மே 12, 2012

என் வீட்டு தொலைக்காட்சி!நாத்திகனின்
ஆலய, ஆன்மீக தரிசனம்
நெற்றிப்பட்டை விபூதி
முரண்களின் நகல்

சமூகப்புரட்சியாளனின்
புரட்சிக்கான
அன்றைய விளம்பரம்

அரசியல்வாதியின்
அடுத்த ஆட்சிக்கனவின்
எலும்புத்துண்டு
தேர்தல் வாக்குறுதி
மற்றும்
பயங்கரவாதம்
இன்னும் உயிரோடிருக்கிறது
பே(ட்)டிகள், பேச்சுக்கள்

அரிசி, பருப்பு, எரிபொருள்
கல்வி
விலையேற்றம்
வாழ்க்கைச்செலவு
கழுத்தை நெரித்தாலும்
எதிர்காலம் ஒளிரும்
பொருளியல் நிபுணர்களின்
(‘அவ’) நம்பிக்கை அறிக்கைகள்

சினிமா ‘தலைவன்’
சமூகப்புரட்சியில் பூரிக்கும்
ரசிககுஞ்சுகளின்
ஆரவார ஆர்ப்பரிப்புகள்

மனைவியை
தவணை முறையில்
புணர
புடவை, நகை
பூ, அல்வா
எதை கொடுப்பது
எதை கொடுப்பதாய் சொல்வது
கண்கண்ட கணவன்களின்
அன்றிரவுக் கவலை

இன்றாவது
ஒரு ‘உதட்டு’முத்தம்
சிந்திவிட வேண்டும்
காதலில் சொதப்பும்
சொதப்ப துடிக்கும்
இளசுகளின்
ஏக்கம்
உணர்வுகள் திரிகிறது
சினிமா தயாரிப்பாளர் லாபம்
மனக்கண்ணில் தெரிகிறது

என் கடையில்
எல்லாம் மலிவு
அத்தனைக்கும் ஆசைப்படு
கடனாளி ஆகிவிடு
கடனட்டை, வியாபார
விளம்பரங்கள்
மத்தியவர்க்கம்
பொருளாதார அடிமைகளாய்

இதற்கு மேல்
பொறுமையில்லை
முரண்பாடுகள்
அற்பங்கள், அவஸ்தைகள்
கருத்து திரிபுகள்
தூக்கம், துக்கம்
ஏதோ ஒன்றா
அல்லது
எல்லாமுமா!

என் வீட்டு தொலைக்காட்சி
காட்ட மறுக்கும்......
மானுடத்தின்
தோற்றுவாய், வரலாறு
ஜனநாயகத்தின் பன்முகங்கள்
ஹேகலும் மார்க்ஸும்
தோற்றார்களா,
தோற்கடிக்கப்பட்டார்களா
தேடும் முயற்சியில்
ஃபிரான்சிஸ் புக்குயாமாவோடு
நான்

எல்லாமே
புரியும்வரை தான் ஆர்வம்!

படம்: கூகுள்

23 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

//நாத்திகனின்
ஆலய, ஆன்மீக தரிசனம்
நெற்றிப்பட்டை விபூதி//

நான் புரிந்துகொண்டவிதத்தில் இங்கு நாத்திகனுக்கு பதில் ஆத்திகன் என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...

//பயங்கரவாதம்
இன்னும் உயிரோடிருக்கிறது
பே(ட்)டிகள், பேச்சுக்கள்//

கோபம் புரிகிறது...
இது நமக்கான பொதுகோபம்....

//மனைவியை
தவணை முறையில்
புணர
புடவை, நகை
பூ, அல்வா
எதை கொடுப்பது
எதை கொடுப்பதாய் சொல்வது
கண்கண்ட கணவன்களின்
அன்றிரவுக் கவலை//

பல கணவன்களின் முகத்திரை கிழிகிறது.....

//ஹேகலும் மார்க்ஸும்
தோற்றார்களா,
தோற்கடிக்கப்பட்டார்களா
தேடும் முயற்சியில்
ஃபிரான்சிஸ் புக்குயாமாவோடு
நான்//

உங்களோடு யார் அந்த ஃபிரான்சிஸ் புக்குயாமாவோடு என்று பார்த்தால் ..
The End of History and the Last Man என்று எங்கெங்கோ செல்கிறது....
கற்றது என்னைபொருத்தவரை ஒன்றுமில்லை...

