ஏப்ரல் 10, 2012

தமிழின சாபக்கேடுகள்!

ஈழம் பற்றி நாள்தோறும் எல்லா விதமான ஊடகங்களிலும் செய்தித்தளங்கள் முதல் சமூக வலைத்தள ஊடகங்கள் வரை செய்திகள் கருத்துகள் என்று கொட்டிக்கிடக்கிறது. ஈழம் பற்றி உண்மையான அக்கறையோடு எழுதுபவர்கள், பரபரப்பிற்காக எழுதி புகழ் தேட நினைப்பவர்கள், எங்கெல்லாமோ இருந்து எது தேவை, எது தேவையில்லை என்கிற பாகுபாடு தெரியாமலோ அல்லது அறியாமலோ பதிவுகளாய் பகிரப்படுபவை என்று பலவகை.

சில விடயங்களை வெறும் செய்திகளாய் படித்து கடந்து போவதும் உண்டு. சுற்றிவளைத்து வார்த்தை ஜாலங்களில் செய்திகள் திரிபுபடும் பொது இதுதான் நிஜமா, யதார்த்தமா என்று மெய்ப்பொருள் காணும் ஆர்வம் வரும், ஈழத்தில் மக்கள் படும் அவலம் மீண்டும் ஒரு முறை மொழியின் வழி கண்முன் ஊடாடினால். அவ்வாறான ஒரு கருத்திற்கு எதிர்க்கருத்தாகவோ அல்லது மறுப்பாகவோ என் கருத்தை பதியாமல் போகாமல் முடிவதுமில்லை. எதை சொன்னாலும் அதை யதார்த்தமான உண்மைகளோடு எனக்குத்தெரிந்த மொழியில் சொல்வது என் வழக்கம்.

இந்த வருட 19 வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மாநாட்டில் நடந்த ஒரு Side-Show வில் இலங்கைக்கான மனித உரிமைகள் சபையின் பிரதிநிதியும்- இலங்கை மனித உரிமைகள் அமைச்சருமான மகிந்த சமரசிங்கே நடத்திய ஒரு சிறிய விளம்பர பாணி பிரச்சாரத்தில் (வேறென்ன இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதேயில்லை, மீறப்படவேயில்லை என்கிற பிரச்சாரம் தான்) தமிழர்கள் அமைப்பை சேர்ந்தவர் ஒருவர் (S.V. கிருபாகரன், Tamil Centre for Human Rights, TCHR) கேள்வி கேட்கும் நிமித்தம் கையை உயர்த்தியடியே அவரது கை சோர்வு அடையும்வரை அவரை வேண்டுமென்றே புறக்கணித்த இலங்கை மனித உரிமைகள் அமைச்சரை ஒரு ஓய்வுபெற்ற சுவிஸ் பெண்மணி கிண்டலாய் அதை அமைச்சருக்கு குத்திக்காட்டினாரம். அதன் பிறகு இலங்கை அமைச்சரும் போனால் போகிறதென்று கிருபாகரன் கேள்வி கேட்க அனுமதி அளித்தாராம். (UN Human Right Council Meeting Another Farce, Brian Senewiratne)

இதை இங்கே நான் குறிப்பிட காரணம், இப்படித்தான் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் அதன் பிரதிநிதிகளும் கஷ்டங்கள், சில அவமானங்கள், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஈழத்திற்கான தங்கள் கடமையை செய்கிறார்கள். அண்மைக்காலங்களில் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் ஒரு பிரச்சாரம் புலம்பெயர் தமிழர்களையும், ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்குமிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் கசப்பானதும், பொய்யானதுமான ஒரு நிலைப்பாடு கொண்டிருக்கிறது. இது குறித்து ஏற்கனவே லக்க்ஷி வரதராஜா மற்றும் பேராசிரியர் சேரன் Empowering Diasporas - The Dynamics of Post-War Transnational Tamil Politics என்கிற ஒரு பாரிய ஆய்வுக்கட்டுரையில் தெளிவாய் விளக்கியிருக்கிறார்கள். இது போன்ற விரிசல் ஏற்படுத்தப்படுவதன் நோக்கம் தமிழர்களை அவர்களது சுயநிர்ணய கோரிக்கையை கைவிட வைத்து வெறுமனே புனர்வாழ்வு என்பதோடு முடித்துக்கொள்வது தான்.

