ஜூன் 03, 2012

அமெரிக்கா-ரஷ்யாவும், தமிழர்களும்-ஆரியர்களும்வாரயிறுதி, பொழுதுபோக்க தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்தால் பெரும்பாலும் தமிழ்த்தொலைக்காட்சியில் கையில் மைக் வைத்துக்கொண்டு ஒன்று பேசிக்கொண்டிருந்தார்கள் அல்லது பாடிக்கொண்டிருந்தார்கள், அதுவுமில்லை என்றால் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். குறைபாடு என்னிடமா, தொலைக்காட்சியிடமா அல்லது நான் இதுபோன்ற சமூகவிழுமியங்களிலிருந்து விலகி நிற்கிறேனா என்று நினைத்து குழம்பிப்போவது மட்டுமல்ல, ஓரளவிற்கு மேல் என்னால் இதையெல்லாம் ரசிக்கவும் முடிவதில்லை . தமிழ்த்  தொலைக்காட்சியில் இவற்றைத்தவிர வேறெதையும் எதிர்பார்க்கவும் முடியவில்லை என்கிற யதார்த்தமும் உறைக்கிறது. தொடர்ந்து ஒரேமாதிரியான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அலுப்பையும், சலிப்பையும் மட்டுமே விட்டுச்செல்கிறது.

இதற்கு நான் கண்டுபிடித்த தீர்வாய் நிறையவே உலக நடப்புகள் குறித்து அரசியல் கலந்து கொடுக்கும் ஆங்கிலத்தொலைக்காட்சி பார்த்துப் பொழுதை கழிக்கும் நாட்களும் உண்டு. அப்படித்தான் அண்மையில் ஒரு ஆவண/விவரணப்படம் காணநேர்ந்தது. ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டின் (காணொளி ஒருவாரத்துக்கு மேல் அந்த செய்தி தளத்தில் இருப்பதில்லை என்பதால் அதன் இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் அமெரிக்காவின் புவியியல், அரசியல், பொருளாதார கொள்கைகள் குறித்த உடன்பாடுகள், முரண்பாடுகள் பற்றியது. ஏறக்குறைய போரின் விளிம்புக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் வந்து நின்ற காரணக்காரியங்களை விளக்கியது. கம்யுனிசத்தை வீழ்த்த ஜனநாயகம் என்கிற தொனியில் அமெரிக்கா தனக்கான கைப்பாவை ஆட்சியாளர்களை ரஷ்யாவை சுற்றி உருவாக்கி தன்னை அந்த பிராந்தியத்தில் ராணுவ, அரசியல் ரீதியாக பலப்படுத்த நினைத்ததை காட்சிகளால் விளக்கியது. ரஷ்யா போன்ற அணுவாயுத நாட்டுடன் அமெரிக்கா மோதுமா என்கிற கேள்வி ஒருபுறம். மறுபுறத்தில், ஈரானின் அணுவாயுத செயற்பாடுகளை கவனிக்க அமெரிக்கா ரஷ்யாவுடன் கூட்டுச்சேர நினைப்பது யதார்த்த அரசியல். ஆனாலும், இன்றுவரை சிரியா விடயத்தில் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா, கூடவே சீனா குறுக்கே நிற்பது அமெரிக்காவும் ரஷ்யாவும் பயணிக்கும் திசைகளை காட்டுகிறது. ரஷ்யாவுக்கென்று ஒரு ஜனநாயகம் உண்டு என்று விளாடிமிர் புட்டின் சொல்வது கொஞ்சம் சிரிப்பாக இருந்தாலும், அமெரிக்காவை மூக்குடைப்பதாய் ஒரு குட்டி சந்தோசம் மனதிற்குள்.  ஒரு நாட்டின் நாணயத்தை போலவே அதன் அரசியலுக்கும் இரண்டு பக்கம் உண்டு என்பதை இது போன்ற ஆவணக்காட்சிகள் அவ்வப்போது உணரவைக்கிறது.

