ஜூன் 07, 2012

அடுத்த தமிழினத்தலைவி!!யார் யார் சிவம்.....அன்பே சிவம்! இதில் யார் என்பதற்கு அறிவும், சிவம் என்பதற்கு உணர்வும் பதில் சொல்லும். அறிவு சார் மனம், உணர்வு சார் மனம் இவற்றால் கட்டுண்டவன் தானே மனிதன். கடந்த சில நாட்களாய் நான் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடடில் ஒரு பெரியவர் தனது எண்பத்தொன்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார் என்று பல ஆரவாரக்கூச்சலும், ஆங்காங்கே அது குறித்த நையாண்டிக் கருத்துகளும் கொட்டிக்கிடந்ததை காணநேர்ந்தது. இதைப்பற்றி யோசிக்கத்தான் எனக்கு அறிவு சார் மனம், உணர்வுசார் மனம் குறித்து கேள்வி ஓடியது. அறிவும் மனமும் யாரை தமிழின தலைவராய் நினைக்கும், ஏற்றுக்கொள்ளும் என்று ஏதோ சிந்தனை.

பிறந்தநாள் கொண்டாடியவர் யாரோ பெரியவர், தமிழினத்தலைவராம்!! அந்தப் பெயரில் எனக்கு எந்தத் தமிழினத்தலைவரையும் தெரியாது என்பதால் 
பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை. அந்த மனிதரின் வாழ்நாள் சாதனைகள்  என்று ஏதோ மிகநீண்ட பட்டியலொன்று கண்ணில் பட்டது. அவர் அரசியலில் பலவருடங்கள் ஊறிப்போனவர். மக்கள் பிரதிநிதியாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியில் இருந்து ஆற்றவேண்டிய கடமைகளை தனிமனித சாதனையாக எப்படி பட்டியலிட முடிகிறது என்று எனக்கு உள்ளுக்குள் கேள்வி ஓடியது. தவிர, அரசியல் ஆட்சியில் ஆற்றும் கடமைகள் தனிமனிதராய் அன்றி தேர்தலில் வாக்களித்த, மக்கள் (கோமணாண்டிக் குடிமகன்கள்) ஆணைக்கேற்ப ஒரு அமைச்சரவையே கூடி எடுக்கும் முடிவுகளாய் நிறைவேற்றப்படும் என்பது தானே ஜனநாயக அரசியல். என் புத்தக ஜனநாயகத்திற்கும், யதார்த்த அரசியலுக்கும் இடையே நிறைய தூர இடைவெளி இருக்கிறது, விட்டுவிடுவோம். என் புத்தக ஜனநாயகத்தில் யாராச்சும் கொள்ளியை வைக்க என்று திட்டுவதும் புரிகிறது. அரசியலில் அவரவர் ஆற்றிய, ஆற்றவேண்டிய அரசியற்கடமைகளை இவர்களே பட்டியல் போடுவார்கள். ஊழல் செய்த பட்டியலை எதிர்க்கட்சிகள், மத்தியில் உள்ளவர்கள் பட்டியல் போடுவார்கள் போல!!

நான் இணையத்தில் வெட்டியாய் பொழுதைக்கழிக்கும் நேரங்களில், தமிழ் கூறும் நல்லுலகில் கொஞ்சநாட்களாய் கவனித்தது, வெட்டி ஆராய்ச்சி செய்தது எல்லாம்,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நடுவர்கள் சுவாரஸ்யமானவர்களாய்  இருக்கிறார்கள் என்பது குறித்துத் தான். பாடல் நிகழ்ச்சிக்கு வரும் நடுவர்களை நான் அதிகம் கவனிப்பதில்லை. அதற்கு இரண்டு காரணங்களில் ஒன்று பெரும்பாலும் இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இருப்பதில்லை. மற்றது, அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் ஐந்தாவது வயதிலிருந்தே இசையை கற்றுக்கொண்டு இப்போது நடுவயதை தாண்டியபின் நடுவர்களாய் இருந்து பாடுபவர்களிடம் உள்ள நிறை,  குற்றம் குறைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விரகதாபத்தில் மோகமுள்ளின் உறுத்தல் பாடலைப் பாடுபவரின் குரலில் ஏற்ற, இறக்கங்களோடு இல்லை என்று பாட்டுப்பாடும் பத்துவயது பாலகனிடம் விமர்சனம் வைக்கிறார்கள். அடுத்தமுறை இன்னும் ஏற்ற, இறக்கம் காட்டு என்று அறிவுரையோடு முடித்துக்கொள்கிறார்கள். தமிழில் குழந்தைகளுக்கு என்று திரைப்படங்களே தயாரிக்கப்படுவதில்லை. இதில் அவர்களின் வயதுக்கேற்ற பாடல்களை தேர்ந்தேடுத்துப்பாட எங்கே போவது. தமிழ்கூறும் மெய்நிகர் உலகில் இருக்கும் சினிமா படைப்பாளிகள் யாராச்சும் கவனித்தால் நல்லது. எங்களுக்கு கவனிக்க வேறு விடயங்கள் இருக்கு என்கிறீர்களா!!