//எல்லாமே
புரியும்வரை தான் ஆர்வம்!//

நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் :)

Rathi சொன்னது…

வேர்கள்,

//நான் புரிந்துகொண்டவிதத்தில் இங்கு நாத்திகனுக்கு பதில் ஆத்திகன் என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...//

அதை கடைசி வரியில் ‘முரண்களின் நகல்’ என்று ஒரு வரி சேர்த்திருக்கிறேன். இப்போது ஓரளவிற்கேனும் புரியும் என்று நினைக்கிறேன்.

ஆத்திகன் இதையெல்லாம் செய்வதில் என்ன புதிதாய் இருக்கும். தன்னை நாத்திகன் என்று claim செய்பவர்களின் முரண்பாடு தான் நான் சொல்ல வந்தது.

The End of History and the Last Man - Francis Fukuyama வே தான்.

இந்த தலைப்பில் அவரது பேச்சு இன்றுவரை சர்ச்சையை கிளப்பிக்கொண்டே இருக்கிறதாம். மக்கள் எந்த வகையான அரசியல் நிறுவனங்களை (Political Institution) களை விரும்புகிறார்கள் என்பதை விளக்குகிறார்.

மன்னராட்சி, மத அடிப்படையிலான ஆட்சி, ஹிட்லரின் சர்வாதிகாரம், கம்யுனிசம் என்று எதுவுமே மனித உரிமைகளுக்கும், அரசியல் உரிமைகளுக்கும் மதிப்பளிக்க தவறிய நிலையானது அவர்களை தாராண்மை ஜனநாயகத்தை விரும்ப வைக்கிறது என்பது அவர் வாதம். அதை தொடர்ந்து முதலாளித்துவம் தன்னை வளர்த்துக்கொள்ள தேவையான பண்புகளை தாராண்மை ஜனநாயகம் கொண்டிருப்பதாக விவாதிக்கிறார்.

அது ஏகப்பட்ட சர்ச்சை.

தனிமரம் சொன்னது…

சினிமா ‘தலைவன்’
சமூகப்புரட்சியில் பூரிக்கும்
ரசிககுஞ்சுகளின்
ஆரவார ஆர்ப்பரிப்புகள்
//ம்ம்ம் என்ன செய்வது நிழலைத் தேடும் அப்பாவிகள் எனலாம் கவிதை கையறு நிலையின் நகல் எனலாம்.

தனிமரம் சொன்னது…

இளசுகளின்
ஏக்கம்
உணர்வுகள் திரிகிறது
சினிமா தயாரிப்பாளர் லாபம்
மனக்கண்ணில் தெரிகிறது
//இப்போது இதைத் தானே கேட்கின்றார்கள் என்ற எசப்பாட்டு ரதி அக்காள்!

தனிமரம் சொன்னது…

ஃபிரான்சிஸ் புக்குயாமாவோடு
நான்
//இன்று தான் இவரை நான் கேள்விப்படுகின்றேன்.

விமலன் சொன்னது…

"எல்லமே புரியும் வரை தான் ஆர்வம்". புரிந்து விட்டால்?புரிதல்தானே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

வேர்கள் சொன்னது…

// இப்போது ஓரளவிற்கேனும் புரியும் என்று நினைக்கிறேன்//
புரிகிறது ரதி
நன்றி

Rathi சொன்னது…

நேசன், வாங்கோ :)

//கவிதை கையறு நிலையின்....//

சரிதான், நான் தொலைக்காட்சி பார்த்து வெறுத்துப்போய் கிறுக்கினது இது. கவிதை என்றால் நிஜமாவே கவிதை தெரிந்தவர்கள் கோபிக்கப் போயினம் :)

ம்ம்ம்... ஃபிரான்சிஸ் புக்குயாமா ஒரு அமெரிக்க வரலாற்று அறிஞர்.

Rathi சொன்னது…

விமலன், நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

நான் குறிப்பிட்ட புரிதல் ஒரு விடயம் குறித்த தெளிவான புரிதல் உருவானால் அறிவு அங்கேயே நிலைத்து நிற்பதில்லை என்கிற அர்த்தத்தில். அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தூண்டும்.

நான் வாழ்க்கையை அதிகம் புரிந்துகொள்ள முயற்சிப்பவள் கிடையாது :) அது அதன் இயல்பில் நகரவேண்டும்.

Rathi சொன்னது…

வேர்கள், நன்றி உங்களுக்குத்தான். நான் எழுதியது தெளிவில்லாமல் இருப்பதை நீங்கள் சுட்டிய பிறகு தான் உணர்ந்தேன்.

Kaliya Raj சொன்னது…

ரதி கவிதையைப் படி த்தவுடன் மீண்டும் தலைப்பை படித்தேன்.