செச்னியாவின் முஸ்லிம் தேசியவாதம் எப்படி அமெரிக்காவின் சர்வதேச அரசியல் சுழலில் பயங்கரவாதம் என்கிற துருப்புச்சீட்டாய் சிக்குகிறது என்பது காணொளியில் காட்சியாய் விரிகிறது. செச்னியா ரஷ்யாவின் ஒரு உட்குடியரசு, Chechen Republic. ரஷ்யாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தற்போது செச்னியா உள்ளது. அங்கு 1859 வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முடியாட்சி நிலவியிருக்கிறது. அதன் பிறகு அரசியல், ஆட்சி மாற்றம் என்று ரஷ்யாவின் ஆட்சியாளர்களால் அவர்கள் பிரிந்து சென்று தனித்தேசியம் அமைக்க நினைத்தது தடைப்பட்டுக்கொண்டே இருந்துவருகிறது. இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் படையெடுப்பினால் ரஷ்யாவின் ஆட்சியிலிருந்து சற்றே விடுதலைப்பெருமூச்சு விட்டார்கள். ஆனால், உலகப்போர் முடிந்தபின் ஸ்டாலினால் சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் செச்னியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள் பாரிய எண்ணிக்கையில். அதன்பிறகு 1957 ம் ஆண்டு தான் அவர்கள் நாடு திரும்ப முடிந்தது என்கிறது இந்த BBC செய்தித்தளம். அடிப்படைகள் வேறாய் இருந்தாலும் நான் பார்த்த காணொளியும், இதைப்படித்த போது ஈழம் குறித்து நினைவும் வந்து போனது. இந்தியா-இலங்கை-சீனா என்கிற ஒரு கல், ஒரு கண்ணாடி முக்கோணக்காதல் விளையாட்டில் அமெரிக்கா பாட்டுப்பாடுகிறது. இங்கே உடையாமல் மோதிக்கொள்ள யார் கல், யார் கண்ணாடி என்பதை விடவும், இடையில் ஈழத்தமிழன் அடிவாங்கி சாவது மட்டுமே முடிவும், விளைவும். காலம் மாறும், அரசியல் காட்சி, களநிலவரங்களும் மாறும். அப்போது ஈழத்தமிழனும் சர்வதேச அரசியலில் காய் நகர்த்தும் வல்லமை பெறுவான் என்று நம்புவோம்.

சரி, என் சொந்தப்பிரச்சனைக்கு வருகிறேன். மேன்மையை, மாற்றத்தைக் காணும் அவாவில் எதிலுமே சுலபத்தில் சலிப்புக் கொள்ளும் ஓர் மனோபாவம் உண்டு என்னிடம். எவ்வளவு நேரம் தான் ஆங்கிலத்தொலைக்காட்சி பார்ப்பது. முக்கி, முக்கி எவ்வளவு தான் பார்த்தாலும் அங்கே கலாச்சார முரண்பாட்டுக்கோலங்களின் காரணமாக அரசியல் தவிர வேறெதனுடனும் சுலபத்தில் அதிகம் ஒன்றிப்போகமுடிவதில்லை.நாங்கள் புலம்பெயர்ந்துவாழும் நாட்டின் அடையாளத்தோடு, நாம் சொந்தமண்ணிலிருந்து கொண்டுவந்த அடையாளங்களோடும் Hybrid Indentity கொண்டவர்களாய் தேசிய நீரோட்ட அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்து கலந்துபோகிறோம். அப்படி கலந்து போவதன் மூலம் எங்கள் அடையாளங்கள் வலுவிழக்கச் செய்யப்படுவதும் உணரப்படாத யதார்த்த உண்மை. இதற்கு Assimilation என்று அழகான பெயர் வைத்திருக்கிறார்கள். இருந்தும், மே 2009 இற்குப் பின் எங்கே இருந்தாலும், எதனோடு ஒன்றிப்போனாலும் ஈழம் மட்டும் மறக்கவே மாட்டேன் என்கிறது.