இந்தப் பதிவும் நான் படித்த ஒரு பதிவிற்கான என் பதில். இது என் புரிதல். இது தான் பதிவிற்கான இணைப்பு.

கட்டுரை குறித்த எனது கருத்து...... இது போல் சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். பெரும்பாலும் நான் கவனிப்பது இதை யார் எழுதுகிறார்கள் என்பது தான். தமிழர்களைப் பொறுத்தவரை அது கூட காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. ராஜபக்ஷேவின் விருந்தாளியாய் வருடத்தில் மூன்று தரம் விருந்தோம்பலில் திளைக்கும் தமிழர்களும் ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் எழுதுவதை படித்து எங்களுக்கு பாடம் எடுக்கும் சில நடுநிலையாளர்களும் இருக்கும் வரை நான் என் பங்கிற்கு எதையாவது சொல்லியே ஆகவும் வேண்டியிருக்கிறது.

அது ஒரு புறமிருக்க, இந்த கட்டுரையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் யார் என்கிற விவரமோ, அவரது பின்புலமோ நான் அறிந்ததில்லை. இருந்தும் அவரது மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரை குறித்த எனது கருத்துகளை பதிந்து வைக்கிறேன். 

ஈழத்து உறவுகளுக்கு உதவுவதில்லை என்று புலம்பெயர் தமிழர்கள் மேல் குற்றச்சாட்டை வைப்பவர்கள் ஆதாரத்தோடு வைக்கவேண்டும். அண்மையில் பிரயன் செனிவிரட்னேவின் கட்டுரை படித்தேன். அதில் அவர் சொல்லியிருப்பது உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் உதவி தான் ஈழத்து உறவுகளுக்கு ஓரளவிற்காவது உதவுகிறது என்பது தான். இவர் ஆதாரம் இல்லாமல் எதையும் பேசுபவரே கிடையாது. தவிர, புலம்பெயர் தமிழர்கள் உதவ நினைத்தாலும் உடனே எல்லாருமே அரசின் மூலம் உதவுங்கள் என்று அட்வைஸ், International Crisis Group உட்பட. ஈழத்தமிழன் அரிசி, பருப்பு, இருப்பிடம் என்பதோடு பிரச்னையை முடித்துக்கொள்ளவேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. சிங்கள அரசின் கைகளில் புலம்பெயர் தமிழர்கள் நம்பி எப்படி பணத்தை ஒப்படைப்பார்கள். அது ஆற்றில் விட்டது போல் தான். இதை தான் லக்க்ஷி, பேராசிரியர் சேரன் இருவரும் அவர்கள் தன் ஆராய்ச்சி கட்டுரையிலும் குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் புலத்தில் வாழ்பவர்கள் அதற்குரிய வழிவகைகளை சரியாய் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.

பெரும்பாலும் சொந்தமண்ணிலேயே வீதிகளில் வாழும் ஏறக்குறைய ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் அவ்வாறு வாழக்காரணம், அது சிங்கள அரசின் ராணுவ உயர்பாதுகாப்புவலயமாய் ஆண்டாண்டுகாலமாய் தமிழர்களின் நிலம், விவசாயம், கடற்தொழில் பறிக்கப்பட்டது தான். அதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களுக்குரிய தேவைகள், நிலங்கள் திருப்பி கொடுக்கப்படவேண்டும், தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் திட்டங்களில் ஒன்றாய் இல்லாமல் இல்லை. இருந்தும் என்ன நடக்கிறது...... தெற்கிலிருந்து சிங்களர்கள் கூட்டம் கூட்டமாய் கொண்டுவரப்பட்டு ராணுவ பாதுகாப்போடு குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் நிலம், தொழில்வாய்ப்புகளை மதத்தின் பெயரால் புத்தரோடு சேர்த்து இவர்களும் அல்லது அவரது பெயரால் இவர்களே பிடுங்கிக்கொள்கிறார்கள். ஆக, ஒரு லட்சம் பேருக்கு உடனடியாய் வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்பது அரசின் சதித்திட்டத்திற்கு ஆதரவாய் எழுதுபவர்கள் எம்மவர்கள் மேல் பழி போடுவதாகும். 

