மார்ச் 15, 2012

சிதைந்த வரை......தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவி பாரதியார் பாடிவைத்தார். அதையே நாட்டில் அரிசி, பருப்பு, எரிபொருள், செல்பேசி என விலைவாசி பிரச்சனை வரும்போதெல்லாம் முழங்கிவிட்டு ஏதாவது ரியாலிட்டி தொலைக்காட்சி தொடர் பார்க்க  நொறுக்கு தீனியோடு உட்கார்ந்தால் எல்லா சமூகப்பிரச்சனையும் மறந்துவிடும். நாங்களாகவே அதையெல்லாம் மறந்துவிட வேண்டும், இல்லையா, அதை மறக்கடிக்க எங்களுக்கென்றே இன்னோர் பிரச்சனைக்கு கதை, வசனம் எழுதி தயாரிப்பார்கள் அரசியல்வாதிகள், மற்றும் கொள்கைவகுப்பாளர்கள்.

எங்கேயாவது மலையூர் மம்பட்டியான் ரேஞ்சுக்கு யாராவது மக்களுக்காய் போராடுபவர்களில் நாலு பேர் தீவிரவாதிகளாய் புதிதாய் உருவாக்கப்பட்டு நாட்டின் தேசியநலனுக்கு கேடுவிளைப்பதாய் சுட்டுக்கொல்லப்படுவார்கள். பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலில் மக்களின் பிரதிநிதிகள் வரிப்பணத்தை பகல் கொள்ளையடிப்பவர் அல்லது ஒரு அரசியல் கோமாளி ஒருவரின் ஏதாவது ஒர் ஊழல் வழக்கு புதிதாய் தூசு தட்டப்படும் எங்களை எண்டர்டெய்ன் செய்ய! அதுவும் இல்லையா, யாராவது ஒரு சினிமா பிரபலம் இருப்பார் மிச்சம் மீதியை கவனிக்க.

மகாகவி கூட ஒரு வேளை சோற்றுப்பிரச்சனையோடு சுளுவாய் முடித்துக்கொண்டாரோ! ஏன் தனியொருவனுக்கு உரிமை மறுக்கப்பட்டால் என்று பாடாமல் போனாரோ தெரியவில்லை! பாரதியார் படத்தில் பாரதியார் பாத்திரம் ஒரு இடத்தில் பேசுவது, தேசபக்தி என்பது என்ன கள்ளக்காதலா ஓய்! அதை பற்றி ஏன் இரகசியமாய் பேசவேண்டும் என்கிற மாதிரியாய் வசன அமைப்பு. அதன் அர்த்தம் இப்படித்தான் அமைந்திருந்தது.

ஈழதேசத்தின் விடுதலையும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் அமெரிக்காவால் பாரதியார் வார்த்தைகளில் கள்ளக்காதல் ஆக்கப்படுகிறது அமெரிக்க, இந்திய, நோர்வே கூட்டுக்கதையமைப்பில். அவர்கள் தயாரித்த கதையின் பெயர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. அதற்கு கதை, வசனம், இயக்கம் மற்றும் கிரியேட்டிவ் ஹெட் இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் எஸ்.ஆர். டி.சில்வா. அதை வெற்றிகரமாக விமர்சிப்பது செயற்திறனற்ற, சுயாதீனமாய் செயற்படமுடியாத நிலையிலுள்ள ஐ. நா. வின் மனித உரிமைகள் மன்றம்.

சர்வதேச அமைப்புகளால் பாரியளவில் குற்றஞ்சாட்டப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் தலைவர் தான் முன்னாள் தலைமை வழக்கறிஞர் S.R.D.சில்வா. இவர் தான் ஐ. நா. வின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம் (International Covenant on Civil and Political Rights- ICCPR-1976) வழி இலங்கையர்கள் மனித உரிமைகள் சபையிடம் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து முறையிட முடியாது என்று உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பளித்தவர்.  இவர் என்ன தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தரப்போகிறார்.