என்னதான் புலத்தில் இருந்துகொண்டு ஈழத்திற்காய் பேசினாலும், உன்னைவிட ஈழத்தில் இருப்பவன் பேசுவதே பொருத்தம் வாயை மூடு என்றும் மாற்றுச்சிந்தனையாளர்கள் அறிவுசீவித்தனமாகப் பேசுகிறார்கள். அட, நான் எங்கே இருந்தாலும் என் தமிழன் என்கிற அடையாளம் மாறுமா. நான் விரும்பும் விடுதலைக்காய் எங்கிருந்தாலும் எனக்கு பேசும் உரிமை உண்டு என்பதை ஏன் மறுக்கிறார்கள். நான் தமிழன் என்கிற அடையாளத்தை இன்னும் இழந்துவிடவில்லையே. என் அடையாளங்கள் குறித்து சிந்தனை வேறெங்கோ போகத்தொடங்கியது. விஞ்ஞான முன்னேற்றமும், தொலைத்தொடர்பு, சமூகத்தொடர்பாடல் அதிகளவில் முன்னேறியபின்னர் தான் மக்கள் குழாம் இன்னும் அதிகமாக தங்கள் அடையாளங்களை முன்னைவிட பேணநினைக்கிறார்களாம். பொருளுலகில் எதையெல்லாம் கொண்டு மானிடகுலம் ஒன்றே என்று வெளியே வாய்ச்சொல்லில் சொல்லி, முதுகில் குத்தினாலும் யாரும் தங்கள் அடையாளங்களை இழக்க விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. எல்லாருக்கும் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை மறுக்காதவரை யாரும் தங்கள் அடையாளங்களை தூக்கிக்கொண்டு அலையப்போவதில்லை என்று அரசியல் செய்பவர்கள் புரிந்துகொள்ளும் காலம் எதுவோ!

நான் பதிவுலகம் வந்தநாள் முதல் என்னை எப்போதும் சந்தோசப்படுத்தும் ஒரு விடயம் நான் என் தாய்மொழியில் இங்கேயாவது எழுதமுடிகிறது என்கிற ஒரு ஆத்மதிருப்தி  தான். என் மொழியின் மேல் உள்ள காதல் நான் தமிழில் தட்டச்சு செய்ய சந்தர்ப்பம் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே எனக்குள் வெளிப்பட்டது. அழிந்துவிடும் ஆபத்தில் இருக்கும் மொழிகளில் தமிழும் உண்டு என்றார்கள். அதையே பின்னாளில் மறுத்துரைத்து தமிழ் சாகாது என்றார்கள். தமிழ் வாழுமா, வாழாதா என்கிற தர்க்கம் அல்ல என் பதிவின் நோக்கம். தமிழை உலகெமெல்லாம் வாழவைத்து, தமிழன் என்கிற தேசியம் ஈழத்தில் அழிந்துபோவதை பார்த்து வாழாதிருந்துவிட்டு வரலாற்றில் காணாமல் போகிறோமா என்கிற ஆதங்கம் தான். 

ஆக, மொழி என்பது ஒரு அடையாளம். அதை இழக்க விரும்பவில்லை நான்.
மொழியில்லை என்றால் தொடர்பாடல் என்னாகும். மொழி ஒரு ஊடகம். அது கடத்தும் உணர்வுகள், கருத்துக்கள், செய்திகள் பயன் பற்றி சொல்லத்தேவையில்லை. இது தான் மொழியின் எல்லையா! அது தாண்டி எதுவும் உண்டா! அதன் தார்ப்பரியம், தெரிவு, தேவை என்று ஏதும் உண்டா. சொந்தமண் விட்டு வெளியேறி அந்நியதேசத்தில் நான் உயிர்பிழைத்திருக்கவும், என் உய்வுக்கும் என் தாய்மொழி தாண்டியும் ஆங்கிலம் வேண்டியுள்ளது. அதுவும் மொழிதான். அதை இன்றுவரை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

