மார்ச் 22, 2012

Paul Newman- இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம்!

மிக அண்மைய காலங்களில் ஈழம் குறித்த செய்திகள் என்றால் திடீரென இந்திய தேசிய ஊடகங்களும் மற்றும் சர்வதேச ஊடகங்கள் முதல் தமிழ்மணம் வரை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வந்தது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முடிவுக்குப்பின் 3 ஆண்டுகள் கடந்த பின்பும் மாண்டு போன ஈழத்தமிழர்களுக்கும், பாதிக்கப்பட்டு இன்னும் நடைப்பிணங்களாய் வாழும் தமிழர்களுக்கும் எந்தவொரு நீதியும் அல்லது அதற்குரிய வழிமுறைகள் கூட கிடைக்கவில்லை என்பது தான் பேசப்பட்டு வந்தது.

தற்போது ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான ஓர் தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறது. அதன் வழி அவர்கள் அடைய நினைப்பது இலங்கை அரச தலைவர் அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தான்.

இவ் ஆணைக்குழு அறிக்கை சொல்லி நிற்பது சில தனிநபர்களுக்கான இழப்புகள், பாதிப்புகள் என்பதும் அங்கே போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் தான். அதாவது, ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தேசிய இனம் என்பதால் இனவழிப்புக்கு உட்படவில்லை என்பது தான் அந்த பக்கச்சார்பான அறிக்கை சொல்வது. இரு இனங்களுக்கிடையேயான அரசியல் யாப்பியல் சார்பான உரிமைப்பிரச்சனையின் விளிம்பையேனும் தொடாமல் எந்த தேசிய இனங்களுக்குள் நல்லிணக்கம்! இது என் பொதுப்புத்தி கேள்வி மட்டுமே.

தனிநபர் இழப்புகள் என்றால் எப்படி நல்லிணக்கம் இனங்களுக்கிடையே வலியுறுத்தப்படும். அப்படி என்றால் எதை கற்றுக்கொண்டார்கள், என்ன நல்லிணக்கம் என்று பொதுக்கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது, போகட்டும். அந்த கட்டத்தை தாண்டியாகிவிட்டது.

இந்த தீர்மானம் தொடர்பாக ஆங்காங்கே காணும் இடங்களிலெல்லாம் செய்திகளை மேய்வதே பொழுதன்றும் வேலையாய் இருக்க நேரிட்டது. அதில் சற்று முன் தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த பங்களூர் பலகலைக்கழக விரிவுரையாளர் பால் நியுமன் என்கிற ஒரு அரசியல் செயற்பாட்டாளரின் பேட்டி காண நேர்ந்தது. பால் நியுமன் ஈழத்தமிழர்களால் பரவலாக அறியப்பட்டவர். ஈழம் குறித்த சர்வதேச செயற்பாடுகள் மற்றும் இலங்கை போர்க்குற்றங்கள் புரிந்திருக்கிறது, இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதற்கான விசாரணைக்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற டப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக முன்னின்று உழைத்த ஒருவர்.

இன்று, ஐ. நா. வின் 19வது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டவர் என்கிற காரணத்தால் தொலைக்காட்சியில் பேட்டி காணப்பாட்டார். அவர் கூறிய சில விடயங்கள் என் அறிவுக்கு எட்டியவரை.

முதலில் எல்லோரும் பெரும்பாலும் புரிந்துகொண்ட மனித உரிமைகள் சபையின் நேற்றைய தீர்மானம் தமிழர்கள் நலன் சார்ந்து அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டதல்ல. அதை தீர்மானம் குறித்த அமெரிக்க பிரதிநிதியின் வார்த்தைகளிலிருந்தே புரிந்து கொள்ளலாம். எல்லாமே ஒரு பொதுவான விடயமாகவே பேசப்பட்டது. தமிழர்கள் என்கிற வார்த்தை அங்கே எங்குமே வந்து விழுந்ததில்லை. அதையே தான் பால் நியுமனும் சுட்டிக்காட்டினார். இது அமெரிக்காவின் நலன்சார்ந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் என்றார். அமெரிக்காவின் புவியியல், பொருளாதார நலன் சார்ந்து சீனாவை இலங்கையில் இருந்து முடிந்தவரை ஓரங்கட்டுவது.

தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள் என்றால் 2009 ஆம் ஆண்டிலேயே தலையிட்டு அழிவை தவிர்த்திருக்கலாம். தவிர, ஐ. நா. வின் செயலர் பான்கி மூன் நியமித்த மூன்று பேர் கொண்ட குழு தயாரித்த தருஸ்மன் அறிக்கையை விட இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை ஒன்றும் வலுவானதோ அல்லது நிறைவானதோ, நேர்மையானதோ அல்ல.

இருந்தும் இந்தியா வாக்களிக்குமா வாக்களிக்காதா என்கிற வித்தைகள், சித்துவிளையாட்டுகள் எல்லாம் காட்டி ஒரு வழியாய் தீர்மானம் நிறைவேறியாகிவிட்டது. இந்தியா இங்கே வாக்களித்ததிற்கு இன்னோர் காரணம் தமிழ் நாட்டில் இன்னொரு முறை தேர்தலில் தோற்க கூடாது என்கிற காங்கிரஸ் கட்சியின் நோக்கமும் கூட என்றார், திரு. நியுமன்.  காங்கிரஸ் மறுபடியும் தமிழ்நாட்டில் உயிர்த்தெழுமா என்ன!!!!

இதற்கிடையே இந்தியா அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக, இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும் அமெரிக்கா மீதோ அல்லது இந்தியா மீதோ எங்களுக்கு காண்டு இல்லவே இல்லை என்று சீன செய்தி நிறுவனத்துக்கு இலங்கை அமைச்சர்களில் ஒருவரான லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனே கூறியதாக செய்திகள் சொல்கிறது. எப்படியோ இலங்கை, இந்திய இல்லாத இறையாணமைகள் காப்பாற்றப்பட்டால் சரி என்று நினைக்கிறார்கள் போலும்.

இதெல்லாவற்றையும் விட, அமெரிக்க தீர்மானத்தில் கூறப்பட்ட ஒரு விடயம்,

“...அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகையில, சர்வதேச சட்டத்திற்கு இணங்க, குறிப்பாகச் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும், அகதிகள் மற்றும் மனித நேயச் சட்டங்களுக்கும், உடன்பாடாகவும், கட்டுப்பாடுடனும், நடந்துகொள்ளவேண்டும் என்று மீளுறுதிப்படுத்துகிறது....”  (நன்றி: தமிழ்நெட், Watered-down resolution passes in UNHRC, stops short of international investigations)

அப்படி என்றால் பயங்கரவாதத்திற்கு எதிராக 1987 இல் ஐ. நா. வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஏன் அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிராக வாக்களித்தார்கள். எதிராக வாக்களித்தவர்கள் இந்த இரு நாடுகள் மட்டுமே. ஆதரவாக வாக்களித்தால் அரச பயங்கரவாதத்தை பிறகு எப்படி நியாயப்படுத்துவது. அமெரிக்காவும் அமெரிக்க படைகளும் கண்டுபிடித்த பயங்கரவாதத்தை ஒழித்தாலே பயங்கரவாதம் ஒழிந்துவிடும். இதில அமெரிக்கா மனித நேயம், அகதிகள் சட்டங்கள் என்று பேசுவது ஈயம் காய்ச்சி காதில் ஊற்றுவது போல் உள்ளது.

இதையெல்லாம் கடந்து இலங்கைக்கு எதிரான இந்த அமெரிக்க தீர்மானத்தை ஒரு ஆரம்பப்புள்ளியாக வைத்து நம்பிக்கையுடன் எமது விடுதலைப்பயணத்தை தொடரவேண்டும் என்று தமிழர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள், ஆய்வாளர்கள். இலங்கை அரசு எப்படியும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றப்போவதில்லை. அதன் அடுத்த படி தொடர்முயற்சிகளில் மேற்கொண்டு போர்க்குற்ற விசாரணை சுயாதீன சர்வதேச குழுவொன்றினால் நடத்தப்பட வேண்டும் என்று இறுதிவரை உறுதியாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் ஓரளவிற்கு இலங்கை அரசின் பாரிய பொய்ப்பிரச்சாரங்களையும் மீறி நல்லவிதமாக செயற்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய திரு. நியுமன், இன்னும் சிறப்பாக ஒற்றுமையாக தமிழர்கள் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோளோடு முடித்துக்கொண்டார்.


4 கருத்துகள்:

தவறு சொன்னது…

ரதி போர் நடந்தப்ப நாடகம் ஆடியவர் தனி ஈழம் தான் எனது லட்சியம் என்று பிதற்றுகிறார் கருணாநிதி இது இவரது அரசியல்.
தாங்கள் சொல்வது போல அமெரிக்கா நினைந்திருந்தால் அன்றே தடுத்திருக்கலாம்.
சீனாவின் ஆதிக்கபரவலுக்கு இவர்கள் வைத்த செக் .... ஈழவிவகாரம்.
எப்படியோ ஏதோ நல்லது நடந்தால் நல்லது தான்.

Rathi சொன்னது…

தவறு, நானும் கருணாநிதியோட ஈழம் பற்றிய கருத்தை, தனி ஈழம் தான் லட்சியம், பார்த்துவிட்டு நினைத்துக்கொண்டேன் இவருக்கு என்ன அறளை பெயர்ந்துவிட்டதா என்று.

அது எங்கூர் வழக்கில் புத்தி பேதலித்துவிட்டது என்று அர்த்தம்.

இவர்களின் அரசியல் விளையாட்டுக்களுக்கு அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக பலியாக்குவார்கள்.

முடிவாய், கருணாநிதியை இன்னுமா நம்புகிறீர்கள் :)))))))

வேர்கள் சொன்னது…

//ஒற்றுமையாக தமிழர்கள் செயற்பட வேண்டும்//
இப்படி எல்லோரும் சொல்கிறார்கள் உண்மைதான்
ஆனால் தமிழர்கள் ஏன் ஒற்றுமையாக இல்லாமல் இருக்கிறார்கள்?
இதற்கான அடிப்படை உளவியல் காரணிகள் என்ன?
இவர்களை ஒற்றுமைபடுத்த இன்னும் என்ன நடக்க வேண்டும்
பட்டவலிகள்.....,இழப்புகள்....,உலகில் எந்த இன பெண்களுக்கும் நேராத அவமானங்கள்....,உலகில் அனாதையாய் விடப்பட்ட நிலை
இத்தனைக்கும் தீர்வு தனி ஈழம் என்றால்,அதற்க்கு தேவை தமிழர்கள் ஒற்றுமை என்றால்,அது இல்லாமல் இருப்பதற்க்கான மூல காரணம் எது அல்லது எவைகள்? நம்மில் நாம் இந்த விழயங்களை சரி செய்யாமல்
ஐநா...,
இந்தியா...,
அமரிக்கா ........
????

(இங்கு தலைவர்களே ஒற்றுமையாய் இல்லை!! ஏன்? தயவுசெய்து ஒரு ஆய்வு கட்டுரை வடிவிலாவது இதைப்பற்றி யாரவது எழுதுங்கள்
ரதி )

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்ம்.... உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் கொஞ்ச நாட்கள் இது குறித்த சில academic journals தேடிப்படித்ததுண்டு, தமிழர்கள் ஒற்றுமை பற்றி. பல சமயங்களில் கசப்பாகவே உணர்ந்திருக்கிறேன். காரணம், சில அமெரிக்காவிடம் உதவிப்பணம் வாங்கிக்கொண்டு ஆராய்ச்சி என்கிற பெயரில் எழுதி தமிழர் மனநிலையை குழப்ப எழுதப்பட்டவை போல் தெரிந்தது. வேலை பிசி மற்றும் இன்ன பிற காரணங்களால் விட்டுவிட்டேன். மறுபடி தேடவேண்டும், எழுதவேண்டும்.

ஆனால், தமிழர்களிடையே பொதுவாய் ஒரு பழக்கமுண்டு, குறிப்பாக சமூகவலைத்தளங்களில் இயங்குபவர்களிடம், எதையும் பரபரப்பு கருதியே எழுதுவது. அது பொதுமக்களை குழப்பி யாருடைய கருத்துக்களை ஆதரிப்பது, யாருக்கு ஆதரவு வழங்குவது என்று குழப்புவது. அதைத்தானே இலங்கை அரசும் விரும்புகிறது. அதற்கேற்றாற்போல் அவர்கள் செய்திகள் தயாரித்து அனுப்ப அவர்களின் தேவதூதர்களாய் செயற்படும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைக்கேற்றாற் போல் மேதாவித்தனம் கலந்துகட்டி குப்பையாய் கொட்டிவிடுவார்கள், இன்னும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதை பலர் பொறுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தவிர, நடுநிலையாய் எழுதுகிறோம் என்கிற பெயரில் ஈழவிடுதலைக்காய் போராடியவர்கள் மீது வஞ்சம் தீர்ப்பதும் ஒரு காரணம்.

எதற்கும் மெய்ப்பொருள் காண்பது என்கிற சிந்தனையை வளர்த்தெடுத்தாலே தமிழன் ஒற்றுமை தன்னால் வளரும்.

மிகுதி முடிந்தால் ஒரு பதிவாய் எழுதுகிறேன். முன்பு சில பதிவுகளில் இது குறித்து எழுதியதாய் ஞாபகம்.

நன்றி வேர்கள்.