எதார்த்தம் என்னவோ செய்கிறது.

திரும்பவும் படிக்கிறேன்....

ரதி....

வாழ்த்துகள்.

Siva sankar சொன்னது…

எல்லாமே
புரியும்வரை தான் ஆர்வம்!///NICE...

ஹேமா சொன்னது…

ரதி...முதல்ல சுகமா சொல்லுங்க.ஆளயே காணோம்.நடாவும் நானும் போனகிழமைகூடத் தேடியிருந்தோம் !

திடாதேங்கோ ஒரு மெயில் போட்டுத் தேடியிருக்கலாமே எண்டு.அதுதான் நேரம்...போய்க்கொண்டே இருக்கப்பா !

ஹேமா சொன்னது…

ம்ம்...கவிதையின் ஆழம் படம் சொல்கிறது.கையைப் பொத்தி வச்சிருக்கிறவரைக்கும் ஆர்வம் என்னவாயிருக்குமெண்டு.பிரித்துக் காட்டிவிட்டால்...ப்பூ....இவ்வளவுதானா எண்டு சொல்றதுபோலத்தான்....!

ஹேமா சொன்னது…

கவிதை எழுதின உங்கள் மனநிலை என்னவாயிருக்கும் ரதி ?

Rathi சொன்னது…

நன்றி தவறு!

Rathi சொன்னது…

சிவா, நன்றி!

Rathi சொன்னது…

ஹேமா குஞ்சு...... வாங்கோ :) நீங்க எப்பிடி இருக்கிறீங்க!

ஆஹா, நடாவும், ஹேமாவும்.... ரெண்டு பிரபலங்கள் என்னை தேடி இருக்கிறீங்க, சந்தோசம் :)

நான் நல்லா இருக்கன் ஹேமா.

அந்த படம் எடுக்கப்பட்ட கோணமும், அது சொல்லும் கருத்தும் பிடிச்சது ஹேமா. ஒரு விடயத்தை அழகியலாவோ, அறிவியலவோ பார்ப்பது என்பது அவரவர் ஆர்வம் சார்ந்தது என்பது போல் இருந்தது.

தவிர, நான் இது போன்ற சில விடயங்களை பேசினால், நான் உண்மையிலேயே பெண் பதிவரான்னு வேற கேக்கினம். அதான் ஒரு விடயத்தை ஆராய, அறிய ஆண், பெண் வித்தியாசம் என்ன!!

ஹேமா சொன்னது…

ஆகா....நான் உங்களுக்கும் குஞ்சாயிட்டனோ.
அப்பாடி சந்தோஷம் !

அறிவான பதில் ரதி.என் சில கவிதைகளில் கொஞ்சம் கடுகளவுதான் தூக்கல் சுவை இருக்கும் எப்போதாவது.சில விமர்சனங்கள் வரத்தான் பார்க்கிறது.போன உப்புமடச் சந்தியில் கொஞ்சம் பகிடியாய் ஒரு பதிவு.யாரோ ஒருவர்...ஆ...ஊ என்கிறார்.இதைவிட ஆபாசமாக ஆண்கள் எழுதினால் ரசிக்கிறார்கள்.எப்படித்தான் சத்தம்போட்டாலும் ஆண்கள் ஆண்களேதான்.விடுங்கள் எங்கள் எண்ணங்களோடு முன்னேறுவோம்.

முள்ளிவாய்க்காலில் சாம்பல் இல்லை ரதி.முழுப்பிணங்கள் செத்தும் உயிரோடும் !

Rathi சொன்னது…

ஹேமா, கவிதை எழுதிய என் மனோநிலை.....

மனிதநேயம் பற்றி
கெளதமரிடம் ஒரு கேள்வி கேட்டேன்
பதில் சொல்ல
முன்நிபந்தனையாய்
சாவே விழாத ஈழத்து வீட்டிலிருந்து
சாம்பல் கொண்டுவா என்றான்
புத்தன்
தேடினேன் எல்லா இடமும்
கிட்டவில்லை
ராஜபக்‌ஷே சொன்னான்
நீ தேடவேண்டிய இடம்
முள்ளிவாய்க்கால்!

Rathi சொன்னது…

ஹேமா, உப்புமடச்சந்திக்கு போய் பார்த்தேன். நிறைய பின்னூட்டங்கள் இருந்தது. என்ன, எதுவென்று புரியவில்லை.

Ramani சொன்னது…

எல்லாமே
புரியும்வரை தான் ஆர்வம்!

மிகச் சரி
மனம் கவர்ந்த அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

Rathi சொன்னது…

நன்றி, ரமணி!