மே 17, 2012

முள்ளிவாய்க்கால், தமி்ழின விதியோ!

வரலாறு என்றால் என்ன என்கிற கேள்விக்கு என் தேடலில் இரண்டுவிதமான விளக்கங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஹேகலும், கார்ல் மார்க்ஸ்ம் கூறிய ஒட்டுமொத்த மானுடத்தின் விடுதலை பற்றியது, அதாவது ஒட்டுமொத்த மானுடகுலத்தின்  ஒத்திசைவான விடுதலை நோக்கிய படிமுறை வளர்ச்சி. மற்றது காலக்கிரம வரிசைப்படி சம்பவங்களின் நிகழ்வுகள் என்பதாகும். தத்துவவிளக்கங்கள் எப்படி கொடுக்கப்பட்டாலும் வரலாற்று அசைவியக்கதில் மனிதகுலம் சுமந்துவரும், கடந்துவரும் வலிகள் மட்டும் எப்போதும் ஒவ்வொரு தனிமனித, இன, மொழி, மத, பண்பாட்டு, கலாச்சார, பொருளியல், அரசியல் என்கிற அடிப்படைக் கூறுகளால் தனிப்பட்ட அனுபவமாகவும்; அதேநேரம் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் அதன் இயங்குவிதிகள், ஒத்திசைவான தன்மைகளால் அவை எல்லாருக்கும் பொதுவாகவும் ஆகிப்போனது புரிகிறது.

எந்த அடிப்படைகளினால் ஒரு மக்கள் குழு அடக்கப்படவும், அழிக்கப்படவும் செய்கிறதோ, அதே அடிப்படைகளினை மீள் உறுதிப்படுத்தியே தங்களை, தங்கள் அடையாளங்களை தக்கவைக்க முற்படுகிறார்கள். தற்காலத்தில் தனிமனித, இன, மத, குழுவாக  மனிதர்களுக்குரிய அங்கீகாரம் கிட்டாதவரை எந்த பொதுவிதிகளோடும், தத்துவங்களோடும் ஒத்துப்போகும் பண்புமாற்றம் என்பது சவால் தான். மனிதவரலாறு என்றாலும், உலகமயமாக்கல் என்றாலும் யாரும் தங்கள் அடையாளங்களை இழக்க விரும்புவதில்லை. இன, மொழி, கலாச்சார தனித்தன்மைகளை பேணவே விரும்புகிறோம். மானுடவிடுதலை நோக்கி வரலாற்று ரீதியாக எத்தனையோ விதமான தத்துவங்கள், அரசியல் நியமங்கள், வடிவங்களை நிறுவியும் இன்றுவரை மனிதவரலாறு எந்த உன்னத நிலையையும் எட்டவில்லை என்பது தானே நிஜங்களின் தரிசனம்.

இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே நிகழ்காலத்தில், ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளின் தரவுகள் கொண்டு அவை மறுபடியும் நிகழுந்தன்மைகள் கணிப்பது சமூக விஞ்ஞான அரசியல். பிறப்பு,  இறப்பு, அரசியல், பொருளாதாராம், அதனோடு இயைந்த வாழ்க்கை, பூகோள, புவியியல் தட்பவெப்ப மாற்றங்கள் எல்லாமே மனிதவரலாற்றின் அங்கமாக அலசி ஆராயப்படுகிறது நவீன தொழில்நுட்ப விஞ்ஞான உலகில். விடுதலை என்பது மட்டும் எங்கோ முடங்கி, தேங்கி நிற்பது போல் ஓர் பிரம்மையா அல்லது உண்மையா! அது அரசியல் காட்சிப்பிழைகளால் எப்போதும் ஓர் குழப்ப நிலையிலேயே வைக்கப்படுகிறது.

மனிதவிடுதலை நோக்கிய பயணமே வரலாறு என்பது அறிஞர்களின் கருத்து. விஞ்ஞானத்தின் துணைகொண்டு தோண்டித்தோண்டி தொன்மங்களில் கண்டுபிடிக்கப்பட்ட  மனித உயிர்களின் தோற்றுவாயும், நாகரிகமும், மனிதவிடுதலையின் வரலாறும் மறுபடியும் மண்ணுக்குள்ளேயே புதைக்கப்படும் அவலமும் கூடவே சமகாலத்தில் நிகழ்கிறது. புதைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் கவனமாகத் தோண்டும் போது தூலப்படிமங்கள் போல் மறைக்கப்பட்ட உண்மைகள் புலப்படும். அதன் உள்ளே ஒளிந்திருக்கும் சூக்குமப்பொருளான விடுதலைக்கான வித்து. அந்த வித்து வளர்ந்து விருட்சமாகாமலும் மனிதவரலாறு பூர்த்தியாகாமலும் காலச்சகதிக்குள் சிக்கவைக்கப்பட்ட இன்னோர் களம் ஈழம், முள்ளிவாய்க்கால்! 