மொழி தவிர வேறு எதெல்லாம் என் அடையாளங்கள் என்றும் கேள்வி எழுகிறது. என் வேர்கள், பூர்வீகம் குறித்து யோசிக்கத்தூண்டுகிறது! மனிதகுலம் குரங்கிலிருந்து வந்தது தான். அது குறித்து கேள்வியில்லை. தமிழனின் பூர்வீகம் என்றால் எல்லோரும் குரங்கிலிருந்து வந்தவர்கள் என்று கேலி, கிண்டலாய் பதில் சொல்வோரும் உண்டு. இதுக்கெல்லாம் யாராவது ஆராய்ச்சி செய்வார்களா என்று யோசித்ததுண்டு. அதுக்குப் பதிலாய் அண்மையில் ஒரு காணொளி கிடைக்கப்பெற்றது. BBC செய்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பழைய ஆவணப்படம் The Story of India, ஒன்றில் தமிழர்களின் பூர்வீகம் குறித்து தமிழ்நாட்டின் மதுரைப் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு பற்றி குறிப்பிட்டார்கள். அதை எனக்கு அனுப்பி வைத்த நண்பருக்கு நன்றி.

70,000-80,000 வருடங்களுக்கு முன் ஆபிரிக்காவில் இருந்து அரேபியக்கரையோர வழியாக தமிழ்நாட்டில்  வந்து தமிழ்நாட்டில் குடியேறியவர்களுக்கிடையேயான மரபியல் அலகுகளில் உள்ள ஒற்றுமையை கண்டறிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் விருமாண்டி என்கிற ஒருவர் தான் முதன்முதல் இந்தியாவில் குடியேறிவர்கள் வழியில் வந்தவர்  என்பதாய் குறிப்பிட்டு சிரித்துக்கொள்கிறார்கள். விருமாண்டியும் அது தனக்கும் சந்தோசமே என்று சொல்லிச்சிரிக்கிறார்.  அது தவிர, தமிழ்நாட்டில் அக்கிராமதில் உள்ள மக்கள் அனைவாரிடமும்  மரபியல் அலகுகள் (M130 Gene Pool) எல்லோருக்கும் ஒத்துப்போவதையும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர்  குறிப்பிடுகிறார். இதன்மூலம் இவர்கள் குடி எவ்வளவு தொன்மையானது என்பதை குறிப்பிட்டுக்காட்டுகிறார்கள்.  கூடவே எல்லோரும் இந்தியர்கள், 'Ponder effect" என்கிறதையும் அவர் சொல்லமறக்கவில்லை. ஒரு சினிமாவின் போக்கால் போதிதர்மரின் வரலாறு திரிந்தது போல் விருமாண்டி வரலாற்றையும் காலம் திரிக்குமோ தெரியவில்லை.

காணொளி இதோ மொத்தம் 24 பகுதிகளைக் கொண்ட காணொளித்தொகுப்பினை முழுதாக இன்னும் பார்த்து முடிக்கவில்லை. இருந்தும் இடையே பார்த்ததில் இன்னொரு பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்பகுதியில் ஆரியர்களின் வருகை பற்றி ஆராய்ச்சிக்குறிப்புகளோடு விளக்குகிறார்கள். கி.மு. 1500 களில் ஆரியர்கள் புதிய கடவுள்களோடும், மொழியோடும் இந்தியாவிற்குள் நுழைந்ததையும்; அவர்களின் சோமா என்கிற ஒரு பானத்தின் அடிப்படைகளை இந்தியா கடந்து எங்கிருந்து அது வந்தது என்றும் ஆராய்ச்சி செய்கிறார்கள். இன்றைய ஆஃப்கானிஸ்தானிலிருந்து வரும் காபூல் ஆற்றுவழியே படைகளோடு மோதித்தான் ஆரியர்கள் முன்னேறியிருக்கிறார்கள் இந்தியா நோக்கி. இந்த சோமா என்கிற பானம் (சோமபானம் என்று படித்ததாய் நினைவு) தயாரிப்பதற்கான மூலக்கூறு இந்தியாவில் இருந்ததில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.  அதன் மூலத்தை தேடிப்போனால் லிதுவேனியா வரை நீள்கிறது காட்சிகள். அத்தோடு, ஆரியர்களின் சமஸ்கிருத மொழியானது இலத்தீன், கிரீக் மொழிகளோடு தொடர்புபட்டிருப்பதையும் விளக்குகிறார்கள். இது குறித்து ஏற்கனவே ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா எழுதியதை படித்திருப்பதால் அதிகம் இந்த செய்திகள் ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனாலும், இன்னொரு தரம் அதே தரவுகளை வேறோர் மூலத்தின் வழி அறிவது பொருந்திப்போகிறது.