தவிர, இவ்வாறு தமிழர்கள் மண்ணில் தமிழர்களின் மக்கள் தொகை கட்டமைப்பை மாற்றி அமைத்துவிட்டால், தமிழர்களை வேலைவாய்ப்புகள் இன்றி இடம்பெயர வைத்தால் தமிழீழம் என்கிற நியாயமான கோரிக்கைக்கு பின்னாளில் கிழக்கில் இருப்பது போல் இழுபறி நிலைதான் மிஞ்சும். இந்தியா ஐம்பதாயிரம் வீடுகள் காட்டிக்கொடுக்கிறது என்கிறார்கள். ஆனால், அதில் தமிழர்கள் குடியிருக்கப்போவதில்லை. அங்கே, சிங்களர்களை, குறிப்பாக ராணுவத்தின் குடும்பங்கள் தான் குடியேற்றப்படும். இதையெல்லாம் இந்தியா கவனிக்கவே தேவையில்லை. சிங்களர்கள் நலவாழ்வு தான் இந்தியாவின் குறிக்கோள்.

மற்றப்படி, ஜாதி குறித்த அற்ப கேள்விகள், கட்டுரைகள், வீண்விவாதங்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளால் தான் முன்வைக்கப்படுகிறது. அவர்களில் சிலர் சிங்கள அரசின் அனுசரணையோடு எழுதுபவர்கள் என்பது பொதுவாய் தமிழர் சமூகத்தில் அறியப்பட்ட விடயம்.

தமிழ்நாட்டிலும் தங்களை மேதாவிகளாய் காட்டி எழுதும் சில தளங்கள், தனிமனிதர்கள் இன்றும் கூட ஈழப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமலிருப்பதற்கு சாதியம் தான் காரணம் என்று சொல்வது என்னைப்போன்றவர்களைப் பொறுத்தவரை எரிச்சலான விடயம். ஈழத்தில் சாதியத்தின் அடிப்படை கூறுகளை எண்ணிகை அடிப்படையில் எத்தனை பேர் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்கள் என்று கணக்கு பார்த்தாலும் அதன் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கும்.

தமிழ்நாட்டின் சாதியக்கொடுமைகள் ஈழத்தில் இருந்ததாய் நான் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை. இருந்தாலும் தமிழன் எதை மறந்தாலும் மறக்கலாம் ஜாதியை மட்டும் மறக்காமல் அதையே பிடித்து தொங்கி அடிபட வேண்டும் என்கிற மாற்றுத் திறனாளிகள் ஈழப்பிரச்சனைக்கும் ஜாதிக்கும் மிகவும் அரிய கண்டுபிடிப்புகளோடு பதிவெழுதி சேவையாற்றுகிறார்கள். கால ஓட்டத்தில் ஜாதி பற்றிய எத்தனையோ அடிப்படை முரண்பாடுகள் ஈழத்தில் அடியோடு அழிந்து போனதை மறந்தும் எழுதமாட்டார்கள். அதேபோல், தமிழ்நாட்டின் சூழலையே ஈழத்துக்கும் பொருத்திப்பார்த்து எழுதும்போது புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை.

ஏன் எத்தனையோ பேர் ஈழத்தில் வாழும் தமிழர்கள் ப்ளாக் எழுதுகிறார்கள். யாரும் இது பற்றி, சாதியம் பற்றி, அதன் ஏற்றத்தாழ்வுகள், கொடுமைகள் ஏதும்  நிகழ்ந்தால் அது பற்றி எழுதுவதில்லை என்கிற கேள்வியும் மனதில் ஓடுவதுண்டு. தமிழ் ப்ளாக் எழுதுபவர்கள் எல்லாருமே உயர்சாதி தமிழர்களா (மாற்றுத்திரனாளிகள் மொழியில்) என்ன!! ஈழத்தமிழனுக்கு தேவை சாதீயம் குறித்த குழப்பங்கள் அல்ல, ஈழம் வேண்டுமா அல்லது காலத்துக்கும் சிங்களப் பேரினவாதத்திற்கும், இந்தியாவிற்கும் அடிமையாய் வாழ்வதா என்கிற முடிவுதான்.

ஈழத்தமிழ் சமூகம் நிறைகளோடு குறைகளையும் கொண்டது தான் மறுக்கவில்லை. ஆனாலும், வறட்டு சித்தாந்தம் பேசுபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தான் ஈழத்தமிழனின் சாதியம் கூட பிழைப்பாய் போய்விட்டது.

சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உப ராணுவக்குழுக்கள், டக்ளஸ் போன்றோரின் ஆட்களால் தான் மதுக்கடை முதல் விபச்சாரம் வரை வியாபாரமாக்கப்பட்டு இளைய தலைமுறை சீரழிக்கப்படுகிறது. இது வடக்கில் யாழ்ப்பாணம் ராணுவத்தின் கைகளில் விழுந்த நாட்கள் முதல் நடந்தேறுகிறது. இப்போது தான் புதிதாய் என்று சொல்வதற்கில்லை.

ஈழத்துக்கு சென்று திரும்பும் பல தமிழர்கள் சொல்வது புலத்தில் தனிமனித சுதந்திரம் அதிகம் மதிக்கப்படும் நாட்டில் சுதந்திரமாய் வாழும் தமிழனிடம் இருக்கும் தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு சொந்தமண்ணில் அருகிவருகிறது என்று. காரணம் அவர்களது சிந்தனைகளில் எதையெதையோ வளர்த்தெடுக்கிறது சிங்களப்பேரினவாதம். பெரிய காரணம் இலங்கை அரசின் பிரச்சாரம், தமிழ் சமூக்கத்தை சீரழிக்கும் நோக்கத்தோடு மது முதல் விபச்சாரம் வரை தமிழனுக்கு மலிவு விலையில் கிடைக்கப் பண்ணுவது.

ஒரு சிங்கள ராணுவ சிப்பாய் எந்த நேரம் வேண்டுமானாலும் எந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து கேள்வி முறையின்றி தமிழச்சிகளை பெண்டாளலாம். மனித உரிமைகள் சபையில் ஒரு உருப்படாத தீர்மானம் இலங்கை சார்பில் நிறைவேற்றப்பட்டபின் அது தான் நடக்கிறது இப்போது அதிகமாய். இது பற்றியோ அல்லது இது போன்ற விடயஙகளை பற்றியோ யாரும் அக்கறையாய் எழுதுவதுமில்லை. அப்படியே எழுதினாலும் தலைப்பின் கவர்ச்சியில் வக்கிரம் தான் நிரம்பி வழிகிறது. அதுவுமில்லையா, அதற்கு பதில் வேறு விடயங்கள் பற்றி எழுதுகிறார்கள்.  எழுத ஒன்றுமே இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறான் ரொம்ப நல்லவன் என்கிற பெயரெடுத்த புலம்பெயர் தமிழன்.

புலத்து தமிழனின் பங்கும், செயற்பாடுகளும் இனி ஈழம் என்கிற இலக்கு நோக்கிய பயணத்தில் தவிர்க்கவே முடியாது. அத்தோடு, புலத்து தமிழன் இல்லையென்றால் இலங்கையில் தமிழன் என்கிற ஒரு இனமே பூண்டோடு அழிக்கவும் பட்டிருக்கலாம். புலத்து தமிழனின் சொகுசு வாழ்க்கையை விமர்சிக்கும் நேர்மையானவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான முயற்சிகளையும் நியாயமாய் நோக்கினால் என்ன குறைந்து போகும்.  

எங்களின் போராட்டம் வெறுமனே சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது என்கிற கட்டத்தை தாண்டி இப்போது சர்வதேச ஏகாதிபத்தியம், பிராந்திய ரவுடியிசம் செய்ய விரும்பும் இந்தியா போன்ற நாடுகளையும் தாண்டி எடுத்துச்செல்ல வேண்டிய ஒரு கட்டாயமான சூழலில் உள்ளது. இப்பிடி எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே ஈழத்தமிழர்கள் அமைப்புகளும் செயற்பட வேண்டியிருக்கிறது. அதற்காய் யாருடைய ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் உள்வாங்கலாம். இன்னும் ஜாதியை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பவரகளை, புலத்து தமிழனை குறை சொல்லியே பிழைப்பு நடத்துபவர்களை அவர்களின் உளறலகளை என்ன செய்யமுடியும்! தவிர்த்துவிட்டு தான் முன்னேற முடியும்.
வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

Image Courtesy: Google

8 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

சிலர் இப்படி மக்களின் மனதில் சஞ்சலம் வரும் வண்ணம் எழதித்தள்ளுகின்றனர் இதை எல்லாம் கணக்கில் எடுத்தால் வீண் காலவிரயம் தான்.

வேர்கள் சொன்னது…

// எங்களின் போராட்டம் வெறுமனே சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது என்கிற கட்டத்தை தாண்டி இப்போது சர்வதேச ஏகாதிபத்தியம், பிராந்திய ரவுடியிசம் செய்ய விரும்பும் இந்தியா போன்ற நாடுகளையும் தாண்டி எடுத்துச்செல்ல வேண்டிய ஒரு கட்டாயமான சூழலில் உள்ளது.//

மிகச்சரியாக சொன்னீர்கள் ரதி

ஹேமா சொன்னது…

எப்பவும்போல எம் உறவுகள்,எம்மண் நிலைபற்றி எல்லோருமே அவதிப்படும் மனநிலையை நீங்கள் ஒருவராகப் பதிவிட்டிருக்கிறீர்கள் ரதி.முடிந்தளவு புலம்பெயர் மக்கள் உதவிசெய்தபடிதான் இருக்கிறார்கள்.தம் உறவு வட்டத்திற்காவது உதவாமல் யாருமேயில்லை.

நாம் வாழ்ந்த வளர்ந்த சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டுவிட்டது ரதி ஊரில்.நினைக்கவே
கஸ்டமாயிருக்கு !

Rathi சொன்னது…

தனிமரம்-நேசன், காலவிரயம் என்று கடந்து சென்றால், அவர்களின் உளறல் சரியென்று நம்பவும் பலர் இருக்கிறார்கள்.

என்னுடைய காலவிரயம் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப்போல பலர் அப்பிடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

என் காலவிரயத்தின் முடிவில் ஒரு உண்மையாவது உறைக்கிற மாதிரி புரியவைத்தேன் என்கிற திருப்தியோடு போவேன்.

Rathi சொன்னது…

வேர்கள், யதார்த்தத்தை சொன்னேன்!

நன்றி உங்களுக்கு!

Rathi சொன்னது…

ஹேமா, ஊரை பற்றி நினைப்பது ஒரு கவலை என்றால், அங்கு சென்று திரும்புவர்கள் சொல்லும் கதை காதுகுடுத்து கேட்கவே வேதனையும், பயமும், கோபமும் தான் வருது.

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் ரதி!உங்கள் தளம் பரிச்சயமில்லை.நாட்கள் கடக்கின்றன,செயற்பாடுகள் தொடர்கின்றன."தட்டிக் கேட்க ஆள் இல்லையெனில் தம்பி சண்டப் பிரசண்டன்".பார்ப்போம்,எத்தனை காலத்துக்கென்று!!!

Rathi சொன்னது…

யோகா ஐயா..... என்னது என்ர தளம் பரிச்சயம் இல்லையோ :)

அது சரி, என்னுடைய பழைய பதிவுகளை பாருங்கோ. அங்கே நீங்க போட்ட கருத்துகள் இப்ப குஞ்சு பொரிச்சு வளர்ந்திருக்கும் :))))