புதைந்துபோன பெருமைகளை அகழ்ந்தெடுத்து கடந்தகால வீரத்தை, இருப்பை, பெருமையை பறைசாற்றலாம். மனிதவிடுதலை குறித்த பிரக்ஞை இல்லாது கொள்கைகளை, பெருமையை மட்டும் பேசிப்பேசியே மடிந்தும் போகலாம். பேசித்தீர்த்து, ஓய்ந்து போகும் தருணத்தில் அது குறித்த கேள்விகள், பிரதிபலிப்புகள் தற்காலத்தின் இருப்போடு அதை தொடர்புபடுத்தி பார்க்க மனம் இயல்பாய் எத்தனிக்கலாம். அந்த எத்தனிப்பில் தான் நாம் மறந்தும் கூட மறக்கமுடியாததாய் ஈழம் என்கிற எம் மண்ணின் வலிகள் எத்தனை, எத்தனை! தன் இனத்தின் அழிவை, இழப்பை, வலியை, உரிமைப்போரை மறப்பவன் சுயமிழந்தவன் ஆவான்.

மொழியில் தொடங்கி நிலம், வளம், உயிர் இழப்புகள் குறித்த எம்மினத்தின் உலகமறியா வரலாற்று உண்மைகள் காலச்சகதிக்குள் புதைக்கப்படுகின்றன. ஈழத்தமிழின அழிப்பின் வரலாறு கால அட்டவணைப்பிரகாரமும், தமிழர்களின் நிலச்சுரண்டல், பண்பாடு, மொழி,  பொருளாதார வடிவத்திலும்  அதனோடு இயைந்த வாழ்க்கை என்கிற அடையாள அழிப்பின் மூலமும், பல தசாப்தங்களாய் தொடர்கிறது. அதன் உச்சவடிவம் முள்ளிவாய்க்காலில் பல்முனைகளில், பல வடிவங்களில் வெளிப்பட்டது. சாட்சியில்லாத ஒன்று என்று சொல்லப்பட்டாலும், சர்வதேச அரசியல் சூழ்ச்சியின் சூத்திரதாரிகளின் அறிதலுடன், அனுசரணையுடன் சிங்களப்பேரினவாதிகளால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட இனப்படுகொலை. நாம் இழந்த ஐம்பதாயிரத்தில் இருந்து ஒன்றரை லட்சம் உயிர்களை எப்படி மறந்தும், கடந்தும் போகமுடியும்!

குற்றம் செய்தவன், கொலைகாரன் எப்போதும் தான் தப்பிப்பது பற்றியே யோசிக்கிறான். பாதிக்கப்பட்டவன் ஒன்று பாதிப்பின் இழப்புகளிலிருந்து மீளமுடியாமல் உயிர்வலியோடு அவதிப்படுகிறான் அல்லது இழப்புக்கு நியாயம் கேட்டால் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாவான் என்று அச்சப்படுத்தப்பட்டு மெளனியாக்கப்படுவான். எதையாவது செய்து குற்றங்களை தடுக்க முடியாதவன், உறவுகளை காப்பாற்ற முயன்று முடியாமல் போனவன் குற்ற உணர்வில் காலத்துக்கும் மறுகிக்கொண்டே இருக்கிறான். இது தான் ஈழத்தமிழர்களுக்கும், உலகத்தமிழர்களுக்கும் இன்றும் பொருந்துகிறது. முள்ளிவாய்க்கால் இழப்பின் வலி ஒருபுறம், கையறுநிலையில் குரல்வளை புண்ணாகிப்போகும் அளவுக்கு யார், யாரிடமெல்லாமோ அழுது, புரண்டு உயிர்ப்பிச்சை கேட்ட வலி  மறுபுறம். வலிகள் மீண்டும், மீண்டும் வீரியத்தோடு புதுப்பிக்கப்படுகிறது.

