமாறு எந்த ஆயுதமும் கொடுக்கவில்லை என்கிறார்.

http://tamilnet.com/art.html?catid=79&artid=35249

இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா நிகழ்ச்சி நிரல் போட்டாலும் சிரியா விடயத்தில் ரஷ்யா குறுக்கே வருகிறது. சிரியாவில் ஒரே மக்களுக்கிடையே தான் போர் செய்கிறார்கள், ஆட்சிமாற்றம் வேண்டி. நூற்றுக்கணக்கில் சிரியப்பிரஜைகள் இறந்தால் மனித உரிமை மீறல். இனத்துவேஷத்தால் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழன் கொல்லப்பட்டால்!!!!
எது அப்படியோ அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது போல் சிரியா மீது படையெடுக்க முடியாது என்பது தான் யதார்த்த அரசியல் என்பது வரை புரிகிறது. மிச்சத்தை மேற்குலக ஊடங்கங்கள் மற்றும் அல்ஜசீரா சொன்னால் தெரிந்து கொள்வேன். கூடவே, அமெரிக்க கொள்கையையும் சேர்த்துப்பார்த்து நானாகப்  புரிந்துகொள்வேன்.

மனித உயிர்கள் எல்லாம் ஒன்றுதான். அதை நாங்களும் மதிக்கிறோம். அதேபோல் ஈழத்து மக்களின் உயிர்கள் மதிக்கப்பட்டு, எங்களுக்கு நடந்த மனித உரிமை மீறல்களையும்,  போர்க்குற்றங்களையும்  ஒரு சர்வதேச குழு அமைத்து பக்கச்சார்பின்றி விசாரித்தால் என்ன!


படம்: கூகுள்

2 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

ரதி
எனக்கு நம்முடைய அரசியலே அரை குறை
சிரியாவை பொறுத்தவரை ஏதோ உள்நாட்டு சண்டை என்ற அளவில்தான் தெரியும்
உங்களால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக தெரிந்துகொண்டேன் அவ்வளவே
நன்றி

Rathi சொன்னது…

வேர்கள், எனக்கு நம்மூர் அரசியல், சர்வதேச அரசியல் எல்லாமே அரைகுறை தான் :)

என்ன, அரைகுறை என்று ஒதுங்குவதில்லை. உருப்படியாக எதையாச்சும் தேடிப் படிப்பமேன்னு கொஞ்சமாவது தெரிஞ்சுக்கிறது தான் எல்லாமே :)