சரி, சரி, தலைப்பு குறித்த விடயத்துக்கு வருகிறேன். நடன நிகழ்ச்சிகளுக்கு வரும் நடுவர்களில் அதிகம் அவர்கள் குறித்து யோசிக்க வைப்பவர்கள் நடிகைகள் குஷ்பு மற்றும் நமீதா. எனக்கு இவர்களோடு எந்த வாய்க்கால், வரப்பு தகராறும் கிடையாது. இருந்தும், இந்த இருவரையும் பார்க்கும் போது எனக்குள் ஏதோவொரு இனம் புரியாத உறுத்தல் உள்ளுக்குள். இவர்களின் அரிதாரம் பூசும் அழகு என்றைக்குமே என்னை பாதித்ததில்லை. நடிகை நமீதா பேசும் தமிழ் அழகு என்று அதை திருத்தாமலே ரசிக்கிறார்கள் உலகத்தமிழர்கள். தமிழேண்டா! நமீதாவின் பேச்சுத்தமிழை ரசிக்கும் அளவிற்கு என்னிடம் பெருந்தன்மையும் கிடையாது.

பிறகு என்னதான் இவர்களிடம் எனக்கு ஒரு உறுத்தலை உண்டுபண்ணுது என்று யோசித்தேன். விடைகாண கொஞ்சம் ஆழமாய் யோசிக்கவேண்டியிருந்தது. இவர்கள் இருவருமே ஒரு திராவிட கட்சியின் தொலைக்காட்சியால் அரசியல், வியாபார குறியீடுகளாய், (கு)யுக்தியாய்   அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் முழுதாய் அரசியலில் குதித்துவிட்டார். ஏதோ தட்டுத்தடுமாறி மற்றவர் இப்போது தான் அரசியலில் அடியெடுத்துவைக்கும் முஸ்தீபுகளில் இருக்கிறார் போலுள்ளது. ஒரு மக்கள் திலகம் அறிமுகப்படுத்திய ஒருவர் தேர்தல் அரசியல் வெற்றிக்குப்பின் தமிழினத்தலைவி ஆகிவிட்டார். இதே மாதிரி போய்க்கொண்டிருந்தால் மக்கள் கலைஞர் அறிமுகப்படுத்தும் யாராச்சும் எதிர்காலத்தில் தமிழினத்தலைவி ஆகிவிடுவார்களோ என்கிற மனப்பிராந்தி, குழப்பம் எனக்கு! ச்சே, ச்சே.... எப்பவுமே தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் என்கிறீர்களா! சரி, பொறுத்திருந்து பார்ப்போம். எதை! யார் வாரிசு என்பதை சொன்னேன். எனக்கு தமிழக உள்குத்து அரசியல் புரியாது. அதனால் பொறுத்திருந்து தான் எதையும் பார்ப்பேன்.

அண்மையில், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்தபின் அதில் வரும் நாயகியை வேறு (இவரின் பெயரும் தெரியவில்லை) 'சின்னக் குஷ்பு' என்று செல்லப்பெயரால் அழைக்கிறார்களாம். எதிர்காலத்தில் இவரும்  தமிழினத்தலைவியாய் போட்டியிடும் சந்தர்ப்பம் வருமோ! சின்னக்குஷ்பு என்று பெயர் சூட்டியதால் சந்தேகம். மற்றப்படி இவரோடும் எனக்கு எந்தக் காண்டும் கிடையாது. எதிர்காலத்தில் இன்னும் யார், யார் அரசியலில் என்னென்ன பதவிகளை வகிப்பார்கள், அதில் தமிழன் தலை எப்படி உருளும் என்று யோசிக்கிறேன்.

எனக்கு என்ன பிரச்சனை! நான் ஏன் இப்பிடியெல்லாம் நினைக்கிறன்!

பிறகு,  ஆளாளுக்கு தமிழினத்தலைவன், தமிழினத்தலைவி என்றால் அப்பாவி பொதுசனம் நான் குழம்பமாட்டேனா. எனக்குத்தெரிந்து தலைவன், தலைவி என்றால் அவர் பெயர் இயல்பாய் மனதில் ஓடவேண்டும்! அடடா! இவரல்லவோ மக்களுக்காய் வாழ்ந்து, மக்களுக்காய் மடிந்தவர் என்று. என் உடல், பொருள், ஆவி தவிர்த்து மிச்சம் எல்லாம் தமிழுக்கு, தமிழனுக்கு  என்றால் எனக்கு நம்ப நெம்ப கஷ்டமாக இருக்கு. முடியல்ல்ல்ல!