சராசரி மனிதனின் எந்த ஒரு வலிக்கும், தவறுக்கும் நீ தான் காரணம் என்று யாரையாவது சுட்டி நிற்காமல் சுலபத்தில் சமாதானமாகாது மனிதமனம். முள்ளிவாய்க்கால் முடிவின் சூத்திரதாரிகள் வேறுயாரோவாய் இருக்க புலத்து தமிழன் அப்படித்தான் குற்றவாளியாக்கப்பட்டான். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சமயத்தில் உறவுகளோடு ஈழத்தில் இல்லாமல், சொந்தமண்ணிலிருந்து உயிர்தப்பி புலத்தில் பிழைப்பதே ஏதோ குற்றம் என்கிற ஓர் உணர்வுக்குள் தள்ளப்பட்ட மனோநிலை. அது இன்றுவரை நீடிக்கிறது.

இழப்புகள் குறித்த குற்ற உணர்வில் அழுது, தேங்கி நின்றால் வரலாறு எம் விடுதலையை விட்டுவிட்டு தூர நகர்ந்துகொண்டே இருக்கும். பலவீனர்களாகி மீண்டும், மீண்டும் எதிரியின் இலக்காவோம். ஈழத்திலும், புலத்திலும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப் படுத்த முடியாமல் தடம் மாறும் அரசியல் தலைமைகளால் இன்னும் பலியாக்கப்படுகிறோம். மனிதவரலாறு என்பதை கணக்கில் எடுத்தால் 1% (Davos Culture Followers) மானோரால் உலகின் ஒடுக்கப்பட்ட 99% மான மக்கள் போராட்டங்களோடும், நாடற்ற தேசிய இன விடுதலைப்போராட்டங்களின் பொதுத்தன்மையோடும் ஈழத்தவர்களாகிய எங்கள் விடுதலை நோக்கிய பரஸ்பரமான இலக்கையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவர்களும் இல்லாமல் இல்லை.  இதில் இன்னொரு விடயத்தையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது. இன்று நாடுகள் என்று கொண்டால், ஐ. நா. வில் பிரதிநிதித்துவம் பெற்ற ஏகாதிபத்தியங்களும், ஏகாதிபத்தியத்திற்கு துணைபோகும் 193 நாடுகள் அனைத்தும் உலகில் நாடற்ற 6000 தேசியங்களை அடக்கியாள்கின்றன. அதில் தேசியவிடுதலை நோக்கி தங்களை கட்டியமைத்த 230 தேசியங்களில் ஈழத்தமிழர்களும் அடக்கம். (Source:  Building consensus with universal ideology, [TamilNet, Tuesday, 20 December 2011, 06:02 GMT]. இந்த நுண்ணரசியலில் எமக்கான இலக்கையும் சேர்த்து நகர்த்த திடசங்கற்பமான அரசியற்தலைமையும் தேவையாகிறது.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர் ஈழவிடுதலையில் ஒற்றைத்தலைமை என்பது மாறி அமைப்புகளாய், கூட்டுத்தலைமையாய் மக்கள் கைகளில் இன்று இடம் மாறியிருக்கிறது. அது புதுவடிவம் பெற்றாலும் அதன் ஸ்திரத்தன்மை குறைபாடுடையதாய், சவால்கள் நிறைந்ததாய் இருப்பதை அரசியல் நகர்வுகளில் சாண் ஏற முழம் சறுக்கும் கதைகள் பட்டவர்த்தனமாய் காட்டி நிற்கின்றன. இதையெல்லாம் புரிந்துகொண்டு தன் விடுதலைக்காக ஈழத்தமிழ் சமூகம், குறிப்பாய் இளையதலைமுறை மீண்டும் தலைநிமிர்ந்து எழத்தான் முயன்றுகொண்டிருக்கிறது. தமிழின், தமிழர்களின் காவலர்கள், பிரதிநிதிகள் உள்ளூர், உலக அரசியல் சதுரங்கத்தில் தமிழர்களை பகடைக்காய்களாகவும், தங்களை கோமாளிகளாகவும் மாற்றி இனத்தின் விடிவை முடக்காமல் முன்னேற வேண்டிய தேவை ஏனோ உணரப்படாத, தீர்க்கப்படாத குறையாகவே தொடர்கிறது.