Copy infringement என்று காணொளிகள் நீக்கப்பட்டதால் அதன் இணைப்பு இங்கே நீக்கப்பட்டுள்ளது.

ஆரியர்கள் வருகை பற்றிய காணொளிகள் குறித்த கருத்துகளை வாசித்தால், இந்தக்காணொளி  BBC நிறுவனத்தின் இனத்துவேசம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. அப்படி மறுப்பவர்கள் யாரும் ஆதாரத்தோடு மறுக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Michael Wood இன் நேர்மை கூட முன்னர் பதிவுலகில் விமர்சிக்கப்பட்டதாய் ஞாபகம் எனக்கு. எப்படியோ இந்தியாவிற்குள் தமிழர்களின் வருகையும், ஆரியர்களின் வருகையும் இந்தக்காணொளிகள் மூலம் புரிகிறது.

உலகத்தில் இப்படி எத்தனையோ வரலாறுகள் மூடிமறைக்கப்பட்டும், அதன் வழி உரிமைகள் மறுக்கப்பட்டும் எத்தனையோ போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. நாங்கள் மறந்தாலும் எதிரிகள், குயுக்தியாய் அரசியல் செய்வோர் எங்கள் வரலாற்றை தோண்டிப்பார்க்க வைக்கிறார்கள்.  ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொல்ல நானும் தயார் தான். அதற்கு முன் ஒரு ஈழத்தமிழாய் என் அடிப்படை உரிமைகளும், அரசியல் அபிலாஷைகளும் காப்பாற்றப்படட்டும், நிறைவேறட்டும்.

15 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

ரதி!நேற்று GTV யில் பேசாப்பொருள் என்ற வார இறுதி தொடர் நிகழ்ச்சியொன்றில் சுபாஷினி என்ற சுபாவின் கலந்துரையாடல் காண நேரிட்டது.தமிழ் திரைப்படங்களில் பெண் ஒரு நுகர்பொருளாகவும்,ஆண் 10 எதிரிகளை ஒரே நேரத்தில் அடித்து விடும் ஒரு மாயத்தோற்றத்தையே பிம்பப் படுத்துகிறார்கள் என்றார்.எனது பார்வையும் அதுபோலவே இருப்பதால் தமிழ் திரைப்படங்கள் மீதான பற்று குறைந்து போனதற்கு ரசனை காரணமா அல்லது திரைப்படங்களுக்கும் அப்பாலான மாற்று தளங்கள் நிறைய இருப்பதால் திரைப்படங்கள் மனதிலிருந்து பின் தள்ளப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

சுபா தமிழ் மரபு அறக்கட்டளையென்ற பெயரிலும்,மின் தமிழ் வலையகம் மூலமாகவும்,கணையாழி பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் ஒருவருமாக இருக்கிறார்.மின் தமிழ் என்ற கூகிள் தேடலும் கீழ்கண்ட சுட்டியும் உங்கள் ரசனைக்கு உகந்ததாக இருக்குமென்று நம்புகிறேன்.

http://www.tamilheritage.org/how2contribute.html

பதிவை ஆழ்ந்து வாசிக்க மீண்டும் வருவேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

மின் தமிழின் கூகிள் குழுமம் தொடர்பான சுட்டிகள்

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/239138c12ae6030c

வலைஞன் சொன்னது…

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ரதி!///ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொல்ல நானும் தயார் தான். அதற்கு முன் ஒரு ஈழத்தமிழனாய் என் அடிப்படை உரிமைகளும், அரசியல் அபிலாஷைகளும் காப்பாற்றப்படட்டும், நிறைவேறட்டும்.///வழி மொழிகிறேன்!