இது போன்றவர்களை உள்ளடக்கும் உச்சபட்ச அபத்தங்களின் உச்சக்காட்சி தான் மனித உரிமைகள் மன்றத்தில் 19வது கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறதுதான் அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவரும் தீர்மானமாம்? இதற்கு இலங்கைக்கு ஒரு வருடம் காலக்கெடுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரிதான், 66 வருடங்களாய் திருந்தாத திருடன் ஒரு வருடத்தில் திருந்துவானாம்.....! ஈழத்தமிழர்கள் கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்று நம்புவர்கள் என்று நினைத்துவிட்டார்கள். சில தமிழ் அமைப்புகள் அமெரிக்க தீர்மானம் குறித்தும் அப்படித்தான் நடந்து கொள்கின்றன என்பதும் வருத்தத்திற்குரியதும் கூட.

இலங்கையும் ஓர் மூன்றாம் உலக நாடு என்பதால் நாடு, சட்ட ஒழுங்கு, பொறுப்பு கூறும் அரசமைப்பு என்கிற அடிப்படை அம்சங்கள் ஏகப்பட்ட குறைபாடுகளுடனேயே இருக்கிறது. சட்ட ஒழுங்கை பேணும் காவற்துறை முதல் உச்சநீதிமன்றம் வரை தமிழன் என்பவன் இழிபிறப்பாய் இம்சிக்கப்படுகிறான். மனச்சிதைவுக்கும், மனிதசிதைவுக்கும் ஆளாகி நிற்கும் அவலம் தொடர்கிறது. அது தான் தமிழர்கள் குறித்த சிங்கள பெளத்த அரசியல் சட்டத்தின் வரையறை நிர்ணயமும் கூட.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு மனித உரிமைகள் மன்றம் கூடும் போதெல்லாம் இலங்கை பிரச்சனை ஏனோதானோவென்று பேசப்படுவதும், அப்போதெல்லாம் பிரித்தானிய காட்சி ஊடகமான சனல் 4 ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டுமென்கிற ரீதியில் ஒரு ஆவணக்காட்சி தொகுப்பை வெளியிடுவதும் நடந்து வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் சனல் 4 இற்கு எங்கள் நன்றிகள். இப்போதும் ஒரு ஆவணக்காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது சனல் 4 இனால், Srilanka's Killing Fields 2 - Unpunished War Crimes. சனல் நான்கின் ஈழம் குறித்த காணொளியில் வாய்மொழியாய் சொல்லப்பட்ட செய்திகளை விட, குறிப்பாய் உணர்த்தப்பட்ட சில விடயங்கள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக, இந்தியாவின் பங்களிப்பு சிவ்சங்கர் மேனன், நாராயணன் வகையறாக்களை ராஜபக்‌ஷேவுடன் காண்பித்தது.
ஈழத்தமிழர்கள் வேண்டுவது சுயநிர்ணய உரிமை. அது குறித்து சர்வதேசம் செய்யவேண்டியது ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்கிற பட்டவர்த்தனமான உண்மையை ஒத்துக்கொள்வது. அது சர்வதேச அரசியலில் நீர்த்துப்போகவே செய்யப்பட்டுக்கொண்டிருக்கப்படுகிறது.`


Samuel Huntington, The Clash of Civilization and the Remaking of World Order என்னும் புத்தகத்தில் 'Fault Line War' என்கிற கருத்தியல் தலைப்பில் ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்து எழுதியிருக்கிறார். அதில் அவர் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக Genocide என்கிற வார்த்தையோடு எழுதிவைத்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், அரசியல் ஆதாயம் தேடும் சர்வதேசமும் இந்தியாவும் தான் அதற்கு பதில் சொல்லத்தேவையில்லாமல் கள்ளமெளனத்தோடு கேடுகெட்ட அரசியல் சூழ்ச்சிகளிலும் இறங்குகிறது.

Samuel Huntington, " In 1987when Sri Lankan government forces were on the verge of defeating the Tamil Tigers, Indian public opinion was aroused against this "genocide" and the Indian government airlifted food to the Tamils "in effect signaling [President] Jayewardene that India intended to prevent him from crushing the Tigers by force"".

சாமுவேல் ஹன்ரிங்ரன் உலகறிந்த ஒரு அரசியல் ஞானம் நிறைந்தவர். அவருக்கு அப்போதே தெரிந்த உண்மை இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் உலகத்துக்கு தெரியவில்லையாம். அதை ஐ. நா. வின் மனித உரிமைகள் சபையில் விவாதித்து அவலச்சுவை கூட்டுகிறார்கள். இவ்வளவு உயிர்ப்பலி கொள்ளப்பட்ட பிறகும் எப்படி இவர்களால் ஜனநாயகம், யாப்பியல், மனித உரிமைகள் அதற்கோர் சபை என்று வெட்கம் கெட்ட தனமாய் பேசமுடிகிறது, செயற்திறனற்று ஓர் அமைப்பை உருவாக்கி அங்கெ இருக்கமுடிகிறது என்று மான ரோஷம் உள்ள யாரும் கேள்வி கேட்ககூடாது. சனல் 4 இன் காணொளி குறித்த கவனமும் இன்னும் ஏதாவதொரு கதையமைப்பில் அரசியல் வாதிகள், கொள்கைவகுப்பாளர்களால் மக்களின் கவனம் திருப்பப்படும். குறிப்பாக தமிழ் நாட்டில் கூட தமிழன் பொங்க கூடாதல்லவா.

சிதைவுகளும் தேய்வுகளும், வெற்றியும் தோல்வியும் கொண்டது தான் போராட்டக்களங்களும் விடுதலையும் என மனம் தனக்குத்தானே சமாதானம் சொல்லமுற்பட்டாலும், காவுகொள்ளப்பட்ட உயிர்கள் இறுதிக்கணத்தில் மரணத்தின் வாசலில் நின்று அனாதரவாய் அரற்றுவது காணொளியில் காணும் போது உயிர் பதறுகிறதே. மீண்டும், மீண்டும் முள்ளிவாய்க்கால் மனக்கண் முன் விரிகிறதே.

8 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு இதைத்தான் அனைத்து விவாதங்களிலும் சொல்லிவருகிறார்
அமரிக்காவின் இந்த தீர்மானத்தின் வெற்றி தோல்வியால் ஒரு பயனும் ஏற்பட்டது என்று
ஏன் என்றால் தாங்கள் சொன்னது போல் அனைவரும் llrc மட்டும் பேசுகிறார்கள் அதைவிடுத்து தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை காரணத்தை பேச மறுக்கிறார்கள் என்று.

//அவலச்சுவை கூட்டுகிறார்கள் //,
//செயற்திறனற்று ஓர் அமைப்பை உருவாக்கி அங்கெ இருக்கமுடிகிறது //
//மீண்டும், மீண்டும் முள்ளிவாய்க்கால் மனக்கண் முன் விரிகிறதே//.
இங்கெல்லாம் தங்களின் விரக்தியும்,ஆற்றாமையும் வெளிப்படுகிறது
ம்ம்ம்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை

ஹேமா சொன்னது…

தலைக்குள்ள இறுக்கமா வலிக்குது ரதி.எதுவும் சொல்ல வரேல்ல !

தவறு சொன்னது…

ரதி...அனாதரவாய் என்றாலே சபிக்க உயிர்கள் போலும்...அய்யோ அதனுடைய கஷ்டம் உயிர் போவதில் மட்டும் இல்லை..உயிர் வாழ்வதில் கூடதான்..

Rathi சொன்னது…

வேர்கள், ம்ம்ம்.... சனல் 4 இன் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் காணொளி பார்த்தாகிவிட்டதா!

Rathi சொன்னது…

ஹேமா, ம்ம்.... வராது ஹேமா.

Rathi சொன்னது…

தவறு, சாதாரணமாய் வந்து நச்சென்று எதையாவது சொல்லிட்டு போய்டுறீங்க....

அனாதரவாய் உயிர்வாழ்வது என்பதின் வலியை சொன்னேன்.

வேர்கள் சொன்னது…

இங்கு புதிய தலைமுறை தொலைகாட்சியில் நேற்றும் இன்றும் தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள் அதை தொடர்ந்த விவாதங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதில் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள் அனைத்து கொடுமைகளையும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள்
இதை படித்துபாருங்கள் கடைசி கட்ட முள்ளிவாய்கால் எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறது
http://leo-malar.blogspot.in/2012/03/blog-post.html

வேர்கள் சொன்னது…

நன்றி
கண்டிப்பாக ஈழம் குறித்து நான் படிக்கும் தகவல்களை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்