அரசியற்களத்தில் ஆயிரம் முரண்பாடுகள், கேலிக்கூத்துகள் அரங்கேறினாலும் முள்ளிவாய்க்கால் இழப்புகளுக்கு அழுது, இரங்கற்பா பாடி எம் கடமையை முடிப்பது அல்ல அவர்களுக்கு நாங்கள் செய்யும் கைமாறு என்று உள்மனம் இடித்துக்கொண்டே இருக்கிறது. ஈழவிடுதலைக்காய் உயிர்கொடுத்தவர்களையும், மிலேச்சத்தனமாய் கொல்லப்பட்ட எம் உறவுகளையும் நினைவு கூறும் நாளில் எமக்குள்ளும் பேதங்களை மறந்து ஒன்றாய் இணைந்து எம் விடுதலை நோக்கி நகர்வதே மாண்பு! முள்ளிவாய்க்காலில் முடிவதல்ல ஈழவிடுதலை வரலாறும், தமிழனின் விதியும்.


4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

கேள்வியும் பதிலும் சொல்லிவிட்டு முகம் பார்க்கும் குழந்தையாய் உங்கள் பதிவு.கட்டியணைக்க மட்டுமே முடிகிறதி ரதி.ஒன்றுபடுவோம்.முடிந்த முயற்சிகளைச் செய்வோம்.காலம் கடக்கும்தான்.ஆனால் நம்புவோம்.விடுதலைப் பா பாடுவார்கள் கேட்போம்.காற்றுக்குள் கலந்து நின்றாலும் அன்றே எம் ஆத்மாக்கள் சாந்தியடையும் !

Rathi சொன்னது…

ஹேமா, என்னதான் அறிவுசார் மனம் கொண்டு என்னை கட்டியமைத்தாலும், உணர்வுகளின் பங்கும், பாங்கும் என்னிடமும் இல்லாமலில்லை. அதுவும் ஈழவிடுதலை என்றால் குழந்தைத்தனமாய் நாளைக்கே அது கிடைக்காதா என்று ஏங்குகிறது.

இந்த நாளில் எங்களுக்கு நாங்களே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டியது தான். தொலைக்காட்சி, வானொலி பார்க்கும், கேட்கும் தைரியம் இன்று என்னிடம் இல்லை.

வேர்கள் சொன்னது…

//ஈழம் என்கிற எம் மண்ணின் வலிகள் எத்தனை, எத்தனை! தன் இனத்தின் அழிவை, இழப்பை, வலியை, உரிமைப்போரை மறப்பவன் சுயமிழந்தவன் ஆவான்.
மொழியில் தொடங்கி நிலம், வளம், உயிர் இழப்புகள் குறித்த எம்மினத்தின் உலகமறியா வரலாற்று உண்மைகள் காலச்சகதிக்குள் புதைக்கப்படுகின்றன//
காலச்சகதியில் மட்டுமில்லை.... திட்டமிட்டும் மறக்கடிக்க செய்யப்படுகின்றன அல்லது போதை,சினிமா போன்றவைகளால் மக்களின் மனங்கள் திசைதிருப்பப்படுகின்றன...
எனது கவலையெல்லாம் ஈழம் குறித்து எழுதுகின்ற உங்களை போன்றோர்கள் எந்த ஒரு நிலையிலும் சலிப்போ,விரக்த்தியோ கொள்ளாமல் தொடர்ந்து எழுதி மக்கள் மனங்களில் உள்ள சுதந்தர நெருப்பை ஊதிவிட்டுகொண்டே இருக்கவேண்டுமென்பதுதான்...
மிக சிறந்த கட்டுரை
நன்றி ரதி

Rathi சொன்னது…

வேர்கள், திட்டமிட்டு புதைக்கப்பட்ட வரலாற்றின் ஒரு உண்மை பற்றி சில ஆதாரக்காணொளியோடு ஒரு பதிவு எழுதற முயற்சிதான். இன்னும் தொடங்கவில்லை. எழுதிட்டா போச்சு.

ஆபிரிக்காவில் இருந்து அரேபியக்கரையோரம் வந்த முதல் மூத்த குடிகளின் மரபணு தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்களின் உடம்பில் இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள் மதுரை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள். M130 gene pool தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் உள்ள பலபேரிடம் காணப்படுவது ஆச்சரியப்படுத்தியது.

பார்க்கலாம் இதையும் சேர்த்து ஒரு பதிவு போடலாம் :)

ஈழம் குறித்து முடிந்தவரை எழுதிக்கொண்டு தான் இருப்பேன் என்று தோன்றுகிறது.