ஹேமா சொன்னது…

//தமிழை உலகெமெல்லாம் வாழவைத்து, தமிழன் என்கிற தேசியம் ஈழத்தில் அழிந்துபோவதை பார்த்து வாழாதிருந்துவிட்டு வரலாற்றில் காணாமல் போகிறோமா என்கிற ஆதங்கம் தான். //

ஈழத்தை நேசிக்கும் அத்தனை பேரினதும் அதே ஆதங்கம் ரதி !

இந்தக் காணொளி சிறுபகுதி நானும் பார்த்து அதிசயப்பட்டிருக்கிறேன் ரதி....எத்தனை ஆதாரங்கள் இருந்தும் நடப்பது என்ன...??????

Rathi சொன்னது…

ராஜ நட, வாங்கோ எப்பிடி இருக்கிறீங்க!

உங்கள் சுட்டிகளுக்கு நன்றி. சென்று பார்த்தேன் ஆர்வமாய்த்தான் உள்ளது. இப்போ கூகுளிடம் கேட்டால் கண்டதையும் கொடுக்கும். அதிலிருந்து வடிகட்டுவது நேரம் விழுங்கும் செயல். இப்படி யாராச்சும் பரிந்துரை செய்தால் வேலை சுலபமாகுது.

அது போக, எனக்கு இப்பத்தான் ஏதொ கொஞ்சம் அரசியல் புரிபடத்தொடங்கிற மாதிரி இருக்கு :) அதன் அடிப்படையை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள தேடத்தொடங்கி மானிடவியல் ( Anthropology) குறித்து பயின்றுகொண்டிருக்கிறேன், சுயமுயற்சியில்.

அங்கிருந்து தொடங்கினால் தான் புரியுது அரசியலின் அடிப்படை எங்கே புதைந்திருக்கிறது என்று.

நாங்கள் தான் பொதுவாக சோழகாலத்தோடு, அதன் பெருமை பேசுவதோடு நிறுத்திக்கொண்டுவிட்டோமோ என்று தோணுது. அதையும் தாண்டிப் போனால் எங்கள் வரலாற்று மாட்சிமைகள் புரிபடுகிறது.

ஆறுதலா மறுபடியும் என் பதிவை படிச்சுட்டு வாங்க மறுபடியும் கருத்தாடுவோம் :)

Rathi சொன்னது…

வலைஞன், நன்றி. முயல்கிறேன்.

Rathi சொன்னது…

Yoga.S. ஐயா, வணக்கம். என்னை வழிமொழிந்ததிற்கு நன்றி :)

Rathi சொன்னது…

ஹேமா, நான் முன்பு ஒரு பதிவெழுதினேன் தமிழ் மொழி அழியும் ஆபத்தில் இருப்பதாய் UNESCO சொன்னதை வைத்து. அதற்கு பதிவுலகில் யாரோ ஒரு பதில் பதிவு போட்டிருந்தார்கள். தமிழ் அழியாது என்று. சந்தோசம். ஆனா, தமிழ் பற்றி பேசுபவர்கள் அழிந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றி மறப்பது தான் வேடிக்கை கலந்த வேதனை.

வேர்கள் சொன்னது…

ரதி

இந்த காணொளியை முதன் முதலாக பார்த்தபொழுது இந்தியாவில் பல்வேறு மொழி குடும்பங்கள் இருக்க
இந்தியாவின் மிக பழமைவாய்ந்த ஜீன், தமிழை தாய்மொழியாக கொண்ட ஒருவரிடம்(பலரிடம் ) இருக்கிறது , எனவே இந்தியாவின் முதல் மொழி தமிழ்தான் என்றபோது
அந்தமொழி பேசும் மக்களில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்கு ஏற்பட்டது.

ஆனாலும் நம்முடைய தற்போதைய நிலையை எண்ணி வருத்தமாகவும் உள்ளது.

கட்டுரை மிகவும் தெளிவாக இருக்கிறது

எனக்கு மகிழ்ச்சி... :)
நன்றி... :)

Rathi சொன்னது…

வேர்கள், நன்றி :)

விருமாண்டி என்பவர் தான் முதல் இந்தியர் என்கிற பரம்பரை மரபியல் அலகுகளை கடத்தியவர் என்பதில் பெருமை கொள்ளும்போது தமிழர்களின் தொன்ம வரலாறு புரிகிறது.

கணாளொயில் ஆங்காங்கே குயுக்தியாய் சில விடயங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. நான் கவனித்தது, விருமாண்டி என்பவரின் திருமணப்படம் காண்பிக்கிறார்கள். ஆனால், திறமையாக அதில் கீழேயுள்ள தமிழில் எழுதப்பட்ட ‘மணநாள்’ என்பதை கண்வெட்டும் நேரத்தில் மறைத்திருக்கிறார்கள். காணொளி, இந்தியர்கள் என்கிற கண்ணோட்டத்திலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார்கள். அதுதான் தமிழர்கள் என்பதை சொல்கிறது :)

வேர்கள் சொன்னது…

தற்போதுதான் பார்த்தேன் நீங்கள் சொல்வது சரிதான்...
இந்தியாவில் தமிழின அடையாளத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் இன்றுவரை தொடர்ந்து இயங்கிகொண்டிருக்கிரார்கள்
அதன் தொடர்ச்சிதான் முள்ளி வாய்க்காலில் நம்மை அழிக்க ஆரியம் சிங்களத்தோடு துணைபோனது
70000 வருட பாரம்பரியம்!!! நாம் ரதி..
உலகுக்கு சொல்வோம் நாங்கள் வேறு அவர்கள் வேறு என்று
நிச்சயமாய் நாம் வெல்வோம் நம் தமிழ் துணைகொண்டு...

Siva sankar சொன்னது…

எண்ணங்கள்
அனைத்தும்
நிறைவேறும்
விரைவில்..

பொறுமையாய்
இத்தனை
தூரம் யோசிக்கும்
உங்கள் தேடலுக்கும்
எனது நன்றிகள்

Rathi சொன்னது…

வேர்கள், இந்தியாவில் தமிழின அடையாளங்களை அழித்தொழிக்கும் முயற்சி......ம்ம்ம்... யோசிக்க வைக்குது!

நான், தமிழ்நாடு எப்படி இந்திய நடுவண் அரசால் மற்றைய மாநிலங்களை விட பாரபட்சமாய் நடத்தப்படுகிறது என்பதை தமிழ்த்தேசியவாதிகளின் கண்ணோட்டாத்தில் படித்திருக்கிறேன். தவிர, காவிரி, முல்லைப்பெரியார் நீர்ப்பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அது கண்கூடும் தானே.

இங்கே ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாடு ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க தன்னால் ஆனதை செய்யவேண்டுமென்பது யதார்த்தம். இருந்தும், இன்னும் பெரியார் சொன்ன அடிமைகள் வசனத்தை சிலர் ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தவிர, யூத இனத்தை போல எங்களை ஒன்றுபடுங்கள் என்று அறிவுரை சொல்லும் தமிழ்நாடும் தாங்கள் பார்வையாளர்களாய் பாவனை செய்கிறார்கள் :)

தமிழீழம் காணவேண்டியது ஈழத்தமிழன் தான். அதில் எனக்கும் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. இருந்தாலும், அடிமைகள், உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும் வகையறாக்கள் பற்றி என்ன சொல்வது.

அரசியலுக்கு, பதவிக்கு தேவைப்பட்டால் ஈழத்தமிழன் குருதியை கூட கூசாமல் பூசிக்கொள்கிறார்ள். அதுவே அவன் உரிமை குறித்து என்றால் அடிமை வசனம் கைவசம் வருகிறது.

Rathi சொன்னது…

சிவா, நன்றி :)