யார் தமிழினத்தலைவர் என்பதற்கு சமூகவலைத்தலத்தில் பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் அனுபவம் சார்ந்த இந்தக்கூற்று இந்த சந்தரப்பத்தில் ஞாபகம் வந்தது. அவரவர்க்குப் பிடித்தபடிதான் தலைவர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படித்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழ்சினிமாவும், கொண்டாட ஒரு தலைவனும் இல்லையென்றால் தமிழன் கதி அதோ கதிதான்.

எல்லாவற்றையும் கடந்து தலைவன் என்பதன் உட்பொருளாய் இருக்கும் ஒருவர் இவர். என்னைப்போன்றவர்களுக்குப் பிடித்த தலைவர் இவர்.....!!!

"அண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர். என்னை அவரிடம் அனுப்பிய நண்பர் "அவர் வன்முறை போராட்டங்களுக்கு எதிரானவர், எமது போராட்டம், புலிகள் தொடர்பாக ஏதாவது பேசி போன காரியத்தை கெடுத்து விடாதே" என்று எச்சரித்திருந்தார். நானும் நமக்கு ஏன் வீண் சோலி என்று முன்னெச்சரிக்கையுடனேயே அவருடன் உரையாடினேன். பல்கலைக்கழகத்தில்தான் சந்திப்பு நடந்தது. நான் விடைபெற ஆயத்தமாகும்போது வீட்டுக்கு உணவருந்த வருமாறு வற்புறுத்தி அழைத்தார். சென்றேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை சிரித்தபடி தலைவர் பிரபாகரனின் படம் வரவேற்றது. அதிhந்து போய் நணபர் அவரைப்பற்றி சொன்ன கதையையும் கூறி இது எப்படி உங்கள் வீட்டில் என்று கேட்டேன்.

அவர் கூறியது இதுதான், "நான் விரும்புகிறேனோ இல்லையோ தமிழர்களுக்கு தலைவர் அவர்தான். அவரது போராட்ட முறைகளோடு நான் முரண்படலாம் அதற்காக அவரது தலைமைத்துவத்தை நாம் எப்படி நிராகரிக்கமுடியும். கடல்கடந்து தேசம் கடந்து பல்லின பல் காலாச்சார, வேற்று மொழிச் சூழலில் எனது அறிவுஜீவித்தனத்தையும் புலமையையும் தாண்டி என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது 'பிரபாகரன்" என்ற பெயர்தான். அதற்காகவே இந்த படத்தை இங்கு மாட்டியிருக்கிறேன். எனது பிள்ளைகளும் அவர்களது பூர்வீகத்தை மறக்ககூடாதல்லவா.. இந்த ஒற்றைப்படம் அவர்களுக்கு தமது பூர்வீகத்தை ஞாபகப்படுத்திகொண்டே இருக்கும்" என்றார்."

படம்: கூகுள்


8 கருத்துகள்:

கோவி சொன்னது…

அந்த சின்ன குஷ்பு பேரு ஹன்சிகா..(ஹி ஹி ஹி.)

வேர்கள் சொன்னது…

ரதி
நாங்கள் எப்போதும் எங்களுக்கான தமிழின தலைவரை,தலைவியை திரையில் தான் தேடுவோம் :)))

Rathi சொன்னது…

கோவி, நன்றி :)

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்ம்..... அதான் பயத்தை அதிகமாக்குது :)

ஹேமா சொன்னது…

ரதி....என்னமோ ஆச்சோ ரதிக்கெண்டு ஓடி வந்தன்.படம் தான் மாறிக்கிடக்கு.ரதின்ர மனசு எப்பவும்போலத்தான் !


சூப்பர் சிங்கர் நடுவர்கள்...நான் நினைச்சதை அப்பிடியே எடுத்து விட்டிருக்கிறீங்கள் ரதி....மைண்ட் வொய்ஸ் !

Siva sankar சொன்னது…

:)

Rathi சொன்னது…

ஹேமா.... :)))) ம்... என்ர மனசு எப்பவும் போல தான் கிடக்கு.

நான் எப்பவாச்சும் இணையத்தில் மாட்டுறது தான் பாக்கிறது. எனக்கு ஏனோ பல சமயங்களில் உடன்பட கடினமாக இருக்கும்.

Rathi சொன்னது…

சிவா, :)