மார்ச் 16, 2012

என்னை கண்டெடுத்தேன்!

தற்காலிகமாய் தேடிப்போன பொருளையும், மனிதர்களையும் காணும் போது உண்டாகும் சந்தோசத்தை விட அலாதியானது நாம் நீண்ட நாட்களாய் தேடியலைந்து மறந்து போன ஒரு பொருளும், நபரும் கண்ணில் காணக்கிடைக்கும் அந்த கணங்கள். நினைவுகளில் புதைந்து போன பொக்கிஷ ஞாபகங்கள் என்றாவது ஒரு நாள் காட்சி உருக்கொண்டு பார்வையில் சிக்கியது போன்ற உணர்வு இது.

பழைய பதிவுகளை நோட்டம் விட்டுக்கொண்டிருக்க கண்ணில் பட்டது இந்த பதிவு. நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. என் வாசிப்பு அனுபவம் பற்றியது. நினைவுச்சுழலில் எங்கெங்கோ இழுத்துச்செல்லப்பட்டு நினைவிழந்து மறுபடி நினைவு திரும்பும்போது வாழ்க்கையின் மறுகரை தட்டிவிட்டது என்று விழித்துப்பார்த்தால் இன்னும் நின்ற கரையோரமே நின்றுகொண்டிருக்கிறேன் எதிர்நீச்சல் மறந்துபோனது போல :) வாசிப்பின் துணைகொண்டு வாழ்வின் மறுகரை அடைய மறுபடியும் எதிர்நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது.
அன்றாட வாழ்வில் சுவையிழந்த நாட்களில் சிலவற்றை ஆக்கபூர்வமற்ற செயல்களில் கழித்ததும், கழிப்பதும் உண்டு, பொழுது போக்காக! திரும்பிப்பார்த்தால் இதையா செய்தேன் என்று சிரித்தும் கொள்வேன். அது அப்போதும், இப்போதும் என் தேவையாய் இருந்தது. இன்னும் இருக்கிறது! எல்லா நேரங்களிலும் சீரியஸாகவே இருக்கமுடியாது இல்லையா! விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் இயந்திரங்களாய் உருவாக்கப்பட்டு அயற்சி மிஞ்சுகையில் இவையெல்லாம் தவிர்க்க முடியாததாயும் போய்விடுகிறது.

ஆனாலும், எல்லை மீறுகிறேனா என்று அறிவை கேட்டுக்கொள்ளாமல்
முன்னேற இஸ்டமுமில்லை. சமூகவலைத்தள ஊடகங்கள் என்னும் ராட்சத நேரவிழுங்கிகளில் என் நேரம் தொலைக்கவும் மனம் ஒப்புவதுமில்லை. என் எல்லைக்கோடுகளை கடந்து என் சொல் பேச்சை நானே கேட்காமல் போகவும் பிரியப்படவில்லை. யாராவது கோடு கிழித்து நில் என்று சொன்னால் நிற்கும் ஜாதியில்லை நான். எனக்கு நானே எல்லைக்கோடு கிழித்துக்கொண்டால் தான் உண்டு. அது பொறுப்புணர்வோடு கூடிய தனிமனித சுதந்திரமும் கூட. சுதந்திரம் என்பதை மட்டும் ஒரு சலுகையாய் எடுத்துக்கொண்டு அதன் விளைவுகள் குறித்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிக்க முடியாது. பலபேருக்கு இயல்பாய், போராட்டங்களின்றி கிடைக்கும் வெற்றிகள் நான் யாரையும் சாராமல் போராடிப்பெற்றதால் எனக்குள் உண்டாக்கிய அதீத தன்னம்பிக்கை அது என்பது என் வரைவிலக்கணம்.

ஆக்கபூர்வமற்றதாய் நான் நினைத்து பொழுது போக்கிய தருணங்களில் கிறுக்கிய கவிதைகள் இரண்டு.

எப்போதும் இப்படியல்ல!
அறிவுப்பசி
தீராத்தேடல்
மனதை சீர்ப்படுத்த
அனைத்துக்கும் சிறந்த வழி
நல்ல வாசிப்பு
செழுமையான செறிவான
இரண்டு பக்க வாசிப்பில்
முழுமையாய் உணர்வதுமுண்டு
உருண்டு புரண்டு
எத்தனை பக்கங்கள்
படித்தாலும்
புரிதல்
கிரகித்தலின்றி
பக்கங்கள்
நகர்வதுமுண்டு
வாசிப்பை போலவே
வாழ்க்கையும்
அனுபவங்களும்

ஞாபகமறதி....!

எப்போதும் புறவுலகில்
சொற்களால் கூராக்கப்படும்
எதிரியின் ஆயுதம்
என் மனவுறுதியை
பதம் பார்க்க
அது குறித்து
பிரக்ஞை உண்டு
தற்காத்துக்கொள்ள,
எனக்குள்ளிருந்து
என் வாழ்நாட்களை
சிறுகச், சிறுக
நோய் விழுங்குவது
மரணம் பற்றி
நினைவூட்ட ஏனோ
மறந்து போகிறது மனம்.

எனக்கு பிடிச்ச ஒரு quote.....

For self-definition and motivation we need enemies.
-Samuel Huntington-

கூகுள் தன் Privacy Policy குறித்த கொள்கைகளை மார்ச் மாதத்தில் மாற்றிக்கொண்டது. அது குறித்து ஏன் ஊடகவியலாளர்கள் அதிகம் கண்டுகொள்ளவில்லை என்றும் என்னுள்ளும் கேள்விகள் எழுந்ததுண்டு. குறிப்பாக அமெரிக்கா இணையத்தள செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை கொண்டுவர உரிமைக்காப்பக ஊறுவிளைவிக்கும் செயல்கள் குறித்து அக்கறை கொள்வதாய் சாக்கு போக்கி சொல்லி இதெல்லாம் நடக்கிறதா என்றும் யோசிப்பதுண்டு. இந்தப்படம் ஏதோவொரு செய்தி சொன்னதாய் தோன்றியது. பகிர்கிறேன்.
 
Image Courtesy: Google

12 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

வாழ்கையும் ஒரு புத்தகம் போலத்தான் ரதி.வாழ்வின் அனுபவமும் வாசிப்பனுபவமும் ஒன்றானது உங்கள் கவிதையில்.இரண்டு கவிதையும் அனுபவித்து வந்த ஆழவரிகள்.

பலபேருக்கு இயல்பாய், போராட்டங்களின்றி கிடைக்கும் வெற்றிகள் நான் யாரையும் சாராமல் போராடிப்பெற்றதால் எனக்குள் உண்டாக்கிய அதீத தன்னம்பிக்கை அது என்பது என் வரைவிலக்கணம்.....எனக்குமாய் எழுதிய வரிகள் இவை !

தவறு சொன்னது…

ரதி ...தாங்கள் பட்ட அனுபவமா...அல்லது பிறரின் துன்பத்தை பார்த்த அனுபவமா உங்களை நீங்களே கண்டெடுக்க...

Rathi சொன்னது…

ஹேமா, வாங்கோ... நன்றி :) ஒரு கவிதாயினி வாயால் என் கவிதையை கவிதை என்று சொன்னதே ஒரு சந்தோசம் தான்.

நன்றி ஹேமா!

Rathi சொன்னது…

தவறு, அனுபவம் என்று நீங்கள் சொல்வது எனக்கு பல வழிகளில் யோசிக்க தோன்றுகிறது.

அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் உண்டு. அதன் வழி தான் வாழ்க்கையையும் பார்ப்பார்கள், பிரச்சனைகளையும் எதிர்கொள்வார்கள்.

பசி என்பதும் ஒரு அனுபவம் தான். அது மனித உயிர்கள் எல்லாத்துக்கும் பொதுவானது. பசிக்கு உணவு என்பது தான் தீர்வு என்றால் அது கிடைக்க என்ன வழி, தடைகள் என்பது குறித்து தான் அனுபவம் வேறுபடுகிறது. அரசியல் சமூக கோபம் உண்டாகிறது. அதே போல் அனுபவம் எல்லாருக்கும் ஒன்றுதான் அதை என்னுடைய பார்வையில், புரிதலில் (perception) சொல்ல விளைகிறேன், அவ்ளோ தான்.

மற்றப்படி, வெளிப்படையாகவே சொல்கிறேன், எனக்கு நான் ஈழத்தமிழ் என்பதில் எப்போதும் ஒரு கர்வம் உண்டு. பொதுவாக பெரும்பாலானோர் வாழ்வாதார போராட்டங்களுக்கு போராடினால், நாங்கள் உயிர், மானம், கல்வி, இவை எல்லாவற்றிற்கும் மேல் சுதந்திரம் என்பதன் பொருளை உணர்ந்து தேடுபவர்கள். ம்ம்ம்... அதன் வழியும் என் அனுபவம் கட்டியமைக்கப்படுகிறது.

வேர்கள் சொன்னது…

.//எனக்கு நான் ஈழத்தமிழ் என்பதில் எப்போதும் ஒரு கர்வம் உண்டு. பொதுவாக பெரும்பாலானோர் வாழ்வாதார போராட்டங்களுக்கு போராடினால், நாங்கள் உயிர், மானம், கல்வி, இவை எல்லாவற்றிற்கும் மேல் சுதந்திரம் என்பதன் பொருளை உணர்ந்து தேடுபவர்கள். ம்ம்ம்... அதன் வழியும் என் அனுபவம் கட்டியமைக்கப்படுகிறது. //
இவைகள் வெறும் வார்த்தைகள் இல்லை
தனக்கான இரையையும், இணையையும் தானே தேடி, தனக்கான கூட்டை தானே கட்டி, தன் குஞ்சுகளோடு வாழும் பறவைகளுக்கு தான் தெரியும் சுதந்திரத்தின் அருமை...
நாய்,ஆடு மாடு இவைகளைப்போல் தனக்கான உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தி அடிமை வாழ்வு வாழ்பவர்களுக்கு சுதந்திரத்தின் தேவை புரியாது
கவிஞர் தாமரை இப்படி சொல்கிறார் சுதந்திரத்தைபற்றி
http://www.youtube.com/watch?v=Y2MsBOH0iE8

வேர்கள் சொன்னது…

காந்தள் பூக்கும் கேட்டேன்
கவிதை வரிகள் அருமை
குறிப்பாக
உதட்டால் என்னை
கொன்றிட வந்தால்
ஆயிரம் முறை நான் சாக ரெடி......
என் தேசம் நீயடி....
உயிர் சுவாசம் நீயடி........
ஆண்,பெண் குரல்,இசைகோர்ப்பு இவை அனைத்து அருமையிலும் அருமை
படிப்பாளி சொந்தங்களுக்கு வாழ்த்துகள்!!
உங்களுக்கு நன்றிகள்.

Rathi சொன்னது…

வேர்கள், தாமரையின் பேச்சு காணொளி முன்பே பாத்திருக்கிறேன். இந்தப் பகுதி மீண்டும் பார்த்தேன் இப்போது, நன்றி.

காந்தள் பூக்கும்... பாட்டையும் இன்னொரு பதிவில் முழுசா போட்டா போச்சு. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

siva sankar சொன்னது…

யாராவது கோடு கிழித்து நில் என்று சொன்னால் நிற்கும் ஜாதியில்லை நான். எனக்கு நானே எல்லைக்கோடு கிழித்துக்கொண்டால் தான் உண்டு.://

:)

siva sankar சொன்னது…

எப்போதும் புறவுலகில்
சொற்களால் கூராக்கப்படும்
எதிரியின் ஆயுதம்
என் மனவுறுதியை
பதம் பார்க்க
அது குறித்து
பிரக்ஞை உண்டு
தற்காத்துக்கொள்ள,
எனக்குள்ளிருந்து
என் வாழ்நாட்களை
சிறுகச், சிறுக
நோய் விழுங்குவது
மரணம் பற்றி
நினைவூட்ட ஏனோ
மறந்து போகிறது மனம்.
///

THE GREAT POET RATHI...
MY BEST WISHES..

Rathi சொன்னது…

சிவா, :))) நன்றி.

தனிமரம் சொன்னது…

தீராத்தேடல் 
மனதை சீர்ப்படுத்த
அனைத்துக்கும் சிறந்த வழி
நல்ல வாசிப்பு
செழுமையான செறிவான 
இரண்டு பக்க வாசிப்பில் // 

ஜோசிக்கின்றேன் ரதியக்காவின் கவிதைத் திறமையைப் பார்த்து! இன்னும் தனிமரம் கற்றுக்கொள்ளவேண்டிய தூரம் அதிகம்!

Rathi சொன்னது…

தனிமரம்- நேசன்..... நீங்களுமா :)

நான் ஏதோ கிறுக்கி இருக்கிறன்.

நன்றி